Entertainment Serial Stories மனதில் உந்தன் ஆதிக்கம்

மனதில் உந்தன் ஆதிக்கம்-18 (நிறைவு)

18

“ம்ஹூம் நான் போகமாட்டேன்” ஹரிகரனின் கையை உதறியவள்,மல்லிகாவை பார்த்தபடியே போய் சோபாவில் ஒய்யாரமாக அமர்ந்தாள்.

“என் வீடு இது.நான் ஏன் இங்கிருந்து போக வேண்டும்?”கால் மேல் கால் போட்டுக் கொண்டாள்.தன் கையில் வைத்திருந்த போனை உயர்த்தி ஹரிகரனிடம் காண்பித்தாள்.

” உன்னை வீட்டிற்குள் விட்டதே தப்பு.யார் வீட்டு சொத்திற்கு யாரடி உரிமை கொண்டாடுவது?ஹரி அவளை விரட்டுங்கள்” மல்லிகா கத்தினாள்.

“அவள் கழுத்தில் தாலி கட்டி விட்டேனே!அவள் என் மனைவியாயிற்றே! எப்படி அவளை விரட்டுவது மல்லிகா?” ஹரிகரன் கேட்க,மல்லிகா அவன் சட்டையை பிடித்தாள்.

“நீ நான்கு மாதத்திற்கு ஒரு முறை ஒருத்தி கழுத்தில் தாலியை கட்டி இழுத்து வருவாய்.அவர்களெல்லாரும் உன் மனைவிகளா? அந்த ஸ்வேதாவும் இல்லை.இந்த ஜீவிதாவும் இல்லை.உனக்கு நான் மட்டும்தான் மனைவி.என் பதினாறு வயது முதல் உன்னைத்தான் மனதில் நினைத்திருந்திருக்கிறேன்.உனக்காகத்தான் இங்கே வந்து வேலைக்காரியாக,சமையல்காரியாக கிடந்திருக்கிறேன்.திடீரென்று வந்த அக்கா,தங்கைக்கு உன்னை தூக்கி கொடுத்து விட மாட்டேன்.அடியேய் வெளியே போடி…”




ஜீவிதாவை வெளியே பிடித்து தள்ள முயல,ஹரிகரன் இடையில் வந்தான்.”என் மனைவியை தொடும் அருகதையற்றவள் நீ மல்லிகா.அவளை விடு”

“உன் மனைவியா? அப்போ இவள் அக்கா யார்? அந்த அசிங்க கதையை இப்போதே போட்டு உடைக்கட்டுமா?ஊர் உலகம் முழுவதும் சிரிக்கட்டும்.அது பிறகு…இதோ முதலில் இவளிடம் அந்த அசிங்கத்தை சொல்கிறேன்…” ஆர்ப்பாட்டமாய் ஆரம்பித்த மல்லிகாவை கையுயர்த்தி நிறுத்தினாள் ஜீவிதா.

“எதை சொல்லப் போகிறீர்கள் மல்லிகா.என் அக்காவும்,ஹரியின் அண்ணன் கதிரேசனும் காதலர்கள்.ஸ்வேதா வயிற்றில் வளர்ந்தது கதிரேசனின் குழந்தை.அவர்கள் குடும்பத்துடன் போராடி இந்த எஸ்டேட்டை இவர்கள் பங்காக வாங்கிய பின்பு,இங்கே வரும் வழியில் ஹரியின் அம்மா,அப்பா,அண்ணன் மூவரும் விபத்தில் மரணமடைந்து விட்டனர். தங்கள் குடும்ப வாரிசுக்காக,இறந்த அண்ணனுக்காக ஸ்வேதாவை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டார் ஹரி.இந்த உண்மையைத்தானே சொல்ல நினைக்கிறீர்கள்…”

மல்லிகா அதிர்ந்து நின்று விட,ஹரிகரன் ஆச்சரியமாக பார்த்து நின்றான்.

“இதில் நேர்மையும்,தூய்மையும் இருக்கிறதே தவிர அசிங்கம் எங்கே இருக்கிறது மல்லிகா?”

“அப்படியா? வேறு எங்கும் வேண்டாம் ,சிவகாசி போய் இவர்கள் குடும்பத்தாரிடமே இந்த கதையை சொல்கிறேன்.அண்ணன் காதலியை தம்பி கல்யாணம் செய்து கொண்டான்.ஆனால் அவள் வயிற்றில் இருந்தது அண்ணனின் குழந்தை என்று…சொல்லட்டுமா? கொடுத்த சொத்தை பிடுங்கிக் கொண்டு அநாதையாக இவனை வெளியே துரத்துவார்கள்? சொல்லவா…?”

ஜீவிதா ஹரிகரனை ஏறிட”சொத்துக்காக இல்லை ஜீவி.அண்ணனின் பெயர்,உன் அக்காவின் பெயர் எல்லாவற்றையும் இவள் கெடுத்து விடுவாள்.பின்னாளில் இது ஈசனையும் பாதிக்கும்.கொஞ்ச நேரம் முன்பு கிட்டதட்ட இதே போலத்தான் என்னை மிரட்டினாள்.கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாமென்று நினைத்தேன்.ஆனால்…”கவலையாய் நெற்றியை தேய்த்தான்.

“என் அக்காவை என்ன செய்தீர்கள் மல்லிகா?” ஜீவிதா உரத்த குரலில் கேட்க,கைகளை பின்னால் கட்டிக் கொண்டு ஒரு மாதிரி வெறியுடன் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்த மல்லிகா சடாரென திரும்பிப் பார்த்தாள்.

“அதையும் கண்டுபிடிச்சுட்டியா?” குரூரமாக பார்த்தாள்.”அந்த காட்டுவாசிங்ககிட்ட மூலிகை வாங்கி பாலில் கலந்து கொடுத்தேன்.மயக்க மூலிகை.மூளையை முடக்கி பைத்தியமாக்கும்.இரண்டே தடவைதான் கொடுத்தேன்.பிறகு அதுக்கு அவசியமில்லாமல் அவள் தானாவே பைத்தியமாயிட்டா…” கடகடவென சிரித்தாள்.

“ஆமாம் ஜீவி.ஸ்வேதாவால் என்னுடன் நடந்த திருமணத்தை ஜீரணிக்கவே முடியவில்லை.கதிரேசனின் அறைக்குள் போய் பூட்டிக் கொண்டு எந்நேரமும் தனிமையிலேயே இருப்பாள்.அவளுக்கும்,கதிரேசனுக்குமென தனி உலகை அறைக்குள் உருவாக்கிக் கொண்டு,அதிலேயே வாழ்ந்து வந்தாள்.அதனால்தான் அவளை இங்கிருந்து அழைத்துப் போய் உன் அம்மாவிடம் விட்டேன்”




“அக்காவின் மன தடுமாற்றத்தில் அந்த மூலிகையின் பங்கும் இருக்கிறது.எனக்கும் கூட அந்த மூலிகை கொடுக்கப்பட்டதாய் சந்தேகப்படுகிறேன்” 

ஹரிஹரன் பெருமூச்சு விட்டான். “எனக்கும் அந்த சந்தேகம் வர தொடங்கிய பின்னால்தான் உன்னையும் உன் அம்மா வீட்டில் கொண்டு விட்டேன். இங்கே ஏதோ தப்பு நடக்கிறது என்று தோன்ற ஆரம்பித்த பிறகு உன்னையும் ஈசனையும் இங்கே வைத்திருக்க எனக்கு விருப்பமில்லை”

“எனக்கு ஏன் மூலிகை கொடுத்தீர்கள் மல்லிகா ?” ஜீவிதா மீண்டும் மல்லிகாவின் வாயை கிளறினாள்.

” காத்திருந்தவள் புருசனை நேற்று வந்தவர்கள் பறித்துப் போவீர்களா? உன் அக்கா ஒரு வழியாக செத்து ஒழிந்தாளென நிம்மதியாக இருப்பதற்குள் இரண்டு வருடத்தில் தங்கையை கல்யாணம் செய்து கொண்டு வந்து நிற்கிறான். நான் திரும்பவும் மூலிகையை கையில் எடுத்தேன்.ஆனால் உன் அக்காவை போல் அல்ல உன்னை சேலை துணியெல்லாம் கிழித்துக்கொண்டு தெருத்தெருவாக அலைய வைக்கும் அளவு மாற்ற வேண்டுமென நினைத்தேன்” பித்தேறியவளாய் கத்தினாள்.  

“ஏன் மல்லிகா என் மேல் இவ்வளவு கோபம்?” 

“உனக்கு ஒன்று என்றால் இவன் எப்படி துடிக்கிறான்?நான்கு வருடங்களாக இவன் பக்கத்திலேயே இருந்து அப்படி கவனித்திருக்கிறேன். நான் கண்ணுக்குத் தெரியவில்லை. உன்னை தாங்குகிறான். அப்போ என்னை வேலைக்காரியாகத்தான் நினைத்தானா ?” திரும்பி ஹரிஹரனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். “சொல்லுடா உனக்கு நான் வேலைக்காரியா?”

ஹரிஹரன் அவள் கையை மெல்ல எடுத்து விட்டான்.”இல்லை மல்லிகா உன்னையோ உன் அம்மாவையோ நான் என்றுமே அப்படி நினைத்தது இல்லை. நீங்கள் இருவரும் எனக்கு எவ்வளவோ செய்திருக்கிறீர்கள். குடும்பம், காதல், உறவுகள் அறைத்தையும் இழந்து இனி எதற்கு வாழ்வென்று நான் வெறுத்து இருந்தபோது என்னை உண்ண உறங்க வைத்து ஒரு மனிதனாக இந்த உலகில் நடமாட வைத்தவர்கள் நீயும் உன் அம்மாவும். நான் உங்களை என் தெய்வமாக நினைக்கிறேன்” கையெடுத்து கும்பிட்டான்.

மல்லிகா முகத்தில் அறை வாங்கியது போல் பின் வாங்கினாள்.

“அப்பா அம்மா அண்ணன் எல்லோரும் காரில் வர, நான் புதிதாக வாங்கிய பைக்கில் அவர்கள் பின்னால் வந்தேன்.என் கண்ணெதிரிலேயே மலைச்சரிவில் உருண்டு தீப்பற்றி எரிந்தது கார். அம்மாவும் அப்பாவும் அங்கேயே இறக்க அண்ணன் அவனது காதலையும் காதலி வயிற்றில் இருந்த குழந்தையையும் சொல்லி அவர்களை பாதுகாக்குமாறு என்னிடம் வாக்கு வாங்கிக் கொண்டு ஆஸ்பத்திரியில் இறந்து போனான். இதையெல்லாம் உன்னிடம் சொல்லி அழுது ஆறுதல் தேட உன்னை நாடி வந்த போது உன் அக்காவாக அண்ணனின் காதலி.என்ன செய்யவென்று தெரியாமல் திரும்பி வந்து விட்டேன். உயிரற்ற பிணம் போல படுக்கையில் கிடந்தவனை தேற்றி எழுப்பி நடமாட வைத்தவர்கள் பேச்சியம்மாவும் மல்லிகாவும் தான். இவர்களை தெய்வங்களாக நினைக்காமல் வேறு எப்படி என்னால் நினைக்க முடியும் ஜீவி?”

“தெய்வம் அது இதுவென பேசி நீ தப்பிக்க பார்க்கிறாய்.எத்தனையோ தடவை என் மடியில் படுத்துக்கொண்டே சாப்பிட்டிருக்கிறாய். அப்போதெல்லாம் என் காதல் உனக்கு தெரியவில்லையா?”

ஹரிஹரன் வேதனையுடன் தலையசைத்தான்.”இல்லை மல்லிகா. உன் அன்பில் தாய்மையை தான் உணர்ந்தேன். என் மனதில் காதல் காதலி என்ற வார்த்தைகளுக்கு உரிமையானவளாக ஜீவிதா மட்டுமே இருந்தாள்”

அருகில் நின்றிருந்த ஜீவிதா உணர்ச்சி வசப்பட்டு ஹரிஹரனின் கையை பிடித்து தோளில் சாய்ந்து கொண்டாள்.மல்லிகாவின் கண்களில் நெருப்பு எரிந்தது. அருகில் இருந்த பித்தளை பிளவர்வாஸை தூக்கி ஜீவிதா மேல் எறிய ஹரிஹரன் அவளை இழுத்து கொள்ள,பிளவர் வாஸ் கீழே விழுந்து உருண்டது.

“இப்படித்தான் ரெண்டு பேரும் நேரம் காலம் இல்லாமல் கொஞ்சி கொண்டு…” மிருகமாய் மூச்சிரைத்தபடி கையில் கிடைத்த சாமான்கள் ஒவ்வொன்றாக எடுத்து அவர்கள் மேல் எறிய துவங்கினாள். ஜீவிதாவை தன்னோடு அணைத்துக் கொண்டு எதுவும் அவளை தாக்காமல் ஹரிஹரன் தடுக்க மல்லிகாவின் வெறி ஏறிக்கொண்டே போனது.

“கொன்னுடுறேன் உன்னை கொன்னுடுறேன்…”




அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தவள் முதுகில் ஓங்கி அடி வாங்கினாள்.திரும்பிப் பார்த்து திகைப்புடன் “அம்மா” என்றாள்.

பேச்சியம்மாள் கையில் மரக் கட்டையுடன் நின்றிருந்தாள்.மீண்டும் ஓங்கி மகளின் முதுகில் வைத்தாள்.”து…துரோகி…ஒ…ஒழி”  மீண்டும் ஓங்கினாள்.

ஹரிகரன் வேகமாக ஓடி கட்டையை பிடுங்கினான்.”அம்மா உங்களுக்கு சரியாகி விட்டதா?”ஆனந்தமாய் அவள் கைகளை வருடினான்.

“என்னை படுக்கையில் படுக்க போட்டதே இவள்தான் தம்பி.இந்த வீட்டு மருமகளாக வேண்டுமென்றாள்,ஹரி தம்பி என் பிள்ளை போல்.இது தப்பான ஆசைன்னேன். எதையோ கலந்து கொடுத்து என்னை படுக்கையில் தள்ளி விட்டாள்.இன்று ஜீவிதா வந்து எல்லா விபரமும் சொன்ன பிறகுதான் நான் நடமாட்டமில்லாமல் முடங்கிய பிறகு இவள் ஆடிய ஆட்டமெல்லாம் தெரிந்தது.தப்பு நடந்து விடக் கூடாதென்று முயன்று எழுந்து வந்து விட்டேன்”

“நீங்கள் எழுந்ததே போதும்மா.மற்ற பேச்சு இப்போது வேண்டாம்”

“பேசத்தானே நான் எழுந்து வந்ததே,இவள் சரியில்லை தம்பி. இவளுக்கு பைத்தியம்.இவளை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேருங்கள்” பேச்சியம்மாவின் குரல் கரகரத்தது.

“சீ நீயெல்லாம் தாயா?” பாய்ந்து வந்த மல்லிகாவை சப்பென அறைந்தார்.”வெளியே போடி” தள்ளினார்.

“போலீஸ் வந்தாச்சு” என்றபடி உள்ளே வந்தான் பிரவீண்.

“டேய் நீ எப்போது வந்தாய்?” ஹரிஹரன் இடுப்பில் கை தாங்கி முறைக்க,”அண்ணா நானில்லை.அண்ணிதான்” பம்மினான்.

“எதற்குடா போலீஸ்?”

“தெரியாதே,எட்டு மணிக்கு மேல் போலீஸ்னு சொல்லிட்டு வான்னாங்க” தலையை சொறிந்தான்.

“சும்மாங்க.மல்லிகாவை மிரட்ட…”ஜீவிதா சொல்ல,ஹரிகரன் அவளை காதல் பார்வை பார்க்க பிரவீண் தலையில்அடித்துக் கொண்டான்.இதுங்களுக்கு நேரம் காலம் கிடையாது.

” அம்மா மல்லிகா இங்கே நிர்வாகத்தில் கூட தலையிட்டு சில குளறுபடிகள் செய்திருக்கிறாள்”

” அப்போ போலீசில் ஒப்படையுங்கள் தம்பி”தைரியமாக நின்ற பேச்சியம்மாவின் தோளணைத்துக் கொண்டான்.

“தேவையில்லைம்மா.இங்கே தனது அதிகாரத்தை நிலை நிறுத்த ஏதேதோ செய்திருக்கிறாள்.நல்ல டாக்டரிடம் பேசி விட்டேன்.ஆறு மாதங்கள் தொடர்ந்து கவுன்சிலிங் எடுத்துக் கொண்டாலே சரியாகி விடுவாள.பிறகு…”

“நாங்கள் விளாம்பட்டி போய் விடுகிறோம்.எங்களை மன்னித்து விடுங்கள்” கை கூப்பியவரின் கையை அதட்டி எடுத்து விட்டான்.

முதுகில் வாங்கிய அடிகளில் ஒரு மாதிரி ஸ்தம்பித்து ஏதேதோ புலம்பியபடி தரையில் கிடந்த மல்லிகாவை ஆம்புலன்ஸ் வர வைத்து ஏற்றி அனுப்பினர்.

“அண்ணா இந்த மல்லிகா கதை என்ன?” கேட்டபடி வந்த பிரவீண் ஒருவரையொருவர் பார்வையால் தின்றபடி நின்றிருந்த இருவரையும் கண்டு நொந்து போய் திரும்பி போனான்.

“பிரவீண் சௌம்யா யாருன்னு சொல்லாமலேயே போறீங்களே?” 

ஜீவிதா கத்தலாய் கேட்க,

“இதையெல்லாம் நல்லா ஞாபகம் வச்சிரு.அவ என் கூடப் பிறந்த அக்கா.திருமணம் முடிந்து கனடாவில் இருக்கிறாள்” சொல்லிக் கொண்டே போனான்.

“இப்போது ஏன் சௌம்யா பேச்சு?”

“ஒன்றுமில்லை.பிரவீணுக்கு என்னைப் பார்த்தால் அவன் அக்கா ஞாபகம் வருகிறதாம்”

“அவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு ஜீவி.ஒரு மாதிரி விளையாட்டுப் பிள்ளை அவன்”

“அதை விடுங்கள்.அக்கா விசயம் ஏன் என்னிடம் சொல்லவில்லை?”

“சொல்லக் கூடிய சூழல் வாய்க்கவில்லை.ஈசன் என் குழந்தையில்லை என்று தெரிந்தால் உன் அப்பா அவனை வளர்க்கும் உரிமையை சட்டப்படி வாங்கிக் கொள்வாரோ என்ற பயம்.அப்பா,அம்மாவிற்கு பிறகு தாத்தா,பாட்டிக்குத் தானே அதிக உரிமை”

“என்னிடம் தனியாகவேனும்…”

“எங்கே நீதான் எப்போதும் முகம் திருப்பி நின்றாயே!இங்கேயோ எல்லோரும் போன பிறகு இவன் ஒருவனுக்கு எதற்கு இத்தனை சொத்துக்கள் என்று எங்கள் வீட்டினர் தொல்லை.சொத்துக்குரிய பங்காளியாக ஈசன் இருக்கிறானென அவர்களிடம் சொல்ல முடியுமா? புரிந்து கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு கிடையாது”

“அவர்களுக்கும் ஏதோ சந்தேகம் இருக்கிறதென்று நினைக்கிறேன்.பிரவீண் கூட….”

“சந்தேகம்தானே? அதை நான் எளிதாக தள்ளி விடுவேன்.ஈசன் என் மகன்.நீ எனது இரண்டாவது மனைவி.இப்படித்தான் உலகம் சொல்லப் போகிறது” அழுத்தமாக பேசியவனின் மார்பில் விழுந்து இறுக அணைத்துக் கொண்டாள்.

“இரண்டாவதாக வாழ்க்கைபடுமளவு நான் குறைந்து போகவில்லை.எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை” கொஞ்சினாள்.

“விரும்பாத புருசனுடன் இப்படித்தான் இழைவாயா?”அவனும் கொஞ்ச,சூழ்நிலையில் காதல் தென்றலாக வீசியது.

” என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவன் நீ அக்காவை திருமணம் செய்து கொள்ளுங்களேன் என கெஞ்சிய போது இதுதான் வழியென அதையே செய்தேன்.ஸ்வேதாவின் மறைவின் பின் மீண்டும் சூன்யவெளியில் இருந்தவன்,ஈசன் உன்னை அம்மா என்று அழைப்பதை கேட்கவும்தான் இன்னமும் என் வாழ்க்கை முடியவில்லை என உணர்ந்தேன்.அன்றுதான் இன்னமும் நான் உன்னை இழக்கவில்லை என புரிந்து கொண்டேன்”

“அது…என்னவோ ஈசன் அவனாகவே அம்மா என அழைக்க ஆரம்பித்து விட்டான்.அம்மாவும்,அப்பாவும் அதனை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை”

“நம் பிள்ளை இந்த வயதிலேயே யோசித்து நம்மை சேர்த்து வைத்திருக்கிறான் பார்த்தாயா?” 

“ஆமாம்.நமது முதல் பிள்ளை.கதிரேசனிலிருந்துதான் ஈசனை எடுத்தீர்களோ?” 

“ஆமாம்.ஸ்வேதா போனிலிருந்து நீ அண்ணனை தெரிந்து கொள்வாயென நினைத்தேன்”

“அவள் லாக் போட்டு வைத்திருந்தாள்.அப்போது முயன்று லாக்கை திறக்க வேண்டுமென்று தோன்றவில்லை.ஆனால் சந்தேகம் வந்த பின்பு உடனே லாக்கை உடைத்து திறந்து பார்த்துவிட்டேன்.இங்கே பேச்சியம்மாவிடம் கேட்டு உங்கள் அண்ணன் அறை சாவியையும் வாங்கி திறந்து பார்த்துவிட்டேன்.அறை முழுவதும் கதிரேசன்-ஸ்வேதா போட்டோக்கள்.அவரது போனையும் திறந்து பார்த்து விட்டேன்”

“ம்.அந்த அறைக்குள்தான் ஸ்வேதா தனியான வாழ்க்கை வாழ்ந்து வந்தாள்.குழந்தை பிறந்தால் சரியாகி விடுவாளென நினைத்தேன்.ப்ச்…ஆனால்…” பெருமூச்செறிந்தவன்,”அண்ணன் போனை எப்படி திறந்தாய்?” என்றான்.

“எதற்கும் பார்க்கலாமென்று உங்கள் போன் பாஸ்வேர்டே போட்டேன்.திறந்துவிட்டது”

“ஷ்…ஆமாம்.எங்கள் வீட்டில் எல்லோருடைய போன் பாஸ்வேர்டும் ஒன்றுதான்.அதனால்தான் அண்ணன் போனிலிருந்து ஸ்வேதா விபரம் முழுவதும் தெரிந்து கொள்ள முடிந்தது”

“அம்மாவிடம் பேச்சியம்மா பற்றி கேட்டு தெரிந்து கொண்டு,அவர் மூலமாக மல்லிகாவை சரி செய்யலாமென இங்கே கிளம்பி வந்தேன்.அவரிடம் எல்லா விபரங்களையும் சொன்னேன்.ஆனால் படுக்கையில் கிடந்த உடலையும் முயன்று ஜெயித்து எழுந்து நமக்காக வந்து நிற்பாரென எதிர்பார்க்கவில்லை”

“நானும் எதிர்பாராதது அது.அவரைப் போல் உண்மையும்,நேர்மையும் உள்ளவர்கள் ஓரிருவரேனும் இருப்பதால்தான் இந்த பூமி இன்னமும் சுழன்று கொண்டிருக்கிறது.உன்னிடம் ஒரு வேண்டுகோள் ஜீவி.மல்லிகாவை நினைத்து பேச்சியம்மாவை நீ வெறுத்து விடக் கூடாது”

“மல்லிகாவையே நான் வெறுக்கவில்லையே.பாவம் மனச்சிதைவுள்ள பெண்.அவர்களுக்கு சிகிச்சையளித்து குணமாக்கி…”

“அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவிடுவோம்.இங்கிருந்தே அவர்களை கவனித்துக் கொள்ளலாம்” ஹரிகரன் முடித்தான்.

“அவர்களை சரி…என்னை எப்போது கவனிப்பீர்களாம்?” மனைவியாக மாறி அவள் கொஞ்ச…

“இதற்கெல்லாம் நேரம் காலம் எதற்கு? இப்போதே…இங்கேயே…” ஆவலுடன் மனைவியின் முகம் பற்றினான் ஹரிகரன்.

உங்கள் வாழ்வில் இனி எல்லாம் சுகமே! என கட்டியம் கூறுவது போல் ஆதவன் வெண்ணிற ஒளியுடன் எழத் தொடங்கினான்.

-நிறைவு-




 

What’s your Reaction?
+1
52
+1
15
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!