Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது – 14

14

 

அகன்ற பெரிய பாறைக் கூட்டத்தில் அவர்கள் தங்கள் தங்குமிடங்களை அமைத்திருந்தனர் .பாறை இடுக்குகளோடு சிலர் கூரை வேய்ந்தும் தங்கியிருந்தனர் .

 

” இதுதான் எங்க ஆளுங்க  இடம் ” மாடசாமி சொல்ல , அங்கே இருந்த மனிதர்கள் சுகந்திக்கும் , சாத்விக்கிற்கும் ஆச்சரியம் தந்தனர் .




ஆறு மாதங்களாக மூச்சு முட்ட முக உறையும் , வியர்த்துக் கொட்ட உடல் உறையும் அணிந்தே பழகிவிட்ட அந்த நகர மனிதர்களுக்கு , ஒளி திரைகள் ஏதுமின்றி சுதந்திர காற்றை சுவாசித்தபடி இயல்பாக  நடமாடிய மக்கள் ஆச்சரியமளித்தனர் .

 

” நோய் , நோக்காடெல்லாம் உங்கள் இடத்தோட சரி வைத்தியரய்யா .இது இயற்கை ஆளும் பூமி .மூலிகை காற்று .இங்கே எந்த வியாதியும் வராது ”

 

மாடசாமியின் தந்தை விளக்கம் கொடுக்க , தானே தலையசைக்க தோன்றியது .

 

” நிச்சயம் இது வரம்தானுங்கய்யா .இந்த வரத்தை நம் நாட்டு மக்கள் எல்லோருக்கும் நீங்கள் தர வேண்டும் .” சுகந்தி இறைஞ்சலாய் வேண்டினாள் .




” நச்சுக் காற்றை சுவாசிக்கிறீர்கள் .நஞ்சை உண்கிறீர்கள் .இயற்கையை எப்போது ஒதுக்க ஆரம்பித்தீர்களோ …அப்போதே நோய்கள் உங்களிடம் குடியேற ஆரம்பித்துவிட்டன ”

 

” உண்மைதான் ” சுகந்தி ஒத்துக் கொண்டாள் .

 

” ஆனால் இது கால மாற்றம் ஐயா .இந்த மாற்றங்களை சில வருடங்கள் தள்ளி வைக்க முடியுமே தவிர , தவிர்க்க முடியாது .” சாத்விக் இடையிட்டான் .

 

” அப்போ முகமூடி போட்டுக்கிறதையும் , வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறதையும் இனி தவிர்க்க முடியாது வைத்தியரய்யா ”

மாடசாமியின் தந்தை கோபத்துடன் எழுந்து சென்று விட்டார் .




” கொஞ்சம் சும்மாயிருங்களேன் .ஏன் முந்திரிக்கொட்டை மாதிரி முந்துறீங்க ? ” சுகந்தி கடிந்து கொள்ள , சாத்விக் உதடுகளின் மேல் ஒற்றை விரல் வைத்துக் கொண்டான் .

 

” இனி ஒரு வார்த்தை பேசினால் ஏன்னு கேளு ”

 

” ஊருக்கு , உலகுக்காக என்று பார்க்காவிட்டாலும் பெற்ற தாய்க்காக என்று கூட கொஞ்சம் அமைதியாக இருக்க மாட்டீர்களா ? ”

 

” ஏன் …அம்மாவிற்கு என்ன ? அவர்கள் படித்த டாக்டர் . எத்தனையோ பேருக்கு வைத்தியம் பார்த்தவர்கள் .தனது உடம்பை தான் பார்த்துக் கொள்ளத் தெரியாதா ? இந்த முட்டாள்தன சென்டிமென்ட் வேண்டாம் சுகந்தி ”

 

சாத்விக்கின் உறுதி பேச்சிற்கு சற்றும் அநியாயம் செய்யவில்லை ஸ்வேதா .தன்னிடம் நலம் விசாரிக்க போன் பேசிய சுகந்தியை அப்படித்தான் அலட்சியமாக நடத்தினாள் .

 

“நீ  நலம் விசாரிக்கும் அளவு நான் இல்லை .என்னை பார்த்துக் கொள்ள எனக்குத் தெரியும் .” தூக்கி எறிந்து பேசியவளுடன் பிறகு பேச எண்ணவில்லை சுகந்தி .




உயிர் கொல்லும் வியாதி .மருத்துவரேயானாலும் எப்படி இவர்களால்  எளிதாக எடுத்துக் கொள்ள முடிகிறது .சுகந்தியால் முடியவில்லை .மகனுக்கு நோய் தாக்கிய போது அவளுக்கு இருந்த மன படபடப்பிற்கு சற்றும் குறைவில்லை இப்போது தாய்க்கும்  . ஆனால் மகனை பற்றி தாய்க்கோ …தாயை பற்றி மகனுக்கோ சிறிதும் கவலையில்லை . சுகந்தி தோள்களை குலுக்கி அவர்களிடமிருந்து மீண்டு வர முயன்றாள் .

 

” அதோ அங்கன தெரியுது பாருங்க ஒரு பள்ளத்தாக்கு .அதுக்குள்ள இறங்கி போகனும் .அங்கிட்டு ஒரு குகை இருக்கும் . அதில் ஒரு சித்தர் இருக்கிறாரு .உங்களுக்கு நல்ல பொழுதிருந்தா அவரு உங்க கண்ணுக்கு தட்டுப்படுவாரு .இந்த மலையில் அவருக்கு தெரியாத மூலிகை கிடையாது.உங்க காய்ச்சலுக்கு அவருக்கு நிச்சயம் மருந்து தெரியும் ” இருளன் , மாடசாமியின் தந்தை அந்த பசுமை பள்ளத்தாக்கை சுட்டிக் காட்டி கூறினார் .





” நிஜம்மாவே அங்கே சித்தர் இருப்பாரா ? ” சாத்விக் பள்ளத்தை எட்டிப் பார்த்தபடி கேட்டான் .

 

” நிச்சயம் இருப்பார் சார் . மருந்தும் தருவார் ” மாடசாமி சூடம் அணைக்க தயாரானான் .

 

” உங்களுக்கு எத்தனை தடவை காய்ச்சல் மருந்து கொடுத்திருப்பார் ?” சாத்விக் பேச்சு போக்கில் கேட்டுவிட்டு மாடசாமியின் முகத்தை பார்த்து சுவாரஸ்யமானான் .

 

ஒரு மாதிரி திரு திரு பார்வையுடன் நின்றிருந்த மாடசாமி ” நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை ” என்றான் .

 

” ஆஹா …அப்போது நாங்கள் எப்படி நம்புவது ? ”





” சித்தர்கள் எல்லோருடைய கண்களுக்கும் தெரிவதில்லை டாக்டர் ” மாடசாமிக்கு பதிலாக சுகந்தி பேசினாள்.

 

” இதை வேறு நான் நம்ப வேண்டுமா ? ” சாத்விக் முணுமுணுத்தான் .

 

” ஆமங்க சார் .நான் சிறு பையனாக இருக்கும் போதிருந்து இந்த சித்தரை பற்றிக் கூறியிருக்கிறார்கள் .ஆனால் நான் பார்த்ததில்லை ”

 

” உன் சின்ன வயசிலிருந்து இல்லைடா .என் சின்ன வயசிலிருந்து சொல்றாங்க .நம்ம கூட்டத்தில் இரண்டே பேரைத் தவிர வேறு யாரும் அவரைப் பார்த்ததில்லை ” இருளன்  மகனிடம் சொல்ல சாத்விக் பெருமூச்சு விட்டான் .

 

” டாக்டரம்மா இது சரிப்பட்டு வராது .நாம கிளம்பலாமா ? ”

 

” நீங்க போங்க டாக்டர் .நான் சித்தரை பார்க்காமல் வரப் போவதில்லை .” உறுதியாக பேசியவளை அடிப் பைத்தியமே ! பார்வை பார்த்தான் .





” நம்பி இறங்கலாம் டாக்டர் .நமக்கு கடவுள் துணையிருப்பார்” மாடசாமி சொல்ல , சுகந்தி அவனுடன் இறங்க தயாராக , சாத்விக்கும்  வேறு வழியின்றி அவர்களுடன் இணைந்து கொண்டான் .

 

” அதெப்படி அப்பாவும் , மகனும் ஒன்றுமே நடக்காதது போல் பேசிக் கொள்கிறார்கள் . ஏன் என்னை தூக்கிக் கொடுத்தாய்னு மகனும் கேட்கவில்லை , கொடுத்த பிறகும் ஏன் வந்தாய்னு அப்பாவும் கேட்கவில்லை , இந்த விநோதத்தை கவனித்தீர்களா டாக்டரம்மா ? ”

 

” முதலில் இந்த டாக்டரம்மாவை விட்டுத் தொலையுங்கள் ”

 

” ஐயோ ! பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்மா ” சாத்விக் கடவுளுக்கு போல் இரு கன்னத்திலும் போட்டுக் கொள்ள , அவனை முறைத்தாள் .

 

” ரூமுக்கு வர்றியான்னு கேட்காமல் இருந்தாலே போதும் .அதற்கு மேல் எந்த மரியாதையும் தேவையில்லை ”

 

சாத்விக்கின் முகம் விழுந்து விட்டது .சிறு அரிவாள் வைத்து எதிர்பட்ட மரம் , செடிகளை வெட்டி வழி ஏற்படுத்திக் கொண்டு  முன்னால்  நடந்த மாடசாமியின் முதுகை வெறித்தான் .சுகந்தி தனது நடையை துரிதமாக்கி அவனை முந்தினாள் .




” தப்புதான் சுகந்தி .நான் அப்படி கேட்டிருக்க கூடாது .அந்த செலினாவையெல்லாம் சாதாரண மனுசியோடு கூட சேர்க்க முடியாது . அவள் பேச்சை நம்பி என்னை நீ தவிர்த்தாயென்ற கோபம் .அன்று உன்னிடம்  ப்ரபோஸ் பண்ணுவதற்காக எவ்வளவு ஆவலுடன் காத்திருந்தேன் தெரியுமா ? நீ வரவேயில்லை என்றதும் மிகுந்த கோபம் .அடக்கி வைத்திருந்த அந்தக் கோபம்தான் எப்படியாவது உன்னை காயப்படுத்தியே தீர வேண்டுமென்ற வெறியில் அப்படி வார்த்தைகளாக வெடித்து விட்டது ”

 

” ஓ…உனக்கு கோபம் வந்தால் அடுத்த பெண்ணிடம் கண்டபடி பேசுவாயா நீ ? ” சுகந்தி வெடித்தாள் .

 

” பிறந்ததிலிருந்து கேட்டதெல்லாமே கிடைத்து வளர்ந்தவன் . மற்றவை எப்படியோ அம்மா ஒழுக்கத்தை மட்டும் உணவோடு சேர்த்தே புகட்டி வளர்த்தார்கள் .எனக்கென வருபவளுக்கென மட்டுமே என நான் பாதுகாத்து வைத்திருந்த ஒழுக்கத்தை , எனக்கு மிகவும் பிடித்த நீயே தவறாக பேசும் போது ….யோசி சுகந்தி .உன்னிடம் தகாது பேசிய போது நீ அடைந்த அதே அவமானம் தான் எனக்கும் .ஆணுக்கும் , பெண்ணிற்கும் ஒழுக்க விதிகள்  வேறில்லை சுகந்தி .இருவருக்கும் ஒரே பாதிப்புதான் .உன்னுடையதற்கு சற்றும் குறைந்த வேதனையில்லை என்னுடையது ”

 

கண்களை துருத்திய கண்ணீரை மறைக்க அப்படியே தரையில் அமர்ந்து விட்டாள் சுகந்தி .திரும்பிப் பார்த்த மாடசாமியிடம் மேலே நடக்குமாறு சைகை செய்துவிட்டு மரத்தில் சரிந்து கொண்டாள் .

 

” ரிலாக்ஸ் சுகந்தி . உனக்கு முகம் கழுவ தண்ணீர் கொண்டு வருகிறேன் ” அவளுக்கு சில நிமிடங்கள் தனிமை கொடுக்க எண்ணி , ஓரமாக வழிந்து கொண்டிருந்த ஓடையை நோக்கி  தனது கர்ச்சீப்பை உருவியபடி நடந்தான் .




கர்ச்சீப்பை எடுத்த வேகத்தில் சாத்விக்கின் போன் வெளியே விழுந்து ஒலிக்க ஆரம்பிக்க , சுகந்தி அதனை எக்கி எடுக்க முயல அது ஆன் ஆகிவிட்டது .

 

” சாத்வி ” விம்மலுடன் போனில் கேட்ட குரல் ஸ்வேதாவினுடையது .

 

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!