Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

தவிக்குது தயங்குது ஒரு மனது – 5

5

 

” என்ன பேபி எப்படி இருக்கிறாய் ? ” அறைக்குள் நுழைந்ததும் நலம் விசாரித்த சேதுபதியிடம் அவசரமாக சென்றாள் சுகந்தி .

 

” நான் நல்லாயிருக்கிறேன் அங்கிள் .உங்களுக்கு என்ன ஆச்சு ? அட்மிட் ஆகிற அளவு …” படபடத்தவளை புன்னகைத்து கையமர்த்தினார் .

 

” வயசாயிடுச்சு .வேற ஒண்ணுமில்லை பேபி ”




” உள்ளே வந்ததும் மின்மினி டாக்டர் சொன்னாங்க .உங்க கேஸ் ரிப்போர்ட் கூட பார்க்கலை .வேகமாக வந்துட்டேன் ” சொன்னபடி கட்டிலின் தலைமாட்டில் தொங்க விடப்பட்டிருந்த அவரது நோய் விபரங்களை எடுத்துப் புரட்டினாள்.

 

” லோ ஷுகர் , எக்கச்சக்க ப்ரஷர் .என்ன அங்கிள் உடம்பை இப்படிக் கெடுத்து வச்சிருக்கீங்க ? ” இடுப்பில் கை தாங்கி முறைத்தாள் .

 

” அட போ பேபி .நான் வேண்டாம்னுதான் சொல்றேன் .இந்த உடம்புதான் கூடவே வருது . என்னன்னு கேட்டா உனக்கு வயசாயிடுச்சுடாங்குது ”

 

” எழுபத்தியிரண்டு வயதெல்லாம் ஒரு வயதா ? இன்றைய முன்னேறிய மருத்துவ உலகத்தில் தொண்ணூறு வயதை தாண்டியவர்கள் கூட , ஆரோக்கியமாக நடமாட முடியும் . கொஞ்சம் எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் அவ்வளவுதான் ” சொன்னபடி அறைக்குள் வந்தான் சாத்விக் .

 

” அட வாடா பையா . நான் தூக்கி  வளர்த்தவன் நீ , இதோ என் பேபி .இப்போது என் முன்னால் வெள்ளைக் கோட்டோடு கம்பீரமாக நிற்கிறீர்கள் .உங்கள் கையால் ஊசி போட்டுக் கொள்ளவாவது என் உடம்பிற்கு ஏதாவது வரட்டுமே ”

 

” என்ன அங்கிள் இப்படி பேசுகிறீர்கள் ? ”




” ம். அது சரி. ஊசிதானே நன்றாக போடலாம் .ஆனால் அந்த பேபியும் இந்த பையனும் ஒன்றா ? ” மகனின் பின் வந்திருந்த ஸ்வேதாவிடம் முகச்சுளிப்பு .

 

” எத்தனை வருடங்கள் போனாலும் நீ மாறப் போவதில்லை ஸ்வேதா .எனக்கு பெரிய டாக்டர் மகனும் , எளிய கம்பௌன்டர் மகளும் ஒன்றுதான் .இருவரும் என் இரு கண்கள் போல ” சேதுபதி உறுதியாக பேச , அவருக்கு இரு புறமும் நின்று சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த இரு கண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர் .

 

” ட்ரிப்ஸ் சரி பண்ணுங்க சிஸ்டர் ” பக்கத்தில் நின்றிருந்த நர்ஸிடம் சொன்னவனின் பார்வை என்னவோ இளம் ரோஜா போல் மலர்ந்து எதிரே நின்று பிரசர் சரி பார்த்துக் கொண்டிருந்தவளிடம்தான் .

 

பாசிப்பச்சையில் இளம் மஞ்சள் பூக்கள் விரவிக் கிடந்த காட்டன் சேலையில் ,வனதேவதை போன்றே காட்சியளித்தவளை விட்டு நகரப் பிடிக்கவில்லை சாத்விக்கின் விழிகளுக்கு .சுகந்தி மருத்துவரென்ற தோற்ற மரியாதை வேண்டுமென்ற காரணத்தால் வேலையின் போது அணிவது காட்டன் சேலைகள் மட்டுமே .கஞ்சியற்ற குழைவுடன் அவள் உடலை தழுவியிருந்த சேலை சிற்பத்தின் நெளிவுகளை பறை சாற்றி , சாத்விக்கின் இதயத் துடிப்பை எகிற வைத்துக் கொண்டிருந்தது.




” இந்த நர்சுகளைப் போல் இனி மருத்துவர்களுக்கும் யூனிபார்ம் கொடுக்க வேண்டும் ” ஆங்கிலத்தில் ஸ்வேதா முணுமுணுக்க , நிமிர்ந்து பார்த்து சாத்விக்கின் பார்வையை உணர்ந்தவள் லேசாக முறைத்து அவன் அன்னையை கண் காட்ட , சாத்விக் அந்தக் கவலையின்றி தன் கழுத்திலிருந்த ஸ்டெதஸ்கோப் வட்டத்தை அவள் கையில் தொட்டு அழுத்தினான் .

 

” என்ன டாக்டர் , கவனத்தை எங்கே வைத்திருக்கிறீர்கள் ? சொன்ன மருந்தை சரியாக எழுதுங்கள் ”

 

சுகந்தி வேகமாக எழுத தொடங்க , சில விநாடிகளின் பின்பே அவனது ஸ்டெத் அவளது கையை  விட்டு லேசான வருடலோடு நகர்ந்தது .பிறகே சுகந்தியின் இதயம் இயல்பானது .

 

பொறுக்கி ! எல்லோரும் பார்க்கவே இப்படி செய்கிறானென்றால் …மேலே அவனை தாறுமாறாக வசை பாட ஏனோ அவளால் முடியவில்லை .கதகதவென இதயத்தில் ஏறியிருக்கும் சூட்டினை புரிந்து கொள்ள முடியாமல் பெருமூச்சு விட்டவள் வேகமாக அவனது அருகை விட்டு நகர்ந்தாள் .

 

” ட்ரிப்பை வேகமாக இறக்கிவிட்டுட்டு முழிச்சிட்டு நின்னுட்டிருந்தாயே ? ” சேதுபதி பழையது பேசி ஸ்வேதாவின் கவனத்தை திருப்பியிருக்க , அவள் முகம் சிறுத்திருந்தது. திறமையான டாக்டராக வலம் வந்து கொண்டிருக்கும் இந்த காலத்தில் அவளது ஆரம்ப கால கத்துக்குட்டி வேலைகள் இன்றைய வேலையாட்கள் முன்பு பேசப்பட அவள் விரும்பவில்லை .

 

” புல் பாடி செக்கப் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யுங்கள் ” கையாட்டி தீவிரமாக பேசியபடி வெளியேறினாள் .

 

” அப்புறம் பையா , என்ன விசேசம் ? ” சேதுபதி கவனத்தை சாத்விக் பக்கம் திருப்பினார் .




” என்னிடம் எந்த விசேசமும் இல்லை அங்கிள் .உங்கள் பேபியிடம் கேட்டுப் பாருங்கள் ”

 

” என்னடாம்மா ? ”

 

” நா…நான்…எ…எனக்கு ஒன்றும் இல்லையே அங்கிள் ”

 

” என்னடா பையா ? உங்க இரண்டு பேர் விசயமும் புரியலையே ” சேதுபதி தாடையை தடவினார் .

 

” எனக்கும்தான் புரியவில்லை அங்கிள் .அங்கே நீங்களே கேட்டுச் சொல்லுங்கள் ” சாத்விக் வெளியேறிவிட்டான் .

 

” பேபி என்னம்மா ? பயல் உன்னிடம் ஏதும் வம்பு செய்தானா ? ” கேலி போல் கேட்டார் .

 

” ஆமாம் அங்கிள் .என்னிடம் இல்லை .நர்ஸ் செலினாவிடம் ”




சேதுபதியின் கேலி மறைந்தது .” என்னம்மா சொல்கிறாய் ? ”

 

” ஆமாம் அங்கிள் .இதனை அவள் சொன்ன மறுநாளே வேலையை விட்டு விரட்டி விட்டனர் .இன்று வரை வேறு வேலை கிடைக்க விடாமலும் பார்த்துக் கொள்கின்றனர் ”

 

” சீச்சி என்ன பேபி இது ? ஷியாம் குடும்பத்தையே குற்றம் சொல்கிறாயா ? அவர்கள் அவ்வளவு மோசமானவர்கள் கிடையாதும்மா .”

 

” ப்ச் , உங்களுக்கு தெரியாது .விடுங்கள் அங்கிள் ”

 

” அதெப்படி விட முடியும் ? நான் போன முறை செக்கப்பிற்கு வரும் போதே உங்கள் இருவரையும் கவனித்துவிட்டேன் .

சாத்விக் உன்னை மனதார நேசிக்கிறான் . நான் போனமுறை வந்த போதே உன்னிடம் நேரடியாக பேச சொல்லியிருந்தேனே .பேசவில்லையா ?

 

” ம் …ஏதோ பேச வேண்டுமென்று அழைத்திருந்தார் .நான் போகவில்லை ”

 

” ஏன் ? ”

 

” சொன்னேனே அங்கிள் .நர்ஸ் செலினா …”




” வாயை மூடு .சாத்விக் நான் பார்த்து வளர்ந்த பையன் .அவனிடம் அந்த மாதிரி கீழ்த்தர எண்ணம் கிடையாது ”

 

சுகந்தி திகைத்தாள் .சேதுபதி நிச்சயம் அவள் நலம் நாடுபவர் .தவறான பாதையை அவளுக்கு காட்டமாட்டார் .ஒரு வேளை அங்கிள் சொன்னதே உண்மையாக இருந்தால் , சாத்விக் பாவம் இல்லையா ? தனக்காக தவித்திருக்கும் அவனது ஒவ்வொரு பார்வையும் அவளுக்கு நினைவு வந்தது.

 

மழைக்கால முகில்களை தன் மனதிற்குள் பரப்பும் அவனது பாசப் பார்வைகளுக்கு , ஆண் வேட்கை என்று வர்ணம் பூசி வைத்திருந்தாள் .

 

உன்னை மனதார நேசிக்கிறான் – சேதுபதியின் வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ரீங்கரிக்க உடல் உரோமங்கள் எழுந்து நின்று நடனமாடின .

 

முதலில் அவனது காதல் பார்வைகளை நாணத்துடன் ஏற்றுக் கொண்டிருந்தவள் , ஒரு நாள் அவளை சிறு பார்ட்டியென உயர் ரக ஹோட்டலில் டேபிள் புக் செய்துவிட்டு அழைக்க , அவனது லவ் ப்ரபோசை எதிர்பார்த்து சம்மதமாக தலையசைத்திருந்தாள் .ஆனால் …அந்த பார்ட்டிக்கு முதல் நாள்தான் செலினா விவகாரம் வந்தது .மறுநாள் சாத்விக்கின்  பார்ட்டியையே சுகந்தி தவிர்த்து விட ,அதற்கு மறுநாள் செலினா வேலையை விட்டுப் போய்விட்டாள் .

 

ஐயோ …அன்று எவ்வளவு நேரம் எனக்காக ஹோட்டலில் காத்திருந்தானோ ? போனை ஆப் செய்துவிட்டு அன்று இரவு முழுவதும் மனம் குமுற தான் அழுதது மறந்து போய் சாத்விக்கின் ஏமாற்றத்திற்கு தவித்தாள் .




மறுநாள் கேள்வியோடு பார்த்த அவனது பார்வையை அலட்சியப்படுத்தி நடந்தவள் ” சொடுக்கிட்டால் பின்னால் வரும் பொம்மை இல்லை நான் ” முகத்திற்கு நேராக தாக்கினாள் .தொடர்ந்து கிடைத்த சந்தர்ப்பங்களில்  சில பல வார்த்தைகளில் அவனை மறைமுகமாக காயப்படுத்த , சாத்விக் பேச்சை குறைத்து அவளிடமிருந்து ஒதுங்கிக் கொண்டான் .

 

What’s your Reaction?
+1
3
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!