Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -15

15

 

அந்தப் பள்ளத்தாக்கு மேலிருந்து பார்ப்பதற்கு சிறியதாக தெரிந்தது .ஆனால் இறங்க …இறங்க அதன் ஆழமும் , நீளமும் கூடிக் கொண்டே போனது .அரை நாளுக்கு மேலாக மூவரும் நடந்து கொண்டே இருந்தனர் .இன்னமும் பள்ளத்தாக்கின் பாதியில் இருப்பதாக சொல்லப்பட்ட அந்த சித்தர் குகை வந்தபாடில்லை.

 

சற்று சமவெளியாயிருந்த இடத்தில் மூவரும்  அமர்ந்து கையில் கட்டிக் கொண்டு வந்திருந்த  தங்கள் மதிய உணவை உண்டு முடித்து சிறு ஓய்வெடுத்த பிறகு ,மீண்டும் மலையிறங்க ஆரம்பித்தனர் .




ஓரிடத்தில் தடுமாறிய சுகந்திக்கு இயல்பாய் கை நீட்டிவிட்டு , சட்டென கையை மடக்கிக் கொள்ள முயன்றவனின் கை மேல் தன் கையை வைத்தாள் சுகந்தி .உயர்த்திய புருவ ஆச்சரியத்துடன் அவள் கையை இறுக பற்றிக் கொண்டி இறங்கலானான் சாத்விக் .

 

” சித்தரை பார்த்து விட்டு இருட்டுவதற்குள் மேலே ஏறி விட முடியுமா சாமி ? ” சுகந்தி கேட்க மாடசாமி சிரித்தான் .

 

” மேலே ஏற சித்தரை நாம் பார்க்க வேண்டுமே டாக்டரம்மா .? ”

 

” ஓ …அவரை பார்க்க முடியவில்லையென்றால் …? ”





” இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவரை பார்க்காமல் திரும்ப முடியுமா ? ” தங்கி இருந்து பார்த்து விட்டு வர வேண்டியதுதான் ”

 

” என்ன …? ” அதிர்ந்து விழித்த  சுகந்தியின்

விழிகள் தாமாகவே சாத்விக்கை நாடின .இரு விழிகள்  மூடி பயம் வேண்டாமென அவன் சைகை செய்ய சமாதானமாகி விட்டாள் .

 

மருத்துவர்கள் மூவரும் சித்தர் குகையை அடைந்த போது ,தூரத்து பச்சை  மலைகளுக்கிடையே சிகப்பு பந்தாய் சூரியன் விழத் தயாராகி விட்டான் .குளிர் காற்று சுழன்றடிக்க அவர்கள் மேனி நடுங்கத் துவங்கியது .





” குளிர் காய நெருப்பு தயார் பண்றேன் .உட்காருங்க ” இருவருக்கும் ஒரு பாறைத் திட்டை காண்பித்து விட்டு , சுள்ளிகள் தேடி புதர்களுக்குள் நடந்தான் மாடசாமி .

 

” அதோ அந்த மேட்டை தாண்டி இறங்கியதும் போன் சிக்னல் கட்டாகி விட்டது சுகந்தி ” சாத்விக் காட்டிய மேட்டை அண்ணார்ந்து விட்டு , உயிரற்றிருந்த தனது போனை பவர் பேங்குடன் இணைத்தாள் சுகந்தி .

 

” குகைக்குள் போய் பார்க்கலாமா ? ”

 

” யாருமில்லாத குகைக்குள் போய் என்ன செய்ய போகிறாய் சுகந்தி ? ”





” எனக்கு நம்பிக்கை இருக்கிறது சாத்வி .சித்தரை நம்மால் பார்க்க முடியும் ”

 

” உன் நம்பிக்கையை கெடுப்பானேன் ? வா போகலாம் ” அதிக சக்தி கொண்ட டார்ச்லைட்டை எடுத்துக் கொண்டு முன்னால் நடந்தான்.

 

கரடு முரடாயிருந்தது அந்தக் குகை .பெரியதும் , சிறியதும் , சில இடங்களில் குத்து பாறைகளுமாயிருந்தது.

 

” ஆள் வசிக்கும் இடம் போல் தெரியவில்லையே சுகி ” சாத்விக் டார்ச்சின் ஓளியை குகை முழுவதிற்கும் கொட்டி மொழுகினான் .

 

” அதோ அங்கே பாருங்கள் ” சுகந்தி காட்டிய இடம் , கொஞ்சம் சமவெளி போல் தெரிய , இருவரும் கை கோர்த்தபடி அங்கே நடந்தனர் .





அங்கே ஒரு சிவலிங்கம் இருந்தது .அதனை சுற்றி சிறு ஓடையாக நீர் ஓடிக் கொண்டிருந்தது .சிவலிங்கத்திற்கு பூஜை செய்ததற்கான அறிகுறிகள் தெரிந்தன.

 

” யாரோ இருக்கிறார்கள்தானே சாத்வி ? ” சுகந்தி ஆவலுடன் சுற்று முற்றும் பார்த்தாள் .

 

” ஆமாம் .வா தேடிப் பார்க்கலாம் ”

 

அடுத்த அரைமணி நேரம் குகை முழுவதும் அலசியும் யாரையும் காணவில்லை .சலித்து வெளியே வந்த போது , மாடசாமி சுள்ளிகளுடன் வந்தான் .

 

” குகைக்குள்ளேயா போனீங்க ? சித்தர்கள் வாழுமிடங்களுக்குள்  அவர்கள் அனுமதி இல்லாமல் போகக் கூடாது ”

 

” ஏன் டாக்டர் ? ”




” சித்தர்கள் இங்கே காற்றோடு கலந்து தவத்தில் இருப்பார்கள் .நாம் அவர்களை தொல்லை செய்தால் நம்மை சபித்து விடுவார்கள் ”

 

” உஷ் …ஹப்பா …” சாத்விக் நம்பமாட்டேனென சைகையில் சொல்லி விட்டு , தனது முதுகுபுறம் மாட்டியிருந்த பேக்கை திறந்து இரவு உணவான சான்ட்விச்சை , மாடசாமி மூட்டியிருந்த நெருப்பிற்கு நேராக லேசாக காண்பித்து வெது வெதுப்பாக்கிக் கொண்டு கடித்து உண்ண ஆரம்பித்தான் .

 

” சித்தர்கள் பற்றி சொல்லுங்கள் சாமி .” சுகந்தி தனது சான்ட்விச்சை எடுத்துக் கொண்டு , மாடசாமி முன் போய் அமர்ந்தாள்





சித்தர்கள் , குள்ளர்கள் , கூடு விட்டு கூடு பாய்தல் , ஜோதிப்புல் நெருப்பு என மாடசாமி பேசியபடி இருக்க கண்கள் சொருக தூங்க ஆரம்பித்து விட்டான் சாத்விக் .சுகந்தியும்  கொட்டாவி விட ,

 

“தூங்குங்க டாக்டரம்மா ” என்றுவிட்டு மாடசாமியும் படுத்து விட்டான் .

 

ஏதோ சில புரியாத சத்தங்கள் காதுக்குள் கேட்டாற் போலிருக்க , சுகந்திக்கு மெல்ல உறக்கம் கலையத் தொடங்கியது .அரை விழிப் பார்வையில் ஒரு ஜோடிக் கால்கள்

அவளை தாண்டி செல்வது போல் தெரிய நன்கு விழித்துக் கொண்டாள் .

 

என்ன …இந்த ராத்திரியில் இந்த காட்டிற்குள் சிறுவனா ? சுகந்தி வேகமாக எழுந்து கொண்டாள் .குகைக்குள் நுழைந்த அந்த உருவத்தின் பின் போனாள் .கையிலிருந்த புற்கட்டை அந்த உருவம் கொளுத்த பந்தம் போல் எரிந்தது அது .அதனை குகை சுவரில் சொருகி வைத்தபடி உள்ளே நடந்தது அந்த உருவம் .





குகையின் உட்புறம் வந்ததும் வெளிச்சம் அதிகமாக அந்த உருவத்தை உற்றுப் பார்த்த சுகந்தி ஆச்சரியமானாள் .அது சிறுவனில்லை .மூன்றடி உயரமேயான குள்ள மனிதன் .

 

சிவலிங்கத்தை சுற்றியிருந்த இடத்தை கைகளால் தள்ளி சுத்தம் செய்துவிட்டு , தோளில் தொங்கிய துணிச்சுருளிலிருந்து புத்தம் புது மலர்களை வெளியே எடுத்தார். .கூடவே விளக்கு , திரி , திருநீறு ,குங்குலிங்கம் போன்ற பூஜை பொருட்கள் .

 

பேச்சுக்கள் ஏதுமின்றி பூஜையை தொடங்கினார் . விழி விரிய பார்த்தபடி நின்றிருந்தவள் திடுமென ” இங்கே வாம்மா ” என்ற அழைப்பு கேட்க திகைத்து பார்த்தாள் .





அந்த குள்ள மனிதர்தான் .திரும்பாமலேயே அழைத்துக் கொண்டிருந்தார்.மெல்ல நடுங்கும் கால்களுடன் அவர் முன் போய் நின்றவளை ஏறிட்டு பார்த்தார் .

 

” காய்ச்சலா …? மருந்து வேணுமா …? ”

 

சுகந்திக்கு தூக்கிவாரிப் போட்டது .

 

” உ…உங்களுக்கு எ…எப்படி தெரியும் ? ”

 

மெல்ல சிரித்தார். “நல்ல எண்ணங்கள் வேண்டும் .தூய்மையான மனது வேண்டும் .பிறருக்கு உதவும் எண்ணம் வேண்டும் .ம்…ம்…உனக்கு கொடுக்கலாம்மா .வா இப்படி வந்து உட்கார் ”

 

துவண்டு விடும் கால்களை கட்டுக்குள் கொண்டு வந்தபடி அவர் முன் சம்மணமிட்டாள் .




” வைத்தியம் படிச்சிருக்கதானே நீ ? நானும் வைத்தியன்தான்மா . நம்ம இரண்டு பேருக்கும் பேசுறதற்கு இலகுவாக இருக்கும்னு நினைக்கிறேன் ”

 

” சாமி ! நிறைய பேர் செத்துக்கிட்டிருக்காங்க .வீட்டை விட்டு வெளியே போக பயந்து நாலு சுவத்துக்குள்ளே அடைஞ்சு கிடக்கிறோம் .உலகம் பூரா தடுப்பூசி கண்டு பிடிச்சிட்டிருக்காங்க. நாங்களும் ஏதாவது செய்யனும்னு நினைக்கிறோம் ”

 

” சாமி …அப்படின்னெல்லாம் பெரிய பேச்சு வேண்டாம்மா .நான் சாதாரண வைத்தியன்தான் .நகரத்து நாகரீகம் பிடிக்காமல் இந்த மலையை சுத்தி வந்துக்கிட்டிருக்கேன்  அவ்வளவுதான் ”

 

சுகந்தி அவரை நம்பாமல் பார்க்க , மெல்ல புன்னகைத்துக் கொண்டவர் ” எந்த நோயாக இருந்தாலும் தாங்குவதற்கு உடம்பில் எதிர்ப்பு சக்தி வேண்டும்மா .அதைத்தான் மருந்துகள் தருது .இந்த நோய்க்கு மருந்து தேடி இந்தக் காட்டை சுற்ற வேண்டாம் .உன்னை சுற்றியே மருந்து  இருக்கிறது .”

 

” என்னை சுற்றியா ? ”

 

” ஆமம்மா .நீ கொஞ்ச நேரம் முன்னால் சாப்பிட்டாயே காய்கறி சான்ட்விச் .அதில் கூட மருந்து இருக்கிறது .என்ன ஒன்று எந்தெந்த உணவை எந்த அளவு சேர்க்க வேண்டும் என்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது .உணவுதான் மருந்து .உணவுதான் நஞ்சும்.”




” ஐயா , சாதாரணமாக தோன்றினாலும் நீங்கள் சொல்வதில் நிறைய விசயங்கள் பொதிந்திருப்பதாக தோன்றுகிறது ”

 

” ஹா…ஹா…அதனை நீ உணர்ந்து கொண்டால் மருந்து கண்டுபிடித்து விடலாம்.” சொன்னபடி தனது துணிப்பையிலிருந்து சில பொருட்களை எடுத்தார் .

 

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!