Serial Stories thanga thamarai malare தங்க தாமரை மலரே

தங்க தாமரை மலரே – 33

33

” சேலத்திற்கு எப்போது கிளம்பலாம் கமலினி ?  ” கேட்டவனை விழிகளால் எரித்தாள்.

“எதற்கும்மா இத்தனை கோபம் ? நான் நம் தொழில் விவரம் பேசிக்கொண்டிருந்தேன். இளம்பிள்ளை சேலத்திற்கு அருகில் தானே இருக்கிறது .அங்கே தானே புடவைகள் கிடைக்கின்றன ” 

” உங்களோடு சேர்ந்து தொழில் செய்யப் போகிறேன் என்று நான் சொன்னேனா ? ” 

” உன் அப்பா சொன்னாரே. தாராளமாக நீங்கள் என் மகளுடன் சேர்ந்து கொள்ளலாம் என்று சொன்னாரே ” 




” என்னது…?  என்ன உளறுகிறீர்கள்…? “

” தொழிலில் கமலினி .உன்னோடு தொழிலில் சேர்ந்து கொள்ளச் சொல்லி இருக்கிறார்” 

” என் அப்பாவை தொழிலை காட்டி மயக்கி என்னை அடைய நினைக்கிறீர்களா ? ” கமலினியால்  இதனை கேட்காமல் இருக்க முடியவில்லை.

விஸ்வேஸ்வரனின் முகத்தில் மாறுதல் இல்லை. ”  அப்படியே என்றாலும் அதில் என்ன தவறு…? ” நிதானமாகக் கேட்டான்.

” இப்படிப் பேச உங்களுக்கு வெட்கமாக இல்லையா ? ” 

” இதிலென்ன வெட்கம் கமலி ?  நீ கேள்விப்பட்டிருப்பாய்தானே…?  அரசர் காலங்களில் அரசகுமாரிகளை மணமுடிக்க ராஜ குமாரர்கள் தங்களது திறமைகளை அரசரிடமும் அவரது குமாரிகளிடமும் காட்டுவார்கள். அவர்கள் வைக்கும் போட்டியில் வென்று அரச குமாரியை கைபிடிக்க துடிப்பார்கள் .அன்று ஆணின் இலக்கணமாக  போரும் வீரமும் இருந்தது .இன்று காலமாற்றத்தில் தொழிலும் , சம்பாத்தியமும் ஆணின் இலக்கணமாக இருக்கிறது .எனது திறமையை நான் காட்ட நினைக்கிறேன் .முடிவெடுக்க வேண்டியது உன் தந்தையின் கையில் இருக்கிறது” 

விஸ்வேஸ்வரனின் விளக்கத்தில் கமலினி அயர்ந்து போனாள். இவன் எப்படிப்பட்ட எத்தனாக இருக்கிறான் .இவனோடு பேசவே முடியாது கமலினி மிகவும் சோர்ந்து போனாள்.

” நானும் கிரேட் மேன் தான் கமலினி. ” விஸ்வேஸ்வரனின் பேச்சில் திக்கென நிமிர்ந்தாள் . இந்த வார்த்தையை அவள் முதல் நாள் மணிகண்டனை பிரிந்து வீட்டிற்குச் செல்லும் போது தான் அவனைப் பார்த்துச் சொன்னாள் .அது எப்படி இவனுக்கு ….? சந்தேகத்துடன் அவனை பார்த்தாள்.

” அருகில் இருப்பவர் அறியாமல் இன்னொருவருக்கு ஜாடை சொல்வது , கைகளைக் கிள்ளிக் கொள்வது , தோள்களைத் தட்டிக் கொள்வது …எல்லாமே ஒன்றாக பள்ளியில் படித்த நண்பர்களின் குணங்கள்தான் கமலினி ” 

விஸ்வேஸ்வரனின் முகத்தில் அவனது வழக்கமான மனோகர முறுவல் .இவன் சிறு இணுக்கு விடாமல் எல்லாவற்றையும் கவனித்திருக்கிறான் இன்னமும் சோர்ந்தாள் .ஆனால் அப்போது இவன் பய பக்தியாக சாமிதானே கும்பிட்டுக் கொண்டிருந்தான் …கமலினிக்கு தலையை பிய்த்துக் கொள்ளலாம் போலிருந்த்து.

” பரவாயில்லை கமலி .நான் எதையும் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டேன் ” பெருந்தன்மை பாவனை அவனிடம் .கமலினி மீண்டும் நொந்தாள்

” நீங்கள் செய்வது மிகவும் அநியாயம் சார் ”  அழமாட்டா குறையாக பேசினாள்.

” இன்னமும் ஒன்றுமே செய்யவில்லையே .ஒரே ஒரு முறை தான் செய்தேன். அதன் பிறகு அதற்கான சந்தர்ப்பமே….”  பேச்சை முடிக்காமல் அவன் இதழ் குவிக்க கமலினிக்கு வியர்த்தது.

” என்ன உளறுகிறீர்கள்…? ” கத்தலாய் கேட்டாள்

” உன் அப்பாவுடன் ஒரே ஒரு முறை தான் பேசி இருக்கிறேன் என்று சொன்னேன் கமலினி. நீ வேறு எதுவும் தப்பாக நினைத்து விட்டாயா ? ” அப்பாவியாய் விழி விரித்தான்.

அதைச் சொன்னாய் சரி… அப்படி ஒரு ஜாடை எதற்காகடா காட்டினாய்…? இப்படி கேட்கலாம். ஆனால் என்ன ஜாடை காட்டினேன் என்பான். எங்கே செய்து காட்டேன் என்பான். இதற்காக அவள் அவனைப் போல் இதழ்களை குவித்து …மேலே யோசிக்கவே பயமாக இருக்க முகத்தை மறைப்பது போல் தன் இதழ்களை மறைத்துக் கொண்டாள்.

” அதென்ன கமலினி நேற்று உன் அப்பா நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது உன்னை விரட்டுவதிலேயே இருந்தார்  ” விக்னேஸ்வரனின் பார்வை இதழ் மூடிய அவள் கையில் இருந்தது.

” அவர் தேவாவை பற்றி பேச நினைத்திருக்கலாம் ” 

” என்ன …? என்ன சொன்னாய் …?விஸ்வேஸ்வரனின் குரலில் பரபரப்பு சேர்ந்திருந்தது .வாய் மறைத்திருந்த அவள் கையை பற்றி விலக்கினான்.

” தெளிவாகத் திரும்பச் சொல் கமலினி ” 

” அப்பா தேவா பற்றி உங்களிடம் தனிமையில் பேச நினைத்திருக்கலாம் ” 

” தேவா …? யூ மீன் ன் ராஜஸ்தான்….? ” 

” ஆமாம்… பிரதாப்கர் ” 

” கமலி இது நிஜமா…?  உன் அப்பாவிற்கு தேவா டிசைன்ஸ் பற்றி தெரியுமா…? ”  விஸ்வேஸ்வரன் அவன் இருக்கையில் இருந்து எழுந்து அவளருகேயே வந்து விட்டிருந்தான்.




” மிகவும் நன்றாகவே தெரியும் என்று எங்களிடம் சொல்லி இருக்கிறார் “

” வாவ் கமலினி இது நிஜம் தானா ?  நீ என்னை ஏமாற்றவில்லை தானே ? ” 

” இல்லை. எட்டு வருடங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள ஒரு தங்க வியாபாரியின் சினேகம் அப்பாவிற்கு கிடைத்தது .  அவருடன் வந்தால் தேவா டிசைன்ஸ் கற்றுத் தருவதாக அவர் சொன்னார் .அந்த வகை நகைகளின் தயாரிப்பு மிகவும் கடினம். ஆனால் அப்பாவிற்கு அந்த நகைகளை செய்யக் கற்றுக் கொள்வதில் ஏனோ ஒருவகை வெறியே இருந்தது .அதனால் இங்கே மிகவும் நன்றாக ஓடிக் கொண்டிருந்த எங்களது தங்க நகை கடையை நண்பர்கள் சிலரிடம் பார்த்துக்கொள்ளுமாறு சொல்லிவிட்டு பிரதாப்கர் போய்விட்டார் ” 

” உன் சித்தப்பாவிடம் தொழிலை ஒப்படைக்கவில்லையா ? ” 

” இல்லை. சித்தப்பாவிற்கு ஆரம்பத்திலிருந்தே இந்தத் தொழிலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது. அவர் அவருடைய அரசாங்க வேலையை மட்டுமே பார்த்துக் கொண்டு ஒதுங்கி விடுவார் .அண்ணனோ அப்போது தான் கல்லூரியில்  படிக்க ஆரம்பித்திருந்த  சிறிய பையன். அண்ணனிடமும் தொழிலை கொடுக்க முடியாது .அதனால் அப்பா மிகவும் நம்பிய நண்பர்கள் இருவரிடம் தொழிலை ஒப்படைத்து விட்டு போனார். ஆறு மாதங்கள் என்று நினைத்திருந்தது போய் இந்தக் கலையை அவர் கற்றுக் கொள்ள ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இங்கே அவருடைய நண்பர்கள் மாதம் மாதம் எங்களுக்கு வீட்டு செலவிற்கு மட்டுமே பணம் தந்து விட்டு மீதத்தை அவர்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக திருடத் தொடங்கினர்.  என் அப்பா வந்தபோது அவரிடம் முழுமையான நஷ்டக் கணக்கு காட்டினர் கூடவே நிறைய கடன்களையும் காட்டினர் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை இருந்த நகைகளை வைத்து கடன்களை முழுவதும் அடைத்து விட்டு தனக்கென்று ஒரு காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் அப்பா உழைத்துக் கொண்டிருக்கிறார் ” உணர்ச்சிவசப்பட்ட கமலினியின் குரல் நடுங்கியது.

விஸ்வேஸ்வரன் கைகளை மெலிதாக தட்டினான். ”  கிரேட் மேன்  உன் அப்பா ” பாராட்டினான்

” தேவா நகைகள் மிகவும் அபூர்வமானவை தெரியுமா ? அவை முகலாயர்கள் காலத்து வடிவமைப்புகள் .அவற்றை உருவாக்கும் முறையை சமீப காலம் வரை சில குறிப்பிட்ட குடும்பத்தினர் மட்டுமே ரகசியமாக வைத்திருந்தனர். அதனை எப்படி உன் அப்பா அறிந்துகொண்டார் ? “

” அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்தான் அப்பாவின் மேல் கொண்ட அபிமானத்தால் இந்த நகைகளின் செய்முறையை அவருக்கு சொல்லித் தந்திருக்கிறார் ” 

” ஓ இப்போது உன் அப்பா…”  பேசிக் கொண்டிருந்தவன் திடுமென பரபரப்பானான் .கமலினியின் தோள் பற்றி மென்மையாய் உலுக்கினான்.

” ஹேய் கமலினி , நீ என்ன சொல்ல வருகிறாய் ? உன் அப்பா இந்த நகை செய்யும் ரகசியங்களை என்னுடன் …எனக்கு சொல்ல  நினைக்கிறாரா ? ” 

” அப்படித்தான் நினைக்கிறேன் ” சொன்னபடி அவன் கைகளுக்குள் இருந்த தன் தோளை விடுவித்துக் கொள்ள முயன்றாள். ஆனால் விஸ்வேஸ்வரனின் கைகள் அவள் தோள்களை அழுந்த பற்றியது.

” காட் …இஸ் இட் ட்ரூ …? ”  பிதற்றல்  போல் அவன் குரல் குழறியது.

” நிஜமா கமலினி …? எனக்கு சொல்லித் தருவாரா …? உன் அண்ணன்…சித்தப்பா  …இவர்களையெல்லாம் விட்டு விட்டு ….” 

” சித்தப்பாவை போல் அண்ணனுக்கும் இந்தத் தொழிலில் இன்ட்ரஸ்ட் கிடையாது .அவன் வேலை பார்க்கும் ஐடி ஃபீல்டில் தான் அவன் இருக்க விரும்புகிறான் . இந்த கலையை அப்பா மிகவும் கடினப்பட்டு …வந்து ….அங்கே கற்றுக் கொள்ள போன இடத்தில்  பாத்ரூம் கூட கழுவியிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார் .  அதனால் இவ்வளவு கஷ்டப்பட்டு  அவர் கற்றுக் கொண்டிருந்த கலையை சொல்லித் தருவதற்கு ஒரு சரியான…தொழில் தெரிந்த …அக்கறையுள்ள ஆளைத் தேடிக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன் ” 

” அது… நான் தானா…?  சொல் கமலினி .அது நானே தானா ?  தேவா டிசைன்ஸ் செய்ய படிக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட கால ஆசை தெரியுமா ?  எனக்கு சொல்லித் தர   யாரும் முன் வரவில்லை . உன் அப்பாவை போல் பாத்ரூமெல்லாம் கழுவுமளவு எனக்கு பொறுமையும்  கிடையாது . நான் …எனக்கு …இப்போது …இது …தெரியவந்தால் …” விக்னேஸ்வரனின் குரல் உற்சாகம் கலந்து வழிந்தது .அந்நேரம் அவன் சர்ரென்று மேல் நோக்கிி ஏறும் வேக நீரூற்றை நினைவு படுத்தினான்.

” அப்பா அவரறிந்த கலையை சொல்லித் தர தேர்ந்தெடுத்திருக்கும் ஆள் நீங்கள்தான் என்று நினைக்கிறேன் ” 

” கிரேட் .நல்ல வார்த்தை சொன்னாய் கமலினி .இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு .நான் இப்போது உலகிலேயே சந்தோசமான மனிதனாக என்னை உணர்கிறேன்”  .அவள் தோள்களை பற்றியபடி சிறு குழந்தை போல் இரண்டு மூன்று முறை தரையை விட்டு எம்பி குதித்தான். அவனது உற்சாகத்தை ஆச்சர்யமாக.. விருப்பமாக கமலினி பார்த்துக்கொண்டிருக்கும்போதே சட்டென  நின்று   குனிந்து

அவள் கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

கமலினி அதிர்ச்சியுடன் தன் கன்னம் பிடித்தபடி அவனை முறைக்க , அதற்குள்  அவளை விட்டு ,அவன் தன் டேபிளுக்கு போயிருந்தான். தனது லேப்டாப்பை திருப்பினான். ” தேவா நகைகளை பற்றி  நிறைய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறேன்.பார்க்கிறாயா ? ”  லேப்டாப்பின் போல்டர்களை ஓபன் செய்து தான் சேமித்த தகவல்களை …படங்களை அவளுக்கு காண்பிக்க தொடங்கினான்.

இவன் சற்று முன் செய்த செயலை இவனே உணரவில்லை. அவனை அறியாமல் அவன்  மனதில் இருந்து வந்த  உற்சாகத்தின்  கல்மிசமற்ற   இயல் பிரதிபலிப்பு அது … என்பதனை கமலினி உணர்ந்தாள் .தெருவில் போய் குதித்து ஆடி விளையாடி விட்டு வீட்டிற்கு வரும் மகன் அம்மா அளித்த தின்பண்டத்தை தின்றுவிட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு செல்வானே அதுபோல இப்போது விஸ்வேஸ்வரனை உணர்ந்தாள் அவள். கபடங்களற்ற அவனது ஆழ் மன உற்சாக வெளிப்படுத்தலை மன்னித்து விட முடிவெடுத்தாள் .

” பார் கமலினி .இதுவெல்லாம் தேவா தோன்றிய விவரங்கள் .இவைகளெல்லாம் தேவா நகைகள் …அலங்காரங்கள்….”  அவன் ஒவ்வொன்றாக திருப்பி காண்பிக்க கமலினியின் கை கன்னத்து ஈரத்தை துடைத்து கொண்டிருந்தது. அது போக மாட்டேன் என்று அடம் பிடித்து கன்னத்தோடு ஒட்டிக் கொண்டிருந்தது. அதெப்படி ஒரு இதழ் முத்தத்தின் ஈரம் கன்னத்தோடு ஊறி தேங்கி படிந்து விட முடியும் ?  அவளுக்கு விடை தெரியாத கேள்வியாக இது இருந்தது.




லேப்டாப்பில் விவரங்கள் காட்டிக்கொண்டிருந்த விஸ்வேஸ்வரன் அவளை நிமிர்ந்து பார்த்து ”  என்னாயிற்று கமலினி ? ”  என்றான் .அவன் கண்கள் கன்னம் தடவி கொண்டிருந்த அவள் கையின் மேல் 

விழுந்தது .புருவம் சுருக்கி யோசித்தான் . விழிகள் பிரகாசமாய் விரிந்தன. போச்சு இவனுக்கு இப்போது தான் நினைவில் வருகிறது போலவே கமலினி கலவரமாக பார்த்தாள்.

” கொஞ்ச நேரம் முன்பு   என்ன செய்தேன் கமலி ? ” விஸ்வேஸ்வரனின் விழிகள் சுவாரஸ்யமாக அவளை கொத்தின. திருட்டுக்காக்கா …எப்படி கொத்தி தூக்குவது போல் பார்க்கிறான் பார் கமலினிக்கு அலுத்து வந்த்து .தொடர்ந்து இந்த வகையில் அவனுடன் போராட முடியுமென்று அவளுக்கு தோன்றவில்லை .

” இப்போது அப்பாவிடம் பேசப் போகிறீர்களா இல்லையா …? லேட் பண்ணினீர்களானால் அவரது எண்ணம் மாறினாலும் மாறி விடலாம் .” 

உடன் விஸ்வேஸ்வரனிடம் ஒரு பரபரப்பு சேர்ந்து கொண்டது .” பேச வேண்டும் கமலினி. எப்போது …எப்படி பேசட்டும் ? ” 

” ஆமாம் பால்வாடி பிள்ளை .ஒவ்வொன்றையும் நானே சொல்லிக் கொடுக்க வேண்டும் ” 

கோப்படுவான் என எதிர்பார்த்ததற்கு மாறாக பற்கள் தெரிய சிரித்தான் . ” ஆஹா அப்படி ஒரு வாய்ப்பு மட்டும் எனக்கு அமைந்தால் உன் மடியை விட்டு இறங்கவே மாட்டேன். பிள்ளையாகவேனும் என்னை மடியேந்திக் கொள்வாயல்லவா கமலி ? ” ஏக்கங்கள் தோரணம் பிடித்தோடியது அவன் குரலில் .

கமலினி சட்டென எழுந்துவிட்டாள் .” நீங்கள் சரிப்பட்டு வர மாட்டீர்கள் .உங்கள் தொழில் …உங்கள் தேவை .எந்த நேரம் எப்படி கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டுமோ நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் …” விடுவிடென  அறையை விட்டு வெளியேறிவிட்டாள்.

மறுநாள் அதிகாலையிலேயே ஒரு வெள்ளித்தட்டு நிறைய தேங்காய் , பூ , பழங்களை குருதட்சணையாக வைத்து எடுத்துக் கொண்டு வந்து வேலாயுத்த்திடம் கொடுத்து தன்னை மாணவனாக ஏற்று தனக்கு தொழில் நுணுக்கங்கள் சொல்லித் தருமாறு கேட்டபடி வந்து நின்றான் விஸ்வேஸ்வரன்

What’s your Reaction?
+1
23
+1
15
+1
3
+1
2
+1
3
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!