Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 42

42

கல்யாணத்திற்கும் கூட்டிப் போகவில்லை .இந்த வளைகாப்பிற்காவது போகலாம் அம்மா ” ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்த சங்கவியின் குரலில் விழாவுக்கு போகும் ஆர்வம் தெரிந்தது .

” இதெல்லாம் பெரியம்மா பார்த்துக் கொள்வார்கள் .நீ பேசாமலிரு .” கனகம் மகளை அதட்டிக்கொண்டிருந்தாள் .

” யார் வீட்டு வளைகாப்பு சித்தி ? ” கேட்டபடி சாப்பிட வந்து அமர்ந்தவளுக்கு தட்டு வைத்து பரிமாறியபடி ” நம்ம சௌந்தரம் மகளோட வளைகாப்பு கமலிக்குட்டி .இந்தக் கழுதை போயே ஆகனும்னு நச்சரிக்குது ” பவ்யமாக பேசினாள் 

இந்தக் குட்டி ….சட்டியை எல்லாம் விட்டு விடுங்களேன் கமலினிக்கு கத்த வேண்டும் போலிருந்த்து .பல முறை சொல்லிப் பார்த்துவிட்டாள்.கனகம் கேட்கவில்லை .உன்னைப் பார்த்தாலே இப்படி கொஞ்சனும் போலிருக்குதே கண்ணு என மற்றொரு வார்த்தையை சேர்த்தாள் .குட்டி …கண்ணு வுக்கு பிறகு இன்னமும் என்னென்ன வருமோ எனப் பயந்து கமலினி வாயை மூடிக் கொண்டாள் . தரித்திரம் , மூதேவி போன்ற சித்தியின் பழைய விளித்தல்கள் மனதிலாடமலில்லை .ஆனால் இவற்றையெல்லாம் அம்மா எப்படி கண்டு கொள்ளாமலிருக்கிறாள் எனும் ஆச்சரியம் இன்னமும் அவளுக்கு தீர்வதாயில்லை .




இடையிலிருந்த கனகம்தான் எனக்கு புதியவள் .இவள் எனக்கு பழக்கமானவள்தான் கீற்றான புன்னகையுடன் பேசும் புவனா அவளுக்கு பிரமிப்பூட்டு வாள். வேலாயுதம் மீண்டும் குடும்பப் பொறுப்பை அதாவது தம்பியின் குடும்பத்தின் செலவுகளையும் தானே ஏற்றுக் கொள்ளத் தொடங்க தன் கணவனின் சம்பளம் அப்படியே முழுதாக பேங்க் கணக்கில் ஏறத் தொடங்க கனகத்தின் பவ்யம் பணிவு இவ்வாறு அதிகமாக துவங்கியது.

” சின்னப்பெண் ஆசைப்படுகிறாள் அவளை அனுப்பி வை கனகம் ” உத்தரவான குரலில் சொன்னபடி வந்தாள் புவனா. 

” நீங்கள் சொன்னால் சரிதான் அக்கா . ஏய் போய் கிளம்புடி ..” கனகம் மகளை விரட்ட சங்கவி துள்ளலுடன் உள்ளே போனாள் .கமலினி தோள்களைக் குலுக்கிக் கொண்டாள் .சங்கவியின் இந்த திடீர் விழா ஆசைக்கு பின்னால் போன வாரம் அவளது பிறந்த நாளுக்கென்று புதிதாக வாங்கிய லெஹங்கா இருந்தது. 

” யார் வீட்டு வளைகாப்பு அம்மா ? ” 

” நம்ம சௌந்தரம் மகள் சுப்ரியாவுடைய வளைகாப்பு. நீயும் வருகிறாயா கமலி ? ” 

” எனக்கு வேலை இருக்கிறது அம்மா “சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த சுப்ரியா மனதிலாடினாள். இவளது திருமணத்தின்போது தானே விஸ்வேஸ்வரனை அவனது குடும்பத்தை  சந்தித்தோம். அன்றைய காட்சிகள் இதோ இப்போது போல் நெஞ்சில் ஊர்ந்தன. அவனை சந்தித்து ஒரு வருடம் ஆகி விட்டதா ?  ஆச்சரியமாய் கணக்கிட்டாள் . ஏனோ இந்த விழாவிற்கு போக வேண்டும் போல் தோன்ற தாயிடம் தலையசைத்தாள்

” நானும் வருகிறேன் அம்மா ” 

காரணமில்லாமல் உண்டான உள்மன உந்துதலின் காரணம் வளைகாப்பு விழாவில் கமலினிக்கு புரிந்தது .அங்கே அவள் ராஜசுலோச்சனாவை சந்தித்தாள். ஓ…இவர்களும் சௌந்தரம் சித்திக்கு உறவாயிற்றே ….அப்படியானால் இவர்கள் குடும்பத்திற்கும்  ,எங்கள்  குடும்பத்திற்கும் என்ன உறவிருக்கும் ? விஸ்வாவிற்கும் எனக்கும் என்ன உறவு முறை வரும் …? கட்டுக் களைந்து பாய்ந்த மனதினை அதட்டி அடக்கினாள் .

உள்ளூர தயக்கம் இருந்தாலும் தானாக அமைந்துவிட்ட இந்த சந்திப்பை வீணாக்க அவள் விரும்பவில்லை.பெண்களுக்கான விழா என்பதால் குடும்பத் தலைவர்கள் அதிக அளவில் அங்கே காணப்படவில்லை. பெரும்பாலும் பெண்கள் கூட்டமே இருந்தது .புவனா மீண்டும் உயர்ந்துவிட்ட அந்தஸ்துடன் ஒதுங்கல் இன்றி நடுவில் அமர்ந்து இருக்க அவளைச்சுற்றி உறவின பெண்களின் கூட்டம். சங்கவி தன் வயதொத்த பெண்களுடன் தன் உடையின் பெருமை பேசிய படி… என உடன் வந்த இருவரும் ஒதுங்க கமலினி ராஜசுலோச்சனா வை தேடிப் போய் பார்த்தாள்.

” வணக்கம் அம்மா என்னை தெரிகிறதா ? ” 

” கமலினி…? ” ஒற்றை விரலால் கண்ணாடியை மூக்கில்  அழுத்தி பார்த்தபடி ராஜசுலோச்சனா கேட்க கமலினி தலையசைத்தாள்

” நன்றாக நினைவு வைத்திருக்கிறீர்களே ? ” 

” ஏன் வயதாகிவிட்டால் புத்தி மட்டுப்பட்டு எல்லாம் மறந்து விடும் என்று நினைத்தாயோ…? ”  குத்தலான இந்தக் கேள்வியில் அயர்ந்தாள் .ஐயோ இவர்களிடம் வார்த்தைகளை கவனமாக விடவேண்டும் போலவே…

” அப்படி இல்லை அம்மா .உங்கள் கடையில் வேலை பார்க்கும் சாதாரண பெண் நான் .என்னையெல்லாம் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது சொல்லுங்களேன்…”  குழைவாக பேசியபடி அவர் அருகே அமர்ந்தாள்.




” கடையில் வேலை பார்க்கும் சாதாரண பெண் …நீ …உன்னைப் பற்றித்தான் என் மகனும்,  மருமகளும் தினந்தோறும் பிரசங்கமே பண்ணுகிறார்களே. எப்படி உன்னை மறப்பேன்…? ”  ராஜசுலோசனா சொல்ல கமலினிக்கு  கோபம். ஒரு உருப்படியான விஷயம் அம்மாவிடம் பேசு என்றால் இவனுக்கு முடியாது .என்னைப்பற்றி என்றால் வாய்கிழிய பேசுகிறான். இவனையெல்லாம் ….உள்ளுக்குள் பற்களை நற நறத்துக் கொண்டாள்.

ராஜசுலோச்சனா வின் பார்வை இவள் முகத்தின் மேல் கூர்மையாக படிந்தது படிந்தது . ” நானும் உன்னிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தான் இருந்தேன் ” 

” என்ன விஷயம் அம்மா ? ” காரணம் அறியாமல் கமலினி உள்ளம் உள்ளூர சில்லிட்டது.

” முதலில் உன் விசயம் நீ சொல் ” ராஜசுலோசனா சேரில் பின்னால் சாய்ந்து தோரணையாக கால் மேல் கால் போட்டு கொண்டார் . உலர்ந்திருந்த உதட்டை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு கமலினி பேசத் துவங்கினாள் .

               ——————–

” கமலினி ”  பாரிஜாதம் அவளை பாய்ந்து கட்டிக் கொண்டாள்.

” எப்படி…எப்படி இதனை உன்னால் முடிக்க முடிந்தது …? ஐயோ என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை …” குதூகலித்த பாரிஜாதத்தின்  கையை அழுத்தி கிள்ளினாள் கமலினி .

” இப்போது நம்பமுடிகிறதா அக்கா …? ” கேட்டவளுக்குமே இன்னமும் நம்பத்தான் முடியவில்லை .

இவர்கள் யாரும் பயந்ததுபோல் ராஜசுலோசனா இல்லை பாரிஜாத்த்தின்  மறு வாழ்வு பற்றிய விஷயத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டார் . சரிதான் என்பதான அவரது தலையசைப்பு இன்னமும் கமலினிக்கு நம்பமுடியாததாக இருந்தது.

” நேற்று அத்தை என்னைக் கூப்பிட்டு பேசினார்கள்.சந்தானபாரதியை பற்றிய விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார்கள் .எனக்கு திருப்திதானா ? என திரும்ப திரும்பக் கேட்டுக் கொண்டார்கள் .சீக்கிரமே எங்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வதாக சொல்லியிருக்கிறார்கள் …” பாரிஜாதம் நிஜமாகவே தரையை விட்டு சில தப்படிகள் உயரமாக குதித்துக் குதித்தே பேசிக் கொண்டிருந்தாள் 

” இதுதான் உற்சாகத்தில் துள்ளிக் குதிப்பதா அக்கா ? ” அவளது பரவசத்தை புன்னகையுடன் பார்த்தபடி கமலினி கேட்டாள் .

” எனக்கு இருக்கும் உற்சாகத்திற்கு வானிற்கே தாவி விடுவேன் . இதற்கெல்லாம் காரணம் நீதான் கமலினி .உனக்கு நான் என் வாழ்நாள் முழுவதும் கடமை பட்டிருக்கிறேன் ” 

” சீ …என்னக்கா இது கடமை அது…இதுவென்று .சாதாரணமாக பேசுங்கள் …” செல்லமாக அதட்டியபடி பாரிஜாத்த்தின் கை பற்றி அணைத்துக் கொண்டவளின் விழிகள் அறை வாயிலுக்கு போக , அங்கே பிரமித்த புன்னகையுடன் நின்றிருந்தான் விஸ்வேஸ்வரன் .

” எப்படி இதை சாதித்தாய் கமலினி ? ” வெறுப்பில்லை அவன் குரலில் மெச்சுதலே … ” நேற்று அம்மா என்னை அழைத்து அண்ணியின் திருமணம் பற்றி பேசிய போது எனக்கு கனவு போலிருந்த்து .”

” இதில் உங்களுக்கு ஆட்சேபனை இல்லையா சார் ? ” அளவுக்கு அதிகமான ஆச்சரியம் காட்டினாள் .

” ஆட்சேபனை… உண்டுதான் .ஆனால் இது நல்ல விசயமாயிற்றே …எனக்கு பிடிக்காதது என்றாலும் இதில் இவர்களின் வாழ்க்கை இருக்கிறதே …” பாரிஜாதம் பக்கம் கை காட்டினான் .விஸ்வேஸ்வரனின் முகம் மகிழ்வையே காட்டுவதை இரு பெண்களும் ஆச்சரியமாக உணர்ந்தனர் .

” புது வாழ்விற்கு வாழ்த்துக்கள் அண்ணி …” பாரிஜாத்த்தின் கை பற்றி குலுக்கியவன் , சற்று தயங்கி குரல் கரகரக்க ” அப்படி அழைக்கலாம்தானே ? ” என்றான் .கமலினியின் மனம் பிசைய பாரிஜாதம் கண்கள் கலங்கி விட்டாள் .

” எல்லாம் கூப்பிடலாம் .அவள் என்றைக்கும் நம் வீட்டு பெண்தான் .இந்த உரிமையை நான் விட்டுக் கொடுப்பதாக இல்லை பாரிஜாதம் ” அழுத்தமாய் பேசியபடி வந்தார் ராஜசுலோச்சனா .

” உனக்கு இதுவும் ஒரு பிறந்தவீடுதான் .உன்னையோ , சௌபர்ணிகாவையோ நாங்கள் முழுதாக விட்டுத் தர மாட்டோம் . உங்கள் மீது எப்போதும் எங்களுக்கு உரிமை உண்டு ” 




அதிகாரம் காட்டிய மாமியார் பாரிஜாத்த்திற்கு கோபத்தை தரவில்லை .கண்களை பனிக்க செய்தார் .” உங்கள் அன்பை விட்டுத் தர நானும் தயாராக இல்லை அத்தை .இது விசயம் நானும் சந்தானமும் முன்பே பேசிவிட்டோம் . சௌபர்ணிகாவின் அப்பாவின் புகைப்படம் எங்கள் வீட்டு ஹாலில் பெரிதாக மாட்டப்பட்டிருக்கும் என்பது வரை நாங்கள் தெளிவாக இருக்கிறோம்  ” 

” சரிதான் .என் மகனது புகைப்படத்தை ஒளித்து மறைத்து வைக்கவோ , மறந்து போய் தூக்கிப் போடவோ அவன் என்ன தவறு செய்தான் ? தவிரவும் பிறர் கண்ணிலிருந்து மறைக்க நீ தேர்ந்தெடுத்தது தவறான பாதையல்லவே ” 

” ஆமாம் அம்மா மிக நியாயமான , தேவையான வழியில் அக்கா போகிறார் .அதனை நாம் உலகுக்கு மறைக்க வேண்டிய அவசியமில்லை .சுதந்திரமாக உங்கள் புது வாழ்விற்குள் நுழையுங்கள் அக்கா ” வாழ்த்தினாள் கமலினி.வாஞ்சையுடன் அம்மா , மகனின் பார்வை பாரிஜாதம் மேல் பதிந்திருப்பதை திருப்தியாக பார்த்தாள் .

” என்னால் நம்ப முடியவில்லை அம்மா …” மகனின் பேச்சு அம்மாவிடம் விளக்கம் கேட்டது .

” நீ ஏன்டா என்னிடம் முதலிலேயே கேட்கவில்லை ? ” 

” அது …நீங்கள் …உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதோ என்று …” 

” அப்படி வந்து நான் உன்னிடம் சொன்னேனாக்கும் …? ” 

” இல்லை அம்மா நீங்கள் சாஸ்திரம் பார்ப்பீர்கள் . பண்பாடு பேசுவீர்கள் …” 

” எந்த சாஸ்திரம் பெண்ணை நிர்கதியாய் நிறுத்த சொல்கிறது ? துணையிழந்த பெண்ணை மூளியென்றே நிர்பந்தப் படுத்துவது பண்பாடா ? அப்படித்தானெனில் நான் பேசிய , பின்பற்றிய சாஸ்திரங்களை , பண்பாடுகளை நான் தூக்கி எறிகிறேன் மகனே . கணவனற்ற ஒரு பெண்ணின் வாழ்வு எத்தனை கொடுமையானது என்பதனை நான் அறிவேன் . அந்தக் கொடுமை என் அருமை மருமகளுக்கு வர  விடுவேனா ? எப்படி எந்த வழியில் போய் இவள் வாழ்வை சீராக்குவது என்று தவித்துக் கொண்டிருந்தேன் . கடவுளே எனக்கு வழி காட்டிய பிறகு அதனை நழுவ விடுவேனா ? கெட்டியாக பிடித்துக் கொண்டேன் ” 

ராஜசுலோச்சனா பேசி முடித்ததும் பாரிஜாதம் நகர்ந்து அவர் தோள் பற்றி சாய்ந்து கொண்டாள் .” நன்றி அத்தை 

…நன்றி …” புலப்பமாய் பேசி அவர் தோளில் முகம் புதைத்தாள் .

” இருபத்தியெட்டு வருடங்கள் உங்களோடு வாழ்ந்திருக்கிறேன் அம்மா .ஆனால் உங்கள் மனதை என்னால் இனங்காண முடியவில்லை .இந்த விசயத்தை எப்படி உங்களிடம் சொல்வதென்று தவித்துக் கொண்டிருந்தேன் ” 

” சொல்ல நினைத்தாயா ….? தவித்தாயா …? ” நக்கலாய் கேட்ட அன்னைக்கு பதில் தனயனின் திருதிரு விழியுருட்டல் .தாயின் முன்பு அவன் அப்படி பரீட்சையில் காப்பி அடித்து மாட்டிக் கொண்ட மாணவனாய் நிற்பதை பார்க்க சுவாரஸ்யமாய் இருக்க கமலினி தன் விழித்திராட்சைகளை உருட்டி இமைகளை விரித்து வைத்துக் கொண்டாள் .

” என்னிடம் சொல்வதிலெல்லாம் உனக்கு தயக்கமில்லையடா .உன் அடி மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆண் திமிர் , அகம்பாவம் .அதெப்படி கணவனையிழந்தவளுக்கு கல்யாணம் செய்து வைப்பது …எனும் ஆதி ஆண் சிந்தனை .அதற்கு அம்மா …பண்பாடு…பாரம்பரியம் எனும் சாயமேற்றிக் கொண்டாய் . ” 

” இ..இல்லை அம்மா .அப்படியெல்லாம் இல்லை …” 

” ம் …அது உனக்கே தெரியவில்லையடா முட்டாள். உனது படிப்பு , நவீன நாகரீகத்தோடு இந்த ஆதி சிந்தனையும் சேர்த்து உன்னைக் கலக்க , எந்தப் பாதை போவதென தெரியாமல் குழம்பிக் கிடக்கிறாய் . பெண்ணென்பவள் தாயோ , தமக்கையோ , மனைவியோ , மகளோ தனக்கு மட்டுமே , தனக்காக மட்டுமே என்ற ஆதிக்க குணம் விடுத்து , அவள் முதலில் அவளுக்கானவள் . பிறகே பிறரை சிந்திக்க வேண்டுமெனும் பக்குவத்திற்கு ஆணுலகம் வந்துவிட்டால் பெண்களுக்கான உலகம் அழகாகிவிடும் . உமையொரு பாதி , சிவனொரு பாதியென பூமி சமனப்படுத்திக் கொள்ள துவங்கிவிட்டால் வாழ்வு பூகம்பங்கள் இன்றி சீராக ஓடத் துவங்கிவிடும் . உங்கள் உயிர்பாதி நாங்கள் .எங்களை சீண்டி அடக்க நினைத்தால் சேதாரம் உங்களுக்குத்தான் …” 

ஒற்றை விரலாட்டி எச்சரித்த தாயின் ரௌத்ர குரலில்   விஸ்வேஸ்வரனின் முகம் சாட்டை சொடுக்கல் வாங்கியதாய் கன்றி சிவந்த்து. எத்தனையோ  வருடங்கள் ஆழ்மனதில் கீறிக் கிடந்த ரணங்கள் இன்று தாயின் வாய் வார்த்தைகளானதோ … ?. அவன்றிந்த வகையில் அவன் வழி உறவினர் , மற்றும் தொழில் வட்டாரங்களில் ராஜசுலோச்சனாவிற்கு என்ன …மகராசி என்றே பேசப்பட்டவர் .முப்பதுகளின் அந்திமத்தில் கணவனை இழந்தாலும் இரண்டு ஆண் சிங்கங்களை பெற்று வைத்திருக்கிறாள் அவளுக்கென்ன …என்றே பேசப்பட்டவர் . அவரது பிள்ளைகளும் அரணாய் அன்னையை கண்ணும் கருத்துமாய் கவனித்தவர்கள்தாம். ஆனால் அண்ணனோ , தம்பியோ …பிள்ளைகளோ ஒரு பெண்ணிற்கு கணவனின் இடத்திற்கு வர முடியாதென்பதை இன்று விஸ்வேஸ்வரன் தெளிவாக உணர்ந்தான் .தாயின் கை பற்றிய அவனது கைகள் நடுங்கின .குரல் கரகரத்தது.

” அ…அம்மா உங்களுக்கு நாங்கள் அநியாயம் செய்து விட்டோம்மா ” உணர்ந்து பேசிய மகனின் நடுங்கல் குரல் தாயை பாகாக்க , மறு கையால் மகனை இழுத்து அணைத்துக் கொண்டார் .

” இல்லைடா கண்ணா .உங்களுக்காகத்தான் நான் வாழ்ந்தேன் .உங்களால்தான் வாழ்ந்தேன் .நிறைவாகத்தான்டா வாழ்ந்தேன் ” 

” அதுவே தவறுதானேம்மா .உங்களது வாழ்க்கையை எங்களுக்காக என்று பறித்துக் கொண்டோம்தானேம்மா . உங்கள் உயிர் உருக்கி எங்களை படைத்த தாய்க்கு நாங்கள் காட்டிய நன்றி இதுவல்லதானே ? நா …நான் உணர்ந்து கொண்டேன்மா .பெண்மையை போற்ற பாதுகாக்க பயின்று கொண்டேன்மா .” தளுதளுத்த மகனை உச்சி முகர்ந்தாள் அந்த கம்பீர தாய். 

மகனையும் , மருமகளையும் அணைத்து நின்ற அந்த பெண் தெய்வத்தை பிரமிப்பாய் பார்த்து நின்றாள் கமலினி .அவளுக்கு அந்த தாயின் பாத்த்தில் தன் உச்சி பதிக்க வேண்டும் போலிருந்த்து .கூடவே இதோ இவர்கள் இருவரைப் போல் அவர் தன்னையும் அணைத்துக் கொள்ள மாட்டாரா எனும் தாபமும் எழுந்த்து .

தாயின் தோளில் சுருண்டிருந்த விஸ்வேஸ்வரனின் கண்கள் கமலினியின் தாபத்தை உணர்ந்து கொண்டனவோ …? ஆதரவாக அவளை நோக்கி நீண்டது அவன் கை ,வாயேன் …எங்களோடு சேர்ந்து கொள்ளேன் என்ற வேண்டலோடு . கண்களை சிமிட்டி தலையை உலுக்கி நிமிர்ந்தாள் கமலினி .




” காலையிலேயே வீட்டிற்கு வா என்று பாரிஜாதம் மேடம் அழைத்ததால்தான் வந்தேன் சார் .இங்கே கேள்விப்பட்ட  நல்ல செய்தி எனக்கு மிகுந்த சந்தோசத்தை தருகிறது .நீங்கள் எல்லோருமாக இருந்து அடுத்து நடக்கப் போகும் வேலைகளை பேசி முடிவு செய்துவிட்டு கொஞ்சம் லேட்டாகவே வாருங்கள் .நான் முதலில் கடைக்கு போய் வேலையைப் பார்க்கிறேன் .” சொல்லிவிட்டு அப்படியே இரண்டு எட்டு வைத்து பின்னால் நடந்தாள் .இணைந்து நின்ற மூவரையும் இரு கண்களால் பிடித்து மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டு அவர்கள் யாருடைய பதிலையும் எதிர்பாராமல் வெளியேறிவிட்டாள் .

உலக சமாதானம் வேண்டி வென்ற யோகினியின் தோற்றத்தை அந்நேரம் கொண்டிருந்த அவள் நடையை குழப்பத்துடன் பார்த்தபடியிருந்தான் விஸ்வேஸ்வரன் .

” இந்த டாஸ்லிங் டேங்கர்ஸ் மாடல் கம்மல் உங்களுடைய இந்த ஜீன்ஸுக்கு கூட மேட்சாக இருக்கும் மேடம் .காதில் போட்டுத்தான் பாருங்களேன் ” டபுள் பார்டர் பட்டணிந்து ஜிமிக்கிகளை  தலைகீழாக புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்த பெண் ஒருவரின் இரு கல்லூரி பெண்களில் ஒருத்தியை நகைகள் பக்கம் இழுத்துக் கொண்டிருந்தாள் கமலினி .

” அப்படிங்கிறீங்க …? ” தங்கநிலவென  வட்டமாக இரு அடுக்குகளாக ஜொலித்துக் கொண்டிருந்த அந்த மாடல் கம்மலை தன் காதில் வைத்துப் பார்த்தாள் அவ்விளம்பெண் .

” உங்க பூஷியா பிங்க் லெஹங்காவிற்கு இந்த பீகாக் ஸ்டெட் மேட்சாக இருக்கும் பாருங்களேன் மேடம் …”  பள்ளியிலிருந்து கல்லூரி நுழையப் போகும் இளைய மகளையும் நகைகளுக்குள் இழுத்தாள் .

தாய் நகைகளை பார்க்க போனிற்குள் முழுகிக் கிடந்த இரு இளம் பெண்களையும் நிகழுக்கு கொணர்ந்து தன் வியாபாரத்திற்குள் இழுத்தாள் .மகளோடு தாயும் கம்மல்கள் டிரே பக்கம் பார்வையை திருப்ப , அவர்கள் பார்க்க வசதியாக மாடல்களை  தனித்தனியாக பிரித்து அடுக்கிக் காட்டினாள் 

” கமலினி ….” பின்புற அருகாமையில் கேட்ட விஸ்வேஸ்வரனின் குரலுக்கு விதிர்த்து திரும்பினாள் .ஒரெட்டு நகர்ந்தால் தாராளமாக உரசிக் கொள்ளும் இடைவெளியில் நின்றிருந்தான் அவன் ,கண்களில் கேள்வியோடு . இப்படி பொதுவெளியில் மற்றவர்கள் பார்க்கும் இடங்களில் முன்னெப்போதும் இவ்வளவு உரிமை காட்டி பேசியதில்லை அவன் .இப்போது என்னவாம் ….எச்சரிக்கையும் , எரிச்சலுமாக ஏறிட்டாள் .

” இவர்கள் நகை வாங்குபவர்கள் போல் தெரிகிறது .கவனித்துக் கொண்டிருக்கிறேன் …” வரமாட்டேனென அழுத்தமாக பதிவு செய்தாள் 

” நிச்சயம் வாங்குபவர்கள் .ஸ்டீல் கம்பெனி ஓனர் வீட்டு ஆட்கள் .இவ்வளவு அழகாக நீ பேசி சுட்டிய பிறகு ஆளுக்கு ஒன்றென கம்மல் செட்ஸ் வாங்காமல் போக மாட்டார்கள் ” 

” அதனால்தான் அவர்களை …” 

” நீ வியாபாரத்தை முடித்துவிட்டாய் . மீதி விபரங்களை அதோ அவர்கள் பார்ப்பார்கள் .நீ வா …” உத்தரவாக பேசி முன்னால் நடந்தவனை முறைத்தபடி பின்பற்றினாள் .

” நான் அங்கே இருந்திருந்தால் கம்மலோடு கழுத்தணியும் வாங்க வைத்திருப்பேன் .எதற்கு கூட்டி வந்தீர்கள் ? ” சற்றுத் தள்ளி வரவும் படபடத்தவளை ஏறிட்டான் .

” நான் அழைத்த காரணம் உனக்கு தெரியாதா ? ” 

” நான் உங்களை மாலை ஆறு மணிக்கு மேல் பார்க்கிறேன் ” 

” அப்போது உன் வேலை நேரம் முடிந்துவிடும் ” பொறுமையற்ற குரல் .

” இருந்து பேசிவிட்டுத்தான் போவேன் ” உறுதி கூறிவிட்டு தனது வேலைக்கு நடந்துவிட்டாள் . கடந்த சில நாட்களாக அவனோடு பேச டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தவள் இன்று உறுதி சொல்ல விஸ்வேஸ்வரன் வேறு வழியின்றி காத்திருக்க ஆரம்பித்தான் .

மாலை வேலை முடிந்து வெளியே ஒரு காபி ஷாப்பில் கமலினியை சந்தித்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்த்து .காபியோடு கமலினியுடன் மாலையை கொண்டாடிக் கொண்டிருந்தவன் மணிகண்டன் .

” என்னோட கேரக்டரையே மறந்துட்டீங்க இல்லை சார் ….? ” புருவம் உயர்த்தி கேள்வி கேட்டவனிடம் நிறைய நக்கலும் , நையாண்டியும் இருந்த்து .

” மணிகண்டனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்துவிட்டது .திருமணத்தை முடித்துக் கொண்டு வெளிநாடு போகச் சொல்கிறார்கள் அவருடைய பெற்றோர் .அதனால் விரைவிலேயே எங்கள் திருமணம் நடக்க போகிறது ” கமலினியின் பார்வை வெண்ணெயாய் தெரிந்த டேபிளின் மேற்பரப்பில் இருந்த்து .

” ஓஹோ …” நிச்சலனமாய் தலையாட்டினான் விஸ்வேஸ்வரன் 




” வெளிநாடு …எங்கே ? ” கேள்வி மணிகண்டனுக்கு 

” துபாய் என்று நினைத்தீர்களா சார் .? சிங்கப்பூர் …” கிண்டலாக பதில் சொன்னான் மணிகண்டன் 

.

” சார் என்னை பாலைவனத்தில் தள்ளி விட முயற்சி செய்தார் கமலினி ” கேள்வியாய் பார்த்தவளுக்கு பதில் சொன்னான் .

பாலைவனமெல்லாம் இல்லை .பெரிய சிட்டி அந்த ஊர் .

அந்தக் கம்பெனியில் வேலை கிடைக்க எத்தனையோ பேர் வரிசையில் நிற்கிறார்கள் ” கமலினியின் குற்றச்சாட்டு பார்வைக்கு முணுமுணுத்தான் விஸ்வேஸ்வரன் 

” ஆனால் எனக்கு பிடிக்கனும்ல சார் .எனக்கெல்லாம் துபாய்னாலே பாலைவனம்தான் .குதிரை மேல குதிச்சு போக நினைக்கிறவனை ஒட்டகம் மேல ஊர்ந்து போக வைக்க நினைக்கிறது நியாயமா சார் ? ” 

” முட்டாள் ” இப்போது விஸ்வேஸ்வரனிடம் காட்டமான முணுமுணுப்பு .

” அவர் வேலையை அவர் பார்த்துக் கொள்வார் சார் .எங்களை வாழ்த்திவிட்டு நீங்கள் உங்கள் வேலையை பார்க்க போகலாம் ” கமலினியின் உஷ்ணம் தாக்கியதோ என்னவோ , விஸ்வேஸ்வரன் எழுந்துவிட்டான் .

” கங்கிராட்ஸ் ” இருவருக்கும் கை கொடுத்துவிட்டு வெளியேறினான் 

What’s your Reaction?
+1
22
+1
16
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!