kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 4

4

 

” ஏன் இந்த அக்கா போனை எடுக்கவே மாட்டேனென்கிறாள் ? ”  சலித்தபடி படியிறங்கி கீழே வந்தாள் மிருதுளா.

 

” குட்டி சாப்பிட வாடா ” மாரீஸ்வரியின்  குரல் டைனிங் ரூமிலிருந்து கேட்க மீண்டும் மதுராவுக்கு போனை முயற்சித்தபடி சாப்பாட்டு அறைக்கு நடந்தாள். இப்போதும் போன் முழுவதும் ரிங் போய் நிற்க எரிச்சலுடன் அதை அணைத்தபடி நிமிர்ந்தவளின் உடலில் மின்னல் ஓடியது.

 

அங்கே சாப்பாட்டு அறையில் கலிவரதனுடன் மகிபாலனும்  அமர்ந்திருந்தான் .இருவருமாக சன்ன குரலில் ஏதோ பேசியபடி இருந்தனர் .இப்போது மகிபாலனின் பார்வை படாமலேயே மிருதுளாவினுள்  மின்னல் ஓடியது. சிலிர்த்து  நிமிர்ந்து நின்ற தன் கை ரோமங்களை தடவி விட்டபடி அவன் எதிரில் நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தாள் மிருதுளா.

 




கலிவரதனும்  மகிபாலனும்  சேர்ந்து பேசிக்கொண்டிருந்த வியாபார விஷயங்கள் அவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன .கிட்டத்தட்ட தன்னுடைய அனைத்து தொழிலையும் மகிபாலனிடம் தந்தை ஒப்படைத்து விட்டார் போலிருந்த வியாபார பேச்சிற்கு மிருதுளாவிற்கு ஆச்சரியம் வந்தது.

 

மகிபாலன் இப்போது தங்கள் வீட்டில் தான் தங்கி இருக்கிறான் என்ற செய்தியே அவளுக்கு நம்ப முடியாததாக இருந்தது.

முதல் நாள் அவளுடைய அறையைத் தாண்டி இருந்த தனது அறைக்கு  மகிபாலன் போய்க் கொண்டிருந்த போதுதான்  அவளுடைய சத்தத்தைக் கேட்டு உள்ளே வந்ததாக சொல்லியிருந்தான் .

அப்போதுதான் அவன் தங்கள் வீட்டிலேயே தங்கி இருப்பது மிருதுளாவிற்கு தெரியவந்தது.

 இப்போது தந்தையின் தொழிலிலும் அவனுக்கு  பெரும் பங்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

 

” ஹாய் அத்தான் ” மாடியிலிருந்து கீழே தோட்டத்தில் நின்று கொண்டிருந்த மகிபாலனை பார்த்து கைகளை அசைத்தாள் மிருதுளா .அண்ணாந்து பார்த்த அவன் மெல்ல தலையசைத்தான்.

 

” அப்பாவை பார்க்க வந்தீர்களாஅவர் பூஜையில் இருக்கிறார் .வாருங்கள் வந்து உள்ளே உட்காருங்கள் ” அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் இழுத்து வந்தாள்.

 

” உன் படிப்பெல்லாம் எப்படி போகிறது  மிருது ? ” விசாரித்தபடி உடன் வந்தான் மகிபாலன்.

 

” போகிறது ஏதோஉங்களைப்போல் மாநிலத்தில் முதலாவது என்று பேப்பரில் போட்டோ எல்லாம் எதிர்பார்க்க முடியாது .ஆனால் கண்டிப்பாக பாஸ் செய்து விடுவேன் ” 

 

” பள்ளி இறுதித் தேர்வு .இதில் நல்ல மதிப்பெண் வாங்கினால்தான் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும் .கொஞ்சம் கவனமாக படி குட்டி ” 

 

” ஐயோ அத்தான் நீங்களுமாவேண்டாம் .ஏற்கெனவே இங்கே வீட்டில் அக்கா அம்மா அப்பா இவர்களோடு கண்ணில் தென் படுபவர்கள் எல்லோருமே என்னைப் பார்த்தவுடன் சொல்வது படி படி படி .நீங்களும் அவர்களோடு சேர்ந்து கொள்ளாதீர்கள் ப்ளீஸ் ” 

 

மகிபாலன் மலர்ந்து சிரித்தான்.”  உன் நன்மைக்காகத்தானே குட்டி எல்லோரும் அப்படி சொல்கிறார்கள் ? ” 

 

” ஐயோ போதும் அத்தான் .நான் எப்போதும் ஆவரேஜ் ஸ்டூடன்ட் தான் அப்படியே இருந்துவிட்டு போகிறேன் .ஏதாவது கிடைக்கும் டிகிரியை படித்துக் கொள்கிறேன். உங்களைப்போல பெரிதான கொள்கை எதுவும் எனக்கு கிடையாது ” 

 

” உனக்கு கொழுப்புடி கவனித்து மூளையைச் செலுத்தி படிப்பதில் சோம்பேறித்தனம் .அதனால் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறாய் ” அதட்டிய படி வந்தாள மதுரா.

 

” போச்சுடா அறுவை ஆரம்பித்துவிட்டது .” மிருதுளா தலையில் கை வைக்க மதுரா மகிபாலனை பார்த்தாள்.”  வாங்க அத்தான் எப்படி இருக்கிறீர்கள் ,? அப்பாவை பார்க்க வந்தீர்களா ? ‘ 

” இல்லை மது உங்கள் எல்லோரையும் பார்க்கத்தான் வந்தேன் ” 

 

” என்ன விஷயம் அத்தான் ,? ”  மதுராவை முந்திக்கொண்டு துள்ளலாக கேட்டாள் மிருதுளா.

 

சும்மா இருடி .நான்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன் தானே ” தங்கையை அதட்டிவிட்டு திரும்பினாள் மதுரா . ” சொல்லுங்கள் அத்தான் ” 

 

” மாஸ்டர் டிகிரி படிக்க எனக்கு பெங்களூர் ஐஐடியில் இடம் கிடைத்திருக்கிறது ” மகிபாலனின் முகத்தில் சூரியன்கள்.

 

” வாவ் கங்கிராட்ஸ் அத்தான் ” மதுரா அவன் வலதுகையை பற்றி வாழ்த்துச் சொல்ல மிருதுளா அவன் இடது கையை பிடித்துக்கொண்டு குதித்தாள்.

 

” சூப்பர் வாழ்த்துக்கள் அத்தான் ” 

 

” உங்கள் ஆசை நிறைவேறிவிட்டது .இதுபோல் நீங்கள் வாழ்வில் முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும் ” கண்கள் கனிய அத்தை மகனுக்கு வாழ்த்துச் சொன்னாள் மதுரா.

 

” மதுரா மிருதுளா என்ன செய்கிறீர்கள்நடுவீட்டில் நின்றுகொண்டு இது என்னஏன்பா மகிபாலா அவர்கள்தான் சிறுபிள்ளைகள். அவர்களுக்கு விவரம் தெரியாது .ஆறடி வளர்ந்து அசுரன் போல் இருக்கிறாய் .உனக்குமா புரியாதுநாலுபேர் வந்துபோக இருக்குமிடம் எங்கள் வீடு .இங்கே நடு ஹாலில் வைத்துக்கொண்டு இப்படியா பெண்பிள்ளைகள் கையை பிடித்துக்கொண்டு கூத்தடித்து கொண்டு இருப்பாய் ? ” கணீரென்ற குரலில் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு கத்தலாய் கேட்டாள் மாரீஸ்வரி.

 

மகிபாலன் சட்டென தன் கைகளை பற்றிக் கொண்டிருந்த மாமன் மகள்களை உதறினான் ” சாரி அத்தை எனக்கு கல்லூரியில் படிக்க…”

 

” போதும் திரும்பத் திரும்ப உன்னுடைய படிப்பு கதையை சொல்லி எரிச்சல் மூட்டாதே .போன வருடமே உன் படிப்பு முடிந்துவிட்டது தானேஇப்போது திரும்பவும் என்ன ? ” 

 

” அம்மா அத்தான் அவருடைய மேற்படிப்பை பற்றி சொல்ல வந்திருக்கிறார் ” மதுரா தாயிடம் விளக்க முயன்றாள் .

 

”  இன்னும் சார் மேலே வேறு படிக்க போகிறாராசரிதான் பணம் கட்ட இங்கே மாமன் என்று ஒருவர் இருக்கும்போது படித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதானே .சொல்லுப்பா இப்போது உனக்கு எவ்வளவு பணம் கட்ட வேண்டும் ? ” 

 

மகிபாலனின்முகம் இறுக்கமானது .இறுகிய அவன் உதடுகளுக்குள் பற்கள் நெறி படுவதை உணர முடிந்தது .” எனக்கு பணம் எதுவும் தேவை இல்லை அத்தை .சும்மா உங்கள் எல்லோரையும் பார்த்து விட்டு போகலாம் என்று வந்தேன் ” 

 

” உனக்கு இனி தேவை எதுவும் இருந்தால் உன் மாமாவை ஆபிசில் போய் பார்த்துக்கொள் .இங்கே வீட்டிற்கு வரவேண்டாம் ” உத்தரவை சொன்ன மாரீஸ்வரி ” இரண்டு வயதுப் பெண்களை வீட்டில் வைத்துக்கொண்டு பதறிக்கொண்டு இருப்பது எனக்குத்தான் தெரியும் ” என்று முணுமுணுத்தாள்.

 

மகிபாலனின் காதில் விழுவதை நோக்கமாகக் கொண்ட அந்த முணுமுணுப்பு அதன் செயலை செம்மையாக்க தலையை குனிந்தபடி வீட்டைவிட்டு வெளியேறினான் அவன் .அதன் பிறகு அவனை அவர்கள் வீட்டில் மிருதுளா பார்க்கவில்லை.

 

” என்னம்மா இது அத்தானுக்கு மேலே படிக்க பெரிய காலேஜில் இடம் கிடைத்து இருக்கிறது .அதை சொல்வதற்காக தான் அவர் வந்தார் .இப்படி அவரை விரட்டி விட்டீர்களே ? ” மதுரா தாயிடம் சண்டைக்கு சென்றாள் .

 

” பாவம்மா அத்தான் அவர் முகமே வாடிவிட்டது ” மிருதுளா வருந்தினாள்.

 

” ஏய் என்னங்கடி ரெண்டு பேரும் அந்த அனாதை பயலுக்கு இப்படி சப்போர்ட் செய்கிறீர்கள்எட்டாவது படிக்கும் போதே அம்மா அப்பா அக்கா தம்பி என்று எல்லோரையும் மொத்தமாக ஆக்சிடெண்டில் விழுங்கிவிட்டான் .சொந்தக்காரர்கள் எல்லாம் சேர்ந்து நீதான் பணம் வைத்திருக்கிறாய் நீதான் பார்க்க வேண்டும் என்று அவன் செலவுகளை உன் அப்பா தலையில் கட்டிவிட்டார்கள் .இத்தனை வருடங்களாக அவனுக்கு உணவு உறைவிடம் படிப்பு என்று உன் அப்பா நிறைய செலவழித்து விட்டார். ராசி இல்லாதவன் என்று காரணம் சொல்லி நல்லவேளையாக அவனை ஹாஸ்டலில் தங்க வைத்து விட்டேன் .போன வருடம் படிப்பு முடித்ததும் வேலை தேடிக்கொண்டு நம்மை விட்டு தள்ளி போய்விடுவான் என்று நினைத்துக் கொண்டிருந்தால் திரும்பவும் படிப்பை காரணம் காட்டி காசு பறிக்க வந்துவிட்டான்” 

 

” இல்லை அம்மா அத்தான் பணம் கேட்டு வரவில்லை அந்த காலேஜில் இடம் கிடைத்ததை சொல்லத்தான் வந்தார் .இனி அவருடைய செலவை அவரே பார்த்துக் கொள்வார் .உங்களிடம் கேட்க மாட்டார் ” மதுரா மகிபாலனுக்காக வாதாடினாள்.

 

” கிழித்தான் .அப்படி சொல்லிவிட்டு பிறகு ஸ்பெஷல் பீஸ் என்று வந்து நிற்பான் .உன் அப்பாவும் எண்ணி எண்ணி நீட்டுவார் .அதை விடு. அது என்ன இரண்டு பேரும் அவனை அத்தான் அத்தான் என்று கொஞ்சிக் கொண்டு இருக்கிறீர்கள் .இனி அவனை பெயர் சொல்லி கூப்பிடுங்கள் .அவனுக்கு எல்லாம் உறவுமுறை தேவையில்லை .” மாரீஸ்வரி நீட்டி முழக்கி விட்டு உள்ளே போய்விட்டாள்.

 

அதன்பிறகு ஒன்றிரண்டு உறவினர் வீட்டு விசேஷங்களில் அவனை சந்திக்கும்போது இவர்களைப் பார்த்து மெல்ல தலையசைத்து விட்டு நகர்ந்து விடுவான். இறுதியாக ஒரு விசேஷத்தின் போது கலிவரதனிடம் உறவுக்கார பெரியவர் ஒருவர் ” வரதா உனக்கு இரண்டும் பெண் பிள்ளைகள் .கோடி கோடியாக இருக்கும் உனது சொத்துக்கு ஆண் வாரிசு கிடையாது .இதோ நம் மகிபாலனை உன் மாப்பிள்ளையாக ஆக்கிக் கொண்டால் உன் சொத்துக்களுக்கு சரியான வாரிசு கிடைத்துவிடும் ” என்று ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்க மாரீஸ்வரி முகம் கறுத்தது .அவள் அன்று வீட்டிற்கு வந்ததும் கலிவரதனிடம் ஏதோ கோபமாக பேசிக்கொண்டிருந்தாள்.

 

அதன் பிறகு உறவினர்களின் வீட்டு விசேஷங்களில் கூட மகிபாலனை சந்திக்க முடியாமல் போனது .மகிபாலனை மருமகன் ஆக்கிக்கொள்ள இன்னும் சில உறவுகளின் வற்புறுத்தல் தொடர ” என்னுடைய திரண்ட சொத்துக்களை  ஒப்படைக்கும் அளவு எனக்கு மகிபாலன் மேல் நம்பிக்கை இல்லை ” என்பது போன்ற வார்த்தைகளில் கலிவரதன் சொல்லிவிட கொஞ்சம் கொஞ்சமாக இந்தப் பேச்சுக்கள் குறைந்து போயின.

 

அபிஷியல் பேங்க் அக்கவுண்டை உன்  பெயருக்கு மாற்றி விடுகிறேன் மகி. இனி எல்லாவற்றையும் நீயே பார்த்துக்கொள் ” சொல்லிக் கொண்டிருந்த தந்தையை ஆச்சரியமாக பார்த்தாள் மிருதுளா.

 

” அப்படியே பேங்க் லாக்கர்களையும் கூட மகி பெயருக்கு மாற்றிவிடுங்கள் ” என்று சொன்ன தாயை நம்பமுடியாமல் பார்த்தாள்.

 

” அத்தை மாமா கொஞ்சம் பேசாமல் இருங்கள் .இவைகளுக்கெல்லாம் இப்போது எந்த அவசியமும் இல்லை மாமா தொழில் நடத்துவதற்கு தேவையான வசதிகளை மட்டும் என் பெயருக்கு மாற்றிக் கொடுங்கள் .இப்போதைக்கு இது போதும் .மற்ற விபரங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பார்த்துக் கொள்ளலாம் ” கண்டிப்புடன் சொன்ன மகிபாலனை அன்புடன் பார்த்தாள்.

 

” மகி சொல்வதுதான் சரி அப்பா. எந்த முடி வென்றாலும் அதனை நிதானமாக யோசித்து எடுங்கள் ” மிருதுளாவின் குரலுக்கு திரும்பிப்பார்த்து முறுவலித்த மகிபாலன் கண்களில் ஒரு பிரத்தியேக பாவனை வந்திருந்தது.

 

இவ்வளவு நேரமாக பேசிக்கொண்டிருந்த தொழில் விஷயங்களின் கனம் காரணமாகவோ என்னவோ அவள் எதிரே வந்து அமர்ந்ததை கூட கவனிக்காமல் இருந்தவன் இப்போது  திரும்பி அவள் முகத்தை பார்த்ததுமே முழுதும் மாறினான் .கண்களில் கனிவும் கன்னங்களில் பொலிவும் இதழ்களில் குறுநகையுமாக  அவளைப் பார்த்தான்.

 

சட்டென உணர்ந்துகொள்ள கூடியதான அவனது இந்த மாற்றம் மிருதுளாவினுள் தென்றலை கொண்டு வந்தது.

 

” மீதி விபரங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம் மாமா .இப்போது சாப்பிடலாம் .நீயும் சாப்பிடு மிருது ” அவள் மேலிருந்து பார்வையை எடுக்காமல் பேசினான்.

 

 

சிறுவயதிலிருந்தே பார்த்து பழகியவன் தான். ஒத்த உறவினராக அவர்களுடன் வலம் வந்தவன் .ஆனால் இப்போது வித்தியாசமாக தெரிந்தான் .ஏனோ நேரடியாக அவன் கண்களை சந்திக்க கூச்சமாக இருக்க மிருதுளா தனது சாப்பாட்டு தட்டில் தலை குனிந்து கொண்டாள்.

 

” இந்த சுடிதார் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது மிருது ” சாப்பிட்டு கை கழுவும் போது அவள் தோள் உரசியபடி நின்றுகொண்டு மெல்லிய குரலில் அவள் உடையை பாராட்டினான்.

 

” தேங்க்ஸ் மகி ” லேசாக ஒரு பக்கம் தலை சாய்த்து அவள் நன்றி சொல்ல அவள் கன்னத்தில் ஒற்றை விரல் வைத்து சாய்ந்திருந்த அவள் தலையை நேராக நிமிர்த்தினான் ” க்யூட் எக்ஸ்பிரஷன் ” கொஞ்சலாய் சொன்னான்.

 




அப்புறம் வேறு எதுவும் கனவு காண வில்லையே ? ” கிண்டலாக கேட்க மிருதுளா செல்லமாக அவனை முறைத்தாள்.

 

” கோபப்படாதே குட்டி .அப்படி ஏதாவது கனவு கண்டாயானால் நேற்று போல இன்றும் எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்குமோ என்றுதான் கேட்டேன் ” என்றவனின் கண்கள் அவளது உடல் வளைவுகளை வருடி தழுவின.

 

” மகி ப்ளீஸ் ” அவன் பார்வையின் வேகம் தாங்காது சிணுங்கினாள் மிருதுளா. மகிபாலனின்முகம் லேசாக மாறியது.

 

” நமக்கிடையே உறவுச் சண்டைகள்தான் சரியாகிவிட்டதே  மிருது. இன்னமும் என்னை உறவைச் சொல்லி அழைப்பதில் என்ன தடை ? ” 

 

மிருதுளா யோசித்தாள்அது சில வருடங்களாகவே நின்றுவிட்ட பழக்கம் மகி .மீண்டும் ஆரம்பிப்பது என்றால்…. ம்பார்க்கலாம் முயற்சி செய்கிறேன்

 

” தேங்க்ஸ் குட்டி ” அவள் கன்னத்தை தட்டினான்.

 

” அன்றிலிருந்து இன்றுவரை இந்த குட்டியை மட்டும் விடமாட்டேன் என்கிறீர்களே ” லேசான குறைபாட்டுடன் சொன்னாள்.

 

” இன்னமும் விவரங்கள் சொல்லிக்கொடுக்கும் நிலையில் இருப்பவர்களை அப்படித்தானே அழைக்க வேண்டியிருக்கிறது. குட்டிகுட்டிம்மாசெல்லம்செல்லக்குட்டி  ” இப்படி உதிர்ந்த வார்த்தைகளுக்கு ஈடாக கொஞ்சலும் வாஞ்சையுமாக அவள் மேல் படிந்தன அவனது பார்வைகள்.

 

” ஐயோ மகி என்னை விட்டு விடுங்கள் ஒரே ஒரு குட்டிக்கு ஆட்சேபனை சொன்னால் இத்தனை வார்த்தைகளா ஆளை விடுங்கள் ” 

 

மகிபாலன் சிரித்தபடி அவள் உச்சந்தலையில் தன் கையை வைத்து செல்லமாக அசைத்தான்க்யூட் பேபி ” ரசனையுடன் கொஞ்சிக் கொண்டான்.

 

What’s your Reaction?
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!