kana kanum kangal Serial Stories கனா காணும் கண்கள்

கனா காணும் கண்கள் – 18

18

 

” இங்கே நாங்கள்  “கோட்டியா”  கட்டுகிறோம். இதோ பாருங்கள் அந்த கட்டுமானங்கள் தான் இங்கே நடந்து கொண்டிருக்கிறது .” சிறியதும் பெரியதுமான மரங்களை பட்டைசதுரம் செவ்வகம்என விதம்விதமான வடிவங்கள் ஆக்கி அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் பணிகள் அங்கே நடந்துகொண்டிருந்தன. அவற்றை சுட்டிக்காட்டி ரோசலின் விளக்கிக் கொண்டிருந்தாள்.

 

கோட்டியா என்றால் ? ” 

 




இது கூட தெரியாதா ? அல்ப பார்வை பார்த்தாள் .” கோட்டியா என்றால் சரக்கு கப்பல் .இது எல்லாம் கோங்கு மரங்கள் .இவற்றையெல்லாம் எங்க பாலா சார் அந்தமானில் இருந்து வர வைத்திருக்கிறார் .எப்படி கல்லு மாதிரி இருக்குனு பாருங்க . இதுதான் கோட்டியா கட்ட ஏற்ற மரங்கள்இதெல்லாமே பாலா சார் கண்டுபிடிச்சதுதான் ” 

 

தன் உடலில் அனல் ஓடுவதற்கு காரணம் இந்த கடற்கரை வெயில் தான் என்று நினைத்துக் கொண்டாள் மிருதுளா .அதென்ன  பாலா சார்அதிலும் எங்க பாலா சார்மிருதுளாவிற்கு சட்டென்று அந்த ரோசலினை பிடிக்காமல் போனது .மகிபாலனை பார்த்ததுமே அவள் முகத்தில் வரும் பிரகாசத்தையும் அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள் .பெண்ணின் மனம் பெண்ணுக்கு அத்துபடி என்ற வகையில் அவளுக்கு மிகத் தெளிவாக தெரிந்தது இந்த ரோசலினுக்கு  மகிபாலன் மேல் ஒரு நாட்டம் இருக்கிறது என்று

 

” அதெப்படி இந்த கப்பல் கட்டும் வேலையை பற்றி இவ்வளவு தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ? ”  அவள் கேள்விக்கு காரணம் இருந்தது ரோசலின் அவ்வளவு தகவல்கள் வைத்திருந்தாள்.

 




மிருதுளா முதலில் இங்கே மகிபாலன் மதுரா பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா என்று பார்ப்பதற்காக தான் வந்தாள் .ஆனால் இங்கோ நிலைமை வேறுமாதிரி இருந்தது .வெளிப்படையாக காதல் கசியும் கண்களுடன் நிற்கும் இந்த ரோசலினைஅதுவும் இவ்வளவு தொழில் விபரங்களை மகிபாலன் சொல்லிக்கொடுத்து ஒரு முக்கியமான இடத்தில் வைத்திருக்கும் இவளைஇதோ இந்த கொதித்து கிடக்கும் கடற்கரை மணலில் உருட்டி விட்டால் என்ன என்ற எண்ணம் ஊர்மிளாவிற்கு வந்தது.

 

இவளை ரோசலினிடம்  விட்டுவிட்டு தள்ளிப்போய் வேலைகளை பார்த்துக்கொண்டிருந்த மகிபாலன் வேறு அவளுக்கு கோபத்தின் அளவை கூட்டிக்கொண்டு இருந்தான் .ஒருமுறைகூட இவள் பக்கம் திரும்பிப் பார்க்காமல் அவன் வேலையில் ஆழ்ந்தது மிருதுளாவிற்கு அதிக கொதிப்பை கொடுத்தது .எவளோ ஒருத்தியிடம் என்னை விட்டுவிட்டு அப்படி என்ன இவனுக்கு பெரிய வேலை பற்களை நற நறத்தாள் அவள்.

 

பரவசத்துடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள் ரோஸ்லின். அவளுடைய பார்வை மகிபாலன் மேல் இருப்பதை கவனித்து வேகமாக இருவருக்குமிடையே வந்து நின்று கொண்டாள் மிருதுளா .” என்ன சொன்னீர்கள் காற்றுக்கு சரியாக காதில் விழவில்லை ? ” தன் காதை குடைந்து கொண்டாள்.

 

” பாலா சார் ஒரு நாள் எங்கள் கும்பத்திற்கு வந்து குப்பத்து பெரியவர்களுடன் பேசினார். எங்களுக்கு எல்லாம் நிரந்தர வேலை வாய்ப்பு கொடுப்பதாக சொன்னார். எங்கள்  ஆளுங்க எல்லாம் அப்போ இவர் காரியம் முடிந்ததும் நம்மை கழட்டி விட்டுவிடுவார்.. அப்படின்னு பேசிக்கொண்டார்கள். ஆனால் நாங்கள் ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கியதுமே இங்கேயே எங்கள் எல்லோருக்கும் வேலைக்கு அப்பாயின்மென்ட் கொடுத்துவிட்டார் .அதுவும் அவரவர் தகுதிக்கு ஏற்ற வேலைகள் .நான் கொஞ்சம் படித்து இருப்பதால் எனக்கு அதற்கேற்ற மேற்பார்வை வேலை ” 

 




இப்படி அழகாக எங்கள் ஆட்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுத்தார் .இங்கே எங்களுடனேயே குடிசையில் தங்கிக் கொண்டார். கூழும் கருவாடும் எங்களோடு சாப்பிட்டார். இரவு பகல் பாராமல் சட்டையை சுழற்றி போட்டுவிட்டு அவரே வேலையில் இறங்குவார் பாருங்கள் அப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கும் .ஏதோ கனவில் மிதந்து கொண்டிருக்கும் ரோசலினின் கண்களில் சட்டையை சுழற்றி போட்டு வேலை பார்த்துக்கொண்டிருந்த மகிபாலனை உருவம் தெரிந்தது.

 

 

கூடவே எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறான் என்ற எண்ணமும் வரத்தான் செய்தது .இந்த அளவு கஷ்டப்பட்டதன் காரணம் நீதான்.. உனக்காகத்தான்என்று அவன் முன்பு பேசிய காதல் வசனங்களும் நினைவில் வர ஏனோ மிருதுளாவின் உடல் சிலிர்த்தது.

 

உனக்காக இல்லை உன்னுடைய சொத்துக்களுக்காக  வழக்கமாக அவள் மனதிற்குள் ஒலிக்கும் குரல் இப்போது மிகவும் பலவீனமாக பிசுறுகளோடு இருந்தது.

 

” நானும் பாலா சாரும் ஆறு மாதங்கள் ஒன்றாக கோட்டியா கட்டி இருக்கிறோம் .நிறைய நேரங்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்திருக்கிறோம் .” ரோசலின் மனம் முந்தைய கப்பல் கட்டும் இடத்திற்கு போய் விட்டதை உணர்ந்தாள். இவன் என்ன இப்படி இந்தப் பெண்ணின் மனதை கெடுத்து வைத்திருக்கிறான்இவனுக்கு இதே வேலை தானாபார்க்கும் பெண்களைஎல்லாம் மேலே யோசிக்க முடியாமல் மனம் கலங்கியது அவளுக்கு.

 

” உங்கள் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது இல்லையா ? ” கேட்டுவிட்டு ஏக்கமாக ஒரு பெருமூச்சு விட்டாள் ரோஸ்லின்.

 

” அவர் என் மாமா மகன் .இப்போது என் கணவர் ”  உரிமை தெறிக்க பேசி ரோசலினின் முக வாட்டத்தில் திருப்தியுற்றவள் திரும்பிப்பார்க்க மகிபாலன் இவள் பக்கமே திரும்பாமல் கட்டைகளை இணைத்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மேல் கவனமாக இருந்தான்.

 

” அதெல்லாம் தெரியும் .மாமா மகன் என்பதால் தானே அவர் உங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டி வந்தது .பாவம் அவருக்கும் தொழில் வேண்டுமல்லவா ? ”  ரோசலினின் நக்கலான பேச்சில் மிருதுளா அதிர்ந்தாள்.

 

” என்ன உளறுகிறாய் ? ” 

 

” உங்கள் இருவருக்குள்ளும் ஒத்துப் போவதில்லை என்று எனக்குத் தெரியும் .எப்போதும்  சண்டைதானாமே. என் அண்ணன் உங்கள் பங்களாவில்தான் தோட்ட வேலை பார்க்கிறார். அவர் கொஞ்சம் சொல்வார் .பாவம் பாலா சார் தொழிலுக்காக பார்த்து உங்களிடம் மாட்டிக்கொண்டார் ” 

 




இவள் என்னை பைத்தியம் என்று சொல்லாமல் சொல்கிறாள் கொஞ்ச நேரம் கழித்தே ரோசலின் வார்த்தை விஷமங்கள் மிருதுளாவிற்கு புரிய முகம் சிவந்தது .விடுவிடுவென்று மகிபாலனை நோக்கி நடந்தாள் . இவன் இப்படி என்னை திரும்பியும் பார்க்காமல்  இருந்தானானால் இவள் இப்படித்தானே கண்டதையும் நினைப்பாள் .மிருதுளா திரும்பிப்பார்க்க அந்த ரோசலின் அப்படியேதான் அதே இடத்தில் நின்று கொண்டு கண்டதையும்தான் நினைத்துக் கொண்டு இருந்தாள்.

 

மிருதுளா மகிபாலனிருந்த  இடத்தை விட்டு விலகி தூரமாக நடந்தாள். சற்றுநேரம் கடல் அலைகளை பார்த்தபடி நின்றிருந்தாள். எவ்வளவு நேரம் அப்படி நின்றிருந்தாளென்று தெரியாது .திடீரென்று அவளது இடை கதகதப்பான கரம் ஒன்றினால் பின்னிருந்து அணைக்கப்பட்டது.

 

” என்னடா குட்டி ரொம்ப போரடிக்குதா ? ” அன்பும் ஆதரவுமான மகிபாலனின்குரல் மிருதுளாவிற்கு விம்மலை தோற்றுவித்தது. சற்று நேரத்திற்கு முன் என்னை கண்டுகொள்ளாமல் அங்கே அதிகாரம் செய்து கொண்டிருந்த  அதே குரல் தான் என்னிடம் குழைந்து கொண்டிருக்கிறதாஇந்த நினைவு தோற்றுவித்த நெகிழ்வில் மிருதுளாவின் தேகம் தளர்ந்தது .தன் பின் நின்றவன் மேல் லேசாக சாய்ந்து கொண்டாள்.

 

” ம் ”  என்ற ஒற்றை எழுத்தை அவனுக்கு பதிலாக தந்தாள்.

 

” வீட்டிற்கு போகலாமா ? ” கொஞ்சலாய் கேட்டான் அவன்.

 

” உங்கள் வேலை முடிந்ததா ? ” 

 

” அது இருக்கிறது நிறைய .நான் அதனை பிறகு பார்த்துக் கொள்கிறேன். நீ கொஞ்சம் டல்லாக தெரிகிறாய் குட்டி. வா நாம் வீட்டிற்கு போகலாம் ” அவளை தன் பக்கம் திருப்பி இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

 

” ம் போதும் விடுங்க .என்ன இது வெளியிடத்தில் …” செல்லமாக சிணுங்கி அவனிடமிருந்து விடுபட முயல

 

” என் பொண்டாட்டியை நான் எங்கே வேண்டுமானாலும் கொஞ்சுவேன் ” குறும்பு குரலில் பேசி அவள் கன்னத்தில் நிமிண்டினான்.

 

திடீரென்று தொடங்கிவிட்ட அவனது காதலின் காரணம் புரியாமல் விழித்தாள் மிருதுளா .படபடத்த அவள் விழிகளில் சற்றுத் தள்ளி பாறைக்கு பின்னால் காற்றிலாடி வெளியே தெரிந்த ஷாலின் நுனி அங்கே ரோசலின் நின்றிருப்பதை தெரிவித்தது.

 

இவளுக்காக தான் இங்கே திடீரென்று காதல் செய்து கொண்டிருக்கிறானா கண்டு கொண்டவளுக்கு சற்று முந்தைய உங்கள் இருவருக்கும் ஒத்துப் போவதில்லை தானே என்ற திருப்தி கேள்வி கேட்ட ரோசலின் நினைவு வர மகிபாலனின் காதல் செய்கைக்கு கோபம் வரவில்லை. நிமிர்ந்து அவனைப் பார்த்து நாசுக்காக தோளில் சாய்ந்துகொண்டாள் .மகிபாலனின் கை உற்சாகம் பெற்று அவள் இடையில் அழுந்தியது.

 




” போகலாமா ? “கேட்டவனுக்கு மந்திரத்திற்கு தலையாட்டும் யாகத் தீ போல் தலையாட்டினாள் .ஒருவரோடு ஒருவர் உராய்ந்தபடி இருவரும் நடக்க கடல் அருகே இருந்த பெரிய பாறை ஒன்றின் மேல் இருந்து கடலின் உட்புறம் சிறிது தூரம் வரை போன ஒரு மரப் பாலத்தை கண்டு விழி விரித்தாள்.

 

” இது என்ன பாலம் மகி ? ” 

 

” இங்கே தரையில் கட்டைகளை இணைத்து வடிவமாக்கி கடலில் நீருக்குள் நிறுத்தி வைத்து தான் கப்பல்களை உருவாக்குவது .அதற்காக போடப்பட்ட பாலம் தான் இது. இதன் உள் முனை நாம் கட்டும் கப்பலில் முடியும் ” 

 

” நான் அதில் ஏறி பார்க்கவா ? ” ஏதோ உணர்வு உந்த வேகமாக பாலத்தின் பக்கம் நகர்ந்தவளை இழுத்து தன்னோடு இறுக்கி அணைத்தான்.”  நாம் வீட்டிற்கு போவதாக பேசிக்கொண்டிருந்தோம் ” 

 

அவனுடைய இந்த செய்கை மிருதுளாவின் உடலில் தீயை ஊற்றியது போல் ஆனது் சற்று முன்னும் அவளை தீண்டினான் தான் ஆனால் கவனித்துப் பார்த்தால் ஒழிய தெரியாத அளவு நாகரிகமான காதல் தீண்டல் .இப்போது இவன் செய்வதோஅவளை இம்மியும் நகர விடாது தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து அப்படியே அங்கிருந்து நகர்த்தி போகவும் செய்தான். மிருதுளாவின் ஓரக்கண் பார்வையில் பாறையின் பின் நின்றிருந்த ரோசலின் தளர்ந்த நடையுடன் நகர்ந்து போவது தெரிந்தது.

 

” இப்படியா செய்வீர்கள் ? ” காரில் ஏறியதும் மகிபாலனிடம் படபடத்தாள் .

 

” எப்படி செய்தேன் ? ”  நிதானமாக கேட்டான் .

 

” அதுஅவள்அந்த ரோசலின் மறைந்து நின்று நம்மை பார்த்துக் கொண்டிருந்தாள் தெரியுமா ,?  அவள் முன்னே வைத்து…” 

 

” தெரியும் .அதனால் தான் அப்படி செய்தேன் .அவள் மட்டுமல்ல அங்கே வேலை செய்து கொண்டிருந்த எல்லோருமே  நம்மை பார்த்திருப்பார்கள் .இதுவரை அவர்கள் நம்மைப்பற்றி பேசியதெல்லாம் தவறு என்று தெரியப்படுத்த வேண்டாமா ? ” 

 

அதற்காக பப்ளிக் பிளேஸில் வைத்து நீங்கள் இப்படி என்னிடம் நடந்து கொள்வீர்களா ? ” 

 

” என் மனைவி என்ற உரிமையை கொஞ்சம் வெளிப்படையாக காட்டிக் கொண்டேன் .இதில் தவறு ஏதும் இருப்பது போல் எனக்குத் தெரியவில்லை ” மகிபாலன் தோள்களை குலுக்கி கொண்டான்.

 

அவன் சொல்வது ஒரு வகையில் சரியாக தோன்றினாலும் ஏதோ நெருடியது மிருதுளாவிற்கு.

 




என் மீது உள்ள உரிமையை காட்டிக்கொண்டானா அல்லது என் தொழில் சொத்துக்கள் மீதுள்ள உரிமையை எல்லோருக்கும் தெரியப்படுத்தினானா மிருதுளாவின் உள்ளம் குழம்ப தொடங்கியது.

 

இந்த அவளது எண்ணத்தை ஒத்துப்போவது போன்றே இருந்தது ரோஸ்லின் மறு நாளைய பேச்சு.

 

 

 

 

 

What’s your Reaction?
+1
2
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!