Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 8

8

 




” அதோ அங்கே தெரிவது ஒட்டகமா கனி ? ” அமிர்தன் சுட்டிய பக்கம் பார்த்து விட்டு , தன் மடியில் அமர்ந்திருந்த அவன் தலையில் லேசாக முட்டினாள் சுடரொளி

” டேய் கண்ணா அது காட்டெருமை .ஒட்டகம் நீளமான கால்களோடு உயரமாக இருக்கும் .உன்னுடைய அனிமல்ஸ் புக்சில் காட்டினேனே ? “

” ஆ…யெஸ் …யெஸ் .ஐ .அதோட கொம்பை பாரேன் கனி ” உட்கார்ந்த நிலையிலேயே குதித்து குதித்து தன் மகிழ்ச்சியை காட்டினான் அமிர்தன்

” அது யாரு கனி ?” அருகிலிருந்த ஆனந்தபாலன் கேட்க , சுடரொளி அவன் பக்கமே திரும்பவில்லை .அவன் தாம்பத்தியம் பற்றி பேசியதிலிருந்து இப்படித்தான் அவன் பக்கம் திரும்பாமலேயே பயணம் வருகிறாள் .

” நான் இவுங்களுக்கு வச்ச செல்லப்பெயர் அப்பா .”

” ஹேய் …வெயிட் .என்ன சொன்னாய் ? அப்பாவா ? ” ஆனந்தபாலனின் குரலில் ஆச்சரியம் கலந்த குதூகலம்

சுடரொளி பக்கம் சரிந்து அவள் மடியிலிருந்த அமிர்தனை அள்ளித் தூக்கிக் கொண்டான் .தன் மடியில் அமர்த்தி கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டான் .

” பிள்ளையை பெற்று விட்டால் மட்டும் போதாது . ஒழுக்கமான பழக்கங்களை சொல்லிக் கொடுத்து வளர்க்கவும் வேண்டும் .முடியாதவர்கள்  குழந்தை பெற்றுக் கொள்வானேன் ? ” சுடரொளி குத்தினாள் .

” சுடர் எனது முந்தைய நிலைமை உனக்கே தெரியும் .இந்த சொத்துக்கள் எல்லாம் திடீரென எனக்கு வந்தவை .இவைகளை பேணவே எனக்கு நேரம் சரியாக இருந்தது . குழந்தையை சரிவர கவனிக்க முடியவில்லை “




” திடீரென்று வந்தவையென்றால் உங்கள் மனை…வந்து …உஷா மூலமாக வந்த சொத்துக்களா ? “

ஆனந்தபாலனின் முகம் இறுகியது . ” மனைவியிடம் வரதட்சணை வாங்கி அதில் பெரியமனிதனாக வாழும் அளவு கேவலமானவன் இல்லை நான் …”

சுடரொளி மௌனமாக அவன் முகத்தை பார்த்தபடி இருந்தாள் .ஆனந்தபாலன் எதிரே வெறித்தபடி சிறிது நேரம் இருந்தான் .

பின் சொன்னான் .” இவையெல்லாம் என் அம்மா மூலமாக வந்தவை “

சுடரொளிக்குள் அதிர்வு .இவனுக்கு அம்மாவா ? ம்…அம்மா , அப்பா இல்லாமல் பிறக்க இவனென்ன சுயம்புவா ? ஆனால் அப்போதெல்லாம் இவன் அப்படித்தான் இருந்தான் .தன்னைத் தான் பார்த்துக் கொண்டு , தனக்கு தான் உதவிக் கொண்டு , எனக்கென என் உலகம் என்றுதான் இருந்தான் . சுடரொளி சில நாள் யோசித்திருக்கிறாள் .அவனது அந்த தனி உலகத்திற்குள் அவன் தன்னை அனுமதித்தது பெரிய விசயமென்று.

மகனை இறுக கட்டிக் கொண்டு மெல்ல நடந்து கொண்டிருந்தவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி உடன் நடந்தாள் சுடரொளி .அவள் பார்த்த , பழகிய ஆனந்தபாலன் தன்மானம் மிக்கவன் .ஒழுக்கசீலன் .இதோ …இப்படி ஒருத்தியை மணம் முடித்து வீட்டிற்குள் வைத்துக் கொண்டு , அடுத்தொருத்தியை அவள் பழைய காதலியேயானாலும் சீண்டுபவன் இல்லை .

காதல் பொங்க பொங்க அவளிடம் பேசியதுண்டு .ஆசை கொப்பளிக்க அவளருகே நிறைய முறை நெருங்கினாலும் , இறுதி் நிமிடத்தில் அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு விலகிக் கொள்வதை அவள் உணர்ந்திருக்கிறாள் .

அந்த வகையில் அவளுக்கு தனது காதல் மேல் , காதலன் மேல் மிகுந்த பெருமை .ஏனெனில் அப்போதெல்லாம் அவன் அருகே நெருங்கி இழைந்திருந்தால் இவள் தடுத்திருக்க போவதில்லை .அவள்தான் அப்படி கண் மண் தெரியாமல் அவனிடம் மயங்கிக் கிடந்தாளே !




சுடரொளி இன்னமும் நடந்து கொண்டிருந்த தகப்பன் , மகனை பார்த்தபடியிருந்தாள் .இருவரும் அச்செடுத்து வார்த்தாற் போல் ஒன்று போல் இருந்தனர் .அப்பாவின் செந்நிற முடியையும் , கண்களையும் அப்படியே வாங்கி வந்திருந்தான் மகன் .

பார்த்ததும் அமிர்தன் மேல் பொங்கிய பாசத்தின் காரணம் , இந்த உருவ ஒற்றுமைதானோ ? என்ற சந்தேகம் எப்போதும் போல் இப்போதும் சுடரொளிக்கு வந்தது .

அவர்கள் மலைவாசிகளின் குடியிருப்பு பக்கம் வந்திருந்தனர் .ஆனந்தபாலன் இங்கே சிலரிடம் பேச விரும்பியதால் அவர்களை அழைத்து வர ராஜா போயிருந்தான் .இவர்கள் காலாற காட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருந்தனர் .

” நீ…நீங்கள் மாறி விட்டீர்கள் பாலா ” தனை மறந்து புலப்பம் போல் மனக்கிடக்கை வெளியிட்டாள் .

” ஆமாம் …மாறித்தான் விட்டேன் .என்னை இப்படி மாற்றியதில் பெரும்பங்கு உனக்கும் உண்டு ” இப்போது உறுமலாய் அவன் குரல் .

சுடரொளி அந்த நிமிடம் தனது வாழ்வின் அவலங்களை , அவனைப் பிரிந்து பின் தான் பட்ட பாடுகளை உடனே அவனுக்கு தெரியப்படுத்த எண்ணினாள் .ஆனால் அதன் பிறகு …

இன்னொருத்தியை மணந்து கொண்டு செல்வ வளத்தோடு , பிள்ளைச் செல்வத்தையும் கொண்டிருக்கும் ஆனந்தபாலனின் தெளிவான நீரோடை வாழ்வு அவளது கதையை கேட்பதால் கலங்க வேண்டாமே !தன் துயரத்தை தொண்டைக்குள் விழுங்கிக் கொண்டாள் .

இதுதான் நம் நாட்டுப் பெண்களின் தன்மை .தன்னை பார்க்காமல் தன்னவனை , தன் குடும்பத்தை பார்ப்பது , தனது ஆசைகளை எச்சிலோடு சேர்த்து விழுங்கிக் கொள்வது .

” அப்பா …அதோ குரங்கு …” அமிர்தன் கை தட்டி ஆர்ப்பரிக்க , இருவர் கவனமும் குழந்தையிடம் திரும்பியது .




” ஆமாம்டா .அதன் வயிற்றில் பார்த்தாயா குட்டிக் குரங்கு ஒன்று …” மகனின் உற்சாகத்தில் பங்கெடுத்தவன் , சுடரொளியிடம் திரும்பினான் .

” அப்பா சரி …அம்மா சொல்லிக் கொடுக்கவில்லையா ? ” கேள்வியாய் புருவம் உயர்த்தினான் .

சுடரொளியினுள் சுருசுருவென கோபம் வந்தது .ஆமாம்டா உன் மகனுக்கு அப்பா , அம்மா சொல்லிக் கொடுப்பதுதான் என் வேலை …மனதிற்குள் பொருமியவளுக்குள் உஷாந்தியின் நினைவு .லேசாக தொண்டையை செருமிக் கொண்டாள் .

” உங்களிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும் .வ…வந்து அவர்கள் அமிர்துவை அடிப்பார்களா ? அன்று நான் அடிக்கவென கை ஓங்கிய போது இவன் நீயும் அடிப்பாயா என்று கேட்டான் .வேறு யார்…அது உஷாவாகத்தானே இருக்கும் ? “

ஆனந்தபாலன் முகத்தில் சிந்தனை படர்ந்தது. மெல்ல ” ம் ” என்றான் .

சுடரொளி மேலே பேசாது அவனை பார்த்தபடி இருக்க , ஆனந்தபாலன் பளிச்சென புன்னகைத்து மெல்ல அவள் கன்னம் தட்டினான் .

” இனி அப்படி எதுவும் நடக்காது சுடர் .நான் பார்த்துக் கொள்கிறேன் “

” அப்பா அங்கே போகலாம் ” அமிர்தன் கை காட்டிய இடத்தை அண்ணாந்து பார்த்தனர்.அது மரத்தின் மீது கட்டியிருந்த சிறு மரவீடு .

” அங்கெல்லாம்  மலைவாசிகள்தான் வசிப்பார்களா ? ” அழகான அந்த வீட்டை ரசித்தபடி கேட்டாள் சுடரொளி.




” இல்லை மேடம்.இது இங்கே காட்டை சுற்றிப் பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்காக மரத்தின் மேலே கட்டப்பட்டிருக்கும் மரவீடு .இதில் தங்குவதற்கு கட்டணம் உண்டு ” சொன்னபடி வந்து நின்ற பெண்ணை கேள்வியோடு பார்த்தாள் .

” வணக்கம் மேடம் .என் பெயர் செங்காந்தள் .நான் இந்த மலைவாசி சமூகத்தை சேர்ந்தவள் .கொஞ்சம் படித்திருக்கிறேன் .ஏதோ என்னாலான சேவைகளை என் சமூகத்திற்கு செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன் .”

செங்காந்தள் நல்ல கறுப்பாக இருந்தாள் .ஆனால் அகன்ற கண்களும் , குவிந்த நாசியுமாக களையாக இருந்தாள்.

” செங்காந்தள் டிகிரி முடித்திருக்கிறாள் .இவள் மூலமாகத்தான் நான் இந்த மலைவாழ் ஜனங்களின் தேவைகளை அறிந்து கொண்டு , அவர்களுக்கு உதவ முடிகிறது .உங்களுக்கு தேவையான தகவல்களை அவளிடம் கேட்டுக் கொள்ளலாம் சார் ” என்றான் ராஜா .

” ஹலோ செங்காந்தள் .உங்கள் பெயர் ரொம்ப அழகு ” சுடரொளி அவள் கை குலுக்கினாள் .

” ஹலோ மேடம் ” என்றவளிடம் லேசான வெட்கம் .

” மிஸ் .செங்காந்தள் .உங்கள் ஊரில் எத்தனை கழிப்பிடங்கள் கட்ட வேண்டியதிருக்கும் ? ” ஆனந்தபாலன் கேட்டான் .

” நாங்கள் மூவாயிரம் பேர் இங்கே வசிக்கிறோம் சார் .பெண்கள் அதில் ஆயிரத்து இருநூறு .நீங்களே சொல்லுங்க .எத்தனை வேண்டியிருக்குமென்று ? “

” சுடர் நீ இவர்களுடன் ஊருக்குள் போய் விசாரித்து விட்டு வா ” ஆனந்தபாலன் சொல்லுக்கேற்ப கிளம்பினாள் சுடரொளி .

விவசாயம் செய்வது , தேனெடுப்பது , கால்நடைகளை மேய்ப்பது என்று தங்கள் தொழில்களை பேசியபடி நடந்தாள் செங்காந்தள் .அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு வந்ததும் நிறைய பேரை அறிமுகம் செய்தாள் .

அவர்களில் பலர் சுடரொளியிடம் பேசவே தயாராக இல்லை .” ஊசி போட வந்தீங்களா ? ” என்றபடி அச்சத்துடன் ஓடுவதிலேயே இருந்தனர் .இன்னும் சிலர்” தேர்தல் வந்துடுச்சா ? ” என்றனர் .

இன்னமும் நம் நாட்டில் எத்தனை கிராமங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன …என வேதனையுடன் நினைத்தாள் சுடரொளி .இந்த அறியா ஜனங்களுக்கு மத்தியில் முயன்று பட்டதாரியான செங்காந்தளை பாராட்டினாள் .




” பெரிய போராட்டத்திற்கு பிறகுதான் மேடம் படிச்சேன் .எங்க சமுதாயத்திற்கு ஏதாவது செய்யனுங்கிறதுதான் என் நோக்கம் .ராஜா சார் மாதிரி நல்ல அதிகாரிகள் வந்தால் ஏதோ கொஞ்சம் செய்ய முடியும் “

செங்காந்தளின் குடிசை வீட்டிற்குள் அமர்ந்து இருவரும் டீ குடித்துக் கொண்டிருந்த போது மழை தூறத் தொடங்கியது .அமிர்தனுடன் ஆனந்தபாலனும் , ராஜாவும் அங்கே வந்து சேர்ந்தனர் .

” மழை வந்துவிட்டது .கிளம்பலாமா ? ” அவள் கேட்க , ஆனந்தபாலன் தலையசைத்தான்.

” மலங்காட்டு மழை ரொம்பவே அதிகமாக இருக்கும் சுடர் .நம்மால் போக முடியுமா ? ” கவலையாக வெளிப்புறம் பார்த்தான் .

” வேண்டாங்க சார் .இந்த மழையில் போவது ரிஸ்க் .இரவு தங்கிட்டு காலையில் போங்க.” செங்காந்தள் சொல்ல , சுடரொளி அந்தக் குடிசையை சுற்றி கண்களை ஓட்டினாள் .

” பயப்படாதீங்க மேடம் .எங்க வீட்டில் தங்க வேண்டாம் .வெளியே பார்த்தீங்களே மரக்குடில் , அதில் தங்கிக்கோங்க .வாங்க நான் ஏற்பாடு செய்கிறேன் “

மர உச்சி வீடென்றதும் அமிர்தனுக்கு ஒரே கொண்டாட்டம் .” ஐ…ஜாலி .அப்பா போகலாம்பா “

ஆனந்தபாலன் மகனுக்கு தலையசைத்து விட்டு ” அந்தக் குடில்கள் யாருடையவை ? ” செங்காந்தளிடம் விசாரித்தபடி நடந்தான் .




What’s your Reaction?
+1
50
+1
34
+1
2
+1
2
+1
3
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!