pacha malai poovu Serial Stories பச்சைமலை பூவு

பச்சை மலை பூவு – 28

28

” என் உலகம் இயல்பானதுதான் .உங்கள் உலகம்தான் அராஜகமானது. இதற்கெல்லாம் நான் சம்மதிக்க மாட்டேன் .உங்கள் உலகத்தில் இதுவெல்லாம் சகஜமாக இருக்கலாம். ஆனால் எங்கள் உலகம் வேறு .இங்கே மனிதாபிமானமும் மனிதமும் தான் பேசும் .உடல் திமிருக்கும் பணக் கொழுப்பிற்கும் இங்கே இடம் கிடையாது ” வாழ்க்கையை அதன் போக்கில் இயல்பாக வாழப் பழகு தேவயானி என்று அறிவுறுத்த வந்த ரிஷிதரனின் முகத்தில் அடித்தாற் போல் பேசி விட்டு வந்தாள் .

 அத்தோடு இனி மருதாணியின் விஷயத்திலிருந்து ரிஷிதரனை ஒதுங்கிக்கொள்ள சொல்லிவிட்டு வந்துவிட்டாள் .  என்ன பேச்சு பேசிவிட்டான் … பிறகும் வெகுநேரம் அவளது கொதிப்பு அடங்கவில்லை.




” மன அதிர்ச்சி குறைந்ததும் நிதானமாக யோசித்துப் பார் .முடிவைச் சொல் .ஆனால் அதிக நாட்கள் கடத்த வேண்டாம். சீக்கிரமே சொல் .” இப்படி அவளுக்கு போனில் மெசேஜ் அனுப்பி இருந்தான் ரிஷிதரன் .அதற்கு பதில் அனுப்பாமல் விட்டாள்.

” இன்னமும் எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி அழிச்சாட்டியம் செய்து கொண்டு இருக்கப் போகிறாய் ?  இது உனக்கு நல்லதல்ல என்று புரியவில்லையா  ? உன் அம்மாவை கொஞ்சம் நினைத்துப்பார் மருதாணி அவர்களுக்காகவாவது உனது பிடிவாதத்தை மாற்றிக்கொள்” 

எரிச்சலோடு பேசிய தேவயானியை அதைவிட அதிக எரிச்சலோடு பார்த்தாள் மருதாணி.

” இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள் அக்கா ? என்னையும் என் அம்மாவையும் இங்கிருந்து அனுப்பி விடுவீர்கள் …அவ்வளவுதானே ? செய்து கொள்ளுங்கள் .இங்கிருந்து வெளியேறினால் என்னை தாங்கிக் கொள்ள ஆள் இருக்கிறது ” 

தேவயானி மருதாணியின் திமிரை நம்பமுடியாமல் பார்த்தாள். ” கனவு உலகத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்காதே மருதாணி. ப்ளீஸ் கொஞ்சம் எதார்த்த வாழ்க்கைக்கு வா ” 

” உங்களைப்போல் நான் முட்டாள் இல்லை அக்கா ” 

” நான் முட்டாளா ?  என்ன உளறுகிறாய் ? ” 

” பெரிய பணக்காரரான ரிஷிதரன் அண்ணாவை விட்டுவிட்டு உங்கள் வீட்டில் சொல்கிறார்கள் என்று அந்த யுவராஜிற்கு தலையசைத்தவர் தானே நீங்கள்  ? ” 




” மருதாணி யோசித்து பேசு .கண்டபடி வார்த்தைகளை இறைக்காதே .பணம் வைத்திருக்கும் ஆண்கள் எல்லோருமே நல்லவர்கள் கிடையாது. என் வாழ்க்கை எனக்கு தெரியும். நீ சிறுபிள்ளை .இதைப்பற்றி எல்லாம் பேசாதே ” 




” அது போல் என் வாழ்க்கை எனக்கு. இதில் நீங்கள் தலையிட வேண்டாம் ”  முகத்தில் அடித்தாற் போல் பேசினாள். தேவயானி மிகவும் சோர்ந்தாள் . தளர்ந்து கீழே கிடந்த பாறை மேல் அமர்ந்து விட்டாள்.

” உங்களைப்போல் எல்லாவற்றிற்கும் 

தலையாட்டி அடிமை வாழ்வு வாழ்வேன் என்று மட்டும் என்னை நினைக்காதீர்கள் அக்கா. நான் என் மனம் சொல்கிறபடி கேட்பவள். சீரும் சிறப்புமாக பெரிய பணக்காரியாக வாழ இருப்பவள் ” தலையை உயர்த்திக்கொண்டு கர்வமாக அறிவித்தாள் மருதாணி.

” பெற்றவர்கள் பேச்சை கேட்பது அடிமைத்தனம் இல்லை மருதாணி. நமக்கு தீங்கு எதுவும் அவர்கள் செய்துவிடப் போவதில்லை .மனது சொல்படி கேட்பவன் பலவீனமானவன். மூளை வழி யோசித்து நடப்பவன் புத்திசாலி ” 

” நீங்கள் புத்திசாலி என்று சொல்கிறீர்களா  ? உங்கள் அம்மாவும் அண்ணாவும் கண்ணெதிரே பெரிய பணக்காரனாக ரிஷிதரன் அண்ணா இருக்கும்போது உங்கள் திருமணத்தை அந்த யுவராஜ் உடன் முடிவு செய்கிறார்களே… அதற்கு நீங்களும் ஒத்துப் போகிறீர்களே… இதில் தவறு இல்லையா ? புத்திசாலித்தனம் எங்கே இருக்கிறது ?” 

மருதாணியின் சிறுபிள்ளை தனத்தை என்ன செய்வதென்று தேவயானிக்கு தெரியவில்லை. அப்பாவி இவள்… பரிதாபம் வந்தது அவளுக்கு. நின்று கொண்டிருந்த மருதாணியை ஆதரவாக இழுத்து தன் அருகே அமர வைத்துக்கொண்டாள்.

” பெரிய பணக்காரன் என்பது மட்டுமே ஒருவனை திருமணம் செய்வதற்கு உரிய தகுதிகளா  மருதாணி ? ” மென்மையாகக் கேட்டாள் .அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டாள்.

” வேறு என்ன வேண்டும் ? வளமான வாழ்க்கைக்கு பணம் தானே வேண்டும் ? ” 

” நம் மனதிற்கு பிடித்தவனாக நம் எதிர்காலத்தை காப்பவனாக இருப்பதுதான் நாம் திருமணம் செய்துகொள்ள இருப்பவனுடைய முக்கிய தகுதி மருதாணி ” 

” ராஜேந்தரை எனக்கு பிடித்திருக்கிறது .அவன் பெரிய பணக்காரன் என்பதால் எனக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லை .அப்படியென்றால் என்னுடைய தேர்வு சரிதானே ? ” 

‘ராஜேந்தர் ‘ அவனுடைய பெயர் தெரிந்து விட்டது தேவயானி தனது பிரகாச முகத்தை மறைத்துக் கொண்டாள் .பெருமூச்சு விட்டாள் . ” நீ ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி சுற்றி வருகிறாய்  மருதாணி. அதை விட்டு  வந்து வெளி உலகத்தை பார்த்தால் தான் உனக்கு புரியும் ” 

” பதில் சொல்ல முடியவில்லை என்றால் இப்படி புரியாதது போல் ஏதாவது பேசி விடுங்கள் ” மருதாணி அலுத்தாள்.




” சரி உன் விஷயத்திற்கு வருகிறேன். உன்னுடைய நிலையை அந்த  ராஜேந்தரிடம் சொல்லி விட்டாயா ? ” 

” அவன் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் ? ” மருதாணியின் முகத்தில் சந்தேகம் வந்தது.

” இப்போதுதான் நீயே சொன்னாயே ? ” 

” அய்யய்யோ சொல்லி விட்டேனா ? ” வாயை கையால் பொத்தினாள்.

” பெயரைக் கூட சொல்லக் கூடாது என்று ஏன் அவ்வளவு கட்டுப்பாடு மருதாணி ? ” 

” அது… அவன் பெரிய இடத்துப் பையன். அவனது பெயர் வெளியே தெரிந்து விடக் கூடாது என்றுதான் ” 

” இது நம்பும்படியாக இருக்கிறதா ?  நீயே யோசித்துப் பார் .காதல் மறைக்கக் கூடியது அல்ல .அதுவும் உங்களுடைய இதைப்போன்ற சுதந்திரமான காதல் மறைத்து வைக்க கூடியதே கிடையாது .அவனைப்பற்றிய நீ கூறிய

தகவல்கள் எல்லாவற்றையும் உறுதிப்படுத்திக் கொண்டாயா ? ” 

”  எந்த தகவல்களை கேட்கிறீர்கள் அக்கா ? ” 

” அதுதான் இந்த  பெரிய இடத்து பையன் …பணக்காரன்… உன்னை மட்டுமே காதலிப்பவன்… இவற்றையெல்லாம் ” 

” கார்கள்  , போன்கள்  ,உடைகள்  , இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தாலே அவனுடைய பணம் பற்றி தெரியாதா ? இதுவரை எத்தனை காரில் வந்திருக்கிறான் தெரியுமா ?  எத்தனை போன்கள் வைத்திருக்கிறான் தெரியுமா ? எனக்கு கூட எவ்வளவு விலை உயர்ந்த போன் வாங்கித் தந்திருக்கிறான் பார்த்தீர்களா ? ” பெருமிதம் பொங்கி வழிந்தது மருதாணியின் குரலில்.

” சரிதான் .ஆனால் இதுவெல்லாம் அவனுடையவைகள்தானா ? அது உனக்கு உறுதியாக தெரியுமா ? ” 

” அவன் உபயோகித்தால் …அவனிடம் இருந்தால் …அந்தப் பொருள்கள் அவனுக்குரியது தானே அக்கா  ? அர்த்தமில்லாத கேள்வி கேட்கிறீர்களே ?

” முட்டாள்… இவற்றை அவன் வேறொருவரிடம் இருந்து கடனாக வாங்கி வந்திருக்கலாம் இல்லையா ? ” 

மருதாணி ஒரு நிமிடம் திகைத்தாள் .பின்பு உறுதியாக தலையசைத்தாள் ” இல்லை அக்கா. அப்படி எல்லாம் இல்லை .நீங்கள் என்னை குழப்ப பார்க்கிறீர்கள் .இவை எல்லாமே அவனுடையவைகள்தான் ” 




” சரி இருக்கட்டும் .அவன் என்ன படிக்கிறான் ? எந்த காலேஜில் படிக்கிறான் ? ” 

” அவன் சாதாரண படிப்பு படிக்கவில்லை அக்கா ….” உற்சாகம் பொங்க ஆரம்பித்த மருதாணி சட்டென்று தன் கையால் வாயைப் பொத்திக் கொண்டாள்.”  நான் சொல்ல மாட்டேன் ”  பொத்திய கைக்குள் இதழ் அசைத்து அமுங்கிய குரலில் சொன்னபடி எழுந்து போய்விட்டாள்.

அவன் சாதாரண படிப்பு படிக்கவில்லை …இதற்கு என்ன அர்த்தம் …தேவயானி யோசித்தபடி அமர்ந்திருந்தாள் .அப்படி எந்தப் படிப்பை அவன் படிக்கிறான் …தேவயானி மனதிற்குள் படிப்புகளை அலச ஆரம்பித்தாள்.

” என்ன மகாராணி எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போடுகிறீர்கள் ? ” என்று கேட்டபடி அவள் முன் வந்து அமர்ந்தான் யுவராஜ்.

” ஒன்றுமில்லை ” எரிச்சலோடு எழப் போன தேவயானியை கையசைத்து அமர சொன்னான் .” உன்னிடம் பேச வேண்டும் ” 

” என்ன விஷயம் ? எனக்கு உள்ளே கொஞ்சம் வேலை இருக்கிறது ” 

” இவ்வளவு நேரமாக அந்த குட்டியிடம் பேச நேரம் இருந்தது இல்லையா ? எனக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்கு ”  அதிகாரமாக வந்தது யுவராஜின் குரல்.

” அவளைப் பெயர் சொல்லி கூப்பிடுங்கள் ” சீறினாள் தேவயானி.

” செய்யும் வேலைகள் வயதிற்கும் உருவத்திற்கும் சம்பந்தம் கிடையாது .பெயரிலாவது குட்டி என்று சொல்லலாம்  என்று நினைத்தேன் ” இப்போது நக்கல்.

” ப்ச்… உங்களுக்கு என்ன வேண்டும்  யுவராஜ் ? ” தேவயானி சட்டென்று அவனை கத்தரித்து விட்டு எழுந்து செல்லும் அவசரத்தோடு கேட்டாள் .

” அந்த விஷயத்தை பற்றி அவன் என்ன சொன்னான் ? ” 

” எதைப்பற்றி கேட்கிறீர்கள் ? ” 

” ப்ச் புரியாத மாதிரி பேசாதே தேவயானி .மருதாணியுடன் தப்பாக பழகி வருகிறானே அதைப்பற்றி என்ன சொன்னான் ? ” 

தேவயானி வந்த கோபத்தை பற்களை கடித்து அடக்கினாள்.”  இப்படித்தான் என்று தெளிவாக தெரிந்தவர் போல் ஏன் பேசுகிறீர்கள் ? ” 

” வேறு மாதிரி நடப்பதற்கு சந்தர்ப்பமே கிடையாதே. நான் நூறு சதவிகிதம் அடித்துச் சொல்கிறேன் அந்த ரிஷிதரன்தான் இவளை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் .நாம் உடனடி நடவடிக்கையில் இறங்கி அவனை இந்த ஏரியாவை விட்டே மிரட்டி அனுப்பி விடவேண்டும் .இல்லாவிட்டால் பாவம் இந்த சின்ன பெண்ணை சிதைத்து விடுவான் ” 







” போதும் வாயை மூடுங்கள் .கண்டபடி மனம் போன போக்கில் பேசி கொண்டே இருக்காதீர்கள் ” 

ஏறத்தாழ கத்தலாக ஒலித்த அவளது குரலை கவனித்தான் ” ரிஷிதரன் உன்னிடம் என்ன சொன்னான் ? ”  .மீண்டும் குரலில் அதிகாரம் கொடி கட்டியது .

” ரிஷிதரன்தான் இங்கே இல்லையே .கட்டாயப்படுத்தி இங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டு விட்டாரே. பிறகு அவருடன் நான் எப்படி பேச முடியும் ? ” தைரியமாக தலைநிமிர்ந்து தேவயானி இதனை கேட்டாள்.

யுவராஜ் அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் ”  நீ அவனுடன் பேசவில்லை ? ” 

” இல்லையே …” தேவயானி கைவிரித்து மறுத்துக் கொண்டிருக்கும் போதே அவளது போன் ஒலித்தது .ரிஷிதரன் அழைப்பதாக போனின் திரை சொன்னது. அதை பார்த்த யுவராஜின் முகத்தில் இகழ்ச்சி பரவியது.

” அவனுடன் நீ பேசவே இல்லை ?  ” மீண்டும் கேட்டான்.

”  கார் ரிப்பேர் என்று அன்று உதவி கேட்டார் .பஸ் ஸ்டாப் விபரம் சொன்னேன் .மற்றபடி அவரிடம் நான் பேசவில்லை ” சொன்னபடி

தேவயானி போனின் அழைப்பை கட் செய்தாள்.

” ஏன் பேசவில்லை ? நான்தான் மருதாணி விஷயத்தில் அவன் தான் குற்றவாளி என்று உனக்கு தெளிவாக சொல்லி இருந்தேனே .நீ அவனிடம் அது விபரம் பேசி இருக்க வேண்டியதுதானே ? ” 

யுவராஜின் நோக்கம் தேவயானிக்கு இப்போது புரிந்தது .இப்படி ஒரு குற்றச்சாட்டுடன் ரிஷிதரனை சந்தித்து பேசி எங்கள் இருவருக்குள்ளும்  சண்டை வந்து அது பகையாக வளர வேண்டும் என்று இவன் நினைக்கிறான் என உணர்ந்து கொண்டாள்.

” ரிஷிதரன் நம் குடிலில் தங்கி இருக்கும் வரை தான் நம்முடைய வாடிக்கையாளர் . அப்போது அவரைப் பற்றி …அவர் உடல்நிலை பற்றி எனக்கு கவலை இருந்தது.இங்கிருந்து சென்ற பிறகு அவரைப் பற்றிய கவலை எனக்கு கிடையாது .அவரை நான் சந்திக்க விரும்பவில்லை ” அழுத்தமாக யுவராஜின் மண்டையில் உறைக்கும்படி பேசினாள்.




” ஆக நீ இனிமேல் ரிஷிதரனை சந்திக்கவே போவதில்லை .அப்படித்தானே ? ” உறுதிசெய்து கொள்ளும் தொனியில் ஒலித்தது யுவராஜின் குரல்.

” ஆமாம் அப்படித்தான் ” சொல்லிவிட்டு எழுந்துகொள்ள போனவளை மீண்டும் தடுத்தான் .” அவனாக உன்னை சந்தித்தால்…? ” 

” என்ன…? ” 

” உங்கள் பசுமைக்குடிலிற்கு வந்து அவனே உன்னை சந்தித்தால் என்ன செய்வாய் என்று கேட்டேன் ? ” 

” இல்லை அவர் அப்படி வர மாட்டார் ” 

” எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய் ? ” 

” அவர் எனக்கு வாக்கு கொடுத்திருக்கிறார்  ” படபடப்பாய் சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

” நிச்சயமாக… அவன் இங்கே வரமாட்டானா ? ” 

” ஆமாம்  ” உறுதியோடு சொன்ன தேவயானியின் மனதிலும் அந்த உறுதிக்கு மாற்று இல்லை.

” அப்படி அவர் இங்கே வரவே கூடாது என்று ஏன் நினைக்கிறீர்கள் ? ” தான் கொடுத்த உறுதியில் தாமரை மலர்ந்து நின்ற யுவராஜின் முகத்தை கூர்ந்து பார்த்தபடி கேட்டாள் தேவயானி.

” அது …வந்து… சும்மா …அவன் ஒரு ஒழுக்கம் கெட்டவன் .இதோ இந்த மருதாணியை கூட ஏதோ செய்து விட்டான் .இனி அவனிடமிருந்து இந்த குட்டியை காப்பாற்றி விடலாமே….அதனால்தான்  ” ஏதேதோ சமாதானங்களை சொல்லத் தொடங்கிய அவனின் முகத்தை வெறுப்பாக பார்த்தாள் தேவயானி.

” அவர் நியாயமானவர் …சொன்ன சொல்லை காப்பாற்றுபவர் …” தேவயானி ரிஷிதரனின் குணநலன்களை எடுத்து சொல்லச் சொல்ல யுவராஜின் முகம் பேய் அறைந்தது போல் மாறிக்கொண்டிருந்தது.

இரண்டு வார்த்தை ரிஷிதரனைப் பற்றி புகழ்ந்து பேசினால் இவனுக்கு எப்படி வலிக்கிறது …என்று நினைத்தபடி ” எனக்கு பின்னால் பேய் எதுவும் வந்து கொண்டிருக்கிறதா யுவராஜ் ? ”  கிண்டலாக கேட்டாள் தேவயானி.

” பேய் இல்லை பிசாசு .மனிதர்களை விழுங்கும் அரக்கன் வந்து கொண்டிருக்கிறான் ” நிலை குத்திய விழிகளுடன் யுவராஜ் சொல்ல தேவயானி சட்டென திரும்பிப் பார்த்தாள் .அதோ அங்கே காரை நிறுத்திவிட்டு இறங்கி கொண்டிருப்பது யார் …? கண்களை தேய்த்துவிட்டுக் கொண்டாள் .லேசாக தன் கையையே கிள்ளியும் விட்டுக்கொண்டாள்.

என்னென்ன சோதனைகள் செய்துகொண்டாலும் , அவள் கண்கள் வந்து கொண்டிருப்பது ரிஷிதரன்தான் என்று ஐயமின்றி அவளுக்கு அறிவித்தன.

இவனுக்கு எவ்வளவு தைரியம் ? நான் அவ்வளவு தூரம் சொன்ன பிறகும் இங்கேயே  வந்து நிற்கிறான் ? தேவயானியின் மனம் கொதித்தது .

ரிஷிதரன் காருக்கு ரிமோட்டை அழுத்திவிட்டு குளிர் காற்று அலைக்கழித்த தனது சிகையை கோதி சரி செய்ய முயன்றபடி இவர்களை நோக்கி நடந்து வரத் துவங்கினான் .




இங்கேயா வருகிறான் …. ? வரட்டும் நாக்கைப் பிடுங்கிக் கொள்கிற மாதிரி கேள்வி கேட்டு அப்படியே திருப்பி அனுப்புகிறேன்… தேவயானி கோபத்தோடு அவனை  முறைத்து பார்த்தபடி இருக்க ,  ரிஷிதரனின் நடை அவர்களை நோக்கி இருந்ததே தவிர , அவன் பார்வை வேறு எங்கோ இருந்தது .கண்முன்னால் ஒரு பாறையில் அருகருகே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இவர்கள் இருவரையும் அவன் கவனிக்கவில்லையாம். அப்படித்தான்  அவன் உடல்மொழி சொல்லியது.

” வாக்கு கொடுத்தானா உனக்கு ? இப்போது என்ன சொல்கிறாய்  ? இனியாவது இவனுடைய ஒழுங்கீனங்களை புரிந்து கொள்வாய்தானே ? ” அருகில் இருந்து தொண தொணத்துக் கொண்டிருந்த யுவராஜின் வாயை மூடுவதற்கு ஓங்கி ஒரு அறை கொடுத்தால் என்ன எனும் எரிச்சல் தேவயானிக்கு வந்தது.

மிகச்சரியாக இவர்கள் இருக்கும் இடத்தை நோக்கியே நடந்துவந்த ரிஷிதரன் இவர்களுக்கு அருகே வரும்போது சட்டென தன்  திசையை மாற்றி  மிக அருகாமையில் இவர்களை கடந்து நடந்தான் .கடக்கும் சில நொடியில் ஓரக்கண்ணால் இவர்களைப் பார்த்து…

” ஹாய் யுவராஜ் எப்படி இருக்கிறீர்கள் ?  புது தொழில் ஆரம்பிக்கும் உற்சாகம் போல  , கொஞ்சம் உடம்பு மெருகேறி சதை போட்டு விட்டீர்களோ ?  லேசாக தொப்பை தெரிகிறது பாருங்கள் ”  சொல்லிவிட்டு நடந்து விட்டான்.

” என்னது  ? ” யுவராஜ் படபடப்பாக எழுந்து நின்றான் .குனிந்து தன் உடலை ஆராய்ந்தான். ஆராய்ச்சியின் முடிவு அவனுக்கு பாதகமாக இருக்க , இருகைகளாலும் தனது வயிற்றுப்பகுதியை அழுத்திக்கொண்டு கீழ் கண்ணால் தேவயானியை பார்த்தான் .அவள் ரிஷிதரனின் முதுகை பார்த்துக் கொண்டிருந்தாள். ஆசுவாசப் பெருமூச்சு விட்டுக்கொண்டு இன் செய்து இருந்த தனது சட்டையை பேண்டில் இருந்து வெளியே எடுத்து விட்டுக்கொண்டான்.

தேவயானி எழுந்து நின்று கொஞ்சம் பதட்டமாக பார்க்க , அவள் பார்வை வழி பார்த்தவன் ” என்ன இது  ? ” அலறினான்.

” இவன் இப்படி எல்லோரும் பார்க்க அராஜகம் செய்து கொண்டிருக்கிறானே ?  இவனை கேட்பதற்கு ஆள் இல்லையா ? ” கத்தினான்




அங்கே ரிஷிதரன் மருதானியின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தான் .அவனது நோக்கம் மருதாணியை சந்திப்பதாக இருந்தது.

” எப்பேர்பட்ட அயோக்கியன் இவன் ? நாம் எல்லோரும் இருக்கும்போதே அந்த குட்டியை அவள் வீட்டிற்குள்ளேயே போய் தனியாக சந்திக்க நினைக்கிறானே ? இதெல்லாம் எவ்வளவு பெரிய அநியாயம்  ? ” யுவராஜ் கத்திக் கொண்டிருக்க தேவயானி ரிஷிதரனை தடுக்கும் நோக்கத்துடன் அவனை நோக்கி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

” அவனை வீட்டிற்குள் நுழைய விடாதே தேவையானி .சீக்கிரம் இங்கிருந்து விரட்டு  ” கத்தலாகவே அவளுக்கு ஆலோசனைகள் சொல்லிவிட்டு யுவராஜ் தேவயானியின் வீட்டை நோக்கி நடந்தான்.

மருதாணியை தானே நேரில் பேசும் எண்ணம் ரிஷிதரனுக்கு இருப்பது தேவயானிக்கு தெரியும் .இதைப்பற்றி மருதாணியிடம் சொன்னபோது அவள் தீவிரமாக மறுத்திருந்தாள் .”  வேண்டாம் அக்கா .நான் இப்போது இருக்கும் நிலைமையோடு ரிஷிதரன் அண்ணாவின் முன்னால் நிற்க விரும்பவில்லை ”  கூசியபடி பேசிய மருதாணியின் மனதினை ஒரு பெண்ணாக உணர்ந்து கொண்டு அவர்கள் இருவரின் சந்திப்பினை தவிர்த்திருந்தாள் தேவயானி .ஆனால் இவனோ இப்போது…

சொல்வதைக் கேட்பதே கிடையாது …கண்டதே காட்சி கொண்டதே கோலம் இவனுக்கு…அசுரா … மகிசாசுரா… ரிஷிதரனை மனதிற்குள் கரித்துக் கொட்டியபடி ,வேகநடையுடன்  போய் அவனை தடுத்து நிறுத்தும் முன் அவன் மருதானியின் வீட்டுக்கதவை தட்டி திறந்ததும் உள்ளே நுழைந்து விட்டான்.

கிட்டத்தட்ட ஓடி கதவைத் தள்ளித் திறந்து உள்ளே நுழையும் முன் ஒருவேளை ரிஷிதரன் மருதாணியிடம் பேசி அந்த ராஜேந்திரனின் விவரங்களை வாங்கி விடுவானோ… என்று சிறிது தயங்கினாள் தேவயானி .ஆனால் கடந்த சில நாட்களாக மருதாணி தன்னிடம் நடந்துகொண்ட சில மரியாதைக் குறைவான நேரங்கள் நினைவிற்கு வர,  இல்லை அப்படி நடந்துவிடக்கூடாது என்ற படபடப்போடு ” மருதாணி ” என்ற மெல்லிய அழைப்புடன் கதவை தள்ளி திறந்து உள்ளே நுழைந்தாள் .

உள்ளே மருதாணி தரையில் விரித்திருந்த கோரைப் பாயில் உட்கார்ந்து முகத்தை மூடியபடி  விசும்பி கொண்டிருந்தாள் .அவள் எதிரே ரிஷிதரன் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு அவளைப் பார்த்தபடி நின்றிருந்தான் .

” இது அழுகிற நேரமில்லை மருதாணி .கண்ணீரைத் துடைத்து நிமிர்ந்து உட்கார் ” அதட்டலாக பேசினான் .

” என்னிடம் எதையும் கேட்காதீர்கள் அண்ணா. என்னால் பதில் சொல்ல முடியாது .நான் பேசமாட்டேன் .தயவுசெய்து இங்கிருந்து போய் விடுங்கள்  ” அழுகையோடு பேசினாள் மருதாணி.

” உன்னிடம் நான் எதுவுமே கேட்கவில்லையே .நீ எனக்கு எந்த விளக்கமும் கொடுக்கவும்  வேண்டாம் .முதலில் முகத்தை மூடாமல் நிமிர்ந்து உட்கார் ” 




சட்டென முகத்தைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்த மருதாணியை ஆச்சரியமாக பார்த்தாள் தேவயானி .இப்படி சொல்பேச்சு கேட்கும் பிள்ளையாக கடந்த சில தினங்களாக தேவயானியிடம் நடந்து கொள்ளவில்லை அவள்.

” நீ எனக்கு எந்த விளக்கங்களும் கொடுக்க வேண்டாம் .எந்த விபரங்களும் சொல்ல வேண்டாம் .நான் உன்னிடம் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் .அதை மட்டும் ப்ளீஸ் செய்துவிடு ” ரிஷிதரனின் குரல் தயவாக ஒலித்தது.

இவன் இப்படி கெஞ்சுதலான குரலில் பேசுவானா ? ரிஷிதரனை ஆச்சரியமாக பார்த்தாள் தேவயானி .எதற்காக இப்படி கெஞ்சிக் கொண்டு இருக்கிறான் ? 

” என்ன செய்ய வேண்டும் அண்ணா  ? ” மருதாணி பயத்துடனேயே கேட்டாள்

” உன்னுடைய பள்ளிக்கூடம் தவிர்த்து நீ வேறு எங்காவது வெளி இடத்திற்கு செல்லும்படி சூழ்நிலை வந்தால் தயவுசெய்து அதனை தெரிவித்து விட்டு போ .உன்னுடைய போனிலிருந்து அந்த லொகேஷனை இவர்களுக்கு கண்டிப்பாக ஷேர் செய்து விடு .” அருகே நின்று கொண்டிருந்த தேவயானியின் பக்கம் கையசைத்து காட்டினான்.

மருதாணி சம்மதமாக தலையசைத்தாள் ” சரிதான் அண்ணா .செய்கிறேன் ” 

” பிராமிஸ் ? ”  ரிஷிதரன் கையை நீட்ட மருதாணி அவன் கை மேல் தன் கையை வைத்தாள் . ” ப்ராமிஸ் ” 

அந்த நேரத்தில் வீட்டுக்கதவு சடாரென தள்ளப்பட வெளியே சுந்தரேசன் நின்றிருந்தான் .அவனுக்கு பின்னால் யுவராஜ் .மாட்டிக் கொண்டீர்களா என்ற எகத்தாளம் யுவராஜின் கண்களில் மின்னியது.




What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!