pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 38

38

” ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாய் சொர்ணம் ? உன் முகமே சரி இல்லையே ! ” கேட்டபடி வந்து நின்ற மனோரஞ்சிதத்தை பார்த்ததும் ஏனோ சொர்ணத்திற்கு அழ வேண்டும் போல் இருந்தது. ஆனால் கூடாதென்ற வைராக்கியம் நிறையவே இருந்ததால் அழுகையை கஷ்டப்பட்டு அடக்கினாள். திணறலோடு அவள் உள்ளே அடக்கிய அழுகையை இனம் கண்டு கொண்ட மனோரஞ்சிதம் ஆறுதலாக அவள் தோளை தட்டினாள்.




” நானும் உன் போன்று தான் சொர்ணம் .நெருப்பை விழுங்கி இருக்கும் போதும் , முகத்தில் புன்னகை காட்டும் இந்த நிலைமையை அதிக தடவை கடந்து வந்திருக்கிறேன்.  நம் இருவருக்குமே ஒருவர் வாழ்க்கை அடுத்தவருக்கு மிக நன்றாகவே தெரியும் .எத்தனையோ முறை நான் கேட்காமலேயே எனக்கு ஆறுதல் அளித்து இருக்கிறாய் .இதோ சில நாட்களுக்கு முன்புகூட  சட்டத்தின் பிடியில் இருந்த என் மகனை விடுவிக்க துணை இருந்ததோடு பெரும் ஆறுதலாக இருந்தவளும் நீ தான் .இப்போது உன் மனதை எந்தப் பிரச்சனை பிடித்து ஆட்டுகிறது என்பதை தயக்கமில்லாமல் என்னோடு பகிர்ந்து கொண்டால் நிச்சயம் என்னால் முடிந்த உதவியை உனக்கு செய்வேன் ” 

ஆறுதலாக தன் தோள்  தட்டிய மனோரஞ்சித்த்தின்  கையின் மேல் ஆதரவு தேடி தன் கன்னத்தை சாய்த்துக் கொண்டாள் சொர்ணம். ”  எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை மனோ மேடம் .ரொம்பவுமே வேதனையாக இருக்கிறது” 

” என்னம்மா ! நீ இவ்வளவு கலங்கி நான் பார்த்ததில்லையே ?என்ன விஷயம் ?” மனோரஞ்சிதம் சொர்ணத்தின் தோளை அணைத்து தன் மேல் சாய்த்துக் கொண்டாள்.

உண்மைதான் ! சொர்ணம் இவ்வளவு கலங்கியதில்லை .கிட்டத்தட்ட சொர்ணத்தை இருபது வருடங்களாக மனோரஞ்சிதம் அறிவாள். இத்தனை வருடங்களில் அவளது உற்ற  துணையான வாழ்க்கை துணையை இழந்து நின்றபோது கூட இந்த அளவு சொர்ணம் கலங்கியதில்லை .கணவரின் பிரிவிற்கு அழுதிருக்கிறாள் .புலம்பியிருக்கிறாள் .ஆனால் இனி என்ன செய்வேனோ ? என்ற தடுமாற்றத்துடன் கூடிய இந்த கலக்கம் ! இது சொர்ணத்திடம் மனோரஞ்சிதம் எதிர்பார்க்காத ஒன்று.

” மேடம் ! வந்து சுந்தர் தேவயானிக்கு …என் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்கிறான் ” திக்கி திணறி பேசினாள் சொர்ணம்.

” என்ன தேவயானிக்கு திருமணமா ? ” மனோரஞ்சிதம் அதிர்வது துல்லியமாக தெரிந்தது.




” ஆமாம் கிட்டத்தட்ட முடிவானது போல் இருக்கிறது ” 

” யார் ? யார் அந்த மாப்பிள்ளை ? ” பட படத்தாள் மனோரஞ்சிதம்.

” யுவராஜ் ! என் மருமகள் சுனந்தாவின் அண்ணன்.” 

” சை !  ” வலது கையை மடக்கி இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டாள். மனோரஞ்சிதம்.

”  உன் முட்டாள் தனத்திற்கு அளவே கிடையாதா சொர்ணம் ? இப்படியா மகன் சொல்வது எல்லாவற்றிற்கும் தலையாட்டிக் கொண்டே இருப்பாய் ? மருமகளின் அண்ணன் என்றால் வேறு எந்த தகுதியும் வேண்டாமா அவனுக்கு ? ” 

” நிறைய தகுதிகள் இருக்கிறதே மேடம் !என் மகனுக்கு திருப்தி அளிக்கக்கூடிய நிறைய தகுதிகள் !  ஃபாரின் ரிட்டர்ன் ! கை நிறைய பணம் ! கெட்ட பழக்கங்கள் இல்லாதது ! இப்படி …எந்த குறையைச் சொல்லி இந்த வரனை நான் வேண்டாம் என்று சொல்வேன் ? ” புலப்பமாய் தன் நிலைமை சொன்னாள் சொர்ணம்.

” உனக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை தானே ?  அதையே சொல்லேன் ” 

” பிடிக்காததற்கு காரணம் சொல்லவேண்டுமில்லையா மேடம் ? ” 

” பிடிக்கவில்லை அவ்வளவுதான் ! என்று சொல்ல வேண்டியது தானே ?  நீ பெற்ற மகன் தானே ? அவனிடம் பேசுவதற்கு என்ன தயக்கம் உனக்கு ? ”  மனோரஞ்சிதத்தின் கேள்விக்கு சொர்ணம் உதட்டை மடித்து கடித்துக்கொண்டாள். இப்படி எல்லாம் மகனிடம் அதிகமாக பேசும் நிலைமையிலா அவள் இருக்கிறாள் ?  மெல்ல தலையசைத்து தன்னால் முடியாது என செய்கை காட்டினாள் அவள்.

” சரிதான் ! மகன் வீட்டுத் தலைவன். சம்பாதித்து போட்டு வீட்டை காப்பவன். அப்பா விட்டுப்போன தொழிலை பார்ப்பவன். என்று ஏதாவது பிலாக்கணம் பேசிக் கொண்டே இருப்பாய் .உன்னால் பிரயோஜனம் கிடையாது .தேவயானி எங்கே ? அவளை கூப்பிடு. அவள் அண்ணனிடம் பேசட்டும் ! அவளுக்கும் இந்த திருமணம் விருப்பம் இல்லை தானே ?” 

மனோரஞ்சிதம் உரிமை காட்டி அதட்டினாள்.




” ப்ச் ! ” என்று ஒரு வெறுமை சிரிப்பினை படரவிட்டாள் சொர்ணம் .” சிலநேரம் என்னால் கூட சில விஷயங்கள் பேசிவிட முடியும் மேடம். ஆனால் தேவயானி பாவம் !பாவப்பட்ட ஜென்மம்! என்னுடைய வயிற்றில் வந்து பிறந்ததினாலேயே  இந்த துன்பங்களையெல்லாம் அனுபவித்துக் கொண்டு இருக்கிறாள். நிச்சயம் அவளால் அவள் அண்ணனிடம் பேச முடியாது ” 

மனோரஞ்சிதம் முகத்தை சுளித்தாள் .” இதெல்லாம் என்ன பேச்சு ?அதெப்படி தனக்குப் பிடிக்காத ஒரு வாழ்க்கையை தேவயானி ஏற்றுக்கொள்வாள் ? கூப்பிடு அவளை ! ” சொன்னதோடு தானே குரல் உயர்த்தி அவளை அழைக்கவும் செய்தாள் மனோரஞ்சிதம்.

சற்று முன் வரை இவர்களின் பேச்சுக்களை அடுப்படிக்குள் நின்று தேவயானி கேட்டுக் கொண்டிருந்தாள்தான். சட்டென மனோரஞ்சிதம் அவளை அழைத்து விடவும் , கொஞ்சம் தயக்கத்துடனேயே உள்ளே வந்தாள்.

” தேவயானி ! உன் அம்மா அவ்வளவு படிப்பறிவு இல்லாதவள் . கூட அனுபவமும் இல்லாதவள் . நீ அப்படி அல்ல .படித்த பெண். அதுவும் ஐஏஎஸ் பரீட்சைக்காக உன்னை தயார்படுத்திக் கொண்டு இருப்பவள். நிச்சயம் நீ இப்படி பத்தாம்பசலியாக இருக்க மாட்டாய் . சொல் ! நீயே தைரியமாக உன் அண்ணனிடம் பேசி இந்த திருமணத்தை நிறுத்திவிடுவாய்தானே  ? ” நம்பிக்கையோடு கேட்டாள் மனோரஞ்சிதம்.

” அம்மாவின் நிலையில் இருந்து சிறிதும் மாற்றம் இல்லாதது என்னுடைய நிலைமையும் மேடம் ! ” அழுத்தம் திருத்தமாக அறிவித்தாள் தேவயானி.

” இது என்ன முட்டாள்தனம் ” மனோரஞ்சிதம் சீறினாள் . ” தாய் , மகள் இருவருக்கும் புத்தி கெட்டுபோய்விட்டதா ? ” 

” புத்தி என்று கொஞ்சமேனும் எங்கள் மூளைக்குள் இருப்பதால்தான் இப்படி யோசிக்கிறோம் ”  வறண்ட குரலில் பதில் சொன்னாள் தேவயானி.

” முழு முட்டாள்கள் நீங்கள் இருவரும் ! ” மனோரஞ்சித குரலில் மிகுந்த வெறுப்பு .இத்தனை வெறுப்பிற்கும் எந்த  சலனமும் இன்றி அமர்ந்திருக்கும் தாய் மகளை பார்த்தவள் தன் கோபத்தை குறைத்துக் கொண்டு கொஞ்சம் நிதானம் ஆனாள்.சொர்ணத்தின்  கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு மெல்ல வருடியபடி நிதானமாக கேட்டாள்.

” ஏன் இப்படி பேசுகிறீர்கள் சொர்ணம் ? உங்களது இந்த முட்டாள்தனமான ஒப்புதலுக்கு  எனக்கு காரணம் தெரியவில்லை ” 

” வீட்டு ஆண் பிள்ளையை மதித்து நடக்க வேண்டும் என்பதைத் தவிர எங்களுக்கு பெரிய காரணம் எதுவும் கிடையாது மேடம் ” சமாளிப்பாக  பேசினாள் தேவயானி .அவளுக்கு தனது அண்ணனை மூன்றாவது மனிதரிடம் விட்டுக்கொடுத்து போக மனமில்லை.




” காரணம் எங்கள் அரவிந்த் ! ” மெலிந்த குரலில் பேசிய அன்னையை ஆச்சரியமும் கண்டிப்பும் கலந்து பார்த்தாள் தேவயானி .நம் குடும்ப விஷயம் இந்த நான்கு சுவரை தாண்டி அடுத்த அறைக்கு கூட போகக் கூடாது என்ற கண்டிப்பாக கறாராக  இருக்கும் தன் அன்னை தானா இப்போது வீட்டு விஷயம் வெளியே பேசுவது…? 

மகளின் வியப்பை  உணர்ந்தும் உணராதது போல் தனது அவலத்தை தொடர்ந்து பேசினாள் சொர்ணம் .” அரவிந்துக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும். தேவயானிக்கு திருமணம் முடிக்க வேண்டும். இப்படி அடுத்த பிள்ளைகளின் எதிர்காலம் என் முதல் பிள்ளையின் கையில் இருக்கிறது மேடம் ” 

” இதெல்லாம் ஒரு காரணங்களா ? ” மனோரஞ்சிதம் கேட்க இருவரும் விழிகளை விரித்தனர்.

” தம்பி மெடிக்கல் படிக்கிறான் மேடம் .அவனுக்கு ஆகும் செலவு பற்றி உங்களுக்கு தெரியுமா ? ” உலகம் அறியாதவள் அல்ல மனோரஞ்சிதம் .மிகப்பெரிய தொழிலை முன்பு கணவருடன் , இப்போது மகனுடன் சேர்ந்து நடத்தி வருபவள் .ஆனாலும் இந்த சூழ்நிலையில் இந்த கேள்வியை கேட்பதைத் தவிர தேவயானிக்கு வேறு வழியில்லை.

” வருடம்தோறும் பத்திலிருந்து 50 பிள்ளைகள் வரை எங்கள் ‘கரன் பவுண்டேசன் ‘ மூலமாக படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம் .என்ஜினியர் , டாக்டர் போன்ற பல படிப்புகள் அதில் உண்டு .வெளிநாடு சென்று படிக்க விரும்பும் பிள்ளைகளுக்கும் கூட நாங்கள் உதவி கொண்டு இருக்கிறோம் .என்ன புரிகிறதா ? ” 

மனோரஞ்சிதம் பேசி முடித்ததும் இருவருமே குப்பையாக  உணர்ந்தனர் .புரிந்தது என்பதுபோல் தலையசைத்தனர்.

” என்ன புரிந்து கொண்டீர்கள் ? எங்கே சொல்லுங்கள் பார்ப்போம் ? ” மனோரஞ்சிதத்தின் கேள்விக்கு விழித்தனர் .

” வ…வ… வந்து பிள்ளைகளை பெரிய படிப்பெல்லாம்  படிக்க வைக்க ஆகும் செலவு உங்களுக்கு தெரியும் மேடம்…”  சொர்ணம் தடுமாறி பேச, 

” நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் மேடம் ? ” நேரடியாக மனோரஞ்சிதத்தின்  கண்களை சந்தித்தாள் தேவயானி.

” வெரிகுட் தேவயானி ! நீ புரிந்து கொள்வாய் என்று எனக்கு தெரியும். நன்றாக கேட்டுக்கொள் சொர்ணம் .எங்கெங்கோ கிடக்கும் யார் யாரோ முகம் தெரியாதவர்களுக்கெல்லாம் படிப்புச் செலவு கொடுக்கும் நாங்கள் ,என்னுடைய மிகச்சிறந்த தோழியின் மகனுக்கு செலவழிக்க மாட்டோமா ? ” 

சொர்ணம் விழிகளை விரித்தாள் ” அரவிந்தின் காலேஜ் பீஸ் நீங்கள் கட்டுகிறேன் என்கிறீர்களா மேடம் ? ” 

” என்ன நம்ப முடியவில்லையாக்கும் ? ” மனோரஞ்சிதம் சிரித்தபடி கேட்க,  

” நியாயம் இல்லாததை எங்களால் நம்ப முடியாது மேடம் ” பதில் சொன்னாள் தேவயானி.

” நீ என்ன சொல்கிறாய் தேவயானி ? ” மனோரஞ்சிதம் அவளை கூர்ந்தாள்.




” நீங்கள் இன்னமும் பேசி முடிக்கவில்லை என்றே நினைக்கிறேன் மேடம் ! முழுதாக பேசி முடித்து விடுங்கள். பிறகு நான் சொல்ல நினைப்பதை சொல்கிறேன் ! ” 

” யூ ஆர் வெரி க்யூட் டியர் !” பாராட்டோடு தேவயானியின் கன்னத்தில் தட்டினாள் மனோரஞ்சிதம்.

” இந்த திருமணத்தை நிறுத்திவிட்டு நீ என்னோடு வந்துவிடு தேவயானி ! ”  நிறுத்தி நிதானமாக சொன்னாள் மனோரஞ்சிதம்.

” உங்களோடு ! எங்கே மேடம் ? ” 

” சென்னைக்கு ! என் வீட்டிற்கு ! ” 

” எதற்கு ? ” 

” உனக்கு நான் வேலை தருகிறேன். என் செக்ரெட்டரி வேலை !” 

” அதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது மேடம் ? ” 

” என்னம்மா ! எத்தனையோ கம்பெனிகளை நிர்வகித்து கொண்டிருப்பவள் நான். எனக்கு ஒரு செக்ரெட்ரி தேவைப்பட மாட்டாளா ? ” இலகுவாக கேலி பேசினாள்  மனோரஞ்சிதம்.

” நான் அதைக் கேட்கவில்லை மேடம் ! திடுமென இப்படி எனக்கு ஒரு வேலை கொடுத்து உங்களோடு அழைத்துப் போக வேண்டிய அவசியம் என்ன வந்தது என்று தான் கேட்கிறேன் ? ” 

” அது …! என் தோழிக்கு உதவுவதற்காக என்று வைத்துக் கொள்ளேன் ” 

 ” அதாவது உங்களது 20 ஆண்டுகால தோழிக்கு …! ” என்று கேட்டுவிட்டு மனோரஞ்சித்த்தை  கூர்ந்தாள் தேவயானி.

பட்டென மனதிற்குள் மூண்டு விட்ட சிறு எரிச்சலையும் தாண்டி , மனோரஞ்சிதத்திற்கு புன்னகைக்க தோன்றியது .” மிகவும் கவனமானவளம்மா நீ !” என்று தேவயானியின் கன்னத்தை தட்டினாள்.

” இருபது வருடங்களாக உங்கள் தோழிக்கு உதவ நினைக்காமல் இன்று மட்டும் என்ன புதிதாக ! என்று கேட்க நினைக்கிறாய் .அப்படித்தானே ? இதோ இங்கே உன் அம்மாவை பாரு ! இத்தனை ஆண்டுகளில் அவளது சோகத்தை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் இதுபோல் ஒரு ஆதரவற்ற நிலையை அவள் கண்களில் பார்த்ததில்லை .அந்த பரிதவிப்பை மாற்ற வேண்டும் என்று நினைக்கிறேன் .அவ்வளவுதான் ! ” 

உன் கேள்விக்கான விளக்கம் முடிந்தது என சொல்லுவதுபோல் தேவயானியிடம் இருந்து சொர்ணத்திற்கு திரும்பிக்கொண்டாள் மனோரஞ்சிதம்.”  அரவிந்தின் மொத்த படிப்புச் செலவை எங்கள் பவுண்டேசன் மூலமாக கட்ட ஏற்பாடு செய்கிறேன் சொர்ணம் ! தேவயானியை என்னோடு சென்னைக்கு அனுப்பி வை .கொஞ்ச நாட்கள் அவள் அங்கே வேலை பார்க்கட்டும் .இங்கே இருக்கும் குழப்பங்கள் எல்லாம் கொஞ்சம் அடங்கியதும் மீண்டும் அவளை இங்கேயே அனுப்பி விடுகிறேன் சரிதானே ? ” 




ஓரளவு திருப்தி தெரிந்தாலும் சொர்ணத்திடம்  நிறைய தயக்கம் தெரிந்தது.”  சரிதான் மேடம் ! ஆனாலும்…”  என இழுத்தாள்.

தேவயானியும் ” இல்லை மேடம் ! நாங்கள் யோசிக்க வேண்டும் ” என்றாள் உறுதியாக.

மனோரஞ்சிதம் இருவரையும் புன்னகையோடு பார்த்தாள் .மிகவும் இக்கட்டான சூழ்நிலை .மிகவும் தேவையான பணம் .ஆனாலும் சரி… சரி என்று தலை ஆட்டாமல் தன்னம்பிக்கையோடு நிமிர்ந்து நிற்கும் தாயையும் ,மகளையும் ஒருவித திருப்தியோடு பார்த்தாள்.

” இதில் யோசிக்க என்ன இருக்கிறது தேவயானி? ” 

” தம்பிக்காக நீங்கள் பணம் கட்டுவதாக சொன்னது எனக்கு அவ்வளவு சரியாக படவில்லை மேடம் ” 

” என்ன ? ஏன்மா ? அதில் என்ன தவறு இருக்கிறது ?நான் எங்கள் பவுண்டேஷன் மூலமாக தானே …” 

” ஆனால் அந்த பவுண்டேஷன் கஷ்டப்படுகிற பிள்ளைகள் வீட்டினருக்காகத்தானே ? நாங்கள் அப்படி கஷ்டப்படுகிறவர்கள் கிடையாதே ! ” கௌரவமாக  தலைநிமிர்ந்து கொண்டாள் தேவயானி .அவளது அந்த நிமிர்வை பார்க்காதது போல் பார்த்து ரசித்தவள்…

” பணம் கட்ட முடியாத வீட்டு பிள்ளைகளுக்காகத்தான் !நீங்கள் கூட …” 

” இல்லை ! இல்லை ! பணம் கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தால் தம்பியை இந்தப் படிப்பில் சேர்த்து இருக்கவே மாட்டோம் .கொஞ்சம் மெனக்கெட்டு பணம் கட்ட வேண்டி இருக்கிறது .அவ்வளவுதானே தவிர , எங்களால் முடியாதது இல்லை !  எங்களால் முடிந்த விஷயத்திற்கு உங்களை நாடினால் , இது உண்மையாகவே போய் சேரவேண்டிய ஒருவருடைய படிப்பையே கெடுத்தது போல் அல்லவா ஆகிவிடும் ? அந்த தப்பை நாங்கள் செய்யமாட்டோம் ” அழுத்தம் திருத்தமாக பேசினாள் தேவயானி.

மனோரஞ்சிதம் புன்னகையுடன் எழுந்து நின்றாள் .தேவயானியின் கன்னத்தில் மென்மையாக தட்டினாள்.”  சரிதான்மா உன் உன் தம்பிக்கு நீயே பணம் கட்டி படிக்க வை ! ஆனால் என்னுடன் சென்னைக்கு வரலாம் இல்லையா ? வேலை தரத்தான் கூப்பிடுகிறேன் ” 

தேவயானி இதற்கு உடனடி பதில் சொல்லாமல் தயங்கி நின்றாள்.

” என்னம்மா ? இதற்கும் என்ன தயக்கம் ? ” 

” வந்து ! தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் மேடம் ! நான் உங்களிடம் …எனக்கு வேலை கேட்கவில்லையே…” 

தேவயானியின் இந்த பதிலில் திகைத்தாள் மனோரஞ்சிதம் .கரண் என்டர்பிரைஸ் கம்பெனியில் வேலை செய்ய எத்தனை பேர் வரிசையில் நிற்கிறார்கள் ! இவளானால் கைக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை இப்படி அலட்சியமாக தூக்கி எறிகிறாளே! 




” அதாவது கேட்காமலேயே வேலை கொடுக்க நீ யார் என்கிறாய் !  அப்படித்தானே ? ” எவ்வளவோ மறைக்க முயன்றும் மனோரஞ்சிதத்தின் குரலில் லேசாக கோபம் வெளிப்பட்டுவிட்டது.

” ஐயோ அப்படி இல்லை மேடம் .நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். எனக்கு இந்த பசுமை குடிலை விட்டு வருவதற்கு மனமில்லை. நான் இங்கேயே இந்த எங்களது தொழிலிலேயே பழகிவிட்டேன். வெளியே போய் இன்னொருவரிடம் வேலை பார்ப்பதென்பது என்னால் முடியாது என்றே தோன்றுகிறது ”  பவ்யமாகவே பேச்சை முடித்தாள் தேவயானி.

மனோரஞ்சிதம் எரிச்சலுடன் சொர்ணத்தை பார்த்தாள் . ” உனக்கு உதவத்தான் நினைத்தேன் சொரணம் .ஆனால் நீங்கள் இருவரும் கொஞ்சமும் மாறப்போவதில்லை .எப்படியோ போங்க ! ” என்றுவிட்டு வெளியேறி தன் குடிலுக்கு போய்விட்டாள் .

எப்படியும் போ ! என்று சொல்லிவிட்டு வந்து விட்டாளே தவிர , இந்த விசயத்தை அப்படி விட்டுவிட அவள் தயாராக இல்லை. அதெப்படி இந்த மனோ கையிலெடுத்த ஒரு காரியம் நிறைவேறாமல் போகும் ? எப்படி தேவயானியை தன்னுடன் வருவதற்கு சம்மதிக்க வைப்பது ? யோசனையுடன் குடிலின் உள்ளே முன்னும் பின்னுமாக நடந்தபடி இருந்தாள் .இரவு வெகுநேரம் ஆனபிறகும் இதற்கு ஒரு முடிவு கிடைக்காமலேயேதான் மனோரஞ்சிதம் படுக்கைக்கு சென்றாள்.




ஆனால் சரியான தூக்கம் பிடிக்காமல் மறுநாள் அதிகாலை பொழுதிலேயே விழிப்பு வந்து வெளியே ஒரு சிறிய நடைக்காக அவள் வந்தபோது , காதில் கேட்ட பேச்சுக்கள் , பேசியவர்கள் , என எல்லாமே தேவயானி தன்னுடன் வரும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பதனை அவளுக்கு உணர்த்தியது .மனோரஞ்சிதத்தின் தொழில் மூளை அடுத்தடுத்த திட்டங்களை படபடவென்று போட்டது.

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!