Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது -16

16

 

அவை நெல்லிக்காய் , கறிவேப்பிலை , இஞ்சி , மஞ்சள் , வேப்பிலை போன்றவை .அவற்றை சில அளவுகளில் எடுத்து அங்கிருந்த பாறை மேல் வைத்து , சிவலிங்கத்தை சுற்றி ஓடிக் கொண்டிருந்த நீரை மேலே தெளித்து ஒரு கல்லால் அரைத்து வழித்தெடுத்து சிறு சிறு உருண்டைகளாக்கி அவளிடம் நீட்டினார் .

 

” கொண்டு போம்மா .இரண்டு குளிகை போட்டால் போதும் .காய்ச்சல் , மூச்சுத் திணறல் எல்லாம் சரியாயிடும் ”





” இதை எப்படி தயாரிப்பது ஐயா ? ”

 

அவர் எழுந்து கொண்டார் .” நான் எதையும் மறைக்கவில்லையே .உன் கண் எதிரேதான் எல்லாம் செய்தேன் .அளவுகளை சமன்படுத்திக் கொள் .சரியாக வரும் ”

 

” சமன்படுத்தியென்றால் …”

 

” ஈகுவேஷன்மா .கணக்கு இல்லாமல் எதுவும் இல்லை ” அவர் குகை வாயிலை நோக்கி நடக்க , அவரின் தலையின் பின்னால் ஓர் ஒளிவட்டம் சுற்றியபடி சுகந்தியின் கண்ணை எரிக்க , அவள் கண்களை இறுக மூடியபடி சற்று முன் விரற்கடை அளவு வைத்து அவர் எடுத்த பொருட்களின் அளவுகளை நினைவில் கொணர்ந்து தரையில் கிறுக்கினாள் .

 

” ஐயா ….சாமி …” சென்றவரை அழைக்க அவர் திரும்பாமல் ஒளியோடு போனார் .





” எல்லா நேரமும் சாமியை நம்பக்கூடாது ” அசரீரி போல் அவர் குரல் .அப்படியே ஒளியோடு மறைந்தார் .சுகந்தியின் கண்கள் ஒளியில் கூசியது .

 

” சுகந்தி …சுகி …என்னடா …என்ன ஆச்சு ? ” சாத்விக்கின் குரல் கேட்டு படக்கென விழி் திறந்தவளின் முகத்தில் ஆடவனின் சுடு கதிர்களின் நடனம் . சட்டென எழுந்து அமர்ந்தாள் .மாடசாமியும் ,சாத்விக்கும் அவளை பார்த்தபடியிருந்தனர் .

 

எல்லாம் கனவா …!?

 

” சாத்வி நா…நான் சித்தரை பார்த்தேன்.அவர் கொரோனாவிற்கு மருந்து சொன்னார்  ”




” கனவில்தானே ? சரி…சரி எழுந்திரு வா .முகம் கழுவி விட்டு வரலாம் ”

 

” டாக்டரம்மா இதெல்லாம் என்ன ? ” மாடசாமி தரையை காட்டிக் கேட்க , அங்கே ஏதோ அளவுகள் எண்களாகவும் , எழுத்துக்களாகவும் கிறுக்கப்பட்டிருந்தன.

 

” நான்தான் …நான்தான் இதை எழுதினேன் .இதுதான் கொரோனா மருந்துக்கான பார்முலா …” சுகந்தி பரபரத்தாள் .

 

மாடசாமி சட சடவென தனது போனில் அவற்றை போட்டோ எடுத்தான் .




சுகந்தி குகைக்குள் ஓட ,ஆண்கள் இருவரும் அவளை பின் தொடர்ந்தனர் .” இங்கே பாருங்கள் சாத்வி .நேற்று நாம் பார்த்த போது சிவன் மேல் பூஜை செய்த பூக்கள் எல்லாம் காய்ந்து போயிருந்தன. இப்போது புத்தம் புதிதாக இருக்கின்றன பாருங்கள் .பூஜை செய்தது சித்தர் சாமிதான் .அவர் குள்ளமாக இருந்தார் .என்னோடு பேசினார் ”

 

” தென்னாடுடைய சிவனே போற்றி ! ” மாடசாமி அங்கேயே விழுந்து கும்பிட , சாத்விக் அவள் கை பற்றி வெளியே இழுத்து வந்தான் .

 

” போதும் சுகி .நாம் போகலாம் வா ” சாத்விக் இறுகிய முகத்துடன் அவளை பற்றி இழுத்தபடி மலையேற ஆரம்பித்தான் .

 

——-




அந்த மலைவாசிகளின் குடியிருப்பு அடர்ந்த இருளில் இருக்க , இருட்டை வெறித்தபடி பாறை முகட்டில் அமர்ந்திருந்த சுகந்தி அருகே வந்து அமர்ந்தான் சாத்விக் .

 

தனது அனுபவங்களை மலைவாசிகளிடம் கொட்டி தீர்த்திருந்தாள் அவள் .அனைவரும் அவளை கடவுள் போல் பய பக்தியாக பார்க்க ஆரம்பிக்க , சாத்விக் இடை புகுந்து அவளது அனுபவ பேச்சுக்களை அதட்டி நிறுத்தினான்

 

” உன் உள் மன அழுத்தங்களுக்கு சாமி , சித்தரென்ற பெயர் வைக்காதே சுகந்தி ” கண்டித்தான் . அவள் இரு கைகள் பற்றி தன்னருகே இழுத்துக் கொண்டான் .

 

” அம்மா பேசினார்கள் சுகி . உன்னை …உன்னைப் பற்றி மட்டும்தான் பேசினார்கள் ”

 

” அம்மாவிற்கு இப்போது உடம்பு குணமாகி வருகிறதுதானே ? ”





” உனது பாச வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டவர்களுக்கு ஏதாவது தீமை வருமா சுகி ? .அடுத்த வாரம் உங்கள் வீட்டிலிருந்து எங்கள் வீட்டிற்கு திரும்புகிறார்கள் .அதெப்படி சுகி உலகமே கொரோனா வந்தவர்களை  ஒதுக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது , உன் அம்மா , அப்பா மட்டும் அவர்கள் வீட்டிற்குள்ளேயே அழைத்துப் போய் வைத்தியம் பார்க்க முடியும் ? என் அப்பாவிற்கோ , எனக்கோ இல்லாத அக்கறை உங்களுக்கு எப்படி வந்தது ? ”

 

” ஒரு சின்ன கணக்குதான் சாத்வி .தினம் தினம் எத்தனையோ கொரோனா நோயாளிகளை ,அவர்கள் வேதனைகளை கண்டு மனம் மரத்து போயிருந்தவர் உங்கள் அம்மா .அவருக்கே அந்த நோய் வந்த போது முன்பே அவர் பார்த்திருந்த வேதனைகள் நினைவு வர அநாதரவாக உணர்ந்திருப்பார் .இதனை ஊகித்துதான் நான் அவருடன் பேச போன் செய்தேன் .வெளிக் காட்டிக் கொள்ளாமல் கம்பீரமாக காட்டிக் கொண்ட போதும் அவரது குரல் நடுங்குவதாக எனக்கு  தோன்றியது .யோசித்தபடி இருந்த போது தன் நிலைமை தாளாமல் உங்கள் அம்மாவே போனிலாவது  மகனிடம் பேச எண்ணி போன் செய்தார் .”





” தனது தனிமையை , நோய் கொடுமையை அவர் புலம்பியதை பதிலின்றி கேட்டிருந்து விட்டு ,என் அப்பாவிடம் போனில் பேசினேன் .அப்பா உங்கள் அம்மாவை மருத்துவமனைக்கு போய் பார்த்தார்.நோயாளிகளிலேயே மூழ்கிப் போய் விட்ட உங்கள் அப்பா , மருந்து தேடி பயணமாகி விட்ட மகன் , அமெரிக்காவில் செட்டிலாகி விட்ட பிறந்த வீட்டினர் என  தனக்கென யாருமில்லையென்ற சுய இரக்கத்தில் இருந்த உங்கள் அம்மா , தனது பழைய வாழ்க்கை தொடர்பான என் அப்பாவை பார்த்ததும் உடைந்து விட்டிருக்கிறார்.அப்பா கையோடு உங்கள் அம்மாவை அழைத்துக் கொண்டு போய்விட்டார்.  தனியறையில் தங்க வைத்து , நேரா நேரத்திற்கு மருந்து , உணவென அம்மாவும் , அப்பாவும் கவனித்ததில் உங்கள் அம்மா விரைவிலேயே குணமாகி விட்டார் ”

 

சாத்விக் அவளை பார்த்தபடி இருந்தான் .பேசுகையில் அசையும் அவள் ஜிமிக்கிகளை , இடையிடையே உணர்ச்சி வசப்பட்டு அவள் சுருக்கிக் கொண்ட மூக்கு நுனியை ,தலையசைவதற்கு ஏற்ப நெற்றியில் விழுந்து விலகும் முடிக் கற்றைகளை என பார்வையை அவளிடம் ஊன்றியவன் கரகர குரலில் கேட்டான் .

 

” சுகி…உன்னை ஒரே ஒரு தடவை கட்டிப் பிடிச்சுக்கட்டுமா ? ”

 

சுகந்தி பேச்சை நிறுத்தி விழி விரித்து அவனைப் பார்த்தாள் .ம்ஹூம் …என அவளது தலையசைந்து மறுதலிக்கும் முன்பு , அவள் உச்சந்தலையில் தன் உள்ளங்கை பதித்தவன் , ” மறுக்காதே சுகி …ப்ளீஸ் ” என்றான் .





சுகந்தி விழிகளை படபடத்து அவன் முகம் தவிர்த்து அங்குமிங்கும் பார்வையை ஓட விட ” இந்தக் காட்டுக்குள் கொரோனா இல்லை .எனக்கும் கொரோனா இல்லை .அதனால் பயமின்றி ….” என்றவன் வார்த்தைகளை முடிக்காமல் அவளை இழுத்து இறுக அணைத்தான் .

 

சுகந்தியின் உடல் நடுங்க ” ரிலாக்ஸ் சுகி ” மென் குரலில் அவள் காதில் பேசினான் .

 

” அம்மா நிறைய மாறி விட்டார்கள் சுகி .எஸ்.எஸ் மருத்துவமனையின் ஒரு பகுதியை கொரோனா இலவச சிகிச்சை மையமாக மாற்ற முடிவெடுத்து விட்டார்கள் .”





” ஓஹ்…பெரிய மனபாரம் இறங்கி விட்டது சாத்வி ”

 

” நான் உடனிருக்கிறேன் சுகி .உனது மன பாரங்கள் விட்டு வெளியே வா ”

 

” ம் …” சுகந்தி் வாகாக அவன் மார்பில் சாய்ந்து விழி மூடிக் கொண்டாள் .

What’s your Reaction?
+1
3
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!