karai purandoduthe kana Serial Stories கரை புரண்டோடுதே கனா

கரை புரண்டோடுதே கனா – 5

5

எதிரே நாற்காலியில் அமர்ந்திருப்பவனிடம் அந்த கம்பெனி எம்.டி என்பதற்குரிய எந்த அறிகுறியும் இல்லை.. “சம்மர் கட்” எனும் முறையில் தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தான்.. மீசையும் தாடியும் இருக்கிறதா இல்லையா என குழம்பும் வகையில் அவன் முகம் இருந்தது.. பார்த்ததும் அவன் முதலில் தெரிந்தது அவனது பெரிய மூக்குதான்.. கழுத்தை ஒட்டிப் பிடித்த க்ரே கலர் டி ஷர்ட் அணிந்திருந்தான்.. அதில் கறுப்பு கலரில் மின்னிய வாசகங்கள் ஆராத்யாவின் புருவம் உயர்த்த வைத்தது..
“ஐ ஆம் நாட் பாஸி.. ஐ ஜஸ்ட் ஹேவ் பெட்டர் ஐடியாஸ்..” – ஆராத்யாவிற்கு இந்த வாசகங்களுக்கு கைதட்ட தோன்றியது.. டி ஷர்ட்டில் பதிந்திருந்த பார்வையை உயர்த்தி அவன் முகத்தை பார்த்த போது, மிகச் சரியாக அவன் பார்வையை சந்தித்தாள், இவள் பார்வையை சந்தித்ததும் அவன் கண்கள் பளீரென மின்னின, அந்த மின்னல் ஏதோவோர் “சொடேர்” உணர்வை ஆராத்யாவினுள் இறக்கியது.. அவள் அவசரமாக தன் பார்வையை திருப்பிக் கொண்டாள்..




“யெஸ்..” என்றான்.. இப்போது அவனது பார்வை மூவருக்கும் பொதுவாக இருந்தது..
“குட் ஆப்டர் நூன் சார்.. நாங்கள்..” ரஞ்சித் ஆரம்பிக்க,
“நோ சார், கால் மீ ஆர்யன்..” கணீரென பேசினான்.. இந்த அணுகுமுறையில் மூவரும் வியந்து நிற்க, அவர்களுக்கு தன் முன்னால் இருக்கைகளை காட்டினான்..
“சிட் அன்ட் சே..”
“சார் நாங்கள் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்..” என ஆரம்பித்து தங்கள் தயாரிப்பை மூவருமாக விளக்கி முடிக்க, மௌனமாக இடையிடாமல் கேட்டான்.
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும்..?”
“உங்கள் கம்பெனி டூவீலர்களுடன் எங்கள் ஹெல்மெட்டுகளை இணைத்துக் கொள்ள வேண்டும்..”
“அது எப்படி..?”
“நாங்கள் வண்டியில் ஒரு சென்ஸார் கருவியை பொருத்தி விடுவோம்.. அது ஹெல்மெட்டோடு தொடர்பில் இருக்கும்.. வண்டியை ஆன் செய்யுவும் அந்த சென்ஸாரும் வேலை செய்ய ஆரம்பிக்கும்.. ஹெல்மெட்டை தலையில் போடவும்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும்.. இடையில் ஹெல்மெட்டை கழட்டினால் வண்டி தானாகவே ஆப் ஆகி விடும்.. அதனால் ஹெல்மெட் இல்லாமல் வண்டியை ஓட்ட முடியாது..”
ரஞ்சித்தின் நீண்ட அபிசியல் விளக்கத்திற்கு அவன் உதடு பிதுக்கினான்.. “இது சரியாக வருமென எனக்கு தோன்றவில்லை..”
மற்றவர்களைப் போல் அல்லாமல் இவர்களது நீண்ட விளக்கத்தை அவன் பொறுமையாக கேட்பதில் மகிழ்ந்து போயிருந்தவர்கள் இந்த பதிலில் முகம் வாடினார்..
“ஏன் சார்..?” ஆராத்யா மெல்ல கேட்க,
“கால் மீ ஆர்யன்..” குரலுயர்த்தினான் அவன்,
“சாரி சார்.. சாரி.. ஆ.. ஆர்யன் உங்களுக்கு எங்கள் ஹெல்மெட் பிடிக்கவில்லையா..? நாங்கள் அதனை உங்களுக்கு டெஸ்ட செய்துகூட காட்டுகிறோம்..”
“டெஸ்ட்.. அது நெக்ஸ்ட் ஸ்டெப்.. முதலில் எனக்கு இந்த ஐடியா பிடிக்க வேண்டுமில்லையா..?”
இதற்கு என்ன பதில் சொல்வது..? மூவரின் முகமும் வாடி விட்டது.. இப்படித்ததான் மற்ற தொழிற்சாலைகளிலும் விரட்டப்பட்டனர்.. என்ன ஐடியா இது..? ஓடுங்கள் என முகத்திற்கு நேராக கூடப் பேசப்பட்டனர், இங்கே மட்டும்தான் பொறுமையாக இவ்வளவு நேரம் உட்கார வைக்கப்பட்டு விபரங்களையும் கேட்கப்பட்டிருக்கிறார்கள்..
அதற்கு காரணமும் இருக்கிறது.. இந்த “ஆரா” கம்பெனி இப்போதுதான் தொடங்கப்பட்ட புது கம்பெனி.. இன்னமும் இதன் ப்ராண்டுகள் அதிக அளவில் மக்களிடையே புழக்கத்திற்கு வரவில்லை.. ஒரு பைக், ஒரு ஸ்கூட்டி, ஒரு மொபெட் மட்டும்தான் மார்க்கெட்டில் வெளி வந்திருக்கின்றன.. இது போலொரு சிறிய கம்பெனியுடன் இணைத்துக் கொள்வது தங்களுக்கு எளிதென்றே மூவரும் நினைத்திருந்தனர்.. இவனெனன்றால் இப்படி பேசுகிறானே..
“நாம் இன்னொரு நாள் சந்திக்கலாமே..?” அவன் கை திருப்பி வாட்சை பார்த்தான்.. அவர்களை எழுந்து போகச் சொல்கிறான்..
சட்டென இந்த சந்திப்பு முறிய ஆராத்யா விரும்பவில்லை.. இல்லை.. இவனிடம் பேசி எப்படியாவது சம்மதம் பெற வேண்டும்.. அவளது உள் மனம் கூக்குரலிட, தனது குரலை இளக்கி, முகத்தை மென்மையாக்கினாள்..
“மிகக் குறுகிய காலத்திலேயே அந்த வளர்ச்சி அடைந்த கம்பெனி இந்த “ஆரா” என்று கேள்விப்பட்டோம் ஆர்யன்.. முதலில் அதற்கு கங்கிராட்ஸ்..” குயிலாய் கூவியபடி கையை அவன்புறம் நீட்டினாள்..
வெளிர் தந்தமாய் தன் முன் நீண்ட கைகளை யோசனையுடன் பார்த்தான் அவன்.. புருவம் சுருக்கி அவள் முகத்தை ஆராய்ந்தான்.




“வெயிட் செய்து கொண்டிருந்த போது உங்கள் கம்பெனி ஹிஸ்டரியை படித்தேன் ஆர்யன், தனி ஒருவராக இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறீர்கள்.. யு ஆர் கிரேட் ஆர்யன்..” ஆராத்யா நீட்டியிருந்த தன் கரத்தை மடக்கிக் கொள்ளவில்லை.. உன்னை விட்டேனா பார்.. என்பது போல் பிடிவாதத்துடன் தன் முன் நீண்டிருந்த கரத்தை மெல்ல பற்றினான் அவன்..
“ம்..” என்றான் ஒற்றையெழுத்தாக..
“உங்களை பார்த்தாலே இன்னமும் காலேஜ் ஸ்டூடண்ட் போலத்தான் தெரிகிறீர்கள்.. நீங்கள் இந்த கம்பெனி எம்.டி என்றோ, இவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறீர்கள் என்றோ சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது.. செம மேன் ஆர்யன் நீங்க..” பேசியபடி போனவள் அவன் கையினுள் நசுங்கிய தனது கையை உணர்ந்து நிமிர்ந்து திணறலுடன் அவனைப் பார்த்தாள்..
அவன் பற்கள் அனைத்தும் தெரிய இதழ் பிரித்து சிரித்தான்.. இன்னமும் ஓர் அதிக அழுத்தலுடன் அவள் கையை பற்றி விடுவித்தான்.. “யூ ஆர் எ ஸ்வீட் கேர்ள்..” அவன் பார்வை அவள் முகம் கொத்தியது..
“இப் யூ டோன்ட் மைன்ட்.. உங்கள் பாக்டரியை நாங்கள் கொஞ்சம் பார்க்கலாமா ஆர்யன்.. ப்ளீஸ்..” தலை சரித்து சிணுக்கமாய் வழிய விட்ட அவள் வேண்டுதல் தனது இலக்கை தவறாமல் தைத்தது..
“போகலாம்..” சட்டென எழுந்து விட்டவனை ஆச்சரியமாகவே மூவரும் பார்த்தனர்..
இதுவரை எந்த கம்பெனியிலும் இதுபோல் பேக்டரி விசிட்டிற்கு அவர்களை அனுமதித்ததில்லை.. இங்கே இவ்வளவு சுலபமாக அதற்கு அனுமதி கிடைக்குமென மூவருமே எதிர்பார்க்கவில்லை..
“ஆரா இப்போ பேக்டரிக்குள்ள நமக்கென்ன வேலை..? எதற்கு வேலையை இழுத்து விட்டுக் கொள்கிறாய்..?” ரஞ்சித் பேக்டரியினுள் நுழையும் முன் நின்று ஆராத்யாவிடம் கிசுகிசுத்தான்..
“அதானே, இங்கே சுத்துற நேரத்தில் இன்னமும் இரண்டு கம்பெனி பார்க்கலாம்.. ஏன் ஆரா..?” ரூபிணியும் கிசுகிசுத்தாள்..
“சும்மா இருங்கப்பா, அப்படி எத்தனை கம்பெனி அலைவது..? கொஞ்சம் ஐஸ் வைத்து பேசி இந்த கம்பெனியிலேயே சேர டிரை பண்ணுவோம்ப்பா.. அந்த ஆர்யன் வயது குறைந்தவர்.. உங்களைப் போல் உண்டான்னு நாலு வார்த்தை கூடப் போட்டு பேசினோம்னு வைங்க.. சரின்னு தலையாட்டிடுவான்னு நினைக்கிறேன்.. இப்போ கூட பாருங்களேன் உடனே நம்மளை பாக்டரிக்குள்ளே விசிட் விட்டுட்டான்.. நீங்க இரண்டு பேரும் கண்டுக்காதீங்க.. நான் அவனிடம் பேசி நம்மோடு அக்ரிமெண்ட் போட வைக்கிறேன்..”
“என்ன வேறு எதுவும் புது ப்ளானா..?” பின்னால் கேட்ட அவனது குரலில் திரும்பி மூவரும் விழித்தனர்..
“எ.. என்ன ப்ளான் சார்.. சாரி ஆர்யன்..?” இறுதியான அவன் பெயர் உச்சரிப்பின் போது ஆராத்யாவின் வார்த்தைகளில் தேன் சேர்ந்திருந்தது..
“பேக்டரி விசிட்டை விட்டு விட்டு வேறு எதுவும் கம்பெனிக்கு போக ப்ளான் போடுகிறீர்களோ எனக் கேட்டேன்..”
“நோ ஆர்யன் அவ்வளவு சீக்கிரமாக உங்களை விட்டுவிட மாட்டோம்..” தங்கள் தேவையின் தீவிரத்தை சொற்களில் காட்டவில்லை ஆராத்யா.. உப்பு பிஸ்கெட்டின் மீது சீனித் துகள்களை தூவியிருந்தாள்..
“வெரி இன்ட்ரெஸ்டிங்..” வார்த்தைகளை போன்றே ஆர்யனின் பார்வையும் சுவாரஸ்யமாகவே இருந்தது.. கையை பாக்டரியினுள் நீட்டியவன்.. “கம்” என்ற அழைப்புடன நடந்தான்..
பேக்டரியின் இயந்திர செயல்பாடுகளிலோ, பாகங்கள் இணைக்கப்பட்டு முழு உருவம் உண்டாகும் வண்டிகளிளோ அவர்கள் கருத்து பதியவில்லை.. கம்பெனியின் மேனேஜர் அவர்களுக்கு விளக்க, இடையிடையே தானும் விளக்கங்கள் கொடுத்துக் கொண்டிருந்த ஆர்யனின் பார்வை ஆராத்யா மீதே இருந்தது..
ஆர்வங்களையும், விருப்பங்களையும் தன் பார்வைக்குள் திணித்துக் கொண்டு அவனை பார்த்தாள் ஆராத்யா, இடையிடையே உன்னைப் போல் ஒருவருண்டா.. எனும்படியான புகழ்தல் வாசகங்களை அவனை நோக்கி வீசியபடி இருந்தாள்.. அவற்றை கவனமாக செவிமடுத்த அவனது செயல்கள், அந்த புகழ்தலில் அவனது விருப்பத்தை வெளிப்படுத்த.. “ஆரா ஜெயித்துக் கொண்டிருக்கிறாயா..” மனதிற்குள்ளாகத் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டாள் ஆராத்யா..
“இது என்னுடைய வீட்டு அட்ரஸ்.. நாளை என்னை இங்கே வந்து மீட் பண்ணுகிறீர்களா..?” ஆர்யன் எடுத்து நீட்டிய கார்டு ஆராத்யாவின் கையை வெப்பச் சுடராய் சுட்டது.. திடுக்கிட்ட இதயத்துடன் பயமாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
ஏனெனில் இந்த அழைப்பை அவன் ரஞ்சித், ரூபிணியை விட்டு அவளுக்கு மட்டுமே கொடுத்தான்.. அவர்கள் கம்பெனி மேனேஜர் அளித்த ஏதோ ஓர் விளக்கத்திற்கு வந்த கொட்டாவியை அடக்கியபடி தலையசைத்துக் கொண்டு சற்று தள்ளி நின்றிருந்தனர்..
“அங்கே நிச்சயமாக நமக்குள் அக்ரிமெண்ட் போட்டுக் கொள்ளலாம்..” உறுதி சொன்னவனின் முகத்தில் எந்தக் கல்மிசமும் இப்போது ஆராத்யாவிற்கு தெரியவில்லை..
“சுயர் சார்..” தயங்காமல் அவன் கார்டை வாங்கி தனது பேக்கிற்குள் பத்திரப்படுத்தினாள்..
“எனக்கு அடுத்த வேலை வந்துவிட்டது.. போகலாமா..?” எதையோ முடித்த திருப்தி விரைவுடன் அவன் பேக்டரியை விட்டு வெளியேறி விட, இவர்கள் மூவருமே அவனைப் பின் தொடர்ந்தனர்..
“மீண்டும் சந்திக்கலாம்.. இன்னொரு இனிமையான சந்தர்ப்பத்தில்..” மூவருக்கும் கைகுலுக்கி விடை கொடுத்தான்.




சிவந்த கண்களுடனும், நம நமத்த குரலுடனும் தன் தட்டில் சாதம் பரிமாறிய தாயின் முகத்தை நிமிர்ந்து பார்த்த ஆராத்யாவிற்கு எரிச்சலே வந்தது.. அப்பாவிற்குத்தான் பிடிக்கவில்லையே பிறகும் இந்த அம்மாவிற்கு ஏன் இத்தனை பிடிவாதம்..? இத்தனை வருடங்களாக பிரிந்தவர்கள் பிரிந்தவர்களாகவே இருந்து விட்டு போகட்டுமே.. இந்த எண்ணம்தான் அவளுக்கு..
“ஆரா இன்னைக்கு உன் கூட படுத்துக்க போகிறேன்டி..” சோர்வான குரலுடன் தன் அறைக்கு இரவில் படுக்க வந்த தாய்க்கு மௌனமாக நகர்ந்து படுத்து கட்டிலில் இடமளித்தாள்..
வழக்கமாக தாய், தந்தையின் சண்டையை சமாதானப்படுத்த இந்த முறை அவள் முயலவில்லை.. கண்களை மூடிக் கொண்டு மறுநாள் சந்திக்க போகும் ஆர்யனிடம் பேசும் பேச்சுக்களை மனதினுள் ஓட்ட ஆரம்பித்தாள்.
தன் தோழர்களிடம் ஆர்யனின் தனி அழைப்பை பற்றி அவள் எதுவும் கூறவில்லை.. ரஞ்சித்தும், ரூபிணியும் இந்த கம்பெனியும் நம்முடன் ஒத்து வரவில்லை என்ற முடிவிற்கு வந்திருந்தனர்.. அவர்கள் கல்லூரியில் செமஸ்டர் நெருங்க, ஸ்டடி ஹாலிடேஸ் வந்துவிட்டிருந்தது..
இந்த கம்பெனிகளை கவர் பண்ணுவதை கொஞ்ச நாட்கள் நிறுத்தி விட்டு, படிப்பில் கவனம் செலுத்தி படித்து தேர்வுகளை எழுதி முடித்து விட்டு, பிறகு மீண்டும் இந்த அலைதலை தொடங்கலாம் என மூவருமாக திட்டமிட்டு முடித்திருந்தனர்..
அவர்களின் பொதுவான இந்த திட்டத்தின் பின் ஆராத்யா தனியாக தானொரு திட்டம் வைத்திருந்தாள்.. அந்த ஆர்யனை நேரில் சந்தித்து பேசி எப்படியாவது அவனுடன் தங்கள் ப்ராஜெக்டை இணைப்பதற்கான சம்மதத்தை வாங்கிவிட வேண்டும், இதனை தோழர்கள் அறியாமல் ரகசியமாக செய்து முடிக்க வேண்டும்.. பிறகு அவர்களது பிரமித்தல் பார்வையை கண்டு காலரை உயர்த்தி விட்டுக் கொள்ள வேண்டும்..
ஆராத்யாவின் கை இப்போதே தனது கலரை உயர்த்தி விட்டுக் கொண்டது.. இந்த எண்ணத்தோடுதான் மறுநாள் ஆர்யன் வீட்டு வாசலில் நின்று அழைப்பு மணியை அடித்தாள்..
“மோஸ்ட் வெல்கம்..” வரவேற்றபடி கதவை திறந்த ஆர்யனின் முகத்தில் என்ன இருந்தது..?

What’s your Reaction?
+1
3
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!