pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 34

34

” என்ன …என்ன சொல்கிறாய் சுந்தர் ? ” முதல் அதிர்ச்சி சொர்ணத்துடையதாக இருந்த்து .

” எதற்காகவாம்  அண்ணா ? அப்படி என்ன தப்பு செய்தாராம் ? உங்களுக்கு ஏதாவது விபரம் தெரியுமா ? ” படபடத்தாள் தேவயானி .

” அது …வந்து …” சுந்தரேசன் தயங்கினான் .




” சொல்லு சுந்தர் .போலீஸ் பிடிக்கும் அளவு தப்பு எதுவும் ரிஷி தம்பி நிச்சயம் செய்திருக்கமாட்டார் ” சொர்ணத்திடம் அசைக்க முடியாத நம்பிக்கை .




” இல்லை அம்மா .தப்பு செய்ததாக ஒத்துக் கொண்டு அவரே போய் சரணடைந்திருக்கிறார் . போலீஸ் தரப்பில் ஏதோ ஆதாரங்களெல்லாம் வைத்திருக்கிறார்களாம் ” 

” தப்பு …தப்பு என்கிறீர்களே …அது என்ன தப்பென்று சொல்லமாட்டேனென்கிறீர்களே …” தேவயானியின் குரல் உணர்ச்சிவசப்பட்டதில் நடுங்கியது .

சுந்தரேசன் இன்னமும் சொல்ல தயங்கினான் . அசுவாரஸ்யமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சுனந்தாவிற்கு இப்போது சுவாரஸ்யம் வந்த்து .கை வேலையை ஒதுக்கி வைத்து விட்டு இவர்கள் அருகில் வந்து நின்று காதை தீட்டிக் கொண்டாள் .

” வ…வந்து …ஏதோ பொம்பளை விசயமாக …” சுந்தரேசன் இழுக்க , தேவயானியின் முகம் கறுத்தது. சொர்ணம் முகம் சிவந்த்து . சுனந்தாவின் முகத்தில் உற்சாக பந்துகள் துள்ளின .

” எந்தப் பொண்ணோட கற்பை சூறையாடிட்டு ஜெயிலுக்குள் போய் உட்கார்ந்திருக்கிறார் உங்கள் அபிமான பெரியமனிதர் ? ” நக்கலாக கேட்டாள்.

” சுனந்தா வாயை மூடு .அந்த தம்பி அப்படியெல்லாம் தப்பு செய்கிற ஆளில்லை ” சொர்ணம் மருமகளை அதட்ட , அடப்பார்றா …என மாமியாரை முறைத்தாள் அவள் .

சாதாரணமாக சொர்ணம் நேருக்கு நேராக மருமகளை கடிந்து கொள்வதில்லை .மகனின் மூட் தெரியாமல் ஏதாவது பேசி அவன் தன் சொல் அம்புகளை தாயின் பக்கமே திருப்பி விட்டானானால் …கணவரின்றி இரண்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு மகன் தயவில் வாழும் தன் நிலையை எண்ணி அவள் எப்போதும் அதி ஜாக்கிரதையாகவே இருப்பாள் .ஆனால் இன்றோ …

” என்ன அத்தை இன்று பேச்சு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது .மருமகளை விட அப்படி என்ன அந்த பொம்பளை பொறுக்கிக்கு சப்போர்ட் ? ” குணம் கெட்ட ஒருவனுக்காக தன்னை அதட்டும் மாமியாரை் மறைமுகமாக கணவனுக்கு சுட்டினாள் சுனந்தா .




” சுந்தர் இவள் கண்டபடி பேசுகிறாள் .கொஞ்ச நேரம் வாயை மூடிக்கொண்டிருக்க சொல் .நமக்கு படியளக்கிறவர்கள் அவர்கள் .அவர்கள் மீது இப்படி தவறான பழி சொல்வது அந்த கடவுளுக்கே அடுக்காது . ரிஷி தம்பி அப்படி தவறான பாதைக்கு செல்பவரில்லை .நீ  என்னுடன் வா .அந்த போலீஸ்கார்ர்களிடம் நானே என்னவென்று கேட்கிறேன் ” முந்தானையை இழுத்து சொருகிக் கொண்டு போலீஸ் ஸ்டேசனுக்கு கிளம்பி விட்ட அம்மாவை வியப்பாக பார்த்தான் சுந்தரேசன் .

” அம்மா …நீங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு வரப் போகிறீர்களா ? ” 




” ஆமாம் …வா .அதெப்படி அந்த தம்பி மேல் இப்படி ஒரு புகார் எழுதுவார் என்று அந்த போலீசையே கேட்கிறேன் .கிளம்பு …” சொர்ணம் செல்வதில் உறுதியாக இருந்தாள் .

” நானும் வாரேங்கம்மா .பால் போல வெள்ள மனசு அந்த ஐயாவுக்கு . பச்சபுள்ள மேல இப்படி ஒரு கேஸ் போட்டிருக்கானே அந்த போலீசு .அவன நான் ரெண்டுல ஒண்ணு கேக்கேன் .வாங்க போகலாம் …” கோபத்தோடு வந்தாள் பஞ்சவர்ணம் .

” நானும் வருகிறேன் அண்ணா .எங்கேயோ ஏதோ தவறு நடந்திருப்பதாக தோன்றுகிறது ” பரிதவிப்போடு பேசினாள் தேவயானி.

சுனந்தாவிற்கு தலையில் அடித்துக் கொள்ளலாம் போலிருந்த்து . பொம்பளை பின்னால் சுற்றும் ஒரு பொறுக்கிக்கு இத்தனை பெண்கள் ஆதரவா ? நினைத்ததை வெளிப்படையாக  கேட்டும் விட்டாள் .

“அவர்  எந்தப் பெண்ணின் கையை பிடித்து  இழுப்பதை பார்த்தாயம்மா நீ ? ” சொர்ணம் கேட்க …

” தப்பான பார்வை கூட அந்த ஐயாகிட்ட கிடையாது . என் பொண்ணை அவருடன் தனியாக தைரியமாக அனுப்புவேன் ” பஞ்சவர்ணம் அறிவிக்க …

” நானும் அப்படித்தான் …” அவள் கட்சியில் இணைந்தாள் சொர்ணம்.

” எனக்கு கூட நம்பமுடியவில்லைதான்மா . ரிஷி சாரின் அம்மாவுடன் உங்களை பேச சொல்லலாமென்றுதான் வந்தேன் …” சுந்தரேசனும் அவர்களை ஒப்பத் துவங்க , சுனந்தா தோல்வி முகத்துடன் உள்ளறைக்கு நகர்ந்துவிட்டாள் .

” அவர்களிடம் பேசி விபரம் சொல்லி …அவர்கள் கிளம்பி …வந்து …எவ்வளவு நேரம் ஆகுமோ …முதலில் நாம் போய் என்ன ஏதென்று பார்த்துவிட்டு வந்துவிடுவோம் ” சொர்ணம் பேசிக் கொண்டிருக்கும்போதே…

” சொர்ணம் …”  பின்னாலிருந்து தழுதழுப்பாய் கேட்டது மனோரஞ்சிதத்தின் குரல் .சொரணம் திரும்பிப்பார்க்க ஆதரவு எதிர்பார்த்தபடி இரு கைகளையும் நீட்டி கொண்டு நின்றிருந்தாள் மனோரஞ்சிதம்.




” மனோ மேடம் ” அவள் கேட்ட ஆதரவை உடனடியாக சொர்ணம் கொடுக்க வேகமாக இருவரும் அணைத்துக் கொண்டனர்.

” நீங்கள் எல்லோரும் பேசியதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ரிஷிதரன் என் மகன் . ஆனால் அவன் தப்பு செய்து இருப்பானோ …என்றுதான் இதோ சற்று முன்பு வரை நினைத்துக் கொண்டிருந்தேன் .இங்கே நீங்கள் எல்லோரும் பேசிக்கொண்டதை கேட்டதும் , என்னை நானே நொந்து கொண்டேன். இது ஒரு தாயாக என் மகனின் மீது நான் வைத்திருக்க வேண்டிய நம்பிக்கை அல்லவா ? என் மகனின் தாயாக என் நிலையில் இருந்து நான் தவறிவிட்டதாக உணர்கிறேன். உங்கள் எல்லோரையும் இப்படி பார்க்கையில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது…” 




அழுகை வரத் துடிக்கும் கரகரத்த குரலில் பேசிய மனோரஞ்சித்த்தின்  முதுகை தட்டி ஆசுவாசப் படுத்தினாள் சொர்ணம் . ” இது என்னங்க மேடம்… இதெல்லாம் ஒரு விஷயமா …உங்கள் பையனை எங்களுக்கு தெரியாதா ? ” 

” இந்த எங்களுடைய நம்பிக்கைக்கு காரணம் ரிஷிதரன் சார்தான் .அதனை நீங்கள் மறந்து விட்டீர்களே மேடம்…”  மெல்லிய சிரிப்புடன் சாதாரணமாக சுந்தரேசன் கேட்ட கேள்வி கூர் கத்தியாய்  மனோரஞ்சிதத்தை தாக்கியது.

” ஆமாம் , ரிஷி உங்கள் அனைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொண்டதால் தானே …” என்றவளின் குரல் மேலே பேச முடியாமல் திணற  அருகில் நின்றிருந்த சசிதரன் அம்மாவின் தோளை அணைத்து சமாதானம் செய்தான்.

” விடுங்கள் அம்மா என்ன நடந்ததென்று நாம் ஸ்டேஷனில் போய் கேட்டு தெரிந்து கொள்ளலாம் ” 

” நீங்கள் இன்னமும் ஸ்டேஷனுக்கு போகவில்லையா  ? ” இந்தக் கேள்வியை கேட்காமல் இருக்க தேவயானியால் முடியவில்லை .இக்கட்டில் இருக்கும் பிள்ளையை பார்க்க போகாமல் இங்கே வந்து நிற்கிறீர்களே …எனும் பொருள் மறைந்து நின்ற அவளது கேள்விக்கு மனோரஞ்சிதம் மேலும் திணறினாள்.

” ரிஷி தானாக முன்வந்து குற்றத்தை ஒத்துக் கொண்டு சரணடைந்து இருக்கிறான் .கடந்த சில நாட்களாக அவன் இங்கே தானே தங்கியிருந்தான் .அதனால் உங்களுக்கு ஏதாவது விவரம் தெரியுமா என்று முதலில் விசாரித்து விடலாம் என்று வந்தோம் ” சசிதரன் விளக்கம் சொன்னான்.

ஆனாலும் …மகனிடம் ஓடாமல் முதலில் இங்கே ஏன் …? எனும் தேவயானியின் மன முணுமுணுப்பு மாறவில்லை.

” அப்படி எந்த தப்ப ஒத்துட்டாராம் எங்க ஐயா ? ” பஞ்சவர்ணம் எழுப்பிய கேள்வியிலேயே அந்த தப்பை நான் ஒத்துக்கொள்ள போவதில்லை எனும் செய்தி இருந்த்து .

” இங்கே பக்கத்தில்  காட்டு பங்களாவிற்கு பெண்களை ஏமாற்றி கூட்டி வந்து  போட்டோ , வீடியோன்னு கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு கேஸ் வந்த்தே …அதில்தான் அவனை கைது செய்திருக்கிறார்கள் ” சசிதரன் தயங்கி சொல்ல தேவயானி அதிர்ந்தாள் .




என்ன கொடுமை இது …அந்த சம்பவத்தின் ஹீரோவே ரிஷிதரன்தானே ? அவன் எப்படி குற்றவாளியாக கைது செய்யப்பட்டிருப்பான் ? 

” இப்படி நடந்திருக்கும் வாய்ப்பே ஒரு சதவிகிதம் கூடக் கிடையாது . நான் பொறுப்பேற்கிறேன் .வாங்க போகலாம் ” சொர்ணம் ஆணித்தரமாக பேச , பஞ்சவர்ணம் கை நொடித்து போலீசார்களுக்கு சாபம் விடத் துவங்கினாள் .

” வாருங்கள் மேடம் .நானும் உங்களுடன் வருகிறேன்.எல்லோருமாக போய் நியாயம் கேட்போம் ”  சொரணம் கிளம்ப தேவயானியும் உடன் கிளம்பினாள்.

சிறிதான ஒரு கும்பலாக வந்து நின்ற இவர்களை அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எதிர்பார்க்கவில்லை .குற்றவாளி நானென சரணடைந்து இருக்கும் ஒருவனுக்கு ஆதரவாக இத்தனை பேர் வந்து நிற்கிறார்களே…அதிலும் அவனுடைய தாயும் , அண்ணனும் பெரிய இடத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்களே செய்வதறியாது மண்டையை சொரிந்தார்  அவர்.

மனோரஞ்சிதம் சசிதரனை பின்தொடர்ந்து மற்ற மூவரும் வேகமாக ஸ்டேஷனுக்குள் நுழைய , தேவயானி சற்று தயங்கி பின் தங்கினாள் . சினிமாக்களில் காட்டுவது போல் அவனை ஜெயிலில் அடைத்து வைத்திருப்பார்களோ … அப்படி ஒரு நிலைமையில் ரிஷிதரனை பார்ப்பதற்கு அவள் விரும்பவில்லை.




தான் அவர்களைத் தேடிச் செல்லாமல்

அம்மாவையும் அண்ணனையும் தன்னை தேடி வர வைப்பதற்காக ரிஷிதரன் ஏதோ குறுக்குவாட்டில் திட்டம் போட்டு இருக்கிறான் என அரைகுறையாக அவளால் ஊகிக்க முடிந்தது.இதோ அவனது குடும்பம் வந்துவிட்டது .இனி அவனை காப்பாற்றி விடுவார்கள் என்ற தைரியம் இருந்தாலும் , இப்படி குற்றவாளியாக போலீஸ் கையில் அவனை பார்க்கும் தைரியம் அவளுக்கில்லை .

நடுங்கிய கால்களுடன் மெல்ல ஸ்டேசன் வாசல்படியை தாண்டி உள்ளே நுழைந்தாள் .அவள் பயந்த்து போல் ரிஷிதரன் லாக்கப்பிற்குள் அடைக்கப்பட்டிருக்கவில்லை .ஓரமாக கிடந்த பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருந்தான் . குற்றவாளியாய் இருக்கும் கவலை கொஞ்சமும் இன்றி தோரணையாய் கால் மேல் கால் போட்டுக் கொண்டு , பளபள கன்னங்களும் , ஒளிரும் கண்களும் , அலட்சிய பாவமும் , சூயிங்கம் மெல்லும் வாயுமாக  எப்போதும் போல் கொம்பு வைத்த அசுரனாகவே…அசராதவனாகவே  இருந்தான் .

ஆனாலும் அந்த சிறிய பெரம்பலூர் காவல்நிலையத்தில் மின்விசிறி கூட இல்லாத இடத்தில் , கீறல் விட்ட பழைய கால மர பெஞ்சில் அவனை பார்த்ததும் தேவயானியின் கண்கள் குளம் கட்டிக் கொண்டன .அவளால் அல்லவா இவனுக்கு இந்த நிலைமை ? அவள் பிடிவாத்த்தினால் தானே இவன் இந்த நிலைமையில் உட்கார்ந்திருக்கிறான் . அதுவும் குற்றம் ஏற்றுக் கொண்டிருக்கும் அந்த சம்பவத்தில் குற்றவாளிகள் பிடிபடுவதற்கான சூத்திரதாரி இவனாகவே இருக்கும் போது…

உள்ளே நுழைந்த அம்மா , அண்ணனோடு வந்த மற்றவர்களையும் ஓரக்கண்ணால் அலட்சியமாக பார்த்துவிட்டு மீண்டும் தன் போனிற்கு குனிந்து கொண்ட ரிஷிதரனின் தாடைகள் மென்று அசைந்து சூயிங்கத்தை ஊதி குமிழ் விட்டது .மீண்டும் ஓரப்பார்வையாக நிமிர்ந்த அவன் கண்கள் திடுக்கிட்டன .கொஞ்சம் பின்னால் உள்ளே நுழைந்த தேவயானியை கண்டதும் அவனிடம் ஒரு பரபரப்பு வந்த்து .




நீ ஏன் வந்தாய் ? கண்களிலேயே அதட்டினான் .

ஏன் இப்படி செய்தாய் ? பதில் கேள்வி கண்களில் அனுப்பினாள் அவள் .

ஒன்றும் பேசாதே …போ 

மாட்டேன் …நீ உண்மையை சொல்லு .

ம்ஹூம் …எல்லாம் சரியாகிவிடும் ..நீ போ …

இருவரும் கண்களாலேயே பேசிக் கொண்டிருந்தனர் .

” என்ன சார் இவ்வளவு தெளிவாக சொல்றேன் .புரிஞ்சுக்க மாட்டேன்கிறீங்களே ? அந்த குரூப்போடு உங்க தம்பிக்கு தப்பான கான்டாக்ட் இருந்திருக்கிறது .பொண்ணுங்க விசயத்தில் அவுங்களோட இவரும் சேர்ந்திருந்திருக்கிறார் . அன்று அவர்களுக்குள் ஏதோ விசயத்தில் தகராறு வந்து இதோ இந்த துப்பாக்கியால் அவர்கள் மூவரையும் சுட்டுவிட்டு இவர் ஓடிவிட்டார் .இப்போது நாங்கள் இன்வெஸ்டிகேட் பண்ணும் வேகத்தை பார்த்து பயந்து போய் தானாகவே வந்து சரண்டராயிட்டார் ” இன்ஸ்பெக்டர் பெருமிதமும் , வேகமுமாக சசிதரனுடன் பேச தேவயானி எரிச்சலுடன் அவரை பார்த்துவிட்டு ரிஷிதரனை பார்க்க அவனது கண்கள் அடக்கிய சிரிப்பில் மின்னின .

சிரிக்காதடா டேய் …எப்டிடா உன்னால  இப்படியெல்லாம் குறுக்கால யோசிக்க முடியுது ? இதழசைவில் புலம்பினாள் .

ஒண்ணும் ஆகாது…நீ போ …அவன் பதிலுக்கு இதழ் அசைத்தான்.




” இல்லைங்க மனோ மேடம் .ரிஷி தம்பி பத்து நாட்களுக்கும் மேலாக எங்கள் குடிலில்தான் தங்கியிருக்கிறார் .அவர் இப்படி செய்திருக்க வாய்ப்பேயில்லை ” சொர்ணம் அடித்து பேச ,

” அட …அந்த சம்பவம் நடந்தன்னைக்கி ரிஷி சாருக்கு காய்ச்சலு .நான்தான் சாப்பாடும் , மாத்திரையும் கொடுத்து அவர தூங்க வச்சேன்கிறேன் .எந்த கோர்ட்ல சாட்சி் சொல்லனும் …சொல்லுங்க வர்றேன் ” பஞ்சவர்ணம் எந்த புளுகுக்கும் நான் தயாரென மார் தட்டி நின்றாள் .

” எம்மா நாங்க சொல்லலைம்மா .உங்க ஐயாவாகத்தான் இப்படி சொல்லிக் கொண்டு இங்கே வந்து சரண்டைஞ்சிருக்காரு ” கான்ஸ்டபிள் ஒருவர் சொல்ல …

” அட அவருக்கென்னங்க தெரியும் …பச்சப்புள்ள .ஏதோ ஞாபகத்துல எதையாவது சொல்லியிருப்பாரு .அதுக்காக அவரை உள்ள புடிச்சு வச்சிடுவீகளோ ? ” பஞ்சவர்ணம் கேட்க காவலர்கள் அயர்ந்தனர் .

” பச்சப்புள்ளயா …? எம்மா இதோ பாருங்க துப்பாக்கி .இது உங்க ஐயாவோடது .அந்த குற்றவாளிங்க உடம்பில் பாய்ந்திருந்த புல்லட் இந்த துப்பாக்கியோடது .இதை விட வேறு என்னம்மா ஆதாரம் வேண்டும் ? ” 

” சரி இருக்கட்டும் .அந்த குண்டை  சுட்டது இவருதாங்கிறதுக்கு என்ன ஆதாரங்கிறேன் ? ” 

” ஏன்மா அதைத்தான் அவரே ஒத்துக்கிட்டாரே  ” 




” யோவ் போலீசு உனக்கு அறிவில்லையா ? இதைத்தான் அப்போதிருந்து சொல்றேனே …அவரு சின்னப்புள்ள …அந்த விபரமெல்லாம் அவருக்கு தெரியாதுன்னு .அவரு  சொன்னாருன்னு நீ நம்பிடுவியா ? ” பஞ்சவர்ணத்தின் கலாட்டாக்களில் காவலர்கள் அனைவரும் திகைக்க ரிஷிதரன் நெகிழ்வோடு பஞ்சவர்ணத்தை பார்த்தான் .

” மேடம் , ரிஷி தம்பி என்ன காரணத்திற்கோ பொய் பழி சுமந்திட்டிருக்கிறாரு .காரணம் கேளுங்க ” சொர்ணம் மனோரஞ்சித்த்திடம் முணுமுணுத்தாள் .

மனோரஞ்சிதம் இளைய மகனை திரும்பி பார்க்க , ரிஷிதரன் முகத்தை திருப்பிக் கொண்டான் .” காரணம் எனக்கு தெரியும் சொர்ணம் ” என்ற மனோரஞ்சிதம் பெருமுச்சு ஒன்றுடன் சசிதரனிடம் போனாள் .

” சசி நம்ம குடும்ப பெயர் …கெடக்கூடாது .அவனை ரிலீஸ் பண்ண ஏற்பாடு செய் ” மூத்த மகனிடம் தாழ்ந்த குரலில் உத்தரவாக பேசினாள் .

” சரி சார் .உங்கள் கணக்குப்படியே இருக்கட்டும் .என் தம்பி தப்பு செய்துவிட்டான் . ஆனால் நீங்கள் இப்போது அவனை ரிலீஸ் செய்தாக வேண்டும் ” அதிகாரம் கொடி கட்டியது சசிதரனின் குரலில் .

” அதெப்படி சார் முடியும் ? ” இன்ஸ்பெக்டரின் குரலில் அதிர்ச்சி .

” முடியனும் .எப்படி என்பது உங்கள் தலைவலி .ஆனால் எனக்கு என் தம்பி எந்தக் குற்றமுமற்றவனென்று விடுதலை வேண்டும் ” 




” என்ன அநியாயம் சார் இது .இந்த கேஸ்தான்  இப்போது தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாபிக் .கேஸின் ஓவ்வொரு மூவையும் எல்லா பத்திரிக்கை , டிவி சேனல்களும் கவனித்துக் கொண்டிருக்கின்றன .நீங்கள் சொல்வது போலெல்லாம்  மனம் போல் கேஸை திருப்ப முடியாது .” 

சசிதரன் அலட்சியமாக கை அசைத்தான் ” எல்லாம் முடியும் சார் .இத்தனை விஞ்ஞான முன்னேற்றம் இருக்கும் இந்த காலத்தில்தானே , நம் நாட்டின் முதலமைச்சரின் சாவு எப்படி நடந்த்தென்றே தெரியாமல் ரகசியமாக நடந்து , இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது . அப்போதும் இந்த மீடியாக்களும் , பத்திரிக்கைகளும் இருக்கத்தானே செய்தன ? மீடியாக்களை முடக்கும் அதிகாரம் உங்களை போன்ற அதிகாரிகளிடம் …உங்களை முடக்கும் மூலாதாரம் ….” என்றவன் நிறுத்தி இரு விரல்களை சுண்டி பணமென்னும் ஜாடை காட்டினான் .

” சொல்லுங்கள் .உங்களுக்கு எவ்வளவு வேண்டும் ? ” மிக நேரிடையாக முகத்தில் அடிப்பது போல் பேரம் பேச , அந்த இன்ஸ்பெக்டர் வெகுண்டு எழுந்தார் .

” ஹலோ சார் போலீசென்றால் உங்களுக்கு அவ்வளவு கேவலமா ? எனக்கு லஞ்சம் கொடுக்க முயன்றீர்களென்று இப்போதே  உங்கள் மேல் ஒரு கேஸ் போட்டு , உங்கள் தம்பி பக்கத்திலேயே உங்களையும் உட்கார வைக்கட்டுமா ? ” 

தேவயானி திடுக்கிட்டு ரிஷிதரனை பார்க்க , அவனோ முதல் அலட்சியம் மறைந்து சுவாரஸ்யமாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் .கை தட்டி விசிலடித்து அண்ணனின் கைதினை வரவேற்கும் மனோபாவத்தில் இருந்தான் .கலக்கமாய் பார்த்த தேவயானிக்கு சூப்பர் என இரு விரல் சேர்த்து ஜாடை காட்டினான் .அவள் நொந்து போனாள் .




” இந்த கேஸில் மினிஸ்டர் சொந்தக்காரன் ஒருவன் சம்பந்தப்பட்டிருக்கிறான் .எங்களுக்கு பொலிட்டிகல் ரீதியாக மிகுந்த ப்ரசர் இருக்கிறது .மொத்த குற்றத்தையும் உங்கள் தம்பி மேல் சுமத்தி அவருக்கு தூக்குதண்டனை வாங்கிக் கொடுக்கிறேன் பார்க்கிறீர்களா ? ” இன்ஸ்பெக்டர் அறைகூவல் விட தேவயானிக்கு உச்சந்தலையில் பாறை விழுந்தது போலானது .

சசிதரன் போனை எடுத்துக் கொண்டு ஸ்டேசனை விட்டு வெளியே வந்து யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் .

” இந்த ஒரு நைட்தான் . நாளையே தம்பி எங்கள் இடத்தில் இருக்கனும் ” என யாரிடமோ உத்தரவிட்டுக் கொண்டிருந்தான் .




” தாத்தாவும் , அப்பனும் சொத்து சேர்த்து வச்சிட்டு போயிடுவாங்க .இவனுங்க  அந்த பணத்தை இப்படி கண்டபடி செலவு செஞ்சி ஆகாத வேலை அத்தனையும் பார்ப்பானுங்க . இந்த பொறுக்கி மட்டும் ஒரே ஒரு ராத்திரி என் கையில் கிடைக்கட்டும் .முதுகுத்தோலை உரிச்சு எடுத்து உப்பைத் தடவி , செஞ்ச தப்பை பூராவும் கக்க  வைக்கிறேன் ” தாழ்ந்த குரலில் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளிடம் பேசிக் கொண்டிருந்த்தை கவனித்த தேவயானி மிகவும் கலங்கிப் போனாள் .

” சார் ஒரு நைட் கூட அவரை இங்கே விட்டுடாதீங்க சார் .அவரை அடித்தே உண்மையை வர வைக்கனும்னு இங்கே பேசிட்டிருக்காங்க . ப்ளீஸ் சார் ஏதாவது செய்து அவரை இங்கிருந்து கூப்பிட்டு போயிடலாம் . யோசிங்க சார் …ஏதாவது யோசிங்க …எதையாவது செய்யுங்க ” நீர்த் திரையிட்ட கண்களுடன் , எந்நேரமும் அழுது விடுவேனெனும் ஞணஞமக்கும் குரலுடனும் பரிதவித்து நின்ற தேவயானியை யோசனையுடன் பார்த்தான் சசிதரன் .

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!