Serial Stories பூம்பாவை

பூம்பாவை-1

1

அதிகாலையின் இளங்குளிர் சிலீரென்க..மலை முகடுகளில் மூடுபனி இறங்கி வானம் தொட்டுவிடும் தூரம் போல் காட்டிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் பேச்சியாறு மலையருவியாய் சலசலத்துக் கொண்டிருந்தது.

அருவியின் ஓரம் வேங்கை மரம் மலர்களை உதிர்த்துக் கொண்டிருக்க வனப்பேச்சிக்கு படையலிட ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.

மலைவேங்கையின் அடியில் கருங்கல் ஒன்று நடப்பட்டிருந்தது. துணி சுற்றி மஞ்சள் தடவி வேப்பிலை பாவாடை கட்டி வனப்பேச்சியாக உருவெடுத்திருந்தது.

மலைத்தேனும் நாவல் பழங்களும் மூங்கிலரிசியும் முன்னேயிருக்க மருந்து சாறு குடுவையில் இருந்தது.

மலைவாழ் மக்கள் தலைவன் வேலக்குட்டன் கருப்புநிற சால்வை சுற்றி காது மூக்கில் வளையத்துடன் கையில் கோலேந்தி வந்து கொண்டிருக்க கூடவே அரவானும்….

அதிகாலையில் படையலிட்டு வணங்கி அன்றே நள்ளிரவில் பூசையை ஆரம்பிப்பார்கள். முழுநிலா வெளிச்சத்தில் காட்டெருமையை அலங்கரித்து வில், அம்பு, வேல்,கம்பு வைத்து நெடுநேரம் நடக்கும் பூசையில் இன்று என்ன வாக்கு வரப்போகிறதோ?

அவ்விடத்தில் பார்வையிட்டபின் வேலக்குட்டன் புருவமுயர்த்தி மாடனைப் பார்க்க அவன்..

நீலி வந்தாச்சா? என்றான்.

கையில் குடுவையுடன் நீலி வர வேங்கையின் இடப்புற குடிலை நோக்கி நடந்தார்கள்.

பசும்புல்லாலும் மூங்கில் கழிகளாலும் கட்டப்பட்டிருந்த குடிலின் வாசலில் மண்ணால் ஆன பெரிய காட்டெருமை பதுமை நின்றிருந்தது.

அந்த பூர்வகுடிகளின் மூத்தோன் முதுவன் அவர்களைக் கண்டதும் தலையசைத்தார். குடுவையை நீட்டியதும் வலக்கையால் பிடித்து கீழே கவிழ்த்தார்.கண்மூடி யோசித்து ஒரு பூவை நீட்ட….

வேலக்குட்டனுக்கு உடல் உதறியது. இந்த தடவையும் நல்ல குறி தெரியலையே..யாருக்கு‌ என்ன நடக்கப் போகிறதோ?

முதுவனை வணங்கி பின்புறமாக முதுகு காட்டாமல் வெளியேறினான்.

முதுவன் கொடுத்த பூ கனத்தது. மெலிதாய் ஒரு பதற்றம் உடலெங்கும் பரவ கண்களால் மகளைத் துழாவினான். இந்த மலையும் மகளும் அவனுக்கு இரு கண்களாயிற்றே!

போன முறை தலைவனாய் இருந்த கார்க்கோடன் அசம்பாவிதத்தில் இறந்ததும்

முதுவன் அடுத்து கைகாட்டியது வேலக்குட்டனைத் தான். மலைத்தெய்வம் வனப்பேச்சியும் அதை ஆமோதிக்க குலச்சாமி காட்டெருமையின் ஆசியோடு தலைவனானான்.இன்றுவரை மலைமக்களின் நல்வாழ்வு தான் அவன் எண்ணம்.

மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே ஒதுக்குப்புறமாய் நிற்கும் பேச்சிமலை ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரை சமவெளியோடு‌ எத்தொடர்புமற்றது. வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாது .ஆனால் பக்கத்து மலைக்கிராமம் பைனூர் சினிமாக்காரர்களின் கண்ணில் பட சுற்றுசூழலே மாசானது. 

இன்னமும் பேச்சிமலைக்கு பேருந்து போக்குவரத்து கிடையாது. அரசாங்கத்தின் பார்வை இப்போது தான் விழ ஆரம்பித்திருக்கிறது. பைனூரில் கல்விசாலை மருத்துவமனை என எல்லாம் அரசாங்கம் அமைத்துவிட பேச்சிமலையின் சுற்றுவட்ட பாதையில் அவ்வப்போது போக்குவரத்துக்கு அனுமதித்துள்ளனர் வேலக்குட்டனும் அவன் மக்களும்.

கடந்த ஐந்தாண்டுகளாக‌ நடக்கக்கூடாது எல்லாம் நடப்பதற்கு அது தான் காரணம் என மூத்தவர்களுக்கு நினைப்பு. ஆனாலும் அரசாங்கத்தை எதிர்க்க முடியாதே.

பெருமூச்செறிந்தவாறே குடிலுக்கு வந்தவனிடம் மஞ்சணத்தி பேச்சு கொடுத்தாள்.

“முதுவர் நல்ல குறி சொன்னாவளா?”




அதுக்குள்ள சேதி வந்துட்டா?  என்பது போல் பார்த்தவன் “பூசையில் தெரியும்” சுருக்கமாக முடித்தான்.

மஞ்சணத்தி முகத்தில் விசனம் தெரிந்தது. போன வருஷம் கார்க்கோடன் இறந்ததை யாராலும் அத்தனை சுலபமாக மறக்க முடியாது.

மனைவியின் முகம் போன போக்கைப் பார்த்தவன் பேச்சை மாத்த

“பூவு எங்கே? ” என்றான்.

அவன் கேட்ட நேரம்

குலச்சாமியை குளியாட்ட

மயிலும், முத்துப்பயலும் கூட வர பேச்சியாத்து அருவியில் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தாள் பூ என்கிற பூம்பாவை.

பதினாறைத் தொட்டுக் கொண்டிருக்கும் பருவமங்கை.

மலைஜாதியைப் பொறுத்தவரை ஆணும் பெண்ணும் அங்கே சமம்.என்ன தான்‌ சாங்கியங்கள் இருந்தாலும் பெண்ணின் விருப்பமே பிரதானம். பூம்பாவை கைகாட்டுபவனை‌ மருமகனாக்க

வேலக்குட்டன்‌ தயார் தான்.ஆனால் அவர்கள் இனத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.

மாடனின் மகன் கடம்பனுக்கு பூவு மேல் ஒரு கண். ஆனால் அவள் தான் பிடி கொடுக்கவில்லை.

குளித்து முடித்தவள் புதரோரம் துள்ளிய குழிமுயலைப் பார்த்ததும் அதை துரத்தலானாள்.

“வேணாம் பூவு. ஐயனுக்கு தெரிஞ்சா ஏசும்.”

மயிலின் சொல்லெதையும் அவள் கேட்கத் தயாரில்லை.

அந்த மலைக்காட்டில் அதன் பின்னே ஓட…வேற வழியில்லாமல் மயிலும் தொடர்ந்தாள்.

“நான் பிடிச்சாரவா?”

எதிரில் கடம்பன்.

“வேண்டாம். எங்களுக்கும் கைகாலிருக்கு.”

வெடுக்கென பதில் சொன்னவளைத் தடுத்தாள் மயிலு.

“எவ இப்படி பேசறவ?கட்டிக்க போறவன் பிடிச்சாரக் கூடாதா?”

“அதாரு? பெரிய ஆபீஸரா கட்டிக்க?”

“ஆபீஸரா?சமவெளிக்கு போறவளா நீயி? மலைக்காடத்தியை கட்டுவாவோ?”

“ம்ஹும்..காடு தாண்டி போனாக்க.சமவெளி எப்படி இருக்கும்?”

“நம்ம மாரி அங்கே உள்ளவ இங்கன வர நினைப்பாகளா?”

***********

“இருந்திருந்து எத்தனையோ ஊரிருக்க மலைக் கிராமத்துக்கு போய்த்தான் ஆகணுமா?”

கலையரசி கவலையோடு மகனைக் கேட்டாள்.

மம்மி! மெடிஸன் படிச்சா இரண்டு வருஷம் கிராமத்தில சர்வீஸ் செய்யணும்.இது ரூல்.”

“சரிதான்.அதுக்கு மலைக்கிராமத்துக்கு போகணுமா?”

“எங்கே தேவை இருக்கோ அங்க என் சேவை இருக்கணுமில்லையா?

பணத்துக்காகவா  படிச்சேன்?நம்ம கிட்ட இல்லாத பணமா?  சொல்லிக் கொடுத்த நீங்களே சுணங்கலாமா?”




“நான் முன்னாடி போறேன்.கொஞ்ச நாளில் நீங்களும் வந்திடுங்க. மலையில் வாழ ஆசையாயிருக்கு.”

“மலைக்காட்டு பொண்ணை மருமகளாக்கிடப் போறான் பார்த்து சூதானமா இரு கலை”

பானு சந்தர் மகனை கிண்டல் செய்தார்.

“ஏன் மம்மி மகனோடு ஆசைக்கு குறுக்கே நிப்பீங்களா என்ன?”

“நான் நிப்பேன்.என் தங்கைகளுக்கு யார் பதில் சொல்றது?”கையில் டிராலியோடு வந்தான் சிவா.

“தங்கைகளா?”

“ஆமாம் ஆண்ட்டீ! இவனை மொய்க்கிறதுகளையெல்லாம் எனக்கு தங்கையாக்கிடறானே!”

கலாட்டாவும் சிரிப்புமாய் கலகலக்க டாக்டர் நன்மாறன் மலைக்கிராமத்துக்கு கிளம்பினான்.

கலையரசிக்கு தான் அத்தனை சமாதானமாக வில்லை.

ஏதோ இனம்புரியாத மனக்கலக்கம் அவளுள்….இன்று பௌர்ணமி. அம்பாளை சரணடைய‌வேண்டயது தான்.

“காலத்தில் கிளம்புங்க.சாயந்திர நேரத்தில மலைக்கு போக அனுமதி கிடையாது.”

பானு சந்தர் துரிதப்படுத்த பைனூர் நோக்கி கார் விரைந்தது.

எத்தனை வளைவுகள்?

இயற்கை ரொம்ப அழகானதில்ல?

நன்மாறன் மலைக்காட்டை சிலாகித்தபடியே காரை ஓட்ட…

பேச்சிமலையின் சுற்றுச்சாலையில் அந்த சம்பவம் நிகழ்ந்தது.

முயலை துரத்தியபடி

வாயடித்துக் கொண்டே வந்த பூம்பாவையும் மயிலும் மலைச் சுற்றுப் பாதையில் வேகமாக வந்து கொண்டிருந்த அந்த வண்டியைப் பார்த்து மிரண்டார்கள்.

“ஐயோ குலச்சாமி!”

மயிலு தான் கத்தினாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் வந்த காட்டெருமையை பார்த்த நன்மாறன் அதன் மேல் மோதாமல் இருக்க காரை ஒடிக்க அது பாறையின் மீது மோதி நின்றது.

குலச்சாமியை காவந்து பண்ணிட்டு கவுந்து கிடக்கறாகளே!”

நன்மாறனின் நெற்றியிலிருந்து இரத்தம் வழிய மயக்கமாயிருந்தான். சிவா சிராய்ப்பு களோடு கார் கதவின் மேல் முனகிக் கொண்டிருந்தான்.

எட்டிப் பார்த்த பூம்பாவை கட்டுக்கொடி களைப் பிடுங்கி வந்து நெற்றியில் வைத்துக் கட்டினாள்.

“மயிலு அந்த இலையை‌ கசக்கி வையி. நான் மலைவேரை புடுங்கியாரேன்.கண்ணு தொறக்கும் “

மயிலுக்கு அசலூர் ஆசாமிகளைப் பார்த்து சிரிப்பாய் வந்தது. வெளுத்து கிடக்கு தோலு.சின்ன சிராய்ச்சலுக்கு தாங்கலையே.

அதுங்க உடுப்பையும் மூஞ்சையும் பாரு.

“பூவு ஐயன் பார்த்தா வையும். அந்நிய ஆளை தொடக்கூடாது.”

“ஆமடி.இந்த வேரை மூக்கில் வச்சிட்டு வா ஓடிடுவோம்.”

அதற்குள் சிவா தட்டுத்தடுமாறி எழ…

நன்மாறனுக்கும் மயக்கம் தெளிந்தது‌.

கருங்கல் சிற்பமென நின்றிருந்த பூம்பாவை அவனுக்கு வனத்தேவதை போல தெரிந்தாள்.

அவர்களிடம் அசைவைக் கண்டதும் மயிலு, பூம்பாவையை இழுக்க இருவரும் வேகமாக அங்கிருந்து நகர்ந்தனர்.

“ஏ பொண்ணுகளா! நில்லுங்க.

சிவா பிடிடா.தேங்ஸ் சொல்லுவோம்.”

சிவா அவர்களைத் தேட..

அவர்கள் மின்னலென அங்கிருந்து மறைந்தனர்.

“விடுடா.இந்த மலைக்காட்டில் அவங்களைத் தேட முடியாது.”

“எதையோ வச்சு ப்ளீடிங்கை நிறுத்திட்டாங்க.நீ பர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடு.”

“ஜஸ்ட் மிஸ் டா.என்ன வேகமாக ஒடிச்சிட்ட?”

“பாவம் டா.அந்த காட்டெருமை .”

“இப்ப நாம தான் பாவம்.வண்டி ஸ்டார்ட் ஆகுமா?”

“ஏய் அங்கே பாரு..லைட் பிங்க்ல பூ..”

“வாவ்..ஹார்னமெண்டல் செர்ரி.வருஷத்துக்கு ஒரு தடவைதான் பூக்கும்.அதுவும் டிசம்பர்ல.”

அவர்கள் ஆசையாய் மலர்களை ரசிக்க….

திகிலோடு நின்றாள் பூம்பாவை.

“அங்கே பாரு.செம்பூ..

பூக்க ஆரம்பிச்சிட்டு.”




இருவரும் உடல் நடுங்க நின்றார்கள்.

“நான் அப்பவே சொன்னேன்.அந்நிய ஆளுகளைக் கண்டுக்க வேணாம்னு..”

“நீ ஐயன் கிட்ட ஏதும் சொல்லாதே. மாசம் பொறந்தாச்சா? செம்பூ பூத்திடுச்சே..”

இன்னைக்கு ராவு பேச்சியம்மா என்ன சொல்லப் போகுதோ?

முழு நிலா வானத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்க….

பெண்டுகள் குலவையை ஆரம்பிக்க..ஆண்கள் நெருப்பை சுற்றி தாண்டவமாடினர். மலைக்கொடிகளாலும் பூக்களாலும் வனப்பேச்சி அலங்கரித்து நிற்க…

கொம்பும் தாரை தப்பட்டைகளும் அதிர வழக்கம் போல நீலி மேல் வந்திறங்கியது வனப்பேச்சி.

“பெரிய நட்டம் வரப்போவது.இந்த வருஷமும் பயிரு விளையாது.அறுவடையில்லை.குலச்சாமிக்கு கேடு வரப்போவது.கூட்டமா பலி கேட்குது.”

“பெரிய மனசு பண்ணு தாயி.உங்கோவம் தீர என்ன செய்யணும்?”

வேலக்குட்டன் தலைவணங்கி கெஞ்ச..

“அந்நிய ஆளுங்களை மலைக்குள்ளே உடாதே.உன் கொலக்குடியை காவந்து பண்ணிக்க..”

நீலி மயங்கி விழ..வனப்பேச்சி மலையேறியது.

ஓ வென்ற ஓலக்குரல் மலையில் எதிரொலிக்க

காட்டெருமை மல்லாந்து கிடந்தது. அதனருகே செம்பூக்கள்….!

-தொடர்வாள்.ஷ




What’s your Reaction?
+1
8
+1
11
+1
1
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!