Serial Stories கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று- 4

4

என் பேரிடர்களை நீ ஆராய்ந்த பொழுதுகளில்தான் 
பயணங்களை ஒத்தி வைத்துவிட்டு 
உன் சட்டைப்பையில் சுருண்டு கொள்கிறேன்

” இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? “

அடுத்ததாக ஒரு முட்டைதோசை  ஆர்டர் சொல்லிவிட்டு இன்னும் கொஞ்சம் மிச்சமிருந்த முதல் தோசைக்கு சட்னி , சாம்பார் கேட்டுக் கொண்டிருந்த சாத்விகா , திடுமென தன் பின்னால் கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பி விழித்து , பின் முறைத்தாள் .

” பார்த்தால் தெரியவில்லை .சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன் …” தோசை மறைய ஊற்றப்பட்ட சட்னி , சாம்பாரில் தோசையை பிரட்டி எடுத்து வாயில் திணித்தாள் .

” ஹேய் ..சகா யார் இது …? ” பக்கத்திலிருந்த அஸ்வின் அவள் காதை கடித்தான் .

” சாப்பிடுகிற இடமா இது …? ” வீரேந்தரின் பார்வை அந்த இடத்தை அசூசையுடன்  சுற்றி வந்த்து .

” ஏன் இந்த இடத்திறகு என்ன …? தோசை செம டேஸ்ட் தெரியுமா …? “

அஸ்வினை ஒதுக்கி வீரேந்தருக்கு சாத்விகா சொன்ன பதிலில் உன் வேலையை பார்த்துக்கொண்டு போடா என்ற தகவலும் சேர்ந்து இருந்த்து .

” சகா உன் ரிலேடிவ்வா …? ” இந்தப்பக்கம் அமர்ந்திருந்த சித்ரா இப்போது காதை கடித்தாள் .




” ம் …இவர் என் வீட்டு டிரைவர் …” சாத்விகாவின் நக்கல் குரலில் அந்த இடத்தை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த வீரேந்தர் சட்டென திரும்பி அவள் விழிகளை ஊடுறுவினான் .

” ஆமாம் நான் சாத்விகா மேடத்தின் டிரைவர் .நீங்களெல்லாம் மேடத்தின் ப்ரெண்ட்ஸா…? நாம் அறிமுகமாகிக் கொள்ளலாமா …? என் பெயர் வீரேந்தர் … ” மென் சிரிப்பு ஒன்றுடன் கேட்டவனை விழி விரித்து பார்த்தபடி ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வதை எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் சாத்விகா . அவள் ஆர்டர் செய்த அந்த முட்டை தோசையை சாப்பிட்ட படிதான்.

” உங்கள் நேம் லவ்லி …”

” நீங்களும் லவ்லிதான் …”

” ஹீரோ போலிருக்கிறீர்கள் ….”

” டிரைவரென்று நீங்களாக சொன்னால்தான் …நம்பவே முடியவில்லை …”

தன் நண்பர்களிடையே திடீர் ஹீரோவாகி விட்டவனை பிடிக்காமல் பார்த்தாள் .

” அதோ மேடம் சாப்பிட்டு விட்டார்கள் .நான் அவர்களிடம் ஒரு விசயம் பேசவேண்டுமே …எக்ஸ்க்யூஸ் மீ …” என அவர்களிடம் தலையசைத்து விடைபெற்று சற்று தள்ளி நின்றவனிடம் …சாத்விகா போகாவிட்டால் இவர்களாகவே அவளை இழுத்து போய் தள்ளுவார்கள் போல தோன்றிவிட  , தானாகவே அவனருகில் போனாள் .

முறைத்தபடி நின்றவளிடம் ” இது போன்ற ப்ளாட்பார தள்ளிவண்டி கடைகளிலெல்லாம் சாப்பிடுவது உடம்புக்கு ஆரோக்யம் கிடையாது . இனி இந்த பழக்கத்தை விட்டு விடு ….” அமர்த்தலாக சொன்னான் .

சாத்விகாவிற்கு சுறுசுறுவென கோபம் வந்த்து .” என்ன மேன் திமிரா …? உன் வேலையை பார்த்துக் கொண்டு போ….டா ….” இறுதியாக வந்துவிட்ட ” டா” வை கஷ்டப்பட்டு வாய்க்குள் முழுங்கினாள் .

” என் வேலையாகத்தான் …உன் அப்பா எனக்கு சொன்ன ஒரு வேலைக்காகத்தான் வந்தேன் .இது போன்ற ப்ளாட்பாரத்தில் உன்னை எதிர்பார்க்கவில்லை .தப்பை திருத்தாமல் போகமுடியுமா ….? சார் பார்த்திருந்தால் மிகவும் வருத்தப்பட்டிருப்பார் .அதனால் ….”

வீரேந்தர் பேசிக்கொண்டருக்கும் போதே ஆத்திரத்துடன் தனது போனை எடுத்த சாத்விகா எண்களை அழுத்தினாள் .

” அப்பா ..நான் காலேஜில் லாஸ்ட் ஒன் அவர் கட் அடிச்சுட்டு ப்ரெண்ட்ஸோட வெளியே வந்திருக்கிறேன் .இங்கே பைபாஸ் ரோடிருக்கில்ல , அங்கே இரண்டாவது சரிவில் இருக்கிற ஒரு ப்ளாட்பார கடையில் எல்லோருமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் .தோசை செம டேஸ்ட்பா. நான் நாலு தோசை சாப்பிட்டேன் ….” சிணுங்கலாய் அப்பாவிடம் செல்லம் கொஞ்சிவிட்டு போனை அணைத்துவிட்டு வீரேந்தரை பார்த்தாள் .




கைகளை குறுக்காக கட்டியபடி அவள் பேசி முடிக்கும் வரை பார்த்திருந்தவன் , பேசி முடிந்த்தும் திரும்பி ” ஹாய் ப்ரெண்ட்ஸ் .நான் வருகிறேன் …” என கையசைத்துவிட்டு …அவர்கள் பை சொன்னதும் திரும்ப போனவன் நின்று …

” நீங்கள் எல்லோரும் ரொம்ப கிளவராக இருக்கிறீர்கள் .இது போன்ற இடங்களில் இனி சாப்பிடாதீர்கள்…எவ்வளவு மோசமான இடம் பாருங்கள் …” சாப்பிட்ட ப்ளாஸ்டிக் தட்டுக்களெல்லாம் ஒரே வாளி நீருக்குள் அமிழ்த்தி எடுக்கப்பட்டு உடனேயே அடுத்தவருக்கு பரிமாறப்படுவதை சுட்டியபடி சொன்னான் .

” சரிதான் .நாங்கள் சும்மா …இதோ இவன்தான் இன்று ஒருநாள் சாப்பிடலாமென சொன்னதால் வந்தோம் .இப்போது நீங்களும் சொல்லிவிட்டீர்கள் .இனி வரமாட்டோம் .நல்ல ஹோட்டலாக பார்த்து சாப்படுகிறோம் ….”

” குட் …..” அவர்களை மெச்சி கட்டைவிரலை உயர்த்தி காட்டியவனிடம் ….

” இவர்களை சமாளித்து விட்டதாக நினைக்காதே .முடிந்தால் என் அப்பாவிடம் பேசிப்பார் ….” என்றாள் .

அவனோ …அது காதிலேயே விழாத்து போல் அவள் பக்கமே திரும்பாது போனான் .

” தோத்துப்போவோம்னு காதில் விழாத்து போல் போகிறான் …” தனக்குள் பேசியவளை சூழ்ந்து கொண்ட நண்பர்கள் கூட்டம் கேட்ட கேள்விகள் அனைத்தும் அந்த வீரேந்தர் பற்றியதாகவே இருந்த்து . சாத்விகாவிற்கு தலை வலிக்க தொடங்க , அதன்பிறகு போட்டிருந்த தியேட்டர் ப்ளானை கேன்சல் செய்துவிட்டு வீட்டிற்கு திரும்பினாள் .

வலிக்கும் தலையுடன் வீட்டினுள் நுழைந்தவளின் கண்ணில் போர்ட்டிகோவில் நின்றிருந்த காரை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்த வீரேந்தர் தென்பட்டான் .சட்டென எழுந்த கோபத்துடன் ..காரின் வேகத்தை அதிகப்படுத்தினாள் .இப்படியே போய் அவன் மீது ஏற்றிவிட வேண்டும் .கியரை டாப்புக்கு மாற்றினாள் .

தன் பின்னால் கேட்ட காரின் ஓசையிலேயே சாத்விகாவை உணர்ந்த வீரேந்தர் , அவளது நோக்கம் தெரிந்தும் அசையாமல் அங்கேயே நின்று காரை துடைத்தான் .

ஏய் …நறுத்து …நிறுத்து ..மேலே மோதிடாதே …என்ற பய அலறலுடன் திரும்ப போகும் வீரேந்தரை எதிர்பார்த்து காரை ஓட்டிக்கொண்டிருந்த சாத்விகாவின் கைகள் அசையாமல் நின்ற அவன் தோரணையில் நடுங்க ஆரம்பித்தது . கார் அவனை நெருங்க …நெருங்க தடுமறியவள் படிப்படியாக கியரை குறைத்து அவனுக்கு மிக அருகே காரை அவனை உரசினாற்போல் நிறுத்தினாள் .

நிதானமாக திரும்பிய அவன் ” ஏன் …மோதவில்லை …? ” என , ஆத்திரத்துடன் இறங்கியவள் கார் கதவை அடித்து பூட்டிவிட்டு , தன் கையிலிருந்த கார் சாவியை அவன் மேல் எறிந்தாள் .




” காரை எடுத்துட்டு போய் அங்கே பார்க் பண்ணு ….” அதிகாரமாக கார் ஷெட்டை சுட்டிக்காட்டினாள் .

உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கியவன் ,தன் மேல் விழுந்த சாவியை பிடித்து தன் விரல்களில் சுழற்றியபடி அவளை அலட்சியமாக பார்க்க ….

” பாப்பா ….நீ செய்வது தப்பு ….” அதட்டியபடி வந்தான் கார்த்திக் .

” அவர் நம் அப்பாவிற்கு மட்டும்தான் டிரைவர் .உனக்கோ …எனக்கோ …வேலை செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை …”

இவன் ஒருத்தன் .நேரங்காலம் தெரியாமல் கழுத்தறுப்பான் .அண்ணனை முறைத்தவள் …சட்டென வீரேந்தர் கையிலிருந்த சாவியை பிடுங்கினாள் .

” இந்த மேன்மை பொருந்திய டிரைவர் நம் அப்பாவிற்கு மட்டுமே வேலை செய்யட்டும் .நீ என் அண்ணன்தானே …நீ செய்யலாம்தானே ….இந்தா …நீயே போய் என் காரை ஷெட்டில் நிறுத்து ….” இப்போது சாவியை கார்த்திக்கின் மேல் எறிந்துவிட்டு , தட்தட்டென ஹைஹீல்ஸை அலற விட்டபடி வீட்டினுள். போனாள் .




கவலையுடன் தங்கையை பார்த்துவிட்டு பார்வையை திருப்பிய கார்த்திக் கடின முகத்துடன் அவளை பார்த்தபடி இருந்த வீரேந்தரை கண்டதும் …

” சாரி வீரேந்தர் …அவள் …”

” சிறு பெண் .விளையாட்டு புத்தி .நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .சாவியை கொடுங்கள் .நானே காரை நிறுத்துகிறேன் …”

” இல்லை …நானே பார்த்துக்கொள்கறேன் …” கார்த்திக் தானே காரை எடுத்தான் .

” நீ எப்போது சிறுபிள்ளைத்தனமாக நடப்பதை நிறுத்த போகிறாய் பாப்பா …? ” காரத்திக்கின் இந்த கோபத்தை எதிர்பார்த்தே , தலையை வலியென பிடித்தபடி சௌந்தர்யாவின் மடியில் தஞ்சமடைந்திருந்தாள் சாத்விகா .

” அவளுக்கு தலை வலி கார்த்திக் .அவள் கொஞ்சநேரம் தூங்கட்டும் .நீ பறகு அவளிடம் பேசு ….” கண்டித்த அன்னையை பார்த்த கார்த்திக் …

” என்னமோ செய்யுங்கள் …” முணுமுணுத்தபடி எழுந்து போனான் .

அண்ணனின் கோபம் சாத்விகாவிற்கு புதிதல்ல .ஆனால் அன்று சண்முகபாண்டியன் அவளிடம் …

” இனி இந்த ப்ளாட்பார கடைகளில் சாப்பிடவதை விட்டு விடுகிறாயா  பேபி …? ” எனக் கேட்க …கோபத்தை விட ஆச்சரியம் வந்த்து .




What’s your Reaction?
+1
15
+1
10
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!