kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – நிறைவு

22

 

அவளுடைய அசைவிலே நடப்பதை உணர்ந்த மகிபாலன் குனிந்த தலை நிமிராமல் தன்னை ஒப்புக்கொடுத்து நிற்க மிருதுளா வேகமாக சுத்தியலை உயர்த்த கலிவரதன் கத்தினார்.

 

” மிருதுளா நிறுத்து .உன் அக்காவை கொன்றது போல் இவனையும் கொன்று விடாதே ” 

 

மிருதுளாவின் கையிலிருந்த சுத்தியல் கீழே விழுந்தது .ஓவென்ற அழுகையுடன் தன் முகத்தை மூடிக்கொண்டு கீழே விழுந்தாள் அவள்.”  என்ன மாமா இது ? ” கலிவரதனை  கோபமாக பார்த்தபடி மகிபாலன் மிருதுளாவை அள்ளி தன் மடி மீது போட்டுக்கொண்டான்.

 

” மிருது குட்டி அழாதேடா மாமா சும்மா ஏதோ சொல்கிறார். அதையெல்லாம் மனதில் போட்டுக் கொள்ளாதே .வா நாம் வீட்டிற்கு போகலாம் ” 

 

” நீங்கள் சமாதானம் சொல்லவே வேண்டாம் அத்தான் .எனக்கு நினைவிற்கு வந்துவிட்டது .” திக்கித்திக்கி பேசினாள்  மிருதுளா .அவள் மனதில் அன்று நடந்த சம்பவம் மீண்டும் ஓடியது.

 

மகிபாலனை பார்த்து வெறியோடு சுத்தியல் தூக்கிக்கொண்டு வந்த மகளை பார்த்த கலிவரதன் செய்வதறியாமல் நின்றுவிட அதே அதிர்ச்சிதான் மகிபாலனுக்கும் .ஆக்ரோசமாக ஓடிவரும் மாமன் மகளை  எப்படி எதிர்கொள்வது என்று அவனுக்கும் தெரியவில்லை .அப்படியே உறைந்துபோய் அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் .அப்போதுதான் மிருதுளா அவன் முன் வந்தாள் மதுராவின் கையிலிருந்த சுத்தியலை இறுக்கிப் பிடித்தாள்.

 

” என் அத்தான் மதுரா. அவர் மேல் சிறு கீறல் விழவும் நான் சம்மதிக்க மாட்டேன் .ஒழுங்காக விலகிப் போய் விடு ” 

 

மிருதுளாவின் இந்த உரிமை பேச்சு மேலும் மதுராவின் ஆத்திரத்தை கூட்ட அவள் இன்னமும் ஆவேசத்தோடு மிருதுளாவின் கையை விலக்கிவிட்டு சுத்தியலை சுழற்றினாள் .சக்கரமாய் சுழலும் அந்த கனத்த சுத்தியலை சுற்றிய மதுராவின் கையின் இடையே  மிருதுளா தன் கையை விட , சுத்தியல் குறி மாறி மதுராவின் தலையையே தாக்கியது .உடனே மண்டை பிளந்து கடகடவென்று ரத்தம் கொட்ட  அவள் கீழே சரிந்தாள் .கலிவரதனும்மகிபாலனும்  பதறியபடி வந்து மதுராவை தூக்கியபோது அவள் இறந்து போயிருந்தாள் .மிருதுளா அருகிலேயே மயங்கி சரிந்து இருந்தாள்.

 

” நான் ..நானேதான்இதோ இந்த கைகளால் என் அக்காவை நானே கொன்று விட்டேன் ” மிருதுளா தன் கைகளால் முகத்தில் அறைந்து கொண்டு அழத் துவங்கினாள்.

 

” இல்லைடா குட்டி உன் அக்காவின் பொறாமையும் அதிகாரமும் ஆவேசமும் அவளுக்கு எமனாக அமைந்துவிட்டது ” மகிபாலன் அவளை சமாதானப்படுத்தினான்.

 

” நான் கொலை செய்திருக்கிறேன் அத்தான். போலீசில் சொல்லுங்கள் .சிறைக்கு அனுப்புங்கள் ” 

 

ஒரு மகளை கண்ணுக்கு எதிரேயே பறிகொடுத்து விட்டேன் . இப்போது உன்னையும் பறிகொடுக்க நான் தயாராக இல்லையடா குட்டி. நீ என் குடும்ப வாரிசுமகி என் தொழில் வாரிசு .நீங்கள் இருவரும் நீண்ட காலம் சந்தோசமாக வாழ வேண்டும்கலிவரதனும் , மகிபாலனும் வெகு நேரம் பலவிதமாக மிருதுளாவிடம் பேசி அவளை சமாதானம செய்து அழைத்து வந்தனர் .

 

அதன்பிறகு மாலதியிடம் தொடர்ந்து கவுன்சிலிங் எடுத்துக்கொண்டால் அவள். மனதிற்குள் கொதித்துக்கொண்டிருந்த பல்வேறு சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக  அவள் மனதை விட்டு மறையத் துவங்கின.

 

” அது எப்படி அத்தான் அக்காவை பற்றிய விஷயங்கள் மட்டும் எனக்கு மறந்து போனது ? ” மகிபாலனிடம் சந்தேகம் கேட்டாள்.

 

” நம் மனது வினோதமானது குட்டி. நமக்கு மிகவும் பிடிக்காத விஷயங்களை சில நேரங்களில் சுலபமாக மறந்து போகும் .அப்படித்தான் உனக்கு மதுரா என்னை காதலித்ததுநீ அவளை தாக்கியது இவையெல்லாம் பிடிக்காத விஷயங்கள் .அதனால் உன் மனது அதனை மறந்துவிட்டது .உனக்கு மறைத்துவிட்டது ” 

 

” மதுராவை தேடி அலையும் போது நீங்களாவது நடந்த நிகழ்ச்சிகளை எனக்கு நினைவு படுத்தி இருக்கலாமே ” 

 

” அதற்கு டாக்டரின் அனுமதி எங்களுக்கு இல்லை .ஏனென்றால் மறக்க விரும்பிய நிகழ்ச்சியை மனதிற்கு திரும்பவும் நினைவு படுத்தினால அது எந்த விளைவையும் ஏற்படுத்தக்கூடும் .அளவற்ற அதிர்ச்சி உன்னை கோமாவில் அழுத்தி விடக்கூடும் என்றாள் மாலதி .அதனால் உனக்கு நாங்கள் எந்த விஷயத்தையும் சொல்லவில்லை ” 

 

” தொடர்ந்து கவுன்சிலிங் கொடுத்து இந்த நினைவுகளை மறக்கடித்து உன்னை நார்மலாக மாற்றிவிடலாம் என்று மிகவும் முயற்சித்தோம் .ஆனால் நீ எங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்க வில்லை ” 

 

” மதுரா என்னை ஒத்துழைக்க விடவில்லை அத்தான் .அடிக்கடி வந்து என்னிடம் பேசிக்கொண்டு இருந்தாள் ” 

 

” போச்சுடா ” தலையில் கை வைத்துக் கொண்டான் ” இன்னமும் இந்த பிரமையை விடவில்லையா நீ ? ” 

 

” அது பிரமை இல்லை அத்தான் உண்மை .மதுரா வந்தாள் .அன்று அவள் போதையில் இருந்ததனால் அப்படி கொடூரமாக நடந்து கொண்டாள். பிறகு இறந்ததும் அவளுடைய தவறு தெரிந்து நடந்ததை எனக்கு உணர்த்தி என்னை சரி செய்வதற்காகவும்அவளுக்கு கெட்ட பெயர் வாங்கிக்கொடுத்ததோடு அன்று இரவு இறந்த மதுராவை நீங்கள் காரில் தூக்கி போனதை பார்த்து உங்களை மிரட்டிக் கொண்டிருந்த ஜான்பீட்டரை பழிவாங்குவதற்காகவும்தான் அடிக்கடி என் முன்னால் வந்திருக்கிறாள்.” 

 

சுவாரஸ்யமாக விளக்கிக் கொண்டிருந்த மிருதுளாவை வெறுத்துப்போய் பார்த்தான் மகிபாலன் ” உனக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு ட்ரீட்மெண்ட் எடுக்க வேண்டும் போலவே குட்டி ” 

 

” அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் .நான் சொல்வது உண்மைதாற் .அன்று நான் பாலத்தில் நடந்து வரும்போது மதுரா என் உடலில் புகுந்து கொண்டாள். அதனால் தான் ஜான் பீட்டரை நான் தண்ணீருக்குள் தூக்கி எறிந்தேன் .அன்று அவன் கண்களுக்கு மதுராதான் தெரிந்தாள் .அவன் பயந்து பேய் என்று அலறினானே   உங்களுக்கு நினைவிருக்கிறதா ? “

 

” நீ கட்டிக் கொண்டு வந்த சேலை மதுரா கட்டிய சேலையை போன்றே இருந்தது . எனக்கே அப்போது உன்னை பார்த்தால் பயமாக இருந்த்துஅதே  குழப்பம்தான் அவனுக்கும் . வேறு ஒன்றும் இல்லை ” 

 

” அந்த சேலையை மதுராதான் என்னை கட்ட சொன்னாள். நான் அங்கே கிளம்புவதற்கு முன்பு அவளுடைய சேலையை மாற்றிக் கொண்டு வந்தேன் ” 

 

” ஏய் அறிவாளி அது மதுராவுடைய சேலை கிடையாது .மதுரா அன்று கட்டியிருந்த சேலையோடு அவளுக்கு உரிய ஈமச் சடங்குகளை செய்து விட்டோம் .நான் எடுத்து வைத்திருந்தது உன்னுடைய சேலை .அதனை எரித்துவிட சொல்லி மாமா என்னிடம் கொடுத்தார் .ஏனோ எனக்கு மனம் வராமல் என்னுடைய பெட்டிக்குள் போட்டு வைத்திருந்தேன். நீ அன்று அதைத்தான் கட்டிககொண்டு வந்தாய் ” 

 

” இருக்கட்டுமே .அந்த சேலையை ஆசையாய் தேர்ந்தெடுத்தது மதுராதான் .அதில் அவளுடைய பங்கு நிறையவே இருக்கும் ” 

 

மகிபாலன் திருந்தவே மாட்டாயா நீ  என்ற பார்வை அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

” அன்று மதுராவுக்கு ஏன் அவ்வளவு ஆத்திரம் அத்தான் உங்களை கொலை செய்யும் அளவுக்கு …” மிருதுளாவின் உடல் இப்போதும் நடுங்கியது .மகிபாலன் அவளை ஆதரவாக அணைத்துக் கொண்டான்.

 

” அன்று மதுராவுக்கு உங்கள் மீது ஏன் அப்படி ஒரு கொலைவெறி வந்தது அத்தான் ? ” 

 

” ஏனென்றால் நான் அப்போதுதான் சற்று முன்பு  அவளிடம்  மிருதுளாவை விரும்புவதாகவும் திருமணம் செய்துகொண்டால் அவளைத்தான் செய்து கொள்வேன் என்றும் சொல்லியிருந்தேன் .அந்த ஆத்திரம் அவளுக்கு. அதுவரை நானே உன்னிடம் காதலை சொன்னதில்லை குட்டி .நேரடியாக சொல்வதில் எனக்கு மிகுந்த தயக்கம் .அப்போது இருந்த சூழ்நிலையில் நிச்சயம் நம் காதல் நிறைவேறி இருக்காது .அதனால் ஏதாவது சாதித்துக் காட்டி விட்டு உன் அப்பாவிடம் உன்னை பெண் கேட்க நினைத்திருந்தேன் .அத்தோடு உன் மனதிலும் நான் இருக்கிறேனா என்று தெரியாது .ஆனால் அன்று தெளிவாக உன் மனதை சொன்னாயேஅந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தேன் ” 

 

” உங்களிடம் அன்று சொன்ன காதலை கூட நான் மறந்துவிட்டேனே அத்தான் ” 

 

” அக்காவின் மரணத்திற்கு நீ காரணம் எனும் மன அழுத்தம் உனக்கு .அக்காவிற்கு பிடிக்காத ஒன்றை செய்யக்கூடாதென  நினைத்துக் கொண்டாய் .அதனால் என்னிடம் காதல் சொன்னதையும் மறந்து போனாய் ” 

 

மகிபாலனின் விளக்கத்தை மிருதுளாவின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. இல்லை அத்தான் அதனை எனக்கு நினைவுறுத்த மதுரா தயாராக இல்லை .அவளுடைய நோக்கம் நான் முதலில் ஜான்பீட்டரை கண்டுபிடித்து அவனை தண்டிப்பது .அதன்பிறகே நாம் ஒன்று சேர வேண்டும் என்று நினைத்தாள் .அதனை செய்துவிட்டு அவள் போய்விட்டாள் .இப்படி மிருதுளா தன் மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் .வெளியே சொல்லவில்லை .ஒவ்வொருவருக்கும் ஒரு ப்ரைவசி இருக்கும் .மதுராவின் விஷயம் எனக்கு பிரைவசி .அதனை நான் இனி யாரிடமும் பகிர்ந்து கொள்ளப் போவதில்லை மனதிற்குள் உறுதி செய்து கொண்டாள்.

 

இன்னமும் எவ்வளவு நேரம் வெட்டி கதை பேசி நேரத்தை வீணாக்குவாய் குட்டி  ? ” ஏக்கமாய் கேட்டபடி அவள் மேல் படர்ந்தான் மகிபாலன் .அளவில்லா காதலுடன் தன் அத்தானை  அணைத்துக் கொண்ட மிருதுளாவின் கண்கள் எதிர் சுவரில் மாட்டியிருந்த மதுராவின் போட்டோவில் நிலைத்தது.

 

அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே போட்டோ மதுரா குறும்பாக கண்களைச் சிமிட்டினாள் .கட்டை விரல் உயர்த்தி சக்சஸ் காட்டினாள் .பிறகு அந்த போட்டோவில் இருந்து புகையாக கரைந்து மறைந்து போனாள்.

 

மிருதுளா எல்லாவற்றையும் மறந்து தன் கணவனுடன் காதலில் கரையத் துவங்கினாள் .

 

– நிறைவு

 

 

 

 

 

 

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!