Serial Stories நந்தனின் மீரா

நந்தனின் மீரா-31

31

இடறல்கள் ஏதுமின்றி வழுவழுப்பாய் கூட்டி வைத்த
பசுஞ்சாண முற்ற மனதில் ,
அழுத்த காலடியாய்
மெத்தென பதிந்து கிடக்கிறது
உனது முதல் முத்தம் .

மீராவால் நம்பவே முடியவில்லை .முகத்தை பிடித்து பார்த்தாள். கைகளை அசைத்து பார்த்தாள் . பாட்டியின் சாவை உணர்ந்தாலும் ஏற்க மனமின்றி வீட்டினுள் ஓடியவள்…

” ஏங்க …வாங்க பாட்டியை பாருங்க .எழுப்புங்க …” கணவனை இழுத்து வந்தாள் .

படபடப்புடன் வீட்டினர் அனைவரும் கூடிவிட்டனர் .பாட்டியின் மறைவை நந்தகுமார் உறுதிபடுத்த சுந்தரி அழ ஆரம்பித்தாள் .குருநாதன் வயதை மறந்து குழந்தையாய் அம்மாவின் காலில் விழுந்து கதறினார். இடிந்து போய் பாட்டி முகத்தை பார்த்தபடி அமர்ந்துவிட்ட மீராவின் தோள்களை ஆதரவாக அழுத்திய நந்தகுமார் அம்மாவை அணைத்து சமாதானப்படுத்த துவங்கினான் .

பாட்டியின் கையை பிடித்தபடி அமர்ந்து விட்டான் சசிகுமார் .அப்போதுதான் பிரவீணா , மாளவிகாவிற்கு மீண்டும் தகவல் சொல்லப்பட அழுதபடி அவர்கள் வந்து சேர்ந்தனர் .தொடர்ந்து உள்ளூர் , வெளியூர் உறவினர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டது .

பாட்டி நடுவீட்டில் தலைமாட்டில் எரியும் விளக்குடன் கிடத்தப்பட்டிருப்பதை நம்ப முடியாமல் பார்த்தாள் மீரா .பாட்டி அளித்த காப்பு மணிக்கட்டில் கனத்துக் கொண்டிருந்தது .இப்படி திடீரென விட்டுப் போவாரென நினைக்கவில்லையே .மனம் மரத்து …மூளை வேலை செய்யாமல் அழுகை கூட வரவில்லை மீராவிற்கு .

சுந்தரி , பிரவீணா , மாளவிகா எல்லோரும் அழுதபடி இருக்க …மீரா பாட்டியை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் .இனி என் மனக்கலக்கங்களை நான் யாரிடம் சொல்லுவேன்.எனக்கு ஆறுதல் கூற இனி இந்த வீட்டில் ஆளில்லையே …இதையே அவள் மனம் மாறி…மாறி நினைத்துக் கொண்டிருந்தது.

” அடக்காதே மீரா ….அழுது விடும்மா ….” அங்குமிங்குமாக ஓடிக் கொண்டிருக்கும் வேலைகளின் இடையிலும் இவளருகில் வந்து தோள்களை வருடி சொல்லிவிட்டு போனான் நந்தகுமார் .

” இந்தப் பொண்ணு சும்மா பேருக்காவது அழலாம் ….'” அக்கம் பக்க ,தூரத்து சொந்த பெண்கள் சிலர் பெயருக்கு அழுகை நாடகம் போட்டபடி தங்களுக்குள் கிசுகிசுத்தனர் .

எல்லா பேச்சுக்களும் , செய்கைகளும் காதில் கேட்டு மனதில் பட்டாலும் …மூளையில் ஏறாமல் வெறித்தபடி அப்படியே அமர்ந்திருந்தாள் மீரா .

” அய்யோ சுந்தரி …இப்படி ஆயிடுச்சே ….” என்ற பெரிய அழுகையுடன் சங்கீதாவும்

” அத்தை ….பாட்டி போயிட்டாங்களே ….” என்ற சத்த கதறலுடன் மிருணாளினியும் உள்ளே வந்தனர் .

சுந்தரியும் அழுகையுடன் அவர்களிடம் தஞ்சமடைந்தாள் .கொஞ்ச நேரம் இருவருமாக பாட்டியின் அருமை , பெருமைகளை சொல்லி அழுதனர் .

” நான் இனி என்ன செய்வேனென்று தெரியவில்லை அண்ணி .படுக்கையில் இருந்து கொண்டே அத்தைதான் இந்த வீட்டை நடத்திக் கொண்டிருந்தார்கள் .இனி நான் என்ன செய்ய போகிறேன் …? ” சுந்தரி அழ….




” கவலைப்படாதே சுந்தரி …உனக்கு நாங்கெல்லாம் இல்லை …? நீ தைரியமாக இரு …” என அவர்கள் ஆறுதல் சொல்ல ….

மீராவிற்கு தலை வலிக்க ஆரம்பித்தது .கடவுளே என்ன நடிப்பு …!!! இருவரும் முன்பு எப்படி பேசினார்களென பாட்டி சொன்னாரே …இப்போது அவர் மறைந்ததும் இப்படியெல்லாம் ஏமாற்றுகின்றனரே …இந்த அப்பாவி அத்தையும் இவர்களிடம் ஏமாந்து நிற்கிறாரே …

தீடீரென அவள் மணிக்கட்டு அழுத்தமாக இறுக்கப்பட்டது .சுள்ளென வலிக்க திரும்பி பார்த்தாள் .

மிருணாளினிதான்….” இது எப்படி உன் கைக்கு வந்தது …? ” அவள் கை தங்க காப்பை காட்டி கேட்டாள்.

” ஏன் …? பாட்டிதான் கொடுத்தாங்க …”

” ஒரு வழியாக பாட்டியை ஏமாற்றி வாங்கிவிட்டாயா …? ” முணுமுணுவென பேசினாலும் குரோதம் வழிந்தது அவள் குரலில் .

” யாரையும் தொட்டு கூட பார்க்க விட மாட்டாங்களே .உன்னிடம் எப்படி கொடுத்தாங்க …? என்ன சொல்லி வாங்கினாய் …? “

இவ்வளவு நேரம் சுற்றுப்புறம் உரைக்காமல் இருந்த மீரா …இப்போது மிருணாளினியின் கேள்வியில் நொந்து நிகழ்வுக்கு வந்தாள் .

நடுவீட்டில் பிணத்தை கிடத்தி வைத்துவிட்டு நகையை ஆராய்கிறாளே ….சே என்ன மனுசி இவள் ….மனம் அருவுறுப்பில் சுருங்க ….

” பாட்டிகிட்டேயே கேட்டு தெரிந்து கொள்ளேன்  …” என்றாள் லேசான குரூரத்துடன்.

மிருணாளினியின் முகம் சிவந்து சுருங்கி …பயங்கரமாக மாறியது .

அவளை கண்டு கொள்ளாத பாவனையில் அயர்வுடன் சுவரில் சாய்ந்து கண்களை மூடியவளை சுந்தரி உலுக்கினாள் .

” அண்ணிக்கும் , மிருணாவிற்கும் …காபி கொண்டு வா மீரா .பாவம் அழுதழுது தொண்டை காய்ந்திருக்கும் ….”

இப்போது இருக்கும் மனநிலையில் அவர்களுக்கு உபச்சாரம் பண்ணும் எண்ணம் மீராவிற்கு  இல்லை .

உடனே போய் காபி போடு …பார்வை பார்த்தவர்களை அலட்சியமாக பார்த்தவள் ….

” எனக்கு தலை சுற்றுகிறது அத்தை .போய் படுக்க போகிறேன் …” சொல்லிவிட்டு எழுந்து உள்ளறைக்கு வந்தாள் .




உண்மையாகவே கால்கள் தடுமாறி தலை சுற்றியது .காலையிலிருந்து சரியாக சாப்பிடவில்லை ..நினைத்தபடி நடக்க முடியாமல் தடுமாறியவளை அடுத்த அறையிலிருந்து பார்த்துவிட்ட நந்தகுமார் ஓடி வந்து தாங்கினான் .

” மீரா …என்னம்மா …என்ன ஆச்சி …? “

” அதிகமாக வேலை வந்துவிட்டால் உங்க பொண்டாட்டிக்கு தலைசுற்றல் வந்துவிடும் அத்தான் ….” கிண்டல் செய்படி வந்தாள் மிருணாளினி .

” ஆமாம் அவளுக்கு மெல்லிய உடம்பு .நீ போய் அவளுக்கு ஒரு காபி போட்டு கொண்டு வா….” சொன்ன நந்தகுமாரை ஆச்சரியமாக மீராவும் , ஆத்திரமாக மிருணாளினியும் பார்த்தனர் .

” வழியை விடு மிருணா …நான் அவளை படுக்க வைக்க போகிறேன் ….” அதட்டலுடன் அவளை விலக சொன்னவன் , மீராவை கைகளில் தூக்கிக் கொண்டு போய் கட்டிலில் படுக்க வைத்தான் .

அதை பார்த்துவிட்டு பிரவீணாவும் , மாளவிகாவும் வேகமாக வந்தனர் .மூவரும் சூழ்ந்து நின்று மீராவை நலம் விசாரிப்பதை நகம் கடித்தபடி கோபத்தோடு பார்த்தாள் மிருணாளினி .

படுக்கையில் படுத்திருந்த மீரா திடீரென எழுந்து …பாத்ரூமிற்கு போய் வாந்தி எடுத்துவிட்டு வந்தாள் .

“மீரா இந்த மாதம் குளித்துவிட்டாயா …? ” பிரவீணா சந்தேகமாக கேட்க …மீரா திகைத்தாள் .

வேகமாக தனக்குள் கணக்கிட்ட மீரா …” ஐம்பத்தியெட்டு நாளாச்சு ” என்றாள்.அவளாலேயே நம்பமுடியவில்லை .

” ஐ…இரண்டு மாசம் ஆகப் போகுதா …? அண்ணா அப்போது நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும் .ஏன்ணா …சஸ்பென்சா இருக்கட்டும்னு தானே சொல்லாமல் இருந்தீர்கள் …? நாங்கள் கண்டுபிடித்து விட்டோமே ….” மாளவிகா குதிக்க …

நந்தகுமாரின் முகம் வாடியது .மகிழ்ச்சியான அவன் முகபாவத்தை எதிர்பார்த்து அவனை பார்த்த  மீரா இந்த பாவனையில் தானும் முகம் வாடினாள் .

” இப்போ வந்துடுறேன் ….” ஒட்டாத குரலில் கூறிவிட்டு வெளியேறினான் நந்தகுமார் .




What’s your Reaction?
+1
27
+1
27
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
14 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!