Barathi Kannmma Serial Stories பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா – 1

பத்மா கிரகதுரை
எழுதிய
பாரதி கண்ணம்மா

1

எண்ணும் பொழுதி லெல்லாம்  அவன்கை 
இட்ட விடத்தினிலே
தண்ணென் றிருந்ததடீ! புதிதோர் 
சாந்தி பிறந்ததடீ
எண்ணி யெண்ணிப் பார்த்தேன்; – அவன்தான் 
யாரெனச் சிந்தை செய்தேன்; 
கண்ணன் திருவுருவம் – அங்ஙனே 
கண்ணின் முன் நின்றதடீ….

 

 

 




கண்களை மூடி உள்ளமுறுகி பாடினாள் கண்ணம்மா .படபடவென கை தட்டலெழ சட்டென நினைவுக்கு வந்தாள் .

” சூப்பர் டீச்சர் …”

” அசத்திட்டீங்க மேடம் …”

விதம் விதமான பாராட்டுகள் வந்து விழ கொஞ்சம் கூச்சத்துடன் லேசாக தலை சாய்த்து அவற்றை ஏற்றுக்கொண்டாள் .

” ரொம்ப அழகாக பாடுகிறாயம்மா . பேசாமல் நீயே பாடிவிடேன் …” தலைமையாசிரியை சங்கரி கேட்டாள் .

” இல்லை மேடம் .எனக்கு மேடை ஏறி பாடும் அனுபவமெல்லாம் இல்லை .நான் யாராவது ஸ்டூடென்டிற்கு டிரெயினிங் கொடுக்கிறேன் …”

” இன்னும் ஒரு வாரம்தானே இருக்கிறது .அதற்குள் பழக்கிவிடலாமா …? “

” நல்ல குரல்வளம் இருக்கும் ஸ்டூடென்டை செலக்ட் பண்ணி டிரெய்ன் பண்ண வேண்டியது என் பொறுப்பு மேடம் .நீங்கள் கவலை படாதீர்கள் …”

” சரி அப்போது பாரத்துக் கொள்வாய்தானே …ஓ.கேம்மா ….” சங்கரி வெளியேறி விட அங்கு கூடியிருந்த ஆசிரியர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்தனர் .

அவர்கள் பள்ளியே மகாகவி பாரதியார் பெயரில் இருப்பதால் , பாரதியாரின் பிறந்தநாளை வருடா வருடம் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம் .இந்த வருடமும் அதற்கான ஏற்பாடுகளில் இருந்தனர் .

” என்னங்க கண்ணம்மா மேடம் பாரதியாரை இப்படி அசத்துறீங்க …” வரலாற்று ஆசிரியர் கேட்டார் .

” என் அப்பா பாரதியாரின் அதி தீவிர ரசிகர் சார் .அவருடைய கவிதைகள் ஒவ்வொன்றையும் நுனி விரலில் வைத்திருப்பார் .அவர் மீதுள்ள அபிமானத்தால்தான் எனக்கு கண்ணம்மா என பெயர் வைத்தார் .என் சிறுவயதிலிருந்தே பாரதி பாடல்களை சொல்லி கொடுத்து கொடுத்து அவை எனக்குள் பதிந்துவிட்டன. ” என்ற கண்ணம்மா அந்த பள்ளியில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதம்தான் ஆகியிருந்த்து .

” அட்டா ..முதன் முதலில் கண்ணம்மா மேடம் அவர்கள் வீட்டு விசயம் பேசுகின்றார் …” சொன்னவன் ரவிச்சந்திரன் .ஆங்கில ஆசிரியர் .

” நான் இவ்வளவு நாட்களாக நம்ம கண்ணம்மா மேடத்திற்கு கணக்கு போட மட்டும்தான் தெரியும்னு நினைத்திருந்தேன் .பாடக் கூட தெரியுமா ….? ” வெளியே தெரியாமல் வில்லங்கமாய் பேசியவன் தனசேகர் வேதியல் பாடம் எடுப்பவன் .

அவனது வில்லங்க பேச்சில் துணுக்குற்று அது காதிலேயே விழாத பாவனையில் முகத்தை திருப்பிக் கொண்டாள் கண்ணம்மா .

இவனுக்கு என்னை பற்றி ஏதேனும் தெரியுமோ …?

நான் பேசும் போதே அலட்சியமாக மூஞ்சியையா திருப்புகிறாய் …? இரு உன்னை கவனித்துக் கொள்கிறேன் …பற்களை கடித்தான் .




” கணக்கும் , தமிழும் எந்த இடத்தில் ஒன்று சேர்கிறது டீச்சர் …? ” கேட்டவள் வெண்ணிலா .அவள் எடுக்கும் சப்ஜெக்ட் தமிழேதான் .ஆனால் இந்த பாடலை இது போல் பாடவோ …சும்மா பேசவோ கூட அவளுக்கு தெரியாது …முடியாது .

” என் உள்ளத்தில் சேர்கிறது டீச்சர் …” கண்ணம்மா புன்னகைத்தாள் .

” ம் …எனக்கு வரலை .பாரதியாரை நான் முழுதாக படித்தது கூட கிடையாது .மனசு அதில் செல்லலைப்பா .உனக்கென்ன கல்யாணமாகாத பொண்ணு . கவலைகள் இல்லாத சுதந்திர காலம் .இதெல்லாம் படித்தால் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் ….நான் கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளையையும் பெற்று வைத்துக்கொண்டு அவதிப்படுகிறேன் ….,”

எனக்கா கவலைகள் இல்லை …? என் கவலையின் அளவு தெரிந்தால் நீ அசந்துவிடுவாய் ….உள்ளுக்குள் துவண்டபடி வெளியே புன்னகை செய்தாள் கண்ணம்மா ..

” அட …அப்போது நம்ம கண்ணம்மா டீச்சருக்கு கல்யாணம் ஆகலைன்னா சொல்றீங்க …? ” மீண்டும் தனசேகரின் ஊசி குத்தல் .

இல்லை இவனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது .வாடிய முகத்துடன் எழுந்து அவர்கள் அனைவரிடமும் விடை பெற்று வெளியே வந்தாள் .

” நீங்கள் திருச்சி வந்து எவ்வளவு நாட்கள் ஆகின்றது டீச்சர் …? ” பின்னாலேயே வந்து கேட்டான் தனசேகர் .

” நான் கிளம்பிவிட்டேன் .பிறகு பேசலாமே …”

” இதற்கு முன்பு மானாமதுரையில்தானே இருந்தீர்கள் …? “

அதெப்படி இவனுக்கு தெரியும் …? மனதை அரித்த  கேள்வியை வெளிப்படுத்தாமல் …

” கொஞ்சம் தள்ளி நில்லுங்க .வண்டியை எடுக்கனும் …” என்றாள் .

டூ வீலர் பார்க்கிங் வரை அவளுடனேயே நடந்து வந்திருந்தவன் …'” நான் கூட மானாமதுரை வந்திருக்கேங்க ….” என்றவன் அவள் முறைக்கவும் …

” போயிட்டு வாங்க .நாளைக்கு பேசலாம் ….” பாதையை விட்டு நகர்ந்து நின்றான் .

தனசேகரை பற்றிய கவலையை ஸ்கூல் காம்பவுண்ட்டை தாண்டவுமே மறந்துவிட்டாள் .அடி மன கவலைகள் ஏதேதோ மேலெழ , அவற்றை அழுத்தி அடித்தள்ளி போக்குவரத்தில் கவனமாக வண்டியை ஓட்டினாள் .

சிக்னல் ஒன்றில் வண்டியை நிறுத்திய போது பக்கவாட்டில் பார்வை போன போது …

அ…அதோ அங்கிருப்பது யார் …? அ..அவன் போல் தெரிகிறதே ….கவனிப்பை ஆழ்த்தி பார்க்க …

ஹெல்மெட்டை சுழட்டி வண்டி மீது வைத்துவிட்டு வியர்வையை துடைத்துக் கொண்டருப்பது அவனேதான் .அவன் இங்கே எப்படி ….சென்னையில்தானே இருந்தான் …?

கண்ணம்மா சட்டென தனது ஹெல்மெட்டின் கண்ணாடியை இறக்கி முகம் முழுவதையும் மறைத்துக்கொண்டு சிக்னல் விழவும் வேகமாக கடந்தாள் .

கடவுளே …இவன் ஏன் இங்கு வந்தான் …? மனது மத்தளம் கொட்ட ஆக்ஸிலேட்டர் முறுக்கும் கைகள் நடுங்கியது .

வீட்டிற்குள் நுழையும்போதே அப்பா முத்துராமனின் ” தீர்த்தக்கரையினிலே …” பாடல் காதில் மோத மன சஞ்சலம் மறைந்து அமைதியானது .அதனால் மன அமைதியோடே வாசல்படி ஏறியவள் முன் வராண்டாவில் சில குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த தந்தையை புன்னகை தலையசைப்புடனேயே கடந்தாள் .

உடை மாற்றி , முகம் கழுவி வரும் போது முத்துராமன் தட்டில் பாசுப்பருப்பு சுண்டலும் , காபியுமாக வந்தார் .




” டியூசன் பிள்ளைங்க போயிட்டாங்களா …? நீங்க ஏம்பா கஷ்டப்படுறீங்க …? ” என்றபடி அப்பாவிடமிருந்து வாங்கிக் கொண்டாள் .

” இன்னைக்கு மதியம் தூக்கம் வரலைம்மா .பயறை ஊற வைத்து சுண்டல் பண்ணி வச்சிட்டேன் .நீ விரும்பி சாப்பிடுவாயே …” என்றார் .அவர் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுவிட்டு இப்போது பென்சன் வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கிறார் .

பாரதியாரை பற்றி ஆய்வு செய்து இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார் .அவற்றில் ஒன்று அரசின் விருது பெற்று மூன்றாவது பதிப்பாக வெளிவந்து கொண்டிருக்கறது .இப்போது பாரதியின் கவிதைகளை பற்றி ஆராய்ந்து மூன்றாவது புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார் .

” ஏம்மா …உப்பு உரைப்பெல்லாம் சரியாக இருக்கிறதா…? ஏதோ பண்ணினேன் .உன் அம்மாவை போல் இன்னமும் எனக்கு பக்குவம் வரவில்லை ….” முத்துராமனிடம் மனைவிக்கான கவலை .

” ஐயோ அப்பா அம்மாவை விட நீங்கதான் பிரமாதமாக பண்ணியிருக்கீங்க .எல்லாம் சரியாக உங்களுக்குத்தான் பொருந்தி வந்திருக்கிறது …நீங்கள் ஏனப்பா புதிதாக என்னை பார்ப்பது போல் கவலைப்படுகிறீர்கள் .அம்மா இருக்கும் போதே நீங்கள்தானேப்பா என்னை கவனித்தீர்கள் ….”

அது உணமைதான் காமாட்சிக்கு பொதுவாகவே கொஞ்சம் பலவீனமான உடம்பு .மதியம் உணவு சமைத்துவிட்டு படுத்தாளானால் இரவு வரை படுக்கையிலிருந்து அவளால் எழ முடியாது .முத்துராமன்தான் பள்ளியிலிருந்து வந்த்தும் இரவு உணவை மனைவி , மகள் இருவருக்கும் சேர்த்து பரிமாறுவார் .இருவருக்குமே வாயில் ஊட்டி விட்ட நாட்கள் கூட உண்டு .

இதனால் உடல் நலமின்றி காமாடசி இறந்த்து கண்ணம்மாவை அதிகம் பாதிக்கவில்லை .ஆனால் மனைவியின் மறைவு முத்துராமனை பாதித்தது .அதனை அடிக்கடி வெளிப்படுத்தாமல் இருக்கமாட்டார் .




” இன்று சண்முகம் போன் செய்திருந்தான்மா …” கண்ணம்மாவிற்கு திக்கென்றது .

” எதற்குப்பா …? “

” அவன் எதற்கு போன் செய்வான்..?  அவர்கள் வீட்டில் சமாதானமாக போய்விடலாமென  ….”

” அப்பா …ப்ளீஸ் .என்னால் முடியாதுப்பா .வேண்டாம் ….” மகளின் குரலில் அழுகையை கண்டவர் …

” சரிடா ..சரிடா …வேண்டாம் கண்ணம்மா .நீ தூங்கு செல்லம் .நானும் படுக்கிறேன் …” பாயை விரித்து சாய்ந்துவிட்டார் .

படுக்கையில் படுத்த கண்ணம்மாவினுள் மணமேடை மந்திரங்கள் உரத்து ஒலிக்க ஆரம்பிக்க வலிக்க ஆரம்பித்து விட்ட தலையை பிடித்தபடி கண்கள் நனைக்க தொடங்கினாள்

What’s your Reaction?
+1
3
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!