Athikalai Poongatru Serial Stories

அதிகாலை பூங்காற்று – 4

4

“வணக்கம் வக்கீல் சார் எப்படி இருக்கீங்க..?” சகஜமான குரலும்.. வெளேரென்ற சிரிப்புமாக வாசல் படி தாண்டி உள்ளே வந்தான் அவன்..

திடுமென அவனை பார்த்து அதிர்ந்து நின்றிருந்த மூவரும் அவனது அந்த வருகையை அதிர்வு மாறாமல் பார்த்தபடியே இருந்தனர்..

இது உன் வீடு.. உள்ளே வராதே என்றோ.. வெளியே போ என்றோ.. குறைந்தபட்சம் யாரடா நீ திறந்த வீட்டிற்குள்.. ஏதோ போலலென்றோ.. இவனைக் கேட்கும் உரிமை உனக்கு இருக்கிறது. சரளாவின் மூளை அவளுக்கு அறிவுறுத்த மனது கேள்விகளை வரிசைப்படுத்த, இந்த வாய்தான் அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது.. இதழசைக்கவோ, நாக்கு புரளவோ மறுத்தது.. அவனது வீட்டிற்குள் தான் நிற்பது போன்றதோர் அவஸ்தை உணர்வை அவள் பெற்றாள்.

நாராயணசாமிக்கோ இரு தலைக் கொள்ளி எறும்பு நிலை தான் இந்த வீட்டிற்கு உரிமையானவனா..? இந்த வீட்டிற்கு வரும் விருந்தாளியை விரட்டவோ, வரவேற்கவோ தனக்கு உரிமை உண்டா.. குழம்பி நின்றான்.




கவிதாவின் மனமோ அவனை பார்த்த விநாடியிலிருந்து தனது சிந்திப்பை நிறுத்தியிருந்தது.. ஒரு மாதிரி மரத்த தன்மையுடன் அவனை பார்த்தபடி இருந்தாள்.
அங்கிருந்தவர்களில் இயல்பாக இருந்தது அய்யனார் மட்டுமே பல வருடங்கள் கழித்து அந்த வீட்டிற்கு வருபவனின் தயக்கம் துளியுமின்றி வீட்டாள் போன்ற உரிமையுடன் உள் நுழைந்து கவிதாவின் கை பற்றியிருந்த நாராயணசாமியின் கைகளை இழுத்து குலுக்கினான்..

“அப்புறம்.. உங்க வேலையெல்லாம் எப்படி போகுது..? எங்க ஊரு மேலத்தெரு குமரேசுக்கு நீங்கதான் வக்கீலுன்னு கேள்விப்பட்டேன்.. கேiஸ ரொம்ப நல்லா கொண்டு போறீங்களாம்ல குமாரு சொன்னான்.. எந்நேரமும் உங்க பேச்சிதான் அவனுக்கு..”
தனது தொழில் பாராட்டில் முகம் மலர்ந்த நாராயணசாமி “எது அந்த பங்காளி சண்டை கேசா..? பாட்டியோட ஓட்டு வீடு யாருக்குங்கிற பிரச்சனைதானே..? அதெல்லாம் கவலைப்பட வேண்டாம்னு குமரேசுகிட்ட சொல்லிடுங்க.. அவர்தானே மூத்த பேரன்.. அவருக்குத்தான் அந்த வீடு முழுதும் வரனும்.. அதெல்லாம் நான் திறமையா வாதாடி வாங்கி கொடுத்துடுவேன்..”

“அப்படியா..? இப்போ சட்டத்துல பொண்ணுங்களுக்கு சொத்துல பங்கிருக்குன்னு சொல்றாங்களே வக்கீல் சார்.. குமரேசுக்கு ஒரு அக்கா.. ஒரு தங்கச்சி இருக்காங்களே.. அவுங்க நிலைமை என்ன..?”
அய்யனார் சாதாரணமாக கேட்க நாராயணசாமியின் முகம் மாறியது.. இந்த சட்டமெல்லாம் குமரேசு வீட்டு பெண்களுக்கு தெரியாது.. தெரிந்தால் பங்குக்கு அவர்களும் வந்து நிற்பார்கள்.. பிறகு கேஸ் வேறு கோணத்தில் போய்விடும்.

“அ.. அதெல்லாம் கணக்கு கிடையாது.. அவுங்களுக்குத்தான் நகை போட்டு, செலவழித்து கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்களே..”

“அப்படியா.. இதை அவுங்ககிட்டயே சொல்லலாமே..”

“வேண்டாம் சார்.. ஒழுங்காக போய் கொண்டிருக்கும் கேசை திசை திருப்பி விடாதீர்கள்..” நாராயணசாமி கிட்டதட்ட கெஞ்சல் குரலுக்கு மாறியிருக்க,
அவன் முகத்தில் பார்வையை பதித்து புன்னகைத்தபடி கவிதா பக்கம் திரும்பிய அய்யனார் அடிப்பார்வையாய் இவளை பார்த்து குறைந்த குரலில்.. “உள்ளே போ..” என்றான்..

கூண்டில் கிடக்கும் சிங்க உறுமலாய், படமெடுக்கும் நாகத்தின் சீறலாய் இருந்த அந்த குரல்.. மறுயோசனையின்றி கவிதாவை பாதங்களை பின் எட்டு எடுத்து வைத்து வீட்டினுள் போக வைத்தது உள் கூடத்திற்கு வந்து சுவரில் சாய்ந்து அவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது சரளா வேக நடையுடன் அடுப்படிக்குள் நுழைந்து கொண்டதை பார்த்தாள்.. சித்தியையும் மிரட்டினானோ..? அங்கே நாராயணசாமியையும் மிரட்டுகிறானோ.. தலையை மெல்ல வெளியே நீட்டியவள் சட்டென உள்ளிழுத்துக் கொண்டாள்.

நாராயணசாமியை காணவில்லை.. அய்யனார் உள் கூடத்திற்குத்தான் நடந்து வந்து கொண்டிருந்தான்.. உள்ளிருந்து எட்டிப பார்த்த இவளை பார்த்தபடியேதான் வந்து கொண்டிருந்தான்.. இங்கேயா வர்றான்..? இங்கே ஏன் வர்றான்..? வாசல் பெரிய மரக்கதவை தன்னை மறைத்தபடி இடையில் இழுத்துக் கொண்டு அதன் பின் மறைந்து கொண்டாள்.




ஆனால் அடுத்த விநாடியே அந்த கதவு நகர்ந்து அங்கே அவன் நின்றிருந்தான்..
“உன் அப்பாவை எங்கே..?” உள்ளே போ சொன்ன அதே அதட்டல் சீறல் குரல்..
செங்கோளமாய் உருண்ட அவன் விழிகளை சந்தித்த பின் உதடுகள் இரண்டும் திறக்க மாட்டேனென அடம் பிடிக்க, வலது கையை நீட்டி பின் வாசலை காட்டினாள்..
“ம்..” என்றோர் பிளிறலுடன் பின்வாசலுக்கு நடந்தான்..

இவன் அந்த மதகின் மறுபுறம் நின்று பேசிக் கொண்டிருந்த போது.. இங்கே வரத் தயங்கியதென்ன..? இப்போது கூடத்திலிருந்து, கொல்லை வரை சொந்த வீடு போல் புழங்குவது என்ன..? எப்பேர்பட்டவன் இவன்..?

கவிதா அவசரமாக மரப்படிகளில் ஓசை எழாமல் பாதம் பதித்து மாடியேறி போய் அங்கிருந்து கொல்லைப்புறத்தை பார்த்தாள்..

பசுமாடு ஒன்றுக்கு சில நாட்களாகவே உடல் நலம் சரியில்லை.. சரியாக உணவுண்ணாமல் கத்தியபடி இருந்தது அது.. அதற்கு வைத்தியம் பார்க்க வந்த டாக்டருடன் மாட்டை
பற்றி பேசியபடி மாட்டுக் கொட்டகையினுள் நின்றிருந்தார் அன்னாசிலிங்கம்..
திடுமென தன்னை நோக்கி வந்த அய்யனாரை அவருமே எதிர்பார்க்கவில்லை..
“வாங்க.. வாங்க.. வணக்கம்..” திகைப்புடனேயே கொட்டகையை விட்டு வெளியே வந்து வணங்கி வரவேற்றார்..

பரபரத்து.. அதே நேரம் ஒரு வகை அந்நியோன்யத்துடன் இருவரும் பேசிக் கொள்வதை மாடியில் இருந்து பார்த்தாள் கவிதா.. வாயசைவுகளும், கையசைவுகளும் தெரிந்ததே தவிர, அவர்களது பேச்சு காதில் விழவில்லை..

நெடுநாள் பிரிந்திருந்த நண்பர்கள் போல் பரவசமாக பேசிக் கொண்டனர்.. ஒருமுறை இருவரும் ஒருவரையொருவர் லேசாக அணைத்துக் கொண்டதை கூட ஆச்சரியமாக பார்த்தாள் கவிதா.. இவர்கள் இருவரும் பகையாளியா.. பங்காளியா..? இந்த ஒட்டு ஒட்டுறாங்களே.. சிறு எரிச்சலுடன் பார்த்தபடி நின்றாள்..

அய்யனார் இப்போது மாட்டுக்கொட்டகையினுள் நுழைந்தான்.. வைத்தியம் நடந்து கொண்டிருந்த மாட்டின் அருகே போய் பார்த்தவன் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த டாக்டரிடமும் பேசினான்.. கைகளை நீட்டி வாஞ்சையுடன் மாட்டின் முதுகை தடவினான்..

அன்னாசிலிங்கம் அவனை வீட்டின் புறம் கை காட்டி உள்ளே அழைக்க, அவன் வீட்டை நோக்கி வரத்துவங்கினான்.. கவிதா அவசரமாக பால்கனி தூணின் பின்னால் பதுங்கிக் கொண்டாள்.. பார்த்து விட்டானோ.. லேசாக அண்ணாந்து பார்த்தது போல் இல்லை..? வேகமாக வீட்டினுள் போய்விட்டாள்..

தன் அறைக்குள் புகுந்து கதவை பூட்டிக் கொண்டாள்.. என்னை காபி கொடு.. டிபன் கொடு என்று கூப்பிடட்டும், வச்சிக்கிறேன்.. தந்தையின்.. தாயின் அழைப்பை எதிர்நோக்கி காத்திருக்க அது போலொரு அழைப்பு அவளுக்கு வரவேயில்லை..




ஒரு மணிநேரம் கடந்துவிட இவ்வளவு நேரமாகவா இங்கே இருக்கிறான்..? கவிதா மெல்ல கீழே இறங்கி வந்து பார்க்க அய்யனாரை காணவில்லை.. போய்விட்டான் போலும்.. மெல்ல வாசலை எட்டிப் பார்த்தவள் திகைத்தாள்.. இவன் இப்போது எதற்கு வருகிறான்..? நாராயணசாமி உள்ளே வந்து கொண்டிருந்தான்..

“என்ன மாமா..? என்ன விசயம்..?”

“உன் அப்பாவிடம் பேசவே இல்லையே.. அவன் வந்து காரியத்தையே கெடுத்துவிட்டானே.. இப்போது திரும்ப உன் அப்பாவிடம் பேச வந்திருக்கிறேன்..”

“ஐயோ.. இன்னைக்கு வேண்டாம் இன்னொருநாள் பார்க்கலாம்..”

“அது எந்த நாள் கவிதா..? அந்த அய்யனார் இப்போது வந்து உன்னை திருமணம் முடிக்கும் விசயம்தான் பேசிவிட்டு போயிருக்கிறான் தெரியுமா..? நான் இன்னமும் இன்னொரு நாளுக்காக காத்திருக்கவா..?”

நாராயணசாமியின் நியாயமான கேள்வியில் கவிதா மௌனமானாள்..
“யார் அது..? நாராயணனா..? என்னப்பா இந்த பக்கம்..? என்ன விசயம்..?” சத்தமாய் கேட்டபடி வந்த அன்னாசிலிங்கத்தின் பார்வை அருகருகே நின்று பேசிக் கொண்டிருந்த இவர்களின் மேல் பனையோலை காற்றாடி முள்ளாய் சொருகி நின்றது.

“உங்க கிட்ட ஒரு விசயம் பேசனும் மச்சான்..” சொன்னபடி திரும்பி பார்த்தவன் திகைத்தான்.. கவிதாவை காணவில்லை.. அவள் அப்பாவின் அந்த கூர் முள் பார்வையிலேயே உள்ளே ஓடி விட்டிருந்தாள்..

“என்ன விசயம்.. சொல்லுங்க..” சோபாவில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டார்..

“நா.. நான் நம்ம கவிதாவை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன் மச்சான்..” திக்கி திணறி ஒரு வழியாக சொல்லி விட்டான்..
பதில் பேசாமல் அவனை பார்த்தபடியே இருந்த அன்னாசிலிங்கம், வாய் திறந்து உரத்த குரலில் கத்தினார்..

“டேய்.. தங்கப்பாண்டி..”

கொட்டடி மாடுகள் கூட அந்த சத்தத்தில் அதிர்ந்து மிரண்டன.. தங்கபாண்டியன் மாடியிலிருந்து தடதடவென இறங்கி வந்தான்..

“உன் மாப்பிள்ளை என்னமோ சொல்லுறான்.. என்னன்னு கேளு..”

“என்ன விசயம் நாராயணா..?” தங்கபாண்டி கொஞ்சம் அலட்சியமாகத்தான் இதனை கேட்டான்.. ஆனால்..

“நான் கவிதாவை பொண்ணு கேட்டு வந்திருக்கிறேன் மச்சான்..”

அவ்வளவுதான்.. தங்கபாண்டியன் ரௌதரமானான்.. பாய்ந்து அவன் சட்டையை பிடித்து உலுக்கினான்..

“படவா.. உன்னை வீட்டிற்குள் நடமாட விட்டதற்கு நீ செய்யும் நன்றியா இது..?”

தன் அக்கா புருசனுக்கு நெடு நாட்களாக தனது சட்டையை பிடித்து உலுக்கும் ஆசை இருப்பதை நாராயணசாமி அறிவான்.. இருவரின் தொழில் விசயங்களில் அந்த சந்தர்ப்பம் தங்கபாண்டியனுக்கு வாய்ப்பது அபூர்வம்.. அதனால் தனக்கு வாய்த்ததை மச்சான் சரியாக பயன்படுத்திக் கொள்கிறானா.. நாராயணசாமி பல்லைக் கடித்தான்..

“கையை எடுங்க மச்சான்.. நான் மட்டும் இல்லை.. கவிதாவும் என்னை காதலிக்கிறாள்.. எங்கள் இருவருக்கும் நீங்கள் திருமணம் செய்து வைத்தே..” பேசியபடி இருந்த நாராயணசாமியின் கன்னம் அதிர்ந்தது..




கன்னத்தை பிடித்தபடி அவன் கோபமாக திரும்பி பார்க்க, அங்கே சரளா நின்றிருந்தாள்..
“உனக்கு எவ்வளவு தைரியமிருந்தால் எங்க வீட்டுக்குள்ளேயே வந்து எங்க வீட்டு பொண்ணையே கல்யாணம் பண்ணிக்க கேட்பாய்..? வெளியே போடா.. இனி இந்தப் பக்கம் வராதே..” பேசியபடி தம்பியின் சட்டையை பிடித்து இழுத்து வாசலுக்கு தள்ளினாள்..

“அக்கா..” நாராயணசாமி நம்ப முடியாமல் அவளை பார்க்க..
“இப்போ எதுவும் பேசாதடா.. இதுக்கு மேல பேசினால் நானும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற வேண்டியதாகிவிடும்.. நீ முதலில் இங்கிருந்து போ..”

தம்பியின் சட்டையை பிடித்து இழுத்து போகும் சாக்கில் அவனுக்கு மட்டுமாக முணுமுணுத்தாள் நாராயணசாமிக்கு புரிந்தது.. சரளா அவளை காப்பாற்றிக் கொண்டாள்.. அவன் தலைகுனிந்தபடி வீட்டை விட்டு வெளியேறினான்..

“உனக்காக.. நீ சொன்னதற்காகத்தான் நாராயணன் தைரியமாக உன் அப்பாவிடம் பேச வந்தான்.. நீ அப்போது வந்து ஒரு வார்த்தை உன் அப்பாவிடம் ஆமாம்பா என ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும்.. ஆனால் இப்படி ஒரு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாயே கவிதா..?”

சரளாவின் குற்றச்சாட்டில் கவிதா குழம்பி அமர்ந்திருந்தாள்..
சித்தி சொல்வது சரிதான்.. நான் அப்போது வந்து அப்பாவிடம் பேசியிருக்க வேண்டும்தான். ஆனால் ஏனோ அந்த நேரத்தில் அப்படி பேச அவளுக்கு மனம் வரவில்லை.. அப்பாவிடம் பயம் ஒரு பக்கம் இருந்தாலும், அப்போது அப்படி எல்லோர் முன்பும் போய் தான் நாராயணசாமியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாய் சொல்லத் தோன்றவில்லை..




ஏன் இதனை அவள் இதுவரை நாராயணசாமியிடமே சொன்னதில்லை.. அவனாக அடிக்கடி சொல்லும் காதல் வசனங்களுக்கும், கல்யாண வாக்குறுதிகளுக்கும் பதில் சொல்ல தெரியாமல் விழித்தபடி அமர்ந்திருந்திருக்கிறாளே தவிர, பதிலாக காதலையோ கல்யாண உறுதியையோ அவனுக்கே அளித்ததில்லை.

ஆனாலும் இப்போது சரளா சொல்வது போல் தான் நாராயணசாமிக்கு துரோகம் செய்துவிட்டதாகவே நினைத்தாள்.. அந்த துரோகத்திற்கு அவள் ஈடு செய்ய வேண்டுமென்ற சரளாவின் பேச்சை ஒத்துக் கொள்ளவும் செய்தாள்.

நாராயணசாமிக்கு நியாயம் செய்வதாக சரளா காட்டிய வழி, வீட்டை விட்டு ஓடிப்போய் அவனை திருமணம் செய்வது.. இந்த வகை திருட்டு திருமணத்தை கவிதா உணர்ந்த போது அதனை தடுப்பதற்குரிய நேரம் கடந்து விட்டிருந்தது.




What’s your Reaction?
+1
10
+1
14
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!