Serial Stories பூம்பாவை

பூம்பாவை-2

2

கலையரசி நிமிடத்துக்கொரு முறை கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். அவருடைய அலைப்புறுதலைக் கண்ட பானுசந்தர்

“கலை பார்த்து பார்த்தே செல்போன் உருகிப் போய் கரைஞ்சிடும் போலவே”

“ம்! ஏன் சொல்ல மாட்டீங்க. புள்ளை புதிசா ஒரு மலைக்கிராமத்துக்குப் போனானே ! பழக்கமில்லாத இடமாச்சே! சேர்ந்தது பத்தி ஒரு விவரமுமே இல்லையேன்னு கவலையிருக்கா.? எப்பவோ போய் சேர்ந்திருப்பாங்க. ஒரு மெஸேஜைக் காணோம்! போனும் வரக் காணோம். எனக்கு பயம் கொல்லுது “

“எதுக்கு இந்த பயம். அவன் என்ன சின்ன பேபியா? அவன் டாக்டர்.”

“அவன் பேருபெத்த டாக்டராவே இருக்கட்டும் எனக்கு முதல்லே மகன் அப்புறம் தான் எல்லாமும். ! டில்லிக்கே ராஜான்னாலும் தல்லிக்கு பிட்டதான்.”

“என்னது..தல்லி!  பல்லி! பிட்டை! பட்டைன்னு உளர்றே. வரவர நீ சரியில்லை.”

“டில்லிக்கு ராசாவானாலும் பெத்தவளுக்கு புள்ளைதான் னு சொன்னேன். வந்திட்டாரு. பெரிசா! . கிராமத்துக்குப் போயித்தான் ஆகனும்னா இங்கேயே சின்ன கிராமத்துக்கு போகலாம் தானே! மலையாம் கீழே கிராமமாம்.  நானே தவிச்சுப் போய்க் கிடக்கேன்.. போறவழிப்பூரா மலைக்காட்டுப்பாதை!  ஏதாவது ஒண்ணுன்னா  யாரு உதவி செய்வா?ஒத்தையிலே எம்புள்ளே என்னா பண்ணுவான்? “

“கலை! என்னம்மா கண்ணைக் கசக்குறே?  அது மலைப்பிரதேசம் இல்லையா டவர் கிடைக்கிறது கஷ்டமாயிருக்கோ என்னவோ? நீ பாஸிட்டிவ்வா யோசி. அதுதான் எப்பவுமே நல்லது!  அதோடு பாரஸ்ட்டு இலாகாவோட அனுமதியும் இவங்க சுப்பிரியர் அனுமதி கைடைன்ஸோடு தானே  பாதுகாப்பா போறான்.  சரி நீ கால் பண்ணலையா “

“பண்ணாமலிருப்பேனா? கால் போகலைங்க. “

“அதான்மா டவர் ப்ராப்ளமாத்தானிருக்கும். கொஞ்ச நேரத்துலே கூப்பிடுவான் பாரு”

இவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க நன்மாறனும் சிவாவும்  தங்களிருப்பிடத்தை அடைந்துவிட்டிருந்தனர்.




பைனூர் அந்திநேர அழகில் ஜொலித்தது. 

இன்னுமே நகரச்சாயலை முழுதுமாய் பூசிக் கொள்ளாத ஊர். பழமையின் அடையாளங்களை தொலைத்து விடாமல் புதுமையையும் ஒப்பனை செய்தாற்போல் வீதிதோறும் மின் விளக்குகள் கண் சிமிட்டின. தெருக்கள் கறுப்புச் சேலையணிந்தாற் போல தார் பூசி மினுங்கின. இரு மருங்கிலும்  பசுமைப் போர்வையாய்க் கிடந்தது. திண்ணை வைத்த வீடுகள் சுண்ணத்தில் குளித்த சுவர்கள், விளக்கேற்றும் மாடப்புரைகள், அதில் ஒழுகிக் கிடந்த எண்ணெய்க் கரை என்று இன்னமும் ஊர் கட்டுக்குலையாமல் மோகனப் புன்னகை சிந்தியது. இவர்களுக்காக. காத்திருந்தவர் இவர்கள் காரை விட்டிறங்கிய நிலை கண்டதுமே தவித்துப் போனார் 

“அய்யோ! என்ன டாக்டர் இது? “

“நீங்க”

“நான் அய்யாத்துரைங்க. உங்களுக்கு போன் பேசினேனே. இந்த ஊரு ஆஸ்பத்திரியிலே கம்பவுண்டருங்க என்னங்க ஆச்சு ”

“நத்திங்! நத்திங்! ஸார்! பதறாதீங்க. வழியிலே காட்டெருமை ஒண்ணு குறுக்காலே வந்திடுச்சு. அது மேலே மோதாமே திருப்பப் போயி மரத்திலே மோதிட்டேன். சின்ன அடிதான் ஃபர்ஸ் எய்ட் முடிஞ்சுது”

அவர்களோடு பேசியபடியே அந்த ஓட்டு வீட்டை நெருங்கி விட்டார் அவர்.

“இங்கேயிருந்து ஹாஸ்பிடல் பக்கம்தான் ஸார். உள்ளார வாங்க. இதுதான் ஸார் நீங்க தங்கறதுக்காக ஏற்பாடு செஞ்சிருக்கிற வீடு.”

“கூடம், ரெண்டு ரூம்மு, கிச்சன் இருக்கு பேக்கடையிலே (புழக்கடை)கிணறு இருக்கு. தேனு போல இனிக்கும் தண்ணி . கேணி பக்கத்தாப்பலேயே குளிக்க கொள்ள வசதியா ரூம்மு இருக்குதுங்க. 

உங்களுக்கு சமைக்க வீடு கூட்டன்னு ஒரு அம்மா வருவாங்க. 

பட்டணத்துக்காரங்க போல விதவிதமா சமைக்கத் தெரியாதுன்னாலும் நல்லா ருசியா சமைப்பாங்க ஸார். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிடணும். “

“அச்சோ! அதெல்லாம் ஒண்ணுமே பெரிய விஷயமேயில்லை. பசிக்கு சாப்பாடு கிடைச்சா போதும்.”

“இந்த வீட்டுக்கு கரெண்டு இழுத்து இருக்கு ஸார். எல்லா எடத்திலுமே லைட் போட்டுருக்கு. .இன்னிக்கு ராத்திரிக்கு நம்ம வீட்டுலே சாப்பாடு”

இடை  மறித்தான் மாறன்.

“அச்சோ! எதுக்கு ஸார் சிரமம்.  நாங்க ப்ரட்  பிஸ்கட்டுபழங்கள்ன்னு கொண்டு வந்திருக்கோம். பார்த்துக்கிடறோம்”

“ஆ…அதெப்படி.? எங்க ஊருக்கு வந்திட்டு ரொட்டிய சாப்பிடறதாவது.? நல்லாயிருக்கு.  நீங்க எங்களோட விருந்தாளி. நைட்டு நான் வந்து கூட்டிப் போறேன். இப்போதைக்கு ரெஸ்ட் எடுங்க. “இதோ …ஒரு நிமிஷம்” என்று  அங்கிருந்த மேஜையிலிருந்து ப்ளாஸ்க் ஒன்றை எடுத்தார். அங்கேயே கவிழ்க்கப் பட்டிருந்த இரு டம்ளர்களில் காபியைக் கவிழ்த்து இருவரிடமும் நீட்டினார்.

“ஸார்! உங்களுக்கு? “

” நா குடிச்சுட்டேன் ஸார்.நீங்க சாப்பிடுங்க.”

அந்தநேரத்து களைப்புக்கு காபி தேவாம்ருதமாக உள்ளே இறங்கியது.

சுவை வேறு தினுசாக இருக்க 

“இது என்ன காபி ஸார். வேற டேஸ்ட்டா இருக்கு”

“இது கருப்பட்டி போட்ட சுக்குக்காபி! மலையை யொட்டிய இடம் இல்லீங்களா? இந்த மலைக்காத்து புதிசா வாரவங்களுக்கு சட்டுன்னு ஒத்துக்காது. இந்த சுக்குக்காபி நல்லா கேக்கும். சாதாரண காபியைவிட சுக்குக்காபி உடம்புக்கு நல்லதுங்க. பிடிச்சிருக்கா “

“சூப்பராயிருக்கு. தேங்க் யூ ஸார்”

“சரிங்க! அப்ப நான்  பெறவு வாரேன். “

அய்யாத்துரை கிளம்பினார். நண்பர்களிருவரும்  அங்கிருந்த இருக்கையில்அமர்ந்தனர். 

கூடத்தின் சார்பிலிறங்கிய அழிக்கம்பியிட்ட வெளியில் மேகம் எட்டிப்பார்த்து குசலம் விசாரித்தது. முற்றத்தின் குறட்டோரமாய் முல்லைக்கொடியொன்று ஏறி படர்ந்திருக்க அதன் நறுமணம் நாசியை நிறைத்தது.

“மாறா! அம்மாவுக்கு கால் பண்ணுடா? “

“ஆமாம்டா! வீடியோ கால் வேண்டாம். பார்த்தாலே பயந்துகிடுவாங்க”

“ஆமாம்டா நானே சொல்லணும்னு நினைச்சேன்.”

“அந்தப்பூ…அதான் இளஞ்சிவப்பு பூ ரொம்ப அழகாயிருந்தது இல்லைடா. பறிக்கலாம்ன்னு இருந்தேன். நீ தடுத்திட்டே! “

“பின்னே! பூ பறிக்கவும் காய் பறிக்கவுமா இங்கே வந்திருக்கோம். வேலையைமுடிச்சிட்டு எஸ்கேப் ஆகணும் டா “




“போடா! உனக்கு ரசனையேயில்லே”

“வேண்டாம் சாமி! இதுவே மலைஜாதி கிராமம். வந்தமா வந்த வேலையைப் பார்த்தமான்னு ஓடணும். “

“என்னடா? வந்து வராங்காட்டியும் ஓடணும் கிற “

“பின்னே! உன் பாவனையே சரியில்லையே. இது கிராமம்டா! ஜாக்கிரதையாயிருக்கனும்.”

“சிவா! அவளை இன்னொரு முறை பார்தக்கணும்டா. பார்த்து  தேங்க்ஸ் சொல்லணும்டா”

“எதே! யாரைடா சொல்றே “

“அதான் வழியில் பார்த்தோமே ஒரு வனதேவதை! அவளைத்தான்”

“கடவுளே! நாம உயிரோட திரும்பிப் போகணும்னு  ஐடியா இல்லியாடா? “

மாறன் புன்னகைத்தான்.

“மயிலு! மனசே சரியில்லைடீ!”

“எனக்குந்தான்”

“உனக்குமே அப்படித்தானிருக்கா “

“ஆமாண்டி! எங்காத்தா அந்த ரெட்ட மண்ட மாவனுக்குத்தான் என்னை பரிசம் போடச்சொல்லி தாக்கீது வுடப்போவுதாம். அப்படியேதாச்சும் நடந்துச்சு இந்த பேச்சிமலை மேலேறி உசிரை விட்டுடுவேன்டீ”

“அடிப்பாவி! இதுக்கா மனசு நல்லால்லேன்னு சொன்னே “

“ஆமாம்! “

அவளை கேவலமாக மேலும் கீழுமாய் பார்த்தவள் உடட்டை சுழித்துக் கொண்டாள். 

“அடி என்னடி ஒஞ்சேதி! ஒம்மனசைப் போட்டு கொடையுது? “

“செம்பூ பூத்தது அச்சமாருக்குடி. நம்ம கொலசாமியை யாரோ வெட்டிப் போட்டுருக்காங்க. நீலி வேற ஏதேதோ சொல்லி மலையேறிப் போயிட்டா “

“இங்கனே பாரு பூவு ! 

ஆருங்கவலைப்பட்டு ஒண்ணும் ஆவப்போறதில்லே. வனப்பேச்சி ஆத்தா கைவுடமாட்டா. இதெல்லாம் நம்ம கையிலே இல்லே. ச்சும்மா மனசப்போட்டு அலட்டாதே. நாம கும்புடற தெய்வம் நமக்குத் தொணையா நிக்கும். நம்பிக்கைதாண்டி ஆனை பலம்”

கூறி முடிக்கவும் வானத்திலிருந்து நீர்ப்பொட்டு ஒன்று அவள் விழவும் நிமிர்ந்து பார்க்க சூல் கொண்ட கருமேகம் மெதுவே அவள் தலைக்கு மேலே நகர்ந்தது.

மனதுக்குள் நேற்று பார்த்த இளைஞன் நினைவில் வந்தான். நீலி குறி சொன்னது ‘அந்நியர்களை விடாதேன்னு இவர்களையா? இவங்களால் எந்தாய்  மண்ணு நாசமாகிடுமா? யார் இவர்கள்.? பாத்தா பெரிய வூட்டுப் புள்ளைங்க கணக்கா இருக்கு. எதுக்கு இங்கன வரனும்.? என்ன சோலியாயிருக்கும்’

‘’போனகெழமை கூட அந்த கொன்னைமரத்தாண்டே ஒருத்தன் மறைவா நின்னு நோட்டம் விட்டுட்டு இருந்தான். அவனைப் பாத்ததுமே மனசு  “கதுக்கு”ன்னு போச்சுது.இந்த ரெண்டு பேரைப் பாத்தா அப்படியொண்ணும் தோணலைதான்! ஆனா எந்தப்புத்துலே எந்த பாம்போ? 

இந்த கீழார (அடிவாரம்) பைனூருக்கு வந்தாலும் வந்துச்சு வாழ்வு இங்கே மலையெல்லாமில்லே ஆட்டம் காணுது. 

இந்த செம்பூ வேற பூத்துக் கெடக்கு . ஆத்தா வனப்பேச்சி! ஓ சனத்தை நீதான் காவந்து பண்ணனும் தாயீ ‘’

உள்ளிருந்து ஒரு வேண்டுதல் கேவலோடு வந்தது. 

வண்டாய் கேள்விகள் குடைய நடையை எட்டிப்போட்டு மயிலைத் தொடர்ந்தாள்.

மயிலு அங்கே காய்ந்து கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள். இவளும் சேர்ந்து கொண்டாள்.

“அடிப்பூவு! வெரசா போணும்டி! கீவானம் (கீழ்வானம்) கெறக்கமா இருக்குடி வானம் பொத்துட்டு ஊத்துமோ என்னமோ? போறும்! போறும் பொறக்குனது.  கட்டிக்கிடலாம். தலைமேல வையு புள்ளே. தாமசமா போனா ஆத்தா வேற கண்டமேனிக்கு வஞ்சுபுடும்.”

அவர்களிருந்த இடத்துக்கு நேர்க் கீழே அடிவாரத்தில் நேற்று கண்ட அதே கார் முகப்பில் விழுந்திருந்த விழுப்புண் தழும்போடு மெதுவே ஏறிக் கொண்டிருந்தது.

மேலிருந்து பார்த்த பெண்கள் இருவரும் விழி விரிய இதைப் பார்த்தபடியே நிற்க. அப்போதுதான் அது நடந்தது.

-தொடர்வாள்




What’s your Reaction?
+1
7
+1
7
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!