Serial Stories

விளக்கேற்றும் வேளையிலே -17 ( Final )

   17

தொடர் மழையாய் தூவி 
அடை மழையாய் என் வாழ்வை நிறைக்கிறாய்.




” ஆமாம் ..தனியாக வெளியே எங்கும் செல்ல வீட்டு பெண்களுக்கு அனுமதி இல்லாத்தால் ,கோவிலுக்கு போவதாக கூறி என்னையும் அழைத்துக் கொண்டு போய் , அங்கே அந்த ஆள் அதுதான் உன் அப்பாவுடன் கிளம்பி போய்விட்டார்கள் .எனக்கு வேறு வழி தெரியவிலலையடா …அத்தையை மன்னித்து விடு நீ இங்கேயே இரு …நம் வீட்டு ஆட்கள் எப்படியும் வந்து உன்னை அழைத்து கொள்வார்கள் என கூறிவிட்டு ஊரை விட்டு தள்ளியிருந்த அந்த கோவிலில் என்னை தனியாக விட்டுவிட்டு போய்விட்டார்கள் .நான் காலை எட்டு மணியிலிருந்து , மாலை ஆறு மணிவரை சாப்பாடு ஏன் தண்ணீர் கூட இல்லாமல் பேந்த பேந்த விழித்தபடி அந்த கோவிலில் அமர்ந்திருந்தேன் .எந்த கோவிலென்று தெரியாமல் ஒவ்வொரு கோவிலாக தேடி நானிருக்குமிடத்திற்கு தாத்தாவும் , அப்பாவும் வரும்போது நான் பாதி மயங்கிய நிலையிலிருந்தேன் .
வீடு வந்த்தும் அவள்தான் கூப்பிட்டால் நீ எங்களிடம் சொல்லிவிட்டு போயிருக்கலாமேடா ..என அம்மா என்னை அடித்து துவைத்துவிட்டார்கள் .சேதுராமன் அங்க்கிள்தான் அப்போது அம்மாவை திட்டி அடிகளிலிருந்து என்னை காப்பாற்றினார் “

அன்றைய மன வேதனையையும் , உடல் வேதனையையும் இன்று அமிர்தன் பிரதிபலிக்க சன்னல் கம்பிகளை  பற்றியிருந்த அவன் கைகளை பற்றி தன்புறம் அவனை திருப்பி இறுக அணைத்துக் கொண்டாள் அமுதா .

” எனக்கு புரிகிறது அத்தான் …” அவன் தோள்களை வருடி ஆறுதல்படுத்தியவள் ” அம்மா மீதும் அப்பா மீதும் இவ்வளவு வெறுப்பு இருக்கும். போது எப்படி என்னை விரும்பினீர்கள் அத்தான் ..? ” ஆச்சரியமாக கேட்டாள் .




” இதற்கான பதில் இன்றுவரை எனக்கு தெரியவில்லை அம்மு .நீ முட்டைக்கண்ணை உருட்டியபடி அன்று காலையில் நம் வீட்டினுள் வந்து நின்றாயே , அப்போதே காரணமேயில்லாமல் உன்னை மிகவும் பிடித்துவிட்டது .இதென்ன இந்த சின்ன பொண்ணை நமக்கு பிடிக்கிறது .இவள் அம்மாவை நினைத்தால் இவளை நாம் வெறுக்கத்தானே செய்ய வேண்டும்னு நினைச்சிட்டே பாட்டி கிட்ட போய் உன்னை கூட்டி வந்த்தற்காக சண்டை போட்டேன் .எப்போது பார்த்தாலும் உன் பக்கம் போகும் கண்களை தடுப்பதற்காக நீ எதிர்ல வந்தாலே உன்னை திட்ட தொடங்கினேன் . “

” ஒருநாள் மழையில் தள்ளி விட்டீர்களே அத்தான் …? அத்தோடு மயக்க பார்க்கிறாயா என்று வேறு … ” அமுதாவின் கேள்வியில் வேதனை தெரிந்த்து .

அவளை தன்னருகே இழுத்துக் கொண்டான் ” தப்புதான் கண்ணம்மா …அந்த சிறு வயதில் …அந்த சொல் உன்னை எவ்வளவு வேதனைபடுத்தியிருக்குமென புரிகிறது .ஆனால் அப்படி சொல்லிவி்ட்டு உன்னை விட நான் அதிகம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தேன் தெரியுமா …?ஏதோ என்னை மயக்கும் திட்டத்தில்தான் அப்படி கூறுகிறாய் என்று எண்ணி …ஏனென்றால் நீ அத்தானென்று அழைக்கும் போது உண்மையிலேயே நான் மயங்கிக் கொண்டிருந்தேனே …கூப்பிடாதே என்று விட்டு , பிறகு எப்போது அத்தானென்று அழைப்பாயென ஒவ்வொரு முறையும் உன் வாயை பார்த்துக் கொண்டிருந்தேன் தெரியுமா …?  அன்று உன்னைப் பார்த்துக் கொண்டே படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தேன் .நீ உன் மேலெல்லாம் 
மழைத்துளிகள் தெறித்திருக்க ஆவலோடு மழைத்துளிகளுடன் விளையாண்டு கொண்டிருந்தாய் .நீரில் மிதந்து கொண்டிருக்கும் தாமரையை எனக்கு நினைவூட்டினாய் .எனக்கு …அப்போது உடனே உன்னை இழுத்து அணைத்து முத்தமிட வேண்டுமென்ற வேகம் தோன்றியது ….அடக்க அடக்க முடியாமல் அந்த ஆசை வளர்ந்து கொண்டே சென்றது .




இதற்கு முன்பும் உன்னை பார்க்க பிடிக்கும் , உன்னுடன் பேச ஆசை இருக்கும் , உன்னுடன் விளையாடும் ஆவல் வரும் .ஆனால் இப்படி அணைக்க தோன்றுவது …. பேன்ட் பாக்கெட்டினுள் கைகளை விட்டுக் கொண்டு என்னை கட்டுப்படுத்த முயற்சித்தேன் .இரண்டு வார்த்தை உன்னிடம் பேசிவிட்டு நகர்ந்து விட எண்ணி அருகே வந்தேன் .அப்போது நீங்களும் விளையாட வருகிறீர்களா அத்தான் ..?என்று குழந்தைத்தனமாக நீ அழைத்தாய் .அப்போதுதான் நம் இருவருக்குமிடையே இருந்த வயது வித்தியாசம் எனக்கு உறைத்தது.ஒன்பது வருடங்கள் …நான் அப்போது முழுவளர்ச்சியடைந்த ஒரு ஆண் .நீ பள்ளி இறுதியில் இருக்கும் குழந்தைமை மாறாத சிறு பெண் .உன் மேல் இது போல் ஒரு எண்ணம் வரலாமா …என என்னை நானே நொந்தபடி இருக்கும் போது நீ உன் அம்மா , அப்பா என ஏதோ பேச ஆரம்பித்தாய் ..அது என் ஆத்திரத்தை தூண்ட சட்டென என் வேகத்தை மாற்றி உன்னை மழை நீருக்குள் ….ரொம்ப வலித்ததாடா ்….?” ஐந்து வருடங்களுக்கு முன் தள்ளி விட்டதற்கு அவன் இப்போது வருடிவிட …தாங்க முடியாமல் சிரிக்க ஆரம்பித்தாள் அமுதா .

” என்ன வயது வித்தியாசமா …? அட மக்கு அத்தான் இது எனக்கு தோன்றவேயில்லையே ….” என்றபடி அவன் மீசையை பிடித்து இழுத்தாள்.

” ஏய் வலிக்குதுடி …அதென்ன தலையை கலைக்கிறாய் …மீசையை பிடித்து இழுக்கிறாய்  …உனக்கு விளையாட்டு பொம்மையா நான் ….? ” அவளது இரண்டு கன்னங்களையும் பற்றி கிள்ளிபடி கேட்க,

” ஆமாம் பின்ன பெரிய ஆளா நீங்க …இப்போ சொல்லுங்க எனக்கு பயந்துட்டுதானே கனடா ஓடுனீங்க …..? “

” அ…அது உனக்கு தெரிஞ்சிடுச்சா ….உண்மைதான் அதற்கு பிறகு உன்னை பார்க்கும் போதெல்லாம் இது போலத்தான் அணைக்கவேண்டும் , முத்தமிட வேண்டும் ..என்று ஏதேதோ தோன்றியபடி இருக்க என்னையறியாமல் இது போல் நடந்து விடுவேனோ என்றுதான் தாத்தா , பாட்டியிடம் அடம் பிடித்து கனடா போனேன் .அங்கே மூன்று வருடங்கள் இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு உன்னை மறந்து விட்டேனென எண்ணி என்னை நானே தேற்றிக்கொண்டு இங்கே வந்தால் அன்று அதிகாலை நீ கோலம் போட்டுக் கொண்டிருந்தாய் . உன்னை பார்த்த முதல் நிமிடமே தோல்வி எனக்கு .கால் டாக்ஸியை தெரு முனையில் நிறுத்திவிட்டு உன்னை பார்த்துக் கொண்டே நடந்து வந்தேன் .அருகில் வந்த்தும் இப்போதும் உன்னை அணைக்க வேண்டுமென்ற எண்ணம் .இப்போது உன்னை குழந்தையென்று கூற முடியாதே ….ஆனால் அப்போது நிமிர்ந்த நீ ஜாக்கிரதையாக வாங்க வாங்க என்றாய் …அத்தானென்ற உன் அழைப்பில்லாமல் அப்படியே ஆப் ஆகிவிட்டேன் …வேலைக்காரின்னு நினைத்தேன் என்று உன்னை காயப்படுத்திவிட்டு உள்ளே போய்விட்டேன் …”




” என்னை பார்த்து மயக்க பார்க்கிறாயா …என கேட்டுவிட்டீர்களே என்ற வேகம் எனக்கு .அதனால் இனி  அத்தானென்று அழைத்து விடக் கூடாது என மிக ஜாக்கிரதையாக இருந்தேன்.  ஆனால் நம் திருமணத்தை அப்போதே ..அதாவது சேதுராமன் அங்க்கிள் என் பெயரில் பங்குகளை எழுதி வைக்கும் முன்பே நீங்கள் செய்திருக்கலாமே அத்தான் .இதனால் எனக்கு பணத்துக்காக மணமுடித்தீர்களோ என்ற எண்ணம் வராமலிருந்திருக்குமே ்..? “

” செய்திருக்கலாம் ்ஆனால் அதனை உடனே செய்வதில் நான் குழம்பியபடியிருந்தேன் ்முதல் குழப்பம் நமது வயது வித்தியாசம் .இரண்டாவது சௌந்தர்யா அத்தை .வெகுநாட்களாக எனக்கும் சந்தனாவிற்கும் திருமணம் முடிக்க வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள் .சந்தனா மேல் எனக்கு அப்படி எண்ணமில்லையென்றால் அவர்கள் நம்புவதாக இல்லை .அவர்களை வயது வித்தியாசத்தை காரணம் காட்டித்தான் நான் தள்ளிபோட்டுக்கொண்டிருந்தேன் .சந்தனா உன்னை விட ஒரு வயது இளையவள் ஆயிற்றே …இப்போது உன்னை திருமணம் முடிக்க விரும்புவதாக எப்படி கூறுவது ….?

மகளுக்கு சரியில்லாத திருமணவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்துவிட்டோமென்ற குற்றவுணர்வில் பாட்டியும் , தாத்தாவும் வேறு அத்தைக்கும , சந்தனாவிற்கும் நிறைய இடம் கொடுத்து வைத்திருந்தார்கள் .இந்த நேரத்தில்தான் அங்கிள் தன் பங்குகளை உன் பெயரில் மாற்றிவிட்டு இறந்து போனார் .இதனை ஒரு காரணமாக கொண்டு உன்னை மணமுடிக்க விரும்புவதாக தாத்தாவிடம் சொன்னேன் .அந்த பங்குகளுக்காக மட்டுமின்றி உண்மையாகவே உன்னை விரும்புகிறேன்தானே என பலமுறை கேட்டு தெளிந்து கொண்டுதான் தாத்தா …”

” அந்த கழுதையை இழுத்துட்டு போய் ஏதாவது கோவிலில் வைத்து தாலி கட்டிட்டு வாடான்னு …சொன்னார் …”

” ஏய் அதெப்படி உனக்கு தெரியும்…? “




” நான் அன்று தாத்தாவிற்கு பால் கொண்டு வந்தேன் .நீங்கள் பேசிக்கொண்டிருந்த்தை கேட்டேன் .இந்த பங்குகளுக்காக இந்த திருமண முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள் என நினைத்தேன் …அங்கே நிற்க பிடிக்காமல் உள்ளே ஓடிவிட்டேன் .”

” வந்தவள் கொஞ்சம் முன்னால் வந்திருக்க கூடாதா ..?அம்மு என் உயிர் போல தாத்தா …என்று பலவித காதல்  வசனமெல்லாம் பேசியல்லவா நான் தாத்தாவிடம் நம் திருமணத்திற்கான சம்மத்ததை வாங்கி கொண்டிருந்தேன் “

” அடடா ..மிஸ் பண்ணி விட்டேனே …” கலகலவென சிரித்த அமுதாவின் இதழ்களை விரல்களால் வருடியபடி ” சௌந்தர்யா அத்தைக்கு பயந்து நம் திருமணத்தை அவர்கள் ஊருக்கு போயிருந்த நேரம் அவசர அவசரமாக நடத்த வேண்டியதாகிவிட்டது . உனக்கு என்  மேல் சிறு அதிருப்தி வேண்டுமானால் இருக்கும் .வெறுப்பு இருக்காது .நம் திருமணம் முடிந்த்தும் உன்னிடம் எல்லாவற்றையும் தெளிவாக பேசிவிடலாமென்று நினைத்தேன் .ஆனால் நீ வீட்டை விட்டு போய்விட்டாய் …ஏன் அம்மு …? “

” ஆமாம் …மயக்க பார்க்கிறாயா ….என கேட்கிறீர்கள் ,எப்போது பார்த்தாலும் என மீது எரிந்து விழுகிறீர்கள் ,இப்போது திடீரென்று தாலி கட்டினால் என்ன நினைப்பது …? அத்தோடு அன்று தாலி கட்டிவிட்டு …உங்கள் கரம் பற்றி அக்னி வலம் வரும்போது ….என்னை அறியாமலேயே உங்கள் பக்கம் முழுவதுமாக மனம் சாய்ந்துவிட்டது .வீட்டிற்கு காரில் திரும்ப வரும்போது அப்படியே உங்கள் மேல் சாய்ந்து அணைத்துக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது .என்னை நினைத்து நானே குழம்பி போனேன் .அத்தானென்றதற்கே மயக்குகிறாயா ..என கேட்டவர் .இந்த பங்குகளுக்காக என்னை மணம் முடித்தவர் ….இப்படியெல்லாம் என் மனதில் எண்ணமோடுவது தெரிந்தால் என்னை மிகவும் கேவலமாக நினைப்பீரகளே என எண்ணித்தான் வீட்டை விட்டு போகும் முடிவெடுத்தேன் .”

” சரிதான் நான் கனடாவிற்கு ஓடினேன் , நீ வீட்டை விட்டு போனாயா ..? மற்றதில் எப்படியோ ..இதில் நாம் இருவரும் சரியான ஜோடிதான் ” சிரித்தபடி அவளை அணைத்துக் கொண்டான் .

” அது சரி பிறகு என்னை தேடி வந்து அழைத்து வந்தபிறகும் ஏனத்தான் என்னிடம் பிரியமில்லாமலேயே நடந்து கொண்டீர்கள் .என் கை சாப்பாட்டை கூட சாப்பிடவில்லையே …”

” ஏய் அம்மு அதற்கு காரணம் வேறு .நான் கனடாவிலிருந்து வந்து பார்த்தால் , நீ கிட்டதட்ட இந்த வீட்டு வேலைக்காரியாகியிருந்தாய் .உன்னை சமையலறையிலிருந்து வெளியேற்ற வேண்டுமென்றுதான் உன் வேலைகளை குறை கூறியபடியிருந்தேன் .பிறகு நீ வீட்டை விட்டு போய்விட்டதை என்னால் நம்பவே முடியவில்லை .ஆனாலும் உன்னைக் கண்டுபிடித்து என்னை உனக்கு விளக்கி விடும் வேகத்திலதான் அந்த மழையில் ஓடிக்கொண்டிருந்தேன் …”




” ஆஹா ….இதுதான் உங்களை விளக்கும் லட்சணமா …? அப்பா …என்ன முறை முறைத்துக்கொண்டு நின்றீர்கள் .கொட்டும் மழையிலும் அனலடித்தது தெரியுமா …? “

” ம் …உன்னை அழைக்கும் வேகத்தில் நான் வந்தால் தடித்தடியாக நான்கு ஆம்பளைகளோடு நின்று பேசிக்கொண்டிருக.கிறாய் .பக்கத்தில் வந்தால் ஒரு தடியன் என்னையே யாரென்று கேடகிறான் .எனக்கு கோபம் வருமா ..? வராதா …? ” அமிர்தனின் குரலில் இப்போதும் லேசாக கோபம் .

பதிலுக்கு சிரித்தாள் அமுதா . ” ஓ…திலீப் …அவன் என்னை எப்படி அழைத்தான் தெரியுமா …? அக்காவென்று ….”

” அக்காவா ….? அவன் பார்வையாலேயே உன்னை பக்கெட் பக்கெட்டாக ஜொள்ளால் நனைத்துக் கொண்டிருந்தான் ..”

” ஆமாம் அத்தான் ….ஆனால்  அது முதலில்  .நான் திருமணமானவள் என தெரிந்த்தும் அவனுக்கு அக்காவாகி விட்டேன் தெரியுமா ..? விடுங்கள் அத்தான் அவர்கள் விளையாட்டு பிள்ளைகள் …முதலில்தான் அந்த கோபம் .பிறகு வீட்டிற்கு வந்த பிறகும் காபியை மழைநீருக்குள் கொட்டினீர்களே …” அமுதாவின் குரல் மெலிந்து ஒலித்தது .

” ஏய் சும்மா என்னையே குறை சொல்லாதே .அன்று பாட்டியின் முன்னால் படுத்தபடி நீ என்னை பிடிக்கவில்லை என்று கூறவில்லை .அருவெறுப்பாக இருக்கிறது என்று கூட சொன்னாயே …” அமிர்தனின் கோப குரலுக்கு பின் வேதனை இருந்த்து .

” ஐயோ ..அதை நீங்கள் கேட்டீர்களா …? அது அப்போது நானிருந்த மனநிலையிலும் பாட்டி இறந்த அதிர்ச்சியிலும் உளறியது அத்தான் .பாட்டி இறந்த்தும் உங்கள் மார்பில் சாய்ந்து அழும் எண்ணமெனக்கு .நீங்களானால் என் பக்கமே திரும்பாமல் விரைத்தபடி இருந்தீர்கள் .அந்த ஆற்றாமையில்தான் அப்படி பேசிவிட்டேனென நினைக்கிறேன் .சாரி அத்தான் …” அவன் கன்னங்களை வருடி மன்னிப்பு கேட்டாள் .

” உன்னை என் அறைக்குள் தங்குவதற்கு வரவைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா ..? தாத்தாவிடம் சொல்லி , கீழே நீ இருந்த அறையை பூட்ட வைத்து உன் சாமான்களை என் அறைக்கு மாற்றி …நீ எப்போதடா வருவாய் என மேலிருந்தபடியே கவனித்தபடி இருந்தால் …நீ அங்குமிங்கும் நடக்கிறாயே தவிர இந்தப்பக்கம் திரும்புவதாக இல்லை .”

” உங்கள் அறைக்குள் வந்தால் நிச்சயம் கழுத்தை பிடித்து என்னை வெளியே தள்ளுவீர்கள் என்ற பயத்தில் நான் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தேன் ” அன்றைய தனது பயத்தை இன்று நினைத்து சிரித்தாள் அமுதா .

” வெளியே தள்ளுவதா ..? நீ எப்போது வருவாய் …? எப்போது என் மனதை உன்னிடம் கொட்டலாமென நானிருக்க …நீ வெட்டியாக அந்த வர்ஷினியிடமும் , மைதிலியிடமும் நின்று அரட்டையடித்துக் கொண்டிருக்கிறாய் . சரி …இவளுக்கெல்லாம் நேர்வழி சரிப்படாது .அதிரடிதான் .நேராக கீழே இறங்கிப் போய் அப்படியே குண்டு கட்டாக தூக்கி வந்துவிட வேண்டியதுதான் …என்று நான் முடிவு செய்த போது , நீ  பால் தம்ளருடன் மாடியேறி வந்தாய் “

அன்று வர்ஷினி , மைதிலியின் எதிரில் அப்படி இவன் வந்து தன்னை தூக்கி போயிருந்தால் என கற்பனையில் நினைத்து சிரித்தவள் ” அன்று கொண்டு வந்த பாலையும் நீங்கள் குடிக்கவில்லை ” என நினைவூட்டினாள் .




” ம் ..பாலை டிரேயில் வைத்து எடுத்துக்கொண்டு வரிசையாக ஒவ்வொருவரிடமும் நின்று வம்பளக்கிறாய் .பிறகு ஆடி அசைந்து மேலேறி வந்து என்னிடமும் வம்பிழுக்கிறாய் .இத்தனை நேரத்திற்கும் கொட்டுகின்ற மழைக்கும் அந்த பால் தாங்குமா …? ஆறி பச்சைத்தண்ணீராக போய்விட்டது .அதுதான் குடிக்காமல். வைத்துவிட்டேன் .

” எப்படியோ சந்தனாவிற்கும் , ஷியாமிற்கும் நன்றி சொல்ல வேண்டும் .அவர்கள் சந்திக்க அந்த பழையசாமான் அறையில் ஏற்பாடு பண்ண போய்தான் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொண்டோம் ..என்றவன் திடீரென நினைவு வந்து ” ஏய் ஷியாமிடம் எப்போது பேசினாய் …? ” என்றான் .

” மறுநாள் காலையிலேயே அத்தான் .நீங்கள்தான் என்னை பேச சொல்லியிருந்தீர்களே .ஊருக்கு கிளம்பும் எண்ணத்திலிருந்தார் அவர் .அவரிடம் சந்தனாவிற்காக நீங்கள் வைத்துக் கொடுக்கும் தொழிலை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டேன் .

எந்த ஆம்பளையும் தன் சுயகௌரவத்தை விட்டு இப்படி வரமாட்டானென அவர் வாதாடினார் .எனக்கு இரண்டுநாட்கள் டயம் கொடுங்கள் .அன்புதான் முக்கியமென்று நிரூபிக்கிறேனென அவரிடம் கூறிவிட்டு என்ன செய்வது என தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன் .அப்போது சௌந்தர்யா அத்தையே இதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்து விட்டார்கள் .உங்களை வைத்தே அன்பை பற்றி ஷியாம் மச்சானுக்கு பாடம் எடுத்துவிட்டேன் “

” அவனுக்கு பாடம் சொல்லுகிற மாதிரி என்னையும் சோதித்தாய் போல ….” அமிர்தனின் குரலில் சிறு தாங்கல் இருந்த்து .

” இலலை அத்தான் .உங்கள் அன்பில் எனக்கு சந்தேகம் இல்லை .எப்போதிருந்து தெரியுமா ..?அன்று அந்த பழைய சாமான்கள் அறையில் சோபாவின் பின்புறம் என்னை அணைத்திருந்தீர்களே …அப்போதிருந்து .அன்பாய் , பாசமாய் , பாந்தமாய் , ஆதரவாய் ,பரிவாய் எல்லாவற்றிற்கும் மேல் காதலாய் …இருந்த்து அந்த அணைப்பு .அதன்பிறகு உங்கள் அன்பின் மேல் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை .அந்த தைரியத்தில்தான் இன்று அனைவர் எதிரிலும் என் பின்னால் வாருங்கள் என்றேன் “




” அடடா …இது எனக்கு அன்றே தெரியாமல் போயிற்றே .தெரிந்திருந்தால் அன்று நீ மழையில் விளையாடிக்கொண்டு நின்றாயே அப்போதே உன்னை அணைத்து என் அன்பை உனக்கு உணர்த்தியிருப்பேனே .இப்போது பார் எவ்வளவு நாட்கள் வீணாகிவிட்டது “

” ம்க்கும் …இப்போது இங்கே மணிக்கணக்கில் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறது .அது தெரியவில்லை .என்றோ வீணான நாட்களுக்கு வருத்தப்படுகிறார் …” குறும்பு கொப்பளிக்க அமுதா கூற ..

” ஏய் ..அம்மு நான் எவ்வளவு பெரிய டியூப்லைட் ….உன்னை …” என்றபடி அவளை அள்ளிக்கொண்டு கட்டிலில் சரிந்தான் அமிர்தன்.

வெளியே மழை சுத்தமாக நின்று வானம் தெளிவானது .தொடர்மழையால் துன்பபட்டிருந்த மக்கள் நின்றுவிட்ட மழையால் ஆனந்தபட ஆரம்பித்தனர் .அமுதா , அமிர்தனின் வாழ்வு ஆனந்த மழையால் நிறைய தொடங்கியது

What’s your Reaction?
+1
1
+1
2
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!