Serial Stories Sollamal Thotu Sellum Thenral

Sollamal Thottu Sellum Thendral – 18

18

போதை யேற்றிகளுக்கெல்லாம்
அளவீடு குறித்துக் கொள்வதில்லை,
உன்னுடனான மழை நனைதல்
இராப் பொழுதிற்கு பின்.

வேலைகள் சிறிது ஓய்ந்த பின் மதிய நேரம்.. மைதிலி வீட்டின் பின்புறம் வந்து உட்கார்ந்திருந்தாள்.. வீடு இன்னமும் சுந்தரேசனின் மரணத்திலிருந்து மீண்டு வரவில்லை எந்நேரமும் துக்கம் விசாரிக்க என வந்து போய்கொண்டிருக்கும் விருந்தினர்களை கவனிக்க, கூடவே அன்றாட வீட்டு வேலைகள் என மைதிலி மிகவும் சோர்ந்திருந்தாள்.. உடல் சோர்வை விட மனச் சோர்வுதான் அவளை அதிகம் படுத்தியது..
தனியாக இருக்க வேண்டாமென ஈஸ்வரியும், வந்தனாவும் இங்கேயே தங்க வைக்கப்பட்டிருக்க, வந்தனா அவளை நாகம் போல் கொத்தியபடியே இருந்தாள்.. எதைச் செய்தாலும் குற்றம்.. என்ன சொன்னாலும் குறை.. அவள் முன்பே அந்த வீட்டில் செல்லப் பெண்ணாக வலம் வந்து கொண்டிருந்திருக்கிறாள்.. இதுபோன்ற அவளது நடவடிக்கைகள் குழந்தை கொஞ்சல்களாகவே அங்கே அனைவராலும் பார்க்கப்பட்டது அதுவும் அவள் சமீபத்தில் தந்தையை இழந்தவள் என்ற பரிதாபத்துக்கு உரியவளாக வேறு இருக்க, அவளது கோபங்கள் அங்கே யாராலும் கவனிக்கப்படாமலே போய்விட்டது..
“என் டிரஸ்iஸ மடித்து வை..”
“எனக்கு காபி போட்டு வா..”
“குளிக்க வேண்டும் ஹீட்டரை ஆன் பண்ணு..”
இதுபோல் அவள் மைதிலியை ஏவும் வேலைகள் இங்கே யார் கண்ணிலும் தவறாக படவே இல்லை.. அருணாச்சலத்திலிருந்து பரசுராமன் வரை அனைவருமே அவளது தேவைகளை உடனடியாக நிறைவேற்றவே முனைந்தனர்.. அதனை ஆச்சரியமாக உணர்ந்த மைதிலிக்கு ஒன்று நிச்சயம் புரிந்தது.. வந்தனாவிற்கு எதிராக ஏதனும் பேசிக் கொண்டு தன்னால் இந்த வீட்டில் இருக்க முடியாது என்பது..
வந்தனாவின் ஏவல்களை அதிகாரங்களை அவள் பொறுத்துக் கொள்வாள்.. ஆனால் அவளது கண்கானிப்புகளை.. ஆம் தான் எப்போதும் வந்தனாவால் கண்காணிக்கப் படுவதாக உணர்ந்தாள் மைதிலி.. அவளது வேலைகளின் கண்காணிப்பில் அவளுக்கு கவலையில்லை.. ஆனால் அவளது தனிமைகளை.. அந்நியோன்யங்களை அவள் கண்காணிப்பாளானால் அதனை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாது..
கணவனும் மனைவியுமாக தாங்கள் தனித்திருக்கும் போது யாராலோ பார்க்கப்படுகிறோம் எனும் உணர்வு மைதிலியினுள் இருந்து கொண்டே இருந்தது.. கணவனுக்கு உணவு பரிமாறும் போது, அவனுடன் ஓரிரு வார்த்தைகள் பேசும் போது, என சதா தனது தனிமை பங்கப்படுவதாக அவள் உணர்ந்தாள்.. இது உள்ளுணர்வு மட்டுமே இதற்கான ஆதாரங்கள் அவளிடம் கிடையாது..
இரண்டு நாட்களுக்கு முன்பு மதிய உணவுக்கு வீடு வந்த பரசுராமன், அலுப்பாக இருக்கிறது என சற்றுப் படுத்துவிட அறைக்குள் எட்டிப் பார்த்த மைதிலி 
அவனது அயர்ந்த தோற்றத்தில் மனம் நெகிழ்ந்தாள்.. சுந்தரேசனின் தொழிலையும் சேர்த்து கவனித்து வருகிறான்.. வீட்டிற்கு வரும் நேரமே அகால் பொழுதுதான்.. 
வந்ததும் உணவருந்தக் கூட நேரமின்றி படுக்கையில் விழுவதிலேயே இருப்பான்.. மைதிலி அவனை கட்டாயப் படுத்தி கொஞ்சமாக சாப்பிட வைத்து விட்டே படுக்க விடுவாள்.. அவனது உறக்க நேரமே ஒருநாளைக்கு நான்கு அல்லது ஐந்து மணி நேரமாக குறைந்தது..
அன்று அபூர்வமாக கிடைத்த சிறு ஓய்வில் படுத்திருந்த கணவனருகே ஆதரவுடன் நின்றவள், பிறகு அவனருகே கட்டிலில் அமர்ந்து அவன் கால்களை தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு மெல்ல அமுக்கி விடத் துவங்கினாள்..




“வேண்டாம் மைதிலி..” கண்களை திறக்காமலேயே முணுமுணுத்தான் பரசுராமன்..
“பரவாயில்லை.. நீங்க தூங்குங்க..” விரல்களை இதமாக நீவி சொடக்கிட்டாள்..
மெல்ல விழி திறந்து அவளைப் பார்த்தவன் கையை நீட்டி அவளை பற்றி இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்..
“நீயும் கொஞ்ச நேரம் தூங்கு மைதிலி.. உனக்கும் நிறைய வேலைகள்..”
“அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை.. எப்போதும் பார்க்கும் வேலைகள்தான்..”
கணவனின் மூச்சுக்காற்று கன்னத்தை சுட மைதிலியின் குரல் திணறியது..
“ம்..” என்றபடி அவளை அணைத்து மார்பில் அவன் இருத்திக் கொள்ள முயல, மைதிலி அவனிடமிருந்து எழ முயன்றாள்..
“ஏண்டி..?” அவளை எழ விடாமல் அழுத்தியபடி கேட்டான்..
“பகல் நேரம்.. ரூம் கதவை பூட்டக் கூட செய்யலை.. சும்மா சாத்தியிருக்கு வீட்டில் எல்லோரும் இருக்காங்க..”
“ஏய் உன்னை கொஞ்ச நேரம் படுத்து தூங்கத்தானடி கூப்பிட்டேன்.. நீ வேறெதுக்குன்னு நினைச்ச..?” மேலே பேசப் போனவனை வாயை வேகமாக பொத்தினாள்..
அடுத்து அவள் என்ன பேசுவானென அவளுக்கு தெரியும்.. இப்படி பேசுவதென்றால் இவனுக்கு அல்வா சாப்பிடுவது போல் இருக்கும்.. முகம் சிவந்தாள்..
“ஐயோ கண்டபடி பேசாதீங்க.. நானும் அதைத்தான் சொன்னேன்.. அத்தை, பெரியம்மா, வந்தனா எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள்.. அவர்கள் வெளியே இருக்கும் போது நாம் இங்கே ரூமை பூட்டிக் கொண்டு தூங்கினால் நன்றாக இருக்காது..”
“தூங்கலைன்னு சொல்றதுக்கு எதற்கு கன்னம் இப்படி சிவக்கிறது..” பரசுராமன் சொக்கிய விழிகளோடு அவள் கன்னத்தை வருட, மைதிலியின் பார்வை படபடப்போடு அறைக் கதவின் மேல் படிந்தது..
அவள் பார்வையை கவனித்தவன் பெருமூச்சோடு அவளை விடுவித்தான்.. “சரி.. போ..”
மைதிலி வேகமாக வெளியே வந்த போது வந்தனா ஹாலிலிருந்து அடுப்படிக்குள் போய் கொண்டிருந்தாள்.. இவள் இவ்வளவு நேரமாக எங்கே இருந்தாள்..? மைதிலியின் மனம் குழம்பியது.
வாசலில் காலிங்பெல் சத்தம் கேட்க எழுந்து போய் கதவை திறந்து மைதிலி விழி விரித்தாள்..
“ரவீந்தர்..”
“எப்படி இருக்கிறாய் மைதிலி..?” கேட்டபடி அவன் உள்ளே வந்தான்.
“நல்லாயிருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க..? பேக்கை கொடுங்க.. அத்தை ரவி கொழுந்தன் வந்திருக்கிறார்..” உள்ளே பார்த்து குரல் கொடுத்தாள்..
அவளை ஆராய்ச்சியாய் பார்த்த ரவீந்தர்.. “ம் முழுக்க முழுக்க எங்க வீட்டு மருமகளாகவே மாறிவிட்டாய் போல..” என்றான்..
“ரவி வாடா.. என்னடா ஒருவிபரமும் கொடுக்காமல் திடீரென வந்து நிற்கிறாய்..?” மகாராணி மூன்று மாதங்கள் கழித்து பார்க்கும் தன் மகனை ஆவலோடு கை வருடி வரவேற்றாள்..
“மாமா இறந்த தகவல் லேட்டாகத்தான் கிடைச்சதும்மா.. எனக்காக கூட வந்த ப்ரெண்ட்ஸ் பாதியில் டூரை கேன்சல் செய்யனும்.. அப்படி ஓடி வந்து இங்கே மாமா உடம்பைக் கூட பார்க்க முடியாது.. அதுதான் அப்படியே இருந்துட்டேன்.. அதற்கு பிறகு என் டூர் சந்தோசமாக இல்லை.. நண்பர்களுக்காக ஏனோ தானோன்னு டூரை முடித்து விட்டு வந்துவிட்டேன்.. இதில் ஆவலோடு வீட்டிற்கு தகவல் கொடுக்க என்ன இருக்கு..? அதுதான் அப்படியே கிளம்பி வந்தேன்.. இதைத்தான் இப்போது அண்ணியிடம் கூட சொல்லிக்கொண்டிருந்தேன்..”
அவன் அண்ணி என்பதை அழுத்தமாக உச்சரிப்பதை புன்னகையோடு கேட்டிருந்தாள் மைதிலி.. தங்களுக்கு இடையேயான நட்பை மாற்றிக் கொள்ள ரவீந்தர் ஒரு போதும் விரும்பமாட்டான் என அவளுக்கு நன்றாகத் தெரியும்.. ஆனாலும் நான் உன் அண்ணி என்பதை மாற்ற முடியாது என அவனுக்கு உணர்த்தவே அப்படி அழைத்தான்.
கொழுந்தனாகவோ, நண்பனாகவோ எச் சூழ்நிலையிலும் ரவீந்தர் தன் பக்கம் நிற்பான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் கிடையாது.. நிறைவாய் தன் தோழனை பார்த்தபடி அவள் நின்றபோது..
“ரவி..” அலறலுடன் உள்ளிருந்து ஓடி வந்தாள் வந்தனா.. நாடகபாணியில் கைகளை விரித்து வைத்துக் கொண்டிருந்தாள்.. கண்கள் கண்ணீரை சொறிந்து கொண்டிருந்தது..
“அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு ரவி..” கத்தலோடு வந்தவளை ரவீந்தர் ஆதரவாக அணைத்துக் கொண்டார்..
“கேள்விப்பட்டேன்மா.. என்னால்தான் வரமுடியலை..” அன்பாய் தலை வருடினான்..
“நானும் அம்மாவும் அநாதை ஆயிட்டோம் ரவி.. எங்களுக்கு யாருமில்லை..”
“சு.. அப்படியெல்லாம் பேசக்கூடாது இங்கே பார் எத்தனை பேர் உங்களுக்கு இருக்கிறோம்.. நீ எங்க வீட்டு பிள்ளைடா, உன்னை நாங்கள் கண்போல் பார்த்துக் கொள்வோம்..”
வந்தனாவின் தோளணைத்து தலை வருடி ஆறுதல் சொன்ன ரவீந்தரை யோசனையாக பார்த்தபடி நடந்தாள் மைதிலி.. இந்த வந்தனா இந்த வீட்டில் எல்லோருக்கும் இவ்வளவு முக்கியமானவளா..?
“சின்னப் புள்ளையிலிருந்து இந்த வீட்டைத்தான்மா சுத்தி சுத்தி வருவாள்.. ஈஸ்வரி அவளுக்கு சாப்பாடு ஊட்டினதை விட மகாராணி ஊட்டி வளர்த்ததுதான் அதிகம்..” தகவல் சொன்னவர் கௌரிம்மா..
இவ்வளவு பாசமாக பழகி வந்த குடும்பங்கள் இடையில் இரண்டு வருடங்கள் பிரிந்திருந்ததே ஆச்சரியம் என்று நினைத்தாள் மைதிலி.. இத்தனை பாசம்தான் வந்தனாவை தங்கள் வீட்டிலேயே வைத்துக் கொள்ள, மகனுக்கு மனம் முடிக்கும் எண்ணத்தை மாமாவிற்கு கொடுத்தது போலும்..
இதுபோல் குடும்பத்தினர் அனைவரின் பாசத்தையும் பெற்றதால்தான் வந்தனா எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்து விடும் என அவ்வளவு உறுதியாக சொல்லிக் கொண்டிருந்திருக்கிறாள்… இப்போது மைதிலிக்கு இவர்களது இனிமையான குடும்பத்திற்குள் தான் உள்ளே நுழைந்து கலைத்து விட்டோமோ.. என்ற மருகல் வந்திருந்தது..
கலங்கிய மனத்துடன் தனது வேலைகளை பார்க்கத் தொடங்கினாள்.. ரவீந்தர் அன்று முழுவதும் வெளியே எங்கேயும் போகாமல் அத்தை, வந்தனா அருகிலேயே இருந்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான்.
“இந்த வீட்டில் எல்லோருமே என் பக்கம்தான் மைதிலி.. நீ எவ்வளவுதான் விழுந்து விழுந்து வேலைகள் பார்த்தாலும் யாரும் உன்னைக் கவனிக்கமாட்டார்கள்.. உன் பக்கம் பேச மாட்டார்கள்..”
இவள் திரும்ப ஆரம்பித்து விட்டாளா..? மைதிலிக்கு ஆயாசமாக இருந்தது.. இவள் ஏன் மீண்டும் மீண்டும் என்னை வேட்டையாடத் துடிக்கும் வேடனாக சுற்றி வருகிறாள்..? மனது சோர்ந்தாலும் வந்தனாவிற்கான பதிலை தர தயங்கவில்லை மைதிலி..
“வீட்டிற்கு வந்த விருந்தாளிகளைத்தான் வந்தனா நன்கு கவனிப்பார்கள்.. வீட்டுப் பெண்ணிற்கு தனிக் கவனிப்பு எதற்கு..?”




“ஏய் யாரை விருந்தாளி என்கிறாய்..?”
“உன்னைத்தான்.. நீ இந்த வீட்டுத் தலைவர் அருணாச்சலத்தின் தங்கை பெண்.. விருந்தாளி… நான் அருணாச்சலத்தின் மூத்த மருமகள்.. இந்த வீட்டுப் பெண்..”
“ஏய்..” வந்தனா ஆத்திரத்துடன் மைதிலியின் தோளை தட்ட, அதில் தடுமாறிய மைதிலியின் கைகள் காய்வெட்டிக் கொண்டிருந்த அரிவாள் மணையில் பட்டு விரலில் ரத்தம் துளிர்த்தது..
“என்னை அப்படி பேசியது கடவுளுக்கே பொறுக்க வில்லை.. உனக்கு உடனே தண்டனை கொடுத்து விட்டார்..”
வந்தனாவின் திருப்திக்கு பதில் சொல்லாது தனது விரலை சிங்க் குழாய் நீரில் காட்டினாள் மைதிலி.. வந்தனாவை போல் அவளாலும் பேசிவிட முடியும்.. ஆனால் பேசக் கூடாது.. வந்தனாவே சொல்வது போல் அவள் வீட்டுப்பெண், மைதிலி வாழ வந்த பெண்.. தந்தையை இழந்து நிற்கும் வந்தனாவின் சோகத்தின் முன் மைதிலியின் நியாயம் எடுபடாது.. கணவனே தன் பக்கம் பேசுவான் எனும் நிச்சயம் இல்லாத போது, வந்தனாவை பற்றி யாரிடமும் எதுவும் சொல்லி ரிஸ்க் எடுக்க மைதிலி தயாரகஇல்லை..
“என்னாச்சு அண்ணி..?” ரவீந்தர் உள்ளே வந்தான்.. 
“கையை வெட்டிக் கொண்டாயா..?” அதட்டலாய் கேட்டபடி அவள் கையை எடுத்து பார்த்தான்.
“ஒன்றுமில்லை ரவி.. சும்மா லேசாக..”
“இது லேசாகவா.. ரத்தம் கொட்டுது.. வந்தனா.. போய் பிளாஸ்திரி எடுத்துட்டு வா..”
வந்தனா அலட்சியமான பார்வையுடன் போக, ரவீந்தர் மைதிலியின் விரலை அழுத்திப் பிடித்தான்..
“எவ்வளவு ரத்தம்.. ஆழமாக வெட்டிவிட்டது போல..”
“என்னாச்சு ரவி..?” கேட்டபடி வந்தவன் பரசுராமன்.. அவன் பின்னேயே வந்தனா..
“கையை வெட்டிக்கிட்டாண்ணா.. வந்தனா பிளாஸ்திரி எங்கே..?”
“நீ முதலில் அண்ணியின் கையை விட்டுட்டு கடைக்கு போ..” பரசுராமன் குரல் உத்தரவாக ஒலித்தது..
“இதற்கு பிளாஸ்திரி ஒட்டிட்டு..”
“எல்லாம் அவள் பார்த்துக் கொள்வாள்.. வீட்டு பெண்களுக்கு தடவி, ஒட்டின்னு சேவை பண்ணிட்டு இருந்தோம்னா நம்ம தொழில் அவ்வளவுதான் வா..” அலட்சிய கையசைவுடன் நடந்தான்.
அண்ணனின் முதுகை வெறித்த ரவீந்தர் தானே போய் பிளாஸ்திரி எடுத்து வந்து விரலில் சுற்றி விட்டு “டேக் கேர் அண்ணி..” என்று விட்டு போனான்..
மைதிலி மனம் நைந்து நிற்க, வந்தனா மர்ம புன்னகையுடன் நின்றாள்..

What’s your Reaction?
+1
6
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Sarojini
Sarojini
4 years ago

பரசு, நீ ஏன் இப்டி இருக்க, தாமரையில ஒட்டாத தண்ணி போல

எனக்கு உன்னைப் பிடிக்கல, ஆமா

மைதிலி ரொம்ப உங்க வீட்டுல கஷ்ட படுறா, so sad…

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!