Serial Stories அன்பெனும் ரகசியம் அன்பெனும் ரகசியம்-

அன்பெனும் ரகசியம்-3

 3

காலை ஒன்பதரை மணியிருக்கும்,

“டுகு… டுகு… டுகு… டுகு”

வாசலில் குடுகுடுப்பைக்காரனின் சத்தம் கேட்க, அவசரமாய் வெளியில் வந்தாள் சுமதி.

குடுகுடுப்பை ராஜய்யன் அவளைப் பார்த்ததும், “ஜக்கம்மா துணையிருப்பாள் தாயி… நெனச்ச காரியம் நன்மையாயிருந்தா நிச்சயம் ஜக்கம்மா துணை வருவா தாயி” என்று உரத்த குரலில் சொல்ல,

 “யோவ்…. அதெல்லாம் இருக்கட்டும், நான் கேட்கற கேள்விக்கு மொதல்ல பதில் சொல்லு… பழைய புடவைகள் இருக்கு வாங்கிக்குவியா?”

 “தாராளமா வாங்கிக்கறேன் தாயி…”

 அடுத்த நிமிடம் வீட்டிற்குள் சென்று, மூத்த மனைவி பீரோவிலிருந்த அத்தனை புடவைகளையும் அள்ளிக் கொண்டு வந்து வாசலில் போட்டாள்.

 குடுகுடுப்பைக்காரனே அசந்து போனான்.  ஒரு புடவை அல்லது இரண்டு புடவைகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தவனுக்கு ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட ஐம்பது புடவைகள் கிடைக்க, அவனால் நம்பவே முடியவில்லை.

 “என்ன தாயி… இத்தனையுமா எனக்கு?” தயக்கமாய்க் கேட்டான்.

 “அட ஆமாய்யா…. எடுத்திட்டுப் போய்யா”

 “சரி தாயி” என்ற ராஜய்யன்,  இருப்பதிலேயே சற்றுக் கெட்டியான காட்டன் புடவையொன்றை எடுத்து விரித்து, அதனுள் மற்ற புடவைகளை மடித்து வைத்தான்.

 “யோவ்… சீக்கிரம் எடுத்திட்டு.,.. இடத்தைக் காலி பண்ணுய்யா” பரபரத்தாள் சுமதி.

 “இதோ… இதோ… முடிஞ்சுது தாயி” வேக வேகமாய் மூட்டை கட்டிக் கொண்டு, அந்த மூட்டையைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு, “வர்றேன் தாயி” சொல்லியவாறே நடையைக் கட்டினான்.

 “அப்பாடா… ஒரு வழியா மூத்தாளோட பொடவைகளைக் கை கழுவியாச்சு… இனி என் புருஷனுக்கு அவ ஞாபகமே வராது!… அது செரி… இந்த சுண்டெலியை என்ன பண்றது?” தாடையைத் தட்டிக் கொண்டு யோசித்தாள். “கரெக்ட்… அதையும் இதையும் நல்லவிதமாய்ச் சொல்லி இதைக் கொண்டு போய் வெளியூர் ஹாஸ்டல்ல தள்ளிட வேண்டியதுதான்” அப்போதே மனதிற்குள் அதற்கான திட்டத்தை வகுக்க ஆரம்பித்தாள்.

மறுநாள் இரவு,

சரவணன் ஹாலில் தாயின் புடவையைக் கட்டிக் கொண்டு படுத்திருந்தான்.  தூக்கம் அவனை நிராகரித்திருந்ததால் கொட்டக் கொட்டக் விழித்துக் கொண்டே கிடந்தான்.

உள் அறையில், புது சித்தி தன் தந்தையுடன் பேசிக் கொண்டிருந்தது அவன் காதுகளில் அட்சரம் பிசகாமல் அப்படியே விழுந்தது. “த பாருங்க… நம்மூர் ஸ்கூலெல்லாம் ஒண்ணும் சரியில்லை… இங்க சொல்லிக் கொடுக்கற டீச்சர்களுக்கே ஒண்ணும் தெரிய மாட்டேங்குது” கணவரின் நெஞ்சு முடிகளுக்குள் விரலை விட்டுக் குடைந்தவாறே கேட்டாள்.




 “சரி அதனால…?”

 “நம்ம சரவணனை… எங்காவது வெளியூர்ல நல்லா இங்கிலீஸ் சொல்லித் தர்ற மாதிரி ஸ்கூல்ல சேர்த்துடலாம்ங்க… அவனாவது நல்லா படிச்சு… எதிர்காலத்துல நல்ல வசதி வாய்ப்புக்களோட வாழட்டுமே” சுமதி தன் அஸ்திரத்தை மெல்ல எய்தாள்.

 “ம்ம்ம்… நீ சொல்றதைக் கேட்க நல்லாத்தான் இருக்கு!… ஆனா அவனால் என்னை விட்டுட்டு வெளியூர் போய் ஹாஸ்டல்ல தங்கிப் படிக்க முடியாதுடி… ரொம்ப ஹோம் ஸிக் இருக்கு அவனுக்கு”

 “அய்ய…. அவன் ஆம்பளைப் பையனுங்க… இப்படிப் பெண் பிள்ளையை வளர்க்கற மாதிரி பொத்திப் பொத்தி வளர்த்தா… அவன் எப்படி எதிர்காலத்துல தனியா பொழைப்பான்?”

 “இல்லை சுமதி… நான் என்ன சொல்றேன்னா…”

 மேற்கொண்டு அவரைப் பேச விடாமல் தன் “அந்த” மாதிரியான அஸ்திரங்களை எய்து வென்றாள்.

வெளியில் படுத்துக் கொண்டிருந்த சரவணனுக்கு “திக்”கென்றானது.  தாயைப் பிரிந்து தவித்துக் கொண்டிருக்கும் பிஞ்சு மனதை தந்தையையும் பிரிந்து விடுவோமா?.. என்கிற அச்சம் வியாபிக்க ஆரம்பித்தது.

கண்களை மூடித் தூக்கத்திற்காக முயற்சி செய்தவனின் கால்களை யாரோ இதமாய் அழுத்தி விடுவது போலிருக்க, மெல்ல கண்களைத் திறந்து பார்த்தான்.  இருட்டில் அவன் தாய் அமர்ந்திருப்பது போல் தெரிய “அம்மா” என்று சன்னக் குரலில் அழைத்தபடி எழுந்து அமர்ந்தான். அப்போதுதான் புரிந்தது அது வெறும் பிரமையென்று.

மீண்டும் படுத்து, தாயாரின் புடவையை இறுகக் கட்டிக் கொண்டான்.

வெளியே கிடக்கும் மகனின் தவிப்பை மறந்து, உள்ளறையில் தனது புது மனைவியின் தவிப்பைத் தீர்த்துக் கொண்டிருந்தார் அவன் தந்தை குமரேசன்.

மறுநாள் மாலை நான்கு மணி வாக்கில் பள்ளியிலிருந்து வீடு திரும்பிய தன் படுக்கை மீது கிடந்த தாயின் சேலை காணாதிருக்க தேடினான்.

அவன் என்ன தேடுகிறான் என்பது தெரிந்தும் தெரியாதவள் போல் ஹால் சோபாவில் அமர்ந்து வேர்க்கடலையை உரித்து உரித்துத் தின்று கொண்டிருந்தாள் சுமதி.

“சித்தியிடம் கேட்கலாமா?…வேண்டாமா?” என்று தனக்குள் கேட்டுக் கொண்ட போது,

 “வேண்டாம் …கேட்காதே… அப்பா இல்லாத நேரம் அவள் உன்னை வெச்சு செஞ்சிடுவா” மனதின் இன்னொரு மூலையிலிருந்து எச்சரிக்கைக் குரலொன்று கேட்டது.




அமைதியானான் சரவணன்.  ஆனாலும் உள்ளுக்குள் ஒரு வேதனை அவனைப் பிறாண்டிக் கொண்டேயிருந்தது.  “எங்க போச்சு அம்மாவோட சேலை?… ஒரு வேளை சித்தி அதைத் துவைத்துக் காயப் போட்டிருப்பாங்களோ?:”

நப்பாசையுடன் எழுந்து மொட்டை மாடியை நோக்கிச் சென்றவன், தொங்கிப் போன முகத்துடன் திரும்பி வந்தான்.

****

இரவு எட்டு மணி வாக்கில் வீடு திரும்பிய குமரேசன், சரவணனின் முகத்தைப் பார்த்ததுமே கண்டுபிடித்து விட்டார்.  “ஸம் திங் ராங்!… என்னமோ நடந்திருக்கு… அதான் சரவணன் முகம் சோகமாயிருக்கு”

உறங்கப் போகும் முன் மொட்டை மாடிக்குச் சென்று சிறிது நேரம் உலாத்தி விட்டு வரும் குமரேசன், இன்று சரவணனையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.

 “என்னப்பா… ஹோம் வொர்க் எல்லாம் செஞ்சாச்சா?”

 “இல்லை” என்றான் அவன் எங்கோ பார்த்துக் கொண்டு,

 “அது செரி… எப்பவும் ‘கல…கல’ன்னு இருக்கும் என் சரவணன்… இன்னிக்கு ஏன் “உர்ர்ர்ர்”ன்னு இருக்கான்?… சித்தி திட்டினாங்களா?”

 “இல்லை…” அதே ஒற்றை வார்த்தை பதில்.

 சட்டென்று குனிந்து அவன் தோளைத் தொட்டுத் திருப்பிய குமரேசன், “சொல்லுப்பா… என்ன பிரச்சினை உனக்கு… உன் முகம் இப்படியிருந்தா அப்பா மனசு எவ்வளவு கஷ்டப்படும்ன்னு உனக்குத் தெரியாதா?” கரகரத்த குரலில் கேட்டான்.

முதலில் தயங்கியவன், “வந்து… வந்து…என் படுக்கை மேலே நான் வெச்சிருந்த அம்மாவோட சேலையைக் காணோம்” என்றான்.

 “அடச்சே… இவ்வளவுதானா?… இதுக்குத்தான் சோகமாயிருந்தியா?… சித்தி எடுத்து எங்காச்சும் வெச்சிருப்பாங்க… இல்லேன்னா துவைச்சுக் காயப் போட்டிருப்பாங்க”

 “இல்லை மொட்டை மாடில சித்தியோட புடவைகள் மட்டும்தான் காயுது… அம்மாவோட சேலை இல்லை”

 “சரி… வா… வந்து சாப்பிடு… நான் அப்புறமா தேடித் தர்றேன்” குமரேசன் மகனைச் சமாதானப்படுத்த முயல,

 “இல்லை எனக்கு அம்மாவோட சேலை வேணும்… இப்பவே வேணும்.. அப்பத்தான் நான் சாப்பிட வருவேன்” சரவணனின் குரலும், முகபாவமும் வழக்கத்தை விட, சற்று கடுமையாயிருக்க, குமரசேனுக்கு அது லேசான உறுத்தலைத் தந்தது.  “எங்கியோ… ஏதோ தப்பு நடந்திருக்கு… அது சரவணனோட அதீத சக்திக்குத் தெரிஞ்சிருக்கு… அதான் இத்தனை பிடிவாதம் பிடிக்கறான்” 

மெல்லச் சென்று சரவணனின் தோள்களில் கை போட்டு, “சரி வா… பீரோவில் இருக்கற அம்மாவோட வேறொரு சேலையை எடுத்துத் தர்றேன்… அதை வெச்சுக்கிட்டு இன்னிக்குத் தூங்கு… என்ன?” சொல்லியவாறே பீரோவை நோக்கி அவனையும் இழுத்துச் சென்றார்.

பார்த்துக் கொண்டிருந்த சுமதிக்கு அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. “ஆஹா… இன்னிக்குத்தான் உள்ளார மூத்தாளோட மொத்த பொடவைகளையும் எடுத்துக் குடுகுடுப்பைக்காரனுக்கு குடுத்தேன்… கரெக்டா இன்னிக்குன்னு பார்த்து இவர் பீரோவைத் திறக்கப் போறாரே… என்ன பண்றது?”

தவித்தாள்.  மூளை “பர…பர”வென்று யோசித்தது.  வேக வேகமாய் கணவன் அருகில் சென்று, “ஏங்க மணி என்ன ஆகுது பாருங்க… ஒன்பதே ஆயிடுச்சு.. நீங்க மதியம் ஒரு மணிக்கு சாப்பிட்டது… வாங்க மொதல்ல வயித்துக் கொஞ்சம் சாப்பிட்டுட்டு அப்புறமா உங்க அருமை மகனைக் கொஞ்சுங்க” என்றாள்.

“இரு சுமதி… பயல் பாவம் அம்மாவோட சேலையைக் காணோம்ன்னு பரிதவிக்கறான்… அவனுக்கு வேறொரு சேலையை எடுத்துக் குடுத்திட்டு வந்திடறேன்” சொல்லியதோடு நில்லாமல் வேக வேகமாய் பீரோ அருகில் அதை அதே வேகத்துடன் நீக்கினார்.

அடுத்த கணம்,

கண்கள் சிவக்க சுமதி பக்கம் திரும்பி, “சுமதி… இதிலிருந்த புடவைகளெல்லாம் எங்கே?” கத்தலாய்க் கேட்டார்.

 “அது… வந்து… எல்லாமே ரொம்ப பழசாகி…. ஒரு மாதிரி முடை நாற்றம் அடிச்சதினால… எல்லாத்தையும் தூக்கிப் பாத்திரக்காரனுக்குப் போட்டுட்டேன்” தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

அவளை எரித்து விடுவது போல் பார்த்த குமரேசன், “நீ இந்த பீரோவை எதுக்குத் திறக்கறே?… அதான் உனக்குன்னு ஒரு புது பீரோ குடுத்திருக்காங்கல்ல…?” கேட்டார்.

“ஏன்?… ஏன்?… நான் திறக்கக் கூடாதா?… அப்படியென்ன  பொக்கிஷம் உள்ளார வெச்சிருக்கீங்க?” சுமதி கோபமாய்க் கேட்டாள்.

 “பொக்கிஷம்தாண்டி!… உனக்கு வேணா அது சாதாரணமாய்த் தெரியலாம்… ஆனா சரவணனுக்கு அதுதான் பொக்கிஷம்”




 “ப்ச்” என்று அலட்சியம் காட்டியவள், “உங்களுக்கென்ன?… உங்க பையனுக்குக் கட்டிப் பிடிச்சுத் தூங்கறதுக்கு ஒரு சேலை வேணும்… அவ்வளவுதானே… என்னோட பழைய சேலை ஒண்ணு தர்றேன்.. அதைப் பிடிச்சுக்கிட்டுத் தூங்கச் சொல்லுங்க” என்றாள்.

 “ஏய்… என்ன பேசறே?… அதுல அவனோட அம்மா வாசனையை அவன் சுவாசிக்கறான்”

 “அதெல்லாம் சும்மா… கற்பனை…”

தொடர்ந்து அவளோடு விவாதிக்க விரும்பாத குமரேசன், “சரி அந்த புடவைகளையெல்லாம் எந்தப் பாத்திரக்காரனுக்குப் போட்டே… அவன் கடை எங்கிருக்கு?ன்னு சொல்லு… நான் போய் அவனைக் கேட்டு நாலஞ்சு சேலைகளையாவது திருப்பி வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்ல,

அவரை ஏற இறங்கப் பார்த்த சுமதி, “ஆமாம்… உண்மையிலேயே நீங்க புடவையை அவனுக்குக் கேட்கறீங்களா?.. இல்லை…உங்களுக்கு… நீங்க கட்டிப் பிடிச்சுக்கிட்டுத் தூங்க கேட்கறீங்களா?”

அவளிடமிருந்து அப்படியொரு கேள்வியை எதிர்பார்த்திராத குமரேசனுக்கு என்ன பதில் சொல்லுவதென்றே புரியாத நிலையில் அவளைக் கூர்ந்து பார்க்க,

தன்னால் அங்கு ஒரு கலவரம் உண்டாவதை விரும்பாத சரவணன், “அப்பா… எனக்கு அம்மா புடவை வேண்டாம்ப்பா… நான் அம்மா வாசனை இல்லாமலே தூங்கிப் பழகிக்கறேன்ப்பா” என்றான்.

அதைக் கேட்க குமரேசனுக்கு தொண்டை அடைத்தது.  மூத்த மனைவி பாக்கியத்தின் ஞாபகம் திடீரென வந்து போனது.  அவர் வாய் அவரையுமறியாமல், “என்னை மன்னிச்சிடு பாக்கியம்” என்றது.




 

What’s your Reaction?
+1
10
+1
8
+1
2
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!