Serial Stories வானவில் தேவதை

வானவில் தேவதை -29

30

 

இளஞ்சிவப்பு வண்ணத்தில் வெள்ளி கற்களை பார்டராக கோர்த்து , ஆங்காங்கே காப்பர் நிற கண்ணாடி பாசிகளை பதித்த மென் புடவை . சபர்மதியின் உடலோடு ஒட்டி குழைந்தது .சபர்மதியின் தங்க நிறத்தை தூக்கி காண்பித்தது .பொருத்தமான இளஞ்சிவப்பு ரோஜா ஆரத்தை கூந்தலில் வளைத்து சொருகினாள் .பொருத்தமாக டிசைனர் நகைகள் ஜொலிக்க தேவதையாக வெளியே வந்த சபர்மதியை பார்த்த அம்சவல்லி கை சொடுக்கி திருஷ்டி கழித்தாள் .

 


அன்பாக அணைத்துக்கொண்டார் சுந்தர வடிவு .தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார் சத்யேந்திரன் .”அழகாக இருக்கிறாய் சபர்மதி ” பாசமாக கை பற்றிக்கொண்டாள் அனுசூயா .” கன்னத்தில் ஒரு பொட்டு வைத்துக்கொள்ளம்மா ” சொன்னதோடு நில்லாமல் தானே பொட்டை தேடி எடுத்து வந்து அவள் கன்னத்தில் சிறியதாக வைத்து விட்டான் தர்மன் .

 

உடனே அவளை அணைத்துக்கொள்ள வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்ற முடியாமல் , பரபரத்த தன் கைகளை சோபாவை அழுந்த பற்றியபடி நின்ற பூரணனை பார்த்து ” என்ன மாமா , எங்க சபர்மதியை பார்த்து அப்படியே உறைந்து போய் நிற்கிறீர்களே ” என கேலி பேசினான் ராஜசேகரன் .

 

” டேய் சும்மா இருடா , போங்கடா போய் விழாவிற்கான ஏற்பாடுகளை பாருங்கள் ” என மகன்களை சத்யேந்திரன் அனுப்பினார் .

 

கொஞ்சம் தனியாக வாயேன் ” சபர்மதியிடம் கண்களால் பூரணன் வேண்ட ” முடியாது …”, என அவனுக்கு பதில் விழி செய்தி அனுப்பியபடி உள்ளே சென்றாள் சபர்மதி .

 

தனது போனை ஏதோ நோண்டியபடி அமர்ந்திருந்தான் சதிஷ” .அவனைப்பார்த்ததும் முன்பு அவனை தாங்கள் காதலர்கள் என பூரணனிடம் சொல்ல சொன்னது ஞாபகம் வந்தது . அதற்கு பூரணனின் என்ன கூறியிருப்பான் .அன்று நான் அதனைக் கூட கேட்கவில்லையே என நினைத்தபடி “சாப்பிட்டாயா சதிஷ் ” என கேட்டபடி அவனருகே அமர்ந்தாள் .

 


” ஓ…என்றபடி நிமிர்ந்தவன் ” சபர் ரொம்ப அழகா இருக்க ” என பாராட்டினான் .

 

” நன்றிப்பா …ஆமா அன்று பூரணன் என்ன சொன்னார் ..”

 

, என்று …? “

 

” அதுதான் நாம் காதலிப்பதாக உன்னை சொல்ல சொன்னேனே அன்று .. “,

 

” அதுதான் அன்றே அவரிடம் சொல்லிவிட்டேனே.நீ நம் இருவரும் காதலிப்பதாக சொல்ல சொன்னதாக அவரிடம் தெளிவாக சொல்லிவிட்டேன் ” .

 

” உன்னை என்ன செய்ய சொன்னால் ,என்ன செய்து வைத்திருக்கிறாய் ” முறைத்தாள் சபர்மதி .

 

” நான் உன் நண்பன் சபர்மதி .உனக்கு நன்மை விளையுமென்றால் எத்தனை பொய் வேண்டுமானாலும்

சொல்வேன் .ஆனால் உனக்கு தீங்கு என்றால் நீயே சொல்ல சொன்னாலும் உனக்கெதிராக என் நாக்கு சிறிது கூட அசையாது .இங்கே பார் ….” அவன் போனிலிருந்து சபர்மதி போனுக்கு ஒரு ஏதோ அனுப்பினான் .

 

” திறந்து பார் …”

 

அது போட்டோ .சபர்மதியும் , பூரணசந்திரனும் மாடியில் படிக்கட்டுகளின் ஆரம்பத்தில் நின்றிருந்தனர் .சபர்மதியின் கூந்தலை வருடியபடி காதலாக அவளை பார்த்தபடி பூரணனும் , வெட்கம் கலந்த மையல் பார்வையுடன் சபர்மதியுமாக அருமையான புகைப்படம் அது .

 


” அன்று காபி குடித்துவிட்டு வரும்போது நீங்கள் நின்ற நிலை என் கண்ணில் பட்டது .இதை விட சிறந்த காதல் ஜோடி உலகத்திலேயே கிடையாது என மனதிற்கு பட்டது .உடனே க்ளிக்கிவிட்டேன் .உனக்கு என்ன குழப்பமென்று எனக்கு தெரியாது .ஆனால் பூரணசந்திரன் சார் கண்டிப்பாக உன்னை  கண் போல் காப்பார் என்பதில் மட்டும் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது .நீயும் அவரை மிக விரும்புகிறாய் .உன்னை நீயே ஏமாற்றாமல் பூரணனிடம் உட்கார்ந்து பேசு …”

 

சதிஷின் தோழமையில் நெஞ்சம் நெகிழ்ந்தது சபர்மதிக்கு .” பேசத்தான் போகிறேன் தோழனே …பூரணனிடம் இல்லை .என்னை இப்படி குழப்பிய அந்த ஸ்வாதியிடம் …..” இப்படி நினைத்தபடி ” கண்டிப்பாக சதிஷ் ..” என தனது அந்த சிறந்த நண்பனுக்கு வாக்களித்தாள் .

 

இரவு ஏழு மணிக்கு விழா ஆரம்பம் .ஐந்து மணி அளவில் தோட்டத்தில் நின்று மின்விளக்கு அலங்காரங்களை சரி பார்த்துக்கொண்டிருந்தாள் சபர்மதி .

அவசரமாக வந்த சம்யுக்தா ,

 

” சபர்மதி பூரணன் விளக்குகளை சரிபார்த்து கொண்டிருந்த போது ஷாக் அடித்துவிட்டது .காரில் அமர வைத்திருக்கிறோம்.ஆஸ்பிடல்  போகலாமா ..வருகிறாயா …?என்றாள் பதட்டத்துடன் .

 

” என்ன ..எங்கே …”, கூட யாரையும் அழைக்க வேண்டுமென தோன்றாமல் விரைந்து சென்று காரினுள் எட்டிப்பார்த்த சபர்மதி உள்ளே இழுத்து போடப்பட்டாள் .துவண்டு சீட்டில் சரிந்தாள் .

 

“மயக்க மருந்து ஸ்பிரே அடிக்க கூட இல்லை.  அதற்குள் துவண்டுவிட்டாள் .அப்படி வைத்திருக்கிறாள் உடம்பை .இவளெல்லாம் நமக்கு போட்டி . காரை எடு ” என்றபடி வெளியே வந்த ஸ்வாதி அதிர்ந்தாள் .அனுசூயா ..நின்றிருந்தாள் .

 

” ஏய் இரண்டு பேரும் என்ன செய்கிறீர்கள் ? ” என்றபடி .

 


“ஸ்வாதி அவளையும் இழுத்து தள்ளு” கத்திய சம்யுக்தா ஒட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை ஸ்டார்ட் பண்ணினாள் .

 

சபர்மதி மேலேயே  இழுத்து போடப்பட்ட அனுசூயாவும் செயலிழக்க , ஸ்வாதி முன்னால் அமர்ந்து கொள்ள கார் கிளம்பியது .

 

” வாசலில் நம் காரை நிறுத்த மாட்டார்களா …?” காரை ஓட்டியபடி சம்யுக்தா கேட்டாள் .

 

” இந்த வீட்டை பொறுத்த வரை இப்போது நாம் இருவரும் வேண்டாத ஜென்மங்கள் .கார் எனது கார் .நாமிருவரும் எங்கே போனாலும் யாருக்கும் கவலையில்லை .திரும்பி வராவிட்டால் நல்லது என்று சலாமிட்டு அனுப்பி வைப்பார்கள் பார் ” என்றாள் ஸ்வாதி கசப்புடன் .

 

அவள் சொன்னது போலத்தான் நடந்தது .இவர்கள் இருவரையும் காரினுள் கண்டதும் ” போங்க ..போங்க “என்பதாக சைகை காட்டி , கதவை விரிய திறந்து வைத்தான் கூர்க்கா .

 

கார் வீட்டை விட்டு வெளியேறி சிறிது தூரம் சென்றதும் , காரை நிறுத்து என்ற ஸ்வாதி , இறங்கி பின்னால் சென்று , ஒருவர் மேல் ஒருவர் சரிந்து கிடந்த சபர்மதியையும் , அனுசூயாவையும் சோதித்து , அவர்கள் இருவரின் மொபைலையும் எடுத்து வெளியே வீசினாள் .

 

” எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் தர்மன் என்னை தேடுவான் ” காரை ஓட்டியபடி சம்யுக்தா சொல்ல சிரித்தாள் ஸ்வாதி .

 

“நினைத்துக்கொண்டிரு .உன் கனவில் நடக்கும் அது ….”

 


” உளறாதே அன்று ஏதோ கோபத்தில் திட்டிவிட்டான் .அதற்கு எங்கள் திருமணத்திற்கு பின் அவனை கவனித்து கொள்கிறேன் “

 

” உங்கள் திருமணமா …அவன் இதோ பின்னால் மொட்டைத்தலையுடன் கிடக்கிறாளே அவளைத்தான் மணக்க போகிறான் .தெரியுமா …? “

 

, நிஜமாகவா சொல்கிறாய் …? “,கீச்சிட்டாள் சம்யக்தா .

 

” ம் …அதறகு காரணமும் இந்த சபர்மதிதான் …அவள்தான் இப்படி அண்ணனுக்கு மந்திரம் போட்டு வைத்திருக்கிறாள் “

 

” இந்த வேலைக்காரியை மணப்பதற்கு இந்த ஆட்டக்காரி அண்ணனுக்கு தூதா ? அப்போ நீ ஏற்பாடு பண்ணி வைத்திருக்கின்ற அந்த மும்பை சிவப்பு விளக்கு ஆட்களுக்கு இரண்டு பேரையுமே பார்சல் பண்ண வேண்டியதுதான் ” வெறுப்பை உமிழ்ந்தாள் சம்யுக்தா .

 

பின்னால் சலனமின்றி சபர்மதியும்

அனுசூயாவும் மயங்கி கிடக்க கார் சாலையில் விரைந்து கொண்டிருந்தது .




What’s your Reaction?
+1
31
+1
30
+1
0
+1
0
+1
0
+1
0
+1
9
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!