ramanin mohanam Serial Stories ராமனின் மோகனம்

ராமனின் மோகனம் – 18

18

” என் புருஷன் கொம்பேறிமூக்கன் தாயி. அவரை காயப்படுத்தினவுகளை விடவே மாட்டாரு .”  விஸ்தாரமாய் தனது புருசன் பெருமை பேசிக் கொண்டிருந்தாள் மாரியாயி.

” கொம்பேறி மூக்கன் …உன் புருஷனுக்கு மூக்கு மட்டும் பெரிதாக இருக்குமா ? ” கிண்டலாக  கேட்டாள் நிலானி.

” கிண்டல் பண்ணுதீகளா தாயி ?  என் புருஷன் பேரு கொம்பேறி மூக்கன் .அப்படின்னா என்னன்னு தெரியுமா ? அது ஒரு பாம்பு .அந்தப் பாம்பு என்ன செய்யும் தெரியுமா ? ஒரு மனுசன கொத்திடுச்சுன்னா  அதோட போகாது .அவன் சவ ஊர்வலத்தில் பின்னாடியே போயி இடுகாட்டு மரத்தில ஏறி நின்னு அவன்  சவத்தை எரிச்ச பின்னாடிதான் திருப்தியாகி திரும்பும் .அப்படி ஒரு கொடூர குணம் அந்தப் பாம்புக்கு .என் புருஷனும் அதே மாதிரிதான் .தேவையில்லாம அவரை சிக்க வச்சவுங்கள சும்மா விடமாட்டார் ” 




எச்சரிக்கை போல் ஒலித்த அவளது குரலில் நிலானிக்கு உள்ளூர குளிர் அடித்தது .இந்த பெண் என்ன இவ்வளவு ஆக்ரோசமாக இருக்கிறாள் ? மாரியாயி  அப்படித்தான் இருந்தாள். அவள் மாமியாரிடம் இருந்த பணிவும் பவ்யமும் இவளிடம் இருக்காது .என் புருசனை ஜெயிலில் போட்டு விட்டாயே என்பதுபோன்ற மன வஞ்சத்துடனேயே எப்போதும் அவள் இருப்பது போல் நிலானிக்கு தோன்றும்.

இதோ இப்போது கூட அவள் சொன்ன கொம்பேறி மூக்கன் வஞ்சத்தை கேட்டபடிதான் அபிராமன் உள்ளே வந்தான் .ஆனால் கண்டுகொள்ளாமல் மாடிக்கு நடந்தான் .இது போன்றுதான் அவன் காது கேட்கவே பயமுறுத்தல்களையும் சமயங்களில் சாபங்களையும் கூட கொடுத்துக் கொண்டிருக்கிறாள் மாரியாயி.

” சாபம் கொடுக்கிறாயா மாரியாயி ?உனது குடும்பத்தை தாங்கிக்கொண்டு இருப்பவர்களுக்கே சாபம் விடுவாயா ?  ” 

” செய்வதையெல்லாம் செய்துவிட்டு ரெண்டு தரம் சாப்பாடு போட்டா போதுமா தாயி ? உங்க வீட்டில சந்தேகப்படுற மாதிரி யாரும் இருந்தா வந்து சொல்லுங்கன்னு ஐயாவுக்கு எல்லார்கிட்டவும் கேட்டுக்கிட்டாரு .அவரு வார்த்தைக்கு மரியாதை கொடுத்து என் மாமியாரு பெத்த மகனையே காட்டிக் கொடுத்துச்சு . இந்த வீட்டுக்குதான் கையோடு இழுத்துட்டு வந்து ஐயா காலடியில் போட்டா. ஐயா அவர்களை மன்னித்து காப்பாற்றிவிடுவாருன்னு நெனைச்சேன். ஆனா என் புருஷன போலீஸ்ல புடிச்சுக் கொடுத்துட்டாரு. இப்போ என்னவோ தண்டனையை குறைச்சு வாங்கித் தரேன்னு சொல்லுறாரு .என் புள்ளைகளுக்கு படிப்பு நல்ல துணிமணி சோறுன்னு பார்த்துக்கிடுறாரு. ஆனா என் புருஷனை  இவரால எனக்கு கொடுக்க முடியுமா ? என் புருஷன் என் கிட்ட வர வரைக்கும்  நான் இப்படித்தான் பேசிக்கிட்டு கிடப்பேன் ” 

மாரியாயின் நியாயத்தில் வாயடைத்துப் போனாள் நிலானி. இப்படி ஒரு வேகமான பெண்ணை வீட்டிற்கு கூட்டி வந்து வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ? ஒருவாரமாக அபிராமனுக்கும் அவளுக்கும் இடையே பேச்சு வார்த்தை கிடையாது .ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருப்பது கிடையாது .அபிராமன்  வீட்டில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொண்டே வந்தான் .அவள் தூங்கும் போதே வெளியே எழுந்து சென்று தூங்கிய பிறகு வீடு திரும்பிக்கொண்டிருந்தான் .இன்று தான் என்னவோ அதிசயமாக சற்று சீக்கிரமாக வந்திருந்தான்.

மாரியாயின்  விஷயம் அவனிடம் பேசாமல் இருக்க மனமற்று அவனது அறைக்குப் போனாள் .தயக்கத்துடன் கதவை தட்ட …

” கம்மிங் ” வேலைக்காரர்களை உள்ளே அனுமதிக்கும் பாணியில் இருந்தது அவனது குரல். அப்படியே திரும்பி விடுவோமா என்று யோசித்து விட்டு பிறகு தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைந்தாள் .கட்டிலில் உட்கார்ந்து காலுக்கு சாக்ஸ் மாட்டிக்கொண்டிருந்தான் .வெளியே கிளம்புகிறான் போலும் .சீக்கிரம் வந்து விட்டானே என்று நினைத்தேன் திரும்பவும் வீதிஉலா போல எரிச்சலுடன் நினைத்தவள் வேகமாக பேச துவங்கினாள்.

” இந்த இரு பெண்களையும் இங்கே வீட்டு வேலைக்கு வைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?  இவர்களை எஸ்டேட் வேலைக்கு அனுப்பி விட்டு வீட்டு வேலைக்கு வேறு பெண்களை வைக்கலாமே ? ” 

” இல்லை இங்கே இவர்கள் தான் இருக்க வேண்டும் ” 

” அதுதான் ஏன் என்று கேட்கிறேன் ? ” 

” இவர்கள் என் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். எனக்கு என்னுடைய கடமையை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .அதற்காகத்தான் இவர்களுக்கு இங்கேயே வேலை கொடுத்தேன் “

அவனது விளக்கத்தில் அயர்ந்தாள் .” ஆனால் அந்தப் பெண் உங்களை குத்தலாக ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள் ” 

” ம் …தெரியும் .என் காதிலும் விழுந்து கொண்டுதான் இருக்கிறது .சொல்லப்போனால் அந்த குத்தலும் குதறலும் எனக்கு தேவைதான் .என்னை நம்பி அந்த அம்மா செய்த காரியத்தை நான் எனக்காக பயன்படுத்திக் கொண்டேன் அல்லவா ? அதற்கான தண்டனை எனக்கு வேண்டும் தானே ? “

” விஷம் என்று தெரிந்தும் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் ஏற்றிக் கொள்வார்களா ? “

” விஷம் கூட சில நேரம் மருந்தாகலாம் தெரியுமா ? இந்த விஷம் என் மன அமைதிக்கான மருந்து. என் காரியத்தை செய்து முடித்த பின் தான் இதனை விலக்குவேன் ”  உறுதியாக நின்றவனில் வியந்தாள்.

” மாரியாயி ஏதோ பாம்புகளையெல்லாம் சொன்னாள் .அவள் புருஷன் கொம்பேறிமூக்கனாம் .கொத்தி கொன்றுவிட்டு பிணம் எரியும் வரை சுடுகாட்டிற்கு வந்து பார்க்குமாம் அந்தப் பாம்பு ” மெலிதாக நடுங்கியது நிலானியின்  குரல்.

பற்கள் அனைத்தும் தெரிய பளிச்சென்று வாய்விட்டு சத்தமாக சிரித்தான் அபிராமன் .

சில நாட்கள் கழித்து அவனது இந்த மனம் விட்ட சிரிப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கவே பார்த்தபடி நின்றிருந்தாள் நிலானி.

” இங்கே வா ” கையசைத்து அழைத்தான் .காற்றடைத்த பந்தாய் துள்ளிய  இதயத்துடன் அவனருகே சென்றவளை காலை தூக்கி வைத்து ஷூ மாட்டிக்கொண்டு  இருந்த சிறு ஸ்டூலில் எதிரே அமரச்சொன்னான் .

” கொம்பேறி மூக்கன் என்று ஒரு வகை பாம்பு உள்ளதுதான் . உண்மையாகச் சொல்லப்போனால் அந்த பாம்பிற்கு விஷமே கிடையாது .அது சாதாரண தண்ணிப் பாம்பு வகையை சேர்ந்தது. இதெல்லாம் இந்த கிராமத்து மக்களின் மூட நம்பிக்கைகளில் ஒன்று. இதனை வைத்து உன்னை நீயே குழப்பிக் கொள்ளாதே “

நிலானியின் மனது கொஞ்சம் தெளிந்தது.” இந்தப் பிரச்சினையை எப்படி தீர்க்க போகிறீர்கள்

 ” இதில் என்னுடைய கருத்து ஒன்றுதான். யாரோ ஒரு பெரிய மனிதன் இதில் சம்பந்தப்பட்ட இருக்கிறான். அவன்தான் இந்த ஆயுத தயாரிப்புகளுக்கு மூல காரணம் .தான் மாட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக பணத்திற்கு ஆசைப்பட்டு தன்னிடம் வேலைக்கு வந்த இந்த கிராமத்து ஜனங்களை இதில் இழுத்துவிட்டான். அவனை கண்டு பிடித்து விட்டால்  இந்த ஜனங்களை காப்பாற்றிவிடலாம் அதற்காகத்தான் அலைந்துகொண்டிருக்கிறேன் ” 




” அப்போது மாரியாயின் கணவனுக்கு கிடைக்க வேண்டிய தண்டனை ரத்து ஆகிவிடுமா ? ” 

” கொம்பேறிமூக்கனை   அவன் அம்மா அன்று இங்கே கூட்டி வந்தபோது இனி இப்படி செய்யாதே நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எச்சரிக்கை அனுப்பினேன். ஆனால் அன்று நாம் போய் அங்கே பார்த்தபோது அவன் தான் தலைமையாக நின்று எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் என் கையை மீறி போய் விட்டான் என்றுதான் போலீசை உள்ளே விட்டேன்.இப்போதும்  அவனை காப்பாற்றுவதற்கான எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் ” 

” சரிதான் .இப்படி புருஷனுக்கு மாரியாயி இவ்வளவு சப்போர்ட்டா ? ” 

” அது அவள் புருஷன் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு ” 

நிலானி வாயடைத்துப் போனாள் .அபிராமனிடம்  அதன்பிறகு பேசவில்லை .இயல்பாக இருவருக்குமிடையில் வளர்ந்திருந்த சம்பாசனை திடுமென அறுந்தது. அதனை ஒட்டவைக்கும் நிகழ்வாகவோ என்னவோ நிலானியின் போன் ஒலித்தது .எடுத்துப் பார்க்க , கௌசல்யா அழைத்துக் கொண்டு இருந்தாள்.

” சொல்லுங்க அத்தை.  நன்றாக இருக்கிறோம்…” நிலானி  பேச ஆரம்பிக்க அபிராமன் எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தான்.

” இங்கே ஒன்றும் பிரச்சனை இல்லை அத்தை .எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருக்கிறது”  மாமியாரிடம் பேசியபடி நிமிர்ந்து பார்த்த நிலானியின் முகம் கறுத்தது. அங்கே அபிராமன் சிகரெட்டை வாயில் வைத்து.பற்றவைத்து கொண்டிருந்தான்.

” உங்கள் மகன் இப்போது இங்கேதான் இருக்கிறார் அத்தை. இதோ ஜன்னல் பக்கத்தில் நின்று சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார் ” போட்டுக் கொடுத்தாள். அபிராமன் திடுக்கிட்டான் உதைப்பேன் என்று அங்கிருந்து கைகாட்டினான்.

அவனது செய்கையை அலட்சியப்படுத்திய நிலானி ” ஆமாம் அத்தை நிறைய பிடிக்கிறார் ” தொடர்ந்தாள் .சிகரெட்டை எறிந்து விட்டு வேகமாக அவள் அருகில் வந்தவன் தயங்காமல் அவள் தலையில் நொட் நொட் என்று கொட்டினான்.

“ஆ அடிக்கிறார் அத்தை ” புகார் கொடுத்தபடி அவனிடம் நீட்டினாள் .” அத்தை உங்களிடம் பேச வேண்டுமாம்” 

” ஹி… ஹி அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை அம்மா .அவள் சும்மா சொல்கிறாள் .இல்லை… இல்லை …சரி …சரி ”  இன்ன பிற வார்த்தைகளால் அன்னையை சமாளித்துவிட்டு போனை வைத்த கையோடு அவளது இரு காதுகளையும் இரு கைகளால் பற்றி ஆட்டினான்.

” ஏண்டி எப்போது என்னை மாட்டி விடுவது என்று சமயம் பார்த்துக் கொண்டே இருப்பாயா ? ” 

” தப்பு செய்தால் தண்டனை அனுபவிக்க வேண்டாமா ? ” 

நேர்கோட்டில் இணைந்து கொண்ட இருவரது பார்வையும் சிறிது நேரம் ஸ்தம்பித்து நிற்க மீண்டும் போனே அவர்களது தனிமையை குலைத்தது.

போனை எடுத்து பார்த்துவிட்டு கட் செய்தாள் நிலானி.




” ராஜியா ? ”  ஊகித்து கேட்டவனுக்கு மௌனத்தை பதிலாக தந்தாள்.

” இரண்டு நாட்களாக ஏன் அவளை அவாய்ட் செய்கிறாய் ? “

” எனக்கு பிடிக்கவில்லை” 

அபிராமன் தனது போனை எடுத்து அழுத்தினான் . “உன் போனை பார்” 

அவன் தனக்கு ஏதோ வீடியோ அனுப்பி இருப்பதை பார்த்த நிலானி அதனை திறந்தால் உடன் வியப்பில் விழி விரித்தாள்.

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!