Serial Stories

கண்மணியே காதல் என்பது  (பொங்கல் சிறப்பு குறுநாவல்)

1

“டேய் வேணான்டா , எனக்கு பயமா இருக்கு ” 

” ஏய் இதுல என்ன பயம்டி ?, கொஞ்சம் கிட்ட வா ,ஒண்ணுமில்லை ” 

கிசுகிசுப்பான அந்தக் குரல்களை கேட்டதும்  சுகன்யா தயங்கி நின்றாள் .

மாடிப்படியின் அடிப்பகுதியில்  யாரோ …! எண்ணிய உடன் அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென்ற உந்துதலை மூளை கொடுக்க , கால்கள் தயங்கியது .

அந்தக் குரல்களில் இருந்த ஆர்வமும் , எதிர்பார்ப்பும் …பாவம் அவர்களாவது சிறிது நேரம் சந்தோசமாக இருந்து விட்டுப் போகட்டுமே ! அவள் மனம் பரிந்துரைத்தது.சொல்லத் தெரியா ஓர் ஏக்கம் அவள் உடல் முழுவதும் பரவி நிற்க , லேசாக தடுமாறிய உடலை அருகிருந்த சுவருக்கு நகர்ந்து சாய்த்துக் கொண்டு காத்திருந்தாள் .

எழ வழியின்றி பச் பச்சென அழுத்தப்பட்ட இதழோசைகள் அவளுக்குள் பூகம்பத்தை வெடிக்க வைத்தன. அவனும் இப்படித்தான் …நினைத்து விட்டால் உடனே முத்தமிட்டு விட வேண்டும் .இடம் , சூழல் பார்க்க மாட்டான் .




சுகி …சுகி எனும் இன்பக் குளறல்களோடான அவனது முத்தங்கள் கன்னத்தில் ஈரத்தடமுணர வைக்க , இப்போதுதான் வாங்கினாற் போல் போதையை உணர்ந்தவள் , சூழல் மறந்து  வேகமாக படியேற ஆரம்பித்தாள் .

சரசரவென பிரிந்தது மாடிப்படி கீழ் ஜோடி. ஆண் தடுமாறிய காலடிகளுடன் வெளியே ஓட , பெண் படிகளுக்கடியிலான இருளில் பதுங்கினாள் . 

சுகன்யா எப்போதும் ஏற முடியும் உயரத்தில் இருக்கும் இடங்களுக்கு படிகளைத்தான் பயன்படுத்துவாள் .இது அவன் கற்றுக் கொடுத்த பழக்கம்தான் . படியேறுவது  நல்லது என அவள் கை பற்றி உடன் படியேற வைப்பான் .

” உங்களால் முடியும் .என்னால் முடியுமா ராக்  ? ” அருகே மூச்சு வாங்கல் சிறிதுமின்றி   கம்பீரமாக வந்து கொண்டிருப்பவனை ஓரக் கண்ணால் பார்த்தபடி கேட்பாள் .

இந்த உயரத்திற்கும் , கட்டான உடலமைப்பிற்குமே அவனுக்கு இந்தப் பெயர் வைத்தாள் .ராகவன் என்ற பெயரை சுருக்கி செல்லமாக ” ராக் ” 

ஆறடி இரண்டங்குல உயரத்தவன் , குழைவாக இவள் புறம் குனிவான் .” முடியவில்லையென்றால் என் முயல் குட்டியை தூக்கிக்கவா ? ” கொஞ்சுவான் .

ஆறே மாதங்கள் என்றாலும் அவனுடன் பழகிய பழக்கங்கள் இவளை பிரிய மறுக்கிறது .அவன்தான் …

நான்காவது மாடியில் இருக்கும் தனது வீட்டை சிறு இளைப்புடன் அடைந்தவளுள்,இனிப்பை உறிஞ்ச துடிக்கும் எறும்பாய் அவன் நினைவுகள்.

அவனுடன் இணைந்து படியேறி மூச்சு வாங்க இவள் நிற்கையில்,அவன் முகம் மாறும்.முழுதாய் இவளை களவாடத் துடிக்கும் வேகம் கண்களில் மின்னும். அந்த பார்வையிலேயே கரைவாள்.

விரிந்த அவன் கைகளுக்குள் விழத் தயங்கமாட்டாள்.பிறகு அந்த இரவு வேகமும்,காதலுமாக இருவரையும் மூச்சு வாங்க வைக்கும்.

ஈரத்தில் பரவும் மின்சாரமாய் இந்த காதல்…எதிரிருந்த கண்ணாடி, கண்களில் ஈரப் பரப்பை காட்ட இமை சிமிட்டி தலை உலுக்கிக் கொண்டாள்.

வேண்டாம் பருவத்தின் அசட்டு படர்வாய் இன்னொரு காதல் வேண்டாம்…




2

எதிர் வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினாள் சுகன்யா.கதவு திறந்த பெண் இவளைப் பார்த்ததும் திருதிருவென விழித்தாள் .

” சுகன்யாவா ? வாம்மா ? ” ஹால் சோபாவில் அமர்ந்து டிவியில் பார்வை பதித்திருந்த சாந்தி அழைத்தாள் .

” தோசை மாவு இருந்தால் ஒரு பாக்கெட் கொடுங்களேன்  அக்கா ” கேட்டபடி உள்ளே நுழைந்தவளை பதட்டத்துடன் பார்த்தாள் கதவு திறந்தவள்.

” நிர்மலா மாவு பாக்கெட் எடுத்து வந்து கொடு ” சாந்தி் டிவிக்குள் போனாள் .

டிவி சீரியலில் ஹீரோவும் , ஹீரோயினும் மூக்குரசும் தூரத்தில் நின்று கொண்டு முத்தமிடலாமா ? என யோசித்துக் கொண்டிருந்தனர்.

மாவு பாக்கெட்டை நீட்டிய நிர்மலாவின் கை நடுங்கியது.

” நாளை ஆபிசிலிருந்து வரும் போது ஒரு பாக்கெட் வாங்கி வந்து தந்திடுறேன்கா ” 

” அட …அதனாலென்னம்மா ..விடு ” சாந்தி சின்னத்திரையை விட்டு பார்வையை நகர்த்தவில்லை .

சுகன்யா தன் வீட்டிற்குள் நுழைந்து ஐந்து நிமிடங்கள் காத்திருந்தாள் .காலிங்பெல் அடித்தது. 

” கதவு திறந்துதான் இருக்கு ” 

கதவை தள்ளிக்கொண்டு நிர்மலா மெல்ல வந்தாள் .

” அ…அக்கா ..அம்மாகிட்ட எதுவும் சொல்லிடாதீங்க ? ” 

சுகன்யா கைகளை கட்டிக் கொண்டு அவளைப் பார்த்தபடியே நின்றாள் .

” அக்கா நானும் , அவனும் லவ் பண்றோம் .எங்க படிப்பு முடிந்ததும் கல்யாணம் பண்ணிக்குவோம் ” 

” அது எப்போ  ? ” 

” நான் இந்த வருடம் ப்ளஸ் டூ முடிச்சுட்டு அப்புறம் மூன்று வருடங்கள் டிகிரி .அவனும் அப்படித்தான் .பேச்சுலர் டிகிரி முதல் வருடம் .அதை முடித்து மாஸ்டர்ஸ் இரண்டு வருடம் .ஆக நான்கு வருடங்கள் கழித்து எங்க திருமணம் .எல்லாம் நாங்கள் பிளான் பண்ணியாச்சு ” 

” இன்னமும் ஸ்கூலே முடிக்கலை .அதற்குள் இதெல்லாம் தப்பாத் தெரியலையாம்மா உனக்கு ? ” 

” ஸ்கூலுக்கும் , லவ்வுக்கும் என்ன சம்பந்தம் ? ” 

” இது லவ்வா ? ” 

” பின்னே ? கல்யாணம் பண்ணிக்கிறது வரை பிளான் பண்ணியிருக்கோமே ” 

சுகன்யாவிற்கு அவளுக்கு விளக்க முடியுமென்று தோன்றவில்லை .” அந்த பையன் அட்ரஸ் கொடு .அவனிடம் பேசிப் பார்க்கிறேன் ” 

” பேசுங்களேன் .நான் சொல்வதைத்தான் அவனும் சொல்வான் ” உறுதியோடு நிர்மலா கொடுத்த அட்ரஸ் புதிதாக எழும்பிக் கொண்டிருக்கும்  எதிர் ப்ளாக்கில் ஒரு வீட்டினது .

சரிதான் இதுங்களுக்கு இப்படி திருட்டுத்தனம் பண்ண வசதி …

“அதைப் பத்தி உங்களுக்கென்ன ? ” முகத்திலறைவது போல் பேசினான் அந்தப் பையன் முகேஷ் .” எங்க பர்சனலில் நீங்க தலையிடாதீங்க ” 

” பத்து பேர் வந்து போகும் மாடிப்படி கீழிடம் உங்க பர்சனலா தம்பி ? ” 

“லிப்ட் இருக்கும் போது ,அந்தப் பக்கம் ஒரு சிட்டுக்குருவி கூட வராது .சில அதிகப்பிரசங்கி காக்…வந்து ஆட்களால்தான் தொல்லை ” 

சொல்லாமல் விட்ட காக்கையை விழுங்கிக் கொண்டு அலட்சியமாக போய்விட்டான் . அவமானத்தில் முகம் சிவக்க ,சுகன்யாவின் மனம் உடன் தன்னவனிடம் போய் நின்றது .

 பார்த்தீர்களா ராக் …ஒரு சின்னப்பையன் என்னை எப்படி பேசி விட்டுப் போகிறான்.




3

“நாலு வருடம் கழித்து திருமண திட்டமெல்லாம் சரிதான் நிர்மலா.ஆனால் அது வரை நீங்கள் சந்திக்காமல் இருக்க முடியுமா?”

கேட்டவளுக்குள்…

 “தினமும் பார்த்துக் கொண்டாலாவது பரவாயில்லை.வாரம் ஒரு முறையென்ற ப்ளான் செம ப்ளாப்.முடியாது சுகி…” என்றபடி தனது உதடுகளை நாவால் வருடிக் கொண்ட ராகவனின் குரல்.

சற்று முந்தைய அவனது இறுகிய அணைப்பிற்குள்,நசுங்கிய தன் உடலின் அயர்வுடன் தண்ணென்றிருந்த உதடுகளை மடித்துக் கொண்டாளவள்.அதென்ன அப்படி ஒரு முத்தம்…உயிரை உருவுவது போல்…

அடிக்கடி பார்த்துக் கொள்ளக் கூடாதென்று விதித்துக் கொண்டிருந்த கட்டுப்பாட்டை கலைக்க ஆரம்பித்திருந்தனர் காதலர்கள்.

“நாங்கள் ஏன் சந்திக்காமல் இருக்க வேண்டும்?” நிர்மலாவிடம் என் குலமழிக்க வந்த கோடாரியே பாவனை இருந்தது.

“இல்லைம்மா…உங்கள் வயது,பார்க்கும் போதெல்லாம்…வந்து…அன்று மாடிப்படிக்கடியில் போல்…ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாமே…”

நிர்மலா அவளை விசித்திரமாக பார்த்தாள்.”இதெல்லாம் இல்லாமல் எப்படி காதலிப்பதாம்?”

அடியேய்…அப்போது அதற்காகத்தானே இந்தக் காதல்? புரியவில்லையாடி மூளை கெட்டவளே!உள்ளுக்குள் எழுந்த கூப்பாட்டை அடக்கினாள்.அதிகமாய் பேசும் ஒரு வார்த்தை போதும்…வீம்பிற்காகவே லாட்ஜில் ரூம் போடுவார்கள்.

அந்த வகையில் நாங்கள் எடுத்தது புத்திசாலித்தனமான முடிவு.ஆனால் அவசரமான முடிவு.

சுகன்யா பெருமூச்சுடன் அடுத்து செய்ய வேண்டியதை பற்றிய யோசனையில் ஆழ்ந்தாள்.




4

இரண்டு கைகளையும் அழுந்த பற்றி கால்கள் தரையில் உராய்ந்து கோடிழுத்து எரிய,தரதரவென இழுத்துக் கொண்டு வந்து அறைக்குள் தள்ளிய தந்தையை நம்ப முடியாமல் அதிர்ச்சியாய் பார்த்தாள் சுகன்யா.

எப்போதும் மென்மையான தலை வருடலுடன் பூக்களை வார்த்தைகளில் கோர்த்து பேசுபவர்.

“அப்பா…”

“சீ…அப்படி கூப்பிடாதே பொது இடத்தில் கண்டவனுடன் உரசிக் கொண்டு…உவ்வே…” அருவருப்புடன் உடல் குலுக்குகிறார்.

“நாங்க லவ் பண்றோம்பா…”

“அடி செருப்பால…மானங் கெட்ட கழுதை.என் மூஞ்சியை பார்த்து லவ்வுன்னெல்லாம் பேசுற தைரியம் வந்துடுச்சா?”

சுகன்யாவிற்கு புரியவில்லை.காதலிப்பதை எப்படி சொல்வதாம்?

“அடியேய்…அந்த நாய் கையிலிருக்கிற போனை பிடுங்கிட்டு ,ரூமுக்குள்ள பூட்டி வை.பத்து நாளில் எவனையாவது பார்த்து…அவன் தலையில் இவளைக் கட்டுறேன்”

பிள்ளை வளர்க்க தெரியவில்லையென போகிற போக்கில் அம்மாவின் கன்னத்தில் ஓர் இடி.

அந்த அதிகாரமும்,

அடக்குமுறையும்தான் இவளை  வாசல்படி தாண்ட வைத்தது.நடு இரவில் இரண்டு நண்பர்களுடன் வீட்டை பகிர்ந்து கொண்டிருந்த ராகவனை தேடி ஓட வைத்தது.

நிர்மலாவையோ,முகேஷையோ கொஞ்சம் அழுத்திப் பிடித்தாலும் இந்த முடிவிற்குத்தான் அவர்கள் வருவார்களென்பதில் சந்தேகமில்லை.எனவே சுகன்யா வாயை கட்டினாள்.

இனி அவள் பேச வேண்டியது நிர்மலாவிடமோ…முகேஷிடமோ அல்ல.

வெகு ஜாக்கிரதையாக யோசித்து யோசித்து ஒவ்வொரு செங்கலாய் திட்டத்தில் சேர்த்தாள்.




5

“சொல்லுங்கம்மா” கம்ப்யூட்டர் திரையில் பார்வையை வைத்தபடி போன் பேச்சுக்கு காது கொடுத்தாள்

எதிரே பேசிய அம்மாவின் குரலில் உற்சாகம் இருந்தது “சுகா வாட்ஸ்அப் பாருடி ,ஒரு போட்டோ அனுப்பி இருக்கிறேன். ஓகே வான்னு சொல்லு”

அடிவயிற்றை யாரோ சுண்டி இழுத்தது போல் இருந்தது சுகன்யாவிற்கு.ப்ச்.. இவர்கள் விட மாட்டார்களா?

“அம்மா, இது ஆபீஸ் டைம். இப்போது வாட்ஸ் அப்லாம் ஓபன் பண்ண முடியாது. நான் வீட்டிற்கு வந்த பிறகு பார்க்கிறேன்” போனை கட் செய்தாள்.

எவன் தலையிலாவது கட்டுகிறேன் என்று ஐந்து வருடங்களுக்கு முன்பு கத்திய அப்பா இன்னமும் அதற்காக முயன்று கொண்டிருக்கிறார். இவள்தான் பிடி கொடுக்காமல் நழுவி கிடைத்த வேலையை சாக்கிட்டு இங்கே தனியே வந்து உட்கார்ந்து கொண்டிருக்கிறாள்.

மீண்டும் தாய் தந்தையிடமே வந்து நின்ற நாள், சுட்ட நெருப்பின் போகாத கருஞ்சுவடு போல் இன்னமும் அவள் மனதிற்குள். எவ்வளவு கொடுமையான நாள் அது?

“இது என்ன அவசர முடிவு சுகி? தப்பும்மா கிளம்பு. உன் அப்பா அம்மாவிடம் நான் நேரில் பேசுகிறேன்”

கண்டிப்பாக பேசிய ராகவனை விதிர்த்துப் பார்த்தாள். அவள் எவ்வளவு சிரமப்பட்டு வீட்டிலிருந்து இவனை நம்பி வந்திருக்கிறாள்! இவனோ எளிதாக திரும்பப் போ என்கிறானே!

“உங்கள் பொழுதை போக்கிக் கொள்வதற்காக என்னை காதலித்தீர்களா ராகவன்? பற்றி தூக்கி விளையாடிவிட்டு எரிந்து விடும் பொம்மையா நான் உங்களுக்கு?”

ராகவன் அதன் பிறகு பேசவில்லை.அவளுக்கு தலையசைத்தான். நண்பர்கள் உற்சாகத்துடன் திருமண ஏற்பாடுகளில் இறங்கினார்கள்.

அவளுக்கென்னவோ ராகவனின் முகத்தை பார்க்க எந்நேரமும் இவன் திருமணத்தை மறுத்து விடுவான் என்றே தோன்றிக் கொண்டிருந்தது.




6

விடாமல் அழுத்தப்பட்ட காலிங் பெல் எரிச்சலை உண்டாக்க, காலையில் அலுவலகம் கிளம்பும் அவசர வேளையில் யாரது எரிச்சல் பட்டபடி கதவை திறந்தவள் ஸ்த்ம்பித்தாள். வாசலில் நின்றிருந்தார் அப்பா.

“அப்பா..”

“நல்லா இருக்கியாடா? நான் உள்ளே வரலாமா?”

“வாங்கப்பா, ஐந்து வருடமாச்சுப்பா… நீங்க என்கிட்ட பேசி…” அடக்க நினைத்தும் குரல் குழறியது.

அப்பா உதடுகள் கோண அழுதே விட்டார். “எனக்கு மட்டும் என் தங்கத்தை ஒதுக்கி வைக்க ஆசையாடா?” அவருடைய பாசமான தலைவருடல்.

அலுவலகத்திற்கு லீவ் சொல்லிவிட்டு இருவருமாக சமைத்து ,சாப்பிட்டு என்று வீட்டிற்குள்ளேயே தந்தையும் மகளும் கொஞ்சிக் கொண்டனர்.

திரும்ப வீட்டு வாசலில் வந்து நின்றவளை கல் எறியாத குறையாக பேசியவர். இனி அவர் சொல்வதை செய்வதாக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் வரலாம் என்ற கட்டுப்பாட்டுடன் உள்ளே விட்டவர்.

அவர் விருப்பப்படியே பாதியில் நின்ற படிப்பை முடித்து, மாஸ்டர்ஸ் படித்து இதோ வேலையிலும் சேர்ந்து விட்டாள். இப்போது மீண்டும் தந்தையின் கடமைக்காக முயல்கிறார்.

“நீங்கள் இல்லாவிட்டால் நான் என்னவாகயிருப்பேன்பா!” விம்மியபடி மடி சாய்ந்தவளை மென்மையாக விரட்டினார்.

” ஒன்றும் ஆகியிருக்க மாட்டாய்டா. நீயாகவே படித்து இதே நிலைமையில் நின்றிருப்பாய்”

“இல்லைப்பா நான் அப்போது மிகவும் உடைந்து போய் இருந்தேன்…அவரது துரோகம் என்னை அடித்துப் போட்டிருந்தது ,நிச்சயம் மீண்டு வந்திருக்க மாட்டேன்”

“அவன் யாருடா என் மகளை உடைத்துப் போடுறவன்? இதோ ராஜாத்தி மாதிரி உட்கார வைத்திருக்கிறேன். 

அதெல்லாம் வயது கோளாறுடா தங்கம். இப்போது பார் எல்லாம் சரியாகி விட்டது. சொல்லுடா மாப்பிள்ளை வீட்டாரை எப்போது வரச் சொல்ல?”

“அ…அப்பா  ஒரு வாரம் டைம் கொடுங்கப்பா ப்ளீஸ்” அவள் விழிகள் தந்தையின் கண்களை சந்திக்கவில்லை.மகளை கூர்ந்து பார்த்தபடி தலையசைத்தார்.

“நிர்மலா என்னோட அப்பா” மாலையில் வாக்கிங்கிற்காக இருவரும் வெளியே கிளம்பிய போது எதிர்பட்ட நிர்மலாவிற்கு பெருமையாய் அறிமுகம் செய்தாள்.




7

“சீக்கிரம் முடிவை சொல்லுடா” அப்பா விடைபெற்றபோது, இவள் மனம் அலறியது. வேண்டாம்பா என்னை நம்பாதீங்க…

கல்லை விழுங்கிய முகபாவம் வைத்திருந்த மகளை அளந்தபடி விடைபெற்றார் தந்தை.

“உங்களைப் போல படிக்கனுமாம்.உங்களைப் போல பெரிய கம்பெனியில் வேலையில் உட்காரணுமாம். எந்நேரமும் அம்மா இதைத்தான் பேசுகிறார்கள் .அப்படி என்ன செய்து விட்டீர்கள் ?எந்த நேரமும் புத்தகத்திற்குள் தலையை விட்டுக் கொண்டிருக்க நான் கோமாளி இல்லை.

காதலித்திருக்கிறீர்களா நீங்கள்? அந்த அனுபவம் தெரியுமா உங்களுக்கு?” நிர்மலா எதிரில் வந்து நின்று படபடத்தாள்.

சுகன்யா புன்னகையுடன் இரு கைகளையும் விரித்து காட்டினாள். “உன்னை விட அதிகமாக காதலித்து இருக்கிறேன். நிறைய ஏமாந்தும் இருக்கிறேன்”

நிர்மலா நம்ப முடியாத பார்வை பார்க்க,புன்னகைத்து அவள் கன்னம் தட்டினாள். “காதலித்தவனையே கல்யாணம் கூட செய்து கொண்டேன் தெரியுமா?”

“என்ன நீங்கள் திருமணம் ஆனவரா?”  அதிர்ந்தாள்.

“தெருமுனை கோவிலில் வைத்து அரையிருளில் அவசரமாக மஞ்சள் கயிற்றை கட்டிக் கொண்டேன். அது திருமணமா நிர்மலா?” சந்தேகம் கேட்ட மதிப்புக்குரிய எதிர் வீட்டு அக்காவை குழப்பமாய் பார்த்தாள் நிர்மலா.

“காதலித்த வரை நன்றாகத்தான் இருந்தான். கல்யாணம் முடிந்ததுமே ஒரு மாதிரி இறுகிப் போய் விட்டான். தப்பு பண்ணிட்டோமோ என்று அடிக்கடி பேசினான். பிறகென்ன எந்நேரமும் எங்களுக்குள் சண்டை .நேரத்திற்கு வீட்டிற்கு வருவதில்லை. வந்தாலும்  புத்தகத்திற்குள்  நுழைந்து கொள்வது..”

“இப்படி ஜெகஜோதியாக போய்க்கொண்டிருந்த எங்கள் மண வாழ்க்கையில் ஒருநாள் அவன் சட்டை பாக்கெட்டில் இருந்து அந்த லெட்டரை எடுத்தேன்.வேறு யாருக்கோ அவன் உருகி உருகி எழுதியிருந்த லவ் லெட்டர்…”

“ஐயோ” நிர்மலா வாயில் கை வைத்து அதிர்ந்தாள்.

“பிறகென்ன உன் வழி உனக்கு, என் வழி எனக்கென பேசி பிரிந்து விட்டோம்” சுகன்யா முடிக்க,நிர்மலா குழம்பிய மனதுடன் போனாள்.

ஐந்தாவது நிமிடம் போன் செய்தாள்.”பயமாயிருக்குக்கா…காதல் இல்லைன்னா ஏதாவது தகராறு பண்ணுவானோ?”

“விடு..அவனையே ஒதுங்கிக் கொள்ள வைக்கலாம்”

“அ…அது முடியுமாக்கா?”

“நிச்சயம்” சொல்லி விட்டாளே தவிர,சுகன்யாவுக்கும் உள்ளே உதறல்தான்.ஆனாலும் நிர்மலாவை நினைத்து கொஞ்சம் நிம்மதி.பாதி கிணறு தாண்டியாயிற்று.




 

8

ஆறாவது மாடி…மூச்சிரைக்க ஏறலானாள்.அந்த ப்ளாக் சற்று அதிக வசதியுடையவர்களுடையது.

ஆக அந்த முகேஷ் கொஞ்சம் வசதியானவன்…அவனது வசதி வாய்ந்த பெற்றோர்களிடம் எப்படி பேசுவது…?மனதிற்குள் ஒத்திகை பார்த்தபடி நடந்தாள்.

 அழைப்பு மணியை அடித்து விட்டு நின்றாள் .கதவு திறந்தவனை பார்த்ததும் தலை சுற்றுவது போலாக ,படியேறிய இளைப்பு அதிக மூச்சாக வெளிப்படையாக வெளிப்பட்டது .

முதலில் அதிர்ந்து ,பின்  மறைத்து கல் முகம் காட்டி ” படியேறி வந்தீர்களா ? உள்ளே வாருங்கள் .கொஞ்சம் உட்கார்ந்து கொள்ளுங்கள் ” என்றவன் அவளது ராக் …ராகவனேதான் .

சிறு தடுமாற்றத்துடன் உள்ளே நுழைந்து அவசரமாக சோபாவில் அமர்ந்து நடுங்கும் கால்களை தளர்த்திக் கொண்டாள் .அவன் நீட்டிய நீரை வேகமாக தொண்டைக்குள் சரித்தாள்.

உருகி உருகி எவளுக்கோ அவன் எழுதியிருந்த  கடிதம் நினைவில் வந்தது. அவன் முகத்தில் அதை எறிந்து விட்டு இவள் வெளியேறிய நாளும் …

தப்பு செய்த இவனே கல் மாதிரி இருக்க எனக்கெதற்கு இந்த நடுக்கம் …? 

உணர்ச்சி் துடைத்த அவன் முகம் சீண்ட , தனக்குத் தானே தைரியம் சொல்லி நிமிர்ந்து கொண்டாள் .” நான் முகேஷை பற்றிப் பேச வந்தேன் ” 

” ஓ ” என்றவனின் முகம் கொஞ்சம் ஏமாற்றம் காட்ட , அதில் சந்தோசமானவள் ” முகேஷிற்கு நீங்கள் யார் ? ” என்றாள் .

” அவன் என் தம்பி ” என்க , உனக்கு ஒரு அக்கா மட்டும் என்றுதானே சொல்லியிருந்தாய் என்ற அவளின் பார்வைக்கு …

” கூடப் பிறந்தவன் கிடையாது .என் சித்தப்பா பையன் .சென்னை கல்லூரியில் அவனுக்கு இடம் கிடைக்க , என்னுடன் தங்கிப் படிக்கட்டுமென சித்தப்பா அனுப்பி வைத்திருக்கிறார் ” விளக்கங்கள் கொடுத்தான் .

” ஓ…அவன் சரியில்லை .என் பக்கத்து வீட்டு பெண்ணுடன், வந்து…இரண்டு பேரும் …மாடிப்படி அடியில்…” திணறினாள் .

ராக் …ராக்கை ஒத்த முகபாவத்துடன் ” தெளிவாக சொல்லுங்க ” என்றான் .

அடேய் …பல்லைக் கடித்தாள்  ” இரண்டு பேரும் மாடிப்படிக்கு அடியில் இருட்டில் நின்று கொண்டு முத்தம் அது இதுவென்று  தப்பாக…கேட்டால் லவ் என்கிறார்கள் ” 

” ம் ” ராக் பின்னால் ரிலாக்ஸ்டாக சாய்ந்து கொண்டு தாடை தடவினான் .” ஏன் அப்படி இருக்கக்கூடாது ? ” 

” அதெப்படி இருக்கும் ? இது படிக்கும் வயது .இப்போதென்ன லவ் ? ” 

” அப்படியா ? லவ்வே இல்லாமல் இந்த முத்தமெல்லாம் …எப்படிங்க ? ” கேட்டுக் கொண்டே இதழ் குவிக்க அதில் அவள் மனம் படபடக்க ஆரம்பித்தது.

” அ…அதெல்லாம் வயதுக் கோளாறு .ஹார்மோன்களின் வேலை .அது என்னவென தெரிந்து கொள்ளும் ஆவல் …அவ்வளவுதான் ” தலை குனிந்து முணுமுணுத்தாள் .

ராகவனின் முகத்தில் விசித்திர முறுவல். இப்படித்தான் இவனும் திருமணத்திற்கு பின்,இவர்களது ஒவ்வொரு சண்டையின் போதும் பேசுவான்.




9

சுகன்யா திகைப்புடன் அவன் முகம் பார்க்க,”கன்ட்டினியூ மேடம்” என்றான் அமர்த்தலாக.

டீன் ஏஜ் ஹார்மோன்களின் தூண்டலா என் காதல்…?இல்லையென அலறியது அவளுள்ளம்.

“இன்டெலில் வேலை.ஒரு லட்சம் சம்பளம்…ம்” அவளை வருடிய பார்வையில் பெருமிதம் தெரிந்தது.

இவனுக்கெப்படி தெரியும்?”என்னை மீட்டவர் என் அப்பா” பெருமிதமான அவள் அறிவித்தலை தலையசைத்து ஏற்றுக் கொண்டான்.

“பெற்றவர்கள் கடமைகளை முழுதாக முடிக்கும் வரை பிள்ளைகள் காத்திருக்க வேண்டும்.”

சுகன்யா அவனை விழி விரித்து பார்த்தாள்.” இதனை முகேஷையும் உணர வைக்க வேண்டும்.ரைட்?”என்றவன் 

துள்ளி எழுந்து அவள் தோள் பற்றினான்.

 ” எ…என்ன ? ” திணறியவளின் உதடுகளின் மேல் ஒற்றை விரல் வைத்தான் .

” ஷ் ”  முகத்திற்கு குனிந்து கிசுகிசுத்த அவன் நாசியின் மூச்சில் திணறியவளை , கைப்பிடித்து அழைத்துப் போய் ரூமிற்குள் விட்டான் .அப்போதுதான் கவனித்தாள் .அழைப்புமணி ஒலித்துக் கொண்டிருந்தது .

” அண்ணா இன்னைக்கு இரண்டு சிக்ஸர், மூணு போர் அடிச்சேன் .எங்க டீமுக்கு நான்தான் ஹீரோ தெரியுமா ? ” கலகலத்தபடி உள்ளே நுழைந்த முகேஷின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் .

” உன் மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பாடா ? பொண்ணுங்க பின்னாடி சுத்துற அளவு பெரிய மனுசனாயிட்டியா நீ ? உன் அப்பாவுக்கு சொல்லவா ? ” 

” ஐயோ அண்ணா வேண்டாம் .அப்பா என்னை எங்க ஊர் டப்பா காலேஜில் கூட்டிப் போய் சேர்த்துடுவார் .அங்கே படிப்பதற்கு நான் படிக்காமலேயே இருந்து விடுவேன் ” 

” ம் …அப்போ நாளையிலிருந்து …” 

” அந்தப் பொண்ணு பக்கம் திரும்பிக் கூட பார்க்கமாட்டேன் ” 

” சரி உனக்கு கம்யூட்டர் கோர்ஸுக்கு நேரமாயிடுச்சு .போ ”  அவனை அனுப்பி விட்டு கதவை மூடினான் .

” எப்படி இவ்வளவு ஈசியா முடிச்சீங்க ? ” சுகன்யா விழி விரித்தாள் .

” சிம்பிள் . முகேஷுக்கு சென்னையில்தான் படிக்க வேண்டுமென்பது சிறு வயது கனவு .அதனை பயன்படுத்தினேன் .அவனது லவ் கரைந்து போய்விட்டது ” 

” பப்பி லவ் …” சொல்லிவிட்டு மனம் விட்டு சிரித்தாள் .




10

” இந்த பொறுப்பற்ற இளைய தலைமுறையை என்ன செய்வது ? ” அவன் பார்வை சிரித்த இதழ்களில்.

” இது எல்லோரும் கடந்து வர வேண்டிய பாதைதானே ? இதில் யாரையும் குற்றம் சொல்ல முடியாது ராக் ” தனை மீறிய அழைத்தலுக்கு நுனி நாக்கு கடித்தாள் .

” ஓ…ஆனால் என் மீது மட்டும் ஏன் குற்றச்சாட்டு சுகி ? ” 

” நீ …நீங்கள் …அ…அந்த லட்டர்…அதில் …தப்புதானே ? ” 

” அப்போது நானும் பன்னிரெண்டாவதுதான் படித்துக் கொண்டிருந்தேன் .கூடப் படித்த பெண்ணிற்கு காதல் கடிதம் எழுதினேன் .அப்போதெல்லாம் காதல் என்றாலே முத்தம் என்றுதான் எண்ணம் .அதனால்தான் அந்தக் கடிதத்தில் முத்தத்தை பற்றி கொஞ்சம் அதிகமாகவே எழுதிவிட்டேன் .பிறகு கொடுக்க பயந்து பாக்கெட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டேன் .ஒரு வாரத்தில் மறந்தும் போனேன்.எங்கோ தொலைந்திருந்த அந்தக் கடிதம் எப்படியோ உன் பார்வையில் பட்டு…” 

அப்போது ராக்கிற்கு பதினெட்டே வயதுதானா ? அந்த வயதில் என்ன விபரம் தெரிந்திருக்கும் ?  கொடுக்கப்படாமல் பாக்கெட்டிற்குள்ளேயே அமுங்கிப் போனதா அவனது லவ் …பப்பி லவ் ? தனது அவசர புத்தியை நினைத்து நொந்தாள் சுகன்யா .

“ஆனால் அந்த சண்டையை நம் பிரிவுக்கு உபயோகித்துக் கொண்டேன்” 

“எப்போது பிரிவதென்று காத்திருந்தீர்கள்தானே?”

” ஆமாம்”தயங்காமல் ஒத்துக் கொண்டான்.

“போனுக்குள் வரும் அன் வான்டடு கால்ஸ்,மெசேஜை வடிகட்டி தேக்கி வைக்கும் ஆப் ஒன்றை நிறுவ உழைத்துக் கொண்டிருந்தேன்.நீயோ பாதி படிப்பிலிருந்தாய்.வாழ்வின் முக்கிய தருணத்தில் நின்று கொண்டிருந்தோம் நாம்.குடும்பம்,பொறுப்பு என்பவைகளுக்கான வயது இருவருக்குமேயில்லை.

அதனால் உன்னை மீண்டும் உன் பெற்றோரிடமே அனுப்பினேன்.இப்போது என் ஆப் இல்லாத போனே கிடையாது…எதிர் ப்ளாக்கிலிருக்கும் உனக்காகவே இங்கே வீடு வாங்கி வந்தேன்” அவளை நெருங்கினான்.

” பதினெட்டு வயதிற்கு முத்தமென்பது ,தொடாதேயென மதில் மேல் வைக்கப்படும் பரிசுப் பொதி.ஒன்று பாக்கெட்டிற்குள் அடங்கிப் போகும் ,அல்லது மாடிப்படி இருளை தேடும் .” அவனின் விழிகள் அவள் இதழ்களை தடவி நகர்ந்தன.

” ஆனால் இருபத்தியெட்டு வயதிற்கு முத்தத்தின் மூலை முடுக்கெல்லாம் அத்துபடி .பார்க்கிறாயா ? ” அவன் உதடுகள் அவளிதழ்களுடன் யுத்தத்தை தொடங்கின.

கசடுகள் மறைந்து கணவன் மனைவிக்குள் காதல் முத்தங்களாக மூச்சிரைத்தது.




 

What’s your Reaction?
+1
14
+1
6
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!