karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 23

23

 

 

“ஹை இன்னைக்கு செம விருந்துதான்.. வெளுத்துக் கட்டிட வேண்டியதுதான்.. அண்ணி குழம்பா.. கிரேவியா..” மூடியிருந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபடி கேட்டுக் கொண்டிருந்த தாயின் உற்சாகக் குரலில் ஆவல் வந்த ஆராத்யா அந்த பாத்திரத்தினுள் எட்டிப் பார்த்தாள்.. உடன் “வீல்” என்று அலறினாள்..
“ஐயயோ என்ன மம்மி இது..? இதை எப்படி சாப்பிடுவீங்க..?”
“ஏய நண்டு உடம்புக்கு நல்லதுடி..”
“ஐய்யோ அதைப் பார்த்தாலே பயமாக இருக்கிறதே..”
“பார்த்தால் பயம்.. சாப்பிட்டால் போயிடும்..” சொன்னபடி வந்தான் ஆர்யன்.. நண்டுகள் நிறைந்திருந்த சட்டியை சிறு பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவளை அவன் விழிகள் சுவாரஸ்யமாய பார்த்தன..
ஆராத்யா அவனை முறைத்தாள்.. “நான் இதெல்லாம் சாப்பிட மாட்டேன்..”
“என்ன ஆரா உன் அம்மாவிற்கு நண்டென்றால் உயிர்.. நீ அதை சாப்பிட பயப்படுகிறாயே..” சுப்புலட்சுமி கேட்டபடி சட்டியிலிருந்த நண்டை கையிலெடுத்து ஆராய்ந்தாள்..
“ஐய்யோ அத்தை அதை தொடாதீர்கள்..”




“தொடாமல் எப்படி குழம்பு வைக்க முடியும் ஆரா..? அண்ணி சீக்கிரம் சுத்தம் பண்ணி குழம்பு வைக்க ஆரம்பிக்க..” அவசரப்படுத்திய தாயை கொலை செய்யும் வெறியோடு பார்த்தாள்..
“ஏய் ரமா இதை போய் யாராவது சாப்பிடுவாங்களா..?”
“நான் சாப்பிடுவேனே..”
“மனோ உனக்காகத்தான் கஷ்டப்பட்டு நானே ஓடையில் போய் பிடித்து கொண்டு வந்தேன்..” ஆர்யன் இடையிட்டான்..
“தேங்க்ஸ்டா பையா.. இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டிருவேன்..”
அவர்கள் இருவரின் கொஞ்சல் தாங்க முடியாமல் ஆராத்யா கத்தினாள்.. “இந்த நண்டுங்களை தூக்கி வெளியே எறிங்க..”
“ம்ஹீம் ஆரா.. இது கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டா.. இதில் உடம்புக்கு ரொம்ப நல்ல தேவையான சத்துக்கள் இருக்குது.. மனோ இரண்டு நாளாக இருமிக் கொண்டிருந்தாள்ல.. அதனால் நான்தான் ஆர்யனை நண்டு பிடித்து வரச் சொன்னேன்.. மிளகு தட்டிப் போட்டு நண்டு சூப் வைத்துக் குடித்தால் சளி கரைந்து இருமல் போய்விடும்..” கண்டிப்போடு கூடிய விளக்கம் கொடுத்தார் வரலட்சுமி..
“தாத்தாவிற்கு மூட்டுவலி இருக்குதுல்ல ஆரா அதுக்கு கூட இந்த நண்டு நல்லது..”
“உடம்பில் கொழுப்புச் சத்தை குறைக்கிறது.. இரத்த சோகையை தடுக்கிறது..”
ஆராத்யா காதுகளை மூடிக் கொண்டாள்.. “ஹப்பா போதும்.. போதும் க்ளாஸ் எடுக்காதீங்க.. ஹாஸ்பிடல்ல இருக்கிற பீலிங் வருது.. நீங்க எல்லோரும் சாப்பிடுங்க எனக்கு வேண்டாம்..”
“அதுசரி நாங்க மட்டும் சாப்பிடத்தான் இவ்வளவு விளக்கங்கள் கொடுத்தோமாக்கும்.. இதோட நன்மையெல்லாம் தெரிஞ்சிடுச்சுல்ல, இன்னைக்கு நீ கண்டிப்பாக நண்டு சாப்பிடுகிறாய்..” வரலட்சுமி உறுதியாக சொல்லிவிட்டு சுத்தப்படுத்திய நண்டுகளை எடுத்துக் கொண்டு உள்ளே போனார். சுப்புலட்சுமியும், மனோரமாவும் நண்டை கழுவிய இடத்தை சுத்தம் செய்து விட்டு உள்ளே சென்றனர்..
“அவர்கள் முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டனர் ஆரா..” ஆர்யன் சொன்னபடி அவனருகே வர, ஆராத்யாவின் பார்வை வரலட்சுமி கொண்டு போன நண்டு பாத்திரத்தின் மேலேயே இருந்தது..
அரைக்கவனமாக “என்ன..?” என்றாள்..
“நண்டுக்கறி இதை சரியாக்கும்..” ஆரியன் ஒற்றை விரல் நீட்டி அவள் கன்னத்து பருக்களை தொட்டுக் காட்டினான்.. ஆராத்யா அவன் கையை தள்ளி விட்டு முறைத்தாள்..
“நிஜம் ஆரா.. உனக்கு ஆய்லி ஸ்கின்.. அதனால்தான் பருக்கள் வருகிறது.. நண்டு சாப்பிட்டால் சருமத்தின் அதிகப்படி எண்ணெய் பசையை அது குறைக்கும்..”
“எனக்கொண்ணும் பரு போகவேண்டாம்.. நான் கொஞ்சம் அசிங்கமாகவே இருந்து விட்டு போகிறேன்..”
“இந்தப் பரு உனக்கு அசிங்கமாக இருக்குதுன்னு யார் சொன்னது..? லேசாக சிவந்து குமிழ் மாதிரி இந்த பரு உன் கன்னத்தில் மிக அழகாக இருக்கிறது.. ஆனால் உனக்கு வலிக்குமில்லையா.. அதனால்தான் அதனை போக வைக்க சொன்னேன்..”




ஆர்யனின் பேச்சிற்கு பொருத்தமாக அவனது பார்வையும் அவள் மேல் நெற்றி, புருவம், கன்னம், மூக்கு, வாய் என படிந்து படிந்து விலக ஆராத்யாவிற்கு மூச்சடைப்பது போலிருந்தது..
ம்ஹீம் இனிமேலும் இவன் அருகாமையில் இருக்கக் கூடாது.. இவன் இப்படி எதையாவது பேசி.. எதையாவது செய்து.. ஆராத்யா எதற்கும் இருக்கட்டுமென்று தள்ளி நிற்க, அந்த செய்கையில் ஆர்யன் புன்னகைத்து தானும் ஓரடி பின் நகர்ந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டான்.. ஆனால் முன்னிலும் தீவிரமாக தன் பார்வைக் கொத்தல்களைத் தொடர்ந்தான்..
சை.. பார்வையை பாரு.. இவன் மூஞ்சியும், மொகரையும்.. அவனுக்கு பயந்து ஓடுவது போல் இருக்கக் கூடாதென்றே அங்கேயே நின்றிருந்தாள்.. இப்போது தனது எண்ணத்தை மாற்றி, வீட்டிற்குள் ஓடி விடலாமா என்ற முடிவிற்கு அவள் வந்த போது..
“ஆராக்குட்டி..” என்ற அழைப்பு கேட்க, ஆராத்யாவின் முகம் மலர்ந்து வேகமாக திரும்பிப் பார்த்தாள்..
“யார் ஆரா..?” வந்து நின்றவர் யாரென தெரியாமல் ஆர்யன் கேட்க, “அப்பா” என அவனிடம் முணுமுணுத்துவிட்டு..
“டாட்..” என்ற கூவலுடன் தந்தையிடம் ஓடி அவர் தோள்களைப் பற்றினாள்..
“எப்படியடா இருக்கிறாய்..?” மாதவன் பாசமாக மகள் தலையை வருடினார்..
“பைன் டாடி.. ஹவ் ஆர் யு..? ஏன் டாடி இந்தப் பக்கமாக வந்திருக்கிறீர்கள்..?”
நண்டு கழுவுவதற்காக அவர்கள் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றடியில் நின்றிருந்தனர்.. மாதவன் அங்கேதான் வந்திருந்தார்..
“முன் வாசலில் என்னை யாரென்று கேட்டார்கள்..? உன் குரல் இந்தப்பக்கம் கேட்டது போலிருந்தது இங்கே வந்தேன்..” மாதவனின் முகம் இறுகியிருந்தது..
ஆராத்யாவிற்கு அப்பாவின் நிலை புரிந்தது.. மாமனாரின் வீட்டில் யாரெனக் கேட்கப்படும் மருமகனின் நிலையை கொடுமையானது..
“அது.. யாராவது சிறியவர்கள்.. அவர்களுக்கு உங்களை தெரியாதில்லையா டாடி..?” அப்பாவை சமாதானபடுத்த முயன்றாள்..
“சிறியவர்களெல்லாம் இல்லை.. நன்கு தெரிந்த பெரியவர்கள்தான்..” கசப்பு இழையோடியது மாதவனின் குரலில்.. ஆராத்யா தவித்தாள்.. இப்போது என்ன செய்ய..?
“வணக்கம் மாமா..” கொஞ்சம் உயர்த்திய குரலுடனும் வணங்கிய கைகளுடனும் ஆர்யன் அவர்களருகில் வந்தான்..
“நான் இந்த வீட்டின் முதல் பேரன்.. என் அப்பா சதுரகிரி.. ஆசீர்வாதம் பண்ணுங்கள் மாமா..” தயக்கமின்றி குனிந்து மாதவனின் கால்களைத் தொட்டான்..
மாதவன் திடுமென தன் காலில் விழுந்த இளைஞனை நம்ப முடியாமல் பார்த்து தயக்கத்தோடு அவன் தொட்டு எழுப்பினாள்.. ஆராத்யா அவனை ‘ஆ’ வென பார்த்துக் கொண்டிருந்தாள்..
“நன்றாயிரு தம்பி..” ஆசீர்வாதம் சொன்னார்..
“நம்ம வீடு நீங்க எந்தப் பக்கம் வந்தால் என்ன..? உள்ளே வாங்க மாமா..” மாதவனின் கைபற்றி உள்ளே அழைத்துப் போனான்.. லேசாக திரும்பி ஆராத்யாவை பார்த்து கண்ணடித்தான்..
“அடப்பாவி.. வேஷதாரி..” அப்பாவின் முதுகுக்கு பின்னால் கைநீட்டி அவனை வைதாள் ஆராத்யா..
“நான் ஆராத்யாவிற்கு அத்தான் முறை மாமா..” தேவையில்லாமல் தன் உறவு முறையை விளக்கியபடி மாதவனை உள்ளே கூட்டிப் போனான் ஆர்யன்..
அத்தான்.. பொத்தான் ஆராத்யா முணுமுணுத்துக் கொண்டாள்.. ஆர்யன் கிடைக்கும் நேரத்திலெல்லாம் தன்னை அத்தான் என அழைக்க சொல்லி வலியுறுத்தியபடி இருந்தான்.. ஆராத்யா வெகு ஜாக்கிரதையாக அவனை அப்படி அழைத்து விடாமல் ஜாக்கிரதையாக இருந்தாள்..
“தாத்தா மனோ அத்தை மாமா வந்திருக்கிறாரு..” மீண்டுமொரு பிரச்சினை வராமலிக்க சத்தமாக மாதவனை அறிமுகப்படுத்தியபடி வீட்டிற்குள் நுழைந்தான் ஆர்யன்..
“வாங்க மாப்பிள்ளை..” கை குவித்து மலையரசன் வரவேற்க, சதுரகிரி முகத்தில் சங்கடம், அவர்தான் சற்றுமுன் முன் வாசலில் வைத்து மாதவனை யாரென்று கேட்டவர்.. சதுரகிரிக்கு மாதவனை தெரியும் தங்கைக்காக அவரிடம் சண்டை போட்டிருக்கிறார்.. ஆனால் அது அப்போது இருபது வருடத்திற்கு முன்பு..
அப்போது மாதவன் தலை நிறைய கரு கரு முடியும், பெரிய அடர்த்தியான மீசையும் வெட வெடவென உயரமுமாக இருந்தார்.. இப்போது முன் முடி உதிர்ந்து பாதி முடி நரைத்து, மீசையை முற்றிலும் எடுத்து, சதை போட்ட உடம்பு, தொந்தியினால் குட்டையாக தெரிந்தார்.. சதுரகிரிக்கு சத்தியமாக மாதவனை அடையாளம் தெரியவில்லை.. யாரெனக் கேட்டார்.. இப்போது திரு திருவென விழித்தார்.. பேச்சு வராமல் தவித்தார்.. மாதவன் ஓரக்கண்ணால் அவரைப் பார்த்தபடி அமர்ந்தார்..
“வா.. வாங்க மாப்பிள்ளை..” பரமசிவம் தடுமாற்றமான அழைப்போடு வந்தார்.. ஆராத்யா வீட்டினுள் ஓடி எல்லோரையும் அழைத்து வந்தாள்.. என் அப்பா என ஒவ்வொருவரிடமும் பெருமையுடன் கூறிக் கொண்டிருந்தாள்..




மனோரமா சிறு குற்றவுணர்வுடன் அவரருகே வந்து “வாங்க ஆபிஸ் டூர் முடிந்ததா..?” என்றாள்.. மாதவன் அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
“என் மனைவியும், மகளும் இங்கே வந்ததிலிருந்து அவர்களிடமிருந்து எனக்கு எந்த தகவலும் இல்லை, எனது போனையும் அவர்கள் எடுக்கவில்லை.. அவர்களுக்கு இங்கே என்ன நடந்ததோ என்ற பயம் எனக்கு வந்தது.. அவர்கள் நலத்தை தெரிந்து கொள்ளத்தான் இங்கு வந்தேன்..”
மாதவனின் பட்டுத் தெறித்த பேச்சில் அனைவரும் மெல்லிய அதிர்வுடன் அமைதியாயினர்..
“சாரிங்க, இங்கே கொஞ்சம் வேலை அதிகம்.. அதனால்தான் உங்களுடன் பேச முடியவில்லை..” மனோரமாவின் குரலில் மன்னிப்பு கோரல்.. மாதவன் இப்போதும் மனோரமாவை திரும்பிப் பார்க்கவில்லை..
“சரி இரண்டு பேரும் கிளம்புங்க போகலாம்..” மாதவன் சொல்ல அனைவரும் அதிர்ந்தனர்..
“ஏய் என்னடி உன் அப்பா.. இப்படி..?” ஆர்யன் முணுமுணுக்க ஆராத்யா அவனை முறைத்தாள்..
“அவர் என் அப்பா..” அவனை எச்சரிப்பது போல சொன்னாள்.. ஆர்யன் பயம் போல் காட்டி கையால் வாயை மூடிக் கொண்டான்..
“மாப்பிள்ளை இன்னும் நான்கு நாட்களில் நம் வீட்டில் திருமணம் இருக்கிறது.. தம்பி மலையரசனின் மகள் சொர்ணாவிற்கு கல்யாணம்.. நீங்கள் அதுவரை இங்கே குடும்பத்தோடு தங்கியிருந்து கல்யாணத்தை சிறப்பாக நடத்திக் கொடுக்க வேண்டும்..” சதுரகிரி முன்பு தான் செய்த தப்பிற்கும் சேர்த்து குரல் குழைத்து வேண்டலாய் பேசினார்..
“சொர்ணா மாமாகிட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கோம்மா..” ஆர்யன் தங்கயையை தூண்ட, ஓரமாய் நின்றிருந்த சொர்ணா ஓடிவந்து மாதவனின் கால்களில் விழுந்தாள்..
“ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா..” மாதவனுக்கு வேறு வழி இருக்கவில்லை.. “நல்லாயிரும்மா..” தலையில் கைவைத்து ஆசி சொன்னார்..
“உங்க மருமகள் கல்யாணம் நீங்க இருந்து நடத்திக் கொடுக்கனும் அண்ணா..” சௌடாம்பிகை பவ்யமாக மாதவனை தங்கள் பக்கம் இழுக்க முயன்றாள்..
“ஆமாம் டாட்.. நாம் இருந்து சொர்ணா கல்யாணத்தை முடித்து விட்டு போகலாம்.. ப்ளீஸ்..” ஆராத்யா தகப்பனின் அருகில் அமர்ந்து கொஞ்சலாய் பேசினாள்..
மகளின் கிளிக் கொஞ்சலில் இளகிய தகப்பன் முகம் சிறிது இறுக்கத்தைக் குறைத்தது.. செல்லமாய் மகள் கன்னத்தில் தட்டிய மாதவன் எழுந்து கொண்டார்..
“சரி வருகிறேன்..”
“எங்கே போறீங்க..?”
“இங்கே தங்குங்க..”
“கல்யாணம் வரைக்கும் இருங்க..”
“கல்யாண வேலைகளை பார்க்க வேண்டாமா..?”
“வீட்டு மாப்பிள்ளை நீங்க இல்லாமல் எப்படி..?” ஆளாளுக்கு கேட்ட கேள்விகளுக்கு,
“எனக்கு இங்கே தங்க வசதிப்படாது..”
“நான் லாட்ஜில் தாங்கிக் கொள்கிறேன்..”
“கல்யாணத்திற்கு வந்து விடுகிறேன்..”
“என் வீட்டு கல்யாணத்தையும் நான் பார்க்க வேண்டும்..” இப்படி பதில் சொன்ன மாதவன் கிளம்பி போயே விட்டார்..
“அப்பாதான் கல்யாணத்திற்கு வந்துடுறேன்னு சொல்றாரே மம்மி.. பார்த்துக்கலாம்..” முகம் வாடி நின்ற தாயை சமாதானப்படுத்தினாள் ஆராத்யா..
தாங்கலான மனத்துடன் அனைவரும் கலைய ஆர்யன் மாடியேறப் போன ஆராத்யா கையைப் பிடித்து நிறுத்தினான்..




“உன் அப்பா என்ன சொல்லிவிட்டு போகிறார்..?”
“கல்யாணத்திற்கு வருவதாக சொல்லிவிட்டு போகிறார்..”
“ம்ஹீம் எனக்கு ஏதோ இடிக்கிறது..”
“இந்த இடத்தில் இடித்தால்.. அந்தப் பக்கம் கொஞ்சம் தள்ளி நில்லு…” சொன்னதோடு அவன் மார்பில் தன் வலது கையை பதித்து அவனை ஓரம் தள்ளினாள்..
அவள் தள்ளலுக்கு நகர்ந்த ஆர்யனின் பார்வை அவளது முகத்தின் மீதே நிலைத்திருந்தது..
“எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது ஆரா..” அவனது வார்த்தைகளில்.. அது வெளிப்பட்ட விதத்தில் ஆச்சரியமான ஆராத்யா அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
ஆர்யன் என்னை அணைத்து தோற்றேன் என்பது போன்ற அநாதரவு பார்வையுடன் நின்றிருந்தான்.. ஆராத்யா அவசரமாக அவனிருந்து பார்வையை விலக்கிக் கொண்டு மாடியேறிவிட்டாள்.. அப்பாவால் பிரச்சினை என்பது ஆராத்யாவால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.. ஆனால் ஆர்யன் பயந்தது போலத்தான் நடந்தது..

What’s your Reaction?
+1
5
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!