pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 33

33

தேவயானி வழக்கமாக வரும் காடுதான் . அன்று ஏனோ அவளுக்கு மிகவும் கொடுமை வாய்ந்த இடமாக அந்த இடம் தோன்றியது .ஏதோ ஒரு திகிலையும் , பயத்தையும் அவளுக்கு அளித்தது .” இவ்வளவு பயத்தோடு இங்கே நான் இதற்கு முன்  வந்ததில்லை ” குரல் கம்ம சொன்னபடி பரிதவிப்புடன் விழிகளை அங்குமிங்குமாக அலைய விட்டாள்.

” மருதாணி …மருதாணி ”  எனக் குரல் கொடுத்தாள்.

அவளது புலம்பல்களை காதில் வாங்கிக் கொண்டாலும் அதற்கு பதில் சொல்லாமல் சுற்றுமுற்றும் பரபரப்புடனும் தேடியபடிதான் இருந்தான் ரிஷிதரனும்.

” இங்கே நீங்கள் இருவரும் வேறு எங்கே …எங்கே போவீர்கள் ? கவனமாக நினைவுபடுத்தி சொல் தேவயானி ” 




தேவயானி ஒவ்வொரு இடமாக சொல்ல இருவரும் அந்த இடங்களுக்கெல்லாம் போய் தேடினார்கள் .எங்கும் மருதாணியை காணவில்லை.

” அங்கே அந்த மலைச்சரிவில் , நாம் முதன் முதலில் சந்தித்தோமே …நீங்கள் இருவரும் பப்ளிமாஸ் பழம் தேடி வந்தீர்களே… அங்கே போய் இருப்பாளா ? ”  ரிஷிதரன் கேட்க தேவயானி தலையசைத்தாள்.

” தெரியவில்லையே .போய் பார்ப்போம் ”  அந்த மலைச் சரிவை நோக்கி நடந்தவள் திடுமென நின்று இங்கே பக்கத்தில் ஒரு ஓடை இருக்கிறது ரிஷி . மூலிகை பறித்துவிட்டு அங்கே சென்று முகம் கை கால் கழுவி சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு வருவோம் .அங்கே போய் பார்க்கலாம் ” என்று அந்தப் பக்கம் நடந்தாள்.




அது முன்பே தேவயானி ரிஷிதரனை அழைத்துக் கொண்டு போன இடம்தான் …அன்று காயம் பட்டிருந்த தன் முகத்தை தேவயானி நீரில் தனக்கு காட்டிய இடம் என்று புரிந்துகொண்ட ரிஷிதரன் வேகமாக அங்கே நடந்தான் .நடையில் தடுமாறிய தேவயானியின் கைகளைப் பற்றிக் கொண்டு அவள் நடக்க உதவினான்.

மருதாணி அங்கேதான் இருந்தாள் .சலசலவென்று மெல்லிய ஓசையுடன் ஓடிக்கொண்டிருந்த ஓடையை விட்டு சற்று தள்ளி பாறைகளுக்கு இடையே சிறு குட்டையாக தேங்கிக்கிடந்த நீர் குளம் அருகே உட்கார்ந்து இருந்தாள் .எதிரில் நீரில் தெரிந்த தன் பிம்பத்தை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தாள் .அவளை பார்த்ததும் நிம்மதியாகி அப்படியே நின்றுவிட்டனர் இருவரும் .அவளை போய் அழைக்குமாறு தேவயானிக்கு சைகை காட்டினான் .அவளை நோக்கி  மெல்ல நடந்து கொண்டிருக்கும்போதே மருதாணி தன் எச்சிலை காரி கூட்டி எதிரே நீரில் தெரிந்த தனது பிம்பத்தின் மீது  சத்தத்துடன் உமிழ்ந்தாள்.

பிறகு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு சத்தமாக அழத்  துவங்கினாள். தேவயானி வேகமாக அவள் அருகே ஓடி அவளைப்பற்றி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு தலையை வருடி கொடுத்தாள் .” மருதாணி என்ன இது ?  ஏன் இப்படி செய்கிறாய் ? ” அன்புடன் அதட்டினாள்.

” நான் எவ்வளவு மோசமானவளாக  எவ்வளவு இழிந்த பிறவியாக போய்விட்டேன் அக்கா . எந்த அளவு கேவலமான வேலைகளைச்  செய்துவிட்டேன் ? உங்களையும்  எப்படி எல்லாம் பேசிவிட்டேன் ? எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது .இவ்வளவுக்குப் பிறகும் என்னை காப்பாற்றுவதற்காக ஓடி வந்தீர்களே …நான் பெரிய பாவி அக்கா .என்னை மன்னிக்காதீர்கள் . எனக்கு ஏதாவது தண்டனை கொடுங்கள். நீங்கள் என் உடலை பாசமாக கவனிக்கும் ஒவ்வொரு நொடியும் என் மனதுக்குள் குற்ற உணர்வு அதிகரித்துக்கொண்டே போகிறது. எவ்வளவு கேவலமானவள் நீ  என்று எனது மனசாட்சி என்னை கேள்வி கேட்டு  கொல்கிறது .எனக்கு செத்து விட வேண்டும் போல் இருக்கிறது அக்கா ” கேவினாள் மருதாணி.

” ஆஹா என்ன ஒரு சிந்தனை ” மெலிதாக கைதட்டியபடி வந்தான் ரிஷிதரன் .அவனை பார்த்ததும் மருதாணி இன்னமும் தன் உடலை குறுக்கி கூசினாள். அவள் மிகுந்த குற்றவுணர்வில் இருப்பது நன்றாகத் தெரிந்தது .

” மருதாணி நீ தேவையில்லாமல் ஏன் எதை எதையோ நினைத்து மனதை குழப்பிக் கொள்கிறாய் ? அப்படி ஒன்றும் நீ என்னை பேசி விடவில்லை .நீ சின்னப்பெண் உனக்கு உலகம் தெரியாது .உண்மையை சொல்வதானால் இவற்றையெல்லாம் உன்னுடனேயே இருக்கும் நான் தான் உனக்கு புரிய வைத்திருக்க வேண்டும். நான்தான் உனக்கு இந்த உலகத்தை புரியவைக்க தவறி விட்டேனே என்று என் மனசாட்சி என்னை உறுத்திக் கொண்டே இருக்கிறது ” தேவயானி அவள் சமாதானமாகும் விதமாக பேசினாள்.

ரிஷிதரன் அவள் முன்னால் வந்து குத்திட்டு அமர்ந்தான் ” மருதாணி இதோ என்னை நிமிர்ந்து பார் ” 







முகம் சிவக்க மருதாணி பிடிவாதமாக இன்னமும் அந்த நீரில் தெரிந்த கலங்கலாய் ஆடிக் கொண்டிருந்த  பிம்பத்தின் மேலேயே பார்வையைப் பதித்து இருந்தாள்.

” இதோ இந்த பிம்பம் போலத்தான் , என் வாழ்வும் கலைந்துவிட்டது ” விம்மினாள்.

” இங்கே என்னை பார் என்றேன் .இப்படி கூசிக் கொள்ளும் அளவுக்கு பெரிய தவறு ஒன்றையும் நீ செய்துவிடவில்லை .இந்த வயதில் எல்லோருக்கும் வரும் தடுமாற்றம்தான். தேவயானி சொல்வது போல் இந்த நேரத்தில் வழிகாட்டுவதற்கு ஒரு பக்குவமான ஆள் உடன் இருக்க வேண்டும் .அப்படி தகுந்த ஆட்கள் இல்லாதவர்கள் இதுபோல் தவறான பாதையில் போய் விடுகிறார்கள் .ஆனால் அதற்காக அவர்களுடைய வாழ்க்கையே போய்விட்டது என்ற அர்த்தம் கிடையாது. இந்த வாழ்க்கை நம்முடைய எண்ணப்படி நாம் வாழ்வதற்குத்தான்  இருக்கிறது .நீ உன்னுடைய எண்ணம் என்று ஒரு தவறான பாதையில் சிறிது தூரம் போய்விட்டாய் .இப்போது உண்மை உணர்ந்து அங்கிருந்து திரும்ப நினைக்கிறாய் .போவதற்கு வழி இருக்கும்போது , திரும்பி வருவதற்கும் இருக்கும்தானே ? தவறான பாதையை விட்டு திரும்பி வந்து மீண்டும் நேரான வழியில் போய் விடப் போகிறாய் .இவ்வளவுதான் .இதற்கு ஏன் உலகமே இடிந்து விழுந்து விட்டது போல் இவ்வளவு வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறாய் ? ” 

” அண்ணா இதோ இப்போது உங்கள் முகத்தைப் பார்த்து பேசக்கூட எனக்கு உடலெல்லாம் கூசுகிறது. நீங்கள் உங்கள் மனதில் என்னைப் பற்றி எவ்வளவு உயர்வாக நினைத்து இருந்து இருப்பீர்கள் .ஆனால் நான் இப்படி கேவலமான பிறவியாகி விட்டேனே  …எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் …ஒன்றுமே செய்யாதது போல் பேசுகிறீர்களே , என்னை சமாதானப்படுத்த தானே இப்படி பொய்யாக எதை எதையோ பேசுகிறீர்கள் ? ” 

” தேவையில்லாத நம்பிக்கைகளையோ தேவை இல்லாத பொய்களையோ நான் எப்போதும் சொல்வதில்லை .என்னை கவனி மருதாணி .நான் சொல்வது அப்படியே உண்மை .ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இது போன்ற இக்கட்டான காலகட்டம் ஒன்று வரும் .சிறந்த வழிகாட்டுதலை  பெற்றவர்கள் மிக எளிதாக அதனை கடந்து வந்து விடுவார்கள் .உன்னைப்போல் வழிகாட்ட ஆள் இல்லாதவர்கள் கொஞ்சம் சறுக்கி விடுகிறார்கள். இது சிறிய சறுக்கல் தானே தவிர வாழ்க்கையே முடிவதற்கான பாதாளம் அல்ல .இதனை நீ புரிந்து கொள்ள வேண்டும் .இதோ நீ விழுந்துவிட்ட குழியிலிருந்து உன்னை வெளியே இழுத்து மீட்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு நீ வெளியே வா .இன்னமும் நீ சாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது ” 

” இவ்வளவிற்குப் பிறகும் நான் எதை சாதிக்க முடியும் அண்ணா ?  என் வாழ்க்கையே முடிந்து விட்டது .அவ்வளவுதான் இனி என்னுடைய நிலைமை தெரிந்து என் அம்மா அவர்களுடைய உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் .அம்மா போனபிறகு நானும் இந்த உலகில் இருக்க மாட்டேன் .நானும் அவர்கள் பின்னாலேயே….”  மேலே பேசமுடியாமல் விம்மினாள் மருதாணி.

” உளறாதே மருதாணி. அப்படி எல்லாம் உன்னையும் உன் அம்மாவையும் நாங்கள் விட்டுவிட மாட்டோம் ”  தேவயானி உறுதியான குரலில் கூறினாள்.

” உன் அம்மாவும் , நீயும் உயிரை விடும் அளவிற்கு அப்படி இங்கே என்ன தவறு நடந்துவிட்டது ? ” ரிஷிதரன் அறியாதவன் போல் கேட்டான்.




என்ன இது …என்று அவனை கண்டிப்பாக பார்த்தாள் தேவயானி. இப்படி இந்த சிறுமியிடம் கேட்டால் அவள் என்ன சொல்லுவாள் …எனும் தவிப்பு அவளுக்குள் .அதே தவிப்பு மருதாணியின் விழிகளிலும் தெரிந்தது.




” அண்ணா நான்… வந்து… நான் செய்த தவறை இதுவரை யாருக்கும் தெரியாமலேயே நீங்கள் இருவரும் சாமர்த்தியமாக மறைத்து விட்டீர்கள் .ஆனால் அது இன்னும் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும் ? என்றாவது ஒருநாள் வெளியே வந்துதானே ஆகும் ” கலங்கிய அவளது குரலில் அவளுடைய வேதனையின் காரணத்தை புரிந்து கொண்டு தேவயானி மௌனமாக , ரிஷுதரன் அலட்சியமாக பார்த்தான்.

” என்ன வெளியே தெரியப்போகிறது ? எப்படி தெரியும் ? ஏன் தெரிய வேண்டும்  ? ” சாதாரணமாக கேட்டவனை வெறித்தனர் பெண்கள் இருவரும்.

” மருதாணி ஒரு தவறான முடிவெடுத்து நீ  சிறிது பிசகி விட்ட சில நிமிடங்களில் உனக்குள் ஏறி விட்ட கறை  இது .உடையில் பட்டிருக்கும் அழுக்கை இதோ இந்த சுனை நீரில் கசக்கிப் பிழிந்து அலசி விட்டு மீண்டும் அந்த துணியை போட்டுக் கொள்வாய் தானே ? அதேபோல் இந்த கறையையும் கசக்கி எறிந்து விட்டு மீண்டும் புது மனுஷியாக பிறந்து வா ” 

தேவயானி கலக்கமான முகத்துடன் பார்க்க ஒரே ஒரு நிமிடம் மருதாணியின் முகம் ஒளிர்ந்து பின் சோர்ந்தது .” அது எல்லாம் நடக்குமா  ? இல்லை நடக்காது …என்னால் முடியாது…” 

” முடியாதா…?  நடக்காதா…? ”  கந்தன் கை வேலாக வந்தது ரிஷிதரனின் கேள்வி.

” நடக்காது …அது நடக்காது …அது எப்படி நடக்க முடியும் …? ” இப்போது பலவீனமாக இருந்தது மருதாணியின் குரல்.

” நான் நடத்திக் காட்டினால்….?  உன்னால் முடியுமா …? ” இன்னமும் வேலின் நுனி மறையவில்லை ரிஷிதரனிடம்.

ஆர்வமாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மருதாணி .இது சாத்தியமா… அவள் கண்கள் கலக்கமாய் கேட்டன.

” சொல் மருதாணி .உன்னால் முடியும் என்று மட்டும் சொல் .மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் ” 

ஆமாம் வாய் வார்த்தையின்றி தலையசைத்தாள் மருதாணி. ஆனால் அந்த தலையசைப்பு மிக தீர்க்கமாக இருந்தது.

” தேவயானி இதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் .நீ மருதாணியை தயார் செய் .எனக்குத் தெரிந்த டாக்டர் திருச்சியில் இருக்கிறார் .இன்னமும் நாள் கடத்த வேண்டாம் .நாளையே காலை அங்கு செல்லலாம் ” படபடவென்று அடுத்தடுத்த திட்டங்களை போட்டான் ரிஷிதரன்.

கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்த தேவயானியை அவன் கண்டுகொள்ளவில்லை .” வீட்டில் உள்ளவர்களிடம்  என்ன காரணம் சொல்வதென்று நீயே முடிவு செய்துகொள் .தேவையான சாமான்களுடன் நாளை காலை பசுமைக் குடிலை விட்டு வெளியே வந்தீர்களானால் நான் என் காரில் அழைத்துக்கொண்டு போகிறேன் .நாளை மாலை திரும்ப வீட்டிற்கு வந்துவிடலாம்  ” பிக்னிக் ஒன்றிற்கு செய்யும் ஏற்பாடுகள் போலிருந்தன அவனது திட்டமிடல்கள் .

” அவ்வளவுதான் உன் பிரச்சனை தீர்ந்தது .முகத்தை துடைத்துக் கொண்டு எழுந்து வா  ” பேச்சு முடிந்து முன்னால் நடக்க தொடங்கினான். பயத்தோடு மருதாணியும் , நெஞ்சம் நிறைந்த கலக்கத்தோடு தேவயானியும் அவனை பின்பற்றினர்.




சில நாட்களாகவே ரிஷிதரன் தேவயானியிடம் இதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தான் .மருதாணியின் வயிற்றில் இருக்கும் கருவை அழித்து விடுவோம் …பிறகு மற்ற விஷயங்களை பார்ப்போம் என்று தேவயானியிடம் வலியுறுத்தியபடியே இருந்தான் .தகாமல் உருவான உயிர்தான் …ஆனாலும் தேவயானியின் பெண்மனம் கருகலைத்தலை ஒத்துக் கொள்ள மறுத்தது .ரிஷிதரனது சுதந்திர வாழ்விற்கு ஏற்றபடி இந்த முடிவை தயக்கமின்றி அவன்  சொல்வதாக நினைத்தாள் அவள் .எனவே ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்தாள் . பிடி கொடுக்காமலேயே அவனிடம் பேசி வந்தாள் . ஆனால் இப்போது வேறு வழி இல்லை …என்பதோடு மருதாணியும் துணிவுடன் இருக்கவும் தேவயானி அமைதியானாள்.




திருச்சியில் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் உடல் காயத்தை காட்டிவிட்டு வருவதாக வீட்டில் இருந்த எல்லோரிடமும் கூறிவிட்டு  மருதாணியை  அழைத்துக்கொண்டு அதிகாலையில் கிளம்பினாள் தேவயானி .முன்பே பசுமைக் குடிலை விட்டு வெளியே வந்து காத்திருந்த ரிஷிதரன் அவர்கள் இருவரையும் காரில் ஏற்றிக்கொண்டான் .கார்  திருச்சியை நோக்கி சென்றது.

அந்த மருத்துவமனை நகரை விட்டு தள்ளி ஒதுக்குப்புறமாக இருந்த்து. நிறைய நர்சுகள் அங்குமிங்கும் நடமாடியபடி இருந்தாலும் வழக்கமான மருத்துவமனைக்குரிய பரபரப்பு அங்கே இல்லை .ஏன் என்று யோசித்துவிட்டு , இது அந்த மாதிரி விசயங்களுக்கான மருத்துவமனையோ என உணர்ந்து தன் மனக்குமுறலை அடக்கினாள் தேவயானி.

” ஹாய் ரிஷி … ரொம்ப பிசியோ ? ரொம்ப நாட்களாக இந்தப் பக்கமே வரவில்லையே மேன் ? ” என்று உற்சாகமாக  ரிஷியின் தோள்களில் செல்லமாக குத்தியபடி வரவேற்ற அந்த டாக்டர் சந்தியா நடுத்தர வயதில் இருந்தாள .கோல்டன் பிரேமிட்ட தனது கண்ணாடியை சரியாக கண்ணோடு பொருத்திக்கொண்டு  ரிஷிதரனுடன் வந்த இவர்கள் இருவரையும்  ஓரக்கண்ணால் ஆராய்ந்தாள்.

என்ன ஒரு வரவேற்பு… இவர்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்த்தால் இவன் இங்கே முன்பே ரொம்ப பழக்கமானவன்  போல் தெரிகிறதே… அது என்ன மாதிரி பழக்கமாக இருக்கக்கூடும் என்று ஊகித்த தேவயானியின் மனம் அருவருப்புடன் சுருங்கியது .சை …இப்படிப்பட்ட இடங்களுக்கெல்லாம்… இந்த மாதிரி காரியங்களுக்கு எல்லாம் முன்பே பழக்கப்பட்ட இவனுடன் …இப்படி வந்து நிற்க வேண்டிய நிலைமை வந்து விட்டதே …தேவயானி மிகவும் கூசினாள்.

இப்படி பார்க்கிறாளே இந்த டாக்டர் இப்போது அவளுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் …? தன்னைப்பற்றி அவள் என்ன நினைத்துக் கொண்டிருப்பாள்  ? இன்னமும் அவமானமாக உணர்ந்தாள் அவள்.

” கொஞ்சம் பிசி சந்தியா .நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் ?  உங்கள் ஹஸ்பண்ட் , குழந்தை எல்லோரும் சௌக்கியமா ? “

ரிஷிதரன் அவளிடம் இயல்பாக நலம் விசாரித்துக் கொண்டிருந்தான்.

” நீயெல்லாம் இருக்கும்போது எங்கள் சௌக்யத்திற்கு என்னப்பா குறை ? நாங்கள் அட்டகாசமாக இருக்கிறோம். சரி விடு இப்போது என்ன பிரச்சனை ? நேற்று திடீரென்று போன் செய்து இன்று வரப்போவதாக சொன்னாய் .நானும் தயாராகத்தான் இருக்கிறேன். யாருக்கு …? என்ன …? ” சந்தியாவின் பார்வை வந்திருந்த பெண்களில் சிறுமி என மருதாணியை தவிர்த்துவிட்டு அழுத்தமாக தேவயானி மேல் படிந்தது.

தேவயானி இன்னும் அதிகமாக உடல் கூச ரிஷிதரனின் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டாள் .அசிங்கமாக உணர்ந்து பின்னால் மறைந்து கொண்ட தேவயானியை கைப்பற்றி முன்னால் இழுத்தான் ரிஷிதரன்.




” இது என்னுடைய பிரண்ட் தேவயானி .இது அவளுடைய தங்கை மருதாணி. பிரச்சனை மருதாணிக்குத்தான் ” என்றான்.

” மை காட் இந்த சிறு பெண்ணிற்கா ? ”  சந்தியா அதிர்வது துல்லியமாக தெரிந்தது.

” தப்பிதமான வழிகாட்டல்… தவறான புரிதல் , விபரமறியாத சிறு பெண்  ? ” 

” ஓ.கே …ஓ.கே …ஐ அன்டர்ஸ்டான்ட் ” எத்தனையோ பார்த்திருப்பாள் போலும் .எளிதாக சமாதானம் ஆனாள் சந்தியா .

கலக்கத்துடன் தலைகுனிந்து கொண்ட மருதாணியின் கண்களிலிருந்து கண்ணீர் சொட்டுக்கள் வழிந்து தரையில் விழுந்தன .அதனை  பார்த்த சந்தியா மெல்ல அவள் தலையை வருடினாள் .” புவர் கேர்ள் ” பரிதாபபட்டாள் .

” இதென்ன ரிஷி ..இந்தப் பெண்ணின் உடம்பில் இத்தனை காயங்கள் ? ” பதறினாள் .

” ம் …சில மிருகங்களிடம் மாட்டிக் கொண்டாள் .கடைசி நேரத்தில் தப்பித்துவிட்டாள் .” 




” கடவுளே இந்த நாடு எங்கே போய் கொண்டிருக்கிறது என்று தெரியவிலலையே ” பெண்மையின் இயலாமையை வேதனையை பிரதிபலித்தது சந்தியாவின் விழிகள் .

” சின்னப் பெண் சந்தியா …அறியாமல் நடந்து விட்ட தவறு , கொஞ்சம் ஜாக்கிரதையாக …” ரிஷிதரன் இழுக்க…

” நான் பார்த்துக்கொள்கிறேன் ரிஷி. எந்த பிரச்சனையும் வராது .நீ வாம்மா . சில டெஸ்டுகள் எடுக்க வேண்டும் ” ஆதரவுடன் அணைத்து உள்ளே அழைத்து போனாள்.

பயமும் கலக்கமுமாக அவள் பின்னால் போகப் போன தேவயானியின் கைகளைப் பற்றி தடுத்தான் ரிஷிதரன் .” சந்தியா திறமையான டாக்டர் .அவருக்கு எல்லாம் தெரியும் .நன்றாக கவனித்துக் கொள்வார். நீ போக வேண்டாம் .உனக்கு தேவையற்ற கஷ்டம் ” என்றான்.

தேவயானி அவன் கையை உதறினாள் .

” உங்களுக்கு இங்கே ரொம்ப பழக்கம் போல ” குத்தலாக கேட்டாள்.

” அப்படி சொல்லித்தானே இங்கே அழைத்து வந்தேன் ” அலட்சியமாக வந்தது அவன் பதில்.

” இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லை உங்களுக்கு ” 

” என்ன வெட்கம் …செய்த தவறை சரிசெய்து கொள்ளும் இடம் இது .இங்கே வருவதற்கு எதற்கு வெட்கப்படவேண்டும் ? ” 

” இதுவெல்லாம் சட்டப்படி தப்பு தெரியுமா ? ” 

” அன்று அந்த காட்டிற்குள் நடந்ததே …அதுவெல்லாம் சட்டப்படி சரியா ? இங்கே எல்லாமே சட்டப்படிதான் நடந்து கொண்டிருக்கிறதா ? ” 

” பதிலுக்கு பதில் சொல்லி விடுவதாலேயே நீங்கள் செய்வது எல்லாமே நியாயம் என்று ஆகிவிடாது ” 

” நான் நியாயமாக நடப்பவன் என்று எப்போது சொன்னேன் .நன்றாக யோசித்துப் பார்  ” கேட்டுவிட்டு ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொண்டான் ரிஷிதரன்.




” சை … வெளிய போடா மகிஷாசுரா ”  அடக்கிய குரலில் சீறினாள் தேவயானி.

” ஹா …யெஸ்…ஹாஸ்பிடல் இல்லை ? இங்கே ஸ்மோக்கிங் கூடாது ” சொன்னபடி லைட்டரை அழுத்தியபடி ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேறினான் அவன்.

துயரத்துடன் அங்கே கிடந்த பெஞ்சில்  அமர்ந்துகொண்டாள் தேவயானி .அவள் மனம் பல்வேறு உணர்ச்சிகளால் கொந்தளித்துக் கொண்டு இருந்தது.

எவ்வளவு கேவலமான மனிதன் இவன் …இப்படி இவன் பின்னால் ஒரு தேவை என்று வரும்படி நேர்ந்துவிட்டதே. தேவயானி அந்தக் கணத்தில் தன்னையே மிகவும் வெறுத்தாள்.

” ஈசி தேவயானி இதுவெல்லாம் இப்போது ரொம்ப சாதாரண விஷயம் .உடம்பில் தேவை இல்லாமல் வளர்ந்திருக்கும் கட்டியை வெட்டி எறிவது போல் நினைத்துக்கொள். இந்த ஆபரேஷனில் சந்தியா மிகவும் கைதேர்ந்தவர். மிகத் திறமையாக செய்து முடித்து விடுவார் .கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.”  பத்து நிமிடத்தில் வந்து அவளருகே அமர்ந்து கொண்டு ஆறுதல் என்று ரிஷிதரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அமிலமாக உள்ளுக்குள் இறங்க தேவயானியின் உடல் எரிவது போல் இருந்தது.

” தீக்கு அருகில் இருப்பது போல் உடம்பெல்லாம் எரிகிறது “உலகத்து வெறுப்பையெல்லாம் தனது குரலில் காட்டியவள் , வேகமாக எழுந்து அவனுக்கு எதிரே இருந்த வேறு இருக்கையில் தள்ளி போய் அமர்ந்து கொண்டாள். அவளது இந்த வெறுப்பு எந்த வகையிலும் அவனை பாதிக்கவில்லை. அவன் ஒரு தோள்  குலுக்களில் அவளை தள்ளி விட்டு வசதியாக சரிந்து அமர்ந்து கொண்டான்.

இப்போது அழைத்துப்போன அறைக்குள்ளிருந்து சந்தியாவும் , மருதாணியும் வெளியே வந்தனர் .மருதாணி ஆபரேஷன் தியேட்டருக்கு போவதற்கான உடையில் இருந்தாள .அவள் கண்களில் லேசான பயம் தெரிந்தது.

” மருதாணியின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறது .எந்த பிரச்சனையும் இல்லை ரிஷி .ஒரு மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும் .” இவர்களுக்கு தகவல் சொல்லிவிட்டு தானே ஆதரவாக மருதாணியை அழைத்துக்கொண்டு ஆபரேஷன் தியேட்டருக்கு நடந்தாள் சந்தியா .பதட்டத்துடன் அவளைப் பார்த்த தேவயானியை பார்க்கவிடாமல் மருதாணியை மறைத்தபடி நின்றுகொண்டான் ரிஷிதரன் .




” அவளே தைரியமாக இருக்கிறாள் .நீதான் அழுது கரைந்து  ஊரைக் கூட்டுவாய் போல் இருக்கிறாய் ” அவனுடைய குத்தல் பேச்சில் அவனை எரிப்பது போல் பார்த்தாள்.

” போதும் …போதும் கொஞ்சம் கண்களின் நெருப்பை குறைத்துக் கொள் .அப்படியே வெளியே போய் ஏதாவது சாப்பிட்டு விட்டு வரலாம் .வா …” சாதாரணமாக அழைத்தான்.

” அடேய் …”  பல்லைக் கடித்தாள் தேவயானி .இவனுக்கு இதெல்லாம் எவ்வளவு சாதாரணமாக இருக்கிறது இருகைகளையும் இறுக மூடிக்கொண்டு பெஞ்சில் குத்தினாள்.




” அப்பாடி பயமாக இருக்கிறதே ”  போலியாக பாவனை காட்டியபடி மீண்டும் எதிரே போய் சற்று ஒடுங்கினாற் போல் அமர்ந்து கொண்டான் .அவளுக்கு பயந்து கொண்டிருக்கிறானாம் .அவனைப் பார்க்கப் பிடிக்காது கைகளால் தன் முகத்தை மூடிக் கொண்டாள் தேவயாணி.

உள்ளே மருதாணி இருக்கும் நிலையை நினைக்க நினைக்க அவளது நெஞ்சம் படபடத்தது .அத்தோடு …இதோ இப்போது அங்கே ஒரு உயிர் சிதைந்து கொண்டிருக்கிறது… இந்த நினைவு வந்தவுடன் தானாக அவள் உடல் நடுங்க துவங்கியது .கிடுகிடுவென்று தன் கட்டுப்பாடின்றி ஆடத் தொடங்கிய உடல் இதோ இன்னும் சிறிது நேரத்தில் தளர்ந்து கீழே விழுந்து விடுமோ என தேவயானி பயந்து கொண்டே இருக்கும்போது அவளை தாங்கியபடி அவள் அருகில் வந்து அமர்ந்தான் ரிஷிதரன்.

அவள் தோளில் கை வைத்து அழுத்தினான்”  ஏய் ஏஞ்சல் என்ன இது ? நீ எவ்வளவு தைரியமான பெண். இதற்குப் போய் இப்படி நடுங்குகிறாயே ?  உள்ளே மருதாணிக்கு நல்லது நடந்து கொண்டிருப்பது உனக்குத் தெரியாதா ? பாலைவனமாக போய்விட்ட அவளது வாழ்க்கையை சீர்படுத்திக் கொண்டிருக்கிறாய் நீ .எதற்கு இப்படி பயந்து நடுங்குகிறாய் ?  நீயே இப்படி  ஆனால் அவளுக்கு தைரியம் சொல்வது யார் ? ” அவள் தோளில் வைத்திருந்த கை அழுத்தத்தை கூட்டியபடி அவன் சொன்ன ஆறுதல் அந்த நேரம் தேவயானிக்கு மிகவும் தேவையானதாக இருக்க மெல்லிய கேவலுடன் அவன் தோளில் தலை சாய்ந்து விட்டாள்.

” ஒரு உயிர் ரிஷி .விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் மனிதனால் செய்ய முடியாத சில விஷயங்களில் ஒன்று செயற்கையாக ஒரு உயிரை உருவாக்குவது .விலைமதிப்பற்றது மனித உயிர் .அப்படியான உயிர் ஒன்று உள்ளே சிதைந்து கொண்டிருக்கிறது .இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை ” 

” முட்டாள் , என்ன மாதிரி நியாயம் உன்னுடையது ? முழுதாக பூமியில் உருவாகி இத்தனை வருடங்கள் வளர்ந்து வாழ்ந்த ஒரு உயிரை விட புதிதாக இப்போதுதான் உருவான கரு முக்கியமா உனக்கு ? இன்னொரு உயிரை அழிக்கும் வல்லமையோடு இருக்கும் அந்த சிறு கருவை இழப்பதில் இவ்வளவு சோகம் உனக்கு தேவை இல்லை .உன்னுடைய கட்டு திட்டான சட்டதிட்டங்களை விட்டுவிட்டு கொஞ்சம் வெளியே வா .எதார்த்த உலகிற்கு பழகு ஏஞ்சல் ” கோபமாக ஆரம்பித்து கொஞ்சலாக முடித்தான் .

தன் தோள்  சரிந்திருந்த அவளின் கன்னத்தை மென்மையாக வருடியபடி மெல்ல மெல்ல அவளது மூளைக்குள் இறங்கும் படியாக தன்னுடைய வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தான் .தேவயானி தலையை திருப்பி அவன் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். அப்படியேனும் இதோ தலையை நங்நங்கென இடிக்கும் இந்த தலைபாரம் குறையாதா என்பதுதான் அவளுக்கு .

” இது வேண்டாம் ரிஷி …இப்படி கொடுமை எல்லாம் இனிமேல் நடக்கவே கூடாது ரிஷி …”  குமுறினாள் .

” சரி …சரி வேண்டாம் .இனிமேல் இதுவெல்லாம் நடக்காது .போதுமா ? நீ முதலில் அழுகையை நிறுத்து ” குழந்தையை சமாதானப்படுத்தும் குரலில்   செல்லமாக அதட்டினான்.

வாடிய கொடியாய் படுக்கையில் மயக்கத்தில் இருந்தவளை வேதனையுடன் பார்த்து நின்றவளை வலுக்கட்டாயமாக வெளியே அழைத்துப் போய் , ” ஏதாவது குடிக்கவாது செய் ” என கட்டாயப்படுத்தி இளநீர் வாங்கிக் கொடுத்தான் .

” ஒரு வாரம் , பத்து நாட்கள் வரை மருதாணியை நீதான் கவனமாக பக்கத்திலிருந்து கவனித்து உடம்பை தேற்றவேண்டும் . அதுவும் வீட்டிலுள்ள யாருக்கும் இந்த விபரம் தெரியாமல் .இதற்கெல்லாம் உன் உடம்பிலும் தெம்பு வேண்டாமா ? ” திட்டித் திட்டியே மதியம் நாலு வாய் சாப்பிட வைத்தான். 

மாலை கொஞ்சம் உடம்பு தேறியதும் எழுந்து அமர்ந்து சாப்பிட்ட மருதாணியின் முகத்தில் பெரும் நிம்மதியையும் , தெளிவையும் பார்க்கவும் தேவயானி ஓரளவு தன்னை சமாதானப்படுத்திக் கொண்டாள் .




” இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது அக்கா ” பழைய உற்சாகம் எட்டிப் பார்த்த மருதாணியின் குரலைக் கேட்டதும்தான் , ரிஷிதரன் அவர்களுக்கு செய்திருக்கும் நன்மையின் அளவு அவளுக்கு புரிந்தது .

” நீங்கள் இரண்டு பேரும் உள்ளே போங்க , நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன். ” அவர்களை பசுமைக்குடில் நுழைவில் ரிஷிதரன் இறக்கி விட்ட போது , கலங்கிய கண்களில் நன்றியுடன் அவனைப் பார்த்தாள் .

” மெல்ல முன்னால் நட மருதாணி …” அவளை அனுப்பினாள் .

” நிறையவே செய்திருக்கிறீர்கள் ரிஷி…நியாயமாக நன்றி சொல்ல வேண்டும் ….” 

” ப்ச் …எனக்கு நன்றி சொல்வாயா நீ …? ” உரிமை கலந்த அவனது அதட்டலை கவனியாது அவனை தீர்க்கமாக பார்த்தாள் .

” நிறைய செய்திருக்கிறீர்கள் …ஆனால் நிறைவாக செய்யவில்லை .இந்த மருதாணி போல் எத்தனை பேரோ …என்ற அரிப்புதான் இன்று முழுவதும் என் மனதை உருக்கிக் கொண்டிருந்தது .அப்படி நடக்காமல் தடுக்கும் வல்லமை உங்கள் கைகளில் இருக்கிறது .ஆனால் நீங்கள் ….” என்று நிறுத்தி அவனைப் பார்க்க அவன் தீர்மானமாக மறுப்பாக தலையசைத்தான் .




” ஒரு நல்ல முடிவை எடுத்துவிட்டு …பிறகே பசுமைக்குடிலுக்குள் வருவீர்கள் என்று நம்புகிறேன் ” மீண்டும் அவன் தன் இடத்திற்குள் நுழைவதற்கான தடை ஒன்றை போட்டுவிட்டு போய்விட்டாள் தேவயானி .பொங்கிய ஆத்திரத்துடன் சக்…சக்கென கியர் மாற்றி அந்த இடத்தை விட்டு பறந்தான் ரிஷிதரன் .

அதன் பிறகு அவன் பசுமைக்குடில் பக்கமே வரவில்லை .மனவேதனையுடன் அவனது பிடிவாத்த்தை எண்ணியபடி தேவயானி நாட்களை கடத்தியபடி இருந்த போது ஒரு நாள் ….சுந்தரேசன் பரபரப்போடு வந்தான் .

” அம்மா ரிஷிதரன் சாரை போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விட்டார்களாம் ” 

What’s your Reaction?
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!