karpoora pommai onru Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 11

11

நிற்காமல் போய் கொண்டிருந்த 
நீள்கவிதையொன்றிற்கு 
உன்னை முற்றுப்புள்ளியாக்கினேன்.
சரசரவென உருவாக தொடங்கின
அடுத்தடுத்தடுத்த வரிகள் .

 

” விசாரித்தீர்களா …? ” ஆர்வமாக கேட்டபடி தன் எதிரில் வந்து நின்ற சாத்விகாவை பார்த்த வீரேந்தர் ஆமோதிப்பாய் தலையசைத்தான் .

” விசாரித்து விட்டேன் .நீ நினைப்பது போல் ஒன்றுமில்லை …”

” அப்படியா …ஆனால் அப்பா ஏதோ …ஒரு நிர்பந்த்தத்திற்கு கட்டுப்பட்டு அத்தை , மாமா , சுகுமாருடன் பேசுவது போல் எனக்கு ….ஒரு வேளை …அந்த நிர்பந்தம் நானில்லையே வீரா …? “

சாத்விகாவின் வேதனை கலந்த கேள்வியில் அவளை நிமிர்ந்து பார்த்தவன் ” கண்டபடி எதையாவது நினைத்து மனதை குழப்பிக் கொள்ளாதே .உன் வாழ்க்கை இதுதான் என உன் அப்பா முடிவெடுத்திருக்கிறார் .நிச்சயம் அதில் தவறெதுவும் இருக்காது .உன் அத்தை வீட்டாருக்கு சொத்து , சுகங்களில் குறைவில்லை .சுகுமார் கை நிறைய சம்பாதிக்கும் ,பார்ப்பதற்கு அழகான ஆண்பிள்ளை .இனி வேறென்ன வேண்டும் .நீ அவனை தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம் .”

” அப்படியா சொல்கிறீர்கள் ….? ” சாத்விகாவின் குழப்பம் தீரவில்லை .

” உனது குழந்தை பிடிவாதங்களை மட்டும் குறைத்து கொண்டாயானால் , சுகுமாருடனான உனது வாழ்வு நீரோடை போல் ஓடி முடிந்து விடும்…”

” அவனுக்காக என் இயல்பை நான் மாற்றிக் கொள்ள வேண்டுமா …? ” முகம் சுளித்தாள் .

” நீ மாற்றிக் கொள்ளாவிட்டால் உன் தந்தை உனக்காக அவர்களிடம் தழைந்து போக வேண்டியதிருக்கும் ….”

சாத்விகாவிற்கு இப்போது எதுவோ புரிவது போலிருக்க …” ஓ…அப்போது அப்பா எனக்காகத்தான் அத்தையிடம் …ஆனால் நான்தான் அப்படி வேண்டாமென்றுதானே சொல்லிக் கொண்டிருக்கிறேன் ….”

” மறுபடியும் உளறாதே .யாருக்கும் கிடைக்காத அற்புதமான தாய் , தந்தை உனக்கு கிடைத்திருக்கின்றனர் .உன் முட்டாள் பிடிவாத்த்தினால் அவர்களை இழந்து விடாதே .போ …சத்தமில்லாமல் சந்தோசமாக சுகுமாரை திருமணம் செய்து கொண்டு வாழத் தொடங்கு …”

” அதை நீங்கள் சொல்ல தேவையில்லை .அந்த முடிவை எடுக்க வேண்டியது நான்தான் …”

” முடிவை எடுத்து விடு என்றுதான் சொல்கிறேன் ….” சொன்னபடி தன் கால்களை அகற்றி நின்று குனிந்து கால்பெருவிரலை பற்றியவன்  தனது காலை நேர உடற்பயிற்சிக்கு தயாராக தொடங்கினான் .




” அப்போது நான் சுகுமாரை திருமணம் செய்து கொள்ளவா …? ” இன்னமும் திருப்தியடையாமல் கேள்வி கேட்டபடி நின்ற சாத்விகாவை முறைத்தான் .

” நீ எனக்கு கொடுத்த வேலையை முடித்துவிட்டேன் .இனி இது போல் என்னுடன் தனியாக பேச முயற்சிக்காதே …”

ஆமா …இவன் பெரிய மன்மதன் .நான் இவனோடு தனியாக பேச அலைந்து கொண்டிருக்கிறேனாக்கும் …கோபமாக நினைத்தவள் …

” சரிதான் போடா ….” என கொஞ்சம் சத்தமாகவே சொன்னாள் .அவன் காதில் விழுந்திருக்காது என்றும் நினைத்துக் கொண்டாள் .ஏனெனில் அவள் போடா சொன்ன போது அவன் தனது வேக ஜாக்கிங்கை ஆரம்பித்திருந்தான் .

—-_–+—————–

” ஏய் சாத்விகா அங்கே பாருடி அந்த பெட்டிக்கடையில் …உன் வழக்கமான அவன் ….”

” எவன்டி என் அவன் …? ” சாத்விகா எரிச்சலோடு திரும்ப , அவ்வளவு நேரம் லிட்டர் லிட்டராக ஊற்றி வடிய விட்டுக் கொண்டிருந்தவன் இவள் திரும்பி பார்த்ததும் தடுமாறினான் .

” இன்றோடு நாற்பத்தி ஒன்றாவது நாளடி …அவன் உனக்காக இங்கே நிற்பது .அது ஏன்டி ரோட்டில் போறவனெல்லாம் உன்னை பார்க்கவும் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு போகிறான் …” அந்த தோழி சொன்னது உண்மையே என்பது போல் அந்த ரோட்டில் நேராக போய் கொண்டிருந்த ஒருவன் பைக்கை ஸ்லோ செய்து ஊர்ந்த படி  , இவளை பார்வையால் வருடி சென்றான் .

” ஏய் …பாருடி .ஒருத்தன் பாக்கியில்லாமல் எல்லோரும் …நீ என்னடி கண்காட்சியா …? ” தோழிகள் கிண்டலை தொடர , சாத்விகாவினுள் அவளை பார்க்கும் போதெல்லாம் அலட்சியமாக முகம் திருப்பி போகும் வீரேந்தர் நினைவிற்கு வந்தான் .ஏனோ காரணமின்றி மனதினுள் எரிச்சல் மூள …

” வாயை மூடித் தொலைங்கடி .இவனுங்கெல்லாம் பொண்ணுன்னு எழுதி வைத்தாலே அதை முகர்ந்து பார்த்துக் கொண்டே கிடப்பவர்கள் .இவர்களை போய் மனிதனென்று பேசுகறீர்களே …” திரும்பியவளின் கண்களில் அந்த ஜொள் பார்ட்டி பட்டான் .அவன் இன்னமும் கடமையே கண்ணாக இருந்தான் .

அவர்கள் அனைவரும் அப்போது கல்லூரியின் கடைசி இரண்டு பீரியடை கட்டடித்து விட்டு  வெளியே வாசலில் நின்று கொண்டிருந்தனர் .எதிரே இருக்கும் ஐஸ்க்ரீம் கடையினுள் நுழையலாமா …? இல்லை ஏதாவது ஹோட்டலுக்கு போகலாமா என்ற ஆலோசனையில் இருந்த போதுதான் இது நடந்த்து .

சாத்விகா ஒரு முடிவோடு எதிர் பகுதியில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி நடக்க துவங்கினாள் .

” ஹலோ சார் … வாங்களேன் ஒரு ஐஸ்க்ரீம் சாப்பிடலாம் ….”

” இ…இல்லை ..நா..நான் ..எ…எனக்கு …வேண்டாம் ….”

” எனக்கு வேண்டுமே …” என்றவள் தோழிகளை பார்த்து கையசைத்து …” ஏய் வாங்கடி அவர் ஓ.கே சொல்லிட்டாரு …” என்றாள் .

திபுதிபுவென ஐஸ் க்ரீம் கடையினுள் நுழைந்தவர்கள் அங்கிருந்த ப்ரிட்ஜை கிட்டத்தட்ட காலி செய்தனர் ….துடைக்க துடைக்க வழிந்து வியர்வையுடன் அமர்ந்திருந்த அவனிடம் அந்த ஆறாயிரம் ருபாய் பில்லை நீட்டினாள் சாத்விகா .

” கட்டுங்க சார் ….”

தீ சுட்டாற் போல் பில்லை கீழே போட்டவன் ” இல்லை என்னிடம் இவ்வளவு பணம் இல்லை …” என்றான் .

பிறகு எவ்வளவு வைத்திருக்கிறீர்கள் …? “

” அ..அது …” தடுமாறியவனின் சட்டையை கொத்தாக பற்றியிழுத்தவள் ,அவன் பேன்ட் பாக்கெட்டின் பின்னால் சொருகியிருந்த பர்ஸை உருவி எடுத்து டேபிளில் கவிழ்த்தாள் .சில்லறை காசுகளை தவிர்த்து ருபாய்களாக நூற்றி சொச்சம் இருந்த்து .

” டேய் நாயே …நீயே உன் அப்பா பாக்கெட்டிலிருந்து நூறு ருபாயை திருடிட்டு வந்து , டீ குடிக்கலாமா …வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருக்கிறாய் .இந்த லட்சணத்தில் உனக்கு பொண்ணுங்களை சைட் அடிக்க என்னடா யோக்யதை இருக்கு …? சொல்லுடா எதற்கு என்னை பாலோ பண்ணிட்டே இருந்தாய் …? என்னை காதலிக்கிறாயா …? ம் …சொல்லு …”

இவ்ஙளவுக்்கு பிறகும் ஆமாமென்று சொல்ல அவனுக்கு பைத்தியமா …?

” இ…இல்லைங்க …அப்படியெல்லாம் இல்லை …நான் சும்மாதான் ….”

” என்னது ..சும்மாவா …கண்ணு முழி தெறிச்சு விழுந்திடுற மாதிரி அந்த பார்வை பார்த்தாய் .ஒன்றுமில்லாமலா பார்த்தாய் …? வாடா …வா கல்யாணம் பண்ணிக்கலாம் .வாடா …” அவனுக்கு கை கால்கள் தந்தியடிக்க துவங்கின .

” சாரி மேடம் ..சாரி மேடம் .விட்டுடுங்க .இனி இந்த பக்கமே வர மாட்டேன் ….” கை எடுத்து கும்பிட்டபடி அவன் ஓடினான் .

ஹேய் …சந்தோச கூச்சலுடன் கை தட்டிய தோழியர் ” எல்லாம் சரிதான்டி பில் யார் கட்டுறது …? ” கவலைப்பட்டனர் .

” சை போய் தொலைங்கடி பிசாசுகளா …உங்களோடு ப்ரெண்ட்ஷிப் வைத்த கொடுமைக்கு நானே கட்டி தொலைகிறேன் …” எரிந்து விழுந்தாள் .ஆளை விட்டால் போதுமென தோழியர் பட்டாளம் ஓடிவிட ….பில்லை பார்த்தபடி சாத்விகா கார்டை எடுத்த போது ….

” அப்படியே எனக்கும் ஒரு ஐஸ்க்ரீம் சொல்லுங்க மேடம் …” என்ற குரலில் முகம் மலர திரும்பினாள் .

முகம் முழுவதும் பளிச்சென லைட் போட்டது போல் வெளிச்சம் பரவியிருக்க அவளிருந்த டேபிளை நோக்கி வந்து கொண்டிருந்தான் வீரேந்தர் .

” நீங்களா ….? நீங்கள்  எப்போது வந்தீர்கள் …? “

” நீ அந்த பையனை ஐஸ்க்ரீம் சாப்பிட கூப்பிட்டுக் கொண்டிருந்தாயே …அப்போது …”

” இவ்வளவு நேரமாக இங்கே எவ்வளவு கலாட்டா நடந்து கொண்டிருந்த்து .வந்து என்னவென்று கேட்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தீர்களா …? ” முறைத்தாள் .

” எனக்கென்னம்மா தெரியும் …? நான் அந்த பையன் ஒரு வேளை உன் லவ்வரோ என்னவோ என்று நினைத்தேன் …அவ்வளவு ஆசையாக அழைத்துக் கொண்டிருந்தாயே ….”

” ஆசையாக அழைத்தேனா …உங்களை…”  கைகளை நெரிப்பது போல் அவன் கழுத்தருகே கொண்டு செல்ல அவள் கைகளை இறுக பற்றிக் கொண்டான் அவன் .

” நானும் அவனை போல்தான்மா …பாவம் …விட்டு விடு ….”

” சை நீங்கள் ரொம்ப மோசம் …முதலிலேயே வந்து அவனை விரட்ட எனக்கு உதவியிருக்கலாமில்லையா …? “

” உதவியா …? உனக்கா …? அது எங்கே தேவைப்பட்டது உனக்கு …? ” என்றவன் சாத்விகா தன் ஹேன்ட் பேக்கை கையில் எடுக்கவும் பயந்தாற் போல் முகத்தை வைத்துக் கொண்டு ….

” நான் ஒன்றும் தவறாக பேசிவிடவில்லையே….” என்றான் .

” ஏன் …? ” புரியாமல் பார்த்தாள் .

” பேக்கினுள் ஆசிட் பாட்டில் எதுவும் இல்லையே ..? ” என்றதும் அந்த பேக்கினால் அவன் முதுகில் ஒரு அடி போட்டாள் .




” போதும் கலாட்டா …உங்களுக்கு என்ன ஐஸ்க்ரீம் சொல்ல …? “

” உனக்கு சொல்வதையே சொல்லு …. நீதான் சாப்பிடவில்லையே …எதற்கும் அந்த பேக்கை அந்தப்பக்கம் நகர்த்தி வை ….” 

சற்றுமுன் இறுகியிருந்த மனது இப்போது குழைந்து தளர , விடுதலை உணர்வோடு தனக்கும் சேர்த்து ஐஸ்க்ரீம் சொன்னவள்…

” அதில் ஆசிட் இல்லை .ஆனால் பெப்பர் ஸ்பிரே இருக்கிறது ….” மெல்ல முணுமுணுத்தாள் .

” ம் …க்ரேட் …சோ ..நீ எப்போது எந்த பிரச்சினையில் மாட்டிக் கொள்வாயோ என்ற பயமின்றி நான் என் வேலையை பார்க்க போகலாம் .அது இருக்கட்டும் இப்போது நீ விரட்டியவன்தான் அன்று நீ சொன்ன ஆளா …? “

” என்று ….? எந்த ஆள் …? என்ன சொன்னேன் …? ” சாத்விகாவிற்கு சுத்தமாக நினைவிலில்லை .

” ம் …அப்போது அன்று உன் அப்பாவிடமும் , அண்ணனிடமும் சொன்னது பொய் …ம் …அவர்கள் உன்னை சரியாகத்தான் கணித்து வைத்திருக்கன்றனர் ….”

” இந்த மண்புழுக்கெல்லாம் நல்ல பாம்பு மரியாதை கொடுத்து அப்பா வரை கொண்டு போவேனாக்கும் …? “

சாத்விகாவின் பதிலில் வீரேந்தர் தலையை சாய்த்து பற்களணைத்தும் தெரிய மலர்ந்து சிரித்தான் .

” ஹையோ ….வீரா நீங்கள் சிரித்தீர்களா …? உங்களுக்கு சிரிக்க தெரியாது என்றோ …பற்கள் கிடையாது என்றோ அல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன் ….”

மெல்ல சிரிப்பை நிறுத்தியவன் …” போதும் .இந்த வருடத்தோடு உன் படிப்பு முடிகிறதில்லையா …? இனி இது போன்ற உனது குறும்புதனங்களை குறைத்துக் கொண்டு …சுகுமாரை திருமணம் செய்து கொண்டு ….”

” போதும் அதனை நீங்கள் சொல்ல தேவையில்லை என முன்பே சொல்லியிருக்கறேன் …”

” ம் …சரி நான் வருகிறேன் ….” ஸ்பூனை போட்டு விட்டு எழுந்தான் .

” இந்தப் பக்கம் எங்கே வந்தீர்கள் ….? “

” இங்கே உன் அப்பா ஒரு வேலை சொன்னார் .அதற்காக வந்தேன் ….” இதனை சாத்விகாவின் கண்களை சந்திக்காமல் சொன்னான் .

இவன் குரலில் சிறிது தடுமாற்றம் தெரிகிறதோ ….பொய் கூறும் தடுமாற்றம் ..சாத்விகா அவனை கூர்ந்து பார்க்க தொடங்கிய போது அவன் முதுகு காட்டி திரும்பி நடக்க ஆரம்பித்தான் .

” ஹலோ டிரைவர் சார் …இந்த பில்லை யார் கட்டுவது …? ” தன்னை விட்டு விலகி போய் கொண்டிருந்தவனை வம்பிழுக்க அழைத்தாள் .

” நீங்கள்தான் மேடம் .உங்களிடம் வேலை பார்க்கும்  தொழிலாளிக்கு ஒரு ஐஸ்க்ரீம் வாங்கி தர மாட்டீர்களா …? ” அவள் பக்கம் பார்க்காமலேயே பதில் சொல்லி நடந்தான் .

அந்த செயல் சாத்விகாவிற்கு கோபமூட்ட சரிதான் போடா என முணுமுணுத்தாள் .

அந்த ஐஸ்க்ரீம் கடையின் கதவை திறந்தபடி திரும்பி பார்த்தவன் ” என்ன உன் வழக்கமான “போடா ” தானே தாராளமாக சொல்லிக்கொள் ….” என்றவன் ஒரு நொடி நின்று அவளை முழுதுமாக பார்வையால் வருடிவிட்டு …

” பை …பேபி …” என்று நெற்றியில் கையில் கை வைத்து ஒரு ஸ்டைலான சல்யூட்டுடன் விடை பெற்றான் .

What’s your Reaction?
+1
18
+1
9
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
jamunarani
jamunarani
4 years ago

super mam thirumba padikkumpothum veeravum saathvegavum eppavum pola super

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!