Serial Stories பூம்பாவை

பூம்பாவை-4

 4

விக்ரம்மின் உடல் தள்ளாடியது. புதிய இடம். புதிய குளிர். புதிய ஆசை. புதிய போதை.

“யேய் கடம்பா! அந்த வனப்பேச்சியைக் கூட்டிட்டு வர முடியுமா முடியாதா?” என்று தன் முன்னால் நின்றிருந்தவனை மிரட்டினான்.

எல்லாவற்றுக்கும் அவன் முன் குழைந்து கும்பிடு போடும் கடம்பன் இந்த முறை ஏன் இப்படி முறுக்கிக் கொள்கிறான் என்று தோன்றியது விக்ரம்முக்கும் அவன் அடிப்பொடிகளுக்கும்.

“இதா பாரு தொரை, நீ என்ன கேட்டாலும் செய்யிறேன். ஆனா அந்தப் பொண்ணைப் பார்க்கறது, அவளைத் தொரத்தறது இதெல்லாம் வேணாம். இத்தோட நிறுத்திக்கிரு” என்று கடம்பன் உறுமினான்.

“ஏன், அது ஏதாவது சாமிப் பொண்ணா?” என்று கேட்டான் ஒருவன்.

“இல்லை, இந்த ஆசாமிப் பொண்ணு! என் முறைப் பொண்ணு. அவள கூட்டிட்டு வா அது இதுன்னு சொல்லெல்லாம் வந்துச்சு, இந்தக் கட்டாரியால ஒரே குத்து!  இன்னிக்குக் காலையில கூட ஒருத்தன் மண்டையைப் பொளந்திருப்பேன், பூவு என் கையைப் பிடிச்சதால…”

“மயங்கிப் போய் விட்டுட்ட! யாருடா அந்தப் பூவு? அவதான் உன் முறைப் பொண்ணா?” என்ற விக்ரம், கட்டாரியை கடம்பன் உருவுவதைக் கண்டதும் நிறுத்தினான்.

அதற்குள் விக்ரம்மின் நண்பன் “உங்கப்பா பேசறார்” என்று மொபைலை நீட்டினான். விக்ரம் அதை வாங்கி, தள்ளாடிக் கொண்டே சற்று விலகினான்.

*****

கட்டாரியைத் தோலுறையில் போட்ட கடம்பன், அன்று நடந்த விஷயங்களை அசை போட்டான்.

‘அடியே பூவு! நீ மச்சான்னு சொன்னதுமே மனசு ஆகாசத்தில் பறக்குதுடி! அந்தப் பட்டணத்துக்காரன், என்ன துணிச்சல் இருந்தா உன் கையப் புடிச்சு இளுக்கப் பார்ப்பான்! அவன் மண்டைய உடைச்சிருப்பேன், பட்டணத்துக்காரனைத் தாக்கிட்டா, மலைக்குள்ள போலீசு வந்திரும், அப்படி சாதிக் கட்டுப்பாட்டை மீறிட்டா, என்னைக் குலசாமிக்குப் பலிகொடுத்திருவாங்கன்னு நீ சொன்னதால்தான் அவன் உசிர் பொளைச்சிக்கிட்டான்! பூவு, என் கையைப் புடிச்சுட்ட! இனி நீ எந்தச் சால்ஜாப்பும் சொல்லமுடியாது! அடுத்த வாரம் வனப்பேச்சி முன்னால உனக்குப் பரிசம் போடல, நான் காடத்தி பெத்த கடம்பன் இல்லடி!

‘இந்தத் தொரை இங்கிலீசு கள்ளு, ஜென்ட்ன்னு குடுக்கறான். அதுக்கு சந்தனக் கட்டை, மலைத்தேன்னு கேட்டா குடுக்கலாம். என் பூவைக் கேட்டா, குடுத்துருவேனா? கொன்னுப் போடுவேன்’ – கட்டாரி மறுபடி வெளியே வந்து, அவன் கோப முகத்தைப் பிரதிபலித்துவிட்டு, மீண்டும் உறைக்குள் உறங்கச் சென்றது.

*****

“என்ன விக்ரம், நான் சொல்லி அனுப்பின விஷயம் என்ன ஆச்சு? ஏற்பாடு பண்ணிட்டியா?” என்ற கண்டிப்பான குரல் ஒலித்ததும், ஆடிக் கொண்டிருந்த விக்ரம்மின் உடல் லேசாக விறைப்பானது.

“பண்ணிட்டிருக்கேன் டாட் ” என்றான் ஓரளவு தெளிவை வரவழைத்துக் கொண்டு.

“நீ என்ன பண்ணிட்டிருக்கேன்னு எனக்கு இங்கிருந்தே தெரியுது! தப்புப் பண்ணினா, நான் என் மகன் மத்தவங்கன்னு பார்க்க மாட்டேன்னு உனக்கு நல்லா தெரியும்! எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினா, இந்தச் சாலமன் சாத்தான்! நினைப்பிருக்கட்டும்!”

“அ… அதெல்லாம் உங்க வார்த்தையை மீறி நடக்க மாட்டேன் டாட் . இப்பக்கூட உங்க விஷயமாத்தான் பேசிட்டிருந்தேன்!” என்றான் விக்ரம்.

 “மண்ணாங்கட்டி! நீ உண்மையைத் தான் சொல்றேன்னா, அதை நிரூபிச்சுக் காட்டு! எனக்கு வேணுங்கறதெல்லாம் ரிசல்ட்!”

“கண்டிப்பா கிடைக்கும் டாட்! இன்னும் ரெண்டே நாள் டைம் கொடுங்க, நீங்க கேட்ட மலைத்தேன் நம்ம ஃபாக்டரில முதல் பாட்ச் வந்து இறங்கும், போதுமா?”

“பார்க்கலாம்.”

மறுமுனை வைக்கப்பட்டுவிட, அந்தக் குளிரிலும் விக்ரம்முக்கு வியர்த்தது.

*****




“கடம்பா! இந்தா, இதை வெச்சுக்க” என்று விக்ரம் நீட்டிய சிறு பெட்டியைத் திறந்து பார்த்த கடம்பன், அதில் மின்னிய தங்க மோதிரத்தைப் பார்த்து வியந்தான். அதைக் கையில் போட்டுக் கொண்டு நிலாவொளி அதில் பட்டுச் செய்யும் வெளிச்ச ஜாலங்களைப் பார்த்துப் பார்த்து ரசித்தான். 

“எங்க மலையில தங்கம் கிடைக்காதுங்க! நாங்க வெள்ளிலதான் நவை செஞ்சு போட்டுக்குவோம்! இதென்ன, வெள்ளைக் கல்லு? பட்டணத்து நாகரீகமா? இங்கெல்லாம் பவளம் கிடைக்கும். யானைகிட்டருந்து கிடைக்கற முத்தைப் பார்த்திருக்கீங்களா? ரொம்ப ஒஸ்தியானது!”

“போடாங்க! பவளமாம் முத்தாம்! எங்க விக்ரம் சொல்றபடி கேட்டா அவன் வைரமே பண்ணிப் போடுவானே!” என்றான் ஒரு நண்பன்.

கடம்பன் ரோஷமாக “உங்க பட்டணத்தைவிட ஒஸ்தியா எங்க மலையிலும் கிடைக்கும்ங்க – நாக ரத்தினம்!” என்றான்.

“நாக ரத்தினமா? பல கோடிகள் மதிப்பாச்சே! உண்மையான ரத்தினம் தானா இல்ல…” கடம்பன் கட்டாரியை உருவுவதைக் கண்டதும் நிறுத்தினான் அவன். 

“இந்தக் கட்டாரிக்கு அசராத நாகமே கிடையாது! ஒருநா ராவு எங்கூட வந்து பார்க்கறியா சாமி, உன் கண்ணெதிர்க்கவே நாகரத்தினத்தை எடுத்துக் காட்டறேன்” என்று சூளுரைத்துப் பேசினான் கடம்பன்.

“அந்த ரத்தினம் யாருக்கு வேணும்? அதைவிட விலைமதிப்பான ரத்தினம்தான் நான் உங்கிட்ட கேட்கப் போறது” என்றான் விக்ரம்.

“சாமி! உன்னை என் குலசாமிக்கு அடுத்தபடியா வெச்சிருக்கேன், குடலை உருவ வெச்சிராத! எங்க பூவுப் பொண்ணைப் பற்றி இனி ஒரு சொல்லு…”

“யோவ்! யாருய்யா நீ! அந்தப் பொண்ணைப் பற்றி யாரு பேசினா?” என்றான் விக்ரம்.

“அப்ப…”

“அந்தப் பொண்ணோட கூடவே சுத்துறாளே ஒருத்தி…”

“யாரு? மயிலைச் சொல்றீங்களா?”

“அவ பேரெல்லாம் யாரு கண்டா? அவளைக் கொண்டு வரியா?’

“வேணா தொரை! வனப்பேச்சி…”

“சும்மா பயங்காட்டாத! வனப்பேச்சி, கடலாச்சின்னுக்கிட்டு! வனப்பேச்சி உனக்கு இதைக் கொடுக்குமா?”

திரும்பிப் பார்த்த கடம்பன் நாக்கு ஊறியது. காரணம் விக்ரம்மின் கையில் பளபளவென்று மின்னிய திரவங்கள் அசைந்த பாட்டில்கள்…

*****

“ஹாய் ஏஞ்சல்!” – குரல் கேட்டு நின்றாள் பூம்பாவை. “உனக்கு நன்றி சொல்லணும்னு இன்றைக்குப் பூராவும் தேடறேன், கண்ணிலேயே பட மாட்டேங்கறியே!” என்றான் நன்மாறன்.

“இந்தாய்யா, பட்டணத்துக்காரா! உன்ன மாதிரி ஆளுங்கள பத்தி எனக்கு நல்லாவே தெரியும்! எங்களை மாதிரி அப்பாவி மலைசாதிப் பொண்ணுங்களை மயக்கறதுக்குன்னே அலைவியே! கெட்டுப் போனவள எங்க சாதிசனத்துல என்ன செய்வாங்க தெரியுமா? குலசாமி வார வழியில கட்டிப் போட்டுருவாங்க! அது வந்து கொம்பால குத்திப் போட்டுப் போய்ரும்! உனக்கென்ன, வாசனை ஜெண்ட்டைத் தடவிக்கிட்டு ப்ளசர் கார்ல புகையைக் கிளப்பிட்டுப் போயிருவ! 

“இப்படி சில பொண்ணுங்க அந்தக் காலத்தில வெள்ளைக்காரத் துரைங்க வேட்டைக்கு வந்தப்போ இத மாதிரி ஏமாந்திருக்காங்க, செத்திருக்காங்க! அதுனாலதான் எங்க சாதிப் பொண்ணுங்க கையில் எப்போதும் குத்துக் கத்தி வெச்சிருக்கோம்! காட்டு மிருங்கங்க எங்கள ஒண்ணும் பண்ணாது! உங்களை மாதிரி ஆம்பள மிருகங்களுக்குப் பயந்துதான் அது! குத்தினாலும் எங்க சாதி வளக்கப்படி அது குத்தமில்ல! 

“இப்படித்தான் என் மாமன் ஒருத்தன் என்னைச் சுத்திக்கிட்டிருக்கான். அவனும் நான் சம்மதிக்கறவரையில எங்கிட்ட நெருங்கக் கூட முடியாது! நீயும் ஒளுங்கா இருந்துக்கப் பாரு! எனக்கோ, எங்க மலைக்கோ எதிரா கையக் கால நீட்டின, ஒண்ணு, நான் பலி வாங்கிருவேன், இல்ல, எங்க வனப்பேச்சி பலிவாங்கிரும்!”

இந்த நீண்ட பேச்சில் நன்மாறன் ஒன்றும் பயந்ததாகக் காணப்படவில்லை. “ஏஞ்சல், நீ சொல்றது எல்லாம் குணக்கேடனுங்களுக்குச் சரியா இருக்கலாம். ஆனா, நான் மனசில் கெட்ட எண்ணத்தோட உன்னைப் பார்க்க வரலியே! எங்க பட்டணத்தில் எத்தனையோ ஆண்களும் பெண்களும் மனதில் கல்மிஷமில்லாம நட்பா பழகறாங்க. இந்த மலைக்காட்டிலேயே இருக்கறதால்தான் பெண்கள் எவ்வளவு முன்னேறிருக்காங்கன்னு உனக்குத் தெரியல…”

“வாய மூடுய்யா, உன் முன்னேத்தமும் நீயும்! எங்க மலைக்காட்டில ரத்தினமா பாதுகாக்கறாங்கய்யா எங்க பொண்ணுகள! உங்க பட்டணத்தில் பொண்ணு தனியா தைரியமா நாலடி நடக்க முடியாது! இங்க மலைக்காடு பூரா எங்க ராஜ்ஜியம்! எங்களுக்கு எந்தப் பயமும் கிடையாது…”

சொல்லிக் கொண்டே காட்டின் எல்லைக்கு நடந்து வந்திருந்த பூம்பாவை ‘திக்’கென்று அதிர்ந்தாள். “ஆரு, ஆரு அங்க கெடக்குறது?” என்று ஓடினாள். அருகே நெருங்கி மரத்தடியில் கிடந்த அந்தப் பெண் உடலைத் திருப்பியவள் “ஐயோ! மயிலு! உனக்கு என்ன ஆச்சு? எந்தப் பாவியால இந்த நிலமை வந்துச்சு? எப்போதும் எங்கூடவே இருப்பேன்னு சொல்லுவியே, ஏன் என்னை விட்டுட்டுப் போன?” என்று பெரிதாகப் பிரலாபித்தாள்.




 அவளுடைய சோகம் மாறனை அசைத்தாலும், ‘இந்தப் பெண் திடீரென்று எப்படி மரணமடைந்தாள்? நகக்குறிகள் தெரிகின்றதே, கற்பழிக்கப்பட்டிருப்பாளா? ஆனால் அதற்கு உடல் இப்படி வெளுத்துப் போகுமா? ரத்தமே இல்லாததுபோல்.! ஒருவேளை காட்டு மிருகம் ஏதேனும் தாக்கியிருக்குமா? மலைஜாதிப் பெண். அவர்கள் நிச்சயம் திரும்பத் தாக்கப் பயிற்சி பெற்றிருப்பார்களே! இப்போதுதானே இந்த ஏஞ்சல் அதைப் பற்றி என்னிடம் பேசினாள்? சரி, அப்படியே மிருகம் தாக்கியிருந்தால், இவ்வளவு ரத்தம் வெளியேறப் பெரிய காயம் எதுவும் காணோமே! பாம்பு, விஷப்பூச்சி ஏதாவது  கடித்தால் இப்படி ஆக வாய்ப்பு இருக்கிறதா?’ என்றெல்லாம் அவன் மருத்துவர் மனது வேகமாக யோசித்தது.

அழுது புலம்பிக் கொண்டிருந்த பூம்பாவை திடீரென்று எழுந்தாள். 

“நீதானே? நீதானே என் மயிலைக் கொன்னது? சொல்லுய்யா, இல்லை உன்னை வனப்பேச்சிக்குப் பலிபோட்டுருவேன்! சொல்லு!” என்று அலறினாள்.

-தொடர்வாள்




What’s your Reaction?
+1
9
+1
7
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!