Serial Stories

அதிகாலை பூங்காற்று – 2

2

“இந்தக் கல்யாணம் நடந்துடுமா சித்தி..?” கவிதா நான்காவது தடவையாக இந்த கேள்வியை சரளாவிடம் கேட்கிறாள்..

“ம்..ம்.. பார்க்கலாம்..” இந்த ரீதியில்தான் இருக்கின்றன சரளாவின் பதில்கள்.. அவளுக்கே தெரியாத ஒன்றை, புரிபடாத ஒன்றை கவிதா கேட்டால் அவளும்தான் என்ன சொல்வாள்..?
அவளை பொறுத்தவரை ஒன்று மட்டும் நிச்சயம்.. இந்த திருமணம் நடக்க கூடாது.. நடந்து விடக் கூடாது என்பதில் மட்டும் அவள் மிக உறுதியாக இருக்கிறாள்..

“இங்க பாரு கவிதா உன்னை மாதிரியே எனக்கும் இந்த கல்யாணம் நடப்பதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை.. இதை நிறுத்த என்னென்ன வழியிருக்கோ அத்தனை வழியையும் நான் செய்வேன் கவலைபடாதே..”




“இப்போ என்ன செய்ய போறீங்க சித்தி..?”

ஆவலாய் கேட்டவளுக்கு பதிலாக அழுத்திக் கொண்ருந்த தனது போனை திருப்பி காட்டினாள்.. நாராயணசாமிக்கு அழைப்பு செல்கிறது என்றது போன்..

“இங்வே வரச் சொல்லியிருக்கிறேன்.. வருவான்.. அவன்தான் ஏதாவது ஐடியா சொல்லனும்..”

“இங்கேயா..? வீட்டிற்கு வரச் சொல்லிருக்கலாமே சித்தி..?” கவிதா முகம் சுளித்தாள்..

“நாராயணசாமி என் தம்பியாய் பிறந்துட்டானே… உங்க வீட்டுக்குள்ளே வருவதற்குத்தான் அவனுக்கு 144 போட்டு வச்சிருக்கீங்களே..” சரளாவிடம் கோபம் வந்துவிட்டிருந்தது..

நாராயணசாமி சரளாவின் கூடப்பிறந்த தம்பி.. அவனும் மதுரை ஹைகோர்ட்டில் வக்கீல்..

தங்கபாண்டியன் மாதிரி பெயருக்கு வக்கீல் கிடையாது.. முப்பது வயது நிரம்பும் முன்பே இப்போதே கோர்ட் வளாகத்தில் முக்கிய வக்கீலாக பிரபலமாக தொடங்கிவிட்டான்..

இரண்டே வருடம்தான் பெரிய வக்கீலிடம் ப்ராக்டிஸ் செய்தான்.. இப்போது மூன்று வருடங்களாக தனியாகத்தான் கேஸ் நடத்திக் கொண்டிருக்கிறான்.. பெரும்பாலானவை வெற்றி பெற்ற கேஸ்கள்தான்..

சரளாவை போன்றே அவனுக்கும் வாய் துடுக்கு அதிகம்.. அதனால் அன்னாசிலிங்கத்திற்கும், முருகலட்சுமிக்கும் அவனை அவ்வளவாக பிடிக்காது.. அக்காவை பார்க்க வந்தோமா.. கிளம்பினோமான்னு இருக்கனும் என்ற கட்டுப்பாட்டை மறைமுகமாக அவர்கள் வீட்டினுள் விதைத்து வைத்திருந்தனர்..

தங்கபாண்டியனுக்கோ.. ஒரே இடத்தில் ஒரே வேலையில் இருக்கும் மச்சானை விட, மாப்பிள்ளை முன்னேற்றத்தில் இருந்தால்.. அதையும் அக்காவும், தம்பியுமாக கிடைக்கும் வேளைகளில் எல்லாம் குத்திக் காட்டி கிண்டல் பேசினால், தங்கபாண்டியனுக்கும் தானாகவே நாராயணசாமியை பிடிக்காமல் போனது..
இது போன்ற தடைகளால் நாராயணசாமியால் நினைத்த நேரம் அன்னாசிலிங்கத்தின் வீட்டிற்கு வர முடியாது.. அவன் இதோ இப்போது போல் சரளா வீட்டை விட்டு வெளியே வரும் நேரம், தென்னந்தோப்பு, மாந்தோப்பு என அக்காவை பார்த்து பேசிவிட்டு போவான்..

அப்பா, சித்தப்பாவிற்கு நாராயணசாமி மேல் பெரிய அளவில் அபிப்ராயம் இல்லாவிட்டாலும், கவிதாவிற்கு அவன் மேல் சிறு ஈடுபாடு உண்டு.. அதற்கு காரணம் அவனது வக்கீல் தொழில்.. ஒரு நாள் அவள் சித்தப்பாவை பார்க்கவென கோர்ட்டுக்கு போயாக வேண்டிய சந்தர்ப்பத்தில், கோர்ட்டில் கேஸ் நடப்பதை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் எட்டி பார்த்த போது, அங்கே நாரயணசாமி ஒரு சாட்சியை கூண்டில் வைத்து தனது கேள்விகளால் லெப்ட் அன்ட் ரைட் வாங்கிக் கொண்டிருந்தான்.. அதனை ஆவென திறந்து வாயோடு பார்த்தாள் கவிதா..




கோர்ட்டில் கூடியிருக்கும் அத்தனை ஜனங்களுக்கிடையே அந்த சாட்சியை தனது அடுத்தடுத்த கேள்விகளால் திணறடித்த நாராயணசாமி அன்றைய பொழுது அவள் மனதில் ஹீரோ அந்தஸ்தில் இருந்தான்.. அதனை அவள் சரளாவிடம் பகிர்ந்து கொள்ள, சரளா தனது தம்பியிடம் சொல்ல.. நாராயணசாமிக்கும், கவிதாவுக்குமிடையே ஒரு மெல்லிய நடபுணர்வு ஏற்பட்டது..

இப்படியே போயிருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும்.. ஆனால் அப்படி நடக்கவில்லை.. நாராயணசாமி திடுமென ஒருநாள் அவர்களது கொய்யா தோப்பில் இது போல் சரளாவுடன் கவிதா வந்திருந்த போது தனது காதலை அவளிடம் சொன்னான்..
அப்போது கவிதா மனதில் சட்டென நினைவு வந்தது தனது தந்தைக்கு திருப்தியில்லாதவன் இவன் என்பதுதான்.. அவள் விழித்தாள்.. இவனை என்ன செய்வது..?

காதலை சொன்னால் ஒன்று கோப்படனும் அல்லது வெட்கப்படனும்.. இரண்டும் இல்லாமல் இதென்ன பார்வை..? நாராயணசாமிக்கு புரியவில்லை.. அவன் கஷ்டப்பட்டு சரளாவிடம் பேசி கவிதாவை வீட்டை விட்டு வெளியேகூட்டி வர வைத்து, இங்கே சரளாவை அப்பால் நகர்த்திவிட்டு, கவிதை போல் ஒன்றை முயற்சி செய்து வார்த்தைகளாக்கி காதல் சொன்னால் இவள் பாலை திருட வந்த பூனையை போல் பார்க்கிறாளே.. ஏன்..?

நாராயணசாமி தான் முதல் சொல்லிய கவிதையை மீண்டுமொரு முறை மனதிற்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டான்.. சரியானது போலத்தான் தோன்றியது..
“கவிதா..” மீண்டும் அவன் வாயை திறந்த போது..




“அப்பாவிற்கு தெரிந்தால் என்னைக் கொன்னுடுவாரு.. இதெல்லாம் அவருக்கு பிடிக்காது..” கவிதாவின் கருவிழிகள் அகல விரிந்து தரை மேல் சோழியாய் உருண்டன..
“எந்த அப்பாவிற்குத்தான் இதெல்லாம் பிடிக்கும்..” இன்னபிற வார்த்தைகள், அன்னபிற சமாதானங்கள் என மூன்று மாதங்கள் கழிந்த பின் தப்பில்லையோ.. என கவிதா இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருந்தாள்.. அதற்குள் அரிவாள் ஏந்தி வந்து நிற்கிறான் அந்த அய்யனார்..

கொய்யாத்தோப்பு காதல் சொல்லும் படலத்திற்கு பிறகு நாராயணசாமியை வீட்டிற்கு வெளியே சந்திப்பதையே தவிர்த்து வந்தாள் கவிதா.. வேறு வழியின்றி அவன் இரண்டு முறை வீட்டிற்கு வந்து அன்னாசிலிங்கத்தின் முறைப்பையும், முருகலட்சுமியின் கடுங்காப்பியையும் பெற்றபின் இந்த இல்ல படையெடுத்தலை நிறுத்திக் கொண்டான்..
கவிதாவை மதுரை கல்லூரியில் வந்து சந்திக்க முயல, அவள் கோப்பட, அவனை தூரத்தில் பார்த்த கவிதாவின் தோழி ஒருத்தி இவர் பெரிய வக்கீல் இல்ல..? உன் சொந்தமா இவரு..? என லேசான பொறாமை குரலில் கேட்க, கவிதாவின் மனதில் படபடவென மூன்று படிகள் ஏறி அமர்ந்தான் நாராயணசாமி..

கவிதாவை அழைத்து செல்ல அவர்கள் வீட்டு கார் வரும் முன் ஒரு ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் அது போன்ற பொழுதுகள் நாட்களின்.. வாரங்களின் அத்தி பூத்தல்தான் நாராயணசாமி.. கவிதாவின் சந்திப்புகள் பேச்சுக்கள் அப்படித்தான்..
இவை தவிர வேறு எங்கும் அவனுடன் நுனிப்பாதம் எடுத்து வைக்கவும் கவிதா சம்மதிக்கவில்லை.. நல்ல காதல் எனக்கு.. சலிப்புடனேயே கவிதாவுடனான காதலை நகர்த்திக் கொண்டிருந்தான் நாராயணசாமி.. இந்நேரத்தில் கவிதாவின் திருமண ஏற்பாடு..

இவர்கள் இருவரின் காதல் செடிக்கு நீர் ஊற்றிய சரளாதான் இப்போதும் தம்பியை வர வைத்திருக்கிறாள்.. அதோ.. தோப்பின் நுழைவு வாயிலில் நாராயணசாமி நுழைந்து கொண்டிருக்கிறான்..

அகல அகலமாக எட்டு வைத்து அவன் வேகமாக தன்னை நோக்கி வரும் வேகத்திற்கு கவிதாவிற்கு இல்லாத சந்தேகமெல்லாம் வந்தது.. என்ன கொள்ளை போகுதுன்னு இவன் இப்படி வர்றான்..? நகம் கடித்து யோசித்தவளுக்கு கொள்ளை போய் கொண்டிருப்பது தன் வாழ்வு என்ற பிரக்ஞை இல்லை..

“அங்கிட்டு ஏதோ.. சத்தம் கேட்குதே.. இந்த பள்ளிக்கூடத்து பசங்க தோப்புக்குள்ளே நுழைஞ்சிட்டானுங்கன்னு நினைக்கிறேன் மரத்தை மொட்டை அடிச்சிட்டு போயிடுவாங்க.. என்னனு பார்த்துட்டு வாறேன்..” சரளா நாசூக்காக நகர்ந்து போனாள்..
கவிதா பார்வையை சுழட்டி தோப்பை தாண்டி வெளியே போட்டாள்.. சிறிய தோப்புதான் அது.. இதோ இந்த வரிசை பத்து மரங்களை கடந்து வேலி தாண்டினால் அந்தப் பக்கம் கண்மாய்.. அப்படி போய்விட்டால் என்ன.. யோசித்து நின்றவளின் முன் வந்து நின்று “கவி..” என நாடகபாணியில் கை விரித்தான் நாராயணசாமி.




“எதுவாக இருந்தாலும் இரண்டடி தள்ளி நின்று பேசனும்..” ஒற்றை விரலாட்டி முதலிலேயே எச்சரித்து தானும் தள்ளி நின்றுகொண்டாள்..
அழுது கொண்டிருக்கும் காதலிக்கு ஆறுதலான அணைப்பை தர ஓடோடி வந்த நாராயணசாமி இந்த ஒதுக்கலில் திகைத்தான்.. பிறகு தன்னை சமாளித்துக் கொண்டு தொண்டையை செறுமிக் கொண்டு..

“கவிம்மா..” என ராகம் போல் இழுத்து ஆரம்பிக்க,“இங்கே பாருங்க மாமா நான் ஏற்கெனவே மூட் அவுட்ல இருக்கிறேன்.. இப்போ போய் கவிதை கிவிதைன்னு எதையாவது சொல்லி வைக்காதீங்க..”

நாராயணசாமியின் மூக்கு மீண்டும் உடைபட்டது.. அடுத்து என்ன செய்வது.. புரியாமல் அவன் தலையை சொறிய தொடங்கினான்.

“சீக்கிரம் சொல்லுங்க.. அம்மா தேடுவாங்க.. வீட்டுக்கு போகனும்..”அவளது அவசரப்படுத்தலில் தான் வந்த விசயமே அவனுக்கு மறந்து போனது..

“வ.. வந்து.. அ..அது.. நான்..” சாட்சிகளை பதில் பேச விடாமல் தனது கேள்விகளால் அடிப்பவன்தான்.. இங்கே இப்போது எந்த இடத்திற்கு எந்த எழுத்தை போடுவதென தெரியாமல் விழித்து நிற்கிறான்..

“அப்பா ஒன்று சொல்லிவிட்டால் மாற மாட்டார் அதனால்..”
“அதனால்.. நீ உன் அப்பா பார்த்து வைத்திருக்கும் அந்த அய்யனார் சாமியையே திருமணம் செய்து கொள்ள போகிறாயா..?” நாராயணசாமிக்கு இப்போது தான் வந்த விசயம் நினைவு வந்துவிட்டிருந்தது..

கவிதா பதில் சொல்லாமல் தலை குனிந்தாள்.. பிறகு மென்குரலில்.. “எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலையே..” என்றாள்..

“நீ ஒண்ணும் செய்யாமல் இருந்தாலே போதும்.. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நானும், அக்காவும் பேசி நீ என்ன செய்ய வேண்டுமென்பதை சொல்கிறோம்..”
பேச்சோடு பேச்சாக நாராயணசாமி தன்னை நெருங்கி வருவதை உணர்ந்த கவிதா தோப்பின் எல்லையை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்..




“சித்தி அந்தப் பக்கம் இருக்கிறாங்க மாமா.. அவுங்க கூட போய் பேசி, செய்ய வேண்டிய விபரங்களை எனக்கு சித்தியிடமே சொல்லி விடுங்க.. நான் அவுங்க கிட்ட கேட்டுக்கிறேன்.. இப்போ நேரமாயிடுச்சு வீட்டுக்கு போறேன்..”

விறு விறுவென நடந்து தோப்பை தாண்டி வெளியே வந்ததும்தான் கவிதாவால் சுதந்திர மூச்செடுக்க முடிந்தது.. அக்காவும்.. தம்பியுமாக எதையும்.. எப்படியும் பேசுங்க.. எனக்கென்ன.. உதட்டை சுழித்துக் கொண்டாள்..

மணல் ஓடிய கண்மாய்குள் இறங்கி நடந்தாள்.. இப்படி கரையை ஒட்டி நடந்தால் சீக்கிரமே வீட்டிற்கு போய்விடலாம்.. மாலை வெயில்லும் சூடு பரப்ப அடர்ந்து கிடந்த வேலி மரங்களூடே நடந்தாள்..

சரியான மழை பொழிவோ, முறையான நீர்த்தேக்க திட்டமோ இருந்திருந்தால் இப்படி இந்த கண்மாயினுள் இறங்கி நடந்து கொண்டிருக்க முடியாது.. நிறைந்து நீர் ஓடவில்லையென்றாலும், ஓடையாகவேனும் நீர் இருந்திருக்கும்..

கவிதா கழுத்தை திருப்பி சற்று தூரத்தில் இருந்த மதகை பார்த்தாள்.. மூன்று பெரிய வட்டங்களாய் மரக்கதவுகளோடு இருந்தது அந்த மதகு.. பக்கத்து ஊர் ஏரியிலிருந்து தண்ணீர் இந்த மதகு வழியாகத்தான் அவர்கள் ஊருக்குள் வருமாம்.. அவள் கேள்விப்பட்டதுதான்.. அவள் பார்க்க இந்த கண்மாயில் மணல்தான் ஓடுகிறது.. கருவேலம்தான் முளைத்து கிடக்கிறது..

இந்தக் கண்மாய்க்கு மீண்டும் தண்ணீர் வர வேண்டும் என்பதுவும்..

அன்னாசிலிங்கத்திற்கு அவளது திருமணத்திற்கான காரணங்களில் ஒன்று.. அப்படிச் சொல்லித்தான் முருகலட்சுமி, தங்கபாண்டியன் வாய்களை அடைத்துக் கொண்டிருந்தார் அவர்..ஊர் ஜனங்களுக்காக என் வாழ்க்கையை அவர் இஷ்டம் போல் மாற்றுகிறாரே.. கவிதா வருத்தமாக நினைத்தபடி அந்த மதகை நோக்கி நடந்தாள்.. இத்தனை வருடங்கள் இந்த ஊரில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் அந்த மதகின் அருகே போய் அவள் பார்த்ததில்லை.. இன்று ஏனோ அதனை அருகில் போய் பார்க்க வேண்டும் போல் தோன்ற அதனருகில் போனாள்..




மதகின் நீர் வரும் பாதை அடைத்து கருவேலமும், கள்ளிச் செடிகளும் மண்டியிருந்தன.. அவற்றின் அடர்த்திக்கிடையே தெரிந்த மதகின் மரக்கதவுகள் கவனத்தை இழுத்தன.. இந்தக் கதவுகளின் வயது என்ன இருக்கும்..? வெள்ளைக்காரன் காலத்திற்கும் முந்தையது என அப்பா சொன்ன நினைவு வர, ஓர் நூற்றாண்டு பழமையானதா இக்கதவுகள்..?
இந்நினைவு உள்ளுக்குள் ஓர் சிலிப்பை தோற்றுவிக்க, புதர்களை ஜாக்கிரதையாக தாண்டி மதகருகே போய் அந்த கதவுகளை கைநீட்டி தொட்டு பார்த்தாள்.. அதன் அருகே போய் மெல்ல தலை சாய்த்துக் கொண்டாள்..

“அப்படி எனக்கு இந்த கண்ணாலம் வேண்டாங்கறேன்..” சர்ப்பத்தின் சீறலாய் வந்த குரல் அந்த மதகின் மறுபுறமிருந்தது வந்தது..

“அப்படி சொல்லாதடா அய்யா..” எனக் கெஞ்சுதலாய் ஒரு பெண் குரல்..
இரு குரல்களையும் கவிதாவிற்கு நன்கு அடையாளம் தெரிந்தது.. அவளால் மறக்க முடியாத குரல்கள் அவை இரண்டும்..




What’s your Reaction?
+1
15
+1
14
+1
2
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!