Serial Stories

வா எந்தன் வண்ணநிலவே-18 (நிறைவு)

18

மதுரை விமான நிலையத்தை அடைந்த மானசி பதட்டம் எதுவும் இன்றி செக்கிங்கிற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். அப்போதுதான் வந்த மைனாவதி “கடைசியாக ஒரு முறை லக்கேஜ்களை செக் செய்து விடலாம் வா மானு” என அழைக்க பெற்றோர் வந்த காரினை நெருங்கிய மானசி கழுத்தைப் பிடித்து காருக்குள் தள்ளப்பட்டாள். கார் மீண்டும் கொடைக்கானல் மலை ஏறத் துவங்கியது.

கண்களைக் கூட திறக்க முடியாமல் சோர்ந்து கிடந்த எழில்நிலா ,நித்யவாணனை பார்த்ததும் ,நித்தி என அழைத்தபடி பறந்தோடி வந்து அவனை ஆர தழுவிக்கொண்டாள் .

அவளது வேகத்திற்கு சற்றும் குறைந்த வேகம் காட்டவில்லை நித்யவாணன் . இறுக்கி அணைத்துக் கொண்டு மாறி மாறி முத்தமிட்டு கொண்டனர் இருவரும் .பின்னால் வந்த சந்திராவதியும்,தெய்வசிகாமணியும் ஒருவராய் மாறி நின்ற இருவரையும் கண்டு திருப்தியுடன் “வீட்டிற்கு போகலாம் வாருங்கள்” என்றனர்.

நடக்க சிறிது தடுமாறிய எழில்நிலாவை தன் கைகளில் தூக்கி கொண்டான் நித்யவாணன். “சின்ன காயங்கள் தான் டாக்டரை மெல்லவே வரச் சொல்லுங்கள் முதலுதவி நான் பார்த்துக் கொள்கிறேன்” நாசுக்காக தாய் தந்தையோடு டாக்டரையும் கூட தவிர்த்து விட்டு மனைவியுடன் மாடி ஏறினான்.

அறைக்குள் அவள் உடையை மாற்ற உதவியவன், சிராய்ப்புகளை கழுவி மருந்திட்டான்.வெதுவெதுப்பான பாலையும் சிறிது பழங்களையும் கொடுத்து அவளை ஆசுவாசம் செய்தான் . 

கணவனாக அவனது செய்கைகளை விருப்புடன் ஏற்றுக்கொண்ட எழில்நிலாவின் கண்கள் கசித்தபடி இருந்தன. இதோ இவனது பரிதவிப்பை ,பரிவை பொய்யென்று எப்படி நினைத்தேன்! 

கன்னங்களில் வழிந்த மனைவியின் கண்ணீரை துடைத்தவன் “என்னை உனக்கு பிடிக்கவில்லையா நிலா? ஏன் தற்கொலைக்கு முயன்றாய்?” என்றான்

“என்ன தற்கொலையா?”

” பிறகு மானசியைப் பற்றி எல்லாம் தெரிந்த பிறகும் அவளுடன் தனியாக மதுரை வரை போக முடிவெடுத்தாயே! இதனை நான் எப்படி எடுத்துக்கொள்ள? என்னை விட்டு போக உனக்கு எப்படி மனம் வந்தது?” கண்கள் கலங்கி குரலடைக்க கேட்டவனின் காதல் எழில்நிலாவை அடித்துப் போட்டது.

அவன் கழுத்தை கட்டி கொண்டவள் “சாரி நித்தி நான் உங்களுக்கு பெரிய அநியாயம் செய்து விட்டேன்” விம்மினாள்.

“ஒவ்வொரு வார்த்தையிலும் செய்கையிலும் நான் காட்டிய காதல் உனக்கு புரியவில்லையா நிலா? என்னுடைய இன்ஸ்டாகிராம் பார்த்து இவன் கேரக்டர் சரியில்லை நமக்கு இவன் ஏற்றவன் இல்லை என்ற முடிவெடுத்து விட்டாயா?” படபடத்த அவன் வாயை தன் தளிர் கரத்தால் மூடினாள்.

“எனக்கில்லை..உங்களுக்குத்தான் என்னை பிடிக்காம போய்விடுமோ? என்று பயந்தேன்”.

 “எதற்கோ ?”எகத்தாளமாய் வினவினான் .

” ஏனென்றால் நான் …நான் கறுப்பாக இருக்கிறேனே அதுதான் …”குரல் தழுதழுத்தது .

 “என்னது ?ஏண்டி லூசாடி நீ ?…உனக்கெல்லாம் அந்த கடவுள் மண்டைல ஏதாவது வச்சிருக்கானா இல்லையா ?” படபடத்தான். 

“அது என்ன அடிக்கடி ‘டி’?” எகிறினாள்.

 “ஆமா இது மட்டும் உறைக்குது. .உன்னை முதன் முதல்ல சந்திச்ச நாள்ல இருந்து உன்னை லவ் பண்ணிக்கிட்டு இருக்கேன் .எத்தனையோ தடவை பல வழிகள்ல அதை உனக்கு உணர்த்தியிருக்கேன் …அதெல்லாம் உன் மர மண்டைல ஏறலை .டீ ன்னு சொன்னா மட்டும் கோபம் வருதாக்கும் ?”

முதல்ல சந்திச்ச நாள்லயிருந்து காதலிக்கிறேன்  ….இந்த வரிகளிலேயே நின்று விட்டது எழில்நிலா உள்ளம் . மேலே நித்யவாணன் பேசிய எதுவும் அவள் காதுகளில் விழவில்லை.

அவளிடமிருந்து எதிரொலி வராமல் போக தன் பேச்சை நிறுத்தி அவளை பார்த்தான் .வசதியாக அவன் மார்பில் சாய்ந்து கொண்டு இதுதான் சொர்க்கலோகமா ?..பார்வை பார்த்துக்கொண்டிருந்தாள் எழில்நிலா ..

பட்டென்று அவள் கன்னத்தில் ஒன்று போடலாமென்று எழுந்த ஆவலை அடக்கி கொண்டு அவள் தோள்களை பற்றி குலுக்கினான் . 

” இங்கே நினைவுக்கு வாடி”

“என்ன …எந்த …சந்திப்பை சொல்றீங்க ? நாம் முதலில் பூங்காவில் சந்தித்ததை தானே ?” 

இல்லையென தலையாட்டினான்.

“பிறகு ….அன்றைக்கு குதிரையில் போகும் போது பார்த்தேனே! அப்போதா? அப்பவே நீங்க என்னை பார்த்தீர்களா …எனக்கும்  பார்த்த மாதிரி தோணுச்சு .ஆனால் என்னோட பிரமைன்னு நினைச்சு … “

இடைமறித்து “அப்போது இல்லை” என்றான் . 

“பிறகு …?”. 

“அதற்கு ஒரு வாரம் முன்பு, ரயில்வே ஸ்டேசனில்  வைத்து….”

 எழில்நிலாவுக்கு ஞாபகம் வந்துவிட்டது .தனது பள்ளி கால தோழி ஒருத்தி கொடைக்கானல் வருவதால் அவளை வரவேற்று ஹோட்டலில் தங்க வைக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்து அதற்காக அதிகாலை ஆறு மணிக்கே குடும்பத்தினர் அனைவரையும் இழுத்துக்கொண்டு ஸ்டேசன் வந்திருந்தாள் மைனாவதி.

அங்கே டிரெயின் ஒரு மணி நேரம் லேட் என்று விட ,அங்கேயே அமர்ந்து சித்தியின் சிறு வயது ஞாபகங்களை கேட்டு சித்தியையும் அவள் தோழியையும் அனைவருமாக கிண்டல் செய்து கொண்டிருந்தனர் . அப்போதா ? 

“என் நண்பனுக்காக வந்தேன் .டிரெயின் லேட் என்றதும் போய்விட்டு திரும்ப வரலாமென நினைத்தவன் ,உன்னை பார்த்தேன் . அப்படியே அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்து விட்டேன். நீ பேசுவது சிரிப்பதே நடப்பது உட்காருவது என உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன் “

“அன்று நீ பனிக்காக தலையை சுற்றி ஒரு ஸ்கார்ப் கட்டியிருந்தாய் .உன் முகத்தை எனக்கு முழு நிலவாக காட்டியது அது “

நித்யவாணன் உணர்ச்சிவசப்பட்டு பேசிக்கொண்டே செல்ல உருகி கொண்டிருந்தாள் எழில்நிலா. நான் என்னை அமாவாசையாக நினைத்து கொண்டிருக்கையில் இவன் பௌர்ணமி என்கிறானே! அவன் காதலில் அசந்து போய் நின்றாள்.

தனது செல்போனை எடுத்து அவளிடம் காட்டினான் . அவள் போட்டோக்கள் தான். அன்று ரயில்வே ஸ்டேசனில் எடுத்தது. விதம்விதமாக எடுத்திருந்தான். 

“அதன் பிறகு உன் கண்ணில் பட வேண்டுமென்றுதான் அன்று காலையில் உன் முன்னால் குதிரையில் வந்தேன் . அதன் பின் நீ சென்ற ஒவ்வோர் இடத்துக்கும் பின் தொடர்ந்து வந்து போட்டோ எடுத்தேன் ” 

நித்யனின் போன் முழுவதும் எழில்நிலாவின் போட்டோக்களால் நிரம்பி வழிந்தது . 

“பூங்காவில் அந்த பாம்பு உன் புறம் தலை திருப்பியதே …என் இதயமே ஒரு நிமிடம நின்று விட்டது தெரியுமா ?”

கனவில் மிதப்பது போன்ற தோற்றத்திலேயே இன்னமும் நின்று கொண்டிருந்தாள் எழில்நிலா . 

“உன்னிடம் காதலை சொல்லி விட துடித்துக்கொண்டிருந்த சரியான சமயத்தில் திடீரென்று நீ என்னை விட்டு போனாய். அந்த வெறுப்பில் அன்று உன்னிடம்  கோபமாக பேசிவிட்டு போனேன். 

“பழி வாங்குவதாக சொல்லிச் சென்றிர்கள்” நினைவூட்டினாள்.

” ஆமாம் உடனே உன்னை திருமணம் செய்து கொண்டு நன்றாக பழிவாங்க வேண்டும் என்று நினைத்தேன். நித்யவாணனின் முரட்டு இதழ்கள் அவள் மென் கன்னங்கள் சிவக்கும் அளவுக்கு வேகத்துடன் பதிந்து அவன் பழிவாங்கும் விதத்தை சொல்லின.

“நிதானமாக யோசித்துப் பார்த்ததில் நமக்கிடையே மானசி இருக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் பிறகு விசாரித்ததில் உன் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதது தெரிய வந்தது .அவரின் உடல்நிலையை விசாரித்தபடியே இருந்தேன் . அவர் சரியாகி உனக்கு மாப்பிள்ளை பார்ப்பது தெரிந்ததும் நானே மாப்பிள்ளையாக வந்தேன் “

“இடையில் மானசியையும் எச்சரித்தேன். நம் திருமணத்தின் போது அவள் டூர் போகுமாறு ஏற்பாடுகள் செய்தேன். பிறகும் பாதியில் வந்து நின்றவளுக்கு இரவு உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுக்க ஏற்பாடு செய்து நம் திருமணத்தின் போது தூங்க வைத்தேன்”

“ஆனாலும் மானசி விஷயம் நீங்கள் சித்தி சித்தப்பாவிடமோ என்னிடமோ ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே?” தாங்கலாக கேட்டாள்.




” பதினெட்டே வயது நிறைந்த சிறு பெண். முட்டாள் தனமாக காதல் அது இதுவென்று உளறிக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி அவள் பெற்றோரிடம் என்றாலும் புகார் சொல்ல எனக்கு மனம் இல்லை. என்னால் முடிந்த அளவு அவள் பார்வையில் படுவதை தவிர்க்க ஆரம்பித்தேன். இதெல்லாம் வயது கோளாறு விரைவில் சரியாகிவிடும் என்று தான் உன்னிடம் கூட அவளைப் பற்றி சொல்லவில்லை”

” சாருகேசி அங்கிள் மகளை வெளிநாட்டிற்கு படிக்க அனுப்பும் ஏற்பாடுகளில் இருப்பதை தெரிந்து கொண்டபின் இன்னமும் சிறிது நாட்கள்தானே என்று அவள் பற்றிய விஷயங்களை யாரிடமும் சொல்லவில்லை. ஆனால் இப்படி என் வாழ்க்கையையே என்னிடம் இருந்து பிரிக்க முயல்வாள் என்று தெரிந்திருந்தால், அன்றே அவளை வேறு விதமாக கையாண்டு இருப்பேன்” ஒருவித வேகத்துடன் அவளை அணைத்துக் கொண்டான்.

 பிரமிப்புடன் நித்யவாணனின் காதலை கேட்டபடி இருந்தாள் எழில்நிலா .உண்மையா ? இதெல்லாம் நிஜமா ? நிஜமென்றுதான் கூறியது அவன் மீசை முடியின் சிறு பிசிறலை கூட  பார்க்க முடியக்கூடியதான அவன் அருகாமை.

“நம் திருமணம் முடிந்த இரண்டாம் நாளில் உன்னுடைய பேச்சு மிகுந்த கோபத்தை கொடுக்க, உன் பக்கத்தில் இருந்தால் என்னை அறியாமல் உன்னை காயப்படுத்தி விடுவேனோ என்று பயந்துதான் சென்னைக்கு சென்று விட்டேன். ஒரு வாரம் வரைதான் உன்னை பிரிந்து இருக்க முடிந்தது. பிறகு உன் குரலையேனும் கேட்டாக வேண்டும் எனும் தாபம்.அதனால்தான் அப்பாவிடம் பேசும் சாக்கில் லேண்ட்லைனிற்கு ஃபோன் செய்தேன்”

 “நீயே எடுக்க மாட்டாயா என்ற எதிர்பார்ப்புடன் இருந்தவனுக்கு தேவதையாக நீயே குரல் கொடுத்தாய். கோபமாகவேனும் உன்னுடைய வார்த்தைகளை தொடர்ந்து கேட்க வேண்டும் என்றுதான் உன்னை பேச்சில் சீண்டினேன்”

“அந்த சீண்டல் வேறு பக்கம் திரும்பி நீ எனது instagram பக்கத்திற்கு வந்தாய்.அதனை உனக்கு மானசியை உணர்த்த உபயோகித்துக் கொண்டேன். நீ முட்டாள் இல்லை நிலா. சிறு வழிகாட்டலில் புரிந்து கொள்வாய் என்று தெரியும். நான் காட்டிய பாதையில் நீ சரியாக போவதை தெரிந்து கொண்டபின், அடுத்த படியாக சித்ராவை இங்கே அனுப்பினேன்”

” நான் எவ்வளவு விரும்பி உன்னை திருமணம் செய்தேன் என்று சொல்ல வைத்தேன். உன்னுடைய மன நெகிழ்வை அவள் அங்கு வந்து சொன்னதும் அதன் பிறகு சிறிது நேரம் கூட தாமதிக்க முடியாமல் உடனே உன்னை தேடி இங்கு வந்து விட்டேன். ஆனால் இங்கே வந்து பார்த்தால்…”  மேலே பேச முடியாமல் அவளை இறுக்க அணைத்துக் கொண்டான்.

அவன் இறுகிய கரங்களுக்குள் சுகமாக நெறிபட்டாள் எழில்நிலா.

 “ஆனால் எனக்கு உன் மீது மனவருத்தம் நிலா.அந்த மானசி ஒரு ரெண்டும் கெட்டான் வயது பெண். அவள் சொன்னால் என்று என்னைப் பற்றிய எதை வேண்டுமானாலும் நம்பி விடுவாயா?” வருத்தத்துடன் கேட்டான்.

 கண் இமைக்காமல் கணவனின் அன்பை ,அளவில்லா காதலை ,தனை ஆளத்துடிக்கும் ஆளுமையை விழி விரிய கேட்டுக்கொண்டிருந்த எழில்நிலாவுக்கு ,தான் எதற்காக அவனை தவிர்த்தோம் என்பதே மறந்து விட்டது . 

தன் மன எழுத்துக்கள் ஒவ்வொன்றையும் எனக்குள் அழுத்தமாக அச்சுக்கோர்க்கிறானே இவனையா நான் விலக நினைத்தேன்? ம்…அப்படி என்ன காரணம் இருக்க கூடும் இவனை பிரிய ? தன்னையே தான் மறந்து யோசித்துக் கொண்டிருந்தாள்.

 “என்ன இந்த மரமண்டைக்கு  எதற்கு இப்படி செய்தோம்னு புரியவில்லையா ?விடுடா …நமக்கு வாழ்நாள் பூராவும் இருக்கிறது .இதை பிறகு நிதானமாக பேசிக்கொள்ளலாம் .இப்போது நம் இருவருக்குமே பிடித்த மாதிரி ஒரு வேலை செய்யலாமா செல்லக்குட்டி …?”என்றபடி நித்யன் அவள் கன்னத்தை வருட ,

ஆழ்ந்து உள்ளிழுத்து கொண்டிருந்த மாயப்பிடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள் எழில்நிலா . கூடவே அவனை விட்டு விலகியும் நின்றாள்.

இந்த விலகலில் நித்யவாணனின் முகம் இறுகியது. “ம் ..சொல்லு” அவளை விட்டு சற்று தள்ளி நின்று கைகளை கட்டிக் கொண்டான்.

குட்டி … இந்த வார்த்தையே எழில்நிலாவை சுயத்திற்கு கொண்டு வந்திருந்தது.

“நீங்க சென்னைல யாரையோ லவ் பண்றது எனக்கு தெரியும் . அதற்கு நான் தடையாக வந்து விட தெரியக்கூடாதுன்னுதானே என்னை இங்கே அத்தை மாமா கூட குடித்தனம் வச்சுட்டு நீங்க மட்டும் சென்னை போக திட்டம் போட்டீங்க ?”. 

நித்யவாணனுக்கு தலையிலடித்து கொள்ளலாம் போலிருந்தது.

” கண்டதையும் கற்பனை செய்து கொண்டு உளராதேடி. உன்னை இங்கே இருக்க வைக்க நினைத்ததே உனக்காகத்தான். நீதானே  இந்த கொடைக்கானல் உனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது .இங்க நிரந்தரமாக இருக்கிறவங்க அதிர்ஷ்டசாலின்னு சொன்னாய்..அதனாலேதான் இந்த யோசனை செய்தேன்” .என்றான் .

ஆம் அவள் அப்படி சொன்னது உண்மைதான் .ஆனால் அது நித்யவாணனின் மேல் உள்ள காதலில் அவனது சொந்த ஊர் இதுவென்ற எண்ணத்தில் சொன்னது. பிடித்தமானது என்றாலும அவனை பிரிந்து தங்கும் அளவுக்கு இந்த ஊர் அவளுக்கு முக்கியமா என்ன ? 

“அம்மாவுக்கு கூட இந்த ஏற்பாடு பிடிக்கவில்லை .போகும்போது உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போயிடுன்னுதான் சொல்லிக்கிட்டுருக்காங்க” 

சட்டென மாமியாரின் கண்டிப்பு நினைவு வர “உங்கம்மா ரொம்ப கண்டிப்பா இருக்காங்களே!.என்னால் அவுங்க கூட இருக்க முடியும்னு தோணலை”என்றாள் எழில்நிலா . 

“வேணாமே..”என்றான் இலகுவாக.”.நீ இங்கே இருப்பதில் அம்மாவுக்கே விருப்பமில்லை என்று சொன்னேனே! அம்மா வெளிப்பார்வைக்கு கண்டிப்பாக தெரிவாங்க .ஆனால் ரொம்ப நல்லவங்க.இங்கே பார் நிலா என் அன்பை நீயும் உணர்ந்துதான் இருந்தாய்  எனக்கு தெரியும் . மானசி குழப்பினாள் சரி ,ஆனால் அதற்கும் மேலே உனக்குள் ஏதோ குழப்பம் .உன்னையே உனக்கு உணரவிடாமல் தடுப்பது எது ..?”எனக்கேட்டான் . 

முகத்தை மூடிக்கொண்டு விம்மி விட்டாள் எழில்நிலா ” அ…அது நான்தான்.வ..வந்து நீங்க ரொம்ப அழகு .நான் …நான் சுமாராக இருக்கிறேன் ..அ .அதுதான்” திக்கி திணறினாள் .

 “அப்படியே அறைஞ்சேன்னா பல்லு பூராவும் பொல பொலன்னு உதிர்ந்திடும் .எவன்டி சொன்னான் நீ அழகா இல்லையென்று .கறுப்பு அழகில்லைன்னு சொல்றவன் கண்டிப்பாக முட்டாளாத்தான் இருப்பான் .எனக்கு நீ தேவதை மாதிரி ,வானில் மிதக்கும் நிலவு மாதிரி ,கண்கள் சிமிட்டும் நட்சத்திரம் மாதிரி தெரிகிறாய் …போதுமா?”

இன்னமும் தெளிவடையாத தன் மனைவியின் முகத்தை பார்த்தவன் ,மெல்ல அவள் தலையை வருடி “என்னடா என்ன பிரச்சினை உனக்கு ?” என்றான் மென்மையாக . சட்டென அவன் மார்பில் சரிந்து விம்ம தொடங்கியவள் ,தன் மனதை மெல்ல திறக்க தொடங்கினாள் .

 சிறு வயதிலிருந்து தான் சந்தித்த நிறம் சம்பந்தமான பேச்சுக்களை சொன்னவள் ,இறுதியாக தனக்கு வந்த கறுப்பு வானவில்லே ..கடிதம் வரை சொல்லி நிறுத்தினாள் . 

“எவனோ ஒரு தெருப்பொறுக்கி கவிதைங்கிற பேர்ல புலம்பியதற்கா இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய் ?”என்றான் ஆத்திரத்துடன் .

 இல்லையென தலையசைத்தவள் “இவர்களெல்லாம் வெளியாட்கள் ,இவர்கள் பேசும் போது சிறிது கஷ்டமாக இருந்தாலும் உடனே மறந்துவிடுவேன் .ஆனால் இப்படி மற்றவர்கள் பேசுவதை தடுத்து “என் தங்கம்” என எப்போதும் கொஞ்சும் அப்பா அம்மாவே ,ஒருநாள் நானிருப்பது தெரியாமல் எழில் கறுப்பா போயிட்டா ,அவளுக்கு கல்யாணம் பண்ணும்போது கொஞ்சம் கஷ்டப்படணுமே என பேசிக்கொண்டிருந்தனர்”

தாங்க முடியா பாரம் தாங்கும் உணர்வு அவள் பேச்சில் வெளிப்பட்டது. “அன்றிலிருந்து என் நிறம் பற்றிய தாழ்வு மனப்பான்மை என்னுள் வேரூன்றி விட்டது “என்றாள்.

“என்ன நிலா இது உன் அப்பா அம்மா பற்றி உனக்கு தெரியாதா ?”

“தெரியும் நித்யன்.ஆனால் அப்பாவும் அம்மாவும் இப்படி கவலை கொண்டு பேச என் நிறம் ஒரு காரணமாகி விட்டதே என்ற கவலை எனக்கு எப்போதும் உண்டு” என்று தன் நிலை சொன்னாள் .




 “ஊரில் யார் சொன்னாலும் அது என்னை பாதிக்காது .ஆனால் எனக்கு உயிர் கொடுத்தவர்கள் பேசினார்கள்.பி…பிறகு என் உயிருக்கு உயிராய் நான் நினைப்பவர்கள் …என்னை என் நிறத்தை பேசினால் …” 

திடுக்கிட்டான் நித்யவாணன்.”நானா ..? என்னையா சொல்கிறாய் ?”வியப்புடன் கேட்டான்.

 பதில் கூறாமல் அவனை வெறித்தாள் எழில்நிலா . “நிலா ப்ளீஸ் சொல்லு.என் மனதில் உன் நிறம் பற்றிய குறை எப்போதும் வந்ததில்லை ..நான் கண்டிப்பாக சொல்லவேயில்லை “என்றான் பரிதவிப்புடன் . 

“சொன்னீங்க “என்றாள் கண்ணீருடன் “அன்னைக்கு சொன்னீங்க …நான் என் காதால் கேட்டேன் .. எனக்கு கறுப்புன்னா பிடிக்காதுன்னு சொன்னீங்க …வேற வழியில்லாமல் இந்த கறுத்த குட்டியை மேய்ச்சுக்கிட்டு இருக்கேன்னு சொன்னீங்க …எனக்காக என் வெள்ளை தேவதை காத்துக்கிட்டு இருக்கான்னு சொன்னீங்க …” இதனை எழில்நிலா சொல்லும்போது ஒரு விக்கல் விசும்பல் இல்லை …ஒரு மாதிரி மரத்துப்போன குரலில் கூறினாள். 

 ஆனால் கேட்டுக்கொண்டிருந்தவனோ கடகடவென சிரிக்க தொடங்கினான் .அடக்க முடியாமல் விழுந்து விழுந்து மீண்டும் மீண்டும் சிரிப்பு …சிரிப்பு …சிரிப்பு .

கோபமாக பார்க்கும் எழில்நிலாவை கைபிடித்து வீட்டின் பின் பக்கம் இழுத்து சென்றான்.அங்கே கம்பீரமாய் நின்றிருந்தது அந்த கறுப்பு குதிரை .தன் எஜமானனை கண்டதும் ஙீஙீஙீ என கனைத்து சந்தோசத்தை வெளிக் காட்டியது.

 “நான் அன்று சொன்ன கறுத்த குட்டி இதுதான்.எனக்கு குதிரையேற்றம் ரொம்ப பிடித்த விளையாட்டு .பொதுவாக வெள்ளை குதிரைதான் எனக்கு ரொம்ப பிடிக்கும் .சென்னையில் ஒரு வெள்ளை குதிரை வாங்கி வைத்திருக்கிறேன் . எனக்காக சென்னையில் காத்திருக்கும் தேவதை அதுதான்.  இங்கு கூட முதலில் ஒரு வெள்ளை குதிரைதான் வைத்திருந்தேன் .ஆனால் ஏதோ நோய் வந்து அது செத்து போய் விட்டது. .பிறகுதான் இந்த கறுப்புகுதிரை வாங்கினேன் . நல்ல ஜாதி குதிரையில் வெள்ளை கிடைக்காததால்  இதை வாங்கினேன். ஆனால் இப்போதெல்லாம் இதனை பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.ஏன் தெரியுமா?இதன் மேல் உட்கார்ந்துதான் முதன் முதலாக உன் பார்வையில் பட்டேன். அதனால் இது இப்போது என் செல்ல டார்லிங்காகி விட்டது.போதுமா விளக்கம்? “என்றான் நித்யன், இப்போதும் பொங்கி வரும் சிரிப்பை அடக்கியபடி. 

இரண்டு கைகளையும் தனது தலை மீது வைத்து நீண்ட மூச்சொன்றை வாய் வழியே வெளியேற்றிய எழில்நிலா அப்படியே தரை மீது சரிந்து அமர்ந்தாள் . கண்களை மூடி சிறிது நேரம் இருந்து அவன் பேச்சுக்களை உள்வாங்கி ஜீரணித்தாள் . 

உடல் தளர்ந்து அமர்ந்திருந்தவளை கனிவோடு நோக்கியவன் சில நிமிடங்கள் அவளை அவள் போக்கில் விட்டான். அப்போது நித்தியவாணனின் போன் ஒலிக்க எடுத்து மெல்லிய குரலில் பேசிவிட்டு வைத்தான்.

“உன் சித்தி மானசியை அமெரிக்கா அனுப்பாமல் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்களாம். அளவுக்கு அதிகமாக கொடுத்த சுதந்திரம் அவளை கெடுத்து விட்டதே, உங்கள் வாழ்வில் இப்படி விளையாண்டு விட்டாளே என்று மனம் வருந்தி பேசுகிறார்கள்.ஆனால் மானசிக்கு இந்த தண்டனை  வேண்டாம் தானே நிலா? நாம் நாளை அவர்கள் வீட்டிற்கு போய் பேசி மானசியை சந்தோசமாக படிக்க அனுப்பி வைத்து விட்டு வரலாமா?”

நித்யவாணன் கேட்டது எதுவும் மனதில் பதியாமல் வெறுமனே தலையசைத்து வைத்தாள் எழில்நிலா. வாஞ்சையாக அவளை பார்த்தவன் மென்மையாக தோளணைத்து எழுப்பினான் ,”உனது முட்டாள்தனத்துக்கு உன்னை மட்டுமே காரணமாக்க மாட்டேன் நிலா .நமது நாட்டில் இன்னமும் பெண்களை நிறத்தை அடிப்படையாக கொண்டு கேலியும் கிண்டலும் செய்வது அதிகளவில் இருக்கத்தான் செய்கிறது. .அது உன் போன்ற பெண்களின் மனதை எந்த அளவு பாதிக்கிறது என்பதை இன்று தெளிவாக புரிந்துகொண்டேன் .நம் இருவரின் அன்பிற்குமிடையே இந்த நிறம் ஒருநாளும் வராது ” என்றவன்… 

அவளை திருப்பி நிறுத்தி பின்னிருந்து அணைத்தபடி ,”அதோ பார் “என வானை சுட்டிக் காட்டினான் . 

எல்லையில்லா குளிர்ச்சியை வாரி வீசியபடி வெள்ளை வெளேரென்று  ஜொலித்துக்கொண்டிருந்தது வான்நிலவு . 

“பார்த்தாயா நிலவை எவ்வளவு வெண்மை. ஆனால் கறுப்பாக அவற்றில் மேடுகளும்,பள்ளங்களும். அவற்றை  கறையென்று பழித்தாலும் அவையில்லாத நிலவை கற்பனை பண்ண முடிவதில்லை .சொல்லப் போனால் அந்த கருமையான திரடுகளும்,திட்டுக்களும் சேர்ந்ததுதான் இந்த பெரிய வெண்ணிலா.வெண்ணிலவாய் நானிருந்தால் எனை நிறைக்கும் கருவண்ணமாய் நீ இருப்பாய் “.என்றான் நித்யவாணன் . 

தன்னை முழுவதும் தனக்காகவே  ஏற்கும் கணவனின் அன்பில் கரைந்த எழில்நிலா அவன்புறம் திரும்பி கணவனை ஆரத்தழுவிக்கொண்டாள் .

 நித்யவாணனின் வானில் வெண்மை பரப்ப தயாராகிவிட்டது அந்த எழிலான வண்ணநிலவு .

  • நிறைவு – 

                                             




         

What’s your Reaction?
+1
28
+1
14
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
Saral
Saral
3 months ago

Idan kadai kanchana jaithilager novelin sayal ullathu

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!