Serial Stories

புதுச்சுடர் பொழிந்ததே – 6

6

 


 

” இது யானைகளின் சரணாலயம் மேடம் .இங்கே காட்டிற்குள் யானைகள் அதிகம் .காட்டை மட்டுமல்ல இந்த யானைகளையும் பாதுகாப்பதுதான் எங்கள் வேலை ” ராஜா விளக்கிக் கொண்டிருந்தான் .

சுடரொளி அவனுடன் காட்டிற்குள் ஜீப்பில் சென்று கொண்டிருந்தாள் .இன்றுதான் தனது நுரையீரல் நிம்மதியாக இருப்பதாக உணர்ந்தாள் .ராஜா அந்தக் காட்டின் காட்டிலாகா அதிகாரி . ஆனந்தபாலனை சந்திக்க வந்தவன் சுடரொளியுடன் தோழமை பூண்டு விட்டான் .

ஓரிரு முறை திட்டமிட்டு தடங்கலாகி இன்று அவனுடன் வனம் பார்க்க கிளம்பிவிட்டாள் .தடங்கலை உண்டாக்கியவன் ஆனந்தபாலன் என்ற சந்தேகம் அவளுக்கு வந்த நாளே முடிவு செய்துவிட்டாள் தனது வனப் பயணத்தை அவனில்லாத நாளில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று.

இதோ அதற்குரிய நாளும் அமைந்து விட , ஆனந்தபாலனும் , உஷாந்தியும் ஒரு திருமண விழா என ஊட்டி சென்று விட , அமிர்தனுடன் அவள் வனம் வந்துவிட்டாள் .

” ஓ…வாவ் …சுடர் அங்கே பாரு ” அவள் மடியில் எழுந்து நின்று கத்தினான் அமிர்தன் .அவன் காட்டிய திசையில் மான்கள் கூட்டமொன்று .

” அது மான்கள் கண்ணா .நான் உனக்கு புத்தகத்தில் காட்டினேன்தானே ? இப்போது நேரிலேயே பார் “

ராஜா புன்னகையோடு ஜீப்பின் வேகத்தை குறைத்து ஊர்ந்து செல்ல அமிர்தன் கை தட்டி குதூகலித்தான் .சுடரொளி அவனை மகிழ்வாய் பார்த்தாள்.வீட்டை விட்டு வெளியேறிய இந்தப் பயணம் அமிர்தனிடம் நிறைய மாற்றத்தை கொண்டு வருமென்று நினைத்தாள் .

அவள் இங்கே வந்து ஒரு மாதமாகி விட்டது .ஒவ்வொரு நாளும் ஏன்தான் இங்கே வந்தோமோ ? என்றுதான் மனம் நோகிறாள் .




ஒரு மாதமான பின்னும் அமிர்தன் அவளிடம் இணைந்து பழகாதது ஒரு கவலை என்றால் , ஆனந்தபாலன் – உஷாந்தினியின் நெருக்கம் அவளை மிகவும் பாதித்தது .கிடைக்கும் இடங்களிலெல்லாம் அணைத்துக் கொள்வதும் , தழுவிக் கொள்வதும் , கொஞ்சிக் கொள்வதும் அவளால் முடியவில்லை .

சை …என்ன ஜென்மங்கள் இவர்களெல்லாம் ? அவளது முறைத்தலையோ , கோபத்தையோ ஆனந்தபாலன் கண்டு கொள்வதில்லை .சொல்லப் போனால் தான் பார்க்கிறேனென்றால் இன்னமும் அதிகம் அவளுடன் இழைகிறோனோ என்ற சந்தேகம் வந்தது. அன்று முதல் அவர்களை கடக்க நேர்கையில் கண்களை மூடிக் கொள்வாள் .

அப்படியும் விடாமல் அவளை அந்நேரத்திற்கு ஏதாவது சாக்கிட்டு அழைப்பது , வேலை கொடுப்பது என்று அவன் இருக்க , ஒரு நாள் நேரிடையாகவே ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று கேட்டுவிட்டாள் .

”  நீ இழந்திருக்கும் வாழ்வின் அளவு உனக்குத் தெரிய வேண்டாமா ? ” என்றான் எகத்தாளமாக .

” இதற்காகத்தான் என்னை இங்கே வரவழைத்தீர்களா ? “

” இல்லை .உன்னைப் பார்த்த பிறகுதான் இந்த யோசனை தோன்றியது.அப்புறம்

என் மகனை பார்க்க வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது .அதனை நிச்சயம் நீதான் செய்ய வேண்டும் . ” என்று விழி சிமிட்டினான் .

” உன் மகனுக்கு எனக்கெதற்கு பொறுப்பு ? ” சீறினாள் .

” எனக்கு செய்த துரோகத்திற்கு பதில் …என்னைப் பார்த்து பார்த்து நீ வேதனைப்பட வேண்டும் “

இந்த வாக்குவாதத்தின் பின் மீண்டும் வேலையை விட்டு விடும் எண்ணத்தில் இருந்தவளை தடுத்தது அமிர்தன்தான் .இப்போதுதான் கொஞ்சம் மாறி வருகிறான் .பகல் தூக்கம் விடுத்து இரவு பன்னிரெண்டு மணிக்கேனும் உறங்க துவங்கியிருக்கிறான் . இன்னமும் சில அவனது அடம் , பிடிவாதங்களை மாற்ற வேண்டும் .




அவளுக்கு ஒன்று புரியவில்லை .அது என்ன ஆனந்தபாலன் எப்போதும் அவளையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறான் ? தவறு செய்தது அவனல்லவா ?

” இவ்வளவு வசதியை வைத்துக் கொண்டு ஒன்றுமில்லாதவன் போல் வேடமிட்டு என்னை ஏமாற்றினீர்களே ? “என்றாள் ஒரு முறை .

” வசதியை நான் காட்டிக் கொண்டிருந்தால் உன் அப்பா நம் கல்யாணத்திற்கு சம்மதித்திருப்பாரோ ? ” என்றான் யோசனை போல் .சுடரொளிக்கு உள்ளே கொதித்தது.அப்பாவை எவ்வளவு கேவலமாக மதிப்பிட்டிருக்கிறான் .?

” நீ உலகக் கோடீஸ்வரனில் முதலிடத்தில் இருந்தாலும் உன் மொகரைக்கு என் அப்பா தன் பெண்ணை கொடுத்திருக்க மாட்டார் ” வெடித்தாள்

ஆனந்தபாலன் அவளைப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றான் .பின் அவளருகே நெருங்கி வந்தான் .பின்னடைந்தவளின் கையை வலுவாகப் பற்றியிழுத்துப் போய் ஆளுயர கண்ணாடி முன் நிறுத்தினான் .

” அங்கே பார் சுடர் .அவ்வளவு மோசமாகவா என் மொகரை இருக்கிறது ? ” கண்ணாடியில் காட்டினான் .

சுடரொளி மூச்சு விட மறந்தாள் .இவனை …ஆளை அசரடிக்கும் இவன் அழகை பார்த்து மயங்கித்தானே அவள் இவனில் விழுந்தாள் .இவனது பார்வைக்காக , ஜாடைக்காக , ஒரு கையசைவிற்காக அசையாமல் தனது மாடியறை ஜன்னலில் நின்றிருந்த நேரங்கள் நினைவு வந்தன.

அந்த நேரங்கள் இப்போது அவளுக்கு அவமானத்தை கொடுத்தன.அப்படி ஒரேடியாக இவனிடம் விழுந்ததால்தானே இவன் என்னை அவ்வளவு மோசமாக நினைத்து விட்டான் ?




பார்ப்பவர்களை வசீகரிக்கும் அழகுடையவன் .அவனது ப்ரௌன் விழிகளின் வீச்சில் தப்பிக்க யாராலும் முடியாது .இதோ …கண்ணெதிரே சாட்சி இருக்கிறாளே உஷாந்தி. நிறைய நேரங்களில் ஆனந்தபாலன் அவளை மிகவும் கீழாக நடத்துவான் .ஆனால் அவளோ அசைய மாட்டாள் .அடுத்த நிமிடமே அவனிடம் குழைந்து கொண்டு வந்து நிற்பாள் .

அடுத்து சுடரொளி . ஒழுக்கமான பெற்றோரால் நியாயமாக வளர்க்கப்பட்டவள் .அவளே அவனிடம் தடுமாறி விழவில்லையா ? அவன் தனக்கு துரோகம் செய்துவிட்டான் எனத் தெரிந்து பின்னும் , ஐந்து வருடங்கள் கழித்தும் இதோ அவன் முன் கிறங்கி நிற்கிறாளே !

கண்ணாடியில் தெரிந்த சுந்தர உருவத்திடம் பார்வை வீழ நின்றிருந்தவள் , தனது கன்னம் உணர்ந்த கதகதப்பில் திடுக்கிட்டு விழி விரித்தாள் .

” இந்த கண்ணாடி எதற்கு ? ” முணுமுணுப்புடன் அவள் கண் கண்ணாடியை சுழட்ட முயன்று கொண்டிருந்தான் அவன் .அவன் நாசியின் வெப்பம் அவள் கன்னங்களில் கதகதப்பாய் .

வெடுக்கென்று அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு கண்ணாடியை விட்டும் நகர்ந்து விட்டாள் . ” சை …என்னைத் தொடாதே “

அவன் கண்கள் கோபத்தில் கொழுந்து விட்டெரிந்தன .” அவ்வளவு திமிராடி உனக்கு ? இனி நீயாகத்தான் என்னை வந்து தொடுவாய் .நான் வரமாட்டேன் ” போய்விட்டான் .

சரிதான் போடா …பெரிய மன்மதன் இவன் ! இவன் பின்னால் நான் போகப் போகிறேன் …பொறுமிய அவள் மனதை மனட்சாட்சி இடித்தது. அவன் மன்மதனில்லையா …? என நியாயம் கேட்டது .

இப்படி அவளுக்குள்ளேயே அவளுக்கான எதிரி இருப்பதனால் , அவள் இப்போதெல்லாம் ஆனந்தபாலன் பக்கம் திரும்புவதேயில்லை .அவனிடம் கேட்க அவளுக்கு நிறைய விசயங்கள் இருந்தும் , எதற்காகவும் அவன் முன் சென்று நிற்பதில்லை .பேச்சை ஆரம்பிப்பானேன் …அவனது கண்களை , முகத்தை சிரிப்பை பார்த்து பார்த்து மனம் நோவானேன் ?.

அவன் வேறு ரொம்ப சூட்டிகை .இவளது உள் மன உணர்வுகளையும் ஒற்றை பார்வையிலேயே கண்டு கொள்வான் .என்னை சைட் அடிக்கிறாய்தானே ? என்று அவன் கேட்கும் முன் அவளாகவே ஒதுங்கிக் கொண்டால் …? சுடரொளி அதைத்தான் செய்து வருகிறாள் .




” எலிபேன்ட் எப்போ வரும் அங்கிள் ? ” அமிர்தன் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் .

வாய்பூட்டு அகன்று பேசிக் கொண்டிருக்கும் குழந்தையை கண்ணில் நீர் மல்க அணைத்துக் கொண்டாள் சுடரொளி .இதோ இப்படி குழந்தையின் குழந்தைமையை வெளிக் கொணரவும்தான் அவள் இந்தப் பயணத்தை விரும்பினாள் .

” வரும்டா குட்டி. நமக்கு லக் இருந்தால் சில நேரம் இதோ இந்த ரோட்டில் கூடப் பார்க்கலாம் ” ராஜா சொல்ல அமிர்தன் முகத்தை உர்ரென்றாக்கினான்.

” நான் குட்டி கிடையாது .பாய் …” அவன் சொல்லும் முன் அவனைப் போல் மழலை மொழியில் சுடரொளி பேசிக் காட்ட அமிர்தன் கை கொட்டி சிரித்தான் .ராஜா புன்னகையுடன் அவளை ஆராய்தலாக பார்த்தான் .

அதனை கவனிக்காது குழந்தைக்கு காட்டை விளக்குவதில் இருந்தாள் சுடரொளி .” கண்ணா அதோ பாரு குரங்கு …ஐ…அதோ அங்கே ஒண்ணு …இல்லையில்லை இரண்டு , மூணு …ஏய் நிறைய இருக்குதுடா . எங்கே எண்ணு பார்க்கலாம் .ஒன் …டூ…த்ரீ …”

” நீங்க என்ன படித்திருக்கிறீர்கள் மேடம் ? ” ராஜாவின் கேள்விக்கு தனது டிகிரியை சொல்லிவிட்டு அமிர்தனுடனான உற்சாகத்தை தொடர்ந்தாள் .

” நன்கு படித்திருக்கும் நீங்கள் இந்தக் காட்டிற்குள் இது போலொரு வேலைக்கு ஏன் வந்தீர்கள் மேடம் ? “

” ஏன் இந்த வேலைக்கென்ன ? ” புருவம் சுருக்கி கேட்டாள் .

” சிட்டியில் படித்து வளர்ந்தவர்களுக்கு இது போல் காட்டுப் பிரதேசங்கள் பிடிக்காது .அதனால்தான் கேட்டேன் “

” எனக்கு இது போல் தனிமையான , இயற்கையான இடங்கள் பிடிக்கும் .அதனால் நானே விரும்பிதான் இந்த வேலைக்கு வந்தேன் “

ராஜாவின் முகம் மலர்ந்தது .சிறு யோசனையுடன் தலையாட்டிக் கொண்டான் .




What’s your Reaction?
+1
44
+1
33
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!