karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 10

10

“நான் ஏன் போக வேண்டும்.. இது என் தாத்தா வீடு.. இங்கே எனக்கு உரிமை இருக்கிறது.. நான் இங்கேதான் இருப்பேன்..”  உரிமையோடு பேசினாள் ஆராத்யா..

ஆர்யன் புருவங்களை உயர்த்தினான்.. அளவற்ற வியப்பை கண்களில் காட்டினான்..

“உரிமை.. உனக்கு.. இங்கு.. அப்படி என்ன உரிமை இருக்கிறதம்மா..?”

“உலக மகா அயோக்கியத்தனங்களை எல்லாம் ஊருக்கு வெளியே செய்து விட்டு, இங்கே வீட்டிற்குள் உத்தமன் வேசம் போட்டுத் திரிகிறார்களே சிலர்.. அவர்களுக்கே இந்த வீட்டில் உரிமை இருக்கும் போது, எனக்கு  இருக்காதா..?”

“ஆராத்யா..” அவளது எடுத்தெறிந்த பேச்சினால் ஆத்திரமுற்றவன் வேகமாக படியேறி அவளருகே வந்து அவளை பிடிக்க முயள, ஆராத்யா இரண்டு படிகள் மேலேறினாள்..

“ஏய், என்னைத் தொடாதே, தொட்டால் மரியாதை கெட்டுடும்..” ஒற்றை விரலாட்டி குரலுயர்த்தி எச்சரித்தாள்..

காக்கை எச்சம் தலையில் வாங்கியவன் முகமாய் சிறுத்து போனது ஆர்யனின் முகம்..

“ஆராத்யா எந்த விசயத்தையும் விபரம் கேட்டுப் புரிந்து கொண்டு பேசு..” அதட்டினான்..

“அட பெரிய மனிதர் மாதிரி அதட்டலெல்லாம் பலமாக இருக்கிறதே.. ஆனால் செய்கிற செயலில்தான்..” வார்த்தைகளை முடிக்காமல் அவனை ஏற இறங்கப் பார்த்தாள் ஆர்யன் முகம் இறுகி நின்றான்..

வழியை அடைத்து படியில் நின்றவனை நோக்கி கைநீட்டி விரலசைத்தாள்..

“தள்ளி நில்லு.. நான் கீழே போக வேண்டும்..”




ஆர்யனின் மனக் கொதிப்பை அவன் முகம் தெளிவாகக் காட்டியது.. அவன் இந்த வீட்டின் ராஜகுமாரன் போல் வலம் வந்து கொண்டிருப்பவன்.. அவனை நேற்று வந்த ஒரு சிறு பெண் அவமானமாகப் பார்ப்பதா..? கீழ்த்தரமாக நடத்துவதா..? ஆர்யனின் உள்ளம் கொந்தளித்துக் கொண்டிருந்தது..

“உன்னையும், உன் அம்மாவையும் இரண்டே நாட்களில் அலறியடித்துக் கொண்டு இந்த வீட்டை விட்டு ஓட வைக்கிறேன் பார்..” சவால் விட்டான்..

“அதையும் பார்க்கலாம்..” தலையுயர்த்தி அவன் சவாலை ஏற்றாள் ஆராத்யா.. அப்போதே முடிவும் செய்துவிட்டாள்.. ஒரு மாதத்திற்கு இந்த வீட்டை விட்டு நகரக் கூடாதென்று..

அன்று இரவு உணவாக பால்சாதமும் அதற்கு துணையாக மலை வாழைப் பழங்களும் வழங்கப்பட்டன..

“இதென்ன காம்பினேஷன்..?” தட்டில் குழைவாய் அன்னாசி பழத் துண்டுகளும், கிஸ்மிஸ் பழமும் மின்ன இருந்த பால் சாதத்தோடு இடது கையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு விழித்தாள் ஆராத்யா..

“இப்படி சாதம் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு, இப்படி பழத்தை ஒரு கடி கடித்துக்கனும்..” வலது கையில் சாதத்தை அள்ளியபடி, இடது கையில் உரித்து வைத்திருந்த பழத்தைக் கடித்தபடி அவளுக்கு விளக்கியவன் எதிரே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆர்யன்..

“போடா நீ ஒண்ணும் எனக்கு சொல்ல வேண்டியதில்லை..” தெளிவாக அவனுக்குப் புரியும்படியாகவே உதடசைத்து விட்டு தனது தட்டைத் தூக்கிக் கொண்டு அடுப்படிக்குள் வந்து விட்டாள் ஆராத்யா..

“இதை எப்படி சாப்பிடுவது பாட்டி..?” சிணுங்கலாய் கேட்டபடி அடுப்படியுனுள்ளிருந்த வரலட்சுமியின் அருகே அமர்ந்தாள்,

“ஏன்டா.. பால் சாதம் சாப்பிட மாட்டாயா..?” வரலட்சுமி கரிசனமாய் கேட்டாள்..

“அவளுக்கு இதெல்லாம் பழக்கமில்லை அம்மா.. எங்கள் வீட்டில் இரவு டிபன்தான்.. சப்பாத்தி, தோசை, பரோட்டோ இப்படித்தான் சாப்பிடுவோம்..” மனோரமா மெல்லிய குரலில் சொன்னாள்..

“ம்.. நல்ல பழக்கம் பழக்கி வச்சிருக்கிற..? இதில் கிடைக்கும் சத்து உன் வறண்ட சப்பாத்தியிலும், புரோட்டாவிலும் கிடைக்குமா..?” மகளை அதட்டிய வரலட்சுமி பேத்தி பக்கம் திரும்பி அவள் தட்டை வாங்கினாள்..

“ஏன் இதை சாப்பிடுவதற்கு என்ன..? அவ்வளவும் சத்து.. ஒரு பருக்கை, ஒரு இணுக்கு விடாமல் சாப்பிட்டு முடிக்க வேண்டும்..” மிரட்டலாய் சொன்னபடி தானே சோற்றை உருட்டி கவளமாக்கி ஆராத்யா வாயினுள் திணித்தாள்.. அடுத்த கவளம் பிய்த்து தரப்பட்ட மலைவாழைப் பழத் துண்டு..

பாசமான ஊட்டல்தான்.. அன்பான பரிமாறல்தான்.. ஆனாலும் இனிப்பாய் உள்ளிறங்கிய இந்த உணவு வகை நான்கு கவளங்களுக்கு மேல் உண்ண முடியாமல் ஆராத்யாவை திணற வைத்தது..

போதும் பாட்டி வயிறு நிறைஞ்சிடுச்சு என்ற சமாளிப்போ.. ரொம்பவும் இனிப்பாக இருக்கிறதே பாட்டி என்ற சமாதானமோ வரலட்சுமியிடம் செல்லுபடியாகவில்லை.. அவர் தட்டை வழித்து எடுத்து கடைசி கவளத்தையும் பேத்தியின் வயிற்றுக்குள் அனுப்பிய பிறகே திருப்தியானார்..

பழக்கமற்ற இனிப்புச் சுவையுடனான இந்தச் சாப்பாடு ஆராத்யாவின் தொண்டைக்குள்ளேயே நிற்க, அவள் சொம்பு நிறைய தண்ணீரெடுத்து குடித்து சாப்பாட்டை வயிற்றுக்குள் அனுப்ப முயற்சித்தாள்.. தன் தொண்டையை தானே தடவி விட்டுக் கொண்டு திரும்பியவளின் பார்வையில் கன்னத்தில் கை தாங்கியபடி அமர்ந்து அவளது தவிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆர்யன் பட்டான்..

“சூப்பர் சாப்பாடில்ல..?” இவள் பார்வை திருப்பியதும் இவளிடம் சைகையில் விசாரித்தான்..

ஆராத்யாவிற்கு தான் கையில் வைத்திருந்த வெங்கல செம்பை அவனுடைய தலை மேல் எறியும் வெறி வந்தது.. தட்டு நிறைய சோத்தை குவித்து வைத்து யானை விழுங்குகின்ற மாதிரி இவன் உருட்டி உருட்டி முழுங்குவான்.. அப்படியே என்னையும் நினைத்தான் போல.. சாப்பாட்டு  ராமன்.. தனக்குள் புலம்பினாள்..

இரவு உணவு முடிந்ததும் அனைவரும் வாசல் திண்ணையில் வந்து அமர்ந்தனர்.. சாப்பிட்ட உடனேயே படுக்கக் கூடாதாம்.. இப்படி கொஞ்ச நேரம் காத்தாட உட்கார்ந்து உண்ட உணவு ஜீரணமான பின்புதான் படுக்க வேண்டுமாம்.. சுப்புலட்சுமி ஆராத்யாவிற்கு தெளிவாக விளக்கினாள்.. அதெல்லாம் சரிதான்.. ஆனால் இப்போது உள்ளே போயிருக்கும் சாப்பாட்டிற்கு நான்கு தடவை இந்த தோப்பை ஓடியே சுற்றி வந்தாலும் செரிமானம் ஆகாது.. என நினைத்தபடி லேசான ஏப்பத்தோடு திண்ணையின் தூண் ஒன்றில் சாய்ந்து அமர்ந்தாள் ஆராத்யா..

“ஆர்யன் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் அண்ணி..?” மனோரமா மெல்லிய குரலில் சுப்புலட்சுமியிடம் விசாரித்தாள்.. அவள் பார்வை அடுத்த திண்ணையில் அமர்ந்திருந்த ஆர்யன் மேலிருந்தது..

ஆண்கள் வலப்புறமும், பெண்கள் இடப்புறமுமாக திண்ணையில் அமர்ந்திருந்தனர்..

“இதோ உன் முன்னால்தானே உட்கார்ந்திருக்கிறான்.. நீயே கேளேன்..” சுப்புலட்சுமி புன்னகையோடு சொன்னாள்.. மனோரமா தயக்கத்தோடு அண்ணன் மகனைப் பார்த்தாள்..

இரண்டு திண்ணைகளுக்குமிடையே நான்கடி நீள வாசல்படிதான் இடைவெளி.. மனோரமாவின் குரல் நிச்சயம் ஆர்யனின் காதில் விழுந்து கொண்டுதான் இருக்கும், ஆனாலும் அவன் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.. தூணில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்த தாத்தா பரமசிவத்தின் ஏதோ பேச்சை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்..




“அவன் உன் ஊர் சென்னையில்தான் இருக்கிறான் மனோ, ஏதோ வேலை சொல்வான்.. எனக்குப் புரியாது.. நீயே கேளேன்..” சுப்புலட்சுமி மீண்டும் தூண்டினாள்.. மனோரமாவிற்கு இன்னமும் தயக்கம்தான்.

ஆராத்யாவிற்கு தாயின் தயக்கம் ஆச்சரியமாக இருந்தது.. இவனுடன் பேச அம்மா ஏன் இப்படி தயங்கவேண்டும்.. நிலவொளியில் தாயின் முகத்தில் தெரிந்த சங்கடத்தை யோசனையாகப் பார்த்தாள்..

அவனும்தான் ஆகட்டுமே.. அம்மாவின் பேச்சு காதில் விழுந்தும் விழாதது போல் எதற்கு இப்படி முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பியிருக்க வேண்டும்.. கோபமாக ஆர்யனின் முதுகை முறைத்தாள் ஆராத்யா..

“ஆர்யா மனோ அத்தை உன்னிடம் ஏதோ கேட்கிறாள் பார்..” சுப்புலட்சுமி இப்போது தானே மகனை அழைத்தாள்.. அவன் இப்போதும் திரும்பவில்லை.. லேசாக முகத்தை பக்கவாட்டில் திருப்பினான்.. மீண்டும் முன்னால் திருப்பிக் கொண்டான்..

“நாளை ஜவுளி எடுக்க போகலாமா தாத்தா..?” பரமசிவத்திடம் பேசப் போய்விட்டான்..

மனோரமாவின் முகம் வாட, சுப்புலட்சுமி அவள் தோள்களை அழுத்தினாள் சமாதானமாக.. ஆராத்யாவிற்கு திரும்பி அமர்ந்திருந்த அவன் முதுகில் ஓங்கி ஒன்று போட வேண்டும் போலிருந்தது..

இவனே பெரிய பொறுக்கி.. இவன் கூடெல்லாம் பேசுவதே பெரிய விசயம்.. இவன் என் அம்மாவை அவாய்ட் செய்கிறானா.. ஆராத்யா அவன் முகத்திற்கு நேராக சூடாக கேள்விகள் கேட்க இடத்தையும், சூழலையும் மனதிற்குள் வரிக்கத் துவங்கினாள்..

“திருவனந்தபுரம் போகலாமா..? திருநெல்வேலி போகலாமா..?” சொர்ணாவின் கல்யாண ஜவுளிகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தனர்..

மேலும் சில கல்யாண வேலைகளைப் பற்றிய விபரங்களை பேசி முடிவு செய்துவிட்டு.. “சரி நேரமாயிடுச்சு.. எல்லோரும் போய் படுங்க..” பரமசிவம் எழுந்தார்.. தானும் எழுந்தபடி பார்த்த ஆராத்யா எதிர் தின்னையில் அமர்ந்திருந்த ஆர்யனைக் காணாது திகைத்தாள்.. இப்போது தானே இருந்தான்.. அதற்குள் எங்கே போய் தொலைந்தான்..? அவனிடம் நறுக்கென்று நாலு வார்த்தையாவது கேட்க வேண்டுமே.. அவள் கண்கள் அலைப்புற்றன..

“பாட்டி இதை மறந்துட்டீங்களே..” சொன்னபடி கையில் எதையோ எடுத்துக் கொண்டு வீட்டினுள்ளிருந்து வந்தான்..

“என்னதுடா பேராண்டி..?”

“நைட் தூங்கும் போது பால் குடிக்க வேண்டாமா..?” கொண்டு வந்த தம்ளரை பாட்டியின் கையில் சேர்ப்பித்தான்..

அடடா.. பாட்டி மேல் என்ன அக்கறை.. எள்ளலாய் அவனைப் பார்த்த ஆராத்யா, அடுத்த நிமிடமே அலறினாள்.. ஏனெனில் அந்த தம்ளர் அவள் பக்கம் நீட்டப்பட்டிருந்தது..

“நானே மறந்துட்டேன்மா.. நல்லவேளை ஆர்யன் நினைவு படுத்தினான்.. இந்தாம்மா குடி..”

இவன் எனக்காகத்தான் உள்ளே போய் பால் எடுத்து வந்தானா..? அடப்பாவி இப்படி பழி வாங்குகிறானே.. ஆராத்யாவின் அலறதுக்கு காரணம் இருந்தது.. அவளுக்கு கொடுக்கப்பட்ட பால் இருந்த தம்ளரின் அளவு அப்படி, கிட்டத்தட்ட சிறிய உருளைச்சட்டி போன்று உயரமும், அகலமுமாக இருந்தது அந்த ஒரு தம்ளர்.. அதெப்படி ஒரு மனுசியால் இவ்வ்வவளவு பாலைக் குடிக்க முடியும்..?

ஆராத்யாவின் சந்தேகம் தேவையற்றது போல் “டக்குன்னு இரண்டு மடக்கில் குடிச்சிட்டு கொடும்மா..” பாட்டி கை நீட்டியபடி இருந்தாள்..

ஆராத்யா கோபமாக நிமிர்ந்து பார்க்க ஆர்யன் திண்ணைத் தூணில் கைகட்டி நின்றபடி அவளை வேடிக்கை பார்த்தான்.. அடேய்.. ஆராத்யா பல்லைக் கடிக்க,

“சீக்கிரம் குடிக்க சொல்லுங்க பாட்டி..” பாட்டியைத் தூண்டினான்..

தம்ளரினுள் பார்வையை போட்ட ஆராத்யா இன்னும் கொஞ்சம் குழம்பினாள்.. பால் ஒரு மாதிரி பழுப்பு நிறத்தில் இருந்தது.. பாலின் நிறம் வெண்மைதானே.. ஒன்றாவது வகுப்பில் படித்ததை நினைவுக்கு கொண்டு வந்து, உறுதிப்படுத்தியவள், மிகத் தீவிரமானதோர் எண்ணத்திற்கு விழுந்தாள்..

இதில் ஏதோ கலந்திருக்கிறது.. இவன் எதையோ.. எதையோ என்ன.. நிச்சயமாக இந்த ஆர்யன் இதில் என்னைக் கொல்ல விசத்தைக் கலந்திருக்கிறான்.. உறுதியான முடிவிற்கு வந்தவள்..

“பாட்டி பாலில் என்னவோ கலந்திருக்கு.. வேறுகலர்ல இருக்கு பாருங்க..” அபயம் கோரினாள்..

“பனங்கற்கண்டு பால்மா.. தொண்டைக்கு நல்லது.. சமர்த்தா குடிச்சிடு..” பாட்டி சொன்னதோடு அவள் கையோடு சேர்த்து தம்ளரை உதட்டில் வைத்து அழுத்தினாள்.. முழு தம்ளரும் காலியாகும் வரை அவளை அசையவிடவில்லை..

பழக்கமற்ற இந்த பனங்கல்கண்டு பாலைக் குடித்து முடிப்பதற்குள் ஆராத்யா தவித்துப் போனாள்.. அக்கறையாக அவள் குடித்து முடித்த தம்ளரை அவள் அருகில் வந்து வாங்கிய ஆர்யன் போகும் போது..

“நாளை காலை டிபன், நெய் அப்பமும், சர்க்கரை போளியும்..” என்று சொல்லி அவள் வயிற்றில் கிலியை உண்டாக்கிப் போனான்..

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!