Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 44

44

” ஸோ முடிவு செய்துவிட்டாய் ” வெற்றிவேலன் இரு கைகளையும் குறுக்காக கட்டிக் கொண்டு டேபிளின் ஓரம் சாய்ந்து நின்றிருந்தான் .

” ஆமாம் அண்ணா .” முணுமுணுத்த கமலினி எதிரே பெட்டில் அமர்ந்து பார்வையை தரையின் மொசைக் புள்ளிகளுக்கு கொடுத்திருந்தாள் .

” அப்பாவிற்கு தெரியுமா ? “

” எ…எது …என்னது அண்ணா ? “

” உன் வாழ்க்கை குறித்த இந்த முடிவு நம்  அப்பாவிற்கு தெரியுமா என்று கேட்டேன் “




” மணிகண்டனை எனக்கு மணம் முடிக்க முடிவு செய்ததே நம் அப்பாதானே அண்ணா ? “

” அது எப்போதோ …முன்பு …இப்போது நாம் …”

” நம் நிலை கொஞ்சம் கீழிறங்கிய போது ஒரு சம்பந்தம் பேசுவது , அதுவே நம் நிலை கொஞ்சம் முன்னேறியதும்  மாறுவது …இப்படி அப்பாவை நினைத்தீர்களா அண்ணா ? ” படபடத்த தங்கையை கூர்ந்தான் .

” ரிலாக்ஸ் சிஸ்டர் .உடனே ஏனிந்த டென்சன் ? ” புன்னகைத்தான் . இப்போது எதற்கு இளிக்கிறான் ..? சகோதரனின் சிரிப்பு கமலினிக்கு கோபத்தை தந்த்து .

இல்லை வேண்டாம் .வெகுநாட்கள் கழித்து வந்திருக்கும் அண்ணனிடம் கோபம் காட்ட பிரியப்படவில்லை அவள் .ஆனால் இவன் ஏன் இந்நேரம் பார்த்து வந்து நிற்கிறான் ?

” என்ன எல்லோரும் கிளம்பி ஆயிற்றா ? ” வேலாயுதத்தின் குரல்.

” கிளம்பியாயிற்று பெரியப்பா ”  முதலில் கேட்ட குரல் சங்கவி யுடையது .இவள் எங்கே கிளம்புகிறாளாம் …கமலினிக்கு குழப்பம்.

” எங்கேயடி கிளம்புகிறாய் ? ” அறையை விட்டு வெளியே வந்து சத்தமாக கேட்டாள்.

” உன் முதலாளி வீட்டு ரிசப்ஷனுக்குத்தான் கண்ணு ” தன் அகலக் கரை பட்டுச் சேலையை சரி செய்தபடி வந்தாள் கனகம்.இவர்களுமா …? கமலினிக்கு தலை சுழன்றது .

” அப்பா எல்லோரையும் தான் கிளம்ப சொல்லியிருக்கிறார் கமலி. நீயும் கிளம்பு ” சொன்னபடி வெற்றி வேலன் தன் போனை எடுத்து எண்களை அழுத்தினான்.

நானே வேண்டாம் என்று நினைத்திருந்த வைபவத்திற்கு இவர்களெல்லாம் எதற்காம் ? கமலினிக்கு  மண்டை வெடித்துவிடும் போல் இருந்தது.

அப்பா அவருக்கு உதவி செய்த மனிதர் என்ற அளவில் அவர்கள் வீட்டு விசேஷத்திற்கு செல்ல நினைக்கலாம் .ஆனால் இந்த விழாவை தவிர்த்து விட நினைத்திருந்த கமலினி  குழம்பி நின்றாள் . அப்பாவிடம் காரணம் சொல்ல முடியாது. சட்டென்று கிளம்பிப்போய் சத்தமின்றி நின்று விட்டு வந்து விட வேண்டியது தான். கிளம்ப தொடங்கினாள் .வெற்றிவேலன் யாரிடமோ போனில் ”  நீ நேரில் வாடா உன்னை பேசிக் கொள்கிறேன் ” என்று மிரட்டலாக சொல்லிக் கொண்டிருந்தான் .இந்நேரத்தில் யாருக்கு மிரட்டலோ ?  கமலினி எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை.




சூரியனை பிரதி எடுத்ததுபோன்ற பிரகாசத்துடன் மேடையில் நின்றிருந்த மணமக்களை இரு கண்கள் நிறைய வாங்கிக் கொண்டாள் கமலினி. இதோ இது போதுமே மனம் நிறைந்தது அவளுக்கு .சந்தானபாரதியும் , பாரிஜாதமும் சௌபர்ணிகாவை தங்களுக்கு இடையே நிற்க வைத்தபடி வந்திருக்கும் உறவுகளையும் நட்புக்களையும் வரவேற்று கொண்டிருந்தனர். திருமணம் முடிந்ததும் இருவரும் தேனிலவுக்கு என்று வெளிநாடு சென்று திரும்பியிருந்தனர் .எங்கள் குழந்தை இல்லாத தேனிலவு எங்களுக்கு தேவை இல்லை என்று சொன்னபடி சந்தானபாரதி சௌபர்ணிகாவையும் தங்களுடன் கூட்டிச் சென்றது எல்லோருக்கும் வெகு மனநிறைவாக இருந்தது. தான் தவறான எதையும் செய்து விடவில்லை என்ற திருப்தி கமலினிக்கு உண்டானது.

இதோ அவர்கள் தங்கள் தேனிலவை முடித்து வந்த பின் இன்று ரிசப்ஷன் .தனது மருமகளுக்கு மறு திருமணம் என்பதனை ஊருக்கு காட்ட ராஜசுலோச்சனா சிறிதும் தயங்கவில்லை .மிகப் பெருமையாகவே இந்த விழாவை அந்த உயர்தர ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்தார் .மேடையின் வலது ஓரமாக நின்றபடி சன்ன ஜரிகை இட்ட வெண்பட்டில் கைகளை குவித்தபடி விருந்தினர்களை வரவேற்றவர் கமலினி யின் கண்களுக்கு தேவதையாகவே தோன்றினார். எப்பேர்ப்பட்ட பெண்மணி இவர் !  எப்போதும் போல் இப்போதும் அவரை வியக்காமல் இருக்க அவளால் முடியவில்லை.

” இந்த விழாவில் இன்னொரு முக்கியமான காரணமும் இருக்கிறதாமே உனக்கு தெரியுமா அக்கா ? ” சங்கவி இவள் காதை கடித்தாள்.

” என்னவாம் ? “அசிரத்தையாய்  கேட்ட கமலினியின் பார்வை தள்ளி தூரத்தில் இருந்தது .அங்கே விஸ்வேஸ்வரன் இருந்தான். புல்  ஒயிட் சூட்டில் அப்போதுதான் வானிலிருந்து  தரை இறங்கிய இந்திரகுமாரனை போல் இருந்தான்.

அவனது தோற்றத்தை ரசித்த அடுத்த நொடியே கமலினியின் கண்கள் அசூசையையாய்  சுருங்கியது. காரணம் அவன் அருகில் இருந்த நிகிதா. இவள் எங்கே இங்கே வந்தாள் ? .இருவரும் ஒருவர் தோளை ஒருவர் உரசியபடி சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் கமலினி யின் அடிவயிறு கலங்கி நெஞ்சு காந்தியது. அன்று என்னென்னவோ சொல்லி போனாளே… இன்று இப்படி உராய்ந்து கொண்டிருக்கிறாளே…? கமலினிக்கு உடனே எழுந்து சென்று அவள் தோள்களை பிடித்து உலுக்க வேண்டும் போல் இருந்தது.

” உங்கள் முதலாளிக்கு இன்று திருமண நிச்சயம் செய்யப் போகிறார்களாமே ? அப்படியாக்கா ? ”  சங்கவியின் கேள்வி மண்டையில் உரைக்க கமலினி திடுக்கிட்டாள்.

இது உண்மையா…?  திருமணம் முடிந்ததும் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் அவள் கிளம்பி வந்த நாளிலிருந்து விஸ்வேஸ்வரனை சந்திக்க முடியவில்லை. கடைக்கு அவன் சரியாக வருவதில்லை. இவளுக்கு வேலைகளை கொடுத்து விட்டு வரும் முன்பே போய்விடுவான் .பாரிஜாதம் ஹனிமூனுக்கு சென்றுவிட கடையில் தனித்திருந்தது கமலினி மட்டும்தான் .அவளும் எதிர்பார்த்த இவ்வகை நாட்கள் அவள் விருப்பம் என சுழன்று சென்று இருந்தது .ஆனால் இப்போதோ இது என்ன …?

இன்னமும் நிகிதாவுடன் உரசல் மாறாமல் இவள் பக்கம் திரும்பாமல் பேசிக்கொண்டிருந்த விஸ்வேஸ்வரன் இருக்கலாமோ…?  என்ற சந்தேகத்தை இவளிடம்  விதைத்தான். அப்படியே இருந்தால்தான் என்னடி ?  இப்படி விடுபட தானே நீயும் விரும்புகிறாய் ?  அவள் மனச்சாட்சி அவளை இடித்தது .தனது ஏமாற்றத்தை கமலினி முடிந்தவரை மறைத்துக் கொண்டாள்.

பரிசு பார்சலுடன் மேடை ஏறிய போது எதிர்கொள்ள நேரிட்ட ராஜசுலோச்சனாவின் கூர்மையான பார்வை துளைக்க , கை நடுங்க பார்சலை பாரிஜாதத்தின் கைகளில் சேர்த்து விட்டு நகர முயன்றவளை அவள்  கெட்டியாக பிடித்துக் கொண்டாள் . ” எங்கே ஓடுகிறாய் ? உன்னிடம் நிறைய பேச வேண்டும் . இங்கேயே நில் ” கமலினி நகர முடியாமல் தவித்தாள் .

அவளது சொந்தங்கள் மேடையிலிருந்து இறங்கி விட விஸ்வேஸ்வரன் சரியாக அவள் அருகே வந்து நின்றான் .கேமராக்கள் இவர்களை தம்பதிகளுடன் இணைத்து கண் சிமிட்டின.

” உன் சொல்படி நிகிதாவையே திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன் ” விஸ்வேஸ்வரன் இவள் பக்கம் குனிந்து முணுமுணுக்க கமலினிக்கு கை கால்கள் வெல வெலத்தது.

” வாழ்த்துக்கள் ”  குரல் நடுங்கியது அவளுக்கு .விஸ்வேஸ்வரன் அடுத்த நொடி மேடையிலிருந்து இறங்கி காணாமல் போனான். சற்று நேரம் கழித்து பார்த்தபோது தொலைவில் வெற்றிவேலனுடன் நின்று கொண்டிருந்தான்.

” இது என்ன சாரினு இதைக் கட்டிக் கொண்டு வந்திருக்கிறாய் கமலினி ? உனக்காக நான் புதுப் பட்டு சேலை எடுத்து வைத்திருக்கிறேன். உள்ளே போய் அதை மாற்றிக் கொண்டு வா ” பாரிஜாதம் இவளை அதட்டினாள் .

கைக்கு கிடைத்த ஏதோ சேலையை சுற்றி கொண்டு வந்திருந்தாள் கமலினி . ” பரவாயில்லை மேடம் இருக்கட்டும்.”

” போ என்கிறேனே. இந்த திருமணத்தின் மையப்புள்ளியே நீதான். இப்போது நீ இப்படி நிற்பாயா ?  போய் சேலையை மாற்றி கொண்டு வா ”  இப்போது பாரிஜாத்த்திடம்  அதிகாரம் வந்திருந்தது .கமலினி மறு பேச்சு பேச முடியாமல் உள்ளே சென்றாள்.

உயர்தர க்ரீம் கலர் பட்டில்  கெட்டியான அரக்கு  தங்க பார்டர் வைத்திருந்த அந்த மென்மையான பட்டு கமலினியின் மேனியில் ஆசையாக படிந்தது. உடன் அவள் அணிவதற்காக வைத்திருந்த தங்க ஆபரணங்கள் அவளுக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை. அவள் அன்றாடம் கடையில் அணிபவை தானே …அதேபோல் இங்கும் என்று எண்ணியபடி அவற்றையும் அணிந்துகொண்டு அழகுக்கலை பெண்ணின் லேசான அலங்காரத்தையும் ஏற்றுக்கொண்டு மீண்டும் மேடைக்கு வந்தாள்.

உடன் அவள் கண்கள் இயல்பாக அவனை தேடியது .எப்போதும் கடையில் அவளது அலங்காரங்கள் முடிந்ததும் தானாக அவனைத்தான் கண்கள் தேடும் .அதுபோல் இன்றும் .விஸ்வேஸ்வரன் அவளைப் பார்க்கவில்லை. தூரமாக நின்று இருந்தான். உடன் வெற்றி வேலனுடன்  இப்போது மணிகண்டனும் இருந்தான். கமலினி யின் பார்வை விஸ்வேஸ்வரனை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தது. இவனது புல் ஒயிட்  சூட்டுக்கு என்னுடைய இந்த கிரீம் சில்க் சாரி கரெக்ட் தானே ?  இப்படி ஓடிய எண்ணத்தை அழிக்க முயன்று தோற்றுக் கொண்டு இருந்தாள் அவள்.

” என் அழைப்பை ஏற்று  என் வீட்டு திருமணத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் என் நன்றிகள் ” ராஜசுலோசனா மைக்கில் பேசிக்கொண்டு இருந்தார்.

” ஒவ்வொரு மாமியாரும் ஒவ்வொரு தகப்பனாரும் கூட தனது மகள் மருமகளுக்கு இதுபோல் ஒரு வாழ்வை அமைத்துத் தருவதற்கு தயங்கக்கூடாது .இதுவே இங்கே நான் வைக்கும் வேண்டுகோள். சமூகத்தில் சொல்லும் நிலையில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற நல்வாழ்வு களை தயக்கமின்றி செய்தால்தான் நம் நாட்டுப் பெண்களுக்கு பாதுகாப்பும் பரிவும் தொடர்ந்து கிடைக்கும் .பெண்கள் மதிக்கப்படாத உலகம்….”




ராஜசுலோசனா தொடர்ந்து பேசியபடி செல்ல கமலினியின் நினைவுகள் பின்னோக்கி உருண்டன .இப்போது பெண்களுக்கென இவ்வளவு பரிவாக ஆதரவாக பேசும் இவர் அன்று ஏன் அப்படிப் பேசினார்? அவள் இதயம் கலங்கியது .இதோ இந்த நல்ல பெண்மணியின் பரிவையும் பாசத்தையும் பெற கொடுத்து வைத்திருக்க வேண்டுமே. அந்த வகையில் பாரிஜாதம் பாக்கியசாலி .எனக்குத்தான் அந்த கொடுப்பினை இல்லை .இமைகளை சிமிட்டி கண்ணீரை மறைத்தாள்.

அன்று சந்தானபாரதி – பாரிஜாதம் பற்றி கமலினி சொல்லி முடித்ததும் ராஜசுலோச்சனாவை நோக்கினாள் .அவ்வளவு நேரமாக அவள் தான் பேசும் விஷயத்தின் கனம் காரணமாக அவரது முகம் பார்க்க தயங்கி அங்குமிங்குமாக அவரை சுற்றி சுற்றி பார்வையை அலையவிட்டு பேசி முடித்து இருந்தாள். இப்போது அவரை பார்த்தவுடன் அவள் மனம் துள்ளியது .கற்பூர ஆரத்தியில் தெரியும் கருவறை அம்மனின் முகம் போல ஒளிர்ந்து கிடந்தது அவரது முகம்.

ஆனால் இது சில நிமிடங்கள் தான். கண் சிமிட்டி மீண்டும் கமலினி பார்த்தபோது அவரது முகம் பழையபடி உணர்ச்சி துடைத்து மாறியிருந்தது. அக்கணத்தில் அவர் அப்படியே விஸ்வேஸ்வரனை நினைவுக்கு கொண்டு வந்தார் .முக்கியமான நேரங்களில் எல்லாம் இப்படித்தான் அவனும் மூஞ்சியை வைத்துக் கொள்வான். தாயைப்போல பிள்ளை கசப்புடன் நினைத்தாள்.

” என் மருமகள் விசயம் நான் பார்த்துக்கொள்கிறேன். இதனை எனக்கு தெரியப்படுத்தியதற்கு உனக்கு நன்றி .வேறு என்ன ? ” அவரது கேள்விக்கு விழித்தாள்.

” வேறு என்ன ? “

” அடுத்து உன் விசயம் பேசலாமா  ? உனக்கும் விஷ்வாவிற்கும்  இடையில் என்ன ? ” அவரது நேரடியான கேள்வியில் அதிர்ந்தாள்.

” அ… அது… வந்து…” அவளது திணறலை கையுயர்த்தி நிறுத்தினார்.

” இங்கே பார் எனது மருமகளின் நல்ல வாழ்வுக்கு ஒரு வழி சொன்னாய் . அது முற்றிலுமாக நான் ஏற்றுக்கொள்ளக்கூடியது .நன்மை தீமைகளை ஆராய்ந்து அதற்கான நடவடிக்கையை எடுப்பேன். ஆனால் உன் விஷயம் அப்படி இலகுவாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. என் கடையில் வேலைக்கு சேர்ந்த பெண் ஒருத்தி கடையின் முதலாளி ஸ்தானத்திற்கு உயர்வது என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. இப்போது சொல் , நீ என் மகனின் வாழ்விலிருந்து விலகி கொள்கிறாயா ? என் மருமகளுக்கான  வாழ்வை நான் முன்னெடுக்கிறேன் .”  அவரது அதிகாரம் அதிர்வூட்ட  ஸ்தம்பித்து நின்றாள் கமலினி.

” உன் பதிலில் தான் நான் பாரிஜாதம் விஷயத்தில் அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும் ”  கறாராக ஒலித்தது அவரது குரல்.

” உங்களை நான் எப்படி நம்புவது ? ” கமலினி யின் குரலிலும் கறாருக்கு பஞ்சமில்லை.

” எனது அடுத்தடுத்த வேலைகளை பார்த்துவிட்டு முடிவை சொல்லு “

ராஜசுலோச்சனா சொன்னது போன்றே சந்தான பாரதியைப் பற்றி விசாரிக்க இரண்டு வாரங்கள் எடுத்துக் கொண்டார் போலும். மூன்றாவது வாரம் பாரிஜாதத்திடமிருந்து கமலினிக்கு அழைப்பு , அத்தை அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக வீட்டிற்கு அழைத்து பூரித்தாள் .ராஜசுலோசனா வை பற்றி அவ்வளவாக அபிப்ராயம் இல்லாத கமலினி அன்று அவரது வீட்டில் அவர் பேசிய பேச்சில் அவரின் மீது மிகுந்த மரியாதை கொண்டாள். இப்படிப்பட்ட சிறந்த பெண்மணிக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாமே.. அவள் மனம் ராஜசுலோச்சனா பால் மரியாதையாக பணிவுடன் சரிந்தது. ஒத்து அரவணைத்து இருந்த மூவரையும் திருப்தியாய் பார்த்து விட்டு வீட்டை விட்டு வெளியேறினாள் . அவர்கள் வாழ்வையும் விட்டுத்தான்.

” இதோ இங்கே இப்போது எனது இரண்டாவது மகனின் நிச்சயதார்த்தத்தை நடத்த போகிறேன் ”  ராஜசுலோச்சனா வின் குரல் அந்த ஹால் முழுவதும் ஒலித்தது அந்த இடம் பரபரப்புற்றது.

What’s your Reaction?
+1
28
+1
17
+1
1
+1
0
+1
1
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Kurinji
Kurinji
4 years ago

Raji ma etarkindha paritsai.viswa ,nikiyai vaichu tamarai mugam vaada vaicitiye.kamali anagal kuttam kattam kattitaanga.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!