Barathi Kannmma Serial Stories பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – 3

3

 

 

சலசலவென பேசிய ஆசிரியர்களிடையே சத்தமின்றி சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்து தனது டிபன்பாக்ஸை கழுவிய கண்ணம்மாவின் கண்களில் நித்திகா பட்டாள் .

எல்லோரும் லஞ்ச் ஹவரில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இவள் மட்டும் ஏன் இங்கே வந்து உடகார்ந்து கொண்டிருக்கிறாள் …? அவளுருகே திறக்காமல் வைக்கப்பட்டிருந்த டிபன் அவள் இன்னமும் சாப்படவில்லையென சொன்னது .

பாவம் போய் விசாரிக்கலாம் என நினைத்தவள் அன்று காலையில் வகுப்பில் நடந்த சம்பவம் நினைவிற்கு வர மனதை கடினமாக்கிக் கொண்டாள் .அன்றும் இரண்டு பெண்களுடன் சண்டை போட்டிருந்தாள் .வாய் பேச்சு வளர்ந்து அவர்கள் ஹோம்ஒர்க் நோட்டை கிழித்து வீசிவிட்டிருந்தாள் .

ஏன் இப்படி செய்கிறாயென கேட்டாள் அதே திமிர் நேர் பார்வை .பட்டென கன்னத்தில் அறிய துடித்த கையை அடக்கியபடி அவளை முறைத்தாள் கண்ணம்மா .மீண்டும் வகுப்பை விட்டு வெளியேற்றினாள்.




இதோ இப்போது சாப்பிடாமல் சோர்ந்திருந்த குழந்தையை கண்டதும் இயல்பாக எழுந்த பரிதாப உணர்வை அடக்கி பார்வையை போர்டு பக்கம் திருப்பி பாடத்தை தொடர்ந்தாள் .தானாக மீண்டும் பார்வை நித்திகா பக்கம் திரும்பிய போது அவள் பெஞ்சில் சரிந்து படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் .

இங்கே தொண்டை வரள கத்திக்கொண்டிருக்கும் எனக்கு என்ன மரியாதை …என கத்த துடித்த நாவை அவளது சோர்வான நிலை தடுக்க பார்க்காத்து போல் திரும்பிக்கொண்டு அந்த கணக்கை விளக்க ஆரம்பித்தாள் .

மாணவர்களை ஒவ்வொருவராக எழுப்பி போர்டில் எழுதியிருந்த கணக்கின் விடையை போடச் சொல்லி , தவறுகளை திருத்தி விளக்கம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த போது , திடீரென எழுந்த நித்திகா தன்னருகில் அமர்ந்திருந்த பிள்ளையின் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் .

வகுப்பே ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க , அடி வாங்கிய பிள்ளை சத்தமாக அழ ஆரம்பித்தாள் .சேர்த்து வைத்திருந்த பொறுமை பறக்க வேகமாக எழுந்த கண்ணம்மா நித்திகாவின் தலையில் ஓங்கி குட்டினாள் .
” என் பொறுமையை மிகவும் சோதிக்கிறாய் .வெளியே போ. இனி உன் பெற்றோர்களை கூட்டிக்கொண்டுதான் வகுப்பிற்கு வர வேண்டும் ்போ …..” கத்தினாள் .

தளும்பி நின்ற கண்ணீர் கண்ணுக்குள்ளேயே தேங்கி நிற்க முகத்தில் அதிர்ச்சி வாங்கி நின்ற நித்திகா …

” இனி இது மாதிரி பண்ணமாட்டேன் .அப்பாவை கூட்டி வரச் சொல்லாதீர்கள் ….” தலைகுனிந்தபடி சொன்னாள் .
” இல்லை உனது அடுத்த வகுப்பிற்கு நீ உன் அம்மா , அப்பாவுடன் தான் வர வேண்டும் .வெளியே போ ….”

தலைகுனிந்தபடியே வெளியேறிவிட்டாள்.பிறகு இரண்டு நாட்களாக பள்ளிக்கே வரவில்லை .

மூன்றாவது நாள் தலைமையாசிரியை சங்கரியிடம் நித்திகாவை பற்றி தெரிவித்தாள் கண்ணம்மா .

” என்ன பண்ணலாம் மேடம் ….? “

” நீங்க நேரடியாக அவர்கள் பேரன்ட்ஸிடம் பேசிவிடுங்களேன் ….” என்றவள் கண்ணம்மாவன் போரில் இருந்து போன்நம்பரை எடுத்து ….

” இது அவள் அப்பா நம்பர் பேசுங்கள் …” லேன்ட்லைன் போனை நகர்த்தி வைத்தாள் .

” குட்மார்னிங் சார் .உங்கள் மகள் படிக்கும் பள்ளியிலிருந்து பேசுகிறோம் ….”

” சொல்லுங்க எதுவும் டொனேசன் வேண்டுமா …? ” என்ற கேள்வியில் கண்ணம்மாவிறகு ஆத்திரம் வந்த்து .

” உங்கள் மகள் இரண்டு நாட்களாக பள்ளிக்கு வரவில்லை …”




” ஓ…அப்படியா .ஏதாவது உடம்பு சரியில்லாமல் இருந்திருக்கும் .நான் என்னவென்று கேட்டு லீவ்லெட்டர் அனுப்ப சொல்கிறேன் .ஓ.கே .பை …” போனை வைத்தேவிட்டான் .

திகைத்தாள் கண்ணம்மா .என்ன அப்பா இவன்…?

அவன் கொஞ்சம் பிஸியான பிஸினஸ்மேன் .அதனால் அப்படி பேசியிருப்பானென்றாள் சங்கரி .பெற்ற மகள் பள்ளிக்கு போகிறாளா …வீட்டில் இருக்கிறாளா …என்றே தெரியவில்லை.இவனெல்லாம் சம்பாதித்து அள்ளி என்ன செய்ய போகிறான் .

” நீங்கள் அவரை நேரடியாக சந்தித்து பேசிவிடுங்களேன் கண்ணம்மா .நித்திகாவின் நிலைமை கண்டிப்பாக அவளுடைய பெற்றோர்களிடம் பேசிமளவுதான் இருக்கிறது …”

” நான் அவள் அம்மாவிடம் பேசுகிறேன் மேடம் ….”

” சரி .இதோ இன்னொரு நம்பர் இருக்கிறது .இதற்கு போன் போட்டு பேசுங்கள் .நான் ரவுண்ட்ஸ் போய்விட்டு வருகிறேன் …” என் வேலை முடிந்த்தென சங்கரி போய்விட்டார் .

” ஆமாம் அவளுக்கு என்னமோ உடம்பு சரியில்லைன்னு சொன்னாள் .நாளைக்கு வந்தாலும் வருவாள் ்நீங்க மேலே எதுவும் பேசனும்னா இந்த நம்பரில் பேசுங்க ….” பள்ளியிலிருந்து பேசுகிறோம் என்றதுமே அந்த பெண்குரல் இதை சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டது .

இதென்ன அநியாயமாக இருக்கிறது .இந்த குழந்தைக்காக பேச யாருமில்லையா …? அந்த பெண் கொடுத்த நம்பர் திரும்பவும் அவள் முதலில் பேசிய அந்த திமிர்பிடித்த அப்பாவின் நம்பர் .

வேறு வழியின்றி திரும்ப அவனுக்கே அழைத்தாள் .

” இதோ பாருங்கள் சார் .நான் உங்கள் மகளை பற்றி உங்களிடம் நேரில் பேச  வேண்டும் .எப்போது வரட்டும் …? ” நேரிடையாக போய் அந்த பொறுப்பற்ற தந்தையை கண்டிக்க எண்ணினாள் .

” நேரிலா …எனக்கு டைம் இல்லையே …” என முனகியவன்…

” சரி என் ஆபிஸ் அட்ரஸ் குறிச்சுக்கோங்க ….லன்ச் டயத்தில் வாங்க ….” ஆரம்பித்தவனை நிறுத்தினாள் .




” நான் உங்களை ..உங்கள் மனைவியுடன் .அதாவது …நித்திகாவின் அம்மா , அப்பாவை சந்திக்க விரும்புகிறேன் .உங்கள் வீட்டிற்கு வர நினைக்கிறேன் …எப்போது வரட்டும் …” அவன் மரமண்டையில் ஏறட்டுமென ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கூறினாள் .

எதர்முனை மௌனித்தது .பிறகு ….

” ஓ.கே .இன்று மாலை நான்கு மணிக்கு வீட்டுக்கு வாருங்கள் ….” என அட்ரஸ் கொடுத்தான் .

பயமுறுத்துமளவு பிரம்மாண்டமாக இல்லாவிடினும் நிச்சயம் பெரிய வீடுதான் .அதுவும் அந்த ஏரியா பணக்கார்ர்களின் ஏரியா .தனது ஸ்கூட்டியை நிறுத்தி இறங்கியவள் …இந்த திமிர்தனம்தான் பிள்ளைகளை கூட கவனிக்காமல் பணத்தின் பின்னால் இந்த பெரிய மனிதர்களை ஓட வைக்கிறது ..கசப்புடன் நினைத்தபடி படியேறி காலிங்பெல்லை அழுத்தினாள் .

திறந்த கதவின் பின் நின்றவனை கண்டதும் பேசாமல் திரும்ப போய்விடலாமா …என நினைத்தாள் .ஏனென்றால் அவன் ….அந்த ஜவுளிக்கடை முதலாளி . உன்னால் முடிந்த்தை நீ செய்துகொள் என இவளிடம் சவால் விட்டவன் .அவனிடம் பேசவென்று ஒன்றுமில்லையென தோன்றியது .

ஒரெட்டு கால்களை பின்னால் வைத்து விட்டவளை ,

” வணக்கம் .நான்தான் நித்திகாவின் அப்பா .நீங்கள் என்னிடம் பேசத்தான் வந்திருக்கிறீர்கள் .உள்ளே வாருங்கள் ….” என அழைத்த அவன் குரலில் அவளை தெரிந்துகொண்ட அடையாளமெதுவும் இல்லை .

அதனால் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள் கண்ணம்மா .

What’s your Reaction?
+1
2
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!