Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 35

35

” ஷிட் …இதை யார் பாதையில் வைத்தது ? ” விஸ்வேஸ்வரனின் கால் பட்டு உருண்ட பித்தளை உருளியில் அழகாக அடுக்கப்பட்டிருந்த ரோஜாக்கள் இப்போது கடை முழுவதும் நீரோடு சிதறியிருந்தன .கடை நுழைவில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த உருளி அது . வழக்கமான இடத்தில் தான் அது இருந்தது . விஸ்வேஸ்வரனின் கோபம்தான் பாதையை விட்டு அவன் நடை பிசகி உருளியை உதைக்க வைத்திருந்தது.

தரையில் உருண்ட  உருளியாகவோ சிதறுண்டு கிடந்த ரோஜாக்களாகவோ தன்னை உணர்ந்தாள் கமலினி. அவள் இருந்த பக்கம் கூட திரும்பிப் பார்க்காமல் நடந்தான் விஸ்வேஸ்வரன் .அகன்று விரிந்திருந்த அவன் தோள்களின் துடிப்பும் கூட அவனது ஆத்திரத்தை சொல்லின.




இவனை எப்படி மாற்றுவது கமலினிக்கு பெருமூச்சு வந்தது. எதிரே இருந்த கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தில் கண்ணில் பட்ட கழுத்து நெக்லஸை பார்த்தவுடன் ஒரு யோசனை அவளுக்குத் தோன்றியது .அந்த நெக்லஸ் அன்று அவளுக்கு அணிவதற்காக கொடுக்கப்பட்ட  மாடல் அணிகலன் .இதனைப்பற்றிய சில விவரங்களை தெரிந்து கொண்டால் வாடிக்கையாளர்களுக்கு அதனை விவரிக்க வசதியாக இருக்கும் அல்லவா ? ஒவ்வொரு நாளும் அணியும் நகைகளின் புள்ளி விவரங்கள் வரை தெரிந்துகொண்டுதான் நகை வாங்க வருபவர்களிடம் பேசுவாள் கமலினி .இப்போதும் இதன் விபரம் அறியும் சாக்கில் அவனிடம் சென்று பேசினால் என்ன…?

சரியான முடிவுதான் என்ற எண்ணத்தோடு லிப்டை நோக்கி நடந்த அவளின் கால்களை பின் இழக்க வைத்தது இன்னமும் தெறித்துக் கொண்டிருந்த அவளது கழுத்தின் வலி .முதல் நாள் அவனால் நெறிப்பட்ட அவளது குரல் வளை இன்னமும் வழக்கத்திற்கு திரும்பவில்லை .அப்போது…. இதோ இன்னும் சிறிது நேரத்தில் தனது கழுத்து எலு3ம்பு முறிந்து தான் செத்து விடவே போகிறோம் என்ற முடிவிற்கே  கமலினி வந்துவிட்டாள். நிலை குத்த தொடங்கிவிட்ட விழிகளை அசைத்து அவன் முகத்தில் நிறுத்தி கண்களை ஊடுருவினாள். இது சரியா அவனிடம் கேட்டன  அவள் விழிகள்.

அழுத்தம் குறைத்த விஸ்வேஸ்வரன் கைகளில் ஒரு வேகத்துடன் அவளை பின்னால் தள்ள கமலினி நிற்கமுடியாமல் தடுமாறி தரையில் விழுந்தாள்.

” கெட் லாஸ்ட் . இனி ஒரு நிமிடம் கூட இங்கே இருக்காதே. வெளியே போய்விடு .என்னை கொலைகாரனாக மாற்றாதே .’கத்தலோடு கண்ணாடி டேபிளில் ஓங்கி அறைந்தான். கிர்ரக் என்று டேபிளில் கீறல் விழுந்த சத்தம் கேட்டது .தடுமாறி நடுங்கிய கால்களை பதட்டத்துடன் கூட்டிச் சேர்த்து எழுந்து நின்று வேகமாக அறையிலிருந்து வெளியே வந்து விட்டாள் கமலினி.

அடுத்து அவள் உடனடியாக போனது பாரிஜாதத்தின் அறைக்கு. “உங்களுடைய விஷயத்தை விஸ்வேஸ்வரன் இடம் சொல்லிவிட்டேன் மேடம்”  பாரிஜாத்த்தின்  முகம் பயத்தில் வெளுத்தது.

” ஐயோ என்ன சொன்னார்…? ” 

” கொஞ்சம் கோபமாக இருக்கிறார். இது நாம்  எதிர்பார்த்தது தானே ?சில நாட்களில் சரியாகி விடுவார். நீங்கள் இரண்டொரு நாட்களுக்கு அவர் கண்களில் படாமல் இருந்து கொள்ளுங்கள் .உங்களை எச்சரிக்கை  செய்யவே  வந்தேன் ” 

பாரிஜாதத்தின்  பார்வை பட்டை பட்டையாக விரல் தடங்கள் பதிந்து கிடந்த கமலினி யின் கழுத்தை படிந்தது. ”  கமலினி இது… விஷ்வா உன்னை…” அவள் விரல்கள் நடுங்கின.

” அவர் கொஞ்சம் கோபமாக இருக்கிறார் என்று சொன்னேனே மேடம் . சரியாகிவிடும் கவலைப்படாதீர்கள் ” 

” விஷயத்தைச் சொன்ன யாரோ ஒருத்திக்கு இந்த கதி என்றால் எனக்கு…”  பாரிஜாதத்தின் தேகம் நடுங்கியது.

” அதெல்லாம் அவரால் ஒன்றும் செய்ய முடியாது .நீங்கள் கவலைப்படாதீர்கள் அவர் கண்ணில் மட்டும் போடாமல் ஒதுங்கியிருங்கள்.  பார்த்துக் கொள்ளலாம் .பேசாமல் உங்கள் அம்மா வீட்டிற்கு போய் விடுங்கள் ”  தனக்குத் தெரிந்த ஆலோசனைகளை சொல்லி அனுப்பி வைத்திருந்தாள் .

பாரிஜாதம் அம்மா வீட்டிலிருந்து வருவதற்குள்  விஷ்வாவை கொஞ்சமாவது சமாளிக்க வேண்டுமே …யோசித்தபடி லிப்ட்டில் விஸ்வேஸ்வரனின் அறைக்கு சென்று கொண்டிருந்தாள் .மூன்றாவது மாடியை லிஃப்ட் கடக்கும்போது நின்று பாரிஜாதம் உள்ளே ஏறினாள் 

” என்ன மேடம் …உங்களை நான் இங்கே வர வேண்டாம் என்று சொல்லி இருந்தேனே ” கமலினி கொஞ்சம் பதட்டமாக கேட்டாள் .

” அவ்வளவு எளிதாக இந்த குடும்பத்தையும் வீட்டையும் தொழிலையும் விட்டு போவதென்றால் தான் நான் ஏன் கவலைப்பட போகிறேன் கமலினி. நான் என் அம்மா வீட்டிற்கு போவதற்கும் சரியான காரணங்களை அத்தையிடம் சொல்ல வேண்டும் .பிறகு விஷ்வாவிடமும் கடைக்கு வராமல் இருப்பதற்கும் தகுந்த காரணம் சொல்ல  வேண்டும் .அப்படிநெல்லாம் நான் நினைத்த நேரத்திற்கு இங்கிருந்து அம்மா வீட்டிற்கு என்றாலும் போக முடியாதும்மா ” 

கமலினிக்கு பாரிஜாதத்தின் நிலைமை புரிந்தது .” சரி விடுங்கள் மேடம் .கொஞ்சம் ஜாக்கிரதையாக மட்டும் இருங்கள் ” 

‘ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்கிறேன் .நேற்று முழுவதும் வீட்டிலேயே விஷ்வாவின் கண்ணில் படாமல் தப்பி விட்டேன். இதோ இப்போதும் அவர் என்னை அழைத்தாலும் அழைத்து விடலாம் என்று பயந்துதான் மாடியில் போய் காபி ஷாப்பில் கொஞ்ச நேரம் உட்கார்ந்துவிட்டு வரப்போகிறேன் ” 

கமலினிக்கு பாரிஜாத்த்தை பார்த்தால் பரிதாபமாக இருந்தது. ”  சரி வாங்க மேடம் நானும் உங்களுடன் ஒரு காபி குடிக்கிறேன் ” இருவரும் ஏழாவது மாடி பட்டனை அழுத்தினர் .




” இன்னமும் இந்த தடம் தெரிகிறதே ” என பாரிஜாதம் வருத்த்துடன் அவள் கழுத்தை வருடி பார்த்துக் கொண்டிருந்த போது லிப்ட் இடையிலேயே நிறுத்தப்பட்டது .

லிப்ட் கதவு திறந்து வெளியே நின்றவன் விஸ்வேஸ்வரன். இரு பெண்களையும் பார்த்ததும் அவன் கண்களில் எரிமலைகள் துவங்கின .லிப்ட் வாசலை அடைத்தபடி நின்று கொண்டு இடுப்பில் கை தாங்கி பாரிஜாதத்தை முறைத்தான்.

அருகாமையில் நின்றிருந்த பாரிஜாதத்தின் உடல் நடுக்கத்தை கமலினி யால் உணரமுடிந்தது .விஸ்வேஸ்வரன் பார்வையிலிருந்து அவளை மறைக்கும் பொருட்டு கமலினி பாரிஜாதத்தின் முன் அவளை மறைத்தாற் போல்  வந்தாள் .இப்போது அவனது எரிமலைகள் லாவாக்களை கொட்டின . ஒரு கையை நீட்டி அலட்சியமாய் இருவிரல் சேர்த்து சொடக்கிட்டான் .

” ஏன் எங்கள்  ஸ்வர்ணகமலம் ஸ்டாப் தானே நீ …? இங்கே வேலை செய்யும் வேலைக்காரிகள் எல்லாம் லிப்டை உபயோகிக்க கூடாது .இது உனக்குத் தெரியாதா …? ” 

விஸ்வேஸ்வரனின்  ஏளனம் கமலினியை பலமாகத் தாக்கியது .அவள் கண்களை இறுக மூடி இந்த அவமதிப்பை விழுங்க முயற்சித்தாள் .பொறுத்துக் கொள் கமலினி இது பாரிஜாதம் மேலுள்ள உன்னுடைய கவனத்தை திசை திருப்பும் யுக்தி. நீ இதில் ஏமாறாதே .பொறுமை பொறுமை தனக்குத் தானே போதித்து கொண்டாள்.

பாரிஜாத த்தின் உடல் வெளிப்படையான நடுக்கத்திற்கு போவதை உணர்ந்த கமலினி அவளை முழுவதுமாக மறைத்தபடி நின்றாள். ஏனென்றால் விஸ்வேஸ்வரன் கோபத்தோடு லிப்ட்டினுள்  பாரிஜாத்த்தை  நோக்கி வர ஆரம்பித்து இருந்தான் .அவன் உள்ளே வரவும் லிப்ட் கதவு மூடிக்கொண்டு மேலேறத் துவங்கியது .

” ஏய் ஸ்டாப்… உன்னை வெளியே போகச் சொன்னேனே ” விரலை ஆட்டி எச்சரித்தபடி முன் வந்தவனை கைநீட்டி தடுத்தாள் கமலினி. அவளுக்கு தனது கழுத்து தடங்களும் , வலிகளும் நினைவு வந்தன .இவனுக்கு கோபம் வந்துவிட்டால் என்ன   செய்கிறானென அவனே அறிய மாட்டேனென்கிறானே … அவளது கை அவனை தடுக்கும் பொருட்டு அவன் மார்பில் பதிந்தது. உடனடியாக அவனை பின்னுக்குத் தள்ளும் முயன்றது.

” என்ன விஸ்வா இது ? சின்னக் குழந்தையின் அடம் போலிருக்கிறது .நான் உங்களை எவ்வளவு உயர்வானவராக நினைத்து வைத்திருந்தேன் தெரியுமா ? இப்படி கீழே இறங்காதீர்கள் .தயவுசெய்து வெளியே போங்கள் . ” பலம் அனைத்தையும் சேர்த்து அவனை பின்னுக்குத் தள்ள முயன்றாள் . அவளது முயற்சிகள் சிறிதும் பலிக்கவில்லை.

தன் மார்பை தள்ளியபடி நின்ற அவளை குனிந்து பார்த்தவன் அலட்சிய இதழ் அசைவுடன் தன் இரு கைகளையும் அவள் இரு தோள்களை பற்றி அப்படியே அவளை உயரத்தூக்கி அலட்சியமாக லிப்டின் பக்கவாட்டு சுவரில் மோதி தள்ளிவிட்டான். இப்போது பாரிஜாதகத்தின் நேருக்கு நேர் நின்று …

” இங்கே என்ன நடக்கிறது அண்ணி ? இவள் சொல்வது எல்லாம் உண்மையா ? உங்கள் மனதில் இப்படி ஒரு கல்மிஷம் இருக்கிறதா ? ”  ருத்ரன் தாண்டவம் ஆடினான் விஸ்வேஸ்வரனிடம்.

பாரிஜாதத்தின் பற்கள் தந்தியடிக்க துவங்கின .அவள் இரு கை எடுத்துக் கும்பிட்டாள் .”  என்னை விட்டு விடுங்கள் நான் போய்விடுகிறேன் ” 

” அவ்வளவு சீக்கிரமாக விட்டுவிடுவேனா ?எங்கள் குடும்ப கவுரவம் என்னாவது ? ” கர்ஜித்தான்

“அவர்கள் மனதை பாருங்கள் விஷ்வா .உப்புப் பெறாத உங்கள் குடும்ப கவுரவத்தை பார்க்காதீர்கள் “

மீண்டும் இருவருக்கும் இடையே வந்த கமலினியை அற்பப் பதரே என்பது போல் பார்த்தான். ”  ஏய் உன்னை அப்போதே வெளியே போகச் சொன்னேனேடி. இன்னும் ஏன் இங்கேயே இருந்து கொண்டு உயிரை வாங்கிக் கொண்டு இருக்கிறாய் ”  கத்தினான்.அவள் தோள் பற்றி தள்ளினான் .

” வேண்டாம் விஸ்வா . கொஞ்சம் நிதானப்படுங்கள். பிரச்சனையின் வெளியிலிருந்து யோசியுங்கள் .” மீண்டும் இருவருக்கும் இடையில் வந்திருந்தாள்

” ஏய் உன்னை அப்போதே வெளியே போக என்று சொன்னேனடி. பாரிஜாதத்தின் மேலிருந்த கவனம் பெயர்ந்து கமலினி தோள்களைப் பிடித்து தள்ளினான் . இப்போது அதையே கமலினி பதிலுக்கு அவனுக்கு செய்தாள். இந்த தள்ளுமுள்ளுவில் நின்றிருந்த லிப்டிலிருந்து  பாரிஜாதம் வேகமாக வெளியே ஓடிவிட்டாள்.

லிப்ட் இப்போது மொட்டை மாடியில் நின்று இருந்தது .விஸ்வேஸ்வரனும் கமலினியும் ஒருவரை ஒருவர் தள்ளியபடி மொட்டை மாடிக்கு வந்து விட்டிருந்தனர் .

” எங்கள் குடும்ப விஷயம்.  நீ தலையிடாதே” 

” இது உங்கள் குடும்ப விஷயம் மட்டுமல்ல .சரியாக சொல்லபோனால் இது ஒரு பெண்ணின் விஷயம். அவளது மனது சம்பந்தப்பட்ட விஷயம். ஒரு பெண்ணெனும் வகையில் இதனை நான் சரி படுத்தியே தீருவேன்” 

” உன்னைப் போல் ஒரு துரோகியை நான் சந்தித்ததே இல்லை. ஆக நீ ஆரம்பத்திலிருந்தே அண்ணியின் பக்கமே இருந்திருக்கிறாய் .அவர்களுக்காகத்தான் இங்கே வேலைக்கு வந்தாய். அப்படித்தானே ?” விஸ்வேஸ்வரன் பழிகளை அவள் மேல் தாராளமாக அள்ளி எறிந்தான்




” அவர்களுக்காக வேலைக்கு வரவில்லை .வேலைக்கு வந்த இடத்தில் அவர்களின் நியாயத்தைப் புரிந்துகொண்டேன் .நிச்சயம் அவர்கள் வாழ்க்கைக்காக இறுதிவரை போராடுவேன்” 

” இதற்காகத்தான் நீ என்னுடன் கூட நெருங்கி பழகினாயா ? ” விஸ்வேஸ்வரனின் குரலில் குரோதம் கொப்பளித்தது.

கமலினிக்கு சர்ரென கோபம் வந்தது. ” ஆமாம் .அப்படித்தான்.  எனக்குள்ளேயே எடுத்துக்கொண்ட அந்த உறுதிக்காக தான் உங்களுடன் பழகினேன். இல்லை என்றால் உங்கள்  மொகரையை எல்லாம் யாரால் பார்க்க முடியும் ? ” 

விஸ்வேஸ்வரனின்  கண்கள் சிவந்தன ஆக்ரோசத்துடன் அவளை அணுகி அவன் அவள் கையைப் பற்றி முறுக்கினான். ” என்னடி சொன்னாய் ? உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்க்க மாட்டாயா நீ ? உனக்கு நான் குறைவாக போனேனா ? ” 

” சை  கையை விடுடா பொறுக்கி. பார்க்க முடியாதபடி  இருக்கும் உன் மூஞ்சியை யாராலனா பார்க்க முடியும் ? ” 

கோபம்… உதிரும் வார்த்தைகளின் வீரியத்தை இருவருக்கும் உணர்த்தவில்லை .கையை விடுவித்துக் கொள்ள கமலினி போராட விடாமல் விஸ்வேஸ்வரன் இறுக்கிப் பற்ற ஒரு பெரும் போராட்டம் அங்கே நடந்தது.

” இங்கே என்ன செய்கிறீர்கள்  ? சிறு அதிர்வுடன் கேட்ட குரலில் பதறி இருவரும் பிரிந்து நிற்க , நம்பமுடியாமல் அவர்களைப் பார்த்தபடி நின்றார் வேலாயுதம்.

What’s your Reaction?
+1
24
+1
15
+1
2
+1
1
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!