Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 7

7

 


” எனக்கு கேரட் பிடிக்காது .வேண்டாம் ” சொன்னதோடு தட்டையும் தூக்கி எறிந்தான் அமிர்தபாலன் .

சுடரொளி ஆத்திரத்துடன் அவனை அடிக்க கையை ஓங்கி விட்டாள் .ஓங்கிய கையை அவன் ஒரு வித அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்து ” நீயும் அடிப்பாயா ? ” கண்ணில் நீர் கோர்க்க  கேட்க  , நெருப்பிலிட்ட வெண்ணையாய் உருகி அவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள் .

” ஏன்டா கண்ணா இப்படி செய்கிறாய் ? இது தப்பில்லையா ? “

” ஆனால் எனக்கு கேரட் பிடிக்காதே “

” கேரட் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா ? அதில் நிறைய விட்டமின்கள் இருக்கிறது …” தொடர்ந்து கேரட்டின் நன்மைகளை அவள் மென் குரலில் சொல்லியபடி இருக்க , அவளது அணைப்பு தந்த இதம் காரணமாகவோ என்னவோ , அமிர்தபாலன் அவளை ஒட்டிக் கிடந்தபடி ம் கொட்டிக் கொண்டிருந்தான் .

” சீக்கிரம் வாருங்கள் ” உஷாந்தி ஆனந்தபாலனின் கை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள் .

” இங்கே என்ன நடக்கிறது ? ” ஆனந்தபாலன் ஒட்டிக் கிடந்த இருவரையும் பார்த்து கேட்டபடி வந்தான் .

” இவள் குழந்தையை அடிக்கிறாள் ஆனந்த் .நான் பார்த்தேன் ” உஷாந்தி கையாட்டி நாடகத்தனமாக அபிநயித்தாள் .

ஆனந்தபாலன் சுடரொளியை பார்க்க , அவள் அமிர்தனை அணைத்தபடி அவனை பார்த்தாள் .இருவரது பார்வையும் சந்திக்க , மௌனமாக இருந்தனர் இருவரும் .




” அமிர்தன் கன்னத்தை பாருங்களேன் அடித்த அடியில் வீங்கியிருக்கும் .” சொன்னபடி அமிர்தனை சுடரொளியிடமிருந்து நிமிர்த்த முயல , அவன் அலறலுடன் மேலும் அவளிடமே ஒட்டினான் .

” ஏய் ரொம்பவும் ஆடாதே ! பிறகு …உனக்குத்தான் கஷ்டம் .ம் …நிமிர்ந்து என்னைப் பார் “

உஷாந்தி அமிர்தனை நிமிர்த்த பார்த்து முடியாமல் , அவனது தலைமுடியை பற்றி இழுக்க , சுடரொளி வேகமாக அவள் கையை பிடித்து தள்ளினாள் .

” என்ன செய்கிறீர்கள் ? அவன் குழந்தை .அவனிடம் இப்படியா அரக்கத்தனமாக

 நடந்து கொள்வீர்கள் ? “

சுடரொளி தள்ளிய வேகத்தில் கீழே விழ இருந்தவள் சுதாரித்து நின்று ” ஏய் என்னையே தள்ளுகிறாயா ? உன்னை என்ன செய்கிறேன் பார் ! ஆனந்த் உடனே இவளை வேலையை விட்டு நிறுத்துங்கள் .இவளை நம்பாதீர்கள் .இவள் குழந்தை கடத்துபவள் .அமிர்தனை கடத்திப் போய் விற்று விடுவாள் “

கைகளும் , கால்களும் பதற பதற நின்றபடி கத்திக் கொண்டிருந்தாள் .அவள் உடல் முழுவதுமே ஒரு வகை பதட்டம் ஓடிக் கொண்டிருந்தது.

அமிர்தனை அவள் இழுத்த வேகத்தில் அதிர்ந்து அவளை தள்ளி விட்டிருந்த சுடரொளி , அவளது அநியாய குற்றச்சாட்டுகளில் அதிர்ந்து ஆனந்தபாலனை பார்க்க , அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான் .

” உஷாந்தி வாயை மூடு ” பார்வை இன்னமும் சுடரொளி மேலேயே இருக்க ,குரல் மட்டும் உஷாந்திக்கு .

” ஆனந்த் என்னைப் பாருங்களேன் .நான் நம் குழந்தையின் நன்மைக்காகத் தானே …”கொஞ்சலாய் பேசியபடி அவனருகே வந்தவளின் முகத்திற்கு நேராக கையை விசிறினான் .




” என் முன்னால் நிற்காதே .போ …” அவனது கோபத்தில் அதிர்ந்து உஷாந்தி மாடியேறி போய்விட்டாள் .

இன்னமும் சுடரொளியின் அணைப்பில் இருந்த மகனிடம் வந்தவன் , மெல்ல அவன் தலையை வருடி விட்டு சென்றுவிட்டான் .

இந்த சம்பவத்தின் பிறகு அமிர்தன் அதிகமாகவே சுடரொளியுடன் ஒட்டிக் கொண்டான் .

 

ன்னமும் இரண்டு லட்சங்கள் இருந்தால் வேலை முடிந்து விடும் சார் .நீங்கள்தான் மனது வைக்க வேண்டும் ” ராஜா கெஞ்சுதலாக ஆனந்தபாலனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் .

” ம்…ம்…பார்க்கலாம் ” தட்டிக் கழிப்பது போல் பேசிக் கொண்டிருந்தான் ஆனந்தபாலன் .

” நீங்கள் அப்படி சொல்லக் கூடாது .ஏழை மக்கள் . அவர்களுக்காக பாருங்கள் “

” சரி சார் .நான் யோசித்து சொல்கிறேன் “

” நான் நாளை வரட்டுமா ? “

” வேண்டாம் .. .நீங்கள் இங்கே வர வேண்டாம் .நானே உங்களை வந்து பார்க்கிறேன் “

ராஜாவின் முகம் வாடி விட்டது .” சரி சார் ” போய் விட்டான் .

தட்டென்ற சத்தத்துடன் தன் முன்னால் வைக்கப்பட்ட மர டிரேயை எட்டிப் பார்த்தான் ஆனந்தபாலன் .” என்ன இது ? “

” காபி .கொட்டிக்கோங்க ” எரிச்சலாக சொன்னாள் சுடரொளி .

” அட ,சம்பளம் கொடுக்கும் முதலாளிக்கு என்ன மரியாதை ? “

” சம்பளம் கொடுக்கிறாயா ? நான் உனக்கு காபி போட்டுக் கொடுக்க வந்தேனென்கிறாயா ? “

சுடரொளி ஒரு நாள் அடுப்படிக்குள் வேணுகோபாலனுக்கு மணமான பில்டர் காபி போடும் முறையை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்த ஆனந்தபாலன் அவளையே காபி போட்டு வருமாறு சொல்ல, தனது திறமையை காட்டுவதாக நினைத்து காபி போட்டு வந்தாள் .




மிகவும் ருசியென்று பாராட்டியவன் , அன்றிலிருந்து காபி போடும் வேலையை அவள் தலையில் கட்டி விட்டான் .போடும் வேலை இல்லை .அதைக் கொண்டு வந்து கொடுக்கும் வேலை , முக்கியமாக ஆனந்தபாலனுக்கு .

” இதுவெல்லாம் என் வேலை இல்லை ” எகிறியவளை உற்றுப் பார்த்தான் .

” உன் அம்மாவின் கை மணம் உன்னிடம் அப்படியே இருக்கிறது .அம்மாவின் காபியை நான் அதன் பிறகு வேறு எங்கும் குடிக்கவில்லை .அந்த ருசியை மீண்டும் சுவைக்கத்தான் காபி வேலையை உன்னிடம் கொடுத்தேன் “

சுடரொளி அமைதியாகி விட்டாள் .தனது தாயின் நினைவில் மனம் கசிந்து காபி வேலையை தனதாக்கிக் கொண்டாள் .சுடர் …இவன் உன்னை சென்டிமென்ட் பேசி அடக்கி விட்டானென சொன்ன மனட்சாட்சியை கண்டு கொள்ளவில்லை .

” ஒரு சிப் குடித்துப் பார்.இன்று அதிக ருசியாக வந்திருக்கிறது ” அவன் அருந்திய  கப்பை தன்னை நோக்கி நீட்டியவனை கொலை பார்வை பார்த்தாள்.

” இங்கே பாருங்க , உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை .அவர் ஒரு நல்ல காரியத்திற்காகத்தான் கேட்கிறார் .அதை எதற்கு தட்டிக் கழிக்கிறீர்கள் ? “

” எவர் …? ” ஒரு மாதிரிக் குரலில் கேட்டான்.

” அவர்தான் .ராஜா .ரேஞ்சர் “

” அவர் விபரங்களெல்லாம் நீ சொல்லி எனக்கு தெரிய வேண்டியதிருக்கிறது பாரேன் “

” ப்ச் …பேச்சை மாற்றாதீர்கள் .அவர் கேட்ட பணத்தை கொடுக்க முடியுமா ? முடியாதா ? “




” ஐம்பது …நூறா ? இரண்டு லட்சம் கேட்கிறார்மா .உடனே எப்படித் தூக்கிக் கொடுக்க முடியும் ? “

” மலைவாழ் பெண்களுக்கு கழிப்பறை கட்டிக் கொடுப்பதற்காக அவர் இந்தப் பணத்தை கேட்கிறார் .தெரியும்தானே ? “

” ம் …கேள்விப்பட்டேன் .ஏற்கெனவே இரண்டு கிராமங்களில் கட்டிக் கொடுத்திருக்கிறார்.இது மூன்றாவது கிராமம். “

” எவ்வளவு நல்ல விசயம் ! மலைப் பெண்கள் காலைக் கடனை கழிக்க திறந்தவெளிகளைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது .இது எவ்வளவு கடினம் தெரியுமா ? ஒரு பெண்ணால்தான் இந்த கொடுமையை உணர முடியும் .உங்களுக்கென்ன ஆண் பிள்ளை .கரண்டு கம்பத்தை பார்க்கும் போதெல்லாம் காலை தூக்கும் ….”

” ஏய்…ஏய்…ஸ்டாப் …ஸ்டாப் என்ன இது ? எதற்காக இப்படி கடின வார்த்தைகளை பேசுகிறாய் ? “

” பணம் கொடுக்க ஒத்துக் கொள்ளுங்க .இல்லையென்றால் இப்படித்தான் பேசுவேன் “

” மை காட்…” ஆனந்தபாலன் கைகளை விரித்து கவலை காட்டிக் கொண்டிருந்த போது , அங்கே வந்த உஷாந்தி இருவரையும் விசித்திரமாகப் பார்த்தாள் .

” இங்கே என்ன நடக்கிறது ? “

” ஒன்றுமில்லை .நீங்க போகலாம் ” சுடரொளி பட்டென பேச உஷாந்தி அவளை முறைத்தாள். ஆனந்தபாலனருகே தோளுரச இடித்தபடி அமர்ந்தாள் .

” ம் …இப்போ பேசுங்க ” கன்னத்தில் கை தாங்கி இருவரையும் கவனிக்க தயாரானாள் .

இது தேவையா உனக்கு ? ஆனந்தபாலன் சுடரொளியை சலிப்புடன் பார்க்க , அவள் வேறு யோசனைக்கு வந்திருந்தாள் .

” மலைவாசி பெண்களுக்கு பாத்ரூம் கட்டித் தருவதற்கு இரண்டே லட்சம்தான் ரேஞ்சர் ராஜா கேட்கிறார் மேடம் .அதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறோம்  .” அழகாக பற்ற வைக்க , உஷாந்தியின் விழிகள் எரிந்தன.

” என்ன …கக்கூஸ் கட்ட இரண்டு லட்சமா ? ஆனந்த் என்ன இது ? ” கத்த துவங்க …

” அனுபவிடா ” சத்தமின்றி இதழசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து விட்டாள் .




அரை மணி நேரம் கழித்து ஆனந்தபாலன் வந்து ” போகலாமா ? ” எனக் கேட்க விழித்தாள்

” எங்கே ? “

” எதையும் கண்ணால் பார்க்காமல் முடிவு செய்ய மாட்டேன் சுடர் .வா ராஜாவை காட்டிற்குள் போய் பார்க்கலாம் .அப்படியே அந்த மலைவாசி பெண்களிடமும் பேசி வரலாம் “

” இவ்வளவு நம்பிக்கையின்மையா ? ” குறைபட்ட போதும் உடனே கிளம்பி விட்டாள் .

அமிர்தன் காட்டிற்கு எனவும் குதித்துக் கொண்டு கிளம்ப ” அ…அவர்கள் வரவில்லையா ? ” மெல்லக் கேட்டாள் .

” எவர்கள் ? “

” உ…உங்கள் மனை….ஆங் அமிர்தனின் அ…அம்…” எப்படி சொல்ல முயற்சித்தும் அவளால் முடியவில்லை.

இறுதியாக ” உஷா வரவில்லையா ? ” எனக் கேட்டு முடித்தாள் .

” இல்லை ” ஒற்றை வார்த்தை பதில் .

” அவர்களை எப்படி சமாளித்தீர்கள் ? “

” எதில் …நீ பற்ற வைத்து விட்டு வந்த விசயத்திலா ? அதெல்லாம் சரி பண்ணிட்டேன் .திரும்ப எப்படின்னு கேட்காதே . அதெல்லாம் தாம்பத்திய ரகசியம் ” சொல்லிவிட்டு அவன் கண் சிமிட்ட , சுடரொளிக்கு வாந்தி வரும் போல் இருந்தது.




What’s your Reaction?
+1
46
+1
32
+1
2
+1
8
+1
0
+1
0
+1
4
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!