mayanginen mannan inke Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே-1

1

 

 

” சொப்னா … டீ சொப்னா எழுந்திரிடி , ஊர் வந்துடுச்சு. ஏய் சீக்கிரம்டி, எழுந்திரிடி …” கத்தலாய் காதில் இரைந்த குரலில் மூளையே அதிர, வேறு வழியின்றி கண் விழித்தாள் சொப்னா .

 

” ஏன்டி இப்படி கத்தி தொலைகிறாய் ? “

 

” காரைக்கால் வரப் போகிறதடி .எழுந்துக்காம இப்படி தூங்குறியே …? “

 

சொப்னா ரயில் சன்னல் வழியே வெளியே பார்த்தாள். ரயில் ஊரை நெருங்கி விட்ட அறிகுறி தெரிந்தது. ஆனாலும் இன்னமும் கால் மணி நேரமாவது காரைக்கால் ரயில்வே ஸ்டேசனுக்குள் நுழைந்து நிற்க ஆகும்.

 

” இன்னமும் டைம் இருக்கேடி மலர் . அதற்குள் ஏனிப்படி பிசாசு போல் கத்தி எழுப்புகிறாய் ? ” சலித்தபடி எழுந்து அமர்ந்த சொப்னா இளமையின் தோரணங்களை தன் தேகத்தில் சுமந்தபடி மிக அழகாக இருந்தாள்.

 

“ஏய் உன் ஊருக்கு வந்திருக்கறோமடி . செமஸ்டர் , ரெகார்ட்ஸ்  அது இதுன்னு ஏதேதோ காரணங்களால் மூன்று மாதமாக உன் ஊர் பக்கமே நீ வரலை .நினைவில் இருக்கிறதா …?”  சொன்ன மலரும் அதே இளமை பூந்தோரணம்தான் . பனியிலாடும் மலர் போன்றே இருந்தாள் .

 

” சரிடி .எனக்கும் ஆவல்தான் .என் பாட்டி , அம்மா  அண்ணா எல்லோரையும் பார்த்து மூன்று மாதமாகிவிட்டதே .அதற்காக ஒரு மணி நேரத்திறகு முன்னாலேயே தூகத்திலிருந்து எழுந்து உட்கார்ந்து  ரோட்டை வெறிக்க வெறிக்க பார்த்துட்டிருக்க சொல்றியா …? ” கொட்டாவியோடு எழுந்து போய் முகம் கழுவினாள் .

 

மலர் சன்னல் வழியாக பரபரப்பாக வரப் போகும் ஊரை பார்த்தபடி இருந்தாள் .அவள் கண்களில் எதிர்பார்ப்பு மின்னியது.

 

” முகம் கழுவி விட்டாயா மலர் …? ” கேட்டபடி வந்த சொபனா திருத்தமான அவளது தோற்றத்தை பார்த்து …” குளித்தாயா என்ன ..? ” என்றாள் .

 

” இங்கே எப்படியடி குளிக்க முடியும் ? ” சன்னலை விட்டு நகராமல் பதிலளித்தவளின் அருகே வந்து வலுக்கட்டாயமாக அவள் முகத்தை திருப்பி பார்த்தாள் சொப்னா .

 

இமைகள் பட்டாம்பூச்சிகளாக சிறகடிக்க , கன்னங்கள் சிவந்து குவிந்திருக்க , இதழ் துடிக்க அமர்ந்திருந்த தோழியை விழி விரித்து பார்த்து , ” குற்றால அருவியில் குளித்தவள் போலவே இருக்கிறாயடி. எப்படியடி இவ்வளவு புத்துணர்ச்சி ? ” என்றாள் .




மலர் பதில் சொல்லாமல் கண்களை சிமிட்டி விட்டு தனது பெட்டி , பேக்குகளை எடுக்க ஆரம்பித்தாள்.

 

” ஏய் மலர் …சொல்லுடி …”

 

மலர் இப்போது தோழியின் உடைமைகளையும் சேகரிக்க ஆரம்பித்தாள் .

 

” டீ மலர் …சஷ்டி மலர் …உன்னைத்தான் கேட்கிறேன் சொல்லுடி …”

 

அதே கம்பார்ட்மென்டில் இருந்த நடுத்தர வயது பெண் திரும்பிப் பார்த்தாள்.

 

” என்ன பெயர் சொன்னீர்கள் …? “

 

சொப்னா விழித்தாள். மலர் நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாள் .” சஷ்டி மலர். அதுதான் என் பெயர் மேடம் “

 

” என்ன அழகான , தெய்வீகமான பெயர் ” அந்த பெண் பாராட்டினாள்.

 

” நன்றி மேடம். நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது. சந்தர்ப்பம் அமைந்தால் பார்க்கலாம் ” அந்த பெண்ணிற்கு கையசைத்து விட்டு சொப்னாவின் பேக்கை அவள் தோளில் மாட்டி , அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு இறங்கினாள் சஷ்டி மலர் .

 

” நேற்று நைட் டிரெயினில் ஏறியதிலிருந்து ஒரு வார்த்தை பேசியதா அந்த பொம்பளை ? இப்போ உன் பெயரைக் கேட்டதும் வந்து பேசுது பாரேன் …”

 

” அது என் பெயரின் மகிமைடி ” சஷ்டி மலர் சுடிதார் காலரை உயர்த்தி விட்டுக் கொண்டாள் .

 

வழக்கம் போல் அவள் பெயரை பற்றிய விவரணையில் இறங்கி விடுவாளோ என்ற பீதியில் முகம் வெளிற , அவளை முந்திக் கொண்டு எட்டு வைத்து நடந்தாள் சொப்னா .

 

” இங்கிருந்து உங்க ஊருக்கு எப்படியடி போகனும் ? பஸ்ஸா …டாக்சியா ..? பஸ்ஸுன்னா லேட்டாயிடும் .டாக்சியே பிடிச்சிடலாமா …? ” கேட்டபடி துள்ளிக் குதித்து  சொப்னாவை முந்தி நடந்த சஷ்டி மலருக்கு வழக்கமாக பேசும் தன் பெயர் பெருமை ஞாபகத்தில் இல்லை .

 

” என்னை விட நீதான்டி என் வீட்டிற்கு போக துடித்துக் கொண்டிருக்கிறாய் …” வார்த்தைகளில்  சலித்த சொப்னாவிற்கு உள்ளும் அதே ஆச்சரியமே .

 

சஷ்டி மலர் எப்போதுமே உடன் படித்த தோழிகளின் வீட்டிற்கு போவதில் ஈடுபாடு காட்ட மாட்டாள் .செமஸ்டர் முடிந்ததும் தன் ஊரை …தன் வீட்டைப் பார்த்து போவதில் குறியாக இருப்பாள் .சொப்னா சும்மா ஒரு ஒப்புக்காகவே அவளை தன் வீட்டிற்கு அழைத்தாள் . சஷ்டி மலர் உடனேயே சம்மதித்து விட்டதோடு எப்போதடா அவர்கள் வீட்டு வாசல்படியேறுவோம் எனபது போல் துடித்துக் கொண்டும் இருக்கிறாள் .

 

” உன் ஊர் பெருமைகளை  வரைந்து வரைந்து பீற்றினாயா …அதிலிருந்து உன் ஊரை உடனடியாக பார்த்தே ஆக வேண்டுமென்றாகி விட்டது …”

 

சொப்னாவினுள் தன் ஊரை பற்றிய பெருமிதம் வந்து உட்கார்ந்து கொண்டது .

 

” ஆமாம்டி .எங்கள் ஊரைப் போல் ஒரு ஊரை நீ பார்த்திருக்க முடியாது.  எங்கள் ஊரில் நூற்றியெட்டு குளங்கள் , நூற்றியெட்டு கோவில்கள் இருக்கும் தெரியுமா …? “

 

இதை நீ நூற்றியெட்டு தடவைக்கு மேல் சொல்லிவிட்டாய் …மனதிற்குள் சொல்லிக் கொண்ட சஷ்டி மலர் வெளியில் ” அட அப்படியா சொப்னா …? ” என விழியுருட்டி ஆச்சரியப்பட்டு வைத்தாள் .

 

சொப்னா அவளுக்கு முன் வந்து நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள் .” என்ன அப்படியா …இந்த விபரம் இதற்கு முன் உனக்கு தெரியாது ? “

 

” அ….அது …ஓ …தெரியுமே .நீயே பல தடவை சொல்லியிருக்கிறாயேடி …”

 

” பிறகென்ன இப்போதுதான் புதிதாக கேட்பது போலொரு பாவனை .நீ சரியில்லைடி.   கொஞ்ச நாட்களாகவே ஒரு வடிவாவே திரிகிறாய் .இரு உன்னை பிடிக்கிறேன் …” ஒற்றை விரலாட்டி எச்சரித்த தோழியின் விரலை பிடித்து இழுத்தபடி முன்னால் நடந்தாள் சஷ்டி மலர் .

 

” எதையாவது உளறாமல் வாடி .சீக்கிரமாக வீட்டிற்கு போகலாம். எனக்கு பசி உயிர் போகிறது “




” நில்லு மலர் அங்கே எங்கே போகிறாய் ? டாக்சியெல்லாம் வேண்டாம்.  எனக்காக அண்ணன் கார் அனுப்பியிருப்பார் .அவரே கூட வந்தாலும் வந்திருப்பார் …” ரயில்வே ஸ்டேசனின் ஓரம் ஒதுங்கி நின்று கொண்டு கண்களால் சலித்தாள் சொப்னா .

 

” உன் அண்ணனே வருவாரா …? “

 

” என்னடி ஆர்வம் பொங்குது …? உன் மனதில் என் அண்ணன் மீது எதுவும் ஐடியா இருக்கிறதா ..? ” நிச்சய சந்தேகம் சொப்னாவின் குரலில் .ஆனால் உடனே கன்னத்தில் கிள்ளுபட்டாள் .

 

” மூதேவி .என்னை என்ன லூசுன்னு நினைத்தாயா .? “

 

” நீ லூசு இல்லைன்னு தெரியும் .ஆனாலும் சின்ன சந்தேகம் .என் அண்ணனை பற்றி நான் அடிக்கடி பேசியதை கேட்டு கேட்டு உனக்கு அவர் மீது எதுவும் அபிப்ராயம் ….”

 

பேசிக் கொண்டிருந்தவளின் கழுத்தை பிடித்தாள் சஷ்டி மலர் .

 

” கொன்னுடுவேன்டி உன்னை .என்னை என்னன்னு நினைத்தாய் ..? “

 

” அது …கொஞ்சம் மரியாதையாக தள்ளியே நில்லு . என்னிடமில்லை . என் அண்ணனிடம் . அவருக்கு  கல்யாணம் நடக்க போகிறது. அதற்காகத்தான் நீ இங்கே வந்திருக்கிறாயென மறந்து விடாதே “

 

” உன் உலகப் புகழ் பெற்ற அண்ணனை பற்றி இனி ஒரு வார்த்தை பேசினால் என்னை ஏன்னு கேளு ” சூளுரைத்தபடி தோழியின் கழுத்தை விடுவித்தாள் சஷ்டி மலர் .

 

” அண்ணனை நக்கல் பண்ணுகிறாயா …? உலகப்புகழெல்லாம் தேவையில்லடி .அவர் ஊர் புகழ் பெற்றவர் .இந்த காரைக்கால் , நாகூர்,  நாகப்பட்டினம் ஏரியாக்கள் முழுவதும் ராயர் னு சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது .அவரை அலட்சியாமாக நினைக்காதே …”

 

” ராயர் ” சஷ்டி மலரின் இதழ்கள் இகழ்வாய் சுழிந்தன .” அதென்னடி ராயர்.? “

 

” ராயர்னா …அரசர் …மன்னன் .என் அண்ணனின் பெயரும் அதுதான் . திருமலை ராயர் “

 

” உங்க ஊர் பெயரும் அதுதானே .திருமலை ராயர் பட்டிணம் . ஊர் பெயரையே உன் அண்ணனுக்கும் வைத்தார்களா ..? “

 

” இல்லை மலர் .இந்த ஊரை உருவாக்கி ஆட்சி செய்தது திருமலை ராயர் என்ற மன்னர் .அவர்தான் இந்த ஊரில் நூற்றியெட்டு கோவில்களையும் , நூற்றியெடு குளங்களையும் உருவாக்கினார். மிகச் சிறந்த மன்னராக விளங்கினார் .அதனால் அவர் பெயராலேயே எங்கள் ஊர் அழைக்கபடுகிறது .இதெல்லாம் உனக்கு முன்பே …”

 

” சொல்லியிருக்கிறாய்தான் .ஆனால் இப்போது எனக்கு ஒரு சந்தேகம் …” பேசிக் கொண்டிருந்தவர்களை ஒட்டியபடி ஒரு இன்னோவா கார் வந்து நின்றது .

 

” நல்லாயிருக்கீங்களா பாப்பா ..? ” கேட்டபடி டிரைவர் இருக்கையிலிருந்து இறங்கினார் பெரியவர் ஒருவர். தலையெல்லாம் முடி உதிர்ந்து பளபளவென மின்ன , கன்னங்கள் பற்களை இழந்த்ததால் உட்குழிந்து டொக்காகி இருந்தன. கரங்களில் கூட லேசான நடுக்கம் இருந்தது .

 

” நான் நல்லாயிருக்கேன் .நீங்க எப்படியிருக்கீங்க தாத்தா …? ” சொப்னா அன்புடன் அவரின் கையை பற்றிக் கொண்டாள் .

 

” உங்க புண்ணியத்தில நல்லாயிருக்கேன் தாயி .மெலிஞ்சாக்கல தெரியுறீகளே …சரியா உண்ணுறதில்லீகளா தாயி …? “

 

டிரைவரின் கேள்வியில் சஷ்டி மலர் நொந்தாள் .காரைக்கால் டிரெயின் ஏறும் முன்பு சென்னை ரயில்வே ஸ்டேசனில் சொப்னா எடை மிசினில் ஏறி நிற்க , அது போன மாதத்தை விட இந்த மாதம் அவள் இரண்டு கிலோ எடை கூடியிருப்பதாக அறுதியிட்டு அறிவித்தது .




செமஸ்டர் டைம்ல , உடகார்ந்த இடத்திலிருந்து படித்து படித்து உடம்பு கொஞ்சம் வெயிட் போட்டுடுச்சு …” சொப்னா சமாளித்துக் கொண்டு அந்த வெயிட் சொன்ன  அட்டையை குப்பைத் தொட்டியில் விசிறியடித்திருந்தாள்.  அவளை பார்த்து இந்த தாத்தா …

 

” நாலு கிலோ வெயிட் கூடியிருக்கிறாள் . அவளை மெலிஞ்சிட்டாங்கிறீங்களே தாத்தா .உங்களுக்கே இது நியாயமாக இருக்கிறதா ? “

 

அந்த தாத்தா திரும்பி சஷ்டி மலரை பார்த்த பார்வையில் குலமளிக்க வந்த கோடாரிக் காம்பே எனும் வசனம் இருந்தது.” இது யாரு தாயி …? “

 

” என் ப்ரெண்ட் தாத்தா. அண்ணன் கல்யாணத்திற்காக கூட்டி வந்திருக்கிறேன் “

 

” ராயர் கல்யாணத்திற்கு வந்தவங்களா ..வணக்கம் தாயி .எங்க ராசா கல்யாணம் …ராஜ கல்யாணம் .ஊரே அமளி துமளிப்படும் . நீங்களும் இருந்து பார்த்து வயிறார உண்டுட்டு போங்க …வாங்க காரில் ஏறுங்க “

 

வந்து தொலைஞ்சிட்டியா …சரி இருந்து தின்னுட்டு போ என்ற ரீதியில் இருந்த தாத்தாவின் பேச்சில் சஷ்டி மலர் முகம் கடுத்தாள். 

 

அதன் தாக்கமாக காரில் ஏறியதுமே …” ராயர்னா தெலுங்கு வார்த்தைதானே …அதை வைத்து எப்படி கூப்பிடுகிறீர்கள் ? ” என்றாள் கொஞ்சம் நக்கலாக .

 

” ஏன்மா தெலுங்கு வார்த்தையாக இருந்தால் என்ன ? ராயர்னா மன்னன். திருமலை ராயர் தெலுங்கு மன்னன். அதே பெயரை எங்க ராசாவுக்கு வைத்திருக்காங்க. இதிலெதற்கு மொழி வித்தியாசத்தை கொண்டு வர்றீங்கம்மா ..? எங்க ஊரில் நாங்க சாதி மத மொழி வித்தியாசம் இல்லாமல் ஒரு தாய் பிள்ளையாக  பழகுறோம்மா .இது போல் ஊருக்குள் வந்து பேசிறாதீக. பல்லு ஆடிப்புடும் …” இந்தப் பேச்சில் சஷ்டி மலர் துணுக்குற்றாள் .

 

வெளித் தெரியாமல் மிக லேசாக குத்தினாள் ஆனால் அதனையும்  உணர்ந்து கொண்டு இவர்பல்லை உடைப்பது வரை போய் விட்டாரே …இங்கே மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் போலவே …உதட்டை மடித்து கடித்தவளின் முகம் சோகம் கவிழ்ந்தது .அதனை பார்த்த சொப்னா ஆதரவாக அவள் கையை பற்றிக் கொண்டாள் .

 

” என்ன தாத்தா இது ? நம்ம வீட்டு கல்யாணத்திற்கு வந்திருக்கிற விருந்தாடி .என் தோழி வேறு .அவளை இப்படியா பயமுறுத்துவீர்கள் ? “

 

” பயமுறுத்தல தாயி . பட்டணத்து பொண்ணுக்கு நம்ம ஊரு நெலவரம் சொன்னேன். சூதானமா இருந்துக்க சொல்லுங்க …” சொன்னபடி ஸ்டியரிங் சுற்றிய கிழவனின் கை நடுக்கத்தின் மீது இகழ்வாக படிந்தது சஷ்டி மலரின் பார்வை .

 

அழுத்தி ஸ்டியரிங் பிடிக்க முடியலை .இந்த ஆளெல்லாம் ரிட்டயர்டு கேசு .போட்டதை சாப்பிட்டு திண்ணையில் தூங்க வேண்டியவரோட கையில் காரைக் கொடுத்து அனுப்பியதோடு இல்லாமல் , வாய் வேறு பேச வைக்கிறார்களே …மனதில் நினைப்பதை வெளிப்படுத்தாமல் விடுபவளா அவள் …?

 

” பார்த்து ஓட்டுங்க தாத்தா உங்க  கை நடுங்குது .சொப்னா கொஞ்சம் பயமாக இருக்குதடி …” தோழியை உரசி அமர்ந்து கொண்டவளுக்கு உண்மையாகவே பயமாகவே இருந்தது .

 

இப்போது தாத்தாவிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. ஆனால் சொப்னா அவளை திரும்பி பார்த்த பார்வையில் நிச்சயம் காரை விட்டு வெளியே உருட்டி விடவா இருக்க , வாயை இறுக்க மூடிக் கொண்டாள். கூடவே கண்களையும் .

 

கார் சிறு குலுக்கலுடன் நின்றதும் விழி திறந்து பார்த்தவளின் முன் தெரிந்த பிரம்மாண்டமான பங்களா ஆச்சரியத்தை கொடுத்தது. எவ்வளவு பெரிய வீடு …இல்லை அரண்மனை .இங்கே குடியிருப்பவர்களுக்கு நிச்சயம் உள்ளுக்குள் ஒரு திமிரும் , கர்வமும் இருக்கத்தான் செய்யும் …நினைத்தபடி டிரைவர் தாத்தா திறந்து விட்ட கதவு வழியாக இறங்கியவள் திமிரேறி இருந்த அவரது முகத்தை பார்த்ததும் இங்கே குடியிருப்பவர்கள் மட்டுமில்லை , வேலை செய்பவர்களுக்கும் திமிர் இருக்கும் போல …எள்ளலாக நினைத்தபடி காரை விட்டிறங்கி சுற்றும் முற்றும் பார்த்தாள் .

 

வீடு செட்டிநாடு பாணியில் கட்டப்பட்டிருந்தது .வீட்டை சுற்றி பெரிய தோட்டம் இருந்தது .வீட்டினுள்ளும் , தோட்டத்திலும் கூட்ட , பெருக்க என நிறைய பேர் வேலை செய்து கொண்டிருந்தனர் .அவர்கள் அனைவரையும் ஒரு விழியில் அளந்த சஷ்டி மலரின் முகத்தில் சிரிப்புடன் கூடிய பரிகசிப்பு .

 

இது என்ன குடும்பம் நடத்தும் வீடா …? முதியோர் இல்லமா …? அவளது எள்ளலுக்கு ஆதாரம் இருந்தது. அங்கே வேலை செய்து கொண்டிருந்தவர்களில் பெரும்பாலோர்  அறுபது வயதிற்கு மேற் பட்டவர்களாகவே இருந்தனர். அந்த மகாப் பெரிய ராயர் இவர்களுக்கெல்லாம் அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறாராக்கும் … மனதிற்குள் கிண்டலித்தபடி வீட்டு படியேறினாள்.

 

சொப்னா ” அம்மா ” என்ற அழைத்தலோடு முன்பே படிகளில் ஓடி உள்ளே போயிருந்தாள் .நிதானமாக படியேறி போன சஷ்டி மலர் சொப்னா அணைத்துக் கொண்டிருந்த பெண்ணை அவள் அணைப்பு விலகியதும் பார்த்தாள் .சரிதான் இன்னொரு பாட்டிம்மா …என அவள் நினைத்ததற்கு ஏற்றாற் போலவேதான் அந்த பெண்ணும் இருந்தாள் .

 

தலை நிறைய முடியிருந்தும் ஒரு முடி கூட கருமையாக இல்லை .ஒரு மாதிரி ப்ரௌளன் பாய்ந்து வெளுத்திருந்தது . வெள்ளை நிற முக்கால் கை சட்டையும் ,சிகப்பு சரிகை ஓடிய ,  வயலட் நிற சுங்குடி சேலையும் அணிந்திருந்தாள் அந்த அம்மா .

 

” மலர் இதுதான் என் அம்மா .பேச்சியம்மாள் . அம்மா இது என் தோழி மலர் ” தாயின் தோளில் கொஞ்சலாய் தலை சரித்தபடி அறிமுகம் செய்தாள் சொப்னா .

 

சொப்னாவின் தாயென்றால் அதிக பட்சம் ஐம்பது வயதிருக்கலாமா …அதற்குள் ஏன் இத்தனை வயோதிகத்தை தோற்றத்தில் காட்டவேண்டுமென நினைத்தபடி கை குவித்தாள் சஷ்டி மலர். ” வணக்கம் ஆன்ட்டி “

 

” வணக்கம்மா .வாம்மா .பிரயாணமெல்லாம் சௌகரியமாக இருந்ததா…? ” வாஞ்சையுடன் விசாரித்ததோடு தன் கன்னம் வருடிய அந்த அம்மாவின் விரல்நுனி ஜில்லிப்பு தன் கன்னத்திலேயே தங்கி விட்டாற் போல் உணர்ந்தாள் சஷ்டி மலர் .

 

” பேச்சி யார் கூட பேசிட்டு நிற்கிறாய் ..? ராயர் வெளியே போகிற நேரமாயிடுச்சே. அடுக்களையை கவனிச்சியா இல்லையா ..? ” கண்ணாடிக் குடுவைக்குள் கருங்கற்களை போட்டு குலுக்கியது போல் ஒரு குரல் வந்தது .ஏனோ அடி வயிற்றை பிசைந்த அந்த குரலுக்கு பார்வை திருப்பிய சஷ்டி மலரின் விழிகளும் பிதுங்கலாய் பிசைந்தது .

 

” அவுங்க எங்க பாட்டி மலர் ” சொப்னாவின் அறிமுகமாக வந்த பாட்டியம்மா கூன் முதுகோடிருந்தார் .தலை முடி மிகவும் குறைந்து தும்பையாய் ஆங்காங்கு காணப்பட , காது வளர்த்து கம்மல் போட்டிருந்தார் .ரவிக்கை அணியாமல் வெண் நூல் பட்டு அணிந்து முந்தானையை வெற்று தோள்களை சுற்றி விட்டருந்தார் .கைத்தடி ஒன்றை ஊன்றியபடி கூன் முதுகோடு நடந்து வந்தவரின் கண்களில் நாகப்பாம்பின் வன்மம் இருந்தது .

 

அவரது கண்களை நேரடியாக சந்திக்க முடியாமல் சஷ்டி மலர் பார்வையை திருப்ப , ” என் தோழி பாட்டி ” என சொப்னா அறிமுகம் செய்தாள் .

 

” ஆங் …என்னது …? ” பாட்டி தன் காது மடல் பக்கம் கை குவித்து இவர்கள் பக்கம் சாய , அட பாட்டிக்கு காது கேட்காதா …அதற்குள் இத்தனை ஆர்ப்பாட்டமா …சஷ்டி மலரினுள் அவளது பழைய எள்ளல் வந்திருந்தது. 

 

” வணக்கம் பாட்டி .நான் சொப்னாவின் தோழி ” கத்தலாய் சொன்னபடி பாட்டியின் முகத்திற்காக இடை சரித்து முன் குனிந்தாள். கூனான பாட்டியை பார்க்கிறாளாம் .அவளை பார்த்த பாட்டியின் கண்களில் ஆக்ரோசம் வந்தது .

 

” நம்ம வீட்டு கல்யாணத்திற்கு வந்த விருந்தாடி அத்தை . சாப்பிட கூப்பிட்டு போகிறேன் .நீ வாம்மா .” பேச்சியம்மாள் அவசரமாக அவள் தோள் தொட்டு நிமிர்த்தி வீட்டினுள் கூட்டிப் போக திருப்பினாள் .

 

பாட்டி ” உம் ” என்ற உறுமலுடன் தலையை அசைக்க , அப்போது வீட்டினுள் ஒரு பரபரப்பு அலை உண்டனது .

 

” ராயர் வருகிறார் …” ஆங்காங்கே முணுமுணுப்பு கேட்க , சஷ்டி மலரின் பார்வையும் ஆர்வத் தேடலாய் அலை பாய்ந்தது .




 

What’s your Reaction?
+1
24
+1
20
+1
4
+1
1
+1
0
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!