Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 37

37

” இத்தனை வருசமா தாயா பிள்ளையா பழகியிருக்கோம் .உங்க மனசு எனக்கு தெரியாதாண்ணி ? ” பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய ஆரஞ்சு சாற்றை உர்ரென்ற சத்தம் வர உறிஞ்சிக் குடித்துவிட்டு , இடுப்பில் சொருகியிருந்த கர்ச்சீப்பை எடுத்து மடிப்பு பிரித்து உதறி உதட்டை நாசூக்காக ஒற்றிக் கொண்டாள் சாவித்திரி. 

சற்று முன்னதான அவளது பழரச உறிஞ்சலுக்கும் இந்த ஸ்டைலான  இதழ் ஒற்றுதலுக்கும் சிறிதும் சம்பந்தமில்லை . இது அவளது மகன் யுவராஜ் அல்லது மகள் சுனந்தாவின் நாகரீக பயிற்றுவிப்பாக இருக்கும் .




” அதுல  பாருங்க  அண்ணி நம்ம பாப்பா கல்யாணத்தப்ப இந்த பொண்ணப் பார்த்தப்பவே நான் முடிவு பண்ணிட்டேன் .இவ நம்ம மகனுக்குத்தான்னு . அப்போ அவங் கிட்ட சொன்னப்ப , ரொம்ப யோசிச்சான் .ஏரோப்ளேன் ஏறி வெளிநாடெல்லாம் போயி வந்தவன் பாருங்க . இந்தக் காட்டுக்குள்ளாற கெடக்குற பொண்ணு நமக்கு லாயக்குப்படுமான்னு ரொம்பவே யோசிச்சான் .நான்தான் ரொம்ப யோசிக்காத ராசா …பாவம் நம்ம மாப்பிள்ளை அவரு  தல மேல இருக்குற பாரம் .கொஞ்சம் இறக்கி வைக்க உதவி பண்ணுய்யான்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டேன் .பெத்த தாயி சொல்லிப்புட்டேன்னு வேற வழியில்லாம தலையசச்சான் எம்புள்ள …” 

சாவித்ரியின் அநியாயமான பேச்சை வேறு வழியின்றி பல்லை கடித்து சகித்துக் கொண்டிருந்தாள் தேவயானி. என்ன பேச்சு பேசுது பாரு இந்த அம்மா !கொந்தளிப்போடு குமுறி கொண்டிருந்தது அவளது மனம் .அன்று ரிஷிதரனால் மறைமுகமாக விரட்டி விடப்பட்ட பின் ,

யுவராஜ் இனி தன் வாழ்வில் குறுக்கிட மாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள் . ஆனால் இதோ இப்படி திடீரென்று அவன் அம்மா வந்து நிற்பார் என்று எதிர்பார்க்கவில்லை. சொர்ணத்திற்கும் அதிர்ச்சிதான். சாவித்திரியின் பேச்சில் 

 எப்படி ஒரு பெண்ணால் இந்த அளவு பேச முடியும் என்று அதிர்ச்சியில் இருந்தாள் அவள் .

” எங்க பாப்பாவா இருக்கக்கண்டு இதையெல்லாம் பொறுத்து போய்க்கிட்டிருக்கிறா . இன்னொரு பொண்ணா இருந்தா இந்நேரத்துக்கு அடித்து விரட்டி காட்டுக்குள்ள முடுக்கிவிட்டு இருப்பாள் . ஆனா நான் அப்படி வளக்கல பாருங்க .அதனாலதான் எங்க பாப்பாவுக்கு ரொம்ப பொறுமை .தம்பிக்கு பீஸ் கட்டணுமா சரி , அக்காவுக்கு கல்யாணம் பண்ணனுமா சரி , அம்மாவுக்கு சமைச்சு கொட்டனுமா சரி , இப்படி எல்லாத்துக்கும் பொறுமையா தலையாட்டிக் கொண்டே இருக்கிற பொண்ணை அதிசயமா நான் மட்டும்தான் பெத்து வச்சிருக்கேன் .இதுல உங்க அதிர்ஷ்டம் என்னன்னா அந்த பொண்ணு உங்க வீட்டுக்கு மருமகளா வந்ததுதான் ” சொல்லிவிட்டு பெருமிதமாய் சிரிக்க வேறு செய்தாள் சாவித்திரி.




புகைந்து கொண்டிருக்கும் மனதை வெளிக்காட்ட முடியாமல் தவித்து அமர்ந்திருந்தாள் சொர்ணம். இனிமேலே யோசிக்க எதுவும் இல்லை என்பதுபோல் மரத்துப் போன மனநிலையில் இருந்தாள் தேவயானி .இவ்வளவு பேச்சு சாமர்த்தியம் இருக்கும் மாமியாரை தன் அண்ணனால் வெல்லமுடியும் என்று அவளுக்கு தோன்றவில்லை.

சுந்தரேசனுடைய இப்போதைய நிலைமை அவனுடைய தொழிலில் தலையிடாமல் இருந்தானானால் யுவராஜ் அவனது தங்கைக்கு ஏற்ற மிகச்சிறந்த வரன் என்பதனை அவன் தயக்கமின்றி ஒத்துக் கொள்வான். அந்த உறுதிமொழியை யுவராஜ் கொடுத்துவிட்டானானால் பிறகு அவனுடனான தனது திருமணத்தை நிறுத்த யாராலும் முடியாது என்பதனை தேவயானி உணர்ந்தாள்.

மகள் தன் முன் கொண்டு வந்து வைத்த மலை வாழைப்பழங்களில் இரண்டை உரித்து அப்படியே முழுதாக வாய்க்குள் தள்ள முயன்றபடி ஓரக்கண்ணால் தாயையும் மகளையும் பார்த்தாள் சாவித்திரி .ம் , இது ரெண்டுக்கும் நல்லா மந்திரிச்சி விட்டாச்சு , இனி இவளோட அண்ணன் ! அவள் வீட்டு மருமகன், அந்த சுந்தரேசனை ஒரு கை பார்க்க வேண்டும் .ஆனால் அது இப்போது அல்ல .இதோ நிற்கிறாளே அலங்காரவல்லி  !சீமை சிங்காரி ! பெயரை பார்  தேதேதேஏவயானி !தேவதையின்னு நெனப்பு இவ மனசுக்குள் .இவள் கழுத்தில் என் மகனை விட்டு ஒரு மஞ்சள் கயிறை கட்ட வைத்த பிறகு இவளையும் , இவள் அம்மாவையும் ஒரு கை பார்க்க வேண்டும் , சாவித்திரியின் மனதிற்குள் திட்டங்கள் படிப்படியாக விரிந்தன.

அவளுக்கு ஆரம்பத்திலிருந்தே தேவயானியை பிடிப்பதில்லை .காரணம் இதுவரை அவளுக்கு புலப்படவில்லை .தந்தையின்றி சகோதரனை அண்டி வாழும் நிலைமையில் இருக்கும் பெண் ,அந்த அண்ணனை மணக்க இருக்கும் பெண்ணிடம்   பவ்யமாக,  பணிவாக நடந்து கொள்ள வேண்டாமா ?  கூடவே அந்த பெண்ணை பெற்று வளர்த்து இவர்கள் குடும்பத்திற்கு என்றே … இதோ இப்படி சோறு போட்டே ஆக வேண்டிய நிலையிலிருக்கும் ஒரு அம்மாவும் , பெட்டி பெட்டியாக சீர்செய்து மணமுடித்துக் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒரு பெண்ணும்,  ஆயிரங்களை தாண்டி லட்சங்களை நெருங்கும் அளவு பணத்தை கொட்டி படிக்க வைக்கும் வகையில் இருக்குமொரு படிப்பை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பையனையும் வைத்திருக்கும் இந்த மாதிரி ஒரு குடும்பத்திற்கு அவள் பத்துமாதம் சுமந்து பெற்ற கண்ணின் மணியாக வளர்த்த அவளுடைய மகளையே கொடுக்க சம்மதித்திருக்கிறாளே இந்த சாவித்திரி அவளுக்கும் உரிய மரியாதையை கொடுக்க வேண்டாமா ?




பார்க்கும்போதெல்லாம் பெரியவர்கள்  கால் தொட்டு வணங்கும்  உயர்வான பழங்கால பழக்கம் இப்போது வழக்கொழிந்து போய்விட்டதுதான். அது கூட தேவையில்லை .சாவித்திரியும் கூட அந்த அளவு அதிகமாக எதிர்பார்க்கவில்லை .கண்களில் ஒரு மரியாதை , உடம்பில் ஒரு குனிவு , பேச்சில் ஒரு பயம் .ஓடிப்போய் தட்டு நிறைய இனிப்பும் பழங்களுமாக ஒரு வரவேற்பு .இவ்வளவுதானே …இதை மட்டும்தானே அவள் எதிர்பார்க்கிறாள் .ஆனால் இதில் ஒன்றைக் கூட அவள்,  அந்த தேவயானி செய்வதில்லை. என்னவோ சிம்மாசன மகாராணி போல் எப்போதும் மிதப்பாக ஒரு பார்வை . வந்துவிட்டாயா …வா என்பதுபோல் அலட்சியமாக ஒரு தலை அசைவு . போகப் போகிறாயா …போய் கொள் என ஒரு கையசைவு.இப்படி அல்லவா இருக்கிறாள் ? இதனை இந்த அவமரியாதையை இப்படியே இந்த சாவித்திரி விட்டுவிடுவதா…? ஒருக்காலும் கிடையாது.

ஒப்புயர்வற்ற அவளுடைய மகளை …இதோ இந்த பராரி குடும்பத்திற்கு தாரைவார்த்து கொடுத்ததற்காகவே சாவித்திரியை இவர்கள் மூவரும் குலதெய்வம் ரேஞ்சுக்கு தலையில் வைத்து கொண்டாட வேண்டுமே. ஆனால் அந்த மாதிரி மரியாதை எல்லாம் இவர்களுக்கு தெரியவில்லை .அதனை தெரியப்படுத்தாமல் இந்த சாவித்திரியும் விடப் போவதுமில்லை.

மயில் தோகை போல் நீண்டு அடர்ந்து தொங்கும் தேவயானியின் அந்த நீள பின்னலை பிடித்து முறுக்கி உச்சந்தலையில் நொட் நொட் என கொட்டு வைத்து  , பஞ்சுப்பொதி போல் குமிந்து மெத்தென இருக்கும் அவள் கன்னங்களை பிடித்து நிமிண்டி  சிவக்க வைத்து ,  சரசரவென சதா அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்கும் அவளது ராட்டினக் கால்களுக்கு நல்ல சாட்டை கயிற்றால் ஒரு கட்டுப் போட்டு , மன்னிச்சிடுங்க தப்புதான் இனி செய்ய மாட்டேன் என்று அவள் கத்தும் குரலை மட்டும் கேட்டுவிட்டாளானால் சாவித்திரிக்கு ஜென்ம சாபல்யம் கிடைத்துவிடும் .இந்த அவளது எண்ணத்தை ஒத்தே இருந்தன அவள் பெற்ற மகளுடைய எண்ணங்களும்.

” என்னவோ தெரியல அம்மா .இவளைப் பார்த்தாலே எனக்கு பிடிக்கவில்லை” . மூக்கை சுருக்கி கண்களை கோணி , அழகு காட்டிய மகளை அள்ளி அணைத்துக் கொள்ள வேண்டும் போல் இருந்தது சாவித்திரிக்கு .




”  என் கண்ணே உன்னை பெற்ற பலனை இன்று தான்டி நான் அடைந்தேன் ”  மகளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தாள் தாய் .ஏறக்குறைய ஒத்த வயதில் இருக்கும் இரண்டு பருவ பெண்களுக்கு சாதாரணமாக ஏற்படும் பொறாமைதான் சுனந்தாவிற்கும்  உண்டானது .தான் மணம்முடித்து போகப் போகும் வீட்டில் தன்னைவிட அழகியான ஒரு பெண் இருக்கிறாள் .அவள் தன் கணவனுக்கு பிரியமானவள் என்ற விசயத்தை எந்த பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விடுகிறது. இதுவே அண்ணி – நாத்தனார் சண்டைகளுக்கான பெரும்பான்மை காரணம்.

சுனந்தாவிற்கும்  நாத்தனார் மீதான வெறுப்பிற்கு இதுவேதான் காரணம் என்றாலும் அந்த வெறுப்பினை மேலும் மேலும் வளர்ப்பதற்கான தூண்டுகோல் தேவயானி புறமிருந்து வரவில்லை என்பதனால் சுனந்தா ஐந்து வருடங்களாக கணவன் குடும்பத்தாரினை  தன்னோடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அல்லாமல் தேவயானி கொஞ்சம் முகம் காட்டி சுனந்தாவின் சண்டையோடு ஒத்துப் போய் இருப்பாளாயின் கணவனின் துணையோடு அவன் குடும்பத்தினரை என்றோ வீட்டை விட்டு  விரட்டி இருப்பாள் சுனந்தா.

சொர்ணமும் , தேவயானியும் தங்களது முள் மீது இருக்கும் நிலையை உணர்ந்து மிகப் பக்குவமாக நடந்து கொள்வதால் , அடிக்கடி கணவனை , அம்மா தங்கை தம்பிக்கு எதிரான சிறுசிறு செயல்களை செய்ய வைப்பதை

 தவிர்த்து வேறெதுவும் சுனந்தாவால் முடியாமல் போயிற்று. இந்த நேரத்தில்தான் யுவராஜ் அந்த செய்தியை கொண்டு வந்தான் .தான் தேவயானியை மணக்க விரும்புவதாக தாயிடம் அறிவித்தான்.

முதன் முதலாக தங்கையின் திருமணத்தின் போது தேவயானியை சந்தித்தபோது அவனுக்கு கானகத்தில் ஆடும் மயில்தான் நினைவிற்கு வந்த்து . பெண்களை மானுக்கும் மயிலுக்கும் உவமானமாக அவன் இலக்கியங்களிலும் , கதைகளிலும் படித்திருக்கிறான் .அவற்றை வெறும் கற்பனை என்றோ கதை என்றோதான் அன்றுவரை நினைத்திருந்தான் .ஆனால் அவன் சகோதரியின் திருமணத்தின் போது பச்சையும் , ஊதாவும் கலந்த மென் பட்டு சேலையில் வந்து நின்ற தேவயானி , அவன் மனதில் அந்த இலக்கிய உண்மைகள் எல்லாம் பொய்யில்லை என சொல்லுமளவு அத்தனை அழகாக நின்றிருந்தாள். இவ்வளவு அழகாக ஒரு பெண்ணா ? யுவராஜால் அவள் மீதிருந்து பார்வையை நகர்த்த முடியவில்லை.

இதோ இந்த தேவ அழகி மட்டும் அவன் பின்னேயே வந்து அவன் சொல்படி எல்லாம் கேட்டு தலையாட்டினால் எப்படி இருக்கும் ? அவன் மனம் அந்த வகை கற்பனைகளில் மூழ்கி திளைத்து ஒருவகை போதையில் மயங்க துவங்கியது .அந்த போதை மயக்கத்தை அவன் விடுவதாக இல்லை .கனவின் போதையை நனவிற்கு தக்கவைத்துக்கொள்ள , தாயின் , தங்கையின் உதவியை நாடினான். படித்து முடித்து வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கும் மகனுக்கான சீர் வரிசைகள் எழுத ஒரு பெரிய டைரியை தயார் செய்து கொண்டிருந்த சாவித்திரி மகனின் இந்த வேண்டுகோளில் அதிர்ந்தாள்.

” என்னடா ராசா சொல்ற ? அவளையா ? அவளால் நமக்கு எந்த சீரும் செய்யமுடியாதே…” 




” ஏனம்மா அவள் அண்ணன் நல்ல வசதியாக தானே இருக்கிறார் .தங்கைக்கு செய்யக்கூடாது என்றும் நினைப்பவர் போலவும் தெரியவில்லையே ? ” அப்பாவியாக கேட்டான் யுவராஜ்.

சாவித்திரி பற்களை கடித்தாள். என்ன படித்து என்ன , கொஞ்சமாவது இவனுக்கு தலையில் மூளை இருக்கிறதா ? போடா முட்டாள் என்று மகனை வையும் ஆசைதான் அவளுக்கு .ஆனால் தங்க முட்டை இடும் வாத்தின் கழுத்தை அறுக்க அவள் தயாரில்லை.

” பாரு ராசா ,இந்த விசயத்தை நான் உன் அக்காவின் காதிற்கு கொண்டு போகவே முடியாது .அவள் இதனை கொஞ்சமும் விரும்பமாட்டாள் ” 

” ஏனம்மா அவள் நாத்தனாரே அண்ணியாக வருவதில் அவளுக்கு மகிழ்ச்சி இல்லையா ? இதனால் நம் இரு குடும்பங்களுக்கும் இன்னமும் உறவு பலப்பட தானே செய்யும் ? ” 

முட்டாள் , மூடன் , மட்டி மனதிற்குள் மகனுக்கான வசவுகளை வரிசை கட்டியவள் வெளியே ஒரு சமாளிப்பு புன்னகை சிந்தினாள்  .” சீர் செய்யப்போவது அவள் அண்ணனா ? உன் தங்கையா ? ராசா ? கொஞ்சம் யோசி ” என  பூடகமாய் மகனுக்கு சுட்டினாள் .

” யார் செய்தால் என்ன ? இரண்டும் ஒன்றுதானே ? ” கேட்டு முடித்த பிறகே வித்தியாசம் புரிய யுவராஜ் அமைதியானான்.

இந்த ஐடியாவை மட்டும் சாவித்திரி தன் மகளிடம் சொன்னாளானால் அவள் நிச்சயம் தன் குடுமியை அறுத்துவிடுவாள் என்ற உறுதியாக  இருந்தவள் ” புருஷனோட தங்கச்சிக்கு பெரிய அளவில் எதுவும் செய்யாமல் அப்படியே யாரிடமாவது தள்ளி விட்டு விட வேண்டும் என்ற எண்ணம் நம் பாப்பாவிற்கு ” தெளிவாக தன் மகனுக்கு விளக்கினாள்.

யுவராஜ் அப்போதைக்கு மௌனமாகி விட்டான் .அவனுக்கு தங்கையை தெரியும்.திட்டங்கள. பல போட்டு செட்டுமையாக அவள் உருவாக்கி வைத்திருக்கும்  தனது எதிர்கால வாழ்வில் சிறு இடறல் உண்டாக்குபவர்கள் யாராக இருந்தாலும் அதனை சுனந்தா ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்பதை அவன் அறிந்து வைத்திருந்தான்.




அப்படி அவளை குறைந்த சீரோடு வெளியே யாருக்கோ தள்ளி விட்டாளென்றாலும் ,  அத்தோடு நின்று விடுவாள் என்பது என்ன நிச்சயம் ? புகுந்த வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் பெண்கள் பிறந்த வீடு வருவது தானே வழக்கம் ? ஆக இந்த விஷயத்தில் தங்கை கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசிக்க வேண்டும் என்று யுவராஜ் ஒரு யோசனை சொன்னான் .ஒரு வாரமாக தீவிரமாக யோசித்திருப்பான்  போலும் அவனுடைய திட்டங்கள் தடங்கல் ஏதும் இன்றி மிகத் தெளிவாக இருந்தது.

தேவயானி வெளியே மணம் முடித்து சென்ற பிறகு கவலை கஷ்டம் என வந்து அண்ணனிடம் பணமோ சொத்தோ என பிடுங்கிக் கொண்டு சென்றாளானால் என்ன செய்வது ? அதற்கு பதிலாக அவளை தானே மணம்முடித்து , அவள் தந்தை வீட்டு தொழிலுக்குள்ளும் தன்னை நுழைத்துக் கொண்டு , இதோ இப்போது போலவே தேவயானி , அவள் அம்மா இருவரையுமே இந்த தொழில் வேலைகள் , வீட்டு வேலைகள் இரண்டிலும் மறுபேச்சு பேசாமல் வேலை செய்யும் வேலையாட்களாகவே வைத்துக்கொண்டால் பிரச்சனை இராது இல்லையா ? அவர்களுடைய பணமோ நகைகளோ  சொத்துக்களோ எதுவுமே வெளியே போகப் போவது இல்லை. அத்தோடு யுவராஜும்  தொழிலில் முதல் போட்டு சேர்ந்து உழைப்பதால் தொழிலும் பல மடங்கு பெருகும்.

அண்ணனது இந்த வாதம் சுனந்தாவிற்கு மறுக்க முடியாததாகவே இருந்தது. 10 பவுன் போடுவதாக இருந்தாலும் அதனை நாத்தனாருக்கு என கொடுக்கும் மனம் அவளுக்கு கிடையாது .மாமனார் மகளுக்கென சேர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கும் ஐம்பது பவுன் நகை விபரம் ஏற்கனவே சுனந்தாவை உறுத்திக் கொண்டிருந்தது .இத்தோடு இடையிடையே சுந்தரேசன் பேச்சுவாக்கில் சொல்லும் , தங்கைக்கு பத்தோ இருபதோ நானும் போடத்தான் வேண்டும் என சொல்லும் பவுன்கள் வேறு அவள் மனதை அறுத்துக் கொண்டிருந்தது .இத்தனை நகைகள் இவளுக்காகவா ? 

முன்பே இந்த கொதிப்பில் இருந்தவள் அண்ணனின் பேச்சில் இருந்த தனக்கான நியாயத்தை மிக எளிதாக தனதாக்கி கொள்ள நினைத்தாள் . அத்தோடு மாமியார் போல் நாத்தனார் போல் அவளால் இந்த தொழிலுக்கென அதிகமாக உழைக்கவும் முடியாது .அவர்களானால் நேரம் காலம் பார்க்காமல் தொழில் நேர்மை தர்மம் அது இதுவென எதையாவது பேசிக்கொண்டு பழியாக கிடப்பார்கள்.

யோசிக்க யோசிக்க அண்ணனின் யோசனை மிக உயரியதென்று  தோன்ற உடனே அண்ணனுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டாள்  சுனந்தா .மூவருமாக சேர்ந்து உட்கார்ந்து பேசி தொழிலை பற்றிய பேச்சினை ஒதுக்கிவிட்டு யுவராஜுக்கு தேவயானி மேல் மிகுந்த காதல் என்ற பேச்சை மட்டும் சுந்தரேசனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர் . அவனது தொழிலில் பிறர் தலையீடு என்பது தனது கணவனால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என சுனந்தாவிற்கு தெரியும் .எனவே தொழில் பேச்சினை தள்ளிப் போட்டாள்.




அந்த மட்டும் சுந்தரேசனுக்கு யுவராஜினை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை .எனவே தன் வீடு தேடி வந்து பேசிய மாமியார் மச்சானிடம் மிக சந்தோசமாகவே தனது சம்மதத்தை தெரிவித்தான் . இந்த விபரத்தை அம்மா,  தங்கையிடம் அறிவிப்பாக சொன்னதோடு நிறுத்தி கொண்டான் .வீட்டு தலைவனான தன்னை எதிர்த்து பேசுவார்களா அவர்கள் என்ற எண்ணம் தான் அவனுக்கு .அதுவே உண்மை போல் தாய் , மகள் இருவரும் மௌனமாக தலையசைத்து இந்த சம்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவே செய்தனர்.

அடுத்த மாதமே நிச்சயதார்த்தம் என்று பரபரத்த யுவராஜ் அதற்கு சுந்தரேசன் தலையசைத்த பின்பு , மெல்ல தொழில் விஷயம் பற்றிய பேச்சுக்கு வந்தான். ஒரு தொகை முதலீடு செய்வதாக சொல்லி ஆரம்பித்த அவனுடைய தொழில் பேச்சு சுந்தரேசனுக்கு  அவ்வளவாக ஒப்புவதாக

இல்லை.

” தொழில் விஷயம் கொஞ்ச நாட்கள் கழித்து பேசலாம் மாப்பிள்ளை .இப்போது வேண்டாம் .முதலில் திருமணம் முடியட்டும் ” கறாராக அவன் சொல்லிவிட யுவராஜின் குடும்பம் சினந்து கொண்டது.

தொழில் இல்லாமல் இவர் தங்கையின் பேரழகில் மயங்கி என் அண்ணா வந்தார் என்று நினைத்தாரோ ?  பொருமினாள் சுனந்தா .

வெளிநாடு எல்லாம் போய் வேலை பார்க்க வேண்டிய என் மகன் ,  இவனுக்காக தியாகம் செய்து இந்த காட்டிற்குள் கிடக்கிறேன் என்கிறான் !கூடுதலாக இவருடைய தங்கையை வேறு குறைந்த சீர் செனத்தியில் திருமணம் முடிக்கவும் சம்மதிக்கிறான்.

இவருக்கு அது போதாதாமா ? கால் தொட்டு வணங்கி கூப்பிட்டு கொள்ள வேண்டாமா ? என்ற பொருமல் சாவித்திரிக்கு.

இந்த நேரத்தில் யுவராஜ் முயற்சி செய்து கொண்டிருந்த சிங்கப்பூர் வேலை அவனுக்கு கிடைக்க , தப்பு செய்து விட்டோமோ என்ற தவிப்பை  சுந்தரேசனுக்கு கொடுக்க நினைத்தவர்கள் , யுவராஜை சிங்கப்பூருக்கு அனுப்ப முடிவு செய்தார்கள் .அப்படி அவன் தள்ளி இருந்தால்தானே காண்ட்ராக்ட் முடிந்ததும் அவன் திரும்பி வரும்போது சுந்தரேசன் தலையை ஆட்டி ஆட்டி அவனை சேர்த்துக்  கொள்வான் …தங்கை கணவனாக மட்டுமில்லாமல் தனது தொழிலில் பங்குதாரர்கவும்.




இப்படி நினைத்துதான் யுவராஜ் சிங்கப்பூர் கிளம்பி போனான் .அவர்கள் நினைத்தது போன்றே சுந்தரேசன் கொஞ்சம் தடுமாறித்தான் போனான்.

 திரும்பி வந்தவன் கையில் கொண்டுவந்த கணிசமான தொகை அப்போது அவனுடைய தொழில் விரிவாக்கத்திற்கு தேவைப்பட , கூடவே இரண்டு வருடங்களாக தொழிலில் தனது அளவற்ற உடலுழைப்பை வழங்கியிருந்த தங்கையின் ஒத்துழைப்பையும் இழக்க விரும்பாத சுந்தரேசன் சந்தோசமாகவே இவர்களது திருமணத்திற்கு தலையாட்டினான்.

ஆனால் எப்போது யுவராஜால் தனது தொழிலுக்கு பாதிப்பு வரும் என்ற சந்தேகம் வந்ததோ அப்போதே அவனை தூக்கி எறிந்து விட்டான் .தங்கையை விட தொழில் சுந்தரேசனுக்கு முக்கியம் .

இப்போதோ யுவராஜ்”  நான் தொழிலில் தலையிடுவதில்லை .எனக்கு உங்கள் தங்கை மட்டும் போதும் ” என்ற வசனம் பேசிக்கொண்டு தனது தாயை அனுப்பி வைத்திருக்கிறான் .இதனை மறுக்கும் அளவு சுந்தரேசன் முட்டாள் அல்ல.

முதலில் திருமணம் முடியட்டும் பிறகு இந்த குடும்பத்தையே ஒரு கை பார்க்கலாம் என்ற எண்ணம் சுனந்தாவிற்கும் ,சாவித்திரிக்கும் .

யுவராஜிற்கோ தொழில் ஒருபுறம் இருந்தாலும் , தேவயானியை கை நழுவவிட மனமில்லை .பார்வையில் நேர்மையும் நடத்தையில் கண்ணியமும் கொண்டவள் அவள் என்ற உறுதியான நம்பிக்கை யுவராஜுக்கு தேவயானியிடம் உண்டு .ஆனால் இப்போது சமீபமான அவளது நடவடிக்கைகள் மேல் அவனுக்கு அவ்வளவு திருப்தி இல்லை .அந்த பொம்பளை பொறுக்கி…முகம் கருகிப் போனவனை  அவள் பார்க்கும் பார்வைகளும் ,செய்யும் பணிவிடைகளும் அவனுக்கு கொஞ்சமும் ஒத்துக் கொள்ளக் கூடியதாக இல்லை. இருக்கட்டும் இதற்கெல்லாம் சேர்த்து திருமணம் முடிந்ததும் அவள் அவனுக்கு பதில் சொல்ல வேண்டும் .முதலில் அவள் கழுத்தில் தாலி கட்டி அவளை தனது உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டும். பிறகு அந்த அசுரனை பார்த்த கண்ணை நோண்டி ,  அவனை தொட்ட விரல்களை ஒடித்து , அவனுடன் பேசிய வாயைப் பொத்தி இப்படி தேவையான தண்டனைகள் யுவராஜினுள் வரிசையாக ஓடின.

அவன் மிக பிரியமான மாப்பிள்ளையாக மாறி சுந்தரேசன் முன் வந்து நின்றிருந்தான். மிக எளிதாக சுந்தரேசன் தன் தங்கையின் வாழ்வை அவன் கையில் தூக்கி கொடுக்க தயாராக இருந்தான் .தங்கள் நோக்கம் நிறைவேறி விட்ட ஆனந்தத்தில் தாயும் ,மகளும் இனிப்பு வைத்து கொண்டாடாத குறையாக குதித்துக் கொண்டிருந்தனர் .

உன்னையெல்லாம் கல்யாணம் செய்ய சம்மதித்து  இருக்கிறானே என் பிள்ளை ! அவன் காலைக் கழுவ வேண்டாமா நீங்கள் ? இது போல ஒரு எண்ணத்தை தாய் மகள் இருவர் மனதிலும் உண்டாக்கிவிடும் உயர்ந்த நோக்கத்துடன் தன் சொற்களால் அவர்களை குத்திக் கிழித்துக் கொண்டு இருந்தாள் சாவித்திரி.




என்ன செய்யப்போகிறாய் என்பது போல் பார்த்த தாய்க்கு ,தன்னுடைய வழக்கம்போல் வெறுமையான ஒரு பார்வையை கொடுத்தாள் தேவயானி .என்ன செய்ய முடியும் அவளால் ? இதனை என்னதான் செய்யமுடியும் ?  முன்பு யுவராஜை மணமகனாக அண்ணன் காட்டிய போதும் ஓரளவு இதே எண்ணம்தான் அவளுள் .ஆனாலும் தலையாட்டி சம்மதிக்க முடிந்தது அவளால் .ஆனால் இப்போதோ ராட்சத கரம் ஒன்று அவள் இதயத்தை பிசைந்து கொண்டிருப்பது போல் ஒரு வலி அவளுள் பரவிக்கிடந்தது

முடியுமா ?  இதோ இவனை  திருமணம் செய்து கொள்ள அவளால் முடியுமா ? முடியாது …என்று அவள் உள்மனது தீவிரமாக கூக்குரலிட,  ஏன் ? காரணம் கேட்டது அவள் மனம்.

இதோ இந்தக் கேள்வியை தானே அவளுடைய அண்ணனும் கேட்பான் ? அதற்குரிய பதிலை அவள் சொல்ல வேண்டுமே ! அப்படி சொல்வதற்கென  அவளிடம் ஏதும் காரணம் இருக்கிறதா ? தன்னையே அலசி ஆராய்ந்தாள்  அவள் . ஏன் என்று தெரியாமல் ரிஷிதரனின் ஞாபகங்கள் அவளுள் வந்துகொண்டே இருந்தன. இந்த திருமண விபரத்தை அவனிடம் தெரிவிக்க வேண்டும் …திடுமென இப்படி ஒரு பரபரப்பு அவளுக்குள்  ஓட , அதனை செயல்படுத்த நினைத்தவள் அடுத்த நிமிடமே சோர்ந்தாள்.  இது ஒன்றும் அவன் அறியாத தகவல் இல்லையே  ! முன்பே அவனுக்கு தெரிந்ததுதானே ! இப்போதும் இவளுக்கு இப்படி ஒரு அபாய நிலை இருப்பது தெரிந்தும் தானே ,இனி நமக்குள் எந்த தொடர்பும் வேண்டாம் என்று உறுதி சொல்லிவிட்டு கண் காணாமல் போனான் .அப்படிப்பட்டவனை தேடி இந்த செய்தியை சொல்வதா ? அதனால் அவளுக்கு எந்த நன்மையும் கிடைக்குமா ?

இல்லை என்றே மிக நிச்சயமாக தேவயானிக்கு தோன்றியது.  அப்படியானால் அவள் என்னதான் செய்வது ? அலைபாயும் மனதுடன் அமர்ந்திருந்த மகளின் தோள்களை வருடி ஆறுதல் படுத்தினாள் அன்னை .எதுவும் நிச்சயமாக தெரியாத போது பாவம் அந்த தாயும் தான் என்ன செய்வாள் ? 




அங்கேயானால் சுந்தரேசன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லிவிட்டான் .விளைவாக யுவராஜ் மீண்டும் பசுமை குடிலுக்கு தினமும் வருகை தர தொடங்கிவிட்டான் .

தேவயானியின் வீட்டு நிலைமை இப்படி இருக்கும் போது தான் மனோரஞ்சிதம் அங்கே வந்து சொர்ணத்தை சந்தித்தாள்.

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!