Serial Stories பூம்பாவை

பூம்பாவை-15 (நிறைவு)

பூம்பாவை -15

ப்ரதாப்பாக நடிக்க வந்தவனை மண்டையில் அடித்துக் காலி பண்ணிவிட்ட தெனாவெட்டில் கொஞ்சம் அசால்ட்டாக இருந்து விட்டதையும், அவன் உடல் மர்மமான முறையில் காணாமல் போனதையும் பயந்து கொண்டே சாலமனிடம் விக்ரம் சொல்ல, 

“அடேய்..ய்! உன்னை என் மகன்னு சொல்லிக்கவே வெறுப்பா இருக்கு! ஒரு வேலையையாவது ஒழுங்கா செய்றியா? இனி நானே அங்க வந்தாதான் ஒழுங்கா வேலை நடக்கும். ப்ரதாப்போட கார் ரிப்பேர் ஆனதால் தான் அவரால இன்னிக்கு வர முடியல. நாளைக்கு அவர் வர்றதுக்குள்ள நானும் வந்துடுவேன். ஆமா….ப்ரதாப் பத்தி அங்க வந்தவனுக்கு எப்பிடி தெரிஞ்சுது? உன்னோட ஃப்ரண்ட்ஸ்னு சொல்லிகிட்டு அட்டையாட்டம் உன்னை ஒட்டிகிட்டுத் திரியறானுகளே வெட்டிப் பசங்க…அவங்க யார்கிட்ட யாவது உளறி வெச்சானுங்களா?”

 “இல்லை டாட்!! அவனுங்கள கேட்டுட்டேன். எனக்கும் அதுதானே புரியல. நல்லவேளையா ப்ரதாப்போட  ஃபோட்டோவை நீங்க வாட்ஸேப் பண்ணவும், அவன் நாந்தான் ப்ரதாப்னு வந்து நடிக்கவும் சரியா இருந்துது. நான் ப்ரதாப்பை பாத்ததில்லைங்கறத கூடத் தெரிஞ்சு வெச்சிருக்கான்.”

“சரி..சரி..நாளைக்கு நேர்ல பேசலாம்.”

இந்த உரையாடல் முழுவதையும் தங்கள் வீட்டிலருந்தபடி கேட்டுக் கொண்டிருந்தார்கள்  மாறனும்,நஞ்சனும். ப்ரதாப் வேடத்தில் சிவா, விக்ரம் வீட்டுக்குப் போனபோது,யாருமறியாமல் அங்கிருந்த டேபிளின் கீழே ஒரு அதி நவீன மைக்ரோ ஃபோனை(bug) ஒட்ட வைத்திருந்தான்.

நஞ்சனும் சளைத்தவனில்லை. ரஞ்சனாக உரு மாறியதிலிருந்து விக்ரமையும்,அவன் சகாக்களையும் ஃபாலோ பண்ணுவதும், அவர்கள் பேசுவதை மொபைல் ஃபோனில் ரெக்கார்ட் செய்து மாறனிடம் தருவதும் அவனுடைய வேலை. இரண்டே நாட்களில் மொபைலில் மாறனிடம் பேசவும், மற்றவர்கள் பேசுவதை ரெக்கார்ட் செய்யவும் கற்றுக் கொண்டதை சிவாவும்,மாறனும் வியப்போடு பார்த்தார்கள். ப்ரதாப்பின் வருகையும், விக்ரம், ப்ரதாப்பை பார்தத்தில்லையென்ற விவரமும் நஞ்சன் மூலமாகத்தான் தெரிந்தது மாறனுக்கு. 

சிவாவுக்கு இன்னும் முழுசாக நினைவு திரும்பாததால், என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான் மாறன். 

“தொரை..எங்க மக்களைக் காப்பாத்த நான் எம்பட உசுரைக் கூட குடுப்பேன். என்ன வேலைன்னாலும் சொல்லு தொர.”

“நஞ்சா…உன்னோட உயிர் போயிடக்கூடாதுன்னுதானே உன்ன ரஞ்சனா மாத்தினேன்.  நீ மலைசாதிக்காரன்னு அந்தக் கொலகாரப்பசங்களுக்குத் தெரியக்கூடாதுங்கறதுக்காகத்தான்.

நாளைக்கு அந்த சாலமனையும் ப்ரதாப்பையும் எப்படி மடக்குறதுன்னுதான் யோசனையா இருக்கு..ம்.ம்”




“அதுக்கும் ஒரு வழி அகப்படாமயா போகும். நீ கவலப்படாத தொர”

நஞ்சனின் பேச்சில் ஓரளவு சமாதானமானவனாக படுக்கப் போனவனை ப்ரம்ம முகூர்த்தத்தில் எழுப்பி விட்டது விக்ரமின் குரல்.

“டாட்..!  என்ன இது இந்நேரத்துக்கு வந்திருக்கீங்க? “

“நேத்து உன்னோட பேசுனப்புறம் எனக்கு இருப்பே கொள்ளல. அதான் ராத்திரியோட ராத்திரியா யாருக்கும் தெரியாம கெளம்பி வந்துட்டேன். விடிஞ்சதும் நான் மலைக்குப் போறேன். அந்த ஜனங்கள  பாக்கணும்கிற ஆசைலதான் ப்ரதாப் இங்க வந்திருக்கறதா சொல்றான். ஆனா அவனுக்கு வேற ஏதாவது உள்நோக்கம் இருக்குமோன்னு இப்ப எனக்கு சந்தேகமா இருக்கு. அதுவுமில்லாம இன்னைக்கு கார்த்திகை கடைசி நாள்.அந்தக் காளான் எப்படி இருக்குனு பாக்கணும். ப்ரதாப்  வர்றதுக்குள்ள நான் போய் அந்த ஜனங்களுக்குன்னு எவனாவது நாட்டாமை இருப்பான்ல. அவனுக்கு குடுக்கறதக் குடுத்து எங்கைல போட்டுக்கறேன். இப்பிடி சிங்கிள் தேனடைக்காக மெனக்கெடறது அட்டர் வேஸ்ட். லம்ப்பா தேனடை கிடைக்க வழி பண்ணனும்”. பரபரத்தார் சாலமன்.

“டாட் அவங்க தலைவனைப் பாக்கறதுக்கெல்லாம் வெளியூர் காரங்கள அனுமதிக்க மாட்டாங்க. அவங்க பணத்துக்கு மயங்கற ஆளுங்களும் கிடையாது.புது மனுஷங்களப் பார்த்தாலே டென்ஷனாயிடுவாங்க. நீங்க ரொம்பவே அவசரப்படறீங்க”

“நேரத்த வீணாக்காம நினைச்சத உடனே செயலாக்கணும்டா. அதனாலதான் உங்கப்பன்  ஒரு மல்ட்டி மில்லியனர்.” தற்பெருமை தலைக்கேற

 சாலமன் மலைக்கு கிளம்பு முன்பாகவே, மாறனின் திட்டப்படி நஞ்சனும் , தன் பழைய தோற்றத்திற்கு மாறி மலைக்குப் போய்ச் சேர்ந்தான்.

பறவைகளின் பூபாள ராகங்கள் தவிர அமைதியாக இருந்த மலைக்கிராமத்தில் சாலமன் கண்களுக்கு யாரும் தட்டுப்படவில்லை. தீவிர அலசலுக்குப் பின் தலையில் பலாப்பழத்தைச் சுமந்து கொண்டு வந்த மலைவாசியிடம், 

“இந்தாப்பா ..உங்க தலைவர் எங்க இருப்பார்? நான் அவர பாக்கணும்.”

“நீங்க யாருங்க தொர?..இந்நேரத்துக்கு மலையேறி வந்திருக்கறதப் பாத்தா ஏதாச்சும் அவசர சோலியாட்டம் தெரியுதுங்களே. எங்க முதுவங்கிட்ட என்ன சோலிங்க? வெளியாளுகளோட முதுவனுக்கு  பேச்சே கெடையாதுங்க. நாங்களே அவர எப்பவாச்சும்தான் பாக்கறது.”

‘என்னவோ ப்ரைம் மினிஸ்டர் கிட்ட அப்பாயிண்ட்மென்ட் வாங்கற மாதிரி பில்டப் குடுக்கறான். எல்லாம் நம்ம நேரம்‌.இருக்கட்டும்..கொஞ்சநாள்ல நான் யாருன்னு காட்டறேன்.”நான்” என்ற அகம்பாவம் உள்ளிருந்து தெறித்தது. 

“அவசரந்தான்.உங்க மலைல இருந்து ஒரு அபூர்வமான பொருள் வேணும். உங்க தலைவர் அனுமதியில்லாம எடுத்துக்கறது தப்பில்லையா? கொஞ்சம் தயவு பண்ணுப்பா. “நான்” போலியாகப் பவ்யம் காட்ட..

“அடடா அப்பிடிங்களா சேதி..வாங்க நாங் கூட்டிப் போறேன்.”

முதுவனைப் பார்த்துப் பேசி, பயங்காட்டி, பணத்துக்குப் பணிய வைத்த நேரம் விக்ரம், ப்ரதாப், மற்றும் நண்பர்களோடு வந்து சேர, 

ஐவரையும் சுற்றி வளைத்து காட்டுக் கொடிகளால் கட்டி ப்ரம்மாண்டமாக வளர்ந்திருந்த ஒரு வேங்கை மரத்தோடு பிணைத்தார்கள், ஆளுக்கொரு ஆயுதங்களோடு வெறி கொண்ட வேங்கைகளான பேச்சிமலைக் குடிகள்!

தனக்கு வழிகாட்டியாக வந்தவன் அந்த மக்களுக்கு முன்னால் கோபாவேசமாக நிற்பதைப் பார்த்த சாலமன், கேவலம் ஒரு படிக்காத பாமரனால் தான் ஏமாற்றப்பட்டு விட்டதைத் தெரிந்து கொண்டவன்..

கண்களில் அனல் தெறிக்க…

“டேய் தற்குறிப் பசங்களா! நான் யாருன்னு உங்களுக்குத் தெரியாது. ஒரு ஃபோன் பண்ணா போதும் உங்களை இருக்கற இடம் தெரியாம ஆக்கிடுவேன்.. எங்க கட்டை அவுத்து விடலேன்னா உங்க கதி அதோகதிதான்.”

எகிறினான்.

” எங்க சனங்கள எதுக்காக கொன்னீங்க..அத மொதல்ல சொல்லிப் போடுங்க..இல்லைனா இவங்க கையாலதான் உங்களுக்கு சாவு!”

நஞ்சன் ருத்ர மூர்த்தியாக..

“சொன்னா விட்ருவீங்களா?” விக்ரம் பயத்துடன் கேட்க..

“வுடாம உங்கள் இங்க வெச்சு நாங்க என்ன பண்ணப் போறமுங்க? வெளியாளுக எங்க கிராமத்துல ராத்தங்கக் கூடாதுங்களே! நாங் கேட்டதுக்கு பதில சொல்லிப் போட்டீங்கன்னா கெளம்பிரலாம்”

சாலமன் ப்ரதாப்பை பார்க்க..வெளுத்துப் போய், நாக்கெல்லாம் உலர்ந்து போன ப்ரதாப் தண்ணீர் வேண்டுமென சைகை காட்ட, ஒரு சுரைக் குடுக்கையில் தண்ணீர் கொண்டு வந்து வாயில் ஊற்றினாள் அங்கிருந்த பெண்ணொருத்தி.

திக்கித் திக்கிப் பேச ஆரம்பித்தார் ப்ரதாப். 

“உங்க மலைல கார்த்திகை மாசத்துல முளைக்கிற காளானை நீங்க சாப்பிடறதால உங்க இரத்ததுல சில அபூர்வமான சத்துக்கள் உருவாகியிருக்கு. அதுல குறிப்பிட்ட ஒரு சத்தை அதை நாங்க ஸீரம்னு சொல்லுவோம். அதை பிரிச்செடுத்தா அது பலவிதமான நோய்களை குணமாக்கற சக்தி படைத்தது. அதோட மதிப்பு பலகோடி பெறும். அதுக்காகத்தான் உங்க மக்களை நாங்க கடத்தி..அவங்க இரத்தத்தை!”

ப்ரதாப் சொல்லி முடிப்பதற்குள்.

ஆமா…இந்த விசியம்லாம் உனக்கெப்பிடிய்யா தெரிஞ்சுது?

  

பூவு எகிற..




“போன வருஷம், கார்த்திகை மாசம் ஓய்வுக்காக நான் புதுசா ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போகணும் னு ஆசைப் பட்டு ,தேடிப் பாத்தப்ப பேச்சிமலை பத்தி தெரிஞ்சுது. உடனே கிளம்பி இங்க வந்தேன். அப்பதான் உங்காளு ஒருத்தன் காளானைப் பத்தி எங்கிட்ட ரொம்பப் பெருமையா பேசுனாப்புல. அந்தக் காளானை சாப்பிடுறதால எங்களுக்கு புது ரத்தம் ஊறி, உடம்பு முறுக்கேறி நாங்க பலசாலிகளா இருக்கோம். எந்த வியாதியும் எங்களை அண்டாதுனு சொன்னான். நான் ஆராய்ச்சியாளன்கறதால அவங்கிட்ட 

‘உனக்கு நெறையா பணம் தர்றேன். உங்காளுகள்ல ரெண்டு மூணு பேரை என்னோட ஆராய்ச்சிக்காக நான் கடத்திகிட்டுப் போக உதவி பண்ணு’னு கேட்டேன். அவன் பயங்கரமா கூச்சல் போட்டு என்னைத் தாக்க ஆரம்பிச்சான். எனக்கு வேற வழி தெரியாம அவம்மேல ஆசிட்டை…அதான் திராவகத்தை ஊத்தி, அவன் கதறக்கதற ஒரு பாறாங்கல்லை அவன் தலைல போட்டு கொன்னுட்டேன்.” ப்ரதாப் சொன்னதைக் கேட்டு..

கூடியிருந்த கூட்டம் அவனைத் தாக்க முனைய.. நஞ்சன் அவர்களை அடக்கினான்.

“அடப்பாவி! கார்க்கோடனைக் கொன்னது நீதானாடே! உம்பட பணத்தாசைக்கும் ஆராச்சிக்கும் நாங்கதான் கெடச்சமா? ஏதோ அடுத்தவன் தோட்டத்துல கறிகாய் பொறிக்கறாப்புல எங்க மனுசங்க குருதியக் குடிச்சு உசுர எடுப்பீகளா? நீங்க மனுசப் பிறவிகளா இல்ல ரத்தக் காட்டேரிகளா?

மயிலின் வெளுத்துப் போன உயிரற்ற உடல் மனக்காட்சியில் தெரிய..

பத்ரகாளி போல ஆவேசமாகக் கத்தினாள் பூம்பாவை.

“கொஞ்சம் பொறுத்துக்க புள்ள..அவுக சொல்லி முடிக்கட்டும்.”

அவ்வளவுதான் என்பது போல ப்ரதாப் மௌனமாக‌‌..

“தொரை..அவுக சொன்ன வெவரம்லாம் போதும்னா வெளிய வா தொரை” 

நஞ்சன் அழைக்க வீடியோ கேமராவும் கையுமாக மலைசாதி கூட்டத்துக்குள் ளிருந்து வெளிப்பட்டான் மாறன்.

“டேய் நீயா ? உன்னோட வேலைதானா இதெல்லாம்? டாக்டர் வேலைய விட்டுட்டு டிடெக்டிவ் வேலைக்கு வந்துட்டியா? உன்னை என்ன செய்யறேன்னு பார். உன்னோட உயிர் எங்கையாலதான் போகப்போகுது தெரிஞ்சுக்க” விக்ரம் உறும.

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராஜா. ரொம்ப அலட்டிக்காத . மொதல்ல உன் உயிரைக் காப்பாத்த முடியுமானு பாரு!” என்ற மாறனிடம்

“ஆமா தொரை இவுகள எல்லாம் மலையிலிருந்து உருட்டி விட்டாக்க என்ன?”

  

“அச்சச்சோ..எங்களை விட்டுருங்க..இனிமே உங்க பக்கம் தலவச்சு கூடப் படுக்க மாட்டோம் “

விக்ரமின் அல்லக்கைகள் அலற…அப்போதுதான் அஸ்தியில் ஜுரம் கண்டது மற்ற மூவருக்கும்.

“உண்மைய சொன்னா விட்டுடுவேன்னியே! நாங்க உடனே ஊருக்குப் போகலேன்னா எங்களைத் தேடி இங்க போலீஸ் படையே வந்துரும் ஜாக்ரதை “

பயங்காட்டினான் சாலமன்.

“உங்களைத் தேடி  வர யாரும் இல்லைங்கறது மட்டுமில்ல.. நீங்க இங்க வர்றதுகூட யாருக்கும் தெரியாதுங்கறதும் எங்களுக்கும் தெரியும். பணத்துக்காக எதையும் செய்யத் துணிஞ்ச உன்னை விட்டு உன் மனைவி போயிட்டாங்க. இதோ இந்த ஆராய்ச்சியாளருக்கு சொந்தம்னு சொல்லிக்க காக்கா,குருவி கூட இல்லையாமே! ஆனா பணம் னா  மட்டும் கழுகாப் பறப்பீங்களாமே”

பாவிகளா! ரத்தப்பூவையா பறிக்க வந்தீங்க..

ப்ரதாப் முறைக்க..

“எனக்கெப்பிடி தெரியும்னு பாக்கறீங்களா…எல்லாம் இவங்க பேசிகிட்டதுதான்”

மொபைலில் வாய்ஸ் ரெகார்டரை ஓட விட…விக்ரமும்,ஃப்ரண்டுகளும் பேசிக் கொண்ட உரையாடல்கள் கேட்டது.

என்னோட ஃப்ரண்ட் ப்ரதாப் வேஷத்துல உங்க வீட்டுக்கு வந்ததே “பக்”கை பொருத்ததான்.”




“தண்டம்..தண்டம்” சாலமன் மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டார். கைகள் தான் கட்டப்பட்டிருக்கே!

“தொரை இவிக கிட்ட நமக்கென்ன பேச்சு.. ஒரேயடியா போட்டு தள்ளிர்றேன்.”

“வேண்டாம் நஞ்சா‌..ஆண்டவன் படைச்ச உயிரைப் பறிக்கும் அதிகாரம் நமக்கில்லை.”

“அப்பறம்?”

“ம்ம்…இவங்கள போலீஸ்ல ஒப்படைச்சா அவங்களையும் பணத்தால சரி பண்ணிடுவாங்க. கோர்ட்,கேஸ்னு போனா உங்களைப் பத்தின விவரம் வெளியுலகத்துக்குத் தெரிஞ்சு இந்த எட்டப்பனுக மாதிரி வேற கெட்டப்பனுக கெளம்பி வந்துருவாங்க. இவங்க உயிரோட இருக்கணும் ‌.ஆனா நடைப்பொணமா வாழணும். அதுக்கு ஏதாவது வழியிருக்கா?”

“புரிஞ்சிருச்சு தொரை..! இங்கன ஒரு பச்சிலை இருக்கு. அத்தப் புளிஞ்சு சாறை வாய்ல ஊத்திட்டா‌..அவ்வளவுதான்!

தான் யாரு..எவருன்னு எதுவுந் தெரியாது. பழசெல்லாம் மறந்து உடுப்பைக் கிளிச்சிகிட்டு, புத்தி பேதலிச்சு, சாகுற வரை இங்கனயே திரிய வேண்டியதுதான்.. என்ன சொல்றீக பாட்டையா?”

முதுவன் சம்மதிக்க ஒரு கூட்டம் பச்சிலை பறிக்க ஓட…அங்கே ஒரே ஆரவாரம் கூச்சல்!

அந்தக் கூச்சலுக்கு நடுவே‌..

“ஐயோ டாடீ” என்ற கூக்குரலும்

“விக்கி ‌..விக்ரம்”  என்று சாலமன் விக்கி விக்கி  அழும் குரலும் கேட்க…

மாறன் விக்ரமிடம் ஓட,அதற்குள்

விக்ரமின் நடு மார்பில் பூம்பாவை  குத்தீட்டியால் ஆழமாகக் குத்தியிருந்தாள், ரத்தம் கொப்பளித்துக் கொட்டியது.

“ஐயோ ஏஞ்சல்! என்ன காரியம் பண்ணிட்டே?”

“தொரை…எம்மயிலுக்கு செஞ்சு குடுத்த சத்தியத்தை நிறைவேத்திட்டேன். எம்மயிலு இனி சந்தோசமா ஒறங்குவா!”

இந்தாய்யா ஒம்மவனோட ரத்தப்பூ..அள்ளி சூடிக்க!”

அப்பாடி…. போட்ட சபதத்தை நிறைவேற்றி விட்ட திருப்தி அவள் முகத்தில்!

பச்சிலைச் சாறை மற்ற நால்வருக்கும் கதறக் கதற வாயில் ஊற்றி விட்டு, பச்சிலை சாறு வேலை ஆரம்பிக்க,முதுவனிடம் வந்தார்கள்.

“பாட்டா…இத்தினி வருசமா பேச்சிமலைல நடக்காத பாவகாரியம் என்னால நடந்துருச்சு‌.   அதுக்குண்டான தண்டனைய எனக்கு குடுத்துரலாம்ல” பாவை கேட்க,

முதுவனிடமிருந்து என்ன தீர்ப்பு வரப் போகிறதோ என்ற அச்சத்தில் அங்கே மரண அமைதி நிலவியது.

“தண்டனை குடுத்துட வேண்டியதுதான்”

முதுவன் வாசமல்லியைப் பார்க்க அவள் ஓடிப்போய் ஒரு வண்ணமயமான நறுமண மாலையை எடுத்து வந்து பாவையின் கழுத்தில் அணிவித்தாள்.

“பூவு .. நம்ம மலைசாதிப் பொண்டுகள்ல நீ ரொம்பவே அறிவானவ,தகிரியமானவங்கறத காமிச்சிட்ட. அதுவும் இந்த தம்பி உன்னப் பத்தி சொன்னது ல எனக்கு மேலெல்லாம் சிலுத்துப் போச்சு புள்ள. மத்த பொண்டுகளெல்லாம் ஒன்னப் பாத்து கத்துக்கணும் . உன்னோட இஷ்டத்துக்கு இந்த மலைக்காடு பூரா பட்டாம்பூச்சியா பறந்து வா புள்ள”

“பூவ வூடு கட்டணும்னு சொன்னியே பாட்டா.. இப்ப இப்படி சொல்ற..சாமிக்குத்தமாகிடாதா?”

ஒரு மலைசாதிப்பெண்  ஊடால  புக ..

“ஆமா அப்ப சொன்னேன். அதுவும் கடம்பன் கேட்டுகிட்டதால!”

“ஆ..! கடம்பனா?”

கூட்டமே அதிர்ச்சியில் வாயைப் பிளந்தது.

ஆமா மக்களே! கடம்பன் சாகுறதுக்கு மொதநாள் எங்கிட்ட வந்து ..

‘மயிலு, ஊமையன், நஞ்சனோட  தாத்தன் செத்ததெல்லாம் வனப்பேச்சியோட கோவத்துனால இல்ல..! வெளியாளுங்களோட சூதுனாலதான். இந்த விசியம் பூவுக்கும் தெரிஞ்சு அவங்களப் பழி வாங்கத் துடிக்கறா. அந்தப் பாவிங்களால அவளுக்கு ஏதும் ஆவத்து வந்துடக் கூடாது. அதனால சாமி உத்தரவுன்னு சொல்லி அவளுக்கு வூடு கட்டிருங்க.

 நாம் போயி அவுகளுக்குத்  தக்கன நடிச்சு விவரம் தெரிஞ்சுகிட்டு அவங்கள இங்க கொணாந்துர்றேன். பொறவு வனப்பேச்சி அவுகளைத் தண்டிக்கட்டும். 

மறுக்கா சாமி உத்தரவுன்னு சொல்லி பூவ வெளில கொணாந்துட்டா  நான் அவளுக்குப் பரிசம் போட்டு கண்ணாலங் கட்டிக்கறேன் பாட்டா ‘னு கெஞ்சுனான். அதனாலதா அப்படி சொன்னேன்..! ஆனா இந்த தொரையால  வூடு கட்டத் தேவையில்லாம போயிடுச்சு.

நம்ம வனப்பேச்சி சொன்னதெல்லாம் சரியா நடந்து போச்சு.

வேலக்குட்டா! கடம்பன் தான் ஒன் கொலக்கொடியை காவந்து பண்ணியிருக்கான். நம்ம மலைசாதி இனிமே எவன் வந்து ஆசை காட்டினாலும் மயங்கிடப்படாது. அந்நியனால தான் இத்தனை ஆவத்தும். 

அப்புறம் இந்த தொரை  நமக்கு நெறய நல்லது பண்ணியிருக்காரு. அவருக்கு நாம கவுரதை செய்யோணும் மக்களே”

முதுவன் சொல்ல,  பேச்சி மலையில் பழைய ஆனந்தம் திரும்பத் தொடங்கியது. அதற்கு காரணமாயிருந்த நன்மாறனை கொண்டாடிக் குதூகலமடைந்தது அந்த பாமர மலைசாதிக் கூட்டம். 

பூம்பாவை, நன்மாறன் பெயர்கள் ஏதோ மந்திர உச்சாடனம் போல நீண்ட நாட்கள் அந்த மலைசாதி மக்களால் உச்சரிக்கப்பட்டது.

நிறைவுற்றது.




 

What’s your Reaction?
+1
9
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!