mayanginen mannan inke Serial Stories மயங்கினேன்_மன்னன்_இங்கே

மயங்கினேன் மன்னன் இங்கே-2

2

  

இவர்கள் எல்லோரும் இவ்வளவு நேரமாக கொடுத்த பில்ட் அப்களில் அந்த ராயரை பட்டு வேட்டி சட்டை வெகு நிச்சயமாக தலையில் ஒரு கனத்த பட்டுத் தலைப்பாகயோடு எதிர் பார்த்திருந்த சஷ்டி மலரின் விழிகள் ஆச்சரியமாய் விரிந்தன .

 

” ரால்ப் லாரன் சர்ட் ” அவனது இளம் ப்ரௌன் சட்டையின் ப்ராண்டில் பிரமித்தாள் .ப்ரெண்ட் ப்ளாட் மாடல் க்ரீம் நிற பேண்ட் .பளபளத்த பெல்ட் நானும் உயர் கம்பெனி என சொல்ல உற்று கவனித்து ” குச்சி ” எனக் கம்பெனியை இனங்கண்டாள் .இன்னமும் அவனது வாடச் , செப்பல்சும் கூட இன்டர்நேசனல் ப்ராண்ட்ட்ஸாகத்தான் இருக்கும் என்பதில் அவளுக்கு சந்தேகமில்லை .இந்த பட்டிக்காட்டில் , இது போலொரு ஆதி கால சூழ்நிலையில் எங்கள் மன்னனென இந்த பாமர ர்கள் கொண்டாடுபவன் இப்படி ஒரு அதி நவீன நாகரீக இளைஞனாக இருப்பானென அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை .

 

” அடியேய் கண்ணை நோண்டிடுவேன்டி …” சொப்னா முணுமுணுத்தபடி அவள் கையில் வெடுக்கென கிள்ள , வேகமாக தன் பார்வையை திருப்பிக் கொண்டாள். ஐய்யய்யோ இவள் கவனித்தது போல் இன்னும் யாரெல்லாம் பார்த்தார்களோ …கூச்சத்துடன் தலை குனிந்து அடிக் கண்ணால் ஆராய , அப்படி அவளை யாரும் கவனித்ததாக தெரியவில்லை .எல்லோரும் வானிலிருந்து இறங்கி வரும் தேவ தூதனை பார்க்கும் பார்வையை மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த  தங்கள் ராயர் மேல் வைத்திருந்தனர் .

 

வீட்டை கூட்டுபவர் , தரையை துடைப்பவர் , பூச்சாடிகளை பராமரிப்பவர் , பர்னிச்சர்களை சுத்தம் செய்பவர் , தோட்ட வேலை செய்பவர் என எல்லோருக்கும் அவனடம் பேச ஏதாவது இரண்டொரு வார்த்தையாவது இருந்த்து . அவனுக்கும் அவர்களிடம் விசாரிக்க ஏதாவது இருந்தது. அட்லீஸ்ட் சாப்பிட்டீர்களா …என்ற விசாரிப்பு மட்டுமாக கூட இருவருக்குமிடையேயான பேச்சு இருந்தது .

 

திரி தொட்ட நெருப்பென சுறுசுறுவென அப்பெரிய வீடு முழுவதும் ஒரு முறை வலம் வந்தவன் அனைவரிடமும் ஒரு வார்த்தையேனும் பேசியிருந்தான். பின்னர் உள்  அறை …அங்கே நின்றிருந்த பாட்டியின் கால்கள் தொட்டு ஆசீர்வாதம் .அம்மாவின் தோள் தொட்டு அணைத்தல் .அண்ணா என ஓடி வந்த தங்கையிடம் ” எப்போதுடா வந்தாய் …? ” கனிந்த குரலில் ஒரு தலை வருடல் .

 

இப்போது அவன் பார்வை இவள் புறம் திரும்பியது .புருவம் நெரிந்தது. யாரெனபது போலொரு பார்வை .சஷ்டியின் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொள்ள , எச்சில் விழுங்கினாள். 

 

” ப்ரெண்ட் அண்ணா .உங்க மேரேஜுக்கு வந்திருக்கிறாள் ” சொப்னா அறிமுகம் செய்ய தலையசைத்தான் .

 

” வாங்க …” வரவேற்று விட்டு ” சாப்பிட கூட்டிப் வாங்கம்மா …” என்று விட்டு சாப்பாட்டு அறைக்கு நடந்தான் .

 

ஒரு மினி பந்தி போல் நீண்டு கிடந்த டேபிளில் ஓர் ஓரம் அமர்ந்தவன் ” முதலில் விருந்தாளியை கவனியுங்க ” தனக்கு பரிமாற வந்த சமையற்காரம்மாவிற்கு அவள் பக்கம் கை காட்டினான் .

 

” அவர்கள் இருவரும் இன்னமும் குளிக்கவில்லை ராயா .குளித்த பிறகு சாப்பிடுவார்கள். முதலில் நீ சாப்பிட்டு விடு …” சமையற்காரம்மா கையிலிருந்த பாத்திரத்தை தான் வாங்கி அவனுக்கு பரிமாற ஆரம்பித்த பேச்சியம்மாவின் வார்த்தையில் , டைனிங் டேபிள் சேரை இழுத்து போட்டு சாப்பிட அமர்ந்து விட்ட சஷ்டி மலர் திடுக்கிட்டாள் .

 

அடப் பாவிகளா …குளிக்காவிட்டால் சாப்பாடு போட மாட்டீர்களா …? திரும்பிப் பார்க்க சொப்னா சாப்பிட அமரவில்லை. இவள் பார்த்ததும் குளித்ததும்தான் சாப்பாடு என ஜாடை காட்டினாள் .

 

வகை வகையாய் டேபிள் நிரப்பியிருந்த உணவுகளிலும் , அவை வெளியிட்ட வாசனைகளிலும் வயிற்றின் பசி அதிகரித்திருந்த சஷ்டி மலர் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பதார்த்தங்களை ஏக்கமாக பார்த்தபடி மனமில்லாமல் மெல்ல டேபிளிலிருந்து எழுந்தாள் .

 

” பரவாயில்லைம்மா. நைட் முழுவதும் பயணம் செய்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பசிக்கும் .இன்று ஒரு நாள் சாப்பிட சொல்லுங்கள்.  நாளையிலிருந்து குளித்து விட்டே சாப்பிடட்டும் ” ஆதரவு குரல் கொடுத்தது ராயர் தான் .

 

இவன் அங்கே சமையல்காரம்தாவுடனும் , பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டியுடனும் தானே பேசிக் கொண்டிருந்தான். இங்கே தள்ள்ள்ளி …அமர்ந்திருந்த என்னை எப்போது கவனித்தான் , திருதிருத்தபடி எழுந்து நின்றாள் சஷ்டி .

 

” ராயர் சொல்லிட்டாருல்ல உட்காருங்கம்மா ” பரிமாறும் பெண் ஒருத்தி சொல்ல , சொப்னா முதலில் அமர்ந்தாள். இங்கே அவளருகே இல்லை. துள்ளலோடு ஓடிப் போய் அண்ணன் அருகிலிருந்த நாற்காலியில் அவன் தோளில் தன் கன்னம் அழுத்தி ” தேங்க்ஸ் அண்ணா ” என்று விட்டு  அமர்ந்தாள் .




அங்கே போய் அவர்கள் அருகே அமர்வதா …இங்கே அமர்வதா குழம்பியபடி நின்றிருந்த சஷ்டியை ” இங்கே வந்து உட்காரும்மா ” என பேச்சயம்மா அழைக்க அவளும் ஓடிப் போய் சொப்னா அருகில் அமர்ந்தாள் .ராயருக்கு ஒரு தேங்க்ஸையும் உதிர்த்தாள் .ஆனால் அவன் அதனை கவனித்தாற் போலில்லை , பாட்டியிடம் குனிந்து அக்கறையாக ஏதோ பேசிக் கொண்டிருக்க , பாட்டியின் பார்வைதான் இவள் மேல் பதிந்திருந்தது .

 

எதற்கிப்படி பார்க்க வேண்டும் …மனதிற்குள் நொடித்தபடி தன் தட்டில் கவனத்தை பதித்தாள் சஷ்டி. பொன் நிற முந்திரிகளும் , வண்ண வண்ண பழங்களுமாக  அவள் தட்டில் நழுவி விழுந்த ப்ரூட் கேசரியிலிருந்து நெய் மணம் எழுந்து அவள் நாசிக்குள் நுழைந்து மூளையை தாக்க , அவள் தனது சாப்பாட்டில் மட்டுமாக கவனமானாள். 

 

” அண்ணன் அமெரிக்கா போய் எம் .எஸ் படிச்சிட்டு வந்தவர். எங்க குடும்ப தொழில்களை பார்ப்பதற்காக அங்கே கிடைத்த பல லட்ச ரூபாய் சம்பள வேலையை உதறி விட்டு வந்து விட்டார் …” சொப்னா அண்ணன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள் .

 

” என்னடி உங்க குடும்ப தொழில்கள் ..? “

 

” அது இருக்குது நிறைய. எனக்கு அந்த விபரமெல்லாம் சரியாக தெரியாது …”

 

இது கூட தெரிஞ்சிக்காம நீயெல்லாம் …அவள் தலையில் கொட்ட துடித்த தன் கையை மடக்கிக் கொண்டாள் .

 

” எப்போதடி உங்க ஊர் கோவில் குளங்களையெல்லாம் சுற்றிக் காட்ட போகிறாய் ..? நூற்றியெட்டு நம்பராச்சே …”

 

” பார்க்கலாம்டி . கோவில்கள் இருக்கிறது. குளங்கள் தான் நிறைய தூர்ந்து போய் விட்டது .”

 

” ஏன்டி அதையெல்லாம் உங்கள் ராயர் கவனிக்கவில்லையா …? “

 

” என்னடி ஒரு மாதிரி நக்கலாகவே பேசிக் கொண்டிருப்பது போல் தெரிகிறதே …” சொப்னா அவளைக் கூர்ந்தாள் .

 

” சீச்சி இல்லையடி. உன் அண்ணனை போல் ஊர் பெரிய மனிதர்கள்தானே இது போன்ற ஊர் சேவையை செய்ய வேண்டும் அதைத்தான் சொன்னேன் “. 

 

” ம். அது உண்மைதான். இப்போது சமீபத்தில்தான் அண்ணா குளங்களை தூர் வாறுவதற்கான முயற்சிகளில் இருக்கிறார் .”

 

ஏன் இவ்வளவு நாட்களாக என்ன செய்தாராம் …நினைவுகளை வார்த்தைகளாக்காமல் நாக்கை அழுத்திக் கொண்டாள் .

 

” முதலில் ஆயிரம் காளியை பார்த்துவிடலாம்… ” சொப்னா சொல்ல …

 

” பாட்டி கீழேதான் இருக்கிறார்கள் சொப்னா. போய் பாருங்க .” சொன்னபடி வந்த பேச்சியம்மாவின் முகத்தில் குறும்பு இருந்தது .

 

” அம்மா ஏம்மா …எங்களை காளிகிட்ட மாட்டி விடுறீங்க …? நான் நம்ம வீட்டு காளியை சொல்லலை. அந்த ஆத்தா காளியை சொல்றேன் …” சொப்னா சிரித்தபடி சொல்ல , சஷ்டி புரியாமல் பார்த்தாள் .

 

” பாட்டியின் பெயர் ஆயிரம் காளி மலர் .ஆயிரம் காளியம்மன் கோவில் எங்கள் ஊரில் பிரசித்தம். அந்த பெயரைத்தான் பாட்டிக்கு வைத்திருக்கிறார்கள் ” பேச்சியம்மா விளக்கினாள் .

 

ஆயிரம் காளி. அந்தப் பாட்டிக்கு பொருத்தமான பெயர்தான் ….மனதிற்குள் நினைத்துக் கொண்டு ” அழகான பெயர் ஆன்ட்டி ” என வெளியில் பாராட்டினாள் .

 

” பாட்டிகிட்ட சொல்லிட்டு கிளம்புங்க . மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்துடுங்க ” பேச்சியம்மா. 

 

குளித்து முடித்ததும் இருவருமாக ஊர் சுற்ற கிளம்பினர்.பாட்டியிடம் சொல்ல சென்றபோது பாட்டியம்மா பின்னால் தோட்டத்தில் நின்றிருந்தார் .

 

” ஏன்டி சரோஜா இந்த மாச பணத்தை எங்கேடி …? ” கத்தலாய் கேட்டுக் கொண்டிருந்தார் .

 

” கொஞ்சம் செலவாயிடுச்சுங்க ஆத்தா. அடுத்த மாசம் சேர்த்து கொடுத்துடுறேனே …” தலையை சொறிந்த அந்த சரோஜாவிற்கு ஐம்பது ப்ளஸ் வயதிருக்கும் .

 

” நான் வெறும் ஆத்தாவா இருக்கிற வரை நீங்கெல்லாம் இப்படித்தான்டி தலையை சொறிவீங்க. பழைய காளியாத்தா மாறினால்தான் உங்களுக்கெல்லாம் சூடு சொரணை வரும் .என்னங்கடி மாறட்டுமா …? ” இரைச்சலாக மாறியிருந்தது பாட்டியின் குரல் .

 

பாட்டி வாயை திறக்க ஆரம்பித்ததுமே அவரை அழைக்க ஆரம்பித்து விட்ட சொப்னா , பாட்டி அசையாமல் வசவுகளை இறைத்தபடி இருக்கவும் , அவருக்கு முன்னால் போய் நின்று ” பாட்டீ …” எனக் கத்தினாள் .

 

” இங்கனதானடி இருக்குறேன் .என்னத்துக்குடி கத்துறவா …? ” நிமிர்ந்து பார்த்த பாட்டியின் கண்கள் நெருப்பு விழுங்கியதென பளபளத்தன .

 

” நான் கத்துறேனா …நீங்களா …? நாங்கள் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றோம் .அதை சொல்லத்தான் வந்தேன் “

 

” எங்கேடி போறீக ? “

 

” மலர் இங்கே இருக்கிற கோவில்களுக்கெல்லாம் போகனும்னா. அவளை கூட்டிட்டு போயிட்டு வர்றேன் .” சொப்னா சஷ்டியின் கையை பிடித்திழுத்தபடி கிளம்ப ,

 

” நில்லுங்கடி .இந்தா பொண்ணு உன் பெயர் என்ன ? ” பாட்டியின் கேள்வி சஷ்டிக்கு திக்கென்றது .இப்போது எதற்கு என் பெயர் …?

 

” என் பெயர் மலர் பாட்டி ” சொன்னவளை யோசனையுடன் பார்த்த சொப்னா ” ஆமாம் பாட்டி ” என ஒத்துக் கொண்டு தோழியொடு நடந்தாள் .

 

” நல்லவேளை உன் முழு பெயரையும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் பாட்டியே அதற்கு தனி விளக்கம் கொடுக்க ஆரம்பிச்சிருப்பாங்க. அவுங்க சஷ்டி கவசம் சொல்லி முடிப்பதற்குள்  இருட்டியிருக்கும். பிறகு நாம் வெளியே போக முடியாது …” சொப்னா கொடுத்த விளக்கத்தில் சஷ்டிக்கும் ஒரு வகை நிம்மதியே .




” சின்ன ஊர்தான்டி. காலார நடந்தே போகலாம் …” என சொப்னா சொல்லவே இருவருமாக நடந்தே சென்றனர். வழி நெடுக சொப்னாவிற்கு இளவரசிக்கான மரியாதை கிடைக்க , இதற்காகவே …இதனை எனக்கு காட்டுவதற்காகவே இவள் என்னை நடத்தி கூட்டி வந்தாளோ என்ற சந்தேகம் சஷ்டிக்கு வந்தது .

 

சில தூர்ந்து போய் கிடந்த குளங்களையும் , சிறிது சிறிதாக இருக்கும் கோவில்களையும் பார்த்தபடி நடந்தார்கள் .

 

” உன் அண்ணன் கல்யாணம் செய்து கொள்ளப் போகும் பெண் யாருடி ..? ” சஷ்டி மெல்ல விசாரித்தாள் .

 

” சந்திராம்பிகை ” சொல்லும் போதே சொப்னாவின் குரலில் பெருமிதம். 

 

இப்படி ஒரு பெயரா …? ” என்னடி எந்த தேசத்து ராஜகுமாரி ..பெயரை பார்த்தாலே ஒரு மாதிரி இருக்கறதே “

 

” இந்த பட்டிக்காட்டிற்கு ஏற்ற காட்டான் என்று நினைத்தாயா …? அவர்கள் ஆஸ்திரேயாவில் படித்தார்கள். பக்கா மாடர்ன். அத்தோடு பேரழகு. அவர்களை நேரில் பார்த்தால் நீ அசந்து விடுவாய். நீ கிண்டலுக்காக சொன்னாலும் ஒரு வகையில் அவர்கள் ராஜகுமாரிதான். அவர்கள் அப்பா காரைக்காலில் பெரிய ஆள். அவருக்கு சொந்தமாக சரக்கு கப்பல்களே இருக்கிறது தெரியுமா …? ” சொப்னாவின் பெருமிதத்திற்கு சஷ்டிக்கு பற்றிக் கொண்டு வந்தது .

 

அது சரி …பணம் பணத்தோடு சேர்கிறது. இதிலென்ன அதிசயம்.  …உதட்டை சுளித்துக் கொண்டாள் .

 

” உன் வருங்கால அண்ணியை எனக்கு காட்டமாட்டாயா சொப்னா …? “

 

” அண்ணியையா …ஓ பார்க்கலாமே .நான் கூட அவர்களை பார்க்க ஒரு காரணம் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்…” உற்சாகமாக பேசியபடி தன் போனில் நம்பரை அழுத்தினாள் .

 

” ஹாய் அண்ணி எப்படி இருக்கிறீர்கள் …? ….ஆமாம் இன்றுதான் வந்தேன் ….உங்களை பார்க்க வேண்டும் போலுள்ளதே …வரட்டுமா …? ” எனப் பேசிவிட்டு …

 

” அண்ணி வரச் சொல்றாங்கடி .நாம் போகலாம் ” உடனே வீட்டிற்கு திரும்பி காரை எடுத்துக் கொண்டு அவர்கள் அந்த சந்திராம்பிகை வீட்டிற்கு போன போது , அங்கே திருமலைராயனின் கார் நின்றிருந்தது. 

 

” வாவ் …அண்ணனோட கார் .ரொமான்ஸா …இது எத்தனை நாட்களாக நடக்கிறது …? ” சொப்னா மெலிதாக விசிலடித்தாள். சஷ்டி அவளை எரிச்சலாக பார்த்தாள் .

 




What’s your Reaction?
+1
21
+1
14
+1
1
+1
2
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!