Serial Stories பூம்பாவை

பூம்பாவை-5

 5

ரௌத்ரம் தலைக்கேறிப் போன பூம்பாவை தன்மேல் பழி சுமத்தியதைக்  கூட உணராதவனாய்,

மயிலின் வெளுத்துப் போன உயிரற்ற உடலருகில் மண்டியிட்டு அமர்ந்தான் மாறன்.

‘எப்படி இந்தப் பொண்ணு உடம்புலருந்து மொத்தமா 4.5 லிட்டர் ரத்தமும் வெளியேறியிருக்கும்?

சின்ன வயசுல கார்ட்டூன் புக்ஸ்ல இரத்தக்காட்டேரி குரல்வளையக் கடிச்சு உடம்புல இருக்குற ரத்தம் பூராவும் உறிஞ்சி குடிச்சிடும்னு  படிச்சிட்டு ராத்திரி பூரா பயந்து நடுங்கினோமே..

அப்படி ஏதாவது விசித்திர விலங்கு இந்த மலைல இருக்குமோ? இல்ல..வெளில தெரியாம ஏதாவது அன்நோன் டிஸீஸ் இந்தப் பொண்ணுக்கு இருந்திருக்குமோ’

” ஏஞ்சல்..! உன்னோட சிநேகிதிக்கு உடம்புல ஏதாவது வியாதி….

பூம்பாவையிடம் பேசியபடியே திரும்பியவன்,

“ஏ.,.ஏய்‌..” என்று கத்தியபடி சட்டென்று நகர்ந்திருக்காவிட்டால்…!

பூம்பாவை கையிலிருந்த குத்தீட்டிக்கு  மாறன் புறமுதுகைக் கொடுத்து அந்த செம்மண் பூமிக்கு மேலும் செந்நிறம் பூசியிருப்பான்.

மயிரிழையில் தப்பித்தவன், அவள் கையிலிருந்த குத்தீட்டியைப் பிடுங்க முயற்சிக்க,

யார்கிட்ட..? எங்கிட்டயேவா?? 

என்று அனாயசமாக  குத்தீட்டியை மாறன் கையிலிருந்து பிடுங்கித் தன்னுடைய இடுப்பில் செருகிக் கொண்டாள்.

அந்தக் கலவர நிலவரத்திலும் பூம்பாவையின் மேனி வனப்பையும் மீறி, அவளுடைய உடல் வலிமை மாறனின் கவனத்தை ஈர்த்தது.

அதே நேரம் மயிலும் இவளைப் போலத்தானே ஆரோக்யமாகத் தென்பட்டாள் என்ற எண்ணமும் தோன்றியது.

 தன்னையும், மயிலையும்  மாறிமாறிப் பார்த்தவனின் எண்ணவோட்டத்தைப் புரிந்து கொண்ட பூம்பாவை..

என்னய்யா ஆச்சரியமா இருக்கா…?   எங்க ஒடம்பெல்லாம் உழைச்சு ஒரமேறிய ஒடம்பு. மூப்பாகித் தொண்டு கெழமா இருக்குறவுக கூட சாகுற வரைக்கும் கடுமையா வேலை செய்வாக. 

மயிலுக்கு ஏதாச்சும் நோக்காடு இருந்துதானு கேட்டியே…! அவளும் என்னை மாதிரிதான் . ஒடம்பும்,மனசும் வலுவானவ. உங்காளுகளுக்கு வாற மாதிரி தினுசு தினுசான நோவு, நோக்காடெல்லாம் இங்கன எட்டிக் கூடப் பார்க்காது.

எங்க மலைசாதி  சனங்க

சீக்கு வந்தோ, இல்ல சின்ன வயசுல அகாலமா மாண்டு போனதாவோ  இது வரைக்கும்  சேதியே கெடையாது.  எங்க மலையோட மூலிகைக் காத்தும், கார்த்திகை மாசக் காளான் மகிமையும் உன்ன மாதிரி படிச்ச முட்டாளுக்குப் புரியவா போவுது?

எந்த விதக் குற்றவுணர்ச்சியும் இல்லாது தன் கண்களை நேருக்கு நேர் பார்த்துப் பேசிய மாறன் மீதிருந்த ஐயப்பாடு சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே வந்தது பூம்பாவைக்கு. தன் மீது குற்றம் சுமத்தியும் அதைக் கண்டு கொள்ளாமல் மயிலைப் பற்றி கரிசனமாக விவரம் கேட்டது அவள் மனதைத் தொட்டது.

“மயிலை நான் பரிசோதிச்சுப் பாக்கவா?”

“இந்தாப் பாருயா..நீ பட்டணத்துக் காரனாயிருந்தாலும், டாக்குடராவே யிருந்தாலும் உன்னோட பேச்சு இங்க எடுபடாது. எங்க சாதி கட்டுப்பாடுகளுக்கு முன்னால, எங்க வனப்பேச்சியோட தீர்ப்புக்கு முன்னால ஒண்ணுஞ் செல்லுபடியாகாது. 

எங்காளுக கண்ணுல படாம சட்டுனு இங்கன இருந்து போயிடு. எம்மயில இந்த கதிக்கு ஆளாக்குனவன கண்டு புடிச்சு இந்தக் குத்தீட்டியால அவன வகுந்து, அவங் கொடல உருவி நான் மாலையாப் போட்டுக்கல நானு பூம்பாவை இல்ல! இது எம் மயிலு மேல சத்தியம்.

கண்களில் அனல் தெறிக்க, வார்த்தைகளில் பொறி பறக்க சத்தியம் செய்தாள் பூம்பாவை!

‘ஓ…! இந்த ஏஞ்சல் பேரு பூம்பாவையா?’

“பாவை…” என்று மென்குரலில் அழைத்தவன் மேல் சீறி விழுந்தாள் பூம்பாவை.

“யோவ் என்ன பேரு சொல்லிக் கூப்புடற!  புதுசா பாவையாமுல்ல பாவை..! என்னை எல்லோரும் பூவுன்னுதான் கூப்புடுவாக. நீ பாட்டுக்கு பாவை , கோவைன்னு கூப்புடறத எங்காளுக பாத்தாக்க தொலச்சிடுவாங்க தொலச்சு! ஓடிப் போயிடு இங்கிருந்து!”

‘மத்தவங்களுக்கு நீ பூ! எனக்குப் பாவை!’

 மனசுக்குள் சொல்லிக் கொண்டவன்,

“இங்க பாரு பாவை! உன் சிநேகிதிய பறி குடுத்துட்டு நிக்கற உங்கிட்ட இப்பிடி கேக்கறேன்னு என்ன தப்பா நெனக்காத! 

‘என்ன?” என்பது போல நெற்றியைச் சுருக்கினாள் பாவை.




நேத்து ஈவினிங், அதான் சாயந்திரம் ஆறு மணி இருக்கும் . கிராமத்துல ஒரு தாத்தாவுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைனு என்னை வீட்டுக்கு வரச் சொல்லி கூப்ட்டாங்கனு போயிருந்தேன். திரும்பி வரும் போது ஒரு கார் என்னைத் தாண்டிப் போக…உள்ள ஒரு பொண்ணு இருந்ததப் பாத்தேன். தெரிஞ்ச முகமா இருக்கேன்னு நினைச்சேன். யோசிச்சு பாத்தா அது உன் சினேகிதியா இருக்குமோன்னு தோணுது. கூட ரெண்டு ஆம்பளைங்க இருந்தாங்க. கார்ல போறளவுக்கு தெரிஞ்ச வெளியாளுங்க மயிலுக்கு இருக்காங்களா?”

“யோ‌….வ்!  உம் மூஞ்சில  கள்ளங்கவடு தெரியாம இருக்கக் கண்டுதா உம்மேல இருந்த சந்தேகத்தக்கூட நா வெலக்கிகிட்டேன். ஆனா இப்ப நீ மயிலு பத்தி அபாண்டமா பேசுனதக் கேட்டா ஒன்னைக் கொன்னு கூறு போட்டாதான் எம்மனசு குளிரும் னு தோணுது. எங்க மலைசாதிப் பொண்டுகளப் பத்தி ஒனக்கென்ன தெரியும்? உங்கிட்ட இனிமே எனக்கென்ன பேசக் கிடக்கு? எங்கண்ணுல பட்டியோ தெரியும் சேதி!

சீறிச் சினந்தாள் பூம்பாவை.

மனம் கொள்ளா குழப்பத்துடன் மாறன் மலையிறங்க..

சற்றுத் தொலைவில் ஒரு அத்திமரத்தின் மீதமர்ந்து நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கடம்பன் மரத்திலிருந்து இறங்கி அங்கே வந்தான்.

அந்த பட்டணத்து தொரையோட பாச்சால்லாம் எம்பூவுகிட்ட நடக்குமா? எப்பிடி ஏசி..அவனத் தொரத்திவுட்டா என் ராசாத்தி!  இப்பிடி செஞ்சா என்ன? இந்தப் பட்டணத்துக்காரன் ஏதோ கெட்ட நோக்கத்தோட வந்திருக்கான். மயிலோட சாவுக்கு இவந்தா காரணம்னு நம்ம சனங்ககிட்ட வதந்திய எடுத்து  உட்டோம்னா அது காட்டுத்தீ கணக்கா பரவி இவனை ஒரு கை பாத்துரும். இவன்னால நமக்கும் தொந்திரவு இருக்காது என்ற முடிவுக்கு வந்தவன், அதற்கேற்ப கதை, வசனம் தயாரித்துக் கொண்டவனாய் பூவிடம் வந்தான்.

“அடி பாதகத்தி, இப்படி அநியாயமா போய் சேந்துட்டியேடி. எங்க போறதுன்னாலும் ரெண்டு பேரும் சேந்துதான போவோம்.”

அழுது கொண்டிருந்த பூவை நெருங்கியவன்

“ஐயோ மயிலு! நாஞ் சந்தேகப்பட்டது கடேசில நடந்தே நடந்துடுச்சு. நாம் போ வேண்டாமுன்னு குறுக்கால வுளுந்து தடுத்துங் கூட நீ கேக்கல.  இனி எம்பூவு ஒத்தையில கெடந்து அல்லாடுமே”

முதலைக் கண்ணீர் வடித்தான்.

அவனுக்கு மயிலின் துர் மரணம் குறித்து ஏதோ தெரிந்திருக்கிறது என்று புரிந்து கொண்ட. பூம்பாவை,

“மச்சான், மயில நீ எங்க பாத்தே? என்ன நடந்ததுன்னு சொல்லு மச்சான்”

வார்த்தைக்கு வார்த்தை மச்சான் போட்டு பேசி, அவனிடமிருந்து விஷயத்தைக் கறக்க நினைத்தாள்.

“நானே உங்கிட்ட வந்து மயிலை கொஞ்சம் கண்டிச்சு வையின்னு சொல்லோணும்னிருந்தேன். நேத்து பொளுது சாய, அடிவாரத்துல கம்பவுண்டரையாவுக்கு தேனு குடுக்க போயிருந்தேன். அப்ப அந்த பட்டணத்து தொரைங்களோட மயிலு சிரிச்சுப் பேசிகிட்டிருந்தாப்புல.

நானு மயிலுகிட்ட 

 ‘இதெல்லா நம்ம நடமொறைக்கு சரிவராது புள்ள. பூவுக்குத் தெரிஞ்சா உன்னக் கண்ட மேனிக்கு வையும். பூவு கூடத்தான பொளுதன்னிக்கும் சுத்திகிட்டிருப்ப. ஏம் புள்ள ஒத்தைல வந்தேன்”னு கேட்டேன்.

அதுக்கு அவ வளக்கம் போல..

“நீ பாட்டுக்கு உஞ்சோலியப் பாத்துட்டுப் போவியா? எப்பப்பாரு நாட்டாம கணக்கா பேசிகிட்டு திரியறவன். என்னை இங்க பாத்தத பூவுகிட்ட சொன்னியானா ஒன்னப் பத்தி இல்லாததும் பொல்லாததுமா பூவுகிட்ட சொல்லி உன்ன அவ கண்ணாலம் கட்டவுடாம செஞ்சிடுவேன்”னு மெரட்டினா. அதக் கேட்டு அந்த பயலுவ கெக்கபிக்கேன்னு சிரிக்கிறானுவ. நான் மலையேர்ற வரைக்கும் அவ அங்கனதான் இருந்தா. 

விடிஞ்சதும் ஒங்கிட்ட சொல்லோணும்னு நெனச்சுகிட்டே படுத்தவன்,பொளுது ஏறுனது கூடத் தெரியாம அசந்துட்டேன். அதான் அவசரமா ஒன்னைத் தேடி வந்தேன்.அதுக்குள்ள இப்படியாகிடுச்சு”

துக்கமும் ஆவேசமுமாக கதை படித்தவன், மயிலின் உடம்பைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டு ,

“வா பூவு, நாம  முதுவன் குடிலுக்குப் போயி நாயத்தைத் கேப்போம்”

சரசரவென நடந்தான். அவன் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பின்னால் ஓடிய பூவுக்குள் பூகம்பம் வெடித்தது. 

‘என்னோட மயிலு எங்கிட்ட கூட சொல்லாம அந்தப் பட்டணத்துக்காரவுகள போய்ப் பாத்திருப்பாளா? இவஞ்சொல்றத நம்பறதா? அந்த பட்டணத்து தொரை சொல்றத நம்பறதா? 

ஐயோ! எனக்கு இப்ப உ(ண்)ம்மை தெரிஞ்சாகணுமே!

 குழம்பித் தவித்தாள்.

அடுத்த கன்ஸைன்மெண்டக்கு  ஆர்டர் கொடுக்க கடம்பனை எதிர்பார்த்துப் படு உற்சாகமாகக் காத்திருந்தான் விக்ரம். 

விக்ரமின் உற்சாகத்துக்குக் காரணம் கடம்பன் அவனுக்காகக் கொண்டு வரும் சோமபானம் மட்டுமல்ல. மலைக்கிராமத்திலிருந்து  அவன்  அனுப்பிய மலைத்தேன் குறித்து சாலமனுடைய நண்பரும், சைன்டிஸ்டுமான டாக்டர் ப்ரதாப் கொடுத்த நற்சான்றிதழ் அவன் தலையில் போதையை ஏற்றி விட்டிருந்ததும் ஒரு காரணம். 

இந்த முறை ஒஸ்தியான கொம்புத் தேன் வேணுமாம். கிடைக்குமா?

கிடைக்காம என்ன? கடம்பனுக்கு ஆசை காட்டற விதத்துல காட்டினா எல்லாமே கிடைக்கும்?

“ஆசை நூறு வகை ..வாழ்வில் நூறு சுவை வா…வா ” விக்ரம் விசிலடித்தபடி, சூழ்ச்சி வலை விரித்துக் காத்திருந்தான் கடம்பனுக்காக.

-தொடர்வாள்.




What’s your Reaction?
+1
5
+1
8
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!