Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-4

4

 

எ…என்னையா …கூப்பிட்டான் ..? என் பெயர் இவனுக்கு தெரியுமா …? சஷ்டி மேலே நடக்க முடியாமல் நின்று திரும்பி பார்க்க , வாசல் படியில் திருமலைராயனும் , அவனுக்கு பின் சந்திராம்பிகையும் நின்றிருந்தனர். அவர்களை பார்த்ததும் சற்று முந்தைய அவர்கள் நெருக்கம் நினைவில் வர சஷ்டிக்கு உடல் முழுவதும் கூச்ச அலையடித்தது .

 

” எப்போது வந்தீர்கள் …? ஏன் சொல்லாமலேயே கிளம்புகிறீர்கள் …? ” திருமலைராயனின் கூர் விழிகள் தவிப்பாய் அலை பாய்ந்த அவள் விழிகளை அளந்தது .

 

” எனக்கு தெரியும் ராயர். நான் அவுங்களை உட்கார வைத்து விட்டுத்தானே உங்களுக்கு ஜீஸ் கொண்டு வந்தேன் …” சொன்னபடி படியிறங்கி வந்த சந்திராம்பிகை திருமலைராயனின் கையோடு தன் கை கோர்த்துக் கொண்டாள் .

 

பட்டென அவர்களிடமிருந்து முகம் திருப்பிக் கொண்ட சஷ்டி “சொப்னா” முன்னே போய் கொண்டிருந்தவளை குரல் உயர்த்தி அழைத்தாள். திரும்பி பார்த்த சொப்னா அண்ணனை கண்டதும் முகம் மலர்ந்து ” அண்ணா ” என ஓடி வந்தாள் .

 

” என்னம்மா இங்கே வருவதாக சொல்லவேயில்லையே …? “

 

” நீங்கள் மட்டும் சொல்லிவிட்டு வந்தீரகளா அண்ணா ..? ” செல்ல சிணுக்கத்துடன் பேசியபடியே அண்ணனை கிண்டலாக பார்த்தாள் .

 

” நான் சந்திராவின் அப்பாவிடம் ஒரு பிசினஸ் பேச வந்தேன் …”

 

” அப்போது என்னைப் பார்க்க வரவில்லையா ராயரே ..? ” இப்போது சிணுங்கியது சந்திராம்பிகை .

 

சஷ்டிக்கு இரண்டு பெண்களையும் கன்னம் பழுக்க அறைய வேண்டும் போலிருந்தது. இடம் , பொருள் இல்லாமல் என்ன கொஞ்சல் வேண்டிக் கிடக்கிறது …? தனது எரிச்சலை மறைக்காமல் முகத்தில் காட்டி ” போகலாமா சொப்னா ? ” என்றாள் .

 

” ஓ …உனக்கு உடம்பு சரியில்லையென்றாயில்லையா …? சரி போகலாம். அண்ணா நாங்க கிளம்புகிறோம். நீங்கள் உங்கள் பிசினஸை இருந்து நிதானமாக முடித்து விட்டு வாருங்கள் ” கேலியோடு இன்னமும் பிணைந்திருந்த திருமலை – சந்திராம்பிகை கைகளை பார்த்தபடி சொன்னாள் சொப்னா. அவளுக்கு சிறு சந்தர்ப்பம் கிடைத்தாலும் அண்ணனையும் , அண்ணியையும் கிண்டல் செய்தாக வேண்டும் .

 

” உடம்புக்கு என்ன …? ” திருமலைராயன் கேட்டது சஷ்டியிடம். அவள் திகைத்தாள். இந்த விசாரிப்பை எதிர் பார்த்திராதவள் என் உடம்புக்கு என்னவாக இருக்கும் …? என்ன சொல்லலாம் …? …கட்டை விரல் நகத்தை கடித்தாள் .

 

” மாப்பிள்ளை சைன் பண்ணிவிட்டீர்களா …?” தோட்டத்து பக்கமிருந்து வந்தபடி கேட்டார் சந்திராம்பிகையின் தந்தை .

 

” அது …இன்னொருநாள் பார்க்கலாம் மாமா. இப்போது நான் இவர்களுடன்  வீட்டிற்கு போகவேண்டும் .”

 

” ஏன் …என்ன அவசரம் மாப்பிள்ளை ? அவர்கள் காரில்தானே வந்திருக்கிறார்கள் …? அவர்களுக்கு அவசரமென்றால் கிளம்பட்டும். நீங்கள் இருந்து சைன் பண்ணிவிட்டு ….”

 

” இல்லை மாமா .என் வீட்டு பெண்கள் .கொஞ்சம் உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது அவர்களை தனியே அனுப்புவது சரியாக இருக்காது. நான் அவர்களை அழைத்து போகிறேன். நாம் பிசினஸை நாளை பார்க்கலாம் . சொபனா , மலர் போகலாம். வாங்க …” அவன் நடக்க , சந்திராம்பிகையின் கை அவன் கையை கடைசி விநாடி வரை பற்றியிருந்தது , அவன் நகர …நகர வேறு வழியின்றி விலகியது .




” நீங்கள் வந்த காரை டிரைவர் எடுத்து வரட்டும் .என்னுடன் வாருங்கள் …” சொல்லிவிட்டு தன் கார் பின் கதவை அவர்களுக்கு திறந்து விட்டு தான் முன்னால் ஏறினான் .

 

சந்திராம்பிகையும் , அவளது தந்தையும் பார்த்தபடி நிற்க இவர்கள் கிளம்பனர். அவர்கள் வீட்டு காம்பௌண்டை தாண்டியதும் , பெருமூச்சொன்றை விடுத்தான் திருமலைராயன்.  எதிலிருந்தோ தப்பி வந்த நிம்மதி அவனிடம் .

 

…” என்னண்ணா …என்னாச்சு …? ” விசாரித்த சொப்னாவிற்கான பதிலுக்கு அவனை ஆவலாக பார்த்தாள் சஷ்டி.
இவன் தப்பி வந்தது அந்த சந்திராம்பிகையிடமிருந்தோ ..?

 

” சந்திராவோட அப்பா. ஒரு புது பிசினஸிற்கு என்னை வறபுறுத்திக் கொண்டிருந்தார்.எனக்கு திருப்தியில்லாத பிசினஸ் அது .நல்லவேளை நீங்கள் வந்து காப்பாற்றி விட்டீர்கள் …”

 

அவனது பதில் சஷ்டிக்கு சங்கடம் கொடுத்தது. ஆக ..இவன் அவள் உடம்பை விசாரித்தது அந்த சந்திராம்பிகையை விட்டு விலகி வந்தது எல்லாவற்றிறகும் அந்த பிசினஸ்தான் காரணம். நான் வேறு ஏதோ நினைத்து …அவள் நினைவின் பிரதிபலிப்பாக சொப்னாவும் சலித்தாள். 

 

” என்னண்ணா எப்போதும் பிசினஸா …? நான் வேறு நினைத்தேன் …”

 

” என்ன நினைத்தாய் …? “

 

” அது என்ன பிசினஸ் …? ” அவனது கேள்விக்கு சொப்னா பதிலளிக்க விரும்பவில்லை சஷ்டி. தோழியின் நினைப்பு என்னவென்றிதான் அவளுக்கு தெரியுமே . எனவே திருமலைராயனின் மனதை பிசினஸ் பக்கம் திருப்பினாள் .கேட்டுவிட்டே அதிகப்பிரசங்கித்தனமாக கேட்டு விட்டோமா …என நினைத்தாள் .

 

திருமலைராயன் அப்படி எதுவும் நினைக்கவில்லை போலும் .” காரைக்காலில் ஒரு துறைமுகம் ஆரம்பிக்கலாமென சொல்கிறார் . இந்தோனேசியாவிலிருந்து இங்கே நிலக்கரி இறக்குமதி செய்து அதனை இந்தியா முழுவதும் அனுப்பலாமென்ற ஐடியா …”

 

” ஓ …அந்த பிசினஸ் உங்களுக்கு பிடிக்கவில்லையா ..? “

 

” எந்த பிசினஸையும் நான் தீர விசாரிக்காமல் உடனே ஆரம்பிப்பதில்லை. இரண்டு நாட்களுக்கு முன்தான் இதை பற்றி பேசினார். இன்று வீட்டிற்கு வரச் சொல்லி உடனே அக்ரிமென்ட் சைன் போட சொல்கிறார் .எனக்கு டைம் வேண்டுமில்லையா …? ” தங்கு தடையின்றி திருமலைராயன் விளக்கம் கொடுக்க , சொப்னா காதுகளை பொத்திக் கொண்டு கத்தினாள் .

 

” ஹையோ …இந்த பிசினஸ் பேச்சை நிப்பாட்டுங்களேன். டீ மலர் நீயுமாடி …? “

 

திருமலைராயன் தங்கையை திரும்பி பார்த்து புன்னகைக்க , சஷ்டியினுள் வேறு எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது. அந்த அக்ரிமெனடில் கையெழுத்து வாங்கத்தான்  சந்திராம்பிகை அ …அப்படி நடந்து கொண்டாளோ …?

 

ம்ஹூம் … காதல் கண்றாவி என்று ஏதேதோ பேத்திக்கொண்டு   அறைக்குள் சந்திராம்பிகையை அனுப்பியதே சொப்னாதானே …அதனால் இது சந்திராம்பிகையின் ப்ளானாக இருக்காது …தலையசைத்து தன்னை தானே மறுத்தபடி எதிரே ஏறிட்டவள் திடுக்கிட்டாள் .

 

கார் ரியர்வியூ மிர்ர் வழியாக அவளை அவளது தலையாட்டலை கவனித்தபடி இருந்தான் திருமலைராயன் .

 

” உன் ப்ரெண்டுக்கு உடம்புக்கு என்ன சொப்னா …? ” தங்கையிடம் விசாரித்தான். இன்னமும் தலை ஆடுகிறதா என்ன …முன் கண்ணாடியில் எட்டி தன் தலையை பார்த்து சந்தேகம் தீர்ந்தாள் .

 

” ஏன் அவளுக்கென்ன …? நல்லாத்தானே இருக்கிறாள். ஏன்டி உனக்கென்ன  வந்தது …? “

 

பாவி சரியான நேரத்தில் காலை வாரி விடுறாளே …சஷ்டி பல்லைக் கடிக்க …” தலைவலி …? ” கேள்வியாக கேட்டவன் திருமலைராயன். அவன் பார்வை இன்னமும் அவள் மேல்தான் இருந்தது .

 

” ஆ …ஆமாம் .த…தலைவலி ..” சஷ்டி நெற்றிப்பொட்டை அழுத்திக் கொண்டாள் .

 

” சீக்கிரம் போயிடலாம் …” காரை டாப் கியருக்கு மாற்றினான் .

 

அன்று இரவு முழுவதும் சஷ்டி தனது ஐ பாடில் நிறைய தகவல்கள் சேகரித்தாள். மறுநாள் விடியலுக்கு காத்திருந்தாள். மறுநாள் விடிந்ததும் ராயர் தனது வழக்கமான காலை ரவுண்டுக்கு இறங்கி வரும் போது தனது ஐ பாடுடன் காத்திருந்தாள் .

 

ஆனால் அன்று அவனுக்கு நிறைய பேரிடம் நிறைய பேச வேண்டியிருந்தது .ஊர் பஞ்சாயத்து ஒன்று , திருமண அழைப்பு ஒன்று , கோவில் கும்பாபிசேக விபரம் ஒன்றென அதிகப்படி வேலைகள் சேர்ந்து கொள்ள அவனருகேயே அவளால் நெருங்க முடியவில்லை .




சாப்பாட்டு நேரத்தை பாட்டியும் , அம்மாவும் ஏதோ வீட்டு பிரச்சனையுடன் எடுத்துக் கொள்ள , சஷ்டி அவள் பக்கமே திரும்பாத அவனது பார்வையை அடிக்கடி ஏறிட்டபடி மௌனமாக சாப்பிட்டு முடித்தாள். சாப்பாட்டை முடித்து வாசலுக்கு போனவனிடம் ஒரு தகப்பன் – மகன் பிரச்சனை வர வாசலில் நின்றபடி அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். இனி எங்கே …மதியம் வருவானோ …மாட்டானோ …நாளைதான் பேச முடியும்.  ஏமாற்றம் தாளாமல் சரிதான் போடா …என அவனை வைதபடி வீட்டிற்குள் திரும்பியவளை அவன் குரல் நிறுத்தியது.

 

” சொப்னா உன் ப்ரெண்டை கூப்பிடு “

 

என்னையா கூப்பிடுகிறார் …சஷ்டி சொப்னாவிடம் ஜாடை காட்டி கேட்டுக் கொண்டிருக்கும் போதே …

 

” உன்னையேதான் .இங்கே வா …” மீண்டும் வாசலிலிருந்து அவன் குரல். சஷ்டியின் கால்கள் தானாக வாசலுக்கு ஓட , கை மணிக்கட்டை திருப்பி வாட்சை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

 

” என்ன விசயம் ..? சீக்கிரம் சொல்லு …” இவன் என்னை கவனித்தபடிதான் இருந்திருக்கிறான் …சஷ்டியின் மனம் கனிந்தது. அவள் தன் ஐ பாடை எடுத்தாள் .

 

” நேற்று ஒரு தொழிலை பற்றி பேசிக் கொண்டிருந்தீர்களே ..அது சம்பந்தமாக நான் சில விபரங்களை நெட்டிலிருந்து எடுத்து வைத்திருக்கிறேன் .பார்க்கிறீர்களா ..? “

 

” ம் …டைம் இல்லையேம்மா .ஷார்ட்டா சொல்லிவிடேன் “

 

என்ன பேசுகிறார்களென எட்டிப் பார்த்த சொப்னா அவர்களது தொழில் பேச்சை கேட்டுவிட்டு தோள்களை குலுக்கிக் கொண்டு ஒதுங்கி  விட்டாள்.

 

” அ …அது அந்த நிலக்கரி இறக்குமதி அவ்வளவாக சரியாக வராது சார். பிசினஸ் ரீதியாக பார்க்க போனால் மிக நல்ல தொழில்தான் .ஆனால் நியாயமாக பார்த்தோமானால் இந்த நிலக்கரியால் அக்கம் பக்கம் கிராமங்கள் பாதிக்கப்படும். நீங்கள் அவற்றை கப்பலில் இறக்கி துறைமுகத்தில் குவித்து வைப்பீர்கள். அவை காற்றோடு கலந்து ஊர் முழுவதும் நிலக்கரி துகள்களாக பரவும். அதே போல் அவற்றை அள்ளும் போதும், இடம் மாற்றும் போதும் அந்த துகள்களை சுவாசிக்கும் மக்கள்  அனைவருக்குமே ஆபத்துதான். நாளடைவில் அப்பாவி கிராம மக்களின்  ஆரோக்கியத்தையே முடக்கும் தொழில் இது. இது வேண்டாம் திரு ப்ளீஸ் …”

 

பேசியபடி நிமிர்ந்த சஷ்டி திருமலைராயனின் பார்வையில் குழம்பினாள். எதற்காக இப்படி பார்க்கிறான் …? அவன் இவள் முகத்திலேயே பார்வையை பதித்தபடி ” ம் …” என்றான் .

 

வெறும் ” ம் ” மா …? என் பேச்சு காதில் ஏறியதா …இல்லையா …இந்த ” ம்” மை எந்தக் கணக்கில் சேர்க்க …? சஷ்டி குழப்பத்துடன் அவன் முகத்தை பார்த்தபடி நிற்க , திருமலைராயனும் அவளையேதான் பார்த்தபடி நின்றான் .

 

” ஹாய் ராயரே …குட்மார்னிங் …” இருவருக்கிடையே உற்சாக குரலொன்று நுழைந்து பட்டின் மெல்லிழையாய் இருவரிடையே உருவாகியிருந்த நூலிழையை அறுத்தது .

 

சந்திராம்பிகை அவளது தந்தையுடன் வந்து கொண்டிருந்தாள் . அவளது பார்வை வீட்டின் முன் வராண்டாவில் அருகருகே நின்று பேசியபடியிருந்த இவர்கள் இருவரின் மேலும் ஆழமாக படிந்தது .

 




 

 

 

What’s your Reaction?
+1
18
+1
13
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!