Serial Stories

ஓ.. வசந்தராஜா..!-3

3

“ஐயோ அஸ்வினி நாம் அவனைப் பற்றி பேசியதை கவனித்து விட்டானோ? இங்கே எதற்காக வருகிறான்? நான் கீழே போய் விடட்டுமா?” ஓடப் போன சைந்தவியின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.

“ஒரு இக்கட்டு வந்ததும் ஓடிப் போவாயா? ஒழுங்காக நில்லு”ஓடப் போனவளின் கையை இழுத்தபடி அஸ்வினி நின்றபோது, ஸ்கிரீனை விலக்கியபடி உள்ளே வந்தவன் இவர்கள் இருவரின் கை இழுவை போட்டியில் திகைத்தான்.

“என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” 

பெண்கள் இருவரும் சட்டென கைகளை விடுவித்துக் கொண்டு “ஹி.. ஹி…”  என ஒரு மாதிரி இளித்து வைத்தனர்.

” ஏதாவது வேண்டுமா சார்?” அஸ்வினி கேட்க “நீங்கள் இங்கே ஸ்டூடண்டா ?”அவன் விசாரித்தான்.

“ஆமாம் சார்” எதற்கு கேட்கிறான் என்று புரியாமல் பார்த்தாள்.

” ஸ்டேஜ் ஸ்பீக்கர்ஸ், லைட்டிங் டெகரேஷன், பயர் ஒர்க்ஸ் எல்லாவற்றையும் உங்க லேப்டாப்பிலேயே கண்ட்ரோல் செய்கிறீர்களா?” அவன் கொஞ்சம் ஆச்சரியமாக கேட்க அஸ்வினியினுள் உற்சாகம் எழுந்தது. அவளுடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாயிற்றே!

” ஆமாம் சார்,இது எல்லாமே என்னுடைய ஐடியாதான். இதற்காக பத்து நாட்களாக கிரவுண்ட் ஒர்க் செய்திருக்கிறேன்”

” வெரி குட் எப்படி எல்லாவற்றையும் கண்ட்ரோல் செய்கிறீர்கள்?”

” எல்லாமே கோடிங்தான் சார். இன்ட்ரஸ்ட் இருந்தால் கம்ப்யூட்டரில் எதை வேண்டுமானாலும் செய்யலாம்” பேசியபடியே அஸ்வினியின் விரல்கள் லேப்டாப்பில் நடனமாடி மேடை நிகழ்வுகளை சரி செய்தபடி இருப்பதை பார்த்து நின்றான் வசந்த ராஜ்.

” சார் எனக்கு ஒரு ஆட்டோகிராப்” முகத்திற்கு முன்னால் நீண்ட சிறிய நோட்டில் ஆச்சரியமானான். “ஆட்டோகிராப் போடும் அளவுக்கு நான் என்ன  பெரிய ஆளா?”

“நிச்சயம் சார், நீங்கள் சோசியல் மீடியா பாப்புலர். எல்லாருக்கும் உங்களை தெரிந்திருக்க நியாயம் இல்லை” என்ற சைந்தவியின்பார்வை தங்கையின் பக்கம் பாய்ந்து  மீண்டது. ” மற்றவர்களை விட எனக்கு உங்கள் அருமை தெரியும்.ஏனென்றால் நானும் உங்களைப் போன்றவள்தான்”

“சாரி மேடம் நீங்கள் சொல்ல வருவது புரியவில்லை”

” சார் நானும் ஒரு குக்தான். கேட்டரிங் படித்துவிட்டு உங்களைப் போன்றே youtube சேனல் நடத்திக் கொண்டிருக்கிறேன். சொல்லப்போனால் நீங்களும் நானும்தான் இங்கே ஒன்றாக கூடியவர்கள்” சைந்தவி சொல்ல வசந்த் ராஜின் புருவங்கள் உயர்ந்தது.

” சாரி மேடம் மீண்டும் புரியவில்லை”

” சார் வீ ஆர் செயிலிங்  இன் எ சேம் போட். நாம் ஒரே படகில் பிரயாணித்துக் கொண்டிருக்கிறோம். நமது ஃபீல்டில் எனக்கு நீங்கள் தான் காட்பாதர். உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளலாமா?” சைந்தவி தனது போனை உயர்த்தியபடி அவன் அருகே வர, “அப்போ நீங்க இந்த காலேஜ் ஸ்டுடென்ட் இல்லையா?” என்றான் அவன்.




 சைந்தவிக்கு அடச்சை என்றானது “என்ன சார் ஒரே ஒரு செல்ஃபிக்கு இப்படி படுத்துறீங்க?” அவள் அழுது விடுவாள் போலாகவும் மெலிதாய் சிரித்தவன் “சரி வாங்க” என்று அவளுடன் போட்டோ எடுத்துக் கொண்டான்.

 இவர்கள் பேச்சுக்களை கவனித்தபடி தன் வேலையை பார்த்தபடி இருந்தாள் அஸ்வினி.”உங்கள் பெயர் தெரிஞ்சுக்கலாமா மிஸ்…?” அவன் கேட்க “சைந்தவி என்று அவசரமாக பதில் கொடுத்தாள். 

” நான் செஃப் மேடத்தை கேட்கவில்லை, இந்த லேப்டாப் மேடத்தை கேட்கிறேன்” அவன் சொல்ல இரு பெண்களுக்குமே புன்னகை வந்தது.

” என் பெயர் அஸ்வினி”

“அழகான பெயர். உங்கள் நம்பர் வேண்டுமே”அவன் கேட்கவும்”இல்லை அதெல்லாம் கொடுக்க முடியாது” மறுத்தவள் சைந்தவி.

“ஹலோ மேடம் நீங்கள் ஏன் இடையில் வருகிறீர்கள்?” அவன் கொஞ்சம் கோபமாக கேட்க, “நான் தான் வருவேன். அப்படியெல்லாம் அவள் நம்பர் கொடுக்க அனுமதிக்க மாட்டேன்” சைந்தவி சொல்ல அவன் அஸ்வினியை பார்த்தான்.

 அஸ்வினி தன் உதட்டின் மேல் ஒரு விரல் வைத்து “ம்கூம்” என்று மறுப்பாக தலையசைத்தாள்.

 இருவரையும் மாறி மாறி பார்த்தவன் “நீங்கள் இரண்டு பேரும் சிஸ்டர்ஸா?” என்றான்.

” வாவ்” என்று அஸ்வினி மனதிற்குள் பாராட்ட ,”எப்படி கண்டுபிடித்தீர்கள்?”என்றாள் சைந்தவி.

” நீங்கள் ஒரு ஏழு எட்டு கிலோ குறைத்தீர்களானால் இருவரும் சகோதரிகள் என்று எளிதாக கண்டுபிடித்து விடலாம். ஆனாலும் இப்போதும் சில முக ஜாடைகள் தெரிந்தன” அவன் சொன்னதில் சைந்தவியின் முகம் சூம்பியது.

 குனிந்து சற்று புஷ்டியாக இருந்த தன் உடலை பார்த்துக் கொண்டவள் “அவளை விட இரண்டே கிலோதான் நான் அதிகம்” தன்னைத்தானே அறிவித்துக் கொண்டாள்.

” சரிதான் உங்கள் சிஸ்டர் போன் நம்பர் வேண்டுமே மேடம்” அவன் சைந்தவியிடமே கேட்க “எதற்கு?” என்றாள் கோபமாக.

” இதோ அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வேலை சம்பந்தமாக பேச வேண்டும். என்னுடைய ஹோட்டல்களில் இதுபோல் செய்யும் ஐடியா இருக்கிறது. அதற்காகத்தான்…”

” அவள் இன்னும் படிப்பையே முடிக்கவில்லை சார். உங்களுக்கு படிப்பை முடித்த இதைவிட அதிகம் தெரிந்தவர்கள் நிறைய பேர் கிடைப்பார்களே. எனக்கு கூட உங்களிடம் வேலை பார்க்கும் ஆசை இருக்கிறது”

” அப்படியா மகிழ்ச்சி! நாளையே இரண்டு பேருமே என்னை ஹோட்டலில் தி.நகர் பிராஞ்சில் வந்து பாருங்களேன்”

” அக்கா வருவாள் சார். ஆனால் நான் என் படிப்பை முடித்த பிறகுதான் மற்றவற்றை யோசிக்க வேண்டும். சாரி சார்” அஸ்வினி சொன்னதும் அவன் முகம் லேசாக வாடினாற் போல் தெரிந்தது.

 ஒரு கணம்தான் உடனே மாற்றிக்  கொண்டான். “ஓகே அஸ்வினி படிப்பை முடித்துவிட்டு என்னை வந்து பாருங்கள். நீங்கள் நாளையே வாருங்கள் சைந்தவி. பை..” இருவருக்கும் பொதுவாக கையசைத்து விட்டு அவன் மேடையின் மறுபக்கம் இறங்க தயாராக சைந்தவி வேகமாக அவனுடன் நடந்தாள்.

” சார் என்னுடைய யூடியூப் சேனலுக்கு ஒரே ஒரு இன்டர்வியூ கொடுக்க முடியுமா சார்? ப்ளீஸ்…” பேசியபடி நடந்த இருவரையும் திரும்பிப் பார்த்த அஸ்வினி தன் தோள்களை குலுக்கிக்கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

மறுநாள் ராஜ் ஹோட்டல் இன்டர்வியூவிற்கு சென்ற சைந்தவி வேலையுடன்தான் திரும்பினாள். “ஆஹா எவ்வளவு பெரிய ஆப்பர்சுனிட்டி! ராஜ் ஹோட்டலுக்கு இப்போதே ஐந்து பிராஞ்சுகள் இருக்கின்றன. இன்னமும் இந்தியா முழுக்கவும் பிராஞ்செஸ் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கிறதாம். என்னுடைய பிரண்ட்ஸ் எல்லோரும் இங்கே எனக்கு வேலை கிடைத்து விட்டது என்றால் ஆவென்று வாயை பிளக்கிறார்கள்”சைந்தவி துள்ளி குதித்தபடி பேசினாள்.

” நீதான் ராஜ் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை கிடைத்தால் கூட செய்பவள் ஆயிற்றே!” அஸ்வினி கிண்டல் செய்ய சரிதா இளைய மகளை அதட்டினாள்.

” அக்காவிற்கு ஒரு நல்ல இடத்தில் வேலை கிடைத்திருக்கிறது என்றால் சந்தோஷப் படாமல் இதென்ன குத்தல் பேச்சு?”

“அம்மா நான் சும்மா கிண்டலாக பேசினேன்”




” எதில் தான் கிண்டல் செய்வது என்று கிடையாதா உனக்கு? இவ்வளவு நாட்களாக ஒரு நல்ல வேலை அமையாமல் சைது செல்லம் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருந்தாள்? இப்போதுதான் அவளுக்கு நல்ல நேரம் ஆரம்பித்திருக்கிறது. அதையும் கிண்டல் செய்கிறாயே” அம்மாவின் குற்றம் கூறலில் வாடிய இளைய மகளின் தோள் அணைத்து சமாதானம் செய்தார் சுரேந்திரன்.

 “அடுத்தடுத்த வயது…தோழிகள் போல் பழகுகிறார்கள். இது போல் கேலி கிண்டலெல்லாம் சகஜம்தானே சரிதா. நாம் அளவுக்கு மீறி தலையிட்டால் பூமர் என்று சொல்லி நம்மையே விரட்டுவார்கள்.தப்பித்து விடு” கிண்டலோடு  மனைவியை சமாதானம் செய்தார்.

“ம் இப்பொழுது சைதுவிற்கு நல்ல வேலை கிடைத்து விட்டது. இனி மும்முரமாக வரன் பார்க்க ஆரம்பிக்க வேண்டும்” தாய் தந்தை பேசியபடி செல்ல அக்காவை பார்த்து கண்களை சிமிட்டினாள் அஸ்வினி.

” சீக்கிரமே திருமண சிறையில் மாட்டிக் கொள்ள வாழ்த்துக்கள் அக்கா”

சைந்தவியோ முகம் சுளித்தாள். “இப்போது தானே வேலை கிடைத்திருக்கிறது. அதற்குள் திருமணத்திற்கு என்ன அவசரம்? இந்த அம்மாவிற்கு வேறு வேலையே இல்லை” சலித்தபடி போனாள்.

 மறுநாளிலிருந்து சைந்தவி வேலைக்கு சென்று வர ஆரம்பித்தாள்.மிகவும் உற்சாகமாகவும் அற்புதமாகவும் வேலை இருப்பதாக கூறினாள். நிறைய கற்றுக் கொள்ள முடிவதாக சொன்னாள். வாரம் ஒரு முறை ஹோட்டலில் சமையல் வேலை செய்பவர்களுக்கு வசந்தே நேரடியாக வந்து கற்றுக் கொடுப்பதாக தெரிவித்தாள்.எந்நேரமும் வசந்த் புராணம்தான். 

ஒரு நாள் இரவு பக்கத்தில் படுத்துக்கொண்டு வாய் ஓயாமல் அவனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சைந்தவியிடம் தனது காதுகளை திருப்பி காட்டினாள் அஸ்வினி.”இங்கே பார் அக்கா, உன் பேச்சில் என் காதில் ஓட்டையே விழுந்துவிட்டது. ப்ளீஸ் தயவு செய்து அந்த வசந்த் புராணத்தை நிறுத்தி விடேன்”

” போடி உனக்கு என் மேல் பொறாமை. அவர் பக்கத்தில் இருந்து வேலை பார்ப்பதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” மறுபக்கம் திரும்பி படுத்து ஏதோ கனவுகளில் ஆழ்ந்து போனாள் சைந்தவி.

அவள் வேலைக்குச் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கலாம், ஒரு நாள் இரவில் சற்று கிறக்கமான குரலில் “அஸ்ஸு நான் வசந்தை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றாள். 




 

What’s your Reaction?
+1
34
+1
19
+1
1
+1
1
+1
2
+1
2
+1
1
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
13 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!