Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 17

17

மழை முடிந்த பிறகுதான் 
வானவில் வந்தது
பிறகுதான் நீயும் வந்தாய்
என் முந்தானை நிறமியாக..

திடுமென தன் தோள் தொட்ட மெல்லிய ஸ்பசரிசத்தில் நிமிர்ந்து பார்த்தான் பரசுராமன்.. வரமளிக்க வந்த வனதேவதை போல் நிலவொளியில் மின்னியபடி நின்றிருந்த மனைவி அவன் மனதை நிறைத்தாள்.. எல்லையில்லா நிம்மதியை அவனுக்கு கொடுத்தாள்..
மைதிலி அவன் கண்களைப் பார்க்க, அவனும் அவள் கண்களை பார்க்க ஒன்றையொன்று கவ்வி நின்றன இரு விழிகளும்.. அந்த விழி ஸ்பரிசமே போதுமானதாக இருந்தது அவர்களுக்கு.. வேறு ஆறுதல் வார்த்தைகள் எதையும் அவளுக்கு சொல்லத் தோன்றவில்லை.. அவனுக்கும் கேட்கும் எண்ணமில்லை..
மைதிலி அவன் தோள் தொட்ட கையை உயர்த்தி அவன் தலை முடிக்குள் கை நுழைத்து ஆறுதலாய் வருடினாள்.. சற்றுமுன் மகாராணி மகனை அன்பாய் அணைத்தாளே.. அந்த தாய் செய்கையை ஒத்திருந்தது மைதிலியின் வருடல்..
பரசுராமன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.. அந்த பாச வருடலை அனுபவித்தான்.. பின் மெல்ல அவளருகே நகர்ந்தவன் நின்று கொண்டிருந்த அவள் வயிற்றில் தலை சாய்த்துக் கொண்டான்.. இருவரும் ஒரு வார்த்தை பேசவில்லை.. சிறிது கூட அசையவில்லை அப்படியே இருந்தனர்..
மைதிலிக்கு அவனை முதன் முதலில் சந்தித்த நாள் நினைவுக்கு வந்தது.. அப்போது எவ்வளவு ஆவேசமாக அரிவாளை சுழற்றிக் கொண்டிருந்தான்..? அந்த ஆத்திரக் காரன்.. திறமையான வியாபாரி இதோ இப்போது தளர்ந்து அவள் மடியில்..
மைதிலிக்கு அப்போது அவன் தன் விருப்பமின்றி தன்னைப் படுத்திய பொழுதுகளெல்லாம் நினைவில் இருந்து நழுவி மறந்து போயின.. அவன்.. அவள் கணவன்.. இப்போது மிகுந்த மனச் சங்கடத்தில் இருக்கிறான்.. அவனை ஆறுதல் படுத்துவது மனைவியான அவளது கடமை.. இப்படி உள்ளுணர்வு உணர்த்த, கணவனின் தலையை தன் வயிற்றோடு பதித்து இரு கைகளாலும் அணைத்துக் கொண்டாள்.
அவளது இந்த உடன் போக்கில் பரசுராமனின் தேகம் நெகிழ்வதை அவளால் உணரமுடிந்தது.. பரசுராமன் தலையை திருப்பி, முகத்தை அவள் வயிற்றில் பதித்துக் கொண்டான்..
இரண்டு நிமிடங்கள்தாம் இருக்கும்.. திடுமென மைதிலிக்கு முதுகில் ஏதோ குறுகுறுப்பு உணர்வு தோன்ற, சட்டென பரசுராமனின் முகத்தை தன்னிடமிருந்து விலக்கினாள்..
கேள்வியாய் பார்த்தவனிடம்.. “ரொம்ப அசதியாக தெரிகிறீர்கள்.. படுத்துக் கொஞ்ச நேரமாவது தூங்குங்க..” என்றாள்..
பரசுராமன் தலையசைத்து எழுந்தான்..
“நம் வீட்டு சாவி கொடு மைதிலி.. நான் அங்கே போய் படுக்கிறேன்..”
மைதிலி சாவியை எடுத்து வந்து கொடுக்க.
“கதவை பூட்டிக்கொள்..” என அவளை உள்ளே போக வைத்துவிட்டு எதிர் வீட்டிற்கு நடந்தான்..
திரும்ப வீட்டினுள் வந்த மைதிலி சுற்றிலும் ஆராய எல்லோரும் ஆங்காங்கே படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.. வந்தனாவை கவனித்து பார்த்து அவளுக்கு ஒரு போர்வையை எடுத்து வந்து மூடி விட்டு விட்டு, அங்கேயே படுத்துக் கொண்டாள் மைதிலி.. சீக்கிரமாக தூங்கியும் போனாள்..
“அதென்ன அத்தனை பிடிவாதம் உங்களுக்கு.. இரண்டு வாயாவது சாப்பிட்டால்தான் நான் போவேன்..” அதட்டலுடன் சொன்னபடி சாப்பாட்டு தட்டுடன் ஈஸ்வரியின் அருகில் நின்றிருந்தாள் மைதிலி..
“எனக்கு வேண்டாம்..” ஈஸ்வரி முகம் திருப்ப..
“ம்ஹீம்.. சாப்பிட்டுத்தான் ஆகனும்..” தானே பிசைந்து ஒரு கவளம் எடுத்து ஈஸ்வரியின் வாயருகே கொண்டு போனாள்..
“சீக்கிரம் வாயை திறங்க பெரியம்மா.. எனக்கு அடுப்படியில் வேலை.. ஐயோ அங்கே குக்கர் விசிலடித்து விட்டது.. நான் போகனும்.. ம்.. வாயை திறங்க..”
ஈஸ்வரி வேறு வழியின்றி வாயை திறக்க, அவள் வாய்க்குள் சோற்றைத் திணித்தாள்..
“இது எத்தனையாவது விசில் பெரியம்மா கவனித்தீர்களா..?” பேசியபடி அடுத்த கவளம்..
“குடிக்க வெது வெதுப்பாக சுடுதண்ணீர் வைத்திருக்கிறேன்.. பாருங்கள்.. அதை குடிங்க..” சொன்னபடி அடுத்த கவளம்..
ஏதேதோ பேசியபடி ஈஸ்வரியின் வயிற்றை நிரப்பி விட்டாள் மைதிலி.. மருமகளின் திறமையை தள்ளி நின்று பெருமையோடு பார்த்திருந்தாள் மகாராணி.. ஈஸ்வரியை உணவுண்ண வைக்க அவள் எடுத்த முயற்சிகள் இதுவரை தோல்வியில்தான் முடிந்திருக்கிறது.. இதோ அதனை எளிதாக சாதித்துக் கொண்டிருக்கிறாள் மைதிலி..
“ம்.. இப்போது சரி.. உடனேயே திரும்ப படுத்து விடாதீர்கள்.. பின்னால் தோட்டத்தில் போய் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, பிறகு வந்து படுங்க.. வாங்க..” கையோடு ஈஸ்வரியை எழுப்பினாள் முகம் மலர்ந்தாள்..
“அம்மா, அப்பா.. வாங்க.. வாங்கண்ணி..” சிவராமன், சரஸ்வதி, கிரிஜாவை வரவேற்றாள்..
“என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்..?” சரஸ்வதி சம்பிரதாயமாய் விசாரிக்க..
“உங்கள் மகள் ராஜாங்கம் செய்து கொண்டு இருக்கிறாள்..” பதில் சொன்னாள் மகாராணி..
தாயும், தந்தையும் திகைத்து விழிக்க மருமகள் அருகே வந்த மகாராணி அவள் தலையை வருடினாள்..
“என்ன அற்புதமாக பிள்ளை வளர்த்திருக்கிறீர்கள்.. மதினி.. தேவதை போல் இவள்.. எங்கள் அனைவரையும் அன்பால் ராஜாங்கம் செய்து கொண்டிருக்கிறாள்.. 
இந்தக் காலத்தில் இப்படி ஒரு பெண் கிடைப்பது ரொம்ப அரிது.. நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்..”
மைதிலி கூச்சத்தில் நெளிய பெற்றவர்கள் முகங்கள் ஜோதியாய் பிரகாசித்தது.. கிரிஜா முகம் கறுக்க பார்த்துக் கொண்டிருந்தாள்..
“பத்து நாட்களாக அன்னையாக மாறி எங்கள் அனைவரையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள்.. இவளுக்கு நான்..” மருமகளின் கையை பற்றிய மகாராணி ஒரு நிமிடம் யோசித்து நின்று விட்டு பிறகு சட்டென தன் கைகளில் கிடந்த வளையல்களை சுழட்டி மருமகள் கைகளில் போட்டாள்..
“ஐயோ அத்தை இப்போது இது எதற்கு..?” மைதிலி தடுக்க..
“உன் அன்புக்கு விலை கிடையாதும்மா.. ஆனால் என் அன்பை தெரியப்படுத்த எனக்கு வேறு வழி தெரிய வில்லை.. நீ பூவும் பொட்டுமாக நீண்ட காலம் வாழ வேண்டும்மா..”
தலையில் கை வைத்து ஆசீர்வதித்தாள்.. சிவராமனும், சரஸ்வதியும் மிகுந்த சந்தோசத்தில் இருந்தனர்.. மகள் புகுந்த வீட்டில் நல்ல பெயர் எடுப்பதை, அதுவும் மாமியார் வாயிலிருந்து மெச்சுதல் வார்த்தைகளை வாங்குவதை கேட்டுக் கொள்வதை விட பெரிய சந்தோசம் எதுவும் பெற்றவர்களுக்கு கிடையாது.. அதனை அனுபவித்துக் கொண்டிருந்தனர் சிவராமனும், சரஸ்வதியும்..
சரஸ்வதியின் பார்வை பார்த்தாயா என் மகளை, நீயும் இருக்கிறாயே எனும் விதமாக கிரிஜாவின் மீது படிய அவள் முகம் சிவந்தது.. சை.. போனாப் போகுதுன்னு துக்கம் கேட்க வந்தது என் தப்பு.. கங்காருவாய் அவள் பார்வை குறை தேடி அங்குமிங்கும் அலைந்தது..
“என்ன மைதிலி ஒரு வழியாக மாமியார் வீட்டில் செட்டில் ஆகிவிட்டாய் போல.. அது சரி உனக்கு வேறு வழி வேண்டுமே.. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி காக்கா பிடித்து கூழைக் கும்பிடு போட்டு.. எப்படியோ வாழ்க்கையை ஓட்ட வேண்டியதுதான..” பேசியபடியே அவள் கை சற்று முன் மகாராணி சுழற்றி போட்ட வளையல்களை தொட்டுப் பார்த்தது..
“உங்களுக்கு குடிக்க என்ன கலக்கட்டும் அண்ணி..? காபியா..? டீயா..?” மைதிலி அடுப்படியில் பரபரப்பாக இருந்தாள்..
“எப்போதும் ஏதாவது செய்து கொண்டு.. எதற்கு இந்த ஓட்டம் மைதிலி..? பேசாமல் உன் கணவரைக் கூட்டிக் கொண்டு தனிக்குடித்தனம் போய்விடேன்..” மைதிலியின் காதுக்குள் குனிந்து ஐடியா சொன்னாள் கிரிஜா..
“நீங்கள் அண்ணனை கூட்டிக் கொண்டு போனீர்களே.. அப்படியா அண்ணி..?” மைதிலியின் புன்னகை மாறவில்லை.. ஆனால் கிரிஜாவின் முகம் மாறியது..
“பழக்கமில்லாத வேலைகளால் திணறிக் கொண்டிருக்கிறாயே என்று ஒரு யோசனை சொன்னால், நீ என்னையே திருப்புகிறாயா..?”
“நான் யோசனை கேட்கும்போது சொல்லுங்கள் அண்ணி..”
“நீ இந்த வீட்டில் ஒரு வேலைக்காரி போல் இருக்கிறாய் மைதிலி.. இதனை நீ உணரவில்லையா..?”
“அப்படியெல்லாம் இல்லை அண்ணி.. நான் உரிய மரியாதைகளோடு நன்றாகத்தான் இருக்கிறேன்..”
சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் முன் சாதத்தோடு ஒரு தட்டு வந்து விழுந்தது..
“என்ன சமைத்து வைத்திருக்கிறாய்..? வாயில் வைக்க முடியவில்லை.. எனக்கு சூடாக இரண்டு தோசை ஊற்றி எண்ணெய் பொடியோடு கொண்டுவா.. இதை நீயே கொட்டிக்கோ..”
கத்தியபடி அறைவாசலில் நின்றாள் வந்தனா.. மைதிலியின் முகம் மாற, கிரிஜாவின் முகம் பிரகாசமானது.. பார்த்தேனே உன் வாழ்வை எகத்தாளமாக மைதிலியை பார்த்தவள், வந்தனா பக்கம் திரும்பினாள்..
“ஹாய் வந்தனா எப்படி இருக்கிறாய்..? அப்பா இறந்தது எதிர்பாராததுதான்.. அதற்காக கவலைப்பட வேண்டாம்.. அன்றே உன்னைப் பார்த்து பேச நினைத்தேன்.. ஆனால் அன்று நீ ரொம்ப அழுது கொண்டிருந்தாயா.. அதனால்..”
பேசிக் கொண்டே போன கிரிஜாவை கையுயர்த்தி நிறுத்தினாள் வந்தனா..
“யார் நீ..? உன்னை இதற்கு முன் பார்த்த ஞாபகம் இல்லையே..”
கிரிஜா அதிர்ந்தாள்.. “என்னை தெரியவில்லையா..? மைதிலி கல்யாணத்திற்கு முன்பே என்னைப் பார்க்க வந்தாயே.. உங்கள் குடும்பத்தை பற்றிக் கதை கதையாக சொன்னாயே..”
“சாரி அப்படி எந்த ஞாபகமும் எனக்கு இல்லை.. என் குடும்ப கதையை நான் கண்டவர்களுடன் பேசுவது கிடையாது.. மைதிலி சீக்கிரம் எனக்கு தோசை கொண்டு வா..”
வந்தனா போய்விட்டாள்.. கிரிஜா பிரமை பிடித்தவள் போல் நின்றாள்.. வந்தனா வீசிய தட்டை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்த மைதிலிக்கு சிரிப்பு வந்தது.. அதை அடக்கிக் கொண்டாள்..
“என் அண்ணின்னு வந்தனாவிடம் சொல்லியிருக்காமே அண்ணி..”
“எப்பாடி எப்பேர்பட்ட பொண்ணு இவள்.. மூன்று தடவை என்னைப் பார்த்து பேசியிருக்கிறாள்… 
இந்தக் கல்யாணத்தை எப்படியாவது நிறுத்திடுங்கன்னு கெஞ்சியிருக்கிறாள் இப்போது எப்படி பேசிவிட்டு போகிறாள் பாரேன்..”
“அவள் சுபாவம் அப்படி அண்ணி விடுங்க..”
“அவளை அலட்சியமாக நினைக்காதே மைதிலி.. அவளால் உனது நிம்மதியான இந்த வாழ்வு மாறப் போவது உறுதி..”
“அதில் உங்களுக்கு மகிழ்ச்சியா.. துக்கமா அண்ணி..?”
“அதில் எனக்கு என்னவும் இருக்கலாம்.. நிச்சயம மகிழ்ச்சியாகவே கூட இருக்கலாம்.. ஆனால் நீ ஜாக்கிரதை, உன் அண்ணனின் மனைவியாக எச்சரிக்கிறேன்..”
கிரிஜாவின் எச்சரிக்கை மைதிலியின் மண்டைக்குள் தேனியின் ரீங்காரமாய் சுற்றி வந்தது..

What’s your Reaction?
+1
5
+1
3
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

வந்தனா, கதாபாத்திரம் சில இடங்களில் பார்க்க நேரிடும். வேலை ஆகும் வரை ஒட்டிக்கொண்டும், காரியம் ஆனபிறகு வெட்டிக் கொண்டும் தெரியும் குணம்.

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!