Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 1

தேரேறி வந்த நிலா 

1

வழக்கம்போல் ஐந்தடிக்க ஐந்து நிமிடம் இருந்த போதே விழிப்பு வந்துவிட்டது . அதன் பிறகு இருளில் அறையின் மேல் கூரையை வெறித்தபடி படுத்திருந்தாள் வைசாலி .சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்க ஆரம்பித்ததும் வேகமாக செல்போனை ஆப் செய்தாள் .




ரவீந்தரும் , ராதாவும் விழித்துக்கொள்வார்களே …அத்தோடு அம்மா தனலட்சுமியும்தான் .பாவம் அம்மாவிற்கு இந்த குளிரில் இவ்வளவு அதிகாலை விழித்தால்   வீசிங் வந்து கஷ்டப்படுவார்கள் ., பன்னிரென்டு படிக்கும் ராதாவும் , ரவீந்தரும் இரவு பன்னிரென்டு மணி வரை படித்தபடி இருந்த்து அவளுக்கு தெரியும் . ஆறு மணி வரை மூவரும் உறங்கட்டும் என எண்ணியபடி , தான் எழுந்தாள் வைசாலி .

முகம் கழுவி நைட்டியிலிருந்து சுடிதாருக்கு மாறியவள் ,பால் பாக்கெட் பையையும் கூப்பனையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் .வீட்டிற்கே பால் பாக்கெட் வரும் .ஆனால் அதற்கு இருநூறு ருபாய் அதிகம் கொடுக்க வேண்டும் .ஒரு வாக்கிங் போலவும் இருக்கும் .இருநூறும் மிச்சம் என்று தானே நடந்து போய் வாங்கி வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள் வைசாலி .

கதவை பூட்டிவிட்டு வாசல் இறங்கவுமே , விஜயா வந்து அவளுடன் சேர்ந்து கொண்டாள் .அவள் பக்கத்து வீட்டு பெண் .புதிதாக திருமணம் முடிந்து தேனி அருகே ஏதோ ஒரு கிராமத்திலிருந்து  சென்னைக்கு வந்திருப்பவள் .அவள் கணவன் சேகர் .சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் வைசாலியிடம் வழிந்து கொண்டிருப்பான் .

திருமணத்திற்கு முன் அவன் பாச்சுலரென்ற பேரில் இதே பக்கத்து வீட்டில்தான் இருந்தான் .அப்போதிருந்து இதே நிலைதான் .ஆனால் அப்போது வைசாலியின் தந்தை தீனதயாளன் உயிரோடு இருந்தார் .எனவே ஒரு எச்சரிக்கையுடனேயே பார்வையை வைசாலி மேல் படர விடுவான் . தந்தை மறைவிற்கு பின் வைசாலி கூட இவன் என்றோ ஒரு நாள் நிச்சயம் லவ்லெட்டர் எழுதி நீட்டத்தான் போகிறான் என எண்ணிக் கொண்டிருந்தாள் .




ஆனால் அவளுக்கு அந்த கவலை தராது , மூன்று மாதங்களுக்கு முன் ஊருக்கு போனவன் இந்த விஜயாவை மணம் முடித்து வந்துவிட்டான் .ஆனாலும் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனது அந்த வழிசல் தொடர, இவனெல்லாம் பெண்ணென்று தோன்றும் எவளையும் பார்வையால் மேயும் ரகமென வைசாலி புரிந்து கொண்டாள் .அவனது பார்வையை ஒரு அலட்சிய பாவத்துடன் கடக்கவும் கற்றுக்கொண்டாள் .

” என்ன வைசாலி நேற்று இரவு ஒரு மணி வரை உங்கள் வீட்டில் பேச்சு சத்தம் கேட்டதே .அவ்வளவு நேரம் விழித்திருந்து விட்டு இப்போதும் எப்படி இவ்வளஙு சீக்கிரம் எழ முடிந்த்து …? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே …” விஜயா கேட்டாள் .

” தம்பியும் , தங்கையும் படித்து கொண்டிருந்தார்கள் விஜயா .நான் இடையில் அவர்களுக்கு டீ போட்டு கொடுக்க எழுந்தேன் .அப்போது சத்தம் கேட்டிருக்கும் .நீ என்ன அவ்வளவு நேரம் விழித்தா இருந்தாய் …? ” கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் .கேட்டிருக்க கூடாது …இனி இவள் ஆரம்பித்து விடுவாள. …

விஜயாவுக்கு அவள் கணவன் மேல் அதீத பிரேமை . ஏதோ இந்த பட்டணத்து ராஜா ..இந்த பட்டிக்காட்டு பெண்ணை இறங்கி வந்து மணம்முடித்திருக்கிறான் என்ற எண்ணம் அவளுக்கு .அவளது கணவனின் பார்வை மேய்ச்சல்களை கண்டறிய முடியாத அப்பாவியாக இருந்தாள் அவள் .

” அது ..வந்து நேற்று இரவு அவர் வந்து ….” என ஆரம்பிக்கவும் வைசாலி தன் செவிகளை அடைத்து விட்டு மனதினை தனது அன்றைய வேலைக்கு செலுத்த தொடங்கினாள் .

இன்று அம்ருதாவிற்கு என்ன வகை மேக்கப் போடலாமென யோசிக்க ஆரம்பித்தாள் .அம்ருதா… இப்போது தமிழ் திரையுலகில் வேகமாக முன்னணியை நோக்கி வந்து கொண்டிருக்கும் இளம் நடிகை . அவளிடம்தான் வைசாலி மேக்கப் உமனாக பணிபுரிகிறாள் .

சினிமாத்துறை என்பது அவ்வளவு பாதுகாப்பான துறை கிடையாது .குறிப்பாக பெண்களுக்கு .ஆனால் வைசாலிக்கு தந்தையின் மறைவிற்கு பிறகு வேறு வழி தெரியவில்லை .பணம் அதிகம் வேண்டியிருந்த்தால் தான் சொந்தமாக வைத்து நடத்திக் கொண்டிருந்த ப்யூட்டிபார்லரை மூடிவிட்டு அதிர்ஷ்டவசமாக கிடைத்த இந்த தொழிலுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள் .




ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்காக வைசாலியின் பார்லர் இருந்த ரோட்டின் வழியாக வந்த அம்ருதா , அப்போது அந்த ஏரியாவில் நடந்த கலாட்டாவில் சிக்கி ஓடி கீழே விழுந்து ..பிறகு போலீஸ் வந்து விடுவித்தது .ஆனால் மேக்கப் முழுமையாக கலைந்து கோரமாக காட்சியளித்தவள் இப்படியே எப்படி விழாவிற்கு போவது என அழுகை வருபவள் போல் நிற்க …அவளை தனது ப்யூட்டிபார்லருக்குள் அழைத்து சென்று பதினைந்து நிமிடங்களில் பழைய மேக்கப்பை விட , அழகாக அலங்கரித்து அவளை பளபளவென மாற்றிக் காட்டினாள் வைசாலி .

அதில் மிகவும் கவரப்பட்ட அம்ருதா ..வைசாலி தயங்க ..தயங்க அவளை சமாதானப்படுத்தி தனது பர்சனல் மேக்கப் உமனாக வைத்துக்கொண்டாள் .சம்பளமாக அவள் கொடுத்த பெருந்தொகை வைசாலியை சம்மதிக்க வைத்தாலும் , தனது பெண்மைக்கு களங்கம் வரும் நிலை வரும் நிமிடம் தான் உடனே வெளியேறி விடுவேன் என்ற கண்டிசனுடன்தான் அவளிடம் வேலைக்கு சேர்ந்தாள் .

அதனை முழுமனதோடு ஏற்றுக்கொண்ட அமருதா இன்றுவரை அப்படி ஒரு நிலைமை வைசாலிக்கு வரவிட்டதில்லை .அது போன்ற இடங்களுக்கு என்றால் அவளாகவே ” அந்த இடம் மோசம் வைசாலி .நீ வேண்டாம் .நான் சமாளித்துக் கொள்வேன் ” என்றுவிடுவாள .இதனால் வைசாலியின் வேலை ஆச்சரியமளிக்கும் விதமாக கழுகு கூட்டங்களிடையே பாதுகாப்பான புறாவென சிக்கலின்று போய் கொண்டிருந்த்து .

இன்று சோக சீன் ..ஆயில் மேக்கப் என்று மேடம் சொன்னார்களே … ஷீர் ஃபவுண்டேஷன் போட்டு ஆரம்பிக்க வேண்டியதுதான் .அதற்கான க்ரீம்களெல்லாம் இருக்கிறதா …? மனக்கண்ணில் மேக்கப் பாக்ஸை கொண்டுவந்து அலசிக் கொண்டிருந்த போது , ” பாரேன் இவரை … ” என்றாள் விஜயா .

திரும்பி அவளை பார்க்க முகம் சிவந்து நடப்பதை நிறுத்தி நின்றால் காலால் ரோட்டை நோண்டி கோலம் போடுவாள் போன்ற தோரணையில் இருந்தாள் .சை என்ன கண்றாவியை சொல்லி தொலைஞ்சாளோ …நல்லவேளை கேட்டு தொலையலை…தப்பித்தேன் என நினைத்தபடி ” உன் அவர் காபிக்காக காத்திருப்பாரே ்…” என நினைவுறுத்தி அவள் நடையை வேகப்படுத்தினாள் .

வீட்டிற்கு வந்து , காபிக்கு டிகாசன் இறக்கிவிட்டு குளித்து காலை டிபன் வேலைகளை முடித்த போது ஒவ்வொருவராக எழுந்து வந்தனர் .

” என்னம்மா என்னை எழுப்பியிருக்க கூடாதா ..? ” சிறு குற்றவுணர்வுடன் கேட்டபடி தனலட்சுமி எழுந்து வந்தாள் .




” நேற்று நைட் ரொம்ப நேரம் மூச்சு விட சிரம்ப்பட்டுக் கொண்டிருந்தீங்களேம்மா ..விடிந்து கொஞ்ச நேரம் தூங்குங்களேன் அதனால் என்ன …? இதோ பாதி வேலை முடித்துவிட்டேன் .இனி நீங்க பாருங்க .நான் போய் குளித்து கிளம்புகிறேன. ..”

” ராது நீ ரவி கேட்ட கணக்கை அவனுக்கு சொல்லிக் கொடுக்க முடியுதான்னு பாரு .முடியலைன்னா குளித்து விட்டு நான் வந்து பார்க்கிறேன். ” தம்பி ..தங்கையிடம் சொல்லிவிட்டு சென்றாள் .

அதிகாலை ஏழு முப்பதிற்கெல்லாம் ஷூட்டிங் .ஆதலால் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பினாள் .

” குட்மார்னிங் ..அதெப்படிங்க இவ்வளவு காலையில இப்படி அழகா கிளம்பியிருக்கீங்க …? ” பக்கத்து வீட்டு வாசலை அடைத்து நின்றபடி கேட்டான் சேகர் .

வழக்கம்போல் காதில் வாங்காதது போல் செல்வதை விடுத்து நின்று ” விஜயா ….” அழைத்தாள் .

” அ…அவளை எதுக்கு கூப்பிடுறீங்க ..? “

” என்ன வைசாலி ….? ” விஜயா உடனே ஆஜர் .

” உன் ஹஸ்பண்ட் ஏதோ கேட்கிறார் பாரேன் …” என்றுவிட்டு லிப்ட்டுக்காக கூட நிற்காமல் அந்த ஐந்தாவது மாடியிலிருந்து வேகமாக படிகளில் இறங்கினாள் .

ஹெல்மெட் போட்டுக்கொண்டு ஸ்கூட்டியை எடுத்தவள் போக்குவரத்தில் கலந்தாள் .ஒவ்வொரு சிக்னலும் அவள் பொறுமையை சோதித்துக் கொண்டிருந்த்து .இவ்வளவு அதிகாலை இத்தனை பேருக்கு என்ன வேலை இருக்ககூடும ..? அலுப்போடு நினைத்தபடி மணியை பார்த்துக்கொண்டாள் .

நேரமாகிவிட்டதே …அப்போது பக்கவாட்டு வழியொன்றிலிருந்து சாலையில் சேர்ந்து கொண்ட அந்த கார் வைசாலியின் கவனத்தை கவர்ந்த்து .பளபளவென ஊதாவும் , வெள்ளையும் கலந்த ரோல்ஸ்ராய் கார் .மிக விலையுயர்ந்த்து .அத்தனை போக்குவரத்தில் குப்பையாய் தோன்றிய வாகனங்களிடையே அது ஒரு தேரினை போல் தனித்து தெரிந்த்து.இது போன்ற ஒரு காரினை ஓட்டும் சந்தர்ப்பம் வாய்த்தால் ….




வைசாலிக்கு கைகள் துறுதுறுத்தன. வைசாலியின் தந்தை தீனதயாளன் , ஒரு கார் மெக்கானிக் .அனைத்து வகை கார்களையும் அறிவார் .ஒருவகையில் கார்களின் மீது அவருக்கு ஒருவித காதல் என்றே சொல்லலாம் .அவர் நகரின் பிரபல மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் . அவருக்கு நிறைய பணக்கார கஸ்டமர்கள் உண்டு .அவருடைய வேலை பிடித்து போய் குறிப்பாக அவர்தான் தங்கள் காரை சர்வீஸ் செய்ய வேண்டும் என கூறுபவர்கள் நிறைய உண்டு .

இதனால் நிறைய விலையுயர்ந்த கார்களை ஓட்டி பார்க்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் .ஒவ்வொரு மாடல்  கார்களின் நட்டு , போல்டு …வரை  அத்தனை விசயங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பார் .வைசாலி அவரது செல்லப்பெண்ணாததால் , அவர் தினமும்  வீட்டிற்கு வந்த்து முதல் அவரை உரசியபடி பின்னாலேயே திரிவாள் .தனது வேலை விபரங்களை அவர் பகிர்ந்து கொள்வது வைசாலியிடம்தான் .இன்று இந்த காரை பார்த்தேன் …அதில் இந்த பிரச்சினை …இப்படி சரி பண்ணினேன் ..என கதை கதையாக சொல்வார் .

நாள் போக ..போக வைசாலிக்கும் தந்தையை போல கார்களிடம் ஒரு காதல் உண்டானது .மகளது ஆர்வத்தை பார்த்து பதினெட்டு வயதிலேயே அவளுக்கு டிரைவிங் சொல்லிக் கொடுத்து லைசென்சும் வாங்கிக் கொடுத்திருந்தார் .இதற்கெல்லாம் தனலட்சுமி ஆரம்பத்தில் மிகுந்த எதிர்ப்பு தெரிவித்தாள் .பிறகு மகளின் ஆர்வத்தை பார்த்து அவளும் விட்டுவிட்டாள் .

” என் பொண்ணுக்கு நிச்சயம் ஒருநாள் கார் வாங்கி தருவேன் பாருடி ” தனலட்சுமியிடம் கூறுவார் தீனதயாளன் .மேலும் மகளின் ஆசையை பார்த்து தன்னிடம் சர்வீஸிற்கு வரும் கார்களை டிரையல் பார்க்கும் போது , வீட்டிற்கு கொண்டு வந்து அவள் கையில் கொடுத்து நேர்த்தியான அவளது காரோட்டலை பெருமையாய் அழகு பார்ப்பார் .

” இது போல் பெரிய பெரிய கார்களை ஓட்ட வேண்டியவள்டி என் பொண்ணு .நீ வேணும்னா பாரேன் ஒருநாள் இது போல பெரிய கார் என் மகளுக்கு சொந்தமாக போகிறது ” மனைவியிடம் பெருமையடிப்பார் .

இதோ இப்போது முன்னால் செல்கிறதே இந்த கார் ..இந்த வகை கார்களை இது வரை வைசாலி ஓட்டி பார்த்ததில்லை .ஆனால் அந்த கார்களை பற்றிய விபரங்கள் அவளுக்கு அத்துபடி .மிக விரைவில் இந்த காரை அவளுக்கு ஒட்டிப் ் பார்க்க கொண்டு வருவதாக சொன்ன தந்தை திடுமென நெஞ்சு வலியில் இறந்து போனார் .அவரையே சார்ந்து வாழ பழகியிருந்த தனலட்சுமியும் , சிறுவர்களான ராதா , ரவீந்தரும் செய்வதறியாது தேம்பி நிற்க , வீட்டிற்கு மூத்தவளாய் விரைவில் நிமிர்ந்து நின்று வைசாலி குடும்பத்தை தாங்க வேண்டியவளானாள் .

போக்குவரத்தில் கவனம் இருந்தாலும் தனது கனவு காரையும் கண்கள் முழுவதும் நிரப்பியபடி வண்டியை ஓட்டினாள் .இதோ இந்த சிக்னலில் இன்னும் கொஞ்சம் முன்னால் போகலாம் ..அந்த காரை அருகில் பார்க்கலாமே …வேகமாக வண்டியை ஓட்டி அந்த காரின் பின்னால் போய் நின்றாள் .மெதுவாக கையை நீட்டி அந்த காரினை தொட்டு பார்த்தாள் .எவ்வளவு அழகு …கண்களை விரித்து பார்த்தவள் ‘ தட் ‘ என்ற அந்த சத்தத்தில் திரும்பினாள் .

அந்த காரின் பக்கவாட்டில் நின்றிருந்த அந்த பைக்கில் அமர்ந்திருந்த இரு இளைஞர்கள் .தங்களுக்குள் எதற்காகவோ விளையாட்டுத்தனமாக சண்டையிட்டபடி இருந்தவர்கள் , அமர்ந்திருந்த பைக் நழுவி அந்த காரின் மீது பலமாக உரசியது .ஆழமான ஒரு கீறல் அந்த அழகான காரின் மீது .தன் மீதே கீறல் விழுந்த்து போலிருந்த்து வைசாலிக்கு .




இப்போது அந்த காரின் ஓனர் இவர்.களை ஒரு வழி பண்ண போகிறார் என எண்ணியபடி திறக்க போகும் கதவிற்காக அவள் காத்திருக்க , எந்த சலனமுமின்றி இருந்த்து கார் கதவு .அதையே எதிர்பார்த்து சிறு பயத்துடன் இருந்த அந்த இளைஞர்களும யாரும் வரவில்லையென்றதும் , தைரியமாக மீண்டும் தங்கள் விளையாட்டை தொடர்ந்தனர் .மீண்டும் பைக் சரிய பார்க்க ..

” ஏய் மிஸ்டர் நடுரோட்டில் கொஞ்சம் டீசன்டாக நடந்து கொள்ள மாட்டீர்களா ..? இதோ இந்த மாதிரி காரை சேதப்படுத்து வைத்திருக்கிறீர.களே ..? இதற்கு பதில் சொல்லுங்கள் “

” த்தோடா …வந்துட்டா …வாயை நீட்டிக்கிட்டு ..இன்னாம்மே ..உன் காரா இது …ஓனரே ஒண்ணும் சொல்லாமல் இருக்கான் .உனக்கேன் வேகுது …? ” 

” ஏய் மரியாதையா பேசு …கண்ணு முன்னாடி நடக்கிற தப்பை யார் வேணும்னாலும் கேட்கலாம் .”

” அட…அன்னிபெசன்ட் அம்மையார்டா …கை விளக்கேந்தி இந்த அம்மையார் ஊருக்கெல்லாம் சேவை பண்ண வந்தவங்க “

இந்த தகராறில் காரை சுற்றி கூட்டம் கூடிவிட , அந்த கார் ஓனர் மட்டும் இன்னும் இறங்கி வந்தபாடில்லை .

” ஏய் நாங்க அப்படித்தான் , இப்போ பார்க்குறியா திரும்ப மோதுறோம் ” அவர்கள் பைக்கை மீண்டும் காரை நோக்கி சரிக்க தொடங்க , வைசாலி காரின் கதவு கண்ணாடிகளை தட்டினாள் .

” சார் வெளியே வாங்க …”




இப்போது கதவை திறந்து இறங்கியவன் தனது காரை இடித்த அந்த இளைஞர்களையோ , அவர்கள் சேதப்படுத்திய தனது காரை பற்றிய கவலையோ படாமல் , வெளியே வந்த்தும் குரோத்த்துடன் இவளை நோக்கினான் .

” இது என்ன ஒரு வகையான புது டிரிக்காக இருக்கிறதே …?” என்றான் .

என்ன டிரிக் …யார் இவன் …? ஏன் இப்படி பேசுகிறான் ..? புரியாமல் குழம்பி நின்றாள் வைசாலி .

 

What’s your Reaction?
+1
7
+1
4
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!