Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

தவிக்குது தயங்குது ஒரு மனது – 6

6

 

” இந்தா …எவன் என் பர்ஸ்ல இருந்த ஐநூறு ருபாயை எடுத்தது ? ” வீட்டை நெருங்கும் போதே அதுதான் செலினாவின் வீடென அவளது உச்சக்குரல் அறிவித்தது. சுகந்திக்கு தான் தப்பு செய்துவிட்டோமென்றதை சொல்லும்  முன்னறிவிப்பாக அக்குரல் தோன்ற , அந்த லயன் வீட்டினுள் போகாமல் ஒதுங்கி நின்றாள் .

 

” டேய் நீயாடா ? ” செலினா அருமையாக விளித்தது அவள் அண்ணனை .

 

” போடி …அந்த பிசாத்து ருபாய் யாருக்கு வேணும் ? ”




” அம்மா …”

 

” கடன்காரி நான் இல்லடி ”

 

” யாரு கடன்காரி ? உன் புருசன் வாங்குன கடனுக்கு என்னை சொல்றியா ? ”

 

” புருசன் வாங்கினா புள்ளைங்க நீங்க எதுக்கு இருக்கிறீங்க ? பொறுப்பேற்று அடைக்க வேணாம் ? ” அலட்சியமாய் ஒலித்த அம்மாளின் குரல் குடும்ப தலைவர் வாங்கிய கடனில் அவளுக்கும் பங்குண்டு என தெளிவுபடுத்தியது .

 

அந்த வீட்டின் அந்தரங்கங்களை அறிந்து கொள்ள வீட்டினுள் செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை .

 

” ஆஹான் நீயும் உன் புருசனும் ஊதாரித்தனம் பண்ண , நாங்கதான் கிடைச்சோமா ? எங்கே உன் புருசன் ? நாக்கை புடுங்கிக்கிற மாதிரி நாலு கேள்வி கேட்குறேன் ”

 

” அந்தாளு புல்லா தண்ணியடிச்சுட்டு தெரு முக்கு பிள்ளையார் கோவில் திண்ணைல படுத்துக் கிடக்கார் ” பெருமையாக அப்பா விபரம் சொன்னான் மகன் .




” ஐய்யோ…என் பணம் எங்கே போச்சுன்னு இப்போ தெரிஞ்சிடுச்சு .இந்தா நீயெல்லாம் ஒரு தாயா ? நான் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை இப்படி உன் புருசன் எடுக்க பார்த்துட்டு இருந்திருக்கியே ? ”

 

” சம்பாதிச்சாயா ? அந்த ஏமாளி கிட்ட பொய் சொல்லி பிடுங்கிட்டு வந்த பணத்தோட மீதிதானே அது ? ”

 

” அது என் சாமர்த்தியம் .ஒரு வகையில் இதுவும் என் சம்பாத்தியம்தான் ”

 

” ஏன்டி , கையில் லட்டு மாதிரி கிடச்ச வேலையை கோட்டை விட்டுட்டு இப்போ இப்படி புடுங்கி சம்பாதிக்கிறேன்கிறியே ! உருப்படுவியா நீ ? ”

 

” நானா வேண்டாம்னு சொன்னேன் .அந்த ஆஸ்பத்திரில கொஞ்சம் மருந்துல கை வச்சேன் .அந்த ஸ்வேதா பார்த்துட்டா . அம்மாவும் , மகனும் என்னை திட்டி வேலையை விட்டு தூக்கிட்டாங்க .நான் என்ன பண்ண ? ”

 

” போடி அறிவுகெட்டவளே ! எவ்வளவு வசதியான குடும்பம் அது .அந்த டாக்டரை வளைச்சு போட்டிருந்தீன்னா நம்ம குடும்பத்திற்கே காலத்துக்கும் பணக் கவலை இல்லாம இருந்திருக்கும் ” அருமை அண்ணனின் அங்கலாய்ப்பு  இது .

 

” அடப் போடா ! அந்த சாத்விக் சரியான ஜடம் .அவன்கிட்ட என் பப்பு வேகல .என்னை ரொம்ப கேவலமா பேசிட்டான் .ஆனா நான் விடலையே .அவன் வாழ்க்கையை கெடுத்துட்டுத் தானே வந்தேன் .இப்போ சார் தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்குறாரு .அவனை நிம்மதியா வாழ விட்டுருவேனா நான் ? ”

 

சுகந்தி திரும்பி நடந்தாள் .மெல்ல பேசி செலினாவின் வாயிலிருந்தே தெரிந்து கொள்வோமென்று எண்ணித்தான் வந்திருந்தாள் .ஆனால் அவ்வளவு மெனக்கெடல்களெல்லாம் தேவையில்லை என்றது செலினா குடும்பம் .சை …எவ்வளவு மோசமானவள் .இவளை நம்பி சாத்விக்கிற்கு எவ்வளவு பெரிய அநியாயம் செய்துவிட்டேன் ?

 

குமுறும் மனதினை வெளிக்காட்டின அவள் கண்கள் .கன்றி , சிவந்து வடிய தயாராயிருந்த அவள் விழிகளை சாத்விக் கண்டுகொண்டானோ ?




” சுந்தரி சிஸ்டர் , 208ம் நம்பர் பேஷன்டை டாக்டர் சசிதரனை பார்க்க சொல்லுங்கள் .உங்களுக்கு வேறு வேலை இருக்கிறது .என்னுடன் வாருங்கள் டாக்டர் சுகந்தி ” அவளை அழைத்தபடி நடந்தான் .

 

சிஸ்டர் …சிஸ்டர் – உதடளவின்றி உள்ளார்ந்து ஒலிக்கும் அவனது அழைத்தல்கள் இப்போது சம்மட்டியாய் சுகந்தியின் மனதை சிதைத்தன.

 

” என்ன விசயம் ? ” தனிமையில் கனிவுடன் கேட்டவனை பார்த்ததும் வெடித்து அழத் தோன்றியது .

 

ஆனால் தனது தவறை அழுகையெனும் போர்வை போர்த்தி சமனப்படுத்த அவள் விரும்பவில்லை .முகம் முழுவதும் குற்றவுணர்ச்சி பரவ அவனை நிமிர்ந்து பார்த்தாள் .

 

” செலினா …” ஒற்றை வார்த்தையின் பின் அவள் குரல் நடுங்கியது .

 

” எந்த செலினா ? ஓ…அந்த நர்ஸ் .அவளுக்கென்ன ? வேலைக்கு சிபாரிசு செய்யப் போகிறாயா ? நோ …அவள் மருந்துகளை கையாடல் செய்தவள் .அவளுக்கு இங்கே இனி வேலையில்லை ”

 

” என்னை மன்னித்துவிடுங்கள் ” ஸாரி என்ற வேற்று மொழி தளுக்கின்றி , தாய் மொழியில் பட்டவர்த்தனமாக இறைஞ்சினாள் .

 

” எதற்கு ? ” அவன் கேள்வி கூர்மையானது .

 

” நீ…நீங்கள் ஹோட்டலுக்கு பார்ட்டி என்று அழைத்த நாளுக்கு மறுநாள் , அவள் என்னிடம் பேசினாள் .உ…உங்களைப் பற்றி த…தவறாக ….”




” ஸ்டாப் இட் …” கையுயர்த்தி குரலில் அழுத்தம் சேர்த்தான் .

 

” தப்புதான் .நான் அவளை நம்பியிருக்க கூடாது ”

 

” ஆக உனது மௌனத்தின் காரணம் என் மம்மி இல்லை ? யாரோ ஒரு செலினா ! ம்…அவளோடு ஒப்பிடும் போது நான் குறைவாகப் போய்விட்டேன் .அப்படித்தானே ? ”

 

சுகந்திக்கு சாத்விக்கின் வேதனை புரிந்தது .குற்றமில்லாத மனிதனின் வேகமல்லவா இது ? அன்னைக்கும் , அவளுக்கும் இருக்கும் மறைமுகப் பனிப்போர்தான் அவளது தவிர்த்தலின் காரணமென்று எண்ணிக் கொண்டிருந்திருக்கிறான் .பாவம் …!

 

சுகந்தியின் மனம் மீண்டும் மீண்டும் அவனுக்காக பரிதாபத்தில் வீழ்ந்தது .ஆனால் பரிதாபம் எனக்கல்ல …உனக்குத்தான் என அடுத்தடுத்த நாட்களில் நிரூபித்தான் சாத்விக் .ஒரு வகையில் தனது ஆறு மாத கால தவிப்பிற்கு பலி வாங்கினான் என்று கூட கூறலாம் .

 

” ஏழு மணிக்கே வீட்டிற்கு கிளம்பி போய் என்ன கிழிக்க போகிறாய் ? எனக்கு பத்து மணிக்கு ஒரு ஆபரேசன் .இருந்து அஸிஸ்ட் பண்ணிவிட்டு போ ” அவள் வீடு திரும்ப இரவு ஒரு மணி ஆகும் .நடுச்சாலையில் ஓலாவிற்காக காத்திருக்கும் அவளை கண்டு கொள்ளாது அவன் கார் பறக்கும் .

 

” குப்பை அள்ளும் ஆள் லீவ் என்றால் நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள் ? இந்த ஆஸ்பத்திரியில் ஸ்டெத் பிடிக்க மட்டும்தான் செய்வீர்களோ ? ஏய் …ஹலோ நீங்க போய் இருக்கிற ஆளுங்களை வைத்து மேனேஜ் செய்து குப்பையை க்ளீன் பண்ணுங்க .” அந்த ” ஏய் ” இவளுக்கானதாக இருக்கும் .கூட வேலைக்கு வரும் ஆட்களிலும் நான்கு பேரை திருப்பி வேறு இடம் அனுப்பி விடுவான் .இறுதியில் இருக்கும் இருவருடன் இவளும் சேர்ந்து கறுப்பு நிற கவரில் இருக்கும்  மருத்துவமனை குப்பைகளை இழுத்து வந்து குப்பை வேனில் ஏற்றுவர் .

 

இதற்கு முன்பும் இது போன்ற தண்டனைகளை சாத்விக் சுகந்திக்கு தந்திருக்கிறான்தான் .ஆனால் அதன் பின்பு அவனது ஒரு வித தவிப்பு இருக்கும் .தண்டனைகளை கொடுத்து விட்டு பின்னேயே அவளை சமாதானப்படுத்தவும் வருவான் .




ஆனால் இப்போது உண்மையிலேயே அவளைக் குப்பைக்காரியைப் போலவே பார்த்தான் …நடத்தினான் .இதில் ஸ்வேதாவிற்கு பரிபூரண திருப்தி .எங்கே தன் இடத்திற்கு வந்துவிடுவாளோ …? எனப் பயந்து கொண்டிருந்தவளாயிற்றே !

 

இன்று மகன் தன் மனதிலிருந்து அவளை எடுத்து எறிந்துவிட்டான் என்பதனை உணர்ந்து தன் தலை மேல் முளைத்துவிட்ட புது தலையுடன் மோவாய்உயர்த்தி உலா வந்தாள் .




தாய் , மகனின் இந்த வகை உடல் வதைகளை சுகந்தி எளிதாக கடந்து வந்தாள் .ஆனால் சாத்விக் அவள் மனதை , அதில் அணையா விளக்காக எரிந்து கொண்டிருந்த காதலை சிதைத்த போது அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை .முடிந்த அளவு அவனை விட்டு தூரம் விலகி விட முடிவெடுத்தாள் .

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!