Serial Stories தவிக்குது தயங்குது ஒரு மனது

தவிக்குது தயங்குது ஒரு மனது – 13

13

 

” அவன் அநாதை இல்லை .அவனுக்கு அப்பா , அம்மா நாங்க இருக்கிறோம் ” மாடசாமி அம்மாவின் குரல் மெலிந்து ஒலித்தது.

 

” ஏன்மா எங்களைப் பெத்த உன் வயித்துலயா அவனையும் பெத்த ? வேண்டாம்னு தூக்கிப் போட்டவனை பொறுக்கிட்டு வந்துட்டு இப்போ சொந்தமா பேசுற ? ” இளைய மகள் கத்திக் கொண்டிருக்க , மாடசாமி வேகமாக திரும்பி வெளியே போய்விட்டான் .




” இது என்ன புது பிரச்சனை சுகி ? ” சாத்விக் சுகந்தியிடம் கேட்க , அவள் பரிதாபமாக போகும் மாடசாமியை பார்த்திருந்தாள் .

 

” அதை பிறகு பார்க்கலாம் .சாமி ரொம்பவே மனம் நொந்து போகிறார் .போய் அவருக்கு ஆறுதல் சொல்லுங்கள் ”

 

” என்ன …? நானா …? ”

 

” ஆமாம் டாக்டர் .சக மனிதர்களிடம் கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டும் . அப்பாவிகளை அடித்து பிடுங்கும் காசுக்கு பிராயச்சித்தமாக  இப்படி உடனிருப்பவர்களுக்கென ஏதாவது செய்யலாமே ! ” சமயம் பார்த்து குத்தினாள் .

 

” எல்லாம் என் நேரம் ” சாத்விக் அவளை முறைத்தபடி மாடசாமியின் பின்னால் போனான் .




ஒரு மணி நேரம் கழித்து சுகந்தி அவர்களை தேடி வந்த போது , அன்னாசி தோட்டத்தில் இருந்தனர் இருவரும் . சாத்விக் அன்னாசி தோட்டத்தை பற்றி விபரங்கள் கேட்டுக் கொண்டிருக்க , மாடசாமி பதில் சொல்லிக் கொண்டிருந்தான் .பழைய கணீர் குரல் இல்லையென்றாலும் , முகத்தில் கலக்கம் போய் தெளிவு வந்திருந்தது .

 

” நீங்களும் சாப்பிடுங்க டாக்டரம்மா ” பிளாஸ்டிக் தட்டில் துண்டாக்கி வைத்திருந்த அன்னாசி பழங்களை நீட்டினான் .

 

” இப்ப ஓ.கேவா சாமி ? ” சுகந்தி பரிவாக கேட்க , மெல்ல தலையசைத்து விட்டு இப்ப வர்றேன் என எழுந்து போனான் .





” பிறந்த இடம் ஒன்று . வளர்ந்த இடம் ஒன்று .சாமி பாவம்தானே டாக்டர் ? ”

 

” ஓ , அப்படியா ? ”

 

” என்ன அப்படியா ? அப்போ நீங்க மாடசாமிகிட்ட எதுவுமே பேசலையா ? ”

 

” நீங்க வரும் போது பார்த்தீங்களே டாக்டர் ? பேசிட்டுத்தானே இருந்தேன் ”

 

” நான் அதை சொல்லலை ” பற்களை நறநறத்தவள் , இவனிடம் பேசி பிரயோஜனமில்லை எனத் தோன்றிவிட , முகத்தை திருப்பிக் கொண்டு அன்னாசி தோட்டத்திற்குள் நுழைந்தாள் .




” அவருக்கு மன வருத்தம் தரக் கூடிய விசயத்தையே திரும்ப திரும்ப ஏன் பேசவேண்டும் சுகி ? அது அவரது கவலையை மேலும் கூட்டத்தானே செய்யும் .அதனால்தான் நான் சும்மா பொதுவாக பேசினேன் ” அவளுடன் நடந்தபடி சமாதானமாக சாத்விக் பேசிய விசயம் சுகந்திக்கு நியாயமாக தெரிய , தலையசைத்துக் கொண்டாள் .

 

” மாடசாமியின் பெற்றோர் உயரே மலங்காட்டுக்குள் வசிப்பவர்கள் .மலைவாசிகள் .அவர்கள் இனத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பிறக்கும் குழந்தைகளை இது போல் வேண்டுபவர்களுக்கு தத்து கொடுத்து விடுவார்களாம் . பெண்ணென்றால் திருமணம் முடித்து கொடுக்க வேண்டும் , ஆணென்றால் தொழில் வைத்துத் தர வேண்டுமே என்று காரணம் சொல்வார்களாம் .இப்படித்தான் மூன்றாவதாக  பிறந்த மாடசாமியை மலைக்கு கீழே வசிக்கும் இந்த பெற்றோரிடம் தத்து கொடுத்திருக்கின்றனர் .மாடசாமியின் இந்த வளர்ப்பு பெற்றோருக்கு இரண்டும் பெண் பிள்ளைகளாக இருந்ததால் , இரண்டாவது பிரசவத்தின் போது சிக்கலாகி அம்மாவிற்கு கர்ப்பப்பை எடுக்க வேண்டியதாகி விட்டதால் , ஆண் குழந்தை வேண்டுமென்ற ஆசையில் மாடசாமியை தத்தெடுத்திருக்கின்றனர் ”

 

சுகந்தி மாடசாமியின் தாய் மூலம் தானறிந்த உண்மைகளை சாத்விக்கிடம் பகிர்ந்து கொண்டாள் .




” மாடசாமியை பெற்றவர்கள் காட்டுக்குள் வசிக்கின்றனர் .மூலிகைகளைப் பற்றி நிறைய தெரிந்தவர்களாம் .அவர்களை நினைத்துத்தான் , மாடசாமி நமக்கு மூலிகையில் மருந்து கண்டுபிடித்து விடலாமென உறுதியாக சொல்லியிருக்கிறார் ”

 

” நான் பேசிக் கொண்டே இருக்கிறேன் .நீங்கள்  பதிலே சொல்லவில்லையே டாக்டர் …? சாத்வி ….? ” சுகந்தி சாத்விக்கின் கை பற்றி உலுக்க  , அவன் ஆஹ்…என நினைவுக்கு வந்தான் .

 

” நான் வேறு யோசித்துக் கொண்டிருந்தேன் .மாடசாமிக்கு மலைவாழ் ஜனங்கள் என்ற அடிப்படையில்தான் நமது மருத்துவமனையில் வேலை கிடைத்தது. அவனுக்கு மெடிக்கலில் படிக்க இடம் கிடைத்ததும் இந்த தகுதி அடிப்படையில்தான் .ஆனால் கல்லூரி , மருத்துவமனை எல்லா இடங்களிலும் வளர்ப்பு அப்பா , அம்மா பெயர்தான் கொடுத்துள்ளான் .அதாவது தனது இனத்தால் கிடைக்கும் நல்லவைகளை மட்டும் பயன்படுத்திக் கொண்டு , மற்ற நேரம் அரசியல்வாதி மகனென்ற தகுதி சொல்லி முன்னேறியிருக்கிறான் .எவ்வளவு விபரம் பார்த்தாயா ? ”





” ப்ச் …என்ன டாக்டர்  …. இது ஒரு தவறா ? பெற்றவர் , வளர்த்தவர் இருவருமே தாய் , தந்தைதானே ? அவரவர்களால் கிடைக்கும் நன்மைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதுதானே ?அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது ”

 

” ஓ …அப்போது வளர்ப்பு அப்பாவின் சொத்துக்களில் எவ்வளவு உரிமை ? ”

 

” அந்த சொத்துக்களிலேயே உட்கார்ந்து அனுபவித்துக் கொண்டு, எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாதென்று ஒதுங்குகிறார்களே சிலர் , அவர்களை விட மாடசாமிக்கு உரிமை அதிகம்தான் .அவர்களை விட மாடசாமிக்கு விபரம் குறைவுதான் ”

 

” சுகந்தி …” அதட்டினான் .

 

” உண்மையை சொன்னால் உங்களுக்கு எரிகிறதோ ? உங்களிடம் பேச வந்தேன் பாருங்கள் .சை …”




சுகந்தி சாத்விக்கிடம் பேசுவதை அறவே நிறுத்திவிட்டாள் .மூலிகை கண்டுபிடிக்கும் அவசியம் மட்டும் இல்லாதிருந்தால் கொல்லிமலையை விட்டே கிளம்பியிருப்பாள் .

 

மாடசாமி அடுத்தநாள் அவர்களை அழைத்துக் கொண்டு மலையேற ஆரம்பித்தான் .எழுபது அபாயகரமான வளைவுகளுடனான பெரிய மலை அது .சில வளைவுகள் மிக பயமுறுத்துவதாக இருந்தாலும் ஓசையுடன் ஆங்காங்கே விழுந்து செல்லும் அருவிகளும் , அறுத்து தொங்கவிட்டது போல் காணப்படும் படுகைகளும் , அவற்றை பண்படுத்தி விவசாயம் செய்வதால் அடுக்கடுக்கான பச்சை விளைநிலங்களும் கண்களுக்கு உற்சாகம் தந்து கொண்டிருந்தன.

 

எதிரே தெரிந்த பெரிய பள்ளத்தை நோக்கி கார் விரைந்து கொண்டிருக்கும் போது சாத்விக் ” ஓ …காட் ” எனக் கத்த , சட்டென ஸ்டியரிங் ஒடித்து திருப்பப்பட்டு நேர் சாலைக்கு வந்தது வண்டி .

 

” சேவியர் அண்ணன் பதினைந்து வருசமா இந்த மலைப்பாதையில் கார் ஓட்டுகிறார்.அவர் கையில் வண்டி இருக்கும் போது நாம் பயப்பட வேண்டியதில்லை டாக்டர் சார் ” மாடசாமி புன்னகையுடன் கூறினான் .




” ஒரு திரில்லிங்கான ரைட் போல் இருக்கிறது இந்த பயணம் .அப்படித்தானே டாக்டரம்மா ? ” சாத்விக் சுகந்தியை வம்பிழுக்க அவள் பள்ளத்தாக்கு விளைநிலங்களை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தாள் .

 

” என்ன டாக்டர் , உங்களுக்கும் அவுங்க டாக்டரம்மா ஆகிட்டாங்களா ? ” மாடசாமி  புன்னகையுடன் கேட்டான்.

 

” ஆமங்க டாக்டர் .பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டுமே ” சாத்விக்கின் பவ்யமான பேச்சில் சுகந்திக்கு நம்பிக்கை இல்லை .அவள் தலை கார் சன்னலை விட்டு உட்புறம் திரும்பவில்லை.

 

ஒரு மணி் நேரத்தில் மலை உச்சியை அடைந்து அவர்களை இறக்கி விட்டு கார் கீழிறங்கியது .அதன் பின்னர் தார்சாலை விட்டு ஒரு உள்ளடங்கிய மண்சாலையில் நடக்க ஆரம்பித்தான் மாடசாமி .





” இனி நடந்துதான் போகனும் .வாங்க ”

 

மண்சாலை ஒற்றையடி பாதையாகி , பின்பு பாதையும் மறைந்து காடுகளே வர ஆரம்பித்தது.மாடசாமி அநாயசமாக மரங்களை விலக்கிக் கொண்டு , கடகடவென நடந்தான் .

 

” அடப்பாவி எப்பவோ நான் ஆஸ்பத்திரியில் சொன்ன வேலைக்கு இப்போ பலி வாங்குறானே ! இது மனுசங்க போகிற பாதை மாதிரியே தெரியலையே ! ஏன் டாக்டரம்மா உங்களால் நடக்க முடியுது ? ” சாத்விக் புலம்பியபடி திணறி நடந்தான் .

 

மேலே வந்து இடித்த மரங்களை சிரமத்துடன் தவிர்த்தபடி நடந்து கொண்டிருந்த சுகந்தி பாதையின் கடினத்தை முகத்திலேந்தி அவனை முறைத்தாள் .

 

” நடக்க பயந்தால் மருந்து கண்டுபிடிக்க முடியாது டாக்டர் ” கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை துப்பினாள் .




” ம்ஹும் …கொஞ்சம் உங்க ஆள்கிட்ட மெதுவாக போக சொல்லுங்களேன் .என்னால் முடியலை ”

 

” யார் என் ஆளு ?” எரிந்து விழுந்தாள் .

 

” அட உங்க ப்ரெண்டுதானுங்க ! அதைத்தான் சொன்னேன் .நீங்க வேறு என்ன நினைச்சீங்க ? ”

 

” ஒரு கண்றாவியும் இல்லை .நடங்க ”





நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவனின் போன் ஒலிக்க , எடுத்து பேசி நிமிர்ந்தவனின் முகம் நக்கல் மாறியிருந்தது.

 

” சுகி  அம்மாவிற்கு கொரோனா வந்துவிட்டது ”

 

What’s your Reaction?
+1
3
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!